World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: the death of James Callaghan

"A good Labour man" and the end of reformism

பிரிட்டன்: ஜேம்ஸ் கல்லகன் இறப்பு

சீர்திருத்தவாதத்தின் முடிவும் "ஒரு நல்ல தொழிற்கட்சி பிரமுகரும்"

By Ann Talbot
10 June 2005

Back to screen version

முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரி ஜிம் கல்லகனின் மறைவு, ஒரு சில பெயரளவிலான இரங்கல் குறிப்புக்களுக்கும் அப்பால் கவனம் செலுத்தப்படாமல் செய்தி ஊடகத்தால் கைவிடப்பட்டுவிட்டது; அக்குறிப்புக்களும் இம்மனிதரின் வரலாற்று முக்கியத்துவத்தின் உணர்வை வெளிப்படுத்தவில்லை. 1979ல் பதவியில் இருந்து நீங்கிய கல்லகனுடைய காலத்திற்குப் பின், ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டைத் தாண்டி வேறு ஒரு உலகத்திற்கு வந்துவிட்டது போல் இது உள்ளது; இக்காலக்கட்டத்தில் முந்தைய காலத்தில் பொருத்தமானது அல்லது பயனுடையது எதுவும் இருந்ததில்லை என்ற நினைப்புத்தான் எஞ்சியுள்ளது போலும். மார்கரெட் தாட்சர் சமுதாய அமைப்பு என்று எதுவும் கிடையாது என்று அறிவித்திருந்தார். டோனி பிளேயரின் காலத்தில் வரலாறு எனவும் ஒன்றும் கிடையாது என நாம் கண்டுபிடித்துவிட்டோம் போலும். 1980 களில் தாட்சருக்கு முந்தைய, பிந்தைய அரசியல் என்று உருக்கொடுத்தது போலவே, இன்றும் செய்தி ஊடகம் பிளேயருக்கு முந்தையது, பிளேயருக்கு பிந்தையது என்ற நினைப்பில் செயல்படுகிறது. பிளேயருக்கு முந்தைய காலத்திய பகுதி என்பது, அதாவது தொழிற்கட்சியின் நூற்றாண்டு கால வரலாறு உத்தியோகபூர்வ நினைப்பில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது. நல்ல ஊதியங்கள், வாழ்க்கை நிலை ஆகியவற்றை கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த அந்த இருண்ட நாட்களுக்கு சமூகம் மீண்டும் திரும்பிவிடக்கூடாது என்பதை எச்சரிப்பதற்கே அக்காலம் பற்றிப் ஞாபகப்படுத்தப்படுகிறது; அப்பொழுதுதான் தொழிற்கட்சியானது அரசு உடைமை ஆக்குதல், வரிவிதித்துச் செலவு செய்தல் என்பவற்றை பெரிதும் விரும்பிய கட்சியாக கருதப்பட்டிருந்தது.

வரலாற்றை சற்று கவனிக்க வேண்டும் என்ற கருத்து இருந்தால், தாட்சருக்கு எந்த அளவிற்கு பிளேயரே எவ்வளவு கடமைப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வது மட்டுமே. இதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். இரும்புச் சீமாட்டியின் (Iron Lady) காலத்திற்கு முந்தைய பாரம்மரியத்தைப்பற்றி அவர் ஏதேனும் மேற்கோளிடவேண்டும் என்றாலும், அவர் தொழிற்கட்சிக்கு முந்தைய பழைய தாராளவாத மரபில்தான் நிலைப்பாட்டை கொள்ளுவதாக காண்பிக்கிறார். தொழிற் கட்சி ஏற்படுத்தப்பட்டதேகூட ஒரு "முற்போக்கு சக்திகளிடையே" ஏற்பட்ட பிளவின் ஒரு பெரும் சோகம் ததும்பிய தவறு என்று சித்தரித்துக் காட்டப்படுகிறது; அது மறக்கப்பட்டு விட்டால் இன்னும் நல்லது என்றே கூறவும் படுகிறது.

எவரையும் பற்றி, அவர் பழைய தொழிற் கட்சியின் ஆழ்ந்த கருத்தை பிரதிபலித்து வாழ்ந்திருந்தவர் என்று கூறமுடியும் என்றால், அவர் கல்லகன்தான் என்பதினால்தான் அவருடைய இறப்பு இத்தகைய சாதாரண குறிப்பாக வெளியிடப்பட்டது. "ஒரு நல்ல தொழிற்கட்சிவாதி" என்ற அடைமொழியை ஏற்பதில் அவர் மகிழ்ச்சியைத்தான் கொண்டிருந்தார். பிளேயருக்கு முன் பதவியில் இருந்தவரைப் பற்றி நல்ல மதிப்பீட்டை எழுதி எந்தச் செய்தியாளரும் பெரும் பாராட்டைப் பெறக்கூடும் என்ற நிலை இப்போதில்லை. எனவே அவர் வகித்துவந்த பதவிகளை சுருக்கமாகக் கூறி 1978-79 "அதிருப்தி நிறைந்த குளிர்காலத்தில்" மறைந்துபோன, குவிந்த குப்பை பற்றிய ஒரு ஆவணத்தை காட்டினால் போதும் என்று ஆகியுள்ளது.

