World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US military recruitment crisis deepens

அமெரிக்க இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதில் நெருக்கடி ஆழமாகிறது

By James Cogan
1 June 2005

Back to screen version

அமெரிக்க இராணுவத்தில் ஆள் சேர்ப்பதிலும் ஒப்பந்தப்பணி முடிந்தவர்கள் இராணுவத்தில் திரும்ப சேர்க்கப்படுவதிலும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது, நீடித்துக்கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டுக்கொண்டே வருகின்றன. மோசமாக பாதிக்கப்பட்ட பிரிவு, முழுநேர இராணுவம் அல்லது தீவிரமாக களப்பணியாற்றுவதாகும், அதைத் தொடர்ந்து பகுதிநேர இராணுவ ரிசேர்வ் படையிலும் தேசிய காவலர் பிரிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

அமெரிக்க இராணுவ ஆள்சேர்ப்பு தளபதியான மேஜர் ஜெனரல் Michael Rochelle மே 20 அன்று பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார்: "கடந்த 33 ஆண்டுகளாக இந்த சீருடையில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணிகளை செய்து வருகிறேன்.... கடந்த காலத்தில் என்றைக்கும் கண்டிராத அளவிற்கு இன்றைய தினம் நிலைமைகள் உள்ளன, இராணுவத்தில் சேர்வதற்கு அமெரிக்கா இளைஞர்கள் இடையிலும் அவர்களை இராணுவத்தில் சேர தூண்டுபவர்களுக்கு இடையிலும் மிகக்குறைவான ஆர்வம்தான் காணப்படுகிறது".

Rochelle தந்துள்ள தகவலின்படி, இராணுவத்தில் சேரவேண்டும் என்று "தூண்டி பரிந்துரை செய்கின்ற" பெற்றோர்கள், விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியாளர்கள் மற்றும் 17 வயது முதல் 24 வயதுவரையிலான அமெரிக்கர்களில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்கள் ஆகியோர் மத்தியில் இராணுவத்தில் சேரவேண்டும் என்று இளைஞர்களை ஊக்குவிக்கத் தயாராக இருக்கின்றவர்களிடையே கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது. 2001 செப்டம்பர் 11-க்கு முன்னர் இந்த விகிதம் 22 சதவீதமாக இருந்தது. தற்போது இது 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

ஏப்ரல் மாதம், இராணுவத்தில் தீவிரமாக பணியாற்றக்கூடியவர்களுக்கான ஆள்சேர்ப்பு இலக்கு 42 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது, அதே நேரத்தில் இராணுவ ரிசர்வ் படையில் ஆள்சேர்ப்பு 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆண்டுக்கணக்கு அடிப்படையில், செப்டம்பர் முதல் தேதிவாக்கில் இராணுவத்திற்கு 80,000 புதிய போர்வீரர்கள் தேவை, அதில் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

2003 அக்டோபருக்கும் 2004 செப்டம்பருக்கும் இடையில் இராணுவ தேசிய காவலர் இலக்கான 56,000 பேரை புதிதாக சேர்ப்பதில் 7,000 அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டது, 2004 இறுதி மாதங்களில், தேவைப்படுகிறவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மட்டுமே, இராணுவத்தில் சேர்ந்தனர். தேசிய காவலர் பணியில் ஆள் சேர்ப்பதற்காக முன்கண்டிராத அளவிற்கு நிதியளிப்பு ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுகின்றன. முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தேசிய காவலர்களைப்போன்று 15,000 டாலர்கள் போனஸ் வழங்கப்படுகிறது, தேசியக் காவலர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இராணுவத்தில் எப்போதுமே பணியாற்றியிராத மக்களுக்கு 10,000 டாலர் போனஸ் வழங்கப்படுகிறது. என்றாலும், ஆள் சேர்ப்பதில் வீழ்ச்சி நீடித்துக்கொண்டே இருக்கிறது.

ஈராக்கில் சென்ற ஆண்டு மிகக்கடுமையான சண்டைகள் சிலவற்றிற்கு விரிவாக பயன்படுத்தப்பட்ட மரைன் படைப்பிரிவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம், கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு அது ஆள் சேர்ப்பு இலக்கை இழந்துவிட்டது.

அத்துடன் ஏற்கனவே உள்ளவர்களை இராணுவத்தில் தக்கவைத்துக்கொள்வதிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, 2003-ல் 75.1 சதவீதமாக இருந்தது 2004-ல் 63.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. ஒரு இன்டியானா தேசிய காவலர் காலாட்படைப்பிரிவில் மீண்டும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சி 2003-ல் 85 சதவீதமாக இருந்தது 2004-ல் 35 சதவீதமாகிவிட்டது.

குறிப்பாக பென்டகனுக்கு கவலைதரும் அம்சம் என்னவென்றால், ஆரம்பத்தில் இராணுவ சேவையை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து விலகிச்செல்கின்ற இளம் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக மொத்தம் 8.7 சதவீதம் இராணுவ லெப்டினட்களும் கேப்டன்களும் 2004-ல் பதவியிலிருந்து விலகிவிட்டனர்----இது 2001-க்கு பின்னர் மிக உயர்ந்த விகிதமாகும்.

இந்த ஆள்சேர்ப்பு மற்றும் திரும்ப பணியாற்றுவதற்கான ஆள்சேர்ப்பு நெருக்கடியில் ஒரு பிரதான காரணி ஈராக்கில் நீடித்துக்கொண்டிருக்கின்ற புதைசேறு என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

ஈராக்கிற்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்பதை நியாயமாக எதிர்பார்க்கலாம். வடக்கு ஈராக் நகரான டிக்கிரிட்டை சுற்றி பணியாற்றிவிட்டு அண்மையில் ஜேர்மனி திரும்பியுள்ள 22,000 பேரைக்கொண்ட முதலாவது காலாட்படை பிரிவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும், அவர்களில் 193 பேர் மாண்டுவிட்டனர், 845 பேர் காயமடைந்துள்ளனர். பல்லூஜாவிலும் அன்பர் மாகாணத்தை சுற்றியும் நடைபெற்ற இரத்தக்களரி போரில் தள்ளப்பட்ட மரைன் படைப்பிரிவுகள் இதைவிட அதிகமான அளவிற்கு உயிர்சேதமும் காயமும் அடைந்துள்ளனர்.

2003 மார்ச்சில் படையெடுப்பு நடைபெற்றது முதல் இதுவரை ஈராக்கில் 1661 அமெரிக்க படை வீரர்களும் மரைன்களும் உயிரிழந்தனர் மற்றும் 12,000-ற்கு மேற்பட்டோர் நடவடிக்கைகளில் காயமடைந்தனர். அதேபோல், இராணுவ மருத்துவத்துறை தந்துள்ள தகவலின்படி, ஈராக்கிலிருந்து போரில் அல்லாத காயங்கள் மற்றும் நோய் போன்ற மருத்துவ காரணங்களால் குறைந்தபட்சம் 18,000 இராணுவ ஊழியர் ஈராக்கிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

இராணுவம் மரைன்படைப்பிரிவு அல்லது தேசிய காவலர் பிரிவில் கூட சேர்கின்றவர்கள் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் பணியாற்ற முடியுமென்று நியாயமாக எதிர்பார்க்க முடியும். ஈராக்கில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ள மூன்றாவது காலாட்படைப்பிரிவு போன்ற சில களப்பணிப்பிரிவுகள் கடந்த 26 மாதங்களில் இரண்டாவது முறையாக பணி செய்து வருகின்றன. நான்காவது காலாட்படைப்பிரிவு மற்றும் 101-வது விமானப்படை பிரிவுகளை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு முடிவு வாக்கில் இரண்டாவது முறையாக பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஈராக்கில் உள்ள 1,40,000 அமெரிக்க இராணுவ வீரர்களில் 40 சதவீதம் பேர் ரிசர்வ் படை வீரர்கள் அல்லது தேசிய காவலர் பிரிவுகளை சார்ந்தவர்கள் மற்றும் இராணுவத்தில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் காயங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தப் பிாவுகளைச் சார்ந்தவர்கள். பகுதி நேர தேசிய காவலர்கள் வரலாற்று அடிப்படையில் பார்த்தால் மிக அபூர்வமாகவே வெளிநாட்டு போர்ப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர், அவர்களை புஷ் நிர்வாகம் ஈராக் போர்களத்தில் முன்னணி போர் வீரர்களாக பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. தேசிய காவலர் படைப் பிரிவுகள் ஐந்து----நியூயோர்க், ஹவாய், லூசியானா, Idaho மற்றும் Tennessee-ஐ சேர்ந்தவை---- தற்போது அந்த நாட்டில் 12 மாதப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூர்வாங்க பயிற்சி மற்றும் இராணுவத்திலிருந்து நீக்குவது உட்பட, 18 மாதங்கள் வரை அவர்கள் பணியாற்றியாக வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

தேசிய காவலர் படை சார்ஜண்டான 23 வயது Nate Benco, Stars & Stripes-ற்கு பேட்டியளித்த போது ``இது மாறப்போவதில்லை. புதிதாக சேரும் எவரும் மிகப் பெரும்பாலான காலத்திற்கு பணியாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டி உள்ளது.

போர் எதிர்ப்பு உணர்வு

ஈராக்கில் நடத்தப்பட்டு வருகின்ற போர் களங்கம் நிறைந்தது மற்றும் புஷ் நிர்வகத்தின் வெளிநாட்டு கொள்கைக்கு பின்னணியாக ஏதோ ஒரு தீங்கு உள்ளது என்ற சந்தேகம் இராணுவப் படைகளில் இருந்து விலகுகின்ற இராணுவ ஊழியர்களை பேட்டி கண்டதிலிருந்து வெளிவருகிறது. வரும் மாதங்களில் இராணுவ கேப்டன் பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ள தவே புளுட்டன் Los Angeles Times-ற்கு பேட்டியளித்த போது: " `பயங்கரவாதத்தின் மீதான போரின்' விளக்கப்படாத குறிக்கோள்கள் இராணுவத்தில் சேர்பவர்களை நிலைத்திருக்கச் செய்ய இராணுவத்திற்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்துகிறது.`` மற்றொரு இளம் அதிகாரியன கேப்டன் Vincent Touhey ``முடிவுப் புள்ளி எது? எப்போது நீங்கள் வெற்றியை அறிவிக்கப் போகிறீர்கள்?`` என்று கேட்டார்.

தற்போதுள்ள நிலவரம் அமெரிக்க ஆளும் வட்டாரங்களிடையே கவலையையும், நெருக்கடியையும் தோற்றுவித்திருக்கிறது என்பதற்கு போதுமான சமிக்கைகள் காணப்படுகின்றன. அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதுமே ஈராக் ஆக்கிரமிப்பை நீடிப்பதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்துவதிலும் உறுதி கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இதர மூலோபாய இலக்குகளான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஈரான், சிரியாவிலிருந்து வடகொரியா வரை கலைந்துரையாடப்பட்டு வருகின்றன. துருப்புக்கள் அவற்றிற்கு தேவைப்படும்.

என்றாலும், வியட்நாம் போர் அனுபவத்திற்கு பின்னர் வெகுஜன போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிராக கட்டாய இராணுவம் சேவையை கொண்டுவருவது குறித்து தயக்கம் காட்டி வருகின்றனர். ஏற்கெனவே அமெரிக்க மக்களிடையே ஈராக் போருக்கு எதிர்ப்பு பரவலாக நிலவுகிறது, இந்த சூழ்நிலையில் அந்த ஆக்கிரமிப்பை நிலைநாட்டுவதற்கு போரிடவும் மடிவதற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கட்டாய இராணுவ சேவையில் திரட்டுவது 2003-ல் உருவாகிய வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு மீண்டும் ஒரு புத்துயிர் கொடுக்கும் அரசியல் கவன ஈர்ப்பாக மாறிவிடும்.

``தொண்டர் இராணுவத்தின் சாவுச்சூழல்`` என்ற தலைப்பில் மே 29-ல் New york Times எழுதியுள்ள தலையங்கம் அரசியல் ஸ்தாபனத்தில் நிலவுகின்ற கவலைகளை சுட்டிக்காட்டுகிறது. இராணுவத்தின் நெருக்கடி பற்றி வருந்திய பின்னர் மற்றும் ஈராக் படுதோல்வி பற்றி குறிப்பிட்ட பின்னர், அது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்டாய இராணுவச் சேவை ``இராணுவ அடிப்படையில் முட்டாள்தனமானது மற்றும் அரசியல் அடிப்படையில் வெடித்துச் சிதறக்கூடியது`` என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கு பதிலாக அது இராணுவத்தில் "எதிர்காலத்தில் சேரக்கூடியவர்கள் தொகுப்பை விரிவுபடுத்துகின்ற" வகையில் பெண்களையும், போர்க்கள பணிகளில் ஈடுபடுத்தலாம் என்றும் களியாட்ட நாட்டமுள்ளவர்கள் பகிரங்கமாக ஆயுதப்படைகளில் சேர அனுமதிக்கலாம் என்றும், "புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை தருவதாக உறுதியளித்து" இராணுவத்தில் சேர்க்கலாம் என்றும் அமெரிக்க அரசாங்கம் "எப்படி தனது துருப்புக்களை நடத்துகிறது" என்பதை மாற்றிக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது. ஈராக்கிற்கு அனுப்பப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் களியாட்ட நாட்டமுள்ளவர்கள் மற்றும் மகளிர் ஏன் கவரப்பட வேண்டும் என்பதை விளக்குவதற்கு டைம்ஸ் கவலைப்படவில்லை.

உண்மை என்னவென்றால் இராணுவ ஊழியர்களிடையிலும் அல்லது அமெரிக்க மக்களிடையிலும் ஈராக் ஆக்கிரமிப்புத் தொடர்பாக கருத்தியல் உறுதிப்பாடு எதுவுமில்லை. தனது ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்தி சர்வதேச ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவைப்படுகின்ற படை வீரர்களை வழங்குவதில் கட்டாயப்படுத்துவது ஒன்றே சிறந்த வழி என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் அதிக அளவில் சிந்தனை செலுத்தி வருகிறது.

எண்ணிக்கையை பராமரிக்கும் நடவடிக்கையின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளாக துருப்புக்களின் எண்ணிக்கையை நிலைநாட்டுவதற்கு ''பணி முடிந்ததும் அவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை, அல்லது வேறு இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. 40,000 இராணுவத்தினர், ரிசேர்வ் மற்றும் தேசிய காவலர் துருப்புக்களுக்கு 2003 முதல் "Stop Loss" கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தங்களது ஒப்பந்தம் முடிந்து மேலும் 12 மாதங்கள் வரை போர் வீரர்கள் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

உண்மையிலேயே கட்டாய இராணுவ சேவை முறைகள் பலவற்றை இராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இராணுவப்பணிகளிலிருந்து விலகிய 114,000 பேரை திரும்ப இராணுவத்தில் சேர்ப்பதற்கு தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தயார் ரிசர்வ் (IRR) கடிதங்களை இராணுவம் விரிவான அடிப்படையில் அனுப்பி இருக்கிறது. Soldiers for The Truth என்கிற வலைதளம் மே 17-ல் வெளியிட்ட தகவலின்படி, நூற்றுக்கணக்கான IRR காலாட்படை, பிரிவினருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

SFTT அத்தகைய போர்வீரர்களில் ஒருவரான 37 வயது Chris Bray யுடன் பேசியது, அவர் கல்லூரியில் சேர்வதற்கு பணம் கிடைக்கும் என்பதற்காக, 1999-ல் இராணுவத்தில் சேர்ந்தார். 2001 கடைசியில் இராணுவத்தை விட்டு விலகினார். அவரது முக்கியமான பொறுப்பு ஜோர்ஜியாவிலுள்ள Benning கோட்டைக்கு குடிவெறியிலிருந்த அதிகாரிகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டி என்று விளக்கினார். அவர் ஒரு காலாட்படைப்பிரிவின் பகுதியாக ஈராக்கிற்கு அனுப்பப்படவிருக்கிறார்.

இதுவரை 305 IRR காலாட்படை பிரிவினர்தான் அணிதிரட்டப்பட்டிருக்கின்றனர், ஆனால் ஆயிரக்கணக்கானோர், இராணுவத்தின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர், ஒரு இராணுவ பேச்சாளர் SFTT-க்கு பேட்டியளிக்கும்போது, பெரும் எடுப்பில் அழைப்பு விடுப்பதற்கான "திட்டங்கள் இதுவரையில் எதுவுமில்லை" என்று கூறினார்.

என்றாலும், ஈராக் ஆக்கிரமிப்பு நீடித்துக்கொண்டேயிருப்பதால் கட்டாய இராணுவ சேவை உட்பட விரிவான அடிப்படையில் இதர முறைகளிலும் கட்டாய சேவையை கொண்டு வருவதற்கான கருத்துக்களை வெள்ளை மாளிகையும் பென்டகனும் மனத்திற்கொள்ளவிருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved