World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Cancelled high-level meeting fuels tensions between China and Japan

இரத்து செய்யப்பட்ட உயர்மட்டக் கூட்டம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே பதட்டங்களை தூபம் போடுகிறது

By John Chan
2 June 2005

Back to screen version

ஜப்பானிய பிரதமர் ஜீனிகிரோ கொய்ஜூமியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மே 23-ல் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை இரத்து செய்துவிட்டு சீன துணை பிரதமர் Wu Yi சீனாவிற்கு திரும்பிவிட்டது, சீன--ஜப்பானிய உறவுகளில் மற்றொரு தாழ்ந்துவிட்ட புள்ளியை குறிப்பதாக அமைந்துவிட்டது.

WU திடீரென்று ஜப்பானிலிருந்து திரும்பிச் சென்றதற்கு சீனாவில் ''அவசர கடமைகள்'' இருப்பதாக ஆரம்பத்தில், சீன அரசாங்கம் சமாதானம் கூறியது. என்றாலும், அடுத்தநாள், சீன வெளியுறவு அமைச்சகம், அந்த இரத்து சீன மற்றும் தென்கொரியாவின் எதிர்ப்பை மீறி மே 16-ல் கொய்ஜூமி Yasukumi புனித தளத்திற்கு விஜயம் செய்வார் என்ற அறிவிப்பை கண்டிப்பதற்காகத்தான் என்று உறுதிப்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரில் பதினான்கு ஜப்பானிய தலைவர்கள் போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர், அவர்களது உடல்கள் அடையாளபூர்வமாக அந்த புனித தளத்தில் அடக்கம் செய்யப்பட்டன. 1930-களிலும் 1940-களிலும் சீன மற்றும் கொரிய மக்களுக்கு எதிராக கொடூரமான அட்டூழியங்களை புரிவதற்கு பொறுப்பாக இருந்த போர்க்கால ஆட்சியை கெளரவப்படுத்துகின்ற வகையில் அந்த புனித தளத்திற்கு அதிகாரபூர்வமாக ஜப்பான் அரசாங்கம் விஜயம் செய்வதை சீனாவும் தென்கொரியாவும் கண்டிக்கின்றன.

ஏப்ரலில் சீனாவில் ஜப்பானுக்கு எதிராக ஆவேசமான கண்டனங்கள் நடத்தப்படுவதை தொடர்ந்து இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுவிட்ட விரிசலை சரிசெய்வதற்கு ஒரு நடவடிக்கையாக கொய்ஜூமிக்கும் Wu-விற்கும் இடையில் சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்று கருதப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பான்மை இடத்தைப் பெறுவதற்கு டோக்கியோ மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, ஜப்பானின் போர்க்கால நிலைசான்றை மூடிமறைக்கும் வரலாற்றுப் பாடநூல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் அந்த ஆர்பாட்டங்கள் வெடித்துச் சிதறின.

ஜப்பானிய சுற்றுலா விசாக்களை பெறுவதற்கு தகுதியுள்ள சீன நகரங்களின் பட்டியலை ஜப்பான் விஸ்தரிப்பது தொடர்பாக கலைந்துரையாடல் நடத்துவதற்கு சீனா அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு கேட்டுக்கொண்டது. ஆனால் இருதரப்பாலும் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட, குறிப்பாக கொய்ஜூமி அரசாங்கத்தால் முன்னுக்குக் கொண்டுவரப்படும் தேசியவாத அரசியலின் தர்க்கம், எந்த சமரசத்திற்கும் இடையூறாக அமைந்துள்ளது.

ஜப்பானுக்குள் வளர்ந்துவரும் சமூக நெருக்கடிகளிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்கும், இராணுவவாதத்திற்கு எதிர்ப்பை கீழறுக்கவும் மற்றும் வடகிழக்கு ஆசியாவிலும் சர்வதேச ரீதியாகவும் மிகத் தீவிரமான ஜப்பானிய வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதற்கான ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்குவதற்கும் 2001-ல் ஆட்சிக்கு வந்தது முதல், கொய்ஜூமி திட்டமிட்டே, வலதுசாரி தேசியவாத உணர்வுகளை கிளறிக்கொண்டு வருகிறார்.

திரிக்கப்பட்ட பாடநூல்களுக்கு ஒப்புதல் தரப்பட்டதை தொடர்ந்து, ஜப்பானிய போர்க்கால மன்னர் Hirohito-வை கெளரவிக்கிற வகையில் ஏப்ரல் 29-ஐ ஒரு தேசிய விடுமுறை நாளுக்கு வேறுபெயர் சூட்டுவது, அதேபோல் Yasukumi புனித தளத்திற்கு விஜயம் செய்யும் திட்டங்களை மறுபடியும் செய்வது இவற்றின் மூலம் கொய்ஜூமி அரசாங்கம் விரைந்து ஏற்றுக்கொள்ளச்செய்து வருகிறது.

ஒரு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கொய்ஜூமி தனது விஜயத்தை கண்டிப்பவர்களுக்கு எதிராக பழைய சீன தத்துவஞானி Confucius-ஐ மேற்கோள்காட்டி இறுமாப்போடு தனது விஜயத்திற்கு ஆதரவாக பேசினார்: "[ஜப்பானின் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட போர்க்கால பிரதமர்] Hideki Tojo-வை பற்றிய உண்மையை அடிக்கடி அவர் ஒரு முதல் வகுப்பு போர்குற்றவாளி என்று கூறுகின்றனர். ஆனால் Confucius தான் அந்தக் குற்றத்தை கண்டியுங்கள், ஆனால் குற்றம் செய்தவர் மீது கருணை காட்டுங்கள் என்று கூறினார்."

Yasukuni புனித தளத்தில் புதைக்கப்பட்டுள்ள போர்குற்றவாளிகளுக்கு, முழுமையான மன்னிப்பு அளிக்க வேண்டுமென்று இந்த மாதம் பகிரங்கமாக ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) உறுப்பினர்கள் சிலர் வாதிட்டனர். LDP சட்டமியற்றுபவரான Mashiro Morioka Tojo உட்பட அந்த 14 பேரும் "இனி ஜப்பானில் குற்றவாளிகளாக நடத்தப்படக்கூடாது" என்று அறிவித்தார்.

பொது சுகாதாரம், தொழிலாளர் நலன் மற்றும் நலன்புரி அமைச்சக நாடாளுமன்ற செயலாளர் ஆன Morioka, ஆசியாவில் நடைபெற்ற போர்க்கால ஆக்கிரமிப்பிற்காக ''போதுமான'' அளவிற்கு ஜப்பான் பொதுமன்னிப்பு கேட்டுவிட்டது. ''வெற்றி பெற்றவர் செய்ததுதான் சரி தோற்றவர் செய்தது தவறு என்ற கருத்தே தவறானது, மற்றும் மன்னிப்பு கேட்பதற்கு நமக்கு எந்த காரணமும் இல்லை" என்று அவர் கூறினார்.

இந்தக் கட்டத்தில் இதுபோன்ற கோரிக்கைகளை பகிரங்கமாக ஆதரிப்பதற்கு கொய்ஜூமி தயாராக இல்லை, 1945-க்கு பின்னர் அந்த 14-பேர் தொடர்பாக போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் தந்த ''தீர்ப்பு ஏற்கெனவே, முடிவு செய்யப்பட்டது" என்று மட்டுமே கருத்து தெரிவித்தார்.

ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரண்டுமே உரிமை கொண்டாடும் Diaoyu தீவின் நிரந்தர குடிமக்களாக ஜப்பானிய குடிமக்கள் 20 பேரை பதிவு செய்வதற்கு, கொய்ஜூமி அரசாங்கம் Wu-வின் எட்டுநாள் விஜயத்தின் போது மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டது. அந்த மக்கள் எவரும் இல்லாத பாறைகள் நிறைந்த சிறிய தீவின் மீது தனது உரிமை கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கில்தான் ஜப்பான் அந்த நகர்வை மேற்கொண்டது, மக்கள் எவருமில்லாத மற்றொரு தீவு Dokto தீவாகும். தற்போது, அது தென்கொரியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, டோக்கியோ தனது குடிமக்களை அந்தத்தீவின் குடிமக்களாகவும் அறிவித்துள்ளது.

கொய்ஜூமின் நடவடிக்கைகள் சீன ஆட்சியை பதில் நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியது. கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக அது மேற்கொண்ட சுதந்திர சந்தைக்கொள்கைகள் மிகப்பெருமளவிற்கு சமூக ஏற்றதாழ்வுகளை உருவாக்கிவிட்டிருப்பதால் வர்க்க பதட்டங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவும், நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின் சில தட்டினர்களிடையே ஆதரவை திரட்டுவதற்காகவும், பெய்ஜிங் மிகப்பெருமளவில் தேசியவாத உணர்வுகளை எழுப்பி வருகிறது. ஜப்பானின் போர்க்கால குற்றங்களுக்கு வெளிப்படையாக மன்னிப்புக்கோரல் குறுகியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதற்கு எளிதானதொரு இலக்காக அமைந்துவிடுகிறது. ஏப்ரலில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற கண்டனங்களுக்கு பெய்ஜிங் மறைமுக ஆதரவு தந்தது.