ஆனால் இதைவிட மேலான தோற்றத்தை பெறுவதற்கு கல்லகனுக்கு உரிமையுண்டு. பிளேயரைவிட கணிசமான ஆற்றல் படைத்தவராகத்தான் அவர் இருந்தார். அரசியலளவில் திரட்டப்பட்டு, போர்க்குணம் நிறைந்திருந்த தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் கட்டாயத்திற்கு அவர் உள்ளாகியிருந்தார்; பிளேயரை பொறுத்த வரையில், இவருக்கு முன்பு இருந்தவர்களுடைய காட்டிக் கொடுப்புக்களினால் ஏற்பட்ட குழப்பங்கள், நோக்குநிலை தவறல் மற்றும் தேசிய சீர்திருத்தவாதத்தின் அரசியல் தோல்வி ஆகியவற்றினால் நலன்களை அடைந்தவராவர். இதையும்விட முக்கியமாக, கல்லகனுடைய அரசியல் போக்கு இப்பொழுது ஆராயப்படுவது உகந்த விளைவைத்தான் தரும்; ஏனெனில் பழைய தொழிற்கட்சி உண்மையில் எப்படி இருந்தது என்பதையும், இக்கட்சியின் வரலாற்று மரபு இப்பொழுது எப்படிப் போய்விட்டது என்பது பற்றியும் அது தெளிவாக காட்ட முடியும். பழைய தொழிற்கட்சி என்பது ஒரு அரைகுறை கட்டுக்கதை அந்தஸ்தை இப்பொழுது பெற்றுவிட்டது; டோனி பிளேயரையும் அவருடைய புதிய தொழிற்கட்சியின் திட்டத்தையும் எதிர்ப்பவர்களில் பெரும்பாலோருக்கு, ஒரு மாற்றீடான அரசியல் முன்னோக்கை வளர்க்க வேண்டும் என்றால், பழைய தொழிற்கட்சியைப்பற்றி தீவிரப் பகுப்பாய்வுக்கு உள்ளாக்க வேண்டும்.

நீண்ட காலம் தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாக பயிற்சி பெற்ற பின்னர், தன்னுடைய அரசியல் வாழ்வை 1945ம் ஆண்டின் அட்லி அரசாங்கத்தில் ஒரு மந்திரி என்ற முறையில் கல்லகன் தொடங்கினார். பின் நிதி மந்திரி, உள்துறை மந்திரி, வெளியுறவு மந்திரி என்று தொடர்ச்சியாக பணியாற்றினார். ஆனால் இன்று அவர் பெரிதும் நினைவிற் கொள்ளப்படுவது அதிருப்தி நிறைந்த குளிர்காலத்தால் 1979ம் ஆண்டு அவருடைய பிரதம மந்திரிப் பதவி முக்கியமாக இழிந்த முறையில் முடிவடைந்ததுதான்.

1945-1979 வரையிலான காலகட்டம், தொழிற்கட்சி சமூக சீர்திருத்தவாதத்தின் உச்சக் கட்டமாக நிறைந்திருந்தது; போருக்குப் பிந்தைய சமூக நலன்புரி அரசு தோற்றுவிக்கப்பட்டது மற்றும் ஊதியங்களைக் குறைத்து, பெரும் வேலையின்மையை ஏற்படுத்தி, சமூக நலன்புரி அரசை அழித்த தொழிற்கட்சி அரசாங்கத்துடன் நேருக்கு நேர் தொழிலாள வர்க்கம் மோத அந்த வேலைத்திட்டமும் முடிவிற்கு வந்ததும் இக்காலத்தில்தான். எனவே கல்லகனுடைய அரசியல் வாழ்வு போருக்குப் பிந்தைய தொழிற் கட்சி வாதத்தின் முழு அனுபவத்தையும் தழுவியிருந்தது.

இவருடைய பிரதம மந்திரி பதவி குளிர்கால அதிருப்தியில் முடிவுற்றது விந்தையே; ஏனெனில் அக்காலத்தில் தொழிற்கட்சி தலைமையில் வேறு எவரும் காட்டாத வகையில், கல்லகன்தான் தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்கட்சிக்கும் இடையே இருந்த உயிர்த் தொடர்பை பிரதிபலித்திருந்தார். கட்சிக்குள் வலதுசாரிப் பிரிவில் இருந்த போதிலும்கூட அவர் 1981ஆம் ஆண்டு மற்றவர்கள் நீங்கியதுபோல் கட்சியைவிட்டு நீங்கவில்லை. ஷேர்லி வில்லியம்ஸ், ரோய் ஜென்கின்ஸ், வில்லியம் ரோட்ஜெர்ஸ், டாவிட் ஓவென் என்னும் "நால்வர் கும்பல்" கட்சியில் இருந்து நீங்கி சமூக ஜனநாயகக் கட்சியை (SDP) நிறுவியது; அது தொழிற்சங்கத்துடன் அரசியல் தொடர்பினையும், தொழிலாளவர்க்கத்தில் சமூகதளத்தை கொண்டிருத்தல் ஆகியவற்றை வெளிப்படையாக நிராகரித்தது. அவருக்கு ஆரம்ப அரசியல் பயிற்சியையும், படிப்பினையையும் அளித்திருந்த தொழிற்சங்க சூழலில் இயைந்து அவர் நின்றார்.

நால்வர் கும்பலை பொறுத்தவரையில், தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ளுவது என்பது அவர்களுடைய வலதுசாரி பாய்ச்சலின் தர்க்கரீதியான விரிவாக்கம் என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது. அதிருப்தியான குளிர்காலத்திற்கு பதில்கூறுதலானது தொழிலாள வர்க்கத்துடன் அனைத்து அல்லது எவ்வித உறவையும் முறித்துக்கொள்ளுவதிலும், புதிய தாட்சரிச சுதந்திர சந்தை, நிதி மரபுவகை கோட்பாட்டை ஏற்பதிலும் அவர்களின் சேவையில் அது பொதிந்திருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்கள் ஆற்ற வேண்டிய மத்திய பணியை பற்றிய கூடுதலான, தெளிவான புரிதலை கல்லகன் கொண்டிருந்தார்.

இந்த புரிதலின் விளைவு, தோற்றத்தில் கூடுதலான வகையில் இடதுசாரி தொழிற்கட்சி தலைவர் ஹரோல்ட் வில்சனுடன் அவரை மோதும் நிலையிலும் தள்ளியது. வில்சன் அரசாங்கம் 1969ஆம் ஆண்டு பார்பாரா காஸ்ரிலின் வெள்ளை அறிக்கையான In Place of Strife ஐ நுழைக்க முற்பட்டபோது, அந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான சட்டத்தை கல்லகன் எதிர்த்தார். 1964ஆம் ஆண்டு தொழிற்கட்சி பதவிக்கு வந்தபோது அது மரபுரிமையாக பெற்றிருந்த ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு விடையாக மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் தங்களின் வாழ்க்கைத்தரங்களை முன்னேற்றுவதற்கான தொழிலாளவர்க்கத்தின் முயற்சிகளை பிரதிபலித்த நீண்ட தொடரான தொழில்துறை போராட்டங்களுக்கும் விடையாக அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1945க்கும் 1968க்கும் இடையே இங்கிலாந்தில் வேலைநிறுத்தங்கள் மூலம் 2 மில்லியன் உழைக்கும் நாட்கள் இழக்கப்படாமல் இருந்த ஆண்டுகள் குறைவே. ஒவ்வொரு ஆண்டும் பல நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தொழிற்துறை மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்; இதில் உச்சக் கட்ட ஆண்டுகளாக 1953, 1957, 1962 மற்றும் 1968 ஆகியவை இருந்தன; அவ்வாண்டுகளில் மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 1969 ஐ ஒட்டி, முந்தைய பெவனைட்டிச இடது (Bevanite- தேசிய சுகாதார சேவையை அறிமுகப்படுத்திய முன்னாள் தொழிற்கட்சி தலைவர்) பிரதிநிதிகள், காஸ்ரில், வில்சன் போன்றவர்கள் இனி கடுமையான சட்டபூர்வ தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல் மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செய்யப்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விட்டிருந்தனர்.

ஒரு சட்டபூர்வ வழியில் வேலைநிறுத்தங்களை கட்டுப்படுத்தவேண்டும் என்ற அணுகு முறையை கல்லகன் நிராகரித்து, முடிந்தால் வில்சன் தன்னை வெளியேற்றட்டும் என்றுகூட அறைகூவல் விடுத்தார். பெருகிய முறையில் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் இருந்த நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கூடுதலான முறையில் செயலாற்றும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று அவர் உணர்ந்திருந்தார். தொழிலாள வர்க்கம் இப்பொழுது அடிக்கடி அதிகாரபூர்வமற்ற வேலைநிறுத்தங்களில் தொழிற்சங்க நம்பிக்கை பிரதிநிதிகளால் (Shop Stewards) ஏற்பாடு செய்பவற்றில் ஈடுபட்டு வந்தது. வேலை நிறுத்தங்கள்மீது சட்டபூர்வ தடைகள் கொண்டுவந்தால், தொழிலாளர்களை அதிகாரபூர்வமற்ற, இன்னும் கூடுதலான வகையில் போர்க்குணம் கொண்டுள்ள தலைவர்களின் பிடிக்குள் தள்ளிவிடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்; மேலும் அதையும் மோசமாக்கும் வகையில் மிக அதிகமான தொழிலாளர்கள் வெளிப்படையாகவே தொழிற்சங்கங்களுக்கு எதிராக எழுச்சி செய்து புதிய புரட்சிகர அமைப்புக்களை கட்டமைக்கும் பணியில் கூட ஈடுபடக்கூடும் என்று அவர் அறிந்திருந்தார்.

1964ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் 800 மில்லியன் பவுண்டுகள் வரவுசெலவுதிட்ட பற்றாக் குறையை முன்பிருந்த அரசிடமிருந்து (மரபுவழி) பெற்றிருந்தது. இதற்காக அது உடனடியாக செலவீனக் குறைப்புக்களை அறிமுகப்படுத்தியது. 1966ம் ஆண்டு இன்னும் கூடுதலான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்த நிலையில், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பொதுநல செலவினக் குறைப்புக்களை அது சுமத்தியது. 1967 நவம்பர் அளவில், அரசாங்கம் பவுண்டின் மதிப்பை 14 சதவிகிதம் மதிப்புக் குறைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 400 மில்லியன் பவுண்டுகள் செலவினக் குறைப்புக்கள் மற்றும் கடன் வழங்குவதில் பெரும் கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டது. நிதி மந்திரி என்னும் முறையில், இக்காட்டுமிராண்டித் தன்மையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு தேவை என்று அவர் அறிவார். தொழிற்கட்சி அரசாங்கம் தப்பிப் பிழைப்பதே தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டால்தான் முடியும் என்றும் சமூக ஜனநாயகக் கட்சிதான் இறுதியில் நாட்டையும் இலாப அமைப்புமுறையையும் உயிர்தப்பி இருக்க உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கருதினார். தொழிற்சங்கங்களை எப்படியும் சட்டத்தின் மூலம் தடைகளுக்கு உட்படுத்திவிடலாம் என்று நினைத்தால் அது பாராளுமன்ற முறை ஜனநாயகம் தப்பிப் பிழைத்தலையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி விடும் என்று அவர் கருதினார். In Place of Strife என்பது வெளிப்படையான வர்க்க மோதல் ஆபத்தைத்தான் ஏற்படுத்தியது.

போலீஸ் கூட்டமைப்பு எனப்படும் போலீஸ்காரர்கள் தங்கள் உயரலுவலர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள அமைப்பின் பாராளுமன்ற ஆலோசகர் என்று பலமுறையும் கல்லகன் நினைவிற்கொள்ளப்படுகிறார். ஆனால் தொழிற்சங்கங்களுடனான அவர் தொடர்பு இதையும் விடப் பரந்ததாக இருந்தது. போக்குவரத்து, பொதுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் புகழ் பெற்ற இடதுசாரித் தலைவர் ஜாக் ஜோன்ஸ் இவரை 1972ம் ஆண்டு துணைத் தலைவர் பதவிக்கு வருவதற்கு பெரும் ஆதரவை கொடுத்திருந்தார். இந்த தொழிற்சங்கத்தின் ஆதரவுதான் வில்சன் 1976ல் ராஜிநாமா செய்தபோது, இவருக்கு கட்சித் தலைமையை பெறுவதற்கான ஆதரவை தந்து உதவியது. ஒரு பிரதம மந்திரி என்னும் முறையில் இவர் தொழிற்சங்க தலைவர்களுடன் மாதாந்திர கூட்டங்களில் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கு இரவு உணவுக் கூட்டங்களில் வாடிக்கையாக கலந்து கொண்டார். தொழிலாளர்களின் வாழ்க்கை தரக்குறைப்பு என்ற சாதனைகளில் தன்னுடைய மற்றும் ஜேர்மன் அதிபர் ஹெல்முட் ஸ்மித் இருவருடைய ஒப்புமையை வெளிப்படுத்தும்போது, கல்லகன் குறிப்பிட்டார்: "எமது தொழிற்சங்க தலைவர்களான ஜாக் ஜோன்ஸும் கூட்டாளிகளும் மிக வியத்தகு முறையிலேயே நடந்து கொண்டுள்ளனர் என்பதை நான் கூறியாக வேண்டும்"

1974ம் ஆண்டு எட்வார்ட் ஹீத்தின் பழைமைவாத அரசாங்கத்தை கவிழ்த்த போர்க்குணம் மிகுந்த சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அலையின் பின்னணியில் தொழிற்கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது: அந்த நெருக்கடி புரட்சிகரமான உட்குறிப்புக்களை கொண்டிருந்தது. சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை கொடுத்தது, இன்னும் கூடுதலான முறையில் உயர்ந்த பொதுநல நலன்கள், உணவிற்கான உதவித் தொகை, வாடகைக் கட்டுப்பாடு, ஆண்டுமுறையில் சொத்துமீதான வருமானவரி, சில துறைகளில் கட்டணங்கள் வசூலித்தல் நிறுத்தப்பட்டது, கல்வி நலச் செலவினங்களில் பெருக்கம், நிறுவன நிர்வாகக் குழுக்களில் தொழிலாளர் பங்கு பெறுதல், எண்ணெய், கப்பல் கட்டுதல், விமானத் துறை மற்றும் நிலப் பிரிவுகள் அரசாங்கமயமாக்கப்படும் என்ற அறிவிப்பு போன்ற இடது கருத்துக்கள் நிறைந்த அறிக்கையை வெளியிட்ட வகையில், தொழிற்கட்சி அந்த நெருக்கடியை தவிர்த்தது. எதிர்பார்ப்புக்கள் மிகுந்து காணப்பட்டன; ஆனால் தொழிற்கட்சி செய்ததெல்லாம் எந்த டோரி அரசாங்கமும் சாதிக்கமுடியாத வகையில், தொழிலாளர்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லும் நிகர ஊதியத்தை குறைத்ததும் மற்றும் சமூகநல செலவினங்களை குறைத்ததும்தான்.

தொழிற்சங்கத்தின் மீதான தடைகளை சட்டபூர்வமாக கொண்டுவரமுடியாத நிலையில் ஹீத் தோல்வியுற்றபோது, தொழிற்கட்சி அரசாங்கம் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பை பெற முடிந்தது. தொழிற்சங்கங்களுடன் தொழிற்கட்சியின் ஒத்துழைப்பு சமூக ஒப்பந்தம் என்பதில் எழுதப்பட்ட தன்மையில் இருந்தது. 1972ம் ஆண்டு தொழிற்கட்சி மாநாட்டில் முதல் முறையாக கல்லகனால் இது பயன்படுத்தப்பட்டது; இந்தச் சொற்றொடர் இவருடைய பார்வையில் தொழிற்சங்கங்கள் எப்படி அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று விவரித்த வகையில் இயற்றப்பட்டிருந்தது.

ஆனால் பிரதம மந்திரியான சில மாதங்களுக்குள்ளாகவே, கல்லகன் சர்வதேச நாணய நிதிய அமைப்பிடம் அந்த அமைப்பின் வரலாற்றிலேயே மிக அதிக கடனுக்காக முறையீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது; ஏனெனில் சர்வதேச ஊகக்காரர்கள் பவுண்டின்மீது தாக்குதல் நடத்தி இங்கிலாந்தின் இருப்புக்களை பெரிதும் குறைத்து விட்டனர். இன்றைய தரக் கண்ணோட்டத்தில் இந்த புள்ளிவிவரங்கள் சிறு தொகை போல் தோன்றும்; ஆனால் அந்தக் காலத்தில் அது பங்குச் சந்தையில் பெரும் பீதியை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருந்தது. $3.9 பில்லியன் கடனுக்கும் பிரதியாக சர்வதேச நாணய நிதியம் சமூகநல செலவினங்களில் கடுமையான குறைப்புக்கள் வேண்டும் என்று கூறியது. சில சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கல்லகன் வாதிட்டார். சர்வதேச நாணய நிதியம் "பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் வேலையின்மை பெருகினால் ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்றி" கவலைப்படுவதில்லை; அது எப்படி பிரிட்டனின் ஜனநாயகத்தையே வருங்காலத்தில் ஆபத்திற்குட்படுத்தும் என்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை." ((Kenneth O. Morgan, Callaghan: A Life, Oxford University Press, 1997, p. 547). நிலைமை பற்றிய அவருடைய மதிப்பீட்டில் அவர் தவறாகிவிடவில்லை. அதிருப்தியான குளிர்காலம்தான் அடுத்த மூன்று ஆண்டுகளில் வாழ்க்கைத்தரத்தில் மீதான தாக்குதல்களுக்கான பிரதிபலிப்பாக வெளிப்பட்டது.

பலவிதங்களிலும், பின்னர் தாட்சரிசத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட நிதிக் கொள்கைகளுக்கு இங்கிலாந்து மாறியதன் புள்ளியாக 1976இனை காணலாம். பல முறையும் தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு முற்போக்கான அரசாங்கம் விரோத நிலையினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது என்ற விதியை கொண்டது என்று இடதுகள் பலமுறையும் கூறியுள்ளன. ஆனால் வரலாற்றுச் சான்றுகள் கல்லகனுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே பூசல் எப்படிக் கடுமையாக இருந்தபோதிலும்கூட, தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்கனவே கட்சியின் போருக்குப் பிந்தைய திட்டமான சமூக சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக இருந்த கீன்சிய பொருளாதாரத்தில் இருந்து நகரத் தொடங்கிவிட்டது என்று காட்டுகின்றன. இந்த மாற்றத்தின் முன்னோக்கை தொழிற் கட்சியின் 1976 செப்டம்பர் மாநாட்டில் கல்லகன் விரிவாகக் கூறினார்; சர்வதேச நாணய நிதியம் கொடுக்கவிருக்கும் கடனுக்கான விதிகள் அப்பொழுது அறிவிக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த கூட்டத்திற்கு அவர் கூறியதாவது: "ஒரு மந்த நிலையில் இருந்து, வேலைவாயப்பை பெருக்கி, வரிகளை குறைத்து அரசாங்க செலவினங்களை அதிகரித்து என்ற வகையில் நாமே ஒரு வழியை தேர்ந்தெடுத்து வெளிவரலாம் என்று நினைத்திருந்தோம். மிகவும் வெளிப்படையாக இனி அத்தகைய நிலை இல்லை என்பதை உங்களுக்கு நான் கூறவேண்டியிருக்கிறது. ..."

சர்வதேச நிதிச் சந்தைகள் அவற்றை அனுமதிக்காது என்பதால் இனி அவ்வாறு இருக்க முடியாது என்பதை கல்லகன் உணர்ந்தார். பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், இயல்பிலேயே இருக்கும் சமூக, அரசியல் பூசல்கள் அதாவது, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே மோதல்கள் தடுக்கப்படுவதற்கும், இனி அரசாங்கம் கடனை பெற இயலாது என்பதை கல்லகன் தெளிவாக்கினார். அட்லீ அரசாங்கம் அறிமுகப்படுத்திய சீர்திருந்த கொள்கையின் வகையில் தான் இனி அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை அவர் உணர்ந்தார்: மேலும் அத்தகைய கருத்துத்தான் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து தொழிற்கட்சியின் தத்துவார்த்த அடித்தளமாக இருந்தது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

ஆனால் அத்தகைய மாற்றம் ஒரே இரவில் நடைபெற்றுவிடுவதில்லை. 1967ஆம் ஆண்டின் போதே, அவர் நிதி மந்திரியாக இருந்தபோது, முழு வேலைநேரக் கோட்பாட்டிற்கு உத்தரவாதம் என்ற போருக்குப் பிந்தைய நிலைப்பாட்டை நிராகரிப்பதில் கீன்சியப் பொருளாதாரம் மற்றும் சமூகச்சீர்திருத்தம் இவற்றில் இருந்து தெளிவாக முறித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல; ஆனால் சில விதங்களில் பொருளாதாரத்தில் இத்தகைய முறையான பயிற்சி இல்லாதது, பிரச்சினைகளை கோட்பாட்டளவில் வெறியுடன் கையாளவது என்றில்லாமல் வளைந்து கொடுக்கும் தன்மையுடன், நடைமுறைக்கு ஏற்றவாறு ஒரு புதிய அணுகுமுறையை கையாள்வது என்று கொண்டுவந்து, அம்முறைக்கு நிதியமுறை (Monetarism) என்ற பெயரையும் கொடுத்தது. சர்வதேச பார்வையில், போருக்கு பிந்தையகாலத்தின் மூலதன பெருக்கத்தை முடிவிற்கு கொண்டுவந்த நெருக்கடிக்காலங்களில் உலக நிதியமுறையை மறு சீரமைப்பதில் ஒரு முக்கிய பங்கினை கல்லகன் கொண்டார்; அவர் இந்த புதிய சர்வதேச நாணய நிதியம் முறை, அதாவது இங்கிலாந்தின் பிரச்சினைகளை தீர்க்க 1976ல் வந்த முறையின் செவிலியரில் ஒருவர் போலானார்.

நிதிய முறைக்கு நகர்ந்ததும் மற்றும் சமூக சீர்திருத்தத்தை கைவிட்டது என்பதும் வெளியில் இருந்து தொழிற்கட்சியை தாக்கிய எதிர்பாராத நிகழ்வு ஒன்றும் அல்ல. தொழிற்கட்சிக்குள்ளேயே, பொருளாதார நிலைமைக்கு, சமூக சீர்திருத்தம் கொண்டுவரப்படுவது மிகவும் கடினம் என்று உணரப்பட்ட விடையிறுப்பு என்பதுதான் இந்த முன்னோக்கில் ஏற்பட்ட மாறுதலாகும். தொழிலாள வர்க்கம் போருக்கு பிந்தைய காலத்தில் பெற்ற நன்மைகளை பாதுகாத்தலுக்கும் தேசிய முதலாளித்துவ பொருளாதார முறையை காத்திடல் என்பதற்கிடையேயான தேர்வில், கல்லகன் தன்னுடைய விசுவாசத்தை ஐயத்திற்கு இடமின்றி பிரிட்டனின் முதலாளித்துவத்திற்குத்தான் கொடுத்தார்.

இதேபோன்ற நிலைப்பாட்டை தொழிற்கட்சி முன்னரே எதிர்கொண்டிருந்தது. 1931ம் ஆண்டு ராம்சே மாக்டொனால்ட் ஒரு சர்வதேச நிதி நெருக்கடியையும், பவுண்டின் சரிவையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு விடையிறுக்கும் வகையில் அவர் டோரிக்களுடனும், லிபரல்களுடனும் சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். தொழிற்கட்சியை பிரித்தல் என்ற அவருடைய முடிவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரையில் கட்சி இழந்திருந்த ஆதரவை அவருக்கு மீட்டுத் தரவில்லை. அப்பொழுதில் இருந்த மக்டோனால்ட் ஒரு காட்டிக் கொடுத்த துரோகி என்றுதான் கருதப்பட்டார். கல்லகன் 1931ஐ நினைவிற்கொள்ளும் வயதில் இருந்தார்; அவருடைய அரசியல் வாழ்வில் முக்கிய அக்கறைகளில் ஒன்று, தான் மற்றொரு மக்டோனால்டாக போய்விடக்கூடாது என்பதுதான்.

தன்னுடைய மந்திரிசபையை கைவிடாத தன்மையில் கல்லகன் "ராம்சே மாக்டோனால்ட் செயலைச்" செய்துவிடவில்லை. அவர் அவ்வாறு செய்யவேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடவில்லை; ஏனெனில், தொழிலாளர்களிடம் இருந்து பிரிட்டிஷ் முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கு அவர் தொழிலாளர்கள் மீது சுமத்திய பளுவிற்கு, இடதும், வலதும் அவரை விசுவாசத்துடன் ஆதரித்தன. தலைமைப் போட்டியில் இடதுசாரியின் வேட்பாளராக இருந்த மைக்கேல் புட் அரசாங்கத்தின் ஊதியத்தை மட்டுப்படுத்தும் அரசாங்க உத்தியில் மத்தியக் கருவியாக இருந்தார். அவர்தான் 1975ம் ஆண்டு "விருப்பத்துடன்" 6 பவுண்டுகள் ஊதிய உயர்வு போதும் என்ற பேரத்திற்கு பொறுப்பாக இருந்தவர். 1976ம் ஆண்டு சர்வதேச நாணய நிதிய நெருக்கடிக்காலம் முழுவதும், ஒரு வரலாற்றாளர் கூறியுள்ளபடி, "அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இருந்த உறவுகளின் அச்சாணியாக மைக்கேல் புட்தான் இருந்தார்." (Morgan, p.549). வேறு மாற்றீட்டுக் கொள்கை ஏதேனும் இடதிற்கு இருந்தது என்றால், அவர்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளை கோரினர்; அவை ஒரு முற்றுகையிடப்பட்ட பொருளாதாரத்தை ஏற்படுத்தி, பதிலடியையும் வணிக போரையும் ஏற்படுத்தி இன்னும் கூடுதலான வகையில் தொழிலாள வர்க்கத்திற்கு பாரிய கஷ்டங்களை கொடுத்திருக்கும்.

தொழிற்கட்சியின் இடது பிரிவு மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கு கல்லகன் நிர்வாகத்தை இயக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்துடனும், கட்சியுடனும் முறித்துக் கொள்ளுவதற்கு இன்றியமையாமல் தேவைப்பட்டிருந்தது; இவை இரண்டுமே தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய தீமையைத்தான் செய்து கொண்டிருந்தன. லிபரல்-லேபர் ஒப்பந்தத்தை காண்பதற்காக கல்லகன் ஒரு கூட்டு அமைத்ததற்கு இடது எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய உதவியுடன், தொழிற்கட்சி அரசாங்கத்தின் காலத்தை நீட்டிப்பதற்கு கணக்கில் அடங்காத வகையில் பணியைச் செய்தார்: இது ஆழ்ந்த பிளவைக் கொண்டிருந்த டோரிக் கட்சிக்கு தாட்சர் தலைமையில் சிந்தைனை வகையில் தயாரித்துக் கொள்ளுவதற்கு ஒரு பெரும் வாய்ப்பைக் கொடுத்தது; தாட்சரும் அவருடைய நிதிய ஆலோசகர்களான சேர் கீத் ஜோசப்பும் 1979ல் பதவியை கைப்பற்றவும் முடிந்தது.

நால்வர் கூட்டைப் போல் கல்லகன் தொழிற்கட்சியை விட்டு நீங்கவில்லை என்றாலும், லிபரல்-லேபர் உடன்படிக்கை அவர்கள் தொழிற்கட்சியை விட்டு விலகுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது என்றாலும், உண்மையில் பின்னர் புதிய தொழிற்கட்சியை சமூக ஜனநாயக கட்சி (SDP) இடம் இருந்து அதிக மாறுபாடில்லாத திட்டத்துடன் அமைப்பற்கும் அவ்வுடன்படிக்கை உதவியது. அந்த அடிப்படை உணர்வில் புதிய தொழிற் கட்சிக்கும் பழைய தொழிற்கட்சிக்கும் இடையே ஓர் உயிர்த்த தொடர்பு உள்ளது. ஒன்றில் இருந்துதான் மற்றது தோன்றியது.

ஒரு தீய நோக்கத்துடனோ அல்லது உணர்வுடனோ கல்லகன் நடந்து கொள்ளவில்லை. 1974ம் ஆண்டு தொழிற்கட்சி அறிக்கையின்படி திட்டங்களை செயல்படுத்த சாத்தியமாக இருந்திருந்தால், அவர் ஒரு நடைமுறை அரசியல்வாதி மற்றும் சமூக உடன்பாட்டை மதிப்பவர் என்ற முறையில் இருந்ததால் அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடும். சீர்திருத்த முறை என்பது அவருக்கு ஒரு வாழ்வியற் கூறுபாடு ஆகும். இவர் நிதிய முறைக்கு மாறியதில் ஒரு புறநிலைரீதியான தன்மை இருந்தது; வேறு எந்த தொழிற்கட்சி அரசியல்வாதிக்கும் நிலைமை அப்படித்தான் இருந்திருக்கும். அவர்கள் அனைவருமே ஒரு தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தை தக்கவைத்து, பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் வரலாற்று நலன்களை காக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசத்திற்கான புரட்சிகர போராட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தைத்தான் பெற்றிருந்தனர். தொழிற்கட்சி ஒன்றும் தாட்சரினால் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் இருப்புக்கள் மற்றும் வரலாற்று பதவிக்காலத்தின் முடிவை அது அடைந்துவிட்டது. சமூக சீர்திருத்தவாத வேலைத்திட்டத்திற்கு மீண்டும் வருவது என்பது இனி இயலாது என்ற நிலைமை வந்துவிட்டது.

பழைய தொழிற்கட்சியை புதுப்பிக்கவேண்டும் என்று விரும்பவர்கள் இரு பிரிவுகளில் உள்ளனர். அரசியலில் வெகுளித்தனமாக இருப்பவர்கள் ஒருபுறம், அரசியலில் வெகுளித்தனமாக இருப்பவர்களை ஏமாற்றி தங்கள் வாழ்வு நலன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பவர்கள் மறுபுறம். இவர்களுக்கிடையே தோற்றத்தில் இருக்கும் நம்பிக்கை ஒற்றுமை முற்றிலும் மேம்போக்கானது; ஏனெனில் இவை இரண்டு வேறு வேறு அடித்தளங்களில் இருந்து வந்துள்ளவை. ஒன்று அப்பட்டமான சந்தர்ப்பவாதமாக வெளிப்படுகிறது; மற்றது பொருளாதார அரசியல் வாழ்வு தேசிய அரசை அடித்தளமாக கொண்டிருந்தபோது உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நீண்ட வரலாற்று அனுபவத்தின் விளைவாகும்.

தேசிய அரசு, என்ற கருத்துக்கு வழிகாட்டிய அரசியல் வடிவமைப்புக்களும், தத்துவங்களும் இன்னும் பெரும்பாலான மக்களுடைய மனத்தில் செல்வாக்கை கொண்டிருக்கின்றன; ஒரு தற்கால சமூகத்தில் இருக்கும் அடிப்படையான சமூக உறவுகளை அவை பிரதிபலிக்கவில்லை என்றாலும் கூட, அவற்றின் செல்வாக்கு தொடர்கிறது; தற்கால சமுதாயத்தில் சர்வதேசியம்தான் தேசியத்தைவிட ஆதிக்கத்தை கூடுதலான முறையில் பெற்றுள்ளது. உணர்மையானது தவிர்க்க முடியாத வகையில் சமூக இருப்பிலிருந்து பின்தங்கியுள்ளதுடன் காலம் கடந்துவிட்ட கூறுபாடுகளை அது இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

ஸ்டூவர்ட் பரம்பரைக்கு விசுவாசத்துடன் இருந்த ஜோர்ஜிய இங்கிலாந்தில், மன்னரின் நீண்ட காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து மரு அருந்தியபோது, பழைய ஆட்சிக்கு இரகசியமாக இருந்த மதிப்பு வெளிப்படுத்தப்பட்டது. The King-Over-the-Water, (தலைக்கு மேலே வெள்ளம் போன அரசர்) என்பது ஒரு அரைகுறை கற்பனை நிலையாக பின்தங்கிய மக்களுக்கு ஒரு பழைய விரோதப் போக்குடைய அரசரின் தடையை அகற்றி, குறைந்து கொண்டிருக்கும் விசுவாச எண்ணிக்கையாளர்களுக்கு ஒரு மீட்பின் அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. அவர்கள் நினைவூகூர்ந்த விசுவாசம் மரபில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை; ஏனெனில் ஹனோவர் அரசர்கள் பரம்பரையின் பெருமையற்ற நிலை ஸ்டூவர்ட்டுக்களை மீட்க வேண்டும் என்ற பொது விருப்பத்தில் இல்லாமல், இவர்களுடைய வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்பு என்ற நிலையில் பரந்து இருந்தது; மேலும் 18ம் நூற்றாண்டு பிரிட்டனின் முழு அரசியல் முறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆழ்ந்த சமூக பொருளாதார மாறுதல்களை பற்றியும் பரந்த முறையில் எதிர்ப்பு இருந்ததுதான் அவ்வகையில் வெளிப்பட்டது.

பழைய தொழிற்கட்சி என்பது தொழிற்கட்சியின் தலைக்கு மேலே வெள்ளம் போன அரசராகும் (King-over-the-Water). 100 இடங்களை இழந்து நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டோனி பிளேயயர் டெளனிங் தெருவிற்கு திரும்புகையில், முக்கிய தொழிற்கட்சி தலைவர்கள் அதிகாரத்திற்கு பேரம் செய்து கொண்டிருக்கின்றனர்; அவர்கள் வாக்காளர்களுக்கு ஆழம் காண முடியாத புதிர் போல் தாங்கள்தான் பழைய தொழிற்கட்சி அதிகாரத்தின் பின்தோன்றல்கள் என்பதை வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் லண்டன் நகரம் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஆபத்து என்று எச்சரிக்கவேண்டிய நிலை கிடையாது என்பதையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர்.

தற்போதைய ஆட்சியை அகற்றவேண்டும் என்ற அவர்களுடைய உறுதிப்பாடு, Bonnie Prince Charlie -திடகாத்திர சார்லி இளவரசர்- தன்னுடைய பதவியை மீட்பதற்கு நேரிலேயே வந்துவிட்டதற்கு பின் அணிவகுத்து நிற்க மறுத்துவிட்ட 18ம் நூற்றாண்டு சீமான்களின் உறுதியைத்தான் கொண்டுள்ளது. ஆனால் பிளேயயருக்கும், புதிய தொழிற்கட்சிக்கும் அவர்கள் கொண்டுள்ள விரோதப் போக்கு மக்களிடையே இருப்பதை இவர்கள் உணர்ந்துள்ளது உண்மையானதுதான். அதற்கு தக்க நிரூபணத்தை அவர்கள் தேர்தலில் கண்டனர்; அதில் வாக்காளர்களில் ஐந்திற்கு ஒருவர்தான் தொழிற்கட்சிக்கு வாக்களிக்க முன்வந்திருந்தனர். இக்கட்சி இதுபோன்ற பல வெற்றிகளுக்கு பின்னர் நிலைத்திருக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved