:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government in crisis over
tsunami aid
இலங்கை அரசாங்கம் சுனாமி உதவி சம்பந்தமாக நெருக்கடியில் உள்ளது
By K. Ratnayake
11 June 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பல மாதங்களாக தனது பாதங்களை
மெல்ல மெல்ல நகர்த்தியதன் பின்னர், தீவின் வடக்கு கிழக்கில் சுனாமி மீள் கட்டுமானத்திற்காக தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர நகர்ந்துகொண்டிருக்கின்றார்.
சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் மற்றும் பெளத்த பிக்குகளதும் தீவிரமான எதிர்ப்பை கிளறிவிட்டுள்ள இந்த பிரேரணை,
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிளவுபடுத்தவும் அரசாங்கத்தை கவிழ்க்கவும் அச்சுறுத்துகிறது.
சுதந்திர முன்னணியின் இரண்டாவது பெரும் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி),
குமாரதுங்க இத்தகைய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் அரசாங்கத்தை விட்டு விலகுவதாக சுட்டிக்காட்டி
வந்துள்ளது. அவ்வாறானால் சுதந்திர முன்னணி பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கவுள்ளதோடு பொதுத்
தேர்தல் நடந்து 15 மாதங்களே கடந்துள்ள நிலையில் நாடு மீண்டும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படும். மறுபக்கம்,
ஜனாதிபதி பொதுக் கட்டமைப்பு ஒன்றுக்கு இணங்கத் தவறினால், இடைநிறுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுடனான
சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்குள்ள சிறிய வாய்ப்புகளும் மற்றும் ஏற்கனவே ஆட்டங்கண்டு
போயுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையும் முற்றாக தகர்ந்து போகக் கூடும்.
மே மாத நடுப்பகுதியில் இலங்கையில் நடந்த நிதி உதவியாளர்களின் மாநாட்டின்
போது, வாக்குறுதியளிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் பெரும்பகுதி சமாதானப் பேச்சுக்கள்
மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை பொறுத்தே கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னரே, குமாரதுங்க பொதுக்
கட்டமைப்பு என பொதுவாக அழைக்கப்படும் சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை துரிதப்படுத்த
நடவடிக்கை எடுத்தார். அவரது அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பது மட்டுமன்றி,
கொழும்பில் உள்ள வர்த்தகர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர், பொருளாதாரத்திற்கு நிதியுதவியும் நாட்டின் 20
ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கு நிலையான தீர்வும் தேவை என வாதிடுகின்றனர்.
குமாரதுங்க, கடந்த வாரம் பொதுக் கட்டமைப்பு திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்காக
பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்தியத் தலைவர்களை சந்திக்க புது டில்லிக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்தியாவின் ஆதரவானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக மிகவும் செயற்திறம் வாய்ந்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என இந்தியாவைத் தூண்டும் தனது அரசியல் எதிரிகளை நிராயுதபாணிகளாக்கும் என அவர் எண்ணினார். ஆனால்
அவர் புதுடில்லியிடமிருந்து நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே பெற்றுக்கொண்டார்.
ஜூன் 7 அன்று, ஜனாதிபதி கண்டியில் இடம்பெற்ற யுத்த வீரர்கள் தின கூட்டத்தில்
பேசுகையில், சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை நிறைவேற்றவுள்ளதாக தெளிவான அறிகுறியை
வழங்கினார். "நாடு யுத்தத்தின் தொடர்ச்சியை தாங்காது, (விடுதலைப் புலிகளுடன்) பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை
அடைய வேண்டும்" என அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார். அதே தினம், அவரது வேண்டுகோளின் பேரில்,
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் பொதுக் கட்டமைப்பு சம்பந்தமாக ஒரு உடன்பாட்டை நிறைவேற்றுவதற்காக
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைவர் சு.ப. தமிழ்செல்வனை சந்திப்பதற்காக கிளிநொச்சிக்கு பயனமானார்.
அடுத்தநாள் ஜே.வி.பி குமாரதுங்கவை கண்டனம் செய்தது. ஜே.வி.பி யின் பாராளுமன்றக்
குழுத் தலைவர் விமல் வீரவன்ச, பொதுக் கட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு தனியான தமிழ் அரசை ஸ்தாபிக்க
உதவும் எனவும் ஜே.வி.பி "எமது தாயகத்தை பாதுகாக்கும் புனிதமான உள்நோக்கத்துடன் இந்தக்
காட்டிக்கொடுபபைத் தோற்கடிக்கும்" எனவும் பிரகடனம் செய்தார். குமாரதுங்க தனது கூட்டணி பங்காளிகளுக்கு
அறிவிக்காமல் முடிவுகளை எடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஏழு மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிர்வாகத்திற்கான
ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக கடந்த வாரம் ஜே.வி.பி அறிவித்தது. புதனன்று கட்சியின் முன்னணி
பெளத்த பிக்குகளின் அமைப்பான தேசிய பிக்கு முன்னணி, மத்திய கொழும்பில் கோட்டை புகையிர நிலையத்திற்கு
முன்னால் சாகும்வரை உண்ணாவிரதத்தை முன்னெடுத்தது.
விடுதலைப் புலிகளுடனான சமாதான கொடுக்கல் வாங்கல்களை மேற்பார்வை
செய்வதன் பேரில் இந்திய இராணுவத்தின் வருகைக்கு வழியமைத்த இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு மீதான
ஜே.வி.பி யின் பாசிச எதிர்ப்பை அதன் பிரச்சாரம் நினைவூட்டுகிறது. அச்சமயம், இந்த உடன்படிக்கையை
நாட்டை காட்டிக்கொக்கும் செயல் எனவும் "இந்திய ஏகாதிபத்திய" திட்டங்களின் ஒரு பகுதி எனவும் கண்டனம்
செய்த ஜே.வி.பி, "நாட்டைப் பாதுகாப்பதன்" பேரில் ஒரு "தேசப்பற்று" பிரச்சாரத்தையும் முன்னெடுத்தது.
ஜே.வி.பி யின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்க மறுத்த ஒருதொகை அரசியல்
எதிரிகளையும் தொழிலாளர்களையும் ஜே.வி.பி யின் துப்பாக்கிக் கும்பல் கொன்று குவித்தது.
இப்போது முதல் தடவையாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி, அதன்
பொறிந்துபோன தேர்தல் வாக்குறுதிகள் சம்பந்தமாக அதன் சொந்த சமூக அடித்தளமான கிராமப்புற
பிரதேசங்கள் உட்பட வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பிற்கு முகங்கொடுக்கின்றது. அரசாங்கம் அரசுக்கு சொந்தமான
எண்ணெய் மற்றும் மின்சார சபையை கூட்டுத்தாபனமாக்கும் திட்டங்களுடனும் மற்றும் ஏனைய பொருளாதார
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடனும் முன்செல்கின்றது. டிசம்பர் 26 சுனாமியின் பின்னர் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்
கடந்தும் மீள்கட்டுமான வேலைகள் வெளிப்படையாக ஆரம்பிக்கப்படவில்லை.
ஜே.வி.பி யின் பேரினவாத பிரச்சாரமானது ஒரு தொடர்ச்சியான எதிர்ப்புக்களை
தூண்டிவிட்டுள்ள இத்தகைய சமூகப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதன் பேரில் இனவாத பதட்டங்களை
கிளறிவிடுவதை இளக்காகக் கொண்டதாகும். அரசாங்கம் சம்பள உயர்வு வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு
எதிராக கடந்த வெள்ளியன்று ஆயிரக்கணக்கான பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பல்கலைக்கழக
கல்விசாரா ஊழியர்கள், சம்பள உயர்வை வழங்காவிட்டால் ஜூன் 16 அன்று வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக
அச்சுறுத்தியுள்ளனர். கிழக்குப் பிரதேசமான பொத்துவிலில், அரசாங்கம் கடற்கரைப் பிரதேசங்களில் மீள்கட்டுமான
வேலைகளுக்கு தடை விதிக்க தீர்மானித்ததற்கு எதிராக திங்களன்று 10,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமயவிடமிருந்தும் அரசியல் போட்டியை எதிர்கொள்கின்றது.
ஜாதிக ஹெல உறுமய, கடந்த ஆண்டு ஏப்பிரல் மாத பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஸ்தாபிக்கப்பட்ட பெளத்த
பிக்குகளின் செல்வாக்கிலான வலதுசாரி சிங்கள மேலான்மை கட்சியாகும். ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும்
பெளத்த பிக்குவும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒமல்பே சோபித, பொதுக் கட்டமைப்புக்கு எதிரான
கோரிக்கை உட்பட ஒரு தொகை இனவாத கோரிக்கைகளை முன்வைத்து கண்டியில் தானாகவே சாகும்வரை உண்ணாவிரதப்
பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குமாரதுங்க தனது திட்டத்தை கைவிடும் வரை தனது பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்கப்போவதாக கடந்த திங்களன்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்தது.
அரசியல் பதட்ட நிலைமைகள்
ஜே.வி.பி-ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டங்கள், சிங்கள பேரினவாதத்தில்
ஆழமாக மூழ்கிப் போயுள்ள குமாரதுங்கவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயும் (ஸ்ரீ.ல.சு.க)
கூர்மையான பதட்டங்களை உருவாக்கிவிட்டுள்ளது. ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்களின்
எதிர்ப்பை தட்டக்கழிப்பதற்காக திங்களன்று நடத்தப்படவிருந்த ஒரு அரசாங்கக் குழு கூட்டத்தை குமாரதுங்க
இரத்து செய்தார். அதற்குப் பதிலாக அவர் பிரதமர் மஹிந்த இராஜபக்ச, நிதி அமைச்சர் சரத் அமுனுகம
மற்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சர் அணுர பண்டாரநாயக்க உட்பட சிரேஷ்ட அமைச்சர்களை சந்தித்தார்.
கூட்டத்தின் பின்னர், "சுதந்திர முன்னணியின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள
நிலையில் அவசரமாக முடிவுகளை எடுப்பது பயனற்றதாக இருக்கும்" என ஊடகங்களுக்கு தெரிவித்த இராஜபக்ச,
"வளைந்துகொடுக்கக் கூடியவராக" இருக்கவேண்டும் என குமாரதுங்கவை தாம் கேட்டுக்கொண்டதாகவும்
குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமயவை சாந்தப்படுத்தும் முயற்சியாக, கண்டியில் உண்ணாவிரதம்
இருந்துகொண்டிருந்த அதன் தலைவர் ஒமல்பே சோபிதவை பிரதமர் பார்வையிட்டார்.
முன்னர் ஜனாதிபதிக்கு நம்பகமானவராக இருந்த துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து
அமைச்சர் மங்கள சமரவீரவும் இதே நிலைப்பாட்டை எடுத்தார். கடந்த வார இறுதியில், ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு
வழங்கிய பேட்டியில்: "பொதுக்கட்டமைப்பானது கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு அல்லது கலைப்பதற்கு காரணமாக
இருக்குமானால், பொதுக்கட்டமைப்பு பயனற்றதாகவே இருக்கும். மீண்டும் ஒருமுறை சிந்திப்பார்ப்பது அவசியம்.
பொதுக்கட்டமைப்பு ஒரு பாலமாக அமைந்தாலும், அது அரசாங்கத்தின் உடைவுக்கு வழிவகுக்குமானால் நிச்சயமாக
நான் அதை எதிர்ப்பேன்," என அவர் குறிப்பட்டார்.
தனது ஏனைய அமைச்சுக்களில் அக்கறை செலுத்தவேண்டியுள்ளதாக கூறிய சமரவீர,
கடந்த திங்களன்று தனது ஊடக அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். அவரது தீர்மானம்
பொதுக்கட்டமைப்புக்கு எதிரானது என பரந்தளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி
(ஐ.தே.மு) அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி க்கும் ஸ்ரீ.ல.ச.க வுக்கும் இடையில் ஒரு கூட்டணியை அமைக்க
செயலாற்றியவர்களில் சமரவீர முக்கியமானவராகும்.
குமாரதுங்க பொதுக்கட்டமைப்புடன் முன்செல்லவேண்டும் என விடுதலைப் புலிகள்
தன்பங்கிற்கு வலியுறுத்துகின்றனர். நோர்வே தூதுவர் ப்ரட்ஸ்கர் உடனான பேச்சுவார்த்தையின் பின்னர்: "அவர்கள்
(கொழும்பு) பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப்படமாட்டாது என நிச்சயமாக சொல்வார்களானால், நிலைமை
மிகவும் கடுமையானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்," என விடுதலைப் புலிகளின் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வளர்ச்சி கண்டுவரும் மக்களின் சீற்றத்தை
கலைப்பதற்காக நிதியுதவிக்காக காத்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள், குமாரதுங்க அரசாங்கம் நிதி உதவியையும் சமாதான
முன்னெடுப்பையும் தடுக்கின்றது என வாதிடுவதற்காக கொழும்பில் நடைபெறும் இனவாத ஆர்ப்பாட்டங்களையும்
சுரண்டிக்கொள்கிறது. மே மாதம், சர்வதேச நிதி உதவி மாநாட்டின் பெறுபேறை பற்றிக்
கலந்துரையாடுவதற்காக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய பிரதான
நிதி உதவி ஏஜன்சிகளை விடுதலைப் புலிகள் கிளிநொச்சிக்கு வரவழைத்தனர். கடந்தவார இறுதியில் ஒரு கூட்டம்
நடைபெறுவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும் இந்த ஏஜன்சிகள் அரசியல் ஸ்திரமின்மையை காரணம்
காட்டி விஜயத்தை இரத்து செய்துவிட்டன.
விடுதலைப் புலிகள், சிரேஷ்ட இராணுவத் தலைவரான கருணா என்றழைக்கப்படும் வி.
முரளீதரன் பிரிந்து சென்றதையடுத்து, குறிப்பாக கிழக்கில் ஆழமடைந்துவரும் அரசியல் பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றனர். விடுதலைப் புலிகளால் இன்னமும் கிழக்கில் தனது அதிகாரத்தை மீள் ஸ்தாபிதம் செய்ய
முடியாமல் இருப்பதோடு, இலங்கை இராணுவத்தின் சில பிரவினரின் மறைமுக ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் கருணா
குழுவுடன் தொடரும் ஆயுத மோதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குமாரதுங்க பொதுக்கட்டமைப்பை
ஸ்தாபிக்க மறுத்தால், அது துரிதமாக மோதல் வெடிப்பதற்கும் மற்றும் ஆட்டங்கண்டுபோயுள்ள யுத்தநிறுத்தம்
தகர்ந்து போவதற்கும் வழிவகுக்கும்.
எந்த வழியில் திரும்பினாலும் குமாரதுங்க ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றார்.
அவர் பொதுக் கட்டமைப்புக்கு உடன்பட்டால், ஜனாதிபதி ஜே.வி.பி யின் ஆதரவை இழக்க நேரிடுவதோடு தனது
சொந்தக் கட்சியே பிளவடையும் ஆபத்து இருந்துகொண்டுள்ளது. அவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின்
(ஐ.தே.க) பக்கம் திரும்பத் தள்ளப்படுவார் அல்லது தனது ஸ்ரீ.ல.சு.க தோல்வியடைய கூடிய ஒரு புதிய
தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார். அவர் கைச்சாத்திட மறுத்தாலோ அல்லது மேலும் காலந்தாழ்த்தினாலோ யுத்த
ஆபத்து வெளித்தோன்றும்.
கொழும்பில் உள்ள ஆளும் கும்பலின் அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில், ஜூன் 7
அன்று டெயிலி மிரர் பத்திரிகை, "தற்போதைய நிலைமையில் புத்திசாலித்தனமாகவும் பொறுப்புடனும் செயலாற்றுமாறு"
எல்லா அரசியல் கட்சிகளையும், குறிப்பாக ஐ.தே.க வை கேட்டுக்கொண்டது. "ஒரு பக்கத்தில் ஆயுத
மோதலுக்கான சாத்தியம் பெரிய அளவில் தோன்றிக்கொண்டிருப்பதாக" எச்சரித்த அந்த செய்தியிதழ்: "நாடு செங்குத்தான
பள்ளத்தில் விழுவதை அனுமதிக்காமல், ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிக்கும் தற்போதைய தேசிய பிரச்சினையில்
ஒரு பொதுவான அனுகுமுறையை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உதவ வேண்டியது நாட்டின் நலனை இதயத்தில்
கொண்டுள்ள அனைத்து கட்சிகளதும் கடைமையாகும்," என பிரகடனம் செய்துள்ளது.
குமாரதுங்க தெளிவாகவே ஒரு அரசியல் உதவியை எதிர்பார்த்து இந்த வார முற்பகுதியில்
அமெரிகக் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டட்டை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இந்திய துணைக்கண்டத்தில் அமெரிக்காவின்
நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையவுள்ள உள்நாட்டு யுத்தத்திற்கு மிண்டும் திரும்புவதை தவிர்ப்பதற்காக, புஷ்
நிர்வாகம் விடுதலைப் புலிகளுடனான சமாதான கொடுக்கல் வாங்கல்களை இது வரை ஆதரிக்கின்றது. ஐ.தே.க
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்புகொண்ட லன்ஸ்டட், ஐ.தே.க நிலைமையை மேலும்
ஆட்டங்காணச் செய்யாது என்ற உறுதிமொழியை எதிர்பார்த்திருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.
நிலைமை அடுத்தவாரம் உச்சகட்டத்தை அடையும் என்பதற்கான எல்லா அறிகுறிகளும்
உள்ளன. குமாரதுங்க சீட்டுக்களை தனது நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு விளையாடுவதோடு பிரேரிக்கப்பட்டுள்ள
சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பு பற்றிய விபரங்களை வெளியிடவும் இல்லை. ஊடகங்களுக்கு
வெளியான தகவல்களின்படி, உயர்மட்ட சபை அரசாங்க, விடுதலைப் புலி மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்களை
கொண்டிருக்கும். குமாரதுங்க ஜூன் 15ம் திகதியை உடன்படிக்கையை கைச்சாத்திடும் திகதியாக உத்தேசித்துள்ளார்
என்பது ஊடகங்களின் கணிப்பாகும்.
வியாழன் அன்று நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி தலைவர்களான
சோமவன்ச அமரசிங்க, டில்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர், குமாரதுங்க ஜூன் 15 திகதி
பொதுக் கட்டமைப்பை கைவிடாவிட்டால் ஜூன் 16 அன்று தமது கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என
பிகடனப்படுத்தினர். ஜே.வி.பி கொழும்பில் ஒரு வெகுஜன போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவும் தனது எதிர்ப்பை முன்னெடுத்துள்ளது. வியாழனன்று, ஜாதிக
ஹெல உறுமய தலைவர்கள், குமாரதுங்க பொதுக் கட்டமைப்பை கைவிடவேண்டும் என கோருவதற்காக ஜனாதிபதி
இல்லத்தை நோக்கி ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் நான்கு பிரதான பெளத்த பீடங்களின்
மதகுருக்களின் ஆதரவின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும் எனவும்
அவர்கள் கோஷமெழுப்பினர்.
உத்தியோகபூர்வமாக ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும்,
இந்த பெளத்த மதகுருக்கள், குமாரதுங்க பொதுக் கட்டமைப்பிலிருந்து விலகாவிட்டால் ஒரு அதிகார ஆணையை விடுப்பதோடு
எதிர்ப்புக்களையும் அணிதிரட்டுவதாக வியாழன் அன்று குமாரதுங்கவை எச்சரித்தனர். அத்தகைய ஒரு எதிர்ப்பையிட்ட
தனது அக்கறையை வெளிப்படுத்திய ஜனாதிபதி, அவர்களது ஒப்புதல் இன்றி எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கப்
போவதில்லை என பெளத்த பிக்குகளுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.
குறிப்பாக வரவுள்ளது பற்றிய சகுன அறிகுறியாக, ஜாதிக ஹெல உறுமய தலைவரும்
பிக்குவுமான கலகொடதே ஞானசேகரவின் பயமுறுத்தும் குறிப்புக்களை வியாழனன்று ஊடகங்கள் வெளியிட்டன. அவர்
24 மணி நேரத்திற்குள் தனது திட்டங்களை கைவிடுமாறும் "இல்லையேல் ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள
தள்ளப்படுவதாகவும்" குமாரதுங்கவை எச்சரித்தார். ஞானசேகர தனது அச்சுறுத்தலை விவரிக்காத போதிலும்,
ஜாதிக ஹெல உறுமயவும் அதன் முன்னோடிகளும் மற்றும் ஏனைய பேரினவாத கும்பல்களும், ஆத்திரமூட்டல்கள் மற்றும்
வன்முறைகள் சம்பந்தமான நீண்ட பதிவைக் கொண்டுள்ளன.
Top of page |