World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Shows OAS delegates American democracy in action

அமெரிக்க ஜனநாயகச் செயற்பாட்டை OAS பிரதிநிதிகளுக்கு செயலில் காட்டல்

By Bill Van Auken
7 June 2005

Back to screen version

அமெரிக்க அரசுகளின் அமைப்பிற்கு (Organization of American States -OAS) திங்கள் அன்று ஆற்றிய உரையில், அமெரிக்க பாணியிலான ஜனநாயகத்தின் பயன்களை உயர்த்திப் பேசிய ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், "ஒரு ஜனநாயக சமுதாயத்தில், மக்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடக்க முடியும்" என்பதை இலத்தீன் அமெரிக்கர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

துரதிரஷ்டவசமாக, புளோரிடாவில் இருக்கும் Fort Lauderdale-வில் நடந்த OAS பொது சபைக்கு பயணித்தவர்களுக்கு, அத்தகைய ஜனநாயக வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவிற்குள் நடந்த மாநாட்டில் இருந்த சூழ்நிலையே ஒரு போலீஸ் அரசு போல் இருந்து, கூட்ட எதிர்ப்பாளர்கள், அலுவர்கள் என்ற இரு பிரிவினருமே, தெருக்களில் நடந்து கொண்டிருந்தபோது முறையான தொல்லைகளையும், காவலில் வைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சுறுத்தலையும்தான் எதிர்கொண்டிருந்தனர்.

கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் போலீசார் என்று 26 தனித்தனி அமைப்புக்களில் இருந்து குவிக்கப்பட்டிருந்த ஏராளமான பாதுகாப்புப்பிரிவினர் மிகக் கடுமையான அடக்குமுறையை சுமத்தியவிதம், OAS-தாமே அமெரிக்க அரசாங்கத்திடம் முறையாகப் புகார் எழுப்பத் தயாராகிவிட்ட நிலையை ஏற்படுத்தியது.

மேற்கு நாட்டு விவகாரங்கள் துறையின் துணை அரசுத்துறை செயலாளரான ரோஜர் நோர்ஜியா மன்றத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். "சாதாரண சமூகத்தின் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் சிலர் போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒட்டி, எதிர்கொண்ட பிரச்சினைகளுக்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று தன்னுடைய உரையை தொடக்கும்போது அவர் குறிப்பிட்டார்.

பிரோவார்ட் மாநாட்டு மையம் என்று கூட்டங்கள் நடைபெற்ற இடம், அதைச் சுற்றி உள்ள பகுதிகள், அரங்கத்திற்கும் வரும் பாதைகள் இவற்றில் எல்லாம் பன்முகச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு அதிகாரிகளை மாநாட்டிற்கு அழைத்து வந்திருந்த கார்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு குண்டு-மோப்பம் அறியும் நாய்கள், உலோகக் கருவிகள் கொண்டிருந்த போலீசார் ஆகியோரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பல விஷயங்களில், பாதுகாப்புப் பகுதிக்கு வண்டி ஓட்டுநர்கள் அனுமதிக்கத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தில் பல வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன.

வண்டியில் இருந்து நடந்து மாநாட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குட்பட்ட இலத்தீன் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மீண்டும் பல முறை சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சில பிரதிநிதிகள் தங்கும் இடங்களுக்குத் திரும்பவும் நேரிட்டது.

மாநாட்டு அரங்கத்திலும், செய்தியாளர்கள் சந்தேகத்திற்குட்பட்ட குற்றவாளிகள்போல் நடத்தப்பட்டனர். அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்து அழைத்துச் சென்றால்தான் வெளிநாட்டு அதிகாரிகளை நிருபர்கள் அணுக அனுமதிக்கப்பட்டனர்.

லிஹ்ஸீரீ-பிஷீu ஸிணீனீணக்ஷீமீக்ஷ் என்னும் வெனிசூலா நிருபர் ஒருவர், OAS அமைப்பில் எவ்வாறு இரகசியப் போலீஸ் ஒற்றர்கள் மற்றும் போலீஸ்காரர்களால் தடுக்கப்பட்டார் என்பதுபற்றிய புகாரை எழுத்துமூலமாகக் கொடுத்துள்ளார்.

மெக்சிகன் நாளேடாகிய La Jornada கொடுத்துள்ள தகவலின்படி, பல முக்கிய இலத்தீன் அமெரிக்க நாளேடுகளின் செய்திக் குழுவின் சார்பாக மாநாட்டு நடவடிக்கைகள் பற்றி தகவல் சேகரிக்க அதிகாரபூர்வமாக வந்திருந்த இந்த செய்தியாளர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டு, நாடுகடுத்தப்படுவார் என்ற அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்.

மாநாட்டு மையத்தை விட்டுச் சென்று கொண்டிருந்த நேரத்தில் உள்ளூர் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டு, பின் தன்னை விசாரிக்க வந்திருந்த 20 பேர் அடங்கிய விசாரணைக் குழுவிடம், "நான் ஒரு பயங்கரவாதியல்ல; நான் ஒரு பத்திரிகையாளர்" என்று அப்பெண் கூறியதை மேற்கோளிட்டுத் தகவல்கள் வந்துள்ளன.

மெக்சிகன் நாளேடு அரசுத்துறையின் அதிகாரி "கடுமையான பாதுகாப்பு" நடவடிக்கை முறையின் அடிப்படையில் அவ்வம்மையாரை அடைத்து வைத்ததை நியாயப்படுத்திப் பேசியதாக மேற்கோளிட்டுள்ளது, மேலும் தடுக்கப்பட்டது ஸிணீனீணக்ஷீமீக்ஷ் "ஒருவர் மட்டுமே அல்ல'' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உளவுத்துறை முகவர்கள் OAS உடன் தொடர்பு கொண்டு தன்னுடைய அனுமதித் தகவல்கள் நெறியானவைதானா என்றுகூட உறுதி செய்துகொள்ள மறுத்துவிட்டனர் என்று ராமிரெஸ் கூறினார். "அவர்கள் ஒன்றும் விதிகளை இயற்றவில்லை, நாங்கள்தான் விதிகளை இயற்றுகிறோம்" என்று காவல் அதிகாரிகள் இப்பெண்மணியிடம் கூறினர்.

OAS ஆவணம் ஒன்று, மனித உரிமைகள் பற்றியது, இந்தப் பெண்மணியின் பையில் போலீசார் சோதனையிட்டபோது கிடைத்ததை அடுத்து இந்த நிகழ்வு ஏற்பட்டது; அத்தகைய ஆவணம் இவரை உடனடிச் சந்தேகத்திற்கு உட்படுத்திவிட்டது போலும்.

OAS கூட்டத்திற்கு சில நூறு எதிர்ப்பாளர்களும் வந்திருந்தனர், அவர்கள் "சுதந்திர உரை'' வளாகத்தில் மட்டும் செய்திகளை சேகரிக்க அனுமதி கொடுக்கப்பட்டனர்; இது மாநாட்டு மையத்தில் இருந்து மிகவும் தொலைவில் இருந்தது; இவர்களைவிட அங்கு ரோந்து போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை "மிகக் கடுமையானவை" என்று வர்ணித்த Carol Sobel என்னும் எதிர்ப்பாளர்களின் வக்கீல் ஒருவர் அறிவித்தார்: "மாநாட்டிற்கு வந்துள்ள தூதர்கள் ஜனநாயகத்தை பற்றிப் பேசலாம்; ஆனால் அவர்கள் அது நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது என்பதைக் காணமுடியாது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved