:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Watergate in historical perspective: Why does today's
criminal White House face no similar challenge?
ஒரு வரலாற்றுப் பார்வையில் வாட்டர்கேட்: ஏன் இன்றைய குற்றம்மிக்க வெள்ளை
மாளிகை அதே போன்ற சவாலை எதிர்கொள்ளவில்லை?
By Patrick Martin
3 June 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
வாட்டர்கேட் விவகாரத்தின்போது, வாஷிங்டன் போஸ்டிற்கு மிக முக்கியமான
தகவல்களை அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து கொடுத்தவந்த
Deep Throat
என்பவர் முன்னாள் FBI
அதிகாரியான Mark Felt
தான் என்று அவருடைய குடும்பமே செவ்வாய்க்கிழமை அன்று, அடையாளம் காட்டிவிட்டது. ஜோன் ஓ. கானர்
என்னும் குடும்ப வக்கீலால் எழுதப்பட்டு, குடும்பத்தின் ஒப்புதல் பேரில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று
Vanity Fair இதழில் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது.
ரிச்சார்ட் நிக்சன் 1974ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை விட்டு இராஜிநாமா செய்ய கட்டாய காரணமான,
வாட்டர்கேட் விசாரணையின்போது மிகவும் அறியப்பட்டிருந்த பொப் வூட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன்
என்னும் இரு செய்தியாளர்கள், பின்னர் Felt
தான் தங்களுக்கு தகவல் கொடுத்த முக்கிய ஆதாரம் என்று உறுதிப்படுத்தினர்.
இப்பொழுது 91 வயதாகியிருக்கும்
Felt,
தொடர்ந்து பல உடல் முடக்கங்களுக்கு பின்னர் மோசமான நிலையில் இருக்கிறார்; இதைப் பற்றி அவர் பொதுவில்
எதுவும் கூறவில்லை; ஆனால் கலிபோர்னியாவில் சான்டா ரோசாவில் தன்னுடைய வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களுக்கு
வாழ்த்துக் கூறினார்; Vanity Fair
கட்டுரை வெளியான போதே அவருடைய மகளும், பேரனும் ஓர் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இது நிகழ்ந்தது.
இவர் 1942ல் FBI
இல் சேர்ந்து, உழைத்து 1972 ஐ ஒட்டி நிறுவனத்தின் உயர் அந்தஸ்தில்
3ஆம் இடத்தில் இருந்தார். இந்த வேலைக்கு அவர் J.
Edgar Hoover ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1973ம்
ஆண்டு பல முறையும் உயர் தலைமைக்கு தேர்வு செய்யப்படாததை அடுத்து வேலையை இராஜிநாமா செய்தார்.
பெல்ட் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதற்கு செய்தி ஊடகம் ஆரம்ப
விடையிறுப்பாக, முன்னாள் நிக்சன் உதவியாளர்களை மேற்கோளிட்டு ஏராளமான கதைகளை வெளியிட்டு அவற்றில்
பெல்ட்டை முதுகில் குத்துபவர், துரோகி என்று கண்டனத்திற்குட்படுத்தியதுதான். நிக்சனுக்கு முன்னாள் உரை எழுதித்
தருபவரும், மூன்று முறை ஜனாதிபதி பதவிக்கு தீவிர வலது வேட்பாளருமாக இருந்த பாட்ரிக் புஹானன், பெல்ட்டை
"ஒரு கெளரவமற்ற மனிதன்" என்று குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று
வலியுறுத்திய அவர், "நம்பிக்கைத் துரோகம் செய்த வகையில்தான் மார்க் பெல்ட் நடந்து கொண்டார் என்று
நான் நினைக்கிறேன்." என மேலும் கூறினார்;
நிக்சனின் இழிந்த செயல்களுக்கு உடந்தையாக உயர்மட்டத்தில் இருந்து ஏற்பாடு
செய்திருந்த, இப்பொழுது ஓர் அடிப்படைவாத பாதிரியாராகவும், கிறிஸ்துவ வலதின் முக்கிய நபராகவும் இருக்கும்
சார்ல்ஸ் கோல்சன், "ஒரு FBI
அதிகாரி திருட்டுத்தனமாக, இருண்ட சந்துக்களில் செய்தியாளர்களிடம் தகவல்களைக் கொடுத்தார்" என்பதை
கேட்டுத்தான் "பெரும் அதிர்ச்சி கொண்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்.
நான்கு மாதம் சிறையில் இருந்த குற்றவாளிகளான கோல்சன், நிக்சனின்
எடுபிடிகளான புஹானன் போன்றவர்களின் கருத்துக்களை வாட்டர்கேட் பற்றிக் கேட்டு, அவர்களுடைய கருத்து
ஏதோ முறையான விமர்சனம் போல் அவற்றையும் வெளியிடுவது, பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி
ஊடகத்தின் உள்ளார்ந்த வலதுசாரி தன்மைக்கு சாட்சியமாக உள்ளது.
கோல்சன், புஹானன் மற்றும் இக்கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு நிக்சனின்
வெள்ளை மாளிகை குற்றங்கள் மூடிமறைப்பதில் பெல்ட் சேர்ந்துகொள்ளாததை, ஏதோ நம்பிக்கைத் துரோக
தவறினை அவர் செய்துவிட்டதாக கருதுவது நகைப்பிற்கு உரியதாகும். ஜனநாயகக் கட்சியின் தேசியக்குழு
அலுவலகங்கள் வாட்டர்கேட்டில் கொள்ளைக்கு உட்பட்டதை பற்றிய குற்ற விசாரணையை பெல்ட் மேற்பார்வையிட்டு
கொண்டிருந்தார்: வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொண்டதற்கு அங்கு சான்றுகள் இருந்தன. இந்த விசாரணை
மிகத் தெளிவான முறையில் அதே வெள்ளை மாளிகையால் நாசவேலைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. வேறுவிதமாகக்
கூறினால், வாட்டர் கேட் கொள்ளையை ஏற்பாடு செய்திருந்த சதிக்கூட்டம்தான் மூடிமறைப்பதிலும் அதைத்
தொடர்ந்து செய்து வந்திருந்தது.
வாஷிங்டன் போஸ்ட்டிற்கு பெல்ட் வெளியிட்ட தகவல் தற்போது நடந்து
கொண்டிருக்கும் ஒரு குற்றத்தை அம்பலப்படுத்தும் முயற்சியாகும்; அக்குற்றத்தை நடத்திவந்தவர்கள் அவருடைய
உயரதிகாரிகளே ஆவர்: அதாவது அமெரிக்க ஜனாதிபதியும் அவருடைய வெள்ளை மாளிகையில் இருக்கும் உயர்
அதிகாரிகள், மற்றும் பெல்ட்டின் உடனடி மேலதிகாரியான
FBI இடைக்கால
இயக்குனர் எல். பாட்ரிக் கிரே ஆகியோர் ஆவர். இந்த உதவியாளர்கள் அனைவரும் பின்னர் கடுமையான
குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்; நிக்சன் இந்த நிலையில் இருந்து தப்பியதற்குக்
காரணம் அவர் ஜனாதிபதிப் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டதாலும், அதற்கு ஈடாக
அவருக்குப் பின் பதவிக்கு வந்த துணை ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட் அவருக்கு மன்னிப்பு வழங்கியதாலும்தான்.
இந்த உண்மை ஒரு புறம் இருக்க, பெல்டை பொறுத்தவரையிலும் அவர் ஒன்றும்
கறைபடியாத கரங்களைக் கொண்டவர் அல்ல. அவர் வூட்வார்டுடன் இரகசியமாக சந்தித்து, நிக்சனின் வெள்ளை
மாளிகையின் குற்றங்களை பற்றிய பெரும் இழிவுத் தகவல்களையும் கசிய விட்ட அதேநேரத்தில், அவரும் சட்ட
விரோதமான, பிடியாணைகள் இல்லாத சோதனைகளை
Weather Underground என்ற சந்தேகத்திற்குட்பட்டிருந்த
அமைப்பின் உறுப்பினர்கள், குடும்பங்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்;
Weather Underground
என்ற அந்த மாவோயிச போர் எதிர்ப்புக் குழு ஒரு சிறிய அளவில்
1970--71 காலத்தில் நன்கு அறியப்பட்ட குண்டுவீச்சுக்களையும் நடத்தியிருந்தது. நீண்டகால
FBI வெள்ளை
மாளிகை நிக்சனின் "குழாய் சரிபார்ப்பவர்களால்" சட்டவிரோதமான வீடு உடைப்புகள் நடத்தப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவித்தாரே ஒழிய, இத்தகைய செயல்கள்
FBI யாலேயே செய்யப்படுதவதற்கு ஒப்புதல்தான்
கொடுத்திருந்தார். பெல்ட் இறுதியில் விசாரணைக்கு உட்பட்டு 1980ம் ஆண்டு
FBI திருட்டுத்தனம்
செய்திருந்த வீடுகளின் உரிமையாளர்களுடைய குடியியல் உரிமையை மீறிய குற்றத்திற்காக தண்டனையை பெற்றார்.
1981ம் ஆண்டு அவர் ஜனாதிபதி ரோனால்ட் ரேகனால் மன்னிப்பு வழங்கப் பெற்றார்.
வாட்டர்கேட்: வரலாற்றுப் பின்னணி
வாஷிங்டனில், ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுத் தலைமையகம் (Democratic
National Committee) மற்றும் அடுக்குக் குடியிருப்புக்கள்
வாட்டர்கேட்டில் ஜூன் 17, 1972ல்
கொள்ளயைடிக்கப்பட்டதற்கு ஐந்து பேரை கைது செய்தபோது, நிக்சன் நிர்வாகத்தின் நெருக்கடி வெளியே
வந்தது. இந்த ஐவரில் ஒருவர், அதிகாரபூர்வ நிக்சன் பிரச்சாரக் குழுவான, 'ஜனாதிபதியை மீண்டும்
தேர்ந்தெடுப்பதற்கான குழு' என்ற அமைப்பில் இருந்த ஜேம்ஸ் மக்கார்ட் ஆவார். மற்ற நான்கு பேர்
CIA உடன்
தொடர்பு உடைய, கியூபாவில் இருந்து வந்து நீண்டகாலமாகக் குடியேறியிருப்பவர்கள் ஆவர். தொடர்ந்த பல
சான்றுகள் இந்த ஐந்து பேரில் இருந்து இரண்டு வெள்ளை மாளிகளை உதவியாளர்கள்
E.Howard Hunt
மற்றும் G.Gordon Liddy
இருவரை சுட்டிக்காட்டி, இறுதியில் நிக்சன் நிர்வாகத்தில் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்களையும்,
ஜனாதிபதியையுமே சிக்க வைத்தன.
வாட்டர்கேட் ஊழலின் பின்னணியில் மூன்று நிகழ்வுகளில் பிரதிபலித்த அமெரிக்க
முதலாளித்துவத்தின் ஆழ்ந்த சமுதாய, அரசியல் நெருக்கடி இருந்தது: அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில்
அடைந்த தோல்வி; அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார நிலை வலிமை குன்றியது; மற்றும் குறிப்பாக
தொழிலாளர் இயக்கம், மாணவர்கள், கறுப்பர்கள் மற்ற சிறுபான்மையினரிடையேயான அமைதியின்மை போன்ற
அமெரிக்காவிற்குள்ளேயே சமூக மோதல்கள் பெருகியிருந்தன.
1969ம் ஆண்டு ஜனவரி மாதம் நிக்சன் பதவியேற்றார்; அப்பொழுது அமெரிக்கா
வியட்நாம் போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வியட்நாமில் அரை மில்லியனுக்கும் மேலான படையினர்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்; பென்டகன் 600,000 பேராக விரிவாக்கம் தேவை என்று கோரியது.
இப்போக்குடைய நடவடிக்கையை நிக்சன் நிராகரித்து "வியட்நாம்படுத்துதல்" என்று தான் அழைத்திருந்த
கொள்கையை செயல்படுத்தினார்: அதாவது அமெரிக்க தரைப்படைகளை சிறிது சிறிதாக திருப்பப் பெற்றுக்
கொண்டு தென் வியட்நாமில் இருக்கும் கைப்பாவை ஆட்சியில் இருந்து கூடுதலான படைகளை அவர்களுக்கு பதிலாக
அனுப்பிவைத்தல், மற்றும் வடக்கு, தெற்கு வியட்நாம் இரண்டிலுமே விமானக் குண்டுவீச்சுக்களை மிக அதிகமாக
பயன்படுத்துதல் என்பவயே அம்முறையாகும்.
இந்த வழிவகைகள் தெற்கு வியட்நாம் ஆட்சி நன்கு சரிந்து போவதைத் தடுத்து நிறுத்த
முடியவில்லை; மேலும் விடுதலை சக்திகளின் கட்டுப்பாடு, அரசியல் சக்தி ஆகியவற்றின் பெருகி வரும் செல்வாக்கும்
நிறுத்தப்படமுடியவில்லை. படைகள் திருப்பப்பெறுவதோடு தொடர்ந்த ஆக்கிரோஷமான தாக்குதல்களையும் நிக்சன்
இடையிடையே மேற்கொண்டார்; இதில் 1970ம் ஆண்டு கம்போடியா மீதான அமெரிக்க படையெடுப்பும் அடங்கும்.
போருக்கு எவ்வித மக்கள் ஆதரவும் இல்லை என்பது வெள்ளை மாளிகை உத்தியாளர்களுக்கு தெளிவாயிற்று; அமெரிக்க
இராணுவத்தினரின் இறப்பு கணிசமாக இருந்தால், நிக்சன் மறுபடியும் வெற்றி பெறுதல் கடினம் என்றும் புலப்பட்டுவிட்டது.
எனவே படைகள் திரும்பப் பெறுதல் தொடர்ந்து, 1972 மத்திவரை அனைத்து தரைப்படை பிரிவுகளும் அகற்றப்பட்டு
விட்டன.
இந்த முடிவைப் பற்றி, தகவல்களை இனிப்பாகத் தர வெள்ளை மாளிகையின்
பிரச்சாரகர்கள் முயற்சிகளை செய்த போதிலும், 1972ம் ஆண்டு இழிவிற்குட்பட்டவகையில் கிறிஸ்துமஸ் அன்று
ஹனோய் மீது குண்டு வீச்சு நடத்தியது, கொலைவெறித்தனமான முறையில் வியட்நாமியரை பழி வாங்குதல் போன்ற
செயல்கள் இருந்தபோதிலும்கூட, வியட்நாமில் இருந்து கட்டாயமாக அமெரிக்கப் படைகள் வெளியேறியது, அதன்
கடைசி நாட்களில் ஒரு தெற்கு வியட்நாமை கைவிட்டமை என்பது வரலாற்றளவில் மிகப் பெரிய உத்திமுறை
தோல்வியாகும். ஒரு மூன்றாம் உலக மக்கள், கொரில்லா போரை துணை கொண்டு, படையெடுப்பாளர்களின்
ஆயுதங்களை கொண்டே, உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாட்டை பெரும் அவமானத்திற்கு உட்படுத்தியது.
நிக்சன் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஒன்பது மாதங்களுக்குள்ளாகவே, சுதந்திர படைகள் மேற்கொண்ட
தாக்குதலினால் சைகோனில் இருந்த கைப்பாவை அரசாங்கம் பெரும் தோல்வியை கண்டு தூக்கியெறியப்பட்டதுடன்,
வியட்நாம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு விட்டது.
வியட்நாமில் அமெரிக்க கொள்கை வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், வெளிநாட்டு
கொடுக்குமதி நிலுவை அதிகரிப்பாலும், அரசாங்கத்தின் வரவுசெலவு பற்றாக்குறைகளினாலும்,
போர்ச்செலவுகளினாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலை குறைமதிப்பிற்கு
உட்பட்டுவிட்டது. 1944ம் ஆண்டு பிரெட்டன்வூட்ஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையான நாணய மாற்றுவிகித
முறையை அடுத்து, அமெரிக்கா வெளிநாடுகளில் வைத்திருந்த டாலர்களை $35 ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு என்று
மாற்றீடாக கொடுக்க வேண்டியிருந்தது. வெளிநாடுகளில் பெருகியிருந்த அமெரிக்க டாலர் இருப்புக்கள் நாக்ஸ்
கோட்டையில் (Fort Knox)
இருந்த தங்கக் கட்டி இருப்புக்களை மிகக் குறைவடைய செய்து, இறுதியில் ஆகஸ்ட் 15, 1971 அன்று
தங்கத்திற்கும் டாலருக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டிக்குமாறு நிக்சனை கட்டாயப்படுத்தியது; அப்பொழுது
ஆரம்பிக்கப்பட்ட நிலையற்ற நாணயமுறைதான் இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது.
பிரெட்டன்வூட்ஸ் முறையின் சரிவில் முக்கிய காரணியாக இருந்தது, அமெரிக்காவில்
அப்பொழுது இருந்த மிகவும் சக்தி வாய்ந்த தொழில்துறை தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊதிய
இயக்கமாகும். இது 1969ல் ஜெனரல் எலெக்ட்ரிக் வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியான போராட்டங்களில்
தொடங்கி, முதன் முதலாக நாடு தழுவிய அஞ்சல்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம், டீம்ஸ்டர்ஸ் லாரி
ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம், துறைமுக ஊழிர்கள் இரு கடற்கரை பகுதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது மற்றும்
பெருகிய போர்க்குணமிக்க தன்மை கொண்டிருந்த உத்தியோகத்தர்கள், அரசாங்கத் தொழிலாளர்களின்
போராட்டம் என்று பலவற்றை கண்டது. இந்த ஊதியத்திற்கான நிலையான அழுத்த ஏற்றத்தைச் சமாளிக்கும்
வகையில், தன்னுடைய ஆகஸ்ட் 15 நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறைந்த அளவில் ஊதிய முடக்கம், அதாவது
ஆண்டு ஒன்றிற்கு 5.5 சதவிகிதத்திற்கு மேல் ஊதிய உயர்வு கூடாது என்பதை கொண்டுவந்தார்.
மிகப்பரந்த முறையில் தொழிலாளர் போர்க்குணமிக்க நடவடிக்கை, தொழிலாள
வர்க்கத்தின் பரந்த சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாவும், மத்தியதர வர்க்கத்தின் குறிப்பிடத்தகுந்த பிரிவுகளின் இயக்கத்தின்
ஒரு பகுதியாகவும் இருந்தது: மில்லியன் கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் வியட்நாம் போருக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; 1965ல் இருந்து அமெரிக்கப் பெருநகரங்களில் கறுப்பர் குடியிருப்பு பகுதிகளின்
கடுமையான வன்முறை எழுச்சிகள் ஏற்பட்டன. இதன் உச்சக் கட்டம் 1967, 1968களில் அடையப்பட்டது; அதே
நேரத்தில் குடியுரிமை போராட்டங்கள், அமெரிக்க தெற்குப் பகுதி முழுவதும் நிறைந்து நின்றது; இத்தகைய
முற்போக்குத்தனம் மகளிருக்கு சமஉரிமைகள் என்ற புதிய கோரிக்கைகளையும் எழுப்பியது; ஓரினத் தொடர்பு உரிமைகள்
இயக்கத்தின் ஆரம்பம் ஏற்பட்டது; அதைத் தவிர, இலத்தின் மக்கள், அமெரிக்க உள்நாட்டு பூர்விகக் குடிகள் ஆகியோருக்கு
காட்டப்பட்ட பிரிவினை மற்றும் அவர்களுடைய வறுமை ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன.
நிக்சன் நிர்வாகம் முற்றுகைக்குட்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தது. அனைவருக்கும்
தெரிந்த ஒரு நிகழ்ச்சியில், அரசாங்கத் தலைமை வக்கீலான ஜோன் மிட்செல், நீதித்துறை அலுவலக ஜன்னல்
வழியே ஒரு மகத்தான போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கண்ணுறுகையில், ரஷ்ய புரட்சியில் இருந்து ஒரு காட்சி
போல் அது தோன்றவதாகக் குறிப்பிட்டார். இந்த முற்போக்குத்தனமுடைய மக்கட்தொகுப்பு பற்றிய அச்சம்,
கூட்டாட்சி அரசாங்கத்திற்குள்ளேயே ஊழியர்களை பற்றிய அவநம்பிக்கையை பெருகிய முறையில் மனநோய் போல
கொள்ளவைத்தது; அதிலும் செய்தி ஊடகத்திற்கு தகவல்கள் கசிய விடுவதின் ஆபத்துக்களை பற்றி சிந்திக்க வைத்தது.
1971ம் ஆண்டு, நிக்சனின் வெள்ளை மாளிகை பென்டகன் ஏடுகள் எனப்பட்ட
பென்டகன் அலுவலக, வியட்நாம் போர் பற்றிய உள்வரலாற்றை மறைக்க முயன்றது; இதில் போர் பற்றி
தொடர்ந்து அமெரிக்க நிர்வாகிகள் தெளிவுடன் பொய் கூறியது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பென்டகன்
ஆய்வாளர்களில், மாறுபட்ட கருத்தை உடைய Daniel
Ellsberg இந்த ஆவணங்களை
New York Times
க்கு கசிய விட்டார்; அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் ஒருமனதாக, இது தடைக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற
வெள்ளை மாளிகையின் கோரிக்கையை நிராகரித்த பின்னர், அந்தப் பத்திரிக்கை அதைத் தொடர்ந்து வெளியிட்டது.
இந்தப் பெரும் சங்கடத்திற்கு பின்னர், சட்டவிரோதமான "குழாய் சரிபார்த்தல்"
பிரிவை (plumbers unit)
நிக்சன் அமைத்தார்; இதில் முன்னாள் உளவுத்துறை ஊழியர்களும், கியூபாவில்
இருந்து புலம் பெயர்ந்தவர்களும் அரசியல் இலக்குகளுக்கு எதிரான மறைமுகச் செயலை செய்ய
தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் குழாய் சரிபார்ப்பவர்கள்தான், டானியல் எல்ஸ்பேர்க் என்னும் மனநோய்
மருத்துவருடைய அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து அவருடைய ஆவணங்கள் பலவற்றை கிழித்தனர்.
Brookings Institution
எனப்பட்ட ஒரு தாராளவாத சிந்தனைக் குழுவிடமும் இவ்வாறு நடந்துகொள்ளுமாறு நிக்சன் அவர்களுக்கு உத்தரவு
இட்டார். "கறுப்புப்பை வேலைகள்" (black bag
jobs) என்று குழாய் சரிபார்க்கும் பிரிவினரால் வாட்டர்கேட்
கொள்ளையும் நடத்தப்பட்டது. இந்த ஐந்து நபர்களும் ஜனநாயகக் கட்சியியின் தேசியக்குழு தலைவர் லோரன்ஸ் ஓ
பிரியன் அலுவலகத்தில் இருந்த ஒற்று அறியும் மின்கருவிகளை பொருத்த அல்லது மீட்பதற்காக நடவடிக்கைகளை
மேற்கொண்டிருந்தனர்.
வெள்ளை மாளிகைக்கு எதிராக
FBI
ஐந்து கொள்ளையர்களும் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், மார்க்
பெல்ட், வாஷிங்டன் போஸ்ட்டின் போப் வூட்வார்டுடன் தொடர்பு கொண்டு, அவருக்கு,
FBI விசாரணை
கொள்ளையை பற்றிக் கொண்டதில் கிடைத்த தகவல்களை கொடுக்க ஆரம்பித்தார். நிக்சன் வெள்ளை மாளிகைக்கும்
FBI
க்கும் இடையே, குறைந்தது 1970களில் இருந்து நீடித்திருந்த பூசலின் விளைவாகும்; அப்பொழுது
J. Edgar Hoover
அரசியல் கண்காணிப்பு, இழிந்த தந்திரங்கள் ஆகியவற்றை வியட்நாம் போர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட நிக்சனின் ஆரம்ப முயற்சிகளை தடுத்து நிறுத்தனார் (இதற்கு "ஹுஸ்டன் என்ற பெயர்,
நிக்சனின் வெள்ளை மாளிகை அலுவலராக இருந்த டொம் ஹுஸ்டன் திட்டமிட்டதால் இப்பெயர்
கொடுக்கப்பட்டிருந்தது.)
ஆனால் அரசியல் உளவு, அடக்குமுறையை கையாளுதல் இவற்றிற்கு ஹூவர் எதிர்ப்புக்
காட்டவில்லை; ஆனால் அத்தகைய வழிவகைகள் தன்னுடைய நிறுவனத்தால்தான் செய்யப்பட வேண்டும் என்றும்
தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே இணையான திறன் கொண்டு எவரும் அம்முயற்சிகளில் ஈடுபடுதலைத் தடுத்தார்.
இதே கருத்தைத்தான் பெல்ட்டும் கொண்டிருந்தார்; ஹூவரின் ஆதரவு பெற்றவர் என்ற முறையிலும்,
FBI என்ற
நிறுவனத்திடம் விசுவாசமாக நடந்து கொள்ளுபவர் என்ற முறையிலும், அதன் அதிகாரங்களை வெள்ளை மாளிகை
அபகரிக்க முயன்றதையும் ஹூவர் வெறுத்தார். மேலும் ஹூவர் 1972 ஏப்ரலில் இறந்துபோன பின்னர், நிக்சன்,
நீண்டகாலமாக FBI
அதிகாரியாக இருக்கும் தன்னைப் போன்ற அடுத்த அதிகாரியை தலைவராக்காமல்,
L. Patrick Gray
என்ற அவருடைய அரசியல் நண்பரை இடைக்கால இயக்குனராக போட்டமை பற்றியும் தனிப்பட்ட முறையில் பெரும்
ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இத்தகைய தனிப்பட்ட, நிர்வாக அமைப்பு முறைக் காரணங்கள், இன்னும் கூடுதலான
வகையில் ஆழ்ந்திருக்கும் பூசல்களின் வெளிப்பாடு ஆகும்; இவை அமெரிக்க ஆட்சி உயர் தட்டுக்களுக்கும் அதன்
அரசாங்கக் கருவிகளுக்கும் இடையே பொருளாதார நெருக்கடி, போர் இவற்றால் ஏற்பட்டுள்ள சமூக அதிர்வுகளை
சமாளிப்பதில் உள்ள பிளவுகளை பிரதிபலிக்கின்றன. இந்தப் பிளவுகள் ஒன்றோடொன்று மோதி விளைவைக் காணும்
வகையில்தான் வாட்டர்கேட் ஊழல் மாறியது.
குறிப்பிடத்தக்க வகையில் நிக்சன் மறுதேர்தல் பிரச்சாரத்தை சிதைக்கக் கூடிய
தகவலை பெல்ட் கொண்டிருந்தாலும், தேர்தல் முடிவு வரும்வரை, அதை அவர் வெளியிடாமல் வைத்திருந்தார்.
உதாரணமாக வாட்டர்கேட்டை பற்றி முக்கிய தகவல்களை பெல்ட் அறிந்திருந்தது மட்டும் இல்லாமல் துணை
ஜனாதிபதி ஸ்பிரோ அக்நியூவின் ஊழல் விவகாரத் தொடர்பு பற்றியும் அறிந்திருந்தார்: அது ஓராண்டிற்கு
பின்னர்தான் பொதுமக்களுக்கு தெரியவந்தது (நேற்றைய வாஷிங்டன் போஸ்ட்டில் பொப் வூட்வார்ட்
கொடுத்திருக்கும் தகவலின்படி). வெள்ளை மாளிகை, நிக்சனுடன் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்,
பெல்ட் நிக்சனுடைய ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஜோர்ஜ் மக்கவர்னுடைய பிரச்சாரத்திற்கு உதவுவதற்கு
விரும்பவில்லை.
நெருக்கடி வெளிப்படுகின்றது
போஸ்ட் பெரிய கட்டுரைகளை ஏராளமாக வெளியிட்டு அவற்றில் சில பெல்ட்,
Deep Throat
இன் வெளியீடுகளால் எரியூட்டப்பட்ட போதிலும்கூட, வாட்டர்கேட் விவகாரம் பற்றிய ஆரம்பச் செய்தி ஊடகத்தின்
எதிர்விளைவு ஒப்புமையில் குறைந்த பிரதிபலிப்பைத்தான் கொண்டிருந்தது. நவம்பர் 1972ல் நிக்சன் மறுமுறை
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நெருக்கடி முற்றத் தொடங்கியது. நீதிபதி ஜோன் சிரிகா, ஐந்து கொள்ளையர்கள்
மீதும் கடுமையான தண்டனையை சுமத்தினார்; இது வெற்றிகரமான முறையில் அவர்களை எவர் ஜனநாயகக் கட்சியின்
தேசியக் குழுவின் மீதான தாக்குதலை மேற்கொள்ள உத்தரவிட்டது என்பதற்கு உதவியது.
1973 ம் ஆண்டு வசந்த
காலத்தையொட்டி, வாட்டர்கேட் விசாரணை மக்களிடையே பரந்த ஆர்வத்தை எழுப்பியது. அமெரிக்க
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பெரும் குற்றங்கள் பற்றிய, மிகக் கூடுதலான சான்றுகள்
வெளிப்படவே --வெள்ளை மாளிகை "விரோதிகள் பட்டியல்" தயாரித்திருந்தது, அரசாங்க அமைப்புக்களான
FBI, IRS
இவற்றை அரசியல் விரோதிகளை விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் பயன்படுத்தியது, சட்டவிரோதக்
கண்காணிப்பை வாடிக்கையாக மேற்கொண்டது, போர் எதிர்ப்புக் குழுக்களின் நடவடிக்கைகளை தடை செய்தது --
இது உத்தியோகபூர்வ வாஷிங்டனுக்கு அனைத்தையும் மூடிமறைக்க முடியாமற் போயிற்று.
சாம் எர்வின் என்னும் வட கரோலினா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலைமையில்
செனட்டுக் குழு பொது விசாரணையை மேற்கொண்டது ஏராளமான மக்களை ஈர்த்தது. நிக்சனின் வெள்ளை மாளிகை
சிதையத் தொடங்கியது. நிக்சனுடைய மிக உயர்ந்த உதவியாளர்கள் இருவர்
Bob Haldeman, John Ehrlichman
இருவரும் இராஜிநாமாச் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். ஒரு தேசியத் தொலைக்காட்சியில் பத்து மில்லியன்
கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வெள்ளை மாளிகையின் வக்கீலான
John Dean
ஜனாதிபதிக்கு எதிராக ஒரு சாட்சியாக தோன்றி, ஜனாதிபதி எவ்வாறு குற்றம் சார்ந்த முறையில் நீதியை
தடைக்கு உட்படுத்தினார் என்ற சாட்சியத்தையும் அளித்தார்.
1973 ம் ஆண்டு கோடைகாலத்தில்,
நிக்சன்தான் ஓவல் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் நாடாவில் பதிவு செய்வதற்கு ஒப்புதல்
அளித்தார் என்று தெரிய வந்தது. ஒரு நீடித்த சட்ட வழக்கு, வாட்டர்கேட்டை பற்றிய முக்கிய உரையாடல்களின்
பதிவை வெளியிடுமாறு வெள்ளை மாளிகையை வலியுறுத்தி விட்டது. இத்தகைய கோரிக்கைகளை அடக்கும் வகையில்
முதலில் வாட்டர்கேட் சிறப்பு வக்கீலான ஆர்ச்சிபால்ட் காக்சை பதவியில் இருந்து நிக்சன் அகற்றினார்;
இதையொட்டி பரந்த அளவு எதிர்ப்புக்கள் ஏற்பட்டு பின்னர் பிரதிநிதிகள் மன்றத்தில் குற்றவிசாரணை (impeachment)
அவர்மீது தொடங்கியது. 1974ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமை நீதிமன்றம் ஒருமனதாக அனைத்து பதிவு
நாடாக்களையும் நிக்சன் ஒப்படைத்துவிட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. ஒரு மாதத்திற்குப் பின்னர் பதிவு
நாடாக்கள் வெளியிடப்பட்டு அவருடைய பங்கு மூடிமறைப்பதில் இருந்தது உறுதியான வகையில், நிக்சன் இராஜிநாமா
செய்தார்.
நிக்சன் முதல் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் வரை
வாட்டர்கேட் நெருக்கடி தற்போதைய அமெரிக்க அரசியல் வாழ்விலுள்ள தன்மைக்கு
மகத்தான பொருத்தத்தை கொண்டுள்ளது. எப்படிப்பட்ட புறநிலையான தரத்தைக் கொண்டாலும், ஜோர்ஜ் டபுள்யூ
புஷ்ஷின் நிர்வாகம் ரிச்சார்ட் நிக்சனுடைய அத்து மீறிய, வெளிப்படையான குற்றங்களை காட்டிலும் கூடுதலான
மோசமான தன்மை வாய்ந்தது ஆகும்; ஆயினும்கூட அதிகாரபூர்வ அரசியல், செய்தி ஊடக வட்டங்களில் ஒப்புமையில்
அது கிட்டத்தட்ட எவ்வித எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை.
நிக்சன் நிர்வாகத்தை போன்றே, புஷ் நிர்வாகமும் ஒரு குற்றம் சார்ந்த
ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ளது; இது போலிக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும் (லிண்டன்
ஜோன்சன் சட்ட மன்றத்தின் இசைவை பெறுவதற்கு Gulf
of Tonkin நிகழ்வை பயன்படுத்தியது போல், 9/11
தாக்குதல்கள், ஈராக்குடன் எவ்வித தொடர்பும் அற்றவை). நிக்சனைப் போல், ஆனால் இன்னும் அதிக அளவில்,
புஷ் நிர்வாகம் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் நிலை சரிந்து கொண்டிருப்பதற்கு தலைமை தாங்கிக்
கொண்டிருக்கிறது; இது தொலைவில் என்பதை விட விரைவிலேயே, அமெரிக்காவிற்குள் சமூகப் பொருளாதார
அதிர்வுகளை கிளப்பிவிடுமோ என்ற அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.
ஆனால் நிக்சனைப் போலன்றி, பெருத்த வேறுபாடு என்னவென்றால், ஜோர்ஜ் டபுள்யூ
புஷ் இன்னும் கீழிருந்து சமூக, அரசியல் எதிர்ப்பு இயக்கத்தை அவருடைய பிற்போக்குக் கொள்கைகளுக்காக எதிர்கொள்ளவில்லை.
அமெரிக்க தொழிலாளர் இயக்கம் சரிந்துவிட்டது; பூகோளமயமாக்கல் அதன் முன்னோக்கான பெருமுதலாளிகளுக்கு
தேசிய தொழிலாளர் சந்தை மூலம் அழுத்தும் கொடுப்பது என்பதை இல்லாதொழித்துவிட்டது; கூட்டுக் களவாணிகளையும்
ஒட்டுண்ணிகளையும் கொண்டிருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும்
வேலைகளையும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் நாசத்திற்கு உட்படுத்தி வருகிறது.
1960களின் எதிர்ப்பு இயக்கங்கள் இறுதியில் ஜனநாயகக் கட்சியில் கரைந்துவிட்டன;
அக்கட்சிதான் அமெரிக்க முதலாளித்துவ முறையின் அரசியல் எதிர்ப்புக்கள் அனைத்திற்கும் கல்லறையாகும். முன்னாள்
போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரரான பில் கிளின்டன், அமெரிக்க தாராளவாதத்தின் இந்த வியத்தகு வலதுநோக்கிய
மாற்றத்தின் மொத்த உருவாகத் திகழ்கிறார்; முதலாளித்துவ சந்தை முறை, ஏகாதிபத்தியப் போர் ஆகியவை
பற்றிய மிகச் சிறிய குறைகூறல்கூட கைவிடப்பட்டுவிட்டது. அரசியலில் வியட்நாம் போருக்கு பேரார்வத்துடன் எதிர்ப்புக்
கூறி நுழைந்திருந்த ஜோன் கெர்ரி, கடந்த ஆண்டு தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தன்னுடைய
போர் எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற அடிப்படையில் இல்லாமல் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு வெற்றியடைய
வேண்டும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் மேற்கொண்டார்.
இயற்கை ஒரு வெற்றிடத்தை பெரிதும் வெறுக்கும். புஷ் நிர்வாகமும் அமெரிக்க முதலாளித்துவத்தின்
நெருக்கடியும் -- நிக்சன் காலத்தைவிட ஆழ்ந்த தன்மையுடனையவை -- இது தவிர்க்க முடியாமல் கீழிருந்து ஓர்
இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கும். ஜனநாயகக் கட்சியோ அல்லது
AFL-CIO அதிகாரத்துவமோ
அத்தகைய இயக்கத்திற்கு எதனையும் கொடுக்க இயலாதவையாகும். அமெரிக்க ஆளும் தட்டின் அரசியல் கருவிகள்,
கட்சிகள் ஆகியவற்றுடன் முழுமையாக முறித்துக் கொண்ட வகையிலும் ஒரு சோசலிச முன்னோக்கிற்காக போராடும்
ஒரு சுயாதீனமான பரந்த அரசியல் கட்சியை தொழிலாள வர்க்கம் அமைப்பதன் மூலம்தான் போருக்கும் பிற்போக்குத்
தன்மைக்கும் எதிரான உண்மையான போராட்டத்தை செய்யமுடியும்.
Top of
page |