என்றாலும், தற்போது பெய்ஜிங் உருவாக்கிய தேசபக்த தீவிரவாதிகள் ஜப்பான் மீது ''மிக மென்மையாக'' பெய்ஜிங் நடந்துகொள்வதாக விமர்சனம் செய்துள்ளனர். Yasukuni புனித தள விஜயம் தொடர்பாக கொய்ஜூமி தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக அரசாங்கம் போதுமான அளவிற்கு பெரும் கவலை கொண்டிருந்ததால் அது Wu-வின் சந்திப்பை இரத்து செய்தது, என்று பெயர் குறிப்பிடப்படாத சீன அதிகாரி ஒருவர் கூறியதாக மே 26-ல் Asahi Shimbun தெரிவித்தது.

"அவர் [Wu], கொய்ஜூமியை சந்தித்திருப்பாரானால் மத்திய கட்சி தலைவர்களால் சீனாவில் எதிர்ப்புக்கள் [கண்டன] தோன்றியிருக்கும், அதே நேரத்தில் Yasukuni விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது என்பது மிகத் தெளிவானதாகும்" என்று அந்த வட்டாரம் கூறியது.

இரத்துச் செய்யப்பட்ட கூட்டம் தொடர்பாக டோக்கியோ குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் சீனாவை கண்டிப்பதற்கும், நிலவரத்தை முற்றச் செய்வதற்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டது. ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் Nobutaka நிருபர்களிடம் கூறும்போது "திடீரென்று இரத்துச் செய்யப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட மன்னிப்பு தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாகரீக நடைமுறைகளுக்கு விரோதமானது" என்று குறிப்பிட்டார். கொய்ஜூமி கோபத்தோடு மே 23-ல் பத்திரிகையாளரிடம் "என்னை சந்திக்க விரும்பாத எவரையும், நான் சந்திக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.

ஜப்பானில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் தினசரி பத்திரிக்கையான வலதுசாரி Yomiuri Shimbun, மே 25-ல் எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், மோசமடைந்துவரும் உறவுகளுக்கு சீனாதான் காரணமென்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அந்த பத்திரிகை Wu-வின் நடவடிக்கைகள், சென்ற ஆண்டு ஒரு சீன நீர்மூழ்கிக்கப்பல் ஜப்பானிய கடல்பகுதிக்குள் புகுந்தது மற்றும் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற கண்டனங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது மற்றும், பெய்ஜிங்கிடமிருந்து மன்னிப்பு ஒன்றை கோரியுள்ளது. Yasukuni புனித தளத்திற்கு கொய்ஜூமி விஜயத்தை அது சரி என்று வாதிட்டுள்ளது, அது, ஒரு உள்நாட்டு பிரச்சனை என்றும் மற்றும், "மற்றொரு நாடு தலையிடுவதன் மூலம் அது எப்போதும், தீர்த்து வைக்கப்பட முடியாதது" என்றும் கூறியுள்ளது.

பொருளாதார விளைவுகள் மீதான கவலை

இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய பதட்டங்கள் ஆழமாகிக்கொண்டு வருவது, பெய்ஜிங்கிற்கும் டோக்கியோவிற்கும் இடையில் ஏற்படுகின்ற ஒரு பிளவினால் உருவாகக்கூடிய பொருளாதார விளைவுகள் பற்றிய கவலைகளை தூண்டிவிட்டிருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு கணிசமான விகிதாச்சாரம் ஜப்பானிய முதலீடுகளை சார்ந்திருப்பதால் ஜப்பானிய பெருநிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுவதை தவிர்ப்பதற்கு சீனத்தலைமை முயன்று வருகிறது.

டோக்கியோவை தளமாகக் கொண்ட Teikoku புள்ளி விவரத் தொகுப்பு 6,906 ஜப்பானிய கம்பனிகள் பற்றிய ஒரு ஆய்வை நடத்தியது, ஏப்ரலில் நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான கண்டனங்களுக்கு பின்னர், அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது பற்றி கவலை தெரிவித்திருப்பதாக அது குறிப்பிடுகிறது. சீனாவில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்ற கம்பெனிகளில் 30 சதவீதம் தற்போது தங்களது திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளன.

சீனாவின் ஒரு தலைமை பொருளாதார அதிகாரியான Wu, இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைக்காக பேச்சு வார்த்தைகளை தொடக்க வேண்டுமென்று டோக்கியோவை வலியுறுத்துவதற்காகத்தான், பிரதானமாக அவர் ஜப்பான் சென்றார். அரசியல் காரணங்களால் கொய்ஜூமியுடன் அவரது சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டாலும், அவர் ஜப்பானின் வர்த்தக கூட்டமைப்பான Nippon Keidanren-னுடன் அளித்த பகல் விருந்தில் கலந்து கொண்டுவிட்ட பின்னர்தான், அந்த நாட்டை விட்டு வெளியேறினார். அவ்வம்மையார் ''ஜப்பானுடன் சமாதான சகவாழ்வும், நமது எதிர்கால தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும் நட்புறவும் ஒத்துழைப்பும் மற்றும் கூட்டு வளர்ச்சியும்" உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டோக்கியோவிற்கும் பெய்ஜிங்கிற்குமிடையில் உறவுகளில் விரிசல் ஏற்படுவது தங்களது வர்த்தக நலன்களுக்கு ஒரு பேராபத்து அச்சுறுத்தல் என்று ஜப்பானிய வர்த்தகத் தலைவர்கள் கருதுகின்றனர். பல ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவிற்கு முதலீட்டுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பெரும்பாலும் பினைக்கப்பட்டிருக்கின்றன, அதனால் அவற்றின் இலாபம் ஈட்டும் திறனும், அங்கு இந்த உற்பத்தி அடிப்படையிலான பொருளாதார பூரிப்புக்களால் தூண்டிவிடப்படுகிறது.

Nippon Keidanren ஜப்பானின் நிஜ செல்வாக்குள்ள பெரு நிறுவன லாபியாகும், இதில் 1,300-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் தலைவர்கள் டொயோடா, நிப்பான் ஸ்டீல் மற்றும் டோஷிபா----இந்த நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன. Yasukuni புனித தளத்திற்கு விஜயம் செய்வது சம்மந்தமாக முடிவு செய்யும் போது கொய்ஜூமி தனது ''தனிப்பட்ட தீர்மானத்திற்கு'' மேலாக ''தேசிய நலன்களை'' கருதவேண்டும், என்று Keidanren தலைவரான Hiroshi Okuda-வும் மற்றும் டொயோடா மோட்டார்ஸும் பகிரங்கமாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

சீனாவில் ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சீன தொழிலாளர்கள் ஏப்ரலில் நடத்திய கண்டனங்களை குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைகளுக்கு எதிரான தமது சொந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டதாக ஜப்பானிய பெருநிறுவன வட்டாரங்களிடையே ஒரு கவலை நிலவுகிறது. அதே அச்சத்தை சீன ஆட்சியும் பகிர்ந்து கொள்கிறது. ஆழமாகிக்கொண்டு வரும் சமூக ஏற்றதாழ்வு நிலவுகின்ற சூழ்நிலைகளில் எந்த கண்டன இயக்கமும் அரசாங்கத்திற்கு ஆதரவு காட்டுகிற எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பால் செல்லக்கூடிய பரந்த இயக்கமாக வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறு உண்டு என்பதை அது நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தொழிலாளர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து, ஜப்பானுக்கு எதிரான கண்டனங்களுக்கு மிக வேகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது மற்றும் பல பிரதான அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இருந்து கொய்ஜூமி அரசாங்கம் பின்வாங்கிவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க ஜப்பானிய பெருநிறுவனங்களை பெய்ஜிங் ஊக்குவிக்க முயன்று வருகிறது. சீனாவில் செயல்பட்டுவரும் ஜப்பானிய கம்பெனிகளுக்கு குறைந்த வரி விகிதங்களை ஸ்தாபிப்பது தொடர்பாக சீன அரசாங்கம் ஜப்பானின் வரிவிதிப்பு அமைப்புடன் வேலைசெய்து வருகிறது, குறிப்பாக ஜப்பானிலுள்ள தாய் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதற்கு மற்றொரு நாட்டின் வரிவிதிப்பு அதிகாரிகளோடு முதல்தடவையாக சீனா உடன்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே கொய்ஜூமிக்கு ஜப்பானில் அரசியல் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறார். பொதுவாக கொய்ஜூமியின் ''பயங்கரவாதத்தின் மீதான போரையும்'' இதர மூக்கத்தனமான வெளியுறவு கொள்கைகளையும் ஆதரித்து வருகின்ற எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயகக்கட்சி (DPJ) Yasukuni புனித தளத்திற்கு அவர் விஜயம் செய்ய திட்டமிட்டிருப்பதைக் கண்டித்துள்ளது, அது ஒரு "கடுமையான'' நிலைமையை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

கொய்ஜூமியின் ஜப்பானின் அஞ்சல் துறையை தனியார் உடைமையாக்கும் மக்கள் விரும்பாத திட்டங்களோடு சீனாவுடனான பதட்டங்களை இணைத்து DJP தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அவரது ''கொடுங்கோன்மை நிர்வாகத்திற்கு'' ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. DJP தலைவரான Katsuya Okada "நான் பிரதமரானால், நான்Yasukuni புனித தளத்திற்கு விஜயம் செய்யமாட்டேன்" என்று அறிவித்தார்.

LDP-ன் கூட்டணி பங்காளியான, புதிய கொமெய்டோ கட்சியும் கூட Yasukuni புனித தளத்திற்கு விஜயம் செய்யும் பிரச்சனையில் மிதவாதப்போக்கை கடைபிடிக்குமாறு கொய்ஜூமியை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது, ஏனெனில் ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைப்பது தொடர்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதால் அப்படிக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விமர்சனங்கள் முற்றிலும் தந்திரோபாய அடிப்படையில் அமைந்தவை. ஜப்பானிய மக்களில் மிகப்பெருப்பாலோர் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் DPJ மற்றும் கொமெயிடோ ஆகிய இரண்டும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டுக்கொள்கையையும் வலதுசாரி தேசியவாதத்தையும் ஆதரித்துள்ளன. ஏப்ரல் 29 விடுமுறையை மன்னர் Hirohito-வை, கண்ணியப்படுத்தும் தினமாக மறுபெயர் சூட்டுவதற்கு சென்ற மாதம்தான் அவர்கள் வாக்களித்தனர்.

ஜப்பானிய மக்களிடையில் தேசியவாத உணர்வுகளை ஏற்படுத்த கொய்ஜூமி மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு சில சமிக்கைகள் தோன்றியுள்ளன. வலதுசாரி Yomiuri Shimbun மே, மாதம் நடுவில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின்படி ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற கண்டனங்களுக்காக சீனாவிடமிருந்து இழப்பீடும் ஒரு பொதுமன்னிப்பும் கோர வேண்டுமென்று 85 சதவீதத்தினர் கொய்ஜூமியை கேட்டுக்கொண்டனர். என்றாலும், அதே நேரத்தில், சென்றவாரம் Kyodo செய்தி நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் 57 சதவீதம் பேர் கொய்ஜூமி, Yasukuni புனித தளத்திற்கு விஜயம் செய்வதை எதிர்த்தனர்------இது டிசம்பருக்கு பின்னர் 16.9 சதவீத அதிகரிப்பாகும்.

போர்க்கால ஜப்பானிய ஆட்சியின் கொடூரமான அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நீண்டகாலமாக குறிப்பாக, ஜப்பானிய தொழிலாள வர்க்கத்திடையே ஜப்பானிய இராணுவவாதத்திற்கும் அதன் சின்னங்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் எதிர்ப்பு நிலவுகிறது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்து கொண்டதற்கு ஆதரவாக ஜப்பானிய துருப்புக்களை அனுப்பியதற்கு நிலவிய மகத்தான எதிர்ப்பில் இந்த உணர்வுகள் எதிரொலிக்கின்றன. இப்போது கொய்ஜூமின் நடவடிக்கைகள் சீனாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற அச்சங்கள் நிலவுகின்றன-----அந்த சாத்தியக்கூறை தள்ளிவிட முடியாது. மே தொடக்கத்தில், ஜப்பானிய பாதுகாப்பு அமைப்பு ஜப்பானின் வானவெளியை அணுகியதாக குற்றம் சாட்டப்பட்ட சீன போர்விமானங்களை இடைமறிப்பதற்கு சென்ற ஆண்டு 13 முறை போர் ஜெட் விமானங்கள் கிளம்பிச் சென்றன என்று உறுதிப்படுத்தியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved