World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Catholic Church calls for extra-parliamentary opposition to Spanish government

ஸ்பெயின் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கத்தோலிக்க சர்ச் பாராளுமன்றத்திற்கு புறம்பான அழைப்பு விடுகிறது

By Vicky Short
1 June 2005

Back to screen version

புதிய போப்பாக பதவியேற்றுக்கொண்ட பென்டிக்ட் XVI ன் (ஜோசப் ரட்சிங்கர்) முதலாவது நடவடிக்கைகளில் ஒன்று, ஸ்பெயின் பிரதமர் ஜோசே லூயிஸ் ஷபர்ட்டோவின் சமூக ஜனநாயக (PSOE) அரசாங்கத்தின் மீது ஒரு தாக்குதலை துவக்கியிருப்பதாகும்.

ஒருபால் திருமணம், தத்தெடுக்கும் உரிமை ஆகியவை தொடர்பான புதிய சட்டத்தை வத்திக்கான் முக்கியமாக விமர்சித்துள்ளதோடு, இதர சீர்திருத்தங்களான திருமணமாகி 90 நாட்களுக்குள் விவாகரத்து, தாராளவாத கருக்கலைப்புச் சட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் கட்டாய விருப்பப் பாடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ள மதக் கல்வியைக் கைவிட்டது போன்ற நடவடிக்கைகளும் அதன் கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது.

இந்த சட்டத்திற்கு தெரிவிக்கப்பட்ட கண்டனம் ஒத்துழையாமை என்ற அழைப்போடு சேர்ந்து வந்திருப்பதால், அதை அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க ஒரு பிரச்சாரம் என்று தான் விமர்சிக்க வேண்டும்.

போப்பினுடைய நியமன கவுன்சிலின் தலைவரான கார்டினல் அல்போன்சோ லோப்பேஸ் ட்ரூஜிலோ இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். ஒருபால் திருமணத்திற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அங்கீகாரமளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே நாளில் ஏப்ரல் 21 ல் இத்தாலிய செய்திப் பத்திரிகையான Corriere de la Sera விற்கு அவர் பேட்டியளித்தார். இந்தச் சட்டம் நாடாளுமன்ற செனட் சபையில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது சம்மந்தமான விவாதம் செனட் சபையில் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

கொலம்பியாவைச் சார்ந்த இந்தக் கார்டினல் பின்வருமாறு அறிவித்தார்: ''ஸ்பெயினில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்றால், ஒரு குறைந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் குடும்பக் கட்டுக்கோப்பை செங்கல் செங்கலாக பெயர்த்டுெத்துக் கொண்டிருக்கிறது... இந்த நடவடிக்கையோடு எதாவதொரு வகையில் சம்மந்தப்பட்டுள்ள தொழில் முறையிலான அனைவரும் இந்த சட்டத்தை எதிர்ப்பது அவர்களது கடமையாகும். மற்றும் உடனடியாக அவசர மனசாட்சி உரிமை வேண்டுமென்று சர்ச் அழைப்பு விடுக்கிறது. கருக்கலைப்பு போன்றதொரு குற்றத்தை செய்வதற்கு எதிராக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எந்த வகையான மனசாட்சிப்படி ஆட்சேபிக்கின்ற உரிமை கோரப்படுகிறதோ அதே அடிப்படையில் அவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்.''

1995 ல் போப் இரண்டாவது ஜோன் போல் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பை கத்தோலிக்கர்களுக்கு கார்டினல் அல்போன்சோ நினைவுபடுத்தினார். ''இது தன் விருப்பப்படி நடப்பதல்ல, எல்லா கிறிஸ்துவர்களும் தங்களது பதவியிழப்பு உட்பட மிக உயர்ந்த விலை தருவதற்கு தயாராக இருக்க வேண்டும்.''

அதற்கு பின்னர், இந்தக் கார்டினல் கீழ்க்கண்ட அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார்: ''ஸ்பெயினின் அரசியல் பரிணாமத்தை குழப்பத்தோடு புனிதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அது ஸ்பெயினை கத்தோலிசத்தின் ஒரு கோட்டை என்று கருதுகிறது. ஆனால், இப்போது எடுக்கப்பட்டு வரும் சட்டம் இயற்றும் முயற்சிகள், கத்தோலிக்க ஆலயத்தின் தத்துவங்களுக்கு, அதன் கொள்கைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகக் கருதுகிறது மற்றும் பூகோள மத மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கு முரணாக உள்ளதென்றும் கருதுகிறது.''

புதிய போப் பதவியேற்ற பின்னர்தான் சமூக ஜனநாயக PSOE அரசாங்கத்தின் மீது வத்திக்கானின் தாக்குதல் துவங்கவில்லை. மாறாக, சென்ற ஆண்டு மார்ச் மாதம் பாப்புலர் கட்சி (PP) பதவியிலிருந்து நீக்கப்பட்டு PSOE பதவிக்கு வந்தவுடன் அது தாக்குதலை துவங்கிவிட்டது. புதிய அரசாங்கம் அறிவித்த கொள்கைகள் மீது வத்திக்கானின் அதிருப்தியை போப் ஜோன் போல் II தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், தன்னை சந்தித்த ஸ்பெயின் பாதிரியார்கள் தூதுக் குழுவினரிடம் கேட்டது என்னவென்றால், ''ஷபர்ட்டோ என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஸ்பெயினின் அரசியல் நிலவரம் என்ன? ஷபர்ட்டோ சொல்லிக்கொண்டிருப்பது என்ன?'' என்பதாகும்.

ஜோன் போலினுடைய விமர்சனங்களை, அன்றைய கார்டினலும் இன்றைய போப்புமான ரட்சிங்கர் எதிரொலித்தார். அவர் சென்ற நவம்பரில் ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்க முன்மொழியப்பட்டது ''ஒரு அழிவுச் சட்டம்'' என்று குறிப்பிட்டார். அவர், தனது குரலை ரோமன் கத்தோலிக்கத் தலைவர்களோடு இணைத்துக்கொண்டு சோசலிஸ்ட் மந்திரிசபை ''அடிப்படைவாதத்திற்கு விரோதமானது'' என்று கூறினார்.

2004 ஜூலையில், போப் ஜோன் போலினுடைய அனுமதியோடு, ஸ்பெயின் கத்தோலிக் பாதிரிமார்களுக்கு ரட்சிங்கர் ஒரு 37 பக்கக் கடிதத்தை அனுப்பினார். அதில் தீவிரவாத பெண்ணுரிமை இயக்கத்தை அவர் விமர்சித்து, அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சண்டை மூட்டுவது என்றும், அது ஒருபால் சேர்க்கையை பாதுகாப்பது என்றும் குறிப்பிட்டார். இந்த ஆவணம் விவாகரத்திற்கும், ஆண்களும் பெண்களும் சமன் என்பதற்கும் சர்ச் எதிர்ப்பு தெரிவித்து வருவதை மீண்டும் வலியுறுத்திக் கூறியது. அத்துடன், பெண்களை பாதிரியார்களாக நியமிக்கக்கூடாது என்றும், அது ஆண்களுக்கென்றே ''தனியாக ஒதுக்கப்பட்டது'' என்றும் ரட்சிங்கர் வலியுறுத்தினார்.

நேரடியாக ஸ்பெயின் செனட்டிற்கு வேண்டுகோள் விடுக்கின்ற வகையில், பாதிரிகளுடைய காங்கிரஸைச் சேர்ந்த பாதிரிமார்கள் தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''இந்த புதிய திருமணம் பற்றிய சட்ட விளக்கத்திற்கு ஒப்புதல் தருவதற்கு நாடாளுமன்றம் தயாராகிவிட்டதாக காட்டிக்கொள்கிறது. அது மிகத்தெளிவாக, அடிப்படை உயிரின வளர்ச்சி புள்ளி விவரங்களை அப்பட்டமாக மறுத்துரைக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்டுள்ளது. மற்றும் சமூக ஒழுங்கின் மிக முக்கியமான அடிப்படை தார்மீக நெறிமுறைக் கொள்கைகளை திட்டவட்டமாக சீர்குலைக்கிறது''.

அவர்கள் மேலும் எச்சரிக்கை செய்து ''இந்த சட்டம் ஒரு முறையான சட்டத்தின் அடிப்படைத் தன்மையே இல்லாதது ஆகும். ஏனெனில் நமது அறிவிற்கும், ஒழுக்க நெறிமுறைகளுக்கும் அது விரோதமாக உள்ளது. மற்றும், அதன் ஒரு விளைவாக இதை எல்லா நல்லெண்ணம் கொண்ட நேர்மையான ஆன்மீக அமைப்புக்களையும் போல் கத்தோலிக்கர்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துவது என்னவென்றால், இந்த தார்மீக நெறிமுறையைக் காப்பதில் அவர்கள் திட்டவட்டமான முடிவு எடுக்காமல் அல்லது மெத்தன போக்கில் இருக்க முடியாது என்பதாகும். ஆகவே, அவர்கள் ஒரு தெளிவான கூர்மையான வழியில் அதை எதிர்த்தாக வேண்டும்''.

இந்தச் சட்டம் ''நாகரீக வழியில் ஒரு அடி பின்னோக்கி இழுத்துச் செல்வதாகும். இதற்கு முன்னர் கண்டிராத சட்ட விதிமுறை திருமணம், குடும்பம், இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பான அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒரு தீங்கை இது உண்டாக்கும். அறிவிற்கு ஒவ்வாத இந்த ஒழுக்கச் சிதைவுள்ள விதிகளை எதிர்ப்பது எவருக்கும் எதிராகச் செல்வதல்ல, ஆனால் ஒவ்வொரு மனிதனின் நன்மையும் மற்றும் உண்மை மீது கொண்ட அன்பிற்கு சாதகமானதும் ஆகும்'' என்று பாதிரிமார்கள் தமது அறிக்கையில் கூறினர்.

1930 களில் குறிப்பாக 1936-1939 உள்நாட்டுப் போருக்கு முன்னர் நடைபெற்ற மோதல்களுக்கு பின்னர் கத்தோலிக்க சர்ச்சிற்கும், ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் இப்போது நிலவுகின்ற அளவிற்கு உறவுகள் நச்சுத்தன்மை அடையவில்லை. சமூக ஜனநாயக PSOE கட்சியின் கத்தோலிக்கப் பிரிவு ஒருங்கிணைப்பாளரான கார்லோஸ் கார்சியா அந்துவான் இதற்கு எச்சரிக்கை விடுக்கிற அளவிற்கு தள்ளப்பட்டார். ''எப்போதுமே ஸ்பெயினில் மதத்தை ஒரு அரசியல் விவகாரமாக நடத்துவது ஒரு தவறாகவே முடிந்திருக்கிறது. அப்படி செய்வது வன்முறையில் மட்டுமே முடியும் என்ற விளைவுகளை வரலாறு காட்டிக்கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்திற்கான ஒரு முயற்சி

வத்திக்கானின் கோபத்திற்கு ஸ்பெயின் இலக்கானது ஏன்?

சமூக ஜனநாயக PSOE கொண்டு வந்த இந்தச் சட்டம் இயல்பாக போப்பின் அதிருப்தியை எழுப்பும். ஆனால், இறுதியில் ஸ்பெயினில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஏன் நடைபெறுகின்றன என்பதற்கு இது அடிப்படைக் காரணமாக இருக்காது.

2004 மார்ச் 11 ல் பயங்கரவாத தாக்குதல்கள் மாட்ரீட்டில் பல ரயில்களை சிதைத்தது. அதன் விளைவாக ஏறத்தாழ 200 மக்கள் மடிந்தனர். மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மூன்று நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பாப்புலர் கட்சியின் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னார் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

பாப்புலர் கட்சியின் சமூகக் கொள்கைகள் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக முன்கண்டிராத அளவிற்கு ஒரு இயக்கம் தோன்றிய உச்சக்கட்டத்தில் சமூக ஜனநாயக PSOE கட்சி பதவிக்கு வந்தது. ஸ்பெயின் முதலாளித்துவத்தின் பிரதான பிரிவுகள் பாப்புலர் கட்சி பதவிக்கு வரும் என்று நம்பி எதிர்ப்பார்த்தனர். அதற்குக் காரணம், சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வருகின்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், தொழிலாள சீர்திருத்தங்களை, நலன்புரி வெட்டுக்களை அதேபோல் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற தாரக மந்திரத்தின் கீழ் ஜனநாயக உரிமைகளை சிதைத்துவிட முடியும் என்றும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், இவை அனைத்தையும் அடுத்த மூன்று நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், பயங்கரவாத தாக்குதல்களும் மாற்றிவிட்டன. ஸ்பெயின் மக்கள் ஈராக் போருக்கு எதிராக மில்லியன் கணக்கில் அணிவகுத்து வந்தனர். மற்றும், அவர்கள் தொடர்ந்து அந்த நாடு ஆக்கிரமிக்கப்படுவதில் ஸ்பெயின் பங்கெடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு அஸ்னார் ஆதரவு தந்தது, ஒரு தாக்குதலுக்கு ஸ்பெயினும் இலக்காகக்கூடும் என்று அவர்கள் நம்பினர். அந்த அச்சம் மார்ச் 11 நிகழ்ச்சிகளில் சரியாக நிரூபிக்கப்பட்டது.

இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை யார் நடத்தியது என்பது குறித்து பாப்புலர் கட்சி அரசாங்கம் மக்களுக்கு பொய் சொல்லியது. அது பாஸ்க் பிரிவினைவாத இயக்கமான ETA வின் செயல் என்று வலியுறுத்தியது. அது அவ்வாறு செய்ததற்கு காரணம் உள்நாட்டு பயங்கரவாதத்தை தேர்தலை வென்றெடுப்பதற்காக சுரண்டிக்கொள்ளலாம் என்பதற்காகத்தான். மாட்ரீட் ரயில்கள் மீது உண்மையிலேயே தாக்குதல்களை நடத்தியது அல்-கொய்தா அல்லது மற்றொரு இஸ்லாமிய அடிப்படைவாதக்குழு என்று அம்பலத்திற்கு வந்ததானது, சக்திவாய்ந்த போர் எதிர்ப்பு உணர்வுகளை மீண்டும் பலமாக செயல்பட வைத்தது. ஆனால், அடிப்படை வரலாற்றுப் பிரச்சனைகளும் கூட இதில் ஒரு பெரிய பங்கு வகித்தன. கடைசியாக குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பாப்புலர் கட்சி அரசாங்கத்திற்கு தெரிந்திருந்த தகவலை மூடிமறைத்த தகவல்கள் அம்பலத்திற்கு வந்தபோது பொதுமக்களுடைய கருத்து என்னவென்றால், ''பாசிஸ்ட்டுகள் மீண்டும் தங்களது நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள்'' என்பதாகும்.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியூட்டி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. சில மணி நேரத்திற்குள், ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்த வந்து பாப்புலர் கட்சியின் தலைமை அலுவலகங்களில் மறியல் செய்து அவர்களைக் கேலி செய்தனர். சமூக ஜனநாயக PSOE கட்சிக்கு ஆதரவாக வழக்கமாக வாக்குப்பதிவில் கலந்துகொள்ளாத பத்தாயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, முதல் தடவையாக வாக்குப்பதிவில் கலந்துகொள்ள அணிதிரட்டப்பட்டனர். அது பாப்புலர் கட்சியை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு மிக நம்பகத்தன்மையுள்ள கருவியாக பயன்பட்டது. ஸ்ராலினிஸ்ட்டுகள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஐக்கிய இடதுகள் (United Left) போன்ற இதர இடது அமைப்புக்கள் தங்களது சொந்த வாக்குகளைக்கூட தியாகம் செய்து இந்த தந்திரோபாயத்திற்கு பின்னால் தங்களது வலுவை பயன்படுத்தினர். இந்த அதிர்ச்சியூட்டும் தேர்தல் முடிவு உலக வலுதுசாரிகள் அனைவருக்கும் ஆட்டத்தைக் கொடுத்தது. ஸ்பெயினின் உதாரணத்தை தொடர்ந்து அமெரிக்காவில் புஷ் நிர்வாகத்தை பதவியிலிருந்து மக்கள் நீக்கிவிடுவார்கள் என்றும் பிரிட்டனில் டோனி பிளேயரும் ஆஸ்திரேலியாவில் ஜோன் ஹோவார்டும் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் அச்சம் நிலவியது.

அந்த நேரத்தில் பிரிட்டனின் இண்டிப்பெண்டன்ட் செய்தி பத்திரிக்கை கீழ்கண்ட கருத்தை வெளியிட்டது. "டோனி பிளேயருடன் சேர்ந்து கொண்டு, உறுதியாக ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் 'பயங்கரவாதத்தின் மீதான போரை' ஆதரித்து வருகின்ற ஸ்பெயினின் ஆளும் பாப்புலர் கட்சி திடீரென ஆட்சி அதிகாரத்தை இழந்ததானது, ஒரு அரசியல் பூமி நடுக்கம் அல்லாமல் வேறு எதுவுமில்லை.''

"மறு தேர்தலுக்கான போட்டியில் ஈராக் ஆக்கிரமிப்பு மீது பெருகிவரும் அதிருப்தி திரு.புஷ்ஷின் முன்னணி வாக்குகளை சிதைத்துக்கொண்டு வருகிறது. டோனி பிளேயர் இந்தப்போரை நியாயப்படுத்துவதற்கு கூறிய காரணங்கள் அவரது நம்பகத்தன்மை ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத தேர்தல் முடிவு சதாமை வெளியேற்றுவதற்கு போரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த மூன்று பேரின் அரசியல் பின்னணி, ஒட்டுமொத்த மாற்றத்திற்கு முன்னோடியாக அமையக்கூடும்" என்று மேலும் இப்பத்திரிக்கை குறிப்பிட்டது.

ஆகவே, இந்தப்போக்கை வலதுசாரிகள் தடுத்து நிறுத்தி எதிர்த் தாக்குதலில் இறங்கத் துவங்கியதோடு, இந்தப்போக்கை மாற்றி அரசியலை வலதுசாரிப் பக்கம் திருப்புவதற்கு ஒரு பிரச்சாரத்தையும் துவக்கினர். இந்த நடவடிக்கை பெரும்பாலும், கிறிஸ்தவ தீவிர அடிப்படைவாத பிரிவுகளிடையே சம்மந்தப்பட்ட ஒழுக்கப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாக அமைந்தது.

குறிப்பாக, அமெரிக்காவில் புஷ்ஷின் மறு தேர்தல் பிரச்சாரம் ஒருபால் திருமணம், கருக்கலைப்பு பரம்பரை கல ஆய்வு மற்றும் இதர "வாழ்வுரிமை பிரச்சனைகள்" என்றழைக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இதே போல் ஆஸ்திரேலியாவிலும் குறைந்தளவு இருந்த போதிலும், பிரிட்டனில் பழமைவாதிகள் மீது நிலவிய பாரியளவு எதிர்ப்பை பிளேயர் மறுதேர்தலில் பாதுகாத்துக் கொண்டார். இதனை எப்படிப் பார்த்தாலும், போருக்கு ஆதரவான இந்த மூவரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அவர்கள் சமாளித்தார்கள். இதில் அஸ்னாரை மட்டுமே உலகை உலுக்கிய போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு அவர்கள் பலிகொடுத்துவிட்டனர்.

ஆகவே, ஸ்பெயினில் சமூக ஜனநாயக PSOE அரசாங்கத்தை வலதுசாரிகள் ஸ்திரமற்றதாக்குவதற்கு மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிக்கும், அதனைக் கவிழ்த்துவிட முடியும் என்ற நம்பிக்கைக்கும் இதுதான் காரணமாகும். உண்மையிலேயே வத்திக்கான் அஸ்னாரின் பாப்புலர் கட்சி நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு ஒரு உதவியாகவே வந்திருக்கிறது. அது ஆட்சியிலிருந்து இறங்கிய மறுநாளிலிருந்து PSOE அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்குவதற்கான முயற்சியையும், தான் பதவிக்கு வருவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்க முயன்று வருகிறது.

ஸ்பெயினில் முதலாளித்துவ ஜனநாயகம் மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட பின்னர், முதல் தடவையாக 1930 களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகிற வகையில், பழைய பிராங்கோ வலதுசாரிகள் பகிரங்கமாக ஒரு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தனர். PSOE வினது அரசாங்கம் சட்ட விரோதமானது என்றும், வாக்குப்பதிவு நாளில் பாப்புலர் கட்சி அலுவலகங்களுக்கு வெளியில், அதற்கு எதிராக நடத்தப்பட்ட கண்டனப் பேரணிகளுக்கு PSOE கட்சியே பின்னணியாக செயல்பட்டது என்றும் பாப்புலர் கட்சி குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்களை PSOE கடுமையாக மறுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் தோன்றியதன் பூர்வீகத்தை மறைத்துவிட அரசாங்கம் எவ்வாறு முயன்றது என்ற பொய்களை PSOE பரப்பியது என்று பாப்புலர் கட்சி கூறியது. இத்தாக்குதலில் ETA சம்மந்தப்பட்டிருக்கிறது என்று நம்புவதற்கு எல்லாவித அடிப்படைகளும் உள்ளன என்று இன்னமும் பாப்புலர் கட்சி அதையே கூறி வருகிறது.

வத்திக்கானும், பாப்புலர் கட்சியும் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் புதிய சமூகக் கொள்கைகளை செயல்படுத்துவதை புறக்கணிக்க பல பாப்புலர் கட்சி மேயர்கள் முயன்று வருகின்றனர். கட்டலோனியாவிலுள்ள பாப்புலர் கட்சியின் தலைமைக்கு, பார்சலோனில் உள்ள 300 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய Pontons நகர மேயரான Lluis Caldentey ஐ சஸ்பெண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ''ஒருபால் திருமணம் ஒழுக்கச் சிதைவுள்ளது, அது இயற்கை நிலையையே முடமாக்குவது, ஏனென்றால், மக்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ தான் பிறக்கிறார்கள். இரண்டு ஆண் நாய்கள் காதலிப்பதை நான் என்றைக்கும் பார்த்ததில்லை'' என்று Lluis Caldentey ஒரு வானொலி பேட்டியில் கூறியிருந்தார்.

ஸ்பெயினின் பிராங்கோ மரபியத்திற்கு அழைப்புவிடும் வத்திக்கான்

ஸ்பெயின் அடிக்கடி தீவிர மதவாத நாடு என்று சித்தரிக்கப்பட்டு வந்தாலும், உண்மை என்னவென்றால் கத்தோலிக்க மத நம்பிக்கையுள்ளவர்கள், அதன்படி நடப்பவர்கள் ஒரு சிறுபான்மையினராகத்தான் இருக்கின்றனர். அரச விவகாரங்களில் மிகவும் பிற்போக்குவாத கொள்கைகளுக்கு ஆதரவாக கத்தோலிக்க சர்ச் தலையிடுவதை, ஸ்பெயின் தொழிலாளர் வர்க்கம் மிகத்தீவிரமான பகை விரோதம் கொண்டிருந்ததுதான் அதன் வரலாறாக உள்ளது.

கத்தோலிக்க சர்ச்சின் செல்வாக்கு வீழ்ச்சிகண்டு வருவது தொடர்பாக வத்திக்கான் மிகவும் நனவாக இருக்கிறது. குறிப்பாக, தான் நடத்துகின்ற வலதுசாரி தாக்குதலிற்கு இளைஞர் சக்திகளின் ஆதரவை வென்றெடுப்பதில் அது கவனம் செலுத்தி வருகிறது. இதனை செய்கின்ற நோக்கில், ஸ்பெயினின் அரசியல் சூழ்நிலையை மாற்றுகின்ற வகையில், பிராங்கோ தலைமுறையைச் சார்ந்தவர்கள் மிகத்தீவிரமாக தங்களது பழைய விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது. ஆர்ச் பிசப் ரொட்றிகேஸ் என்பவர், "கத்தோலியிசம் ஸ்பெயினின் உயிர்நாடியில் கலந்திருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக பிராங்கோ தலைமுறையைச் சார்ந்த 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக விவாதிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். மற்றும் அந்த வயதிற்கு குறைந்தவர்கள் முறையாக மதபோதனைக்கு திருப்பப்படவில்லை'' என்று குறிப்பிட்டார்.

அத்தகைய ''மதபோதனைக்கு'' திருப்புகின்ற பணியை பழைய பாசிஸ்ட்டுகள் மேற்கொள்வது அவர்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் ஸ்பெயினில் பரவலான இடதுசாரி உணர்வு நிலவுகிறது. சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஸ்பெயின் தொழிலாளர் வர்க்கம் தெரிவித்த கருத்துக்கள் அதிக அரசியல் நனவைக் கொண்டவையாக இருந்ததுடன், ஐரோப்பாவில் பிற நாடுகளைவிட அபிவிருத்தியடைந்தும் காணப்பட்டன. இது துல்லியமானது. ஏனென்றால், 1930 களில் புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையில் நடைபெற்ற போராட்டத்தில் வெகுஜன மக்களின் நனவு மீதான தாக்கத்தின் தொடர்ச்சியும், பாசிஸத்தின் கீழ் ஏற்பட்ட அனுபவமும் 1978 ல் தான் ஒரு முற்றுப்புள்ளிக்கு வந்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அனுபவங்களின் மைய படிப்பினைகள் தொடர்பாக ஒரு பெரும் குழப்பம் நிலவுவதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், இன்னமும் வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்கின்ற உறுதிப்பாடும் அவர்களிடம் நிலவுகின்றன. இந்த உறுதிப்பாடு ஈராக் போருக்கு எதிரான அவர்களின் மகத்தான உணர்வில் வெளிப்பட்டது. பதவியில் நீடிப்பதற்காக மாட்ரீட் குண்டுத் தாக்குதல்கள் குறித்து பிராங்கோவின் அரசியல் வாரிசுகள் பொய்களைக் கூறிவந்தார்கள் என்ற உணர்வு அவர்களிடம் வெடித்துக் கிளம்பியது.

கத்தோலிக்க சர்ச்சிற்கும், வலதுசாரி அணிக்குமிடையே உருவாகியுள்ள சதி ஆலோசனை வெற்றிபெறுமானால், அது 2004 ல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தீவிர வலதுசாரி அரசாங்கமான பாப்புலர் கட்சி ஆட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதாகவே அமையும். ஆகவே, ஒரு பாசிச இயக்கத்திற்கு மீண்டும் ஒரு புத்துயிர் கொடுப்பதற்கான அடிப்படையாக பயன்படுவதற்கு, மதவாத அடிப்படையிலான பிரச்சனைகளை கிளப்பி, ஒரு கருத்தியல் வழி சூழ்நிலையை உருவாக்க கத்தோலிக்க சர்ச் முயன்று வருகிறது.

பிராங்கோவின் 36 ஆண்டு கால சர்வாதிகாரத்தை கத்தோலிக்க சர்ச் முழுமையாக ஆதரித்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது வேலைநிறுத்தங்கள் சட்ட விரோதமாக்கப்பட்டன. மற்றும் சில நேரங்களில் அதற்காக மரண தண்டனையும் விதிக்கப்பட்டன. தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து அமைப்புக்களும் தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. அல்லது ஒழிக்கப்பட்டன. மற்றும் எந்த எதிர்க்கட்சியும் அனுமதிக்கப்படவில்லை. பிராங்கோ அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ததோடு, ஆட்சிக்கு எதிரான எந்த விமர்சனமும் நாட்டுக்கு துரோகமிழைப்பது என்று கருதிக்கொண்டார்.

கத்தோலியிசம், அந்த மதத்திற்கு புறம்பானவை தெய்வ நிந்தனை என்று கருதப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சில் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஒவ்வொரு ஞாயிறன்றும் தேவாலய வழிபாட்டிற்கு செல்லாதவர்கள் பள்ளிக்கூடங்களில் உயர்ந்த மதிப்பெண்களை பெற முடியாது. மக்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஒரு பாதிரியாரின் கட்டளைப்படி, தலையின் பின்புறத்தில் சுடப்பட்டு ரகசிய கல்லறைகளில் பலர் மொத்தமாக புதைக்கப்பட்டனர். பாசிச ஆட்சியோடு, கத்தோலிக்க சர்ச் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டதோடு, அது பிராங்கோவின் ஒடுக்குமுறைக் கருவிக்கு ஆசியும் வழங்கியது.

வத்திக்கான் மற்றும் பாப்புலர் கட்சியின் தாக்குதல்களை, சமூக ஜனநாயக PSOE சமாளிக்க விருப்பம் உள்ளது என்றோ அல்லது அதற்கான தகுதியுள்ளது என்றோ நம்ப முடியாது. வெகுஜனங்களின் எதிர்ப்பை பயன்படுத்தி பாப்புலர் கட்சிக்கு எதிரான உணர்வுகள் மூலம் தகுதியற்ற வகையில் PSOE பயனடைந்தது. மற்றும் எந்த வகையில் பார்த்தாலும் அதுதான் உண்மையும் கூட. பதவிக்கு வந்ததும் அஸ்னாருடைய வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்த இந்தக் கட்சி அனைத்துக் காரியங்களையும் செய்ததோடு, மீண்டும் அரசியலிலும் சமூக உறவுகளிலும் மீள் ஸ்திரமாக்கிக் கொள்ள அனைத்து செயல்களையும் செய்தது.

போர் எதிர்ப்பு இயக்க அழுத்தங்களின் கீழ் ஈராக்கிலிருந்து ஸ்பெயின் துருப்புக்களை பிரதமர் ஷபர்ட்டோ விலக்கிக்கொண்டார். ஆனால், அவரது PSOE கட்சி ''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பதுடன், ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று கோரியும் வருகிறது. அது ஹைட்டியிலும் ''இதர தொந்தரவு'' மிக்க பகுதிகளிலும் துருப்புக்களை நிறுத்தி வருவதுடன், ஆப்கானிஸ்தானுக்கு மேலும் சில நூறு துருப்புக்களை அனுப்ப உறுதியளித்திருக்கிறது. மற்றும் ஈராக்கிற்கு வெளியில் ஈராக் இராணுவத்திற்கு பயிற்சியளிக்கவும் அது தயாராக உள்ளது. உள்நாட்டில் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறை பிரச்சனைகளைத்தவிர சிக்கன நடவடிக்கைகளில் PSOE ன் திட்டம் பாப்புலர் கட்சி அரசாங்கத்தைவிட கணிசமான அளவிற்கு மாறவில்லை. ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டம் தந்துள்ள பொருளாதாரத் செயற்திட்டத்தின் பிரதான சாம்பியனாக PSOE விளங்குவதால், மேலும், சமூக வழங்கலை நீக்குவதையும், பிரதான பெருநிறுவனங்களின் கட்டுப்பாடற்ற ஆதிக்கத்திற்கு வகை செய்வதையும் அடிப்படையாகக் அது கொண்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை பாதுகாத்து நிற்பதற்கு சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டுமே நம்ப முடியாதவை என்பதை கசப்பான வரலாற்று அனுபவங்கள் மீண்டும் எடுத்துரைக்கின்றன. 1930 களில், அவர்கள் இடது முதலாளித்துவவாதிகளோடு மக்கள் முன்னணியில் சேர்ந்து புரட்சியை காட்டிக்கொடுத்து பிராங்கோவின் வெற்றிக்கு உறுதியளித்தனர். இதற்கு விலையாக ஸ்பெயின் மக்கள் நான்கு தசாப்தங்கள் சர்வாதிகாரத்திற்கு இலக்கானார்கள். 1970 களில், ''சமாதான மீட்சி'' என்றழைக்கப்படுவதன் முன்மொழிவாக அவர்கள் முக்கியமாக வாதிட்டனர். அவர்கள் மீண்டும் ஸ்பெயின் முதலாளித்துவ வர்க்கத்தை காப்பாற்றி, பாசிஸ்ட்டுக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, ''மறந்துவிடு, மன்னித்துவிடு'' என்ற முழக்கத்தின் கீழ் வர்க்க பிரச்சனைகள் குழிதோண்டி புதைத்தனர். தற்போது, தீவிர வலதுசாரிகளும் அவர்களது ரோமிலுள்ள கூட்டாளிகளும் செய்து வருகின்ற சூழ்ச்சிகளை மூடிமறைப்பதற்கு அதே பங்களிப்பை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved