World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain's Popular Party seeks to destabilise PSOE government

ஸ்பெயினின் பாப்புலர் கட்சி PSOE அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க முயலுகிறது

By Paul Stuart
9 June 2005

Back to screen version

ஸ்பெயினின் பாப்புலர் கட்சி (PP) "படுகொலைக்குப் பின்னர்" (After the Massacre) என்ற தலைப்பில் ஒரு பிரச்சார திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. அதில், 2004 மார்ச் 14 ல் ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சியான PSOE (Spanish Socialist Workers Party - PSOE) தேர்தலில் பெற்ற வெற்றி ''ஜனநாயக சக்திக்கு எதிரான இடது'' மற்றும் ''ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கண்டித்துள்ளது. ஸ்பெயினில் 1981 பிப்ரவரி 23 ல், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியாக, இராணுவ அதிகாரிகள் நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிரடியாக நுழைந்ததிற்கு பின்னர், எந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்குப் பின்னரும் இத்தகையதொரு பொதுத் தாக்குதல்கள் நடைபெற்றதில்லை.

PSOE அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கவும் 2004 தேர்தல்கள் முடிவை மாற்றியமைக்கவும் பாப்புலர் கட்சி, தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருப்பது இந்த திரைப்படம் வெளியிடப்பட்டதன் மூலம் காட்டுகிறது. பாப்புலர் கட்சியின் சிந்தனையாளர் குழுவான சமூகக் கல்வி ஆய்விற்கான அறக்கட்டளை FAES (The Foundation for the Analysis of Social Studies ) ஒரு "சுதந்திர தேர்தல்களும் அவற்றின் எதிரிகளும்" மற்றும் "பயங்கரவாதமும், தீவிரவாத கிளர்ச்சிகளும்" என்ற தலைப்புடன் நடக்கும் கூட்டத்திற்காக இந்த திரைப்படத்தை தயாரித்தது.

முன்னாள் பாப்புலர் கட்சியின் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னார் FAES ற்கு தலைமை வகிக்கிறார். மற்றும் புஷ் நிர்வாகம் அமெரிக்காவில் கடைப்பிடித்து வருகிற கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு அவர் ஸ்பெயினில் சுதந்திர சந்தையின் ''தீவிரவாதத்தன்மையை'' வளர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திரைப்படம் ''இடதுகளை'' குற்றம்சாட்டுகிறது. (அதாவது தேர்தல்களில் பாப்புலர் கட்சியை ஆதரிக்காதவர்கள் அனைவரும்) அவர்கள் வாக்குப்பதிவு தினத்திற்கு ''இரண்டு நாட்கள் இருக்கும் போது வாக்காளர்களது வாக்களிக்கும் எண்ணங்களை ஈர்க்கின்ற நோக்கத்தில் அரசியல் கிளர்ச்சியை நடத்தியதாகவும்,'' மார்ச் 13 ல் வாக்குப்பதிவிற்கு முந்திய நாளில் எந்த பிரச்சாரமும் நடத்தக்கூடாது என்று அனைத்து கட்சிகளுக்கும் சட்டபூர்வமான தடை விதிக்கப்பட்டிருந்த நாளில், வாக்காளர்கள் சுயமாக சிந்திக்கிற தினத்தில் பாப்புலர் கட்சியின் தலைமை அலுவலகங்களுக்கு வெளியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஜனநாயக விரோத முறைகளைப் பயன்படுத்தியதாகவும் அந்தத் திரைப்படம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செய்திப்படம் இன்னும் படுமோசமாக PSOE ஐ குற்றம்சாட்டுகிறது. மற்றும் "இடதுகள் நாடக பாணியில் பல மாதங்களுக்கு முன்னரே ஒத்திகைகளை நடத்தி தெருக்களில் வெறுப்பை விதைத்து, அரசாங்கம் அந்த படுகொலைக்கு காரணம் என்று பழி போடுவதற்காக அவர்கள் செயல்பட்டனர்'' என்று குற்றம்சாட்டுகிறது.

அதாவது, மாட்ரீட் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் PSOE உடந்தையாக செயல்பட்டது என்பதுதான் இதன் பொருளாகும்.

இப்படி ஒட்டுமொத்தமாக அரசியலில் குழப்பம் விளைவிப்பது ஸ்பெயினில் பிராங்கோவாதிகளின் பழைய வித்தைகளாகும். அதில் அஸ்னாருக்கு நல்ல பழக்கம் உள்ளது. அவர் இளைஞராக இருந்தபோது, ஒரு ''சுதந்திரமான பலான்ஜிஸ்ட்'' (independent Falangist) என்று தன்னை வர்ணித்துக்கொண்டார். மற்றும் முன்னாள் சர்வாதிகாரி பிராங்கோவின் அமைச்சரான மனுவேல் பிராகா (Manuel Fraga) அஸ்னாரை தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குள்ளான பிராங்கோ மக்கள் கூட்டணியை பாப்புலர் கட்சியாக மாற்றச் செய்தார். உள்நாட்டுப்போர் (1936 - 1939) நடப்பதற்கு முன்னர் PSOE தொடர்பான பலான்ஜிஸ்டுக்களின் பார்வையானது, ஜோசே அந்தோனியோ பிரிமோ டூ ரிவைரா (பாசிச பலான்ஜிஸ்டின் ஸ்தாபகர்) பிராங்கோவிற்கு எழுதிய கடிதத்தில் ரத்தின சுருக்கமாக கூறப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், "ஒரு சோசலிஸ்ட் வெற்றியானது, ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு போன்று முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறப்பட்டிருக்கிறது.

பாப்புலர் கட்சியின் பிரச்சார ஆத்திரமூட்டல்கள்

படுகொலைக்குப் பின்னர் என்ற திரைப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர், மூத்த பாப்புலர் கட்சி அதிகாரிகள் PSOE அமைச்சர்கள் பயங்கரவாதிகளை தற்காத்து நிற்பவர்கள் என்றும், ஸ்பெயினின் தேசியவாத கத்தோலிக்க பாரம்பரியங்களுக்கு துரோகமிழைக்கிறவர்கள் என்றும் மிகத்தீவிரமாக பல அறிக்கைகளை வெளியிட்டனர்.

துவக்கத்திலிருந்தே கடந்த தேர்தல் முடிவுகளை அஸ்னார் புறக்கணித்தார். 2004 ஜூலை 5 ல், மாட்ரீட்டில் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிகாரபூர்வமான விசாரணைக் கமிஷன் துவங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், "இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் தங்களது குறிக்கோளில் பயங்கரவாதிகள் வெற்றி பெற்று விட்டனர்" என்று அறிவித்தார்.

அஸ்னார், "மார்ச் 13 ஐப்போன்று மகத்தான ஜனநாயகத்திற்கு புறம்பான இன்னொரு நாளை நினைவுபடுத்துவது சிரமம்..... கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு பொறுப்பானவர்கள் இடதுசாரிகளில் ஒரு பிரிவினர். மற்றும் அவர்களது கழுத்தைச் சுற்றி படுமோசமான கறைகள் படிந்திருக்கின்றன" என்று தொடர்ந்தார்.

2004 நவம்பர் 29 ல், விசாரணைக் கமிஷன் முன் அஸ்னார் அளித்த சாட்சியம், அவரது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு PSOE கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தை அனுமதித்ததாக கண்டனம் செய்யும் நோக்கத்தில் இருந்தது. அவர் ''இதற்கு முன்கண்டிராத அளவிற்கு ஒரு அரசாங்கத்திற்கு தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கை இது'' என்று வர்ணித்து, தமது நிர்வாகம் ''தகவலை மூடிமறைப்பதாக உருவாக்கப்பட்ட'' கருத்தை அவர்கள் பரப்பினார்கள் என்று கூறினார். "மற்றவர்கள்தான் பொய் சொன்னார்கள்... அவர்கள் உண்மையை தலைகீழாக புரட்டினார்கள். மற்றும் நமது ஜனநாயகத்தின் விதிமுறைகளை மிகக் கடுமையாக மீறுவதற்கு ஆக்கபூர்வமான ஆதரவு தந்தார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

விசாரணைக் கமிஷன் நடைபெற்ற இடத்திற்கு வெளியில் பாப்புலர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை, மார்ச் 11 ல் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களிலிருந்து போலீஸார் தனியாக விலக்கி வைத்தார்கள். இவை அனைத்தும் PSOE க்கும் பாப்புலர் கட்சிக்குமிடையில், விசாரணைக் கமிஷன் முடிவுகள் எதுவாக இருந்தாலும் முன்னாள் அமைச்சர்கள் எவரும் இந்த வழக்கை எதிர்கொள்ளக்கூடாது என்று கமிஷன் விசாரணை துவங்குவதற்கு முன்னர் ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புஷ் நிர்வாகம் பதவிக்கு வருவதற்கான வழிவகைகளை அமைத்த அரசியல் சக்திகளோடு அஸ்னார் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்து வருகிறார். FAES ன் வலைத்தளம் ரிச்சார்ட் பேர்ல் மற்றும் ரோபர்ட் காகன் போன்ற பிரமுகர்களின் பேச்சுக்களை விளம்பரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள ஒரு அரசாங்கத்தைப்போல் பாப்புலர் கட்சியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பதவியிலிருந்து விரட்டப்பட்டது முதல் அஸ்னார் வெள்ளை மாளிகையுடன் தொடர்பை நிலைநாட்டி வருவதுடன், அவர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்த நேரத்தில் PSOE வையும் ஸ்பெயின் மக்களையும் கண்டித்தார்.

பாப்புலர் கட்சியை சமாதானப்படுத்த முயலும் PSOE

அஸ்னார் அரசாங்கத்தை கவிழ்த்த வெகுஜன இயக்கத்தோடு PSOE கட்சியை தொடர்புபடுத்த பாப்புலர் கட்சி மேற்கொண்டுள்ள முயற்சி முட்டாள்தனமானது. பொதுமக்களிடையே ஏற்பட்ட அரசியல் தீவிரத்தன்மையால், உரிய தகுதி எதுவுமில்லாமல் பயனடைந்தவர் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ஷப்பட்ரோ ஆவர். அவரும், அவரது அரசாங்கமும் பதவியேற்றது முதல், தேர்தலுக்கு முந்திய அஸ்னாருக்கு எதிரான இயக்கத்திலிருந்து முடிந்த வகையில் தங்களை விலக்கி வைத்திருந்தனர். அத்தோடு, ஏதாவது ஒரு வகையில் அரசியல் பொதுக்கருத்தை கொண்டுவர முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.

டிசம்பர் 13 ல் விசாரணைக் கமிஷன் முன் சாட்சியமளித்த ஷப்பட்ரோ உண்மையிலேயே பின்வருமாறு குறிப்பிட்டார்: "மார்ச் 13 ல் நடைபெற்ற எந்த கண்டனப் பேரணிகளையும் நாம் ஆதரிக்கவில்லை, அல்லது அதுபற்றி எங்களுக்கு தெரியாது, அல்லது அதைத் திட்டமிடவில்லை, அல்லது அதில் நாம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை, அல்லது நாம் அதனைத் துவக்கவில்லை. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களாகவே ஆத்திரத்தின் விளிம்பிற்கு வந்து, தன்னிச்சையாக கூட்டங்களாகச் சேர்ந்து கண்டனங்களைத் தெரிவித்தனர்."

பாப்புலர் கட்சியுடன் ''தேசிய சமரச இணக்கம்'' காண்பதற்கு PSOE மேற்கொண்ட முயற்சிகள் யாவும், பாப்புலர் கட்சிக்கு துணிவூட்டவும் மேலும் பகிரங்கமாக தீவிர வலதுசாரி சக்திகள் தங்களது தாக்குதல்களை முடுக்கிவிடவும்தான் பயன்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு கொலம்பஸ் தின இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ளுமாறு பிராங்கோவின் பாசிச Blue Division ஜ சேர்ந்த முன்னாள் இராணுவத்தினருக்கு PSOE வின் பாதுகாப்பு அமைச்சரான ஜோசே போனோ அழைப்பு விடுத்தார். உள்நாட்டு போர் முடிவில் ஸ்பெயினிலிருந்து தப்பி ஓடிய பின்னர், பிரெஞ்சு எதிர்ப்பாளர்களோடு சேர்ந்து போரிட்ட ஸ்பெயின் Le Clerc Division-னோடு சேர்ந்து கலந்துகொள்ளுமாறு இந்த அழைப்பை விடுத்தார்.

அவரது இந்த முடிவிற்காக ஜோசே போனோ விமர்சிக்கப்பட்ட நேரத்தில், அவர் பதிலளிக்கும்போது "எல்லா ஸ்பெயின் மக்களையும் விட்டுவிட்டால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் -- Conquistadors, Carlists மற்றும் பாஸிஸ்டுகள் என்று எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டே போவோமானால், நமது மக்களில் பலர் மிச்சமிருக்கமாட்டார்கள். அதுதான் ஸ்பெயினாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி 22 ல் ஜோசே போனோ, பாப்புலர் கட்சிக்கு ஆதரவான பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சங்கம் (AVT) ஏற்பாடு செய்த பயங்கரவாதிகளுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவரை ''நன்றாக உடையணிந்த'' ஆண்களும் பெண்களும் சுற்றி வளைத்துக்கொண்டு ஒரு ''பொய்யர்'' என்றும் ''கொலைகாரர்'' என்றும் அவதூறு செய்தனர். அவர் பலமுறை கைகளினால் தாக்கப்பட்டார். மற்றவர்கள் ஒரு கொடிக்கம்பத்தால் அவரைத் தாக்க முயன்றனர்.

அத்தோடு, ஏப்ரல் 16 ல், ஒழுங்கமைக்கப்பட்டு திரட்டப்பட்ட ஒரு குண்டர் கும்பல் மாட்ரீட்டிலுள்ள Crisol புத்தகக் கடையில் நடைபெற்ற ஒரு பொது விவாதத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியது. அதில் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் அந்தக் கடை நொறுக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குவிமையப்படுத்தியது 90 வயதான முன்னாள் ஸ்பெயின் கம்யூனிசக் கட்சியின் (PCE) பொதுச் செயலாளர் சந்தியாகோ காரியோ (Santiago Carrillo) மீதாகும். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் PSOE முன்னாள் அமைச்சரன Claudio Aranzadi, வரலாற்று ஆசிரியர் Santos Julia, பத்திரிக்கையாளர்கள் Pedro Sanchez Ramon மற்றும் Maria Antonio Iglesias ஆகியோரும் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சி இரண்டு ஸ்பெயின்களின் வரலாறு (பிவீstஷீக்ஷீவீணீ பீமீ றீணீs பீஷீs ணிsஜீணீமணீs) என்ற Santos Julia எழுதிய ஒரு புதிய நூலை வெளியிடுவதற்காக நடத்தப்பட்டதாகும். இந்த நூல் ஸ்பெயின் உள்நாட்டு போரின் கருத்தியல் ரீதியான மூலத்தை ஆராய்கிறது. அங்கு காரியோ வந்த சேர்ந்ததும், குண்டர் கும்பல் அவரை நோக்கி ஓடிவந்து "கொலைகாரர்" என்று கூச்சலிட்டு ஸ்பெயினின் தேசியக் கொடியை பறக்கவிட்டது. குண்டர்களின் தாக்குதலில் இருந்து காரியோ தடுக்கப்பட்டபோதிலும், Santos Julia வையும் பத்திரிக்கையாளர் Maria Antonio Lylesias ஐயும் தாக்குவதற்கு அவர்கள் கொடிக்கம்பங்களை பயன்படுத்தினர். "நான் யார் என்று அவர்கள் தெரிந்து கொண்டதும் துண்டு அறிக்கைகளை என் வாயில் திணிக்க முயன்றனர்" என்று Maria Antonio Lylesias இதுபற்றி கூறினார்.

இந்தத் தாக்குதல் நடந்த மறுநாள், பலாஞ் ஸ்பெயினுக்கு (Falange Espanol) மரபுரிமை கொண்டாடும் குழுக்களில் ஒன்றான பாலஞ் குழு ஒன்று மாட்ரீட்டில் ஒரு கண்டனப் பேரணியை நடத்தியது. அதில் ஸ்பெயின் முழுவதிலும் சதுக்கங்களில் இருந்த பிராங்கோவினுடைய சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதை அக்குழு கண்டனம் செய்தது. மற்றும் பிராங்கோ பள்ளத்தாக்கை (Valley of the Fallen) பாசிசத்தின் விளைவுகளுக்காக ஒரு நினைவு சின்னமாக ஆக்க வேண்டும் என்ற PSOE ன் முன்மொழிவுகளையும் அக்குழு கண்டனம் செய்தது. அந்த இடத்தில் பிராங்கோ மற்றும் Primo de Rivera வினுடைய கல்லறைகள் உள்ளன.

அந்தப் பேரணியில் உரையாற்றிய பலாஞ் குழுவின் தலைவர் Jose Fernando Cantalapiedra அந்த புத்தகக் கடையில் நடைபெற்ற தாக்குதலை கண்டிக்க மறுத்து, காரியோ அங்கு தோன்றியதற்கு அது ஒரு ''தர்க்கரீதியான பதில்'' என்று அச்செயலை வர்ணித்தார். இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பிராங்கோவிற்கு சல்யூட் அடித்து ''காரியோ ஒரு கொலைகாரர், ஷப்பட்ரோ ஒரு பயங்கரவாதி'' என்று முழக்கமிட்டனர்.

சென்ற ஆண்டு நவம்பர் 3 ல் நாடு முழுவதிலும் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பொது இடங்களில் இடம்பெற்றுள்ள ''பாசிச, மற்றும் அரசியல் சட்டத்திற்கு புறம்பான'' சின்னங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. பாப்புலர் கட்சி தவிர அனைத்து கட்சிகளும் அந்த தீர்மானத்தை ஆதரித்தன.

சாலமன்கா (Salamanca) ஆவணங்கள்

பொதுத் தேர்தலுக்கு பின்னர், உள்நாட்டுப் போரின் அனுபவங்கள் ஸ்பெயின் சமுதாயத்தில் ஒரு பிரதான அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான மோதல் அரங்காகிவிட்டது. 1936 ல் உருவான பிராங்கோவின் பாசிச எழுச்சிக்கு ''திருத்தல்வாத'' வரலாற்று ஆசிரியர்கள் ''பிராங்கோவின் மறுபிறப்பு'' என்று புத்துயிர் கொடுத்து வர்ணிக்கின்றனர். அது தீவிர வலதுசாரிகளின் வன்முறை தாக்குதல்களை நடைபெறச் செய்துள்ளன.

பிராங்கோ சகாப்தத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும், தற்போது நேரடியாக நடப்பு அரசியல் விவகாரங்களில் தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக PSOE ஏப்ரல் 15 ல் முடிவு செய்துள்ளபடி, ''சாலமன்கா ஆவணங்கள்'' என்று கூறப்படுவது 3 சதவீதத்தை கட்டலோனிய அரசியல் கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், அதிகாரபூர்வமான பிரதி எடுத்துக் கொடுத்து விடுவது என்ற முடிவை செயல்படுத்தினால், பாப்புலர் கட்சியின் பிரதிநிதிகள் வன்முறை கிளர்ச்சி செய்யப்போவதாக எச்சரித்தனர். இந்த ஆவணங்கள் உள்நாட்டு போரின்போது பாஸிஸ்ட்டுகள் களவாடிய ஆவணங்களாகும். அவற்றில் 300,000 கோப்புகளும் 1,000 புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை பாஸிஸ்ட்டுகள் வென்றெடுத்த பகுதிகளில் 507 அட்டைப்பெட்டிகளில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கு 1940 ல் சாலமன்காவிற்கு அனுப்பப்பட்டது. அதில் பிராங்கோ ஆட்சிக்கு எதிரான அரசியல் எதிரிகளின் விவரங்கள் அடங்கிய ஒரு பெரிய கோப்பு உள்ளது. பலான்ஜிஸ்டுக்கள் அவற்றை பயன்படுத்தி 1936 க்கும் மற்றும் 1943 க்கும் இடைப்பட்ட காலத்தில், தமது அரசியல் எதிர்ப்பாளர்கள் கிட்டத்தட்ட 200,000 பேரை தூக்கிலிடுவதற்கு ஏற்பாடுகளை செய்தனர். மேலும் 500,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களது உயிருக்கு பயந்து மேலும் அதே எண்ணிக்கையில் ஸ்பெயினை விட்டு தப்பி ஓடவேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டது.

இந்த ஆவணங்கள் எந்த அமைப்புக்கள் மற்றும் தனிமனிதர்களிடமிருந்து களவாடப்பட்டதோ, அவர்களிடம் சில ஆவணங்களை திரும்ப தந்துவிடுவது என்ற முன்மொழிவிற்கு முதலில் உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில், அதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் சாலமன்கா பாப்புலர் கட்சியின் மேயரான Julian Lanzarote, இராணுவ நூலகத்தை சுற்றி ஒரு தடுப்பு அரணை உருவாக்கினார். "எவர் என்ன சொன்னாலும் கவலையில்லை, இந்த நகரத்தைவிட்டு ஒரு ஆவணம் கூட வெளியில் செல்லாது" என்று அவர் அறிவித்தார்.

Lanzarote இதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தி "நாங்கள் விழிப்போடு இருக்கிறோம், நமது உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள விவகாரமாக இது இருப்பதால், நாம் அணிதிரண்டு கொள்வோம்" என்றும் அவர் அறிவித்தார்.

நீண்டகாலமாக வலதுசாரிகளின் ஒரு கோட்டையாக சாலமன்கா விளங்குகிறது. பாசிஸ்டுகளின் எழுச்சியின்போது பிராங்கோவின் முதலாவது தலைமை இடமாக அது அமைந்திருந்தது. அங்குதான் பிராங்கோ பாஸிஸ்டுகள் மற்றும் தேசியவாத சக்திகளின் கூட்டணித் தலைவராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936 முதல் அங்கிருந்துதான் பாஸிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பகுதிகளுக்கும் வெகுஜன கொலைகளை செய்வதற்கு கட்டளைகள் வழங்கப்பட்டன.

ஒரு பக்க மோதல்

மார்ச் 14 தேர்தல் முடிந்தவுடன் PSOE மற்றும் அதனை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்த இயக்கத்துடன், சிறிய பாசிஸ்ட்டுக் குழுக்கள் மோதலுக்கு தயாராகின. ஆனால், மார்ச் 17 ல் El Pais வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாப்புலர் கட்சி அதிகாரி ஒருவர், ''பரந்தளவில் இந்த மோதல் போக்கு எமது இடைநிலைத் தலைவர்களுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. எனவே மிகத்தீவிரமான அறிக்கைகள் மேலும் வரவிருக்கின்றன'' என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் கட்சி ஒருதரப்பு அரசியல் மோதலை நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஆத்திரமூட்டும் பிரச்சாரம் நடக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் அக்கட்சியை சமாதானப்படுத்தும் பதில்கள்தான் வருகின்றன. தன்னைப் பதவிக்கு கொண்டு வந்த வைத்த வெகுஜன இயக்கத்தை திரட்டுவதற்கு PSOE கட்சி மறுத்துள்ளதுடன், அந்த வெகுஜனங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து அதனால் நிற்க முடியவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் வாழ்வில் புகுவது, வலதுசாரிகளின் அச்சுறுத்தலைவிட ஆபத்தானது என்று அக்கட்சி பயப்படுகிறது. பாப்புலர் கட்சியின் தேர்தல் படுதோல்வியை சுற்றியுள்ள மகத்தான பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதுதான் அதன் மத்திய புறநிலைப்பாடாக உள்ளது. இதன் விளைவு என்னவென்றால், அரசியலில் நடவடிக்கை எடுப்பதை வலதுசாரிகள் மற்றும் ஒரு சிறிய பாசிச குண்டர் கும்பலின் கையில் கொடுப்பதாக இருக்கும்.

1923 செப்டம்பர் 13 ல் Primo de Rivera வின் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை, PSOE தழுவிக்கொண்டது முதல் அதனுடைய வரலாற்று அடிப்படையிலான பங்களிப்பு இப்படித்தான் அமைந்திருக்கிறது. 1923 ல் அக்கட்சியின் செயற்குழு அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய கட்டளைகளில், தொழிலாளர் உறவுகளை மறுசீரமைப்பதில் ஈடுபடுகிறபோது சர்வாதிகாரத்திற்கு ஆத்திரமூட்டுகிற வகையில் செயல்பட வேண்டாம் என்பதாக இருந்தது.

இதுபற்றி 1931 ல் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார்: "நேற்று தனது வலது கரத்தால் Primo De Rivera வின் சர்வாதிகாரத்தை பிடித்துக்கொண்டு சமூக ஜனநாயகம் தொங்கியது. இன்றைய தினம் அது அதன் இடது கரத்தால் குடியரசுக் கட்சிக்காரர்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சுயாதீனமான கொள்கை இல்லாத மற்றும் அத்தகைய கொள்கையை கடைப்பிடிக்க முடியாத சோஷலிஸ்ட்டுகளின் முதன்மை நோக்கம் என்னவென்றால், ஒரு நிலையான முதலாளித்துவ அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதாகும். தங்களது நோக்கம் நிறைவேறுமானால் அவர்கள் மன்னராட்சியிடம்கூட சமாதானம் செய்து கொள்வார்கள்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved