:
ஆசியா
:
இலங்கை
Aid conference highlights political
impasse in Sri Lanka
உதவி மாநாடு இலங்கையில் அரசியல் முட்டுக்கட்டையை வெளிப்படுத்துகிறது
By Nanda Wickremasinghe and K. Ratnayake
27 May 2005
Back to screen
version
இலங்கையின் கண்டி நகரில் மே 16-17 ம் திகதிகளில் பிரதான சர்வதேச உதவி மாநாடு
ஒன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட
50 நாடுகளில் இருந்தும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்தும் சுமார்
120 பிரதிநிதிகள் வருகைதந்திருந்தனர்.
இலங்கை அரசாங்கம் இந்த மாநாட்டை ஒரு மாபெரும் வெற்றி என பகிரங்கமாக வரவேற்றது.
நிதி அமைச்சர் சரத் அமுனுகம, இந்த ஒன்றுகூடலை ஒரு "மிகப்பெரிய வெற்றி" எனவும் அது எதிர்பார்த்ததை விடவும்
மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக நிபந்தனைகளின்றி --குறைந்தபட்சம் உத்தியோபூர்வமாக இல்லாவிட்டாலும்--
நாட்டுக்கு அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக விவரித்தார்.
ஆனால், தொடர்ச்சியான பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இடை நிறுத்தப்பட்டுள்ள
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கான நகர்வுகள் ஆகிய இரு நிபந்தனைகளும்
இட்டு நிரப்பப்பட்டால் மட்டுமே குறிப்பிடத்தக்க நிதி உதவி கிட்டும் என்பதையிட்டு கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனம்
விழிப்பாக உள்ளது. எவ்வாறெனினும், இந்த இரு நடவடிக்கைகளும், தீவிலும் மற்றும் அரசாங்கத்தினுள்ளேயும் சமூக,
அரசியல் பதட்டங்களை உக்கிரமடையச் செய்துள்ளன.
கண்டி கூட்டமானது 2003ல் உதவி நிதியாக 4.5 பில்லியன் டொலர்களை வழங்க வாக்குறுதியளிப்பதற்காக
உதவி வழங்குபவர்கள் டோக்கியோவில் ஒன்று கூடியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது கூட்டமும் இலங்கையில் நடந்த முதலாவது
கூட்டமுமாகும். ஏறத்தாழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை
வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள நிதி வழங்கப்படப் போவதில்லை. ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திற்கும்
மற்றும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எதிராக இராணுவ உயர்மட்டத்தினருடனும் சிங்கள தீவிரவாதக் கும்பல்களுடனும்
கூட்டுச் சேர்ந்து மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்த குமாரதுங்க, இறுதியாக 2004 பெப்பிரவரியில் அரசாங்கத்தை
பதவிவிலக்கினார்.
2004 ஏப்பிரல் தேர்தலில் சற்றே வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்
பொருளாதார நெருக்கடியை சந்தித்ததோடு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு வியாபாரத்
தலைவர்கள் நெருக்கத் தொடங்கினர். தலைகீழாக மாறிய குமாரதுங்க, சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான
தனது விருப்பத்தை பிரகடனம் செய்தார். ஒரு வருடம் கடந்தும் எந்தவித முன்னற்றமும் காணப்படவில்லை. சுதந்திர முன்னணியின்
பிரதான பங்காளியான சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), விடுதலைப் புலிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட
சலுகைகள் வழங்குவதை கூட எதிர்க்கின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி சுனாமி பேரழிவால் உக்கிரமடைந்தது. இந்தப்
பேரழிவில் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையில் சீரழிவை
ஏற்படுத்தியதோடு ஒரு மதிப்பீட்டின்படி இதில் ஏற்பட்ட சேதம் குறைந்தபட்சம் 1.5 பில்லியன்களாகும்.
வாக்குறுதியளிக்கப்பட்ட 1.8 பில்லியன் டொலர் சர்வதேச சுனாமி நிதி, உதவிகளை விநியோகிப்பதற்காக விடுதலைப்
புலிகளுடன் ஒரு "பொதுக் கட்டமைப்பை" ஸ்தாபிக்கத் தவறியதால் தாமதமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,
அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை தணிக்கவும் எந்தவொரு அர்த்தமுள்ள மீள்கட்டுமான
வேலைகளை தொடங்கவும் தவறியதையிட்டு வெகுஜனங்கள் மத்தியில் ஆத்திரமும் வெறுப்பும் வளர்ச்சிகண்டு வருகிறது.
கண்டி மாநாட்டின் வாதப் பிரதிவாதங்களின் போது, அதிகளவில் செறிவடைந்திருந்த
அரசியல் நிலைமையும் ஆளும் கும்பலுக்கிடையிலான ஆழமான பிளவும் பகிரங்கமாக காட்சிக்கு வந்தன. எதிர்க் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) சமூகமளித்திருக்காததோடு அதற்குப் பதிலாக அது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான
ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. உதவியை விநியோகிப்பது சம்பந்தமாக அரசாங்கம் ஒரு உடன்பாட்டை அடையத்
தவறியதையிட்டு விடுதலைப் புலிகளின் விமர்சனங்களை பிரதிபலிக்கும் வகையில், புலிகளுக்கு சார்பான தமிழ் தேசிய
கூட்டமைப்பும் பங்குபற்றவில்லை.
குமாரதுங்க, முன்னொருபோதும் இல்லாத வகையில், பொதுக் கட்டமைப்பை
அமைப்பதற்கான தனது முயற்சிகளுக்கு உதவுமாறு வருகைதந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுப்பதற்காக
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார். தனது அரசாங்கம் "சில சந்தர்ப்பங்களில் சிரமமான தீர்மானங்களையும்
சில சந்தர்ப்பங்களில் ஆபத்தான தீர்மானங்களையும்" எதிர்கொள்வதாக அவர் புலம்பினார். "வடக்கு கிழக்கில் உள்ள
பயங்கரவாத தீவிரவாதிகள்" மட்டுமன்றி --இது விடுதலைப் புலிகளை சுட்டிக்காட்டுகிறது-- "தெற்கில் உள்ள ஏனைய
தீவிரவாதிகளும்" --அவரது பங்காளியான ஜே.வி.பி யும் இதர பேரினவாத அமைப்புகளும்-- என குமாரதுங்க குற்றம்
சாட்டினார்.
பொதுக் கட்டமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை கொடுக்கின்றது
என்ற ஜே.வி.பி யின் வாதங்களுக்கு குமாரதுங்க பதிலிறுக்க முயன்றார். இது விடுதலைப் புலிகளுக்கு சலுகையாகும்
என்பதை விட, "விடுதலைப் புலிகள் இலங்கையின் இறைமையின் வரம்புக்குள் செயற்பட உடன்பட்டுள்ளார்கள்" என அவர்
பிரகடனம் செய்தார். ஆயினும், சில நாட்களுக்குள் அத்தகைய எந்தவொரு சமரசத்தையும் நிராகரித்து விடுதலைப்
புலிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
குமாரதுங்கவின் பேச்சுக்கு ஜே.வி.பி பிரதிநிதிகள் மெளனமாக அமர்ந்திருந்தனர். பொதுக்
கட்டமைப்புக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக மாநாட்டுக்கு முன்னர் உக்கிரமான இராஜதந்திர
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீன் பிடியில் சுனாமியின் தாக்கத்தைப் பற்றி பிரதிநிதிகளுக்கு விளக்குவதற்காக
ஜே.வி.பி அமைச்சர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யஸூஷி அகாஷியின்
அழைப்பின் பேரில் ஜே.வி.பி பிரதிநிதிகள் குழுவொன்று ஜப்பான் செல்கின்றது. எவ்வாறெனினும், மாநாட்டின் பின்னர்,
"உள் வேறுபாடுகளை பகிரங்கப்படுத்துவதாக" குமாரதுங்கவை விமர்சித்து ஜே.வி.பி ஒரு அறிக்கையை
வெளியிட்டது.
மாநாட்டில், பெளத்த பிக்குவும் சிங்கள தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ணவின் பேச்சு ஜே.வி.பி யின் அசெளகரியத்திற்கு காரணமாகியது. ஜாதிக
ஹெல உறுமயவும் ஜே.வி.பி யும், சமாதான முன்னெடுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை கண்டனம்
செய்வதன் மூலம் இனக் குரோதத்தை தூண்ட எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. குமாரதுங்க உரையாற்றிய உடன்,
ரத்ண சபையில் இருந்தவாறு விடுதலைப் புலிகளை "பயங்கரவாதிகள்" என கண்டனம் செய்ததோடு பொதுக்
கட்டமைப்பையும் எதிர்த்து வசைமாரி பொழிந்தார்.
அவர், நிதி வழங்குபவர்களை பாராட்டிய அதே வேளை, எந்தவொரு
பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு உறுதியான முன்நிபந்தனைகளை இடுமாறு சபையோரிடம்
கோரிக்கை விடுத்தார். "சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதக் குழுவுடன் பேச்சுவார்த்தை
நடத்துமாறு இலங்கையை நெருக்குமானால், அவர்களது அடித்தளத்தை தகர்க்கவும் அவர்களை நிராயுதபாணிகளாக்கவும்
அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும்." வேறு வார்த்தைகளில் சொன்னால், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக
விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களையும் தளங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். இது சரணடைவதற்கு
சமமான ஒரு கோரிக்கையாகும். இந்தக் கருத்துக்கள், ஜாதிக ஹெல உறுமயவை அடியோடு வெட்டித்தள்ளும் வகையில்
தனது சொந்த பேரினவாத பிரச்சாரத்தை உக்கிரமாக்குவதற்கு ஜே.வி.பி யை நெருக்கும் என்பதில் சந்தேகம்
கிடையாது.
உதவிப் பொதி
மாநாட்டில் வழங்கப்பட்ட நிதி உதவி, அரசாங்கத்தின் அரசியல் பிரச்சினைகளை
தீர்ப்பதற்குப் பதிலாக உக்கிரப்படுத்துவதாகவே தோன்றுகிறது. மூடிய கதவுகளுக்குள் நடந்த பேச்சுக்களின் பின்னர்
ஊடகங்களின் முன் தோன்றிய நிதி அமைச்சர் சரத் அமுனுகம, நிதி வழங்குபவர்கள் "சுனாமி மீள் கட்டமைப்புக்காகவும்
ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக வாக்குறுதியளித்துள்ளார்கள்" எனத்
தெரிவித்தார். இந்த உதவியில் 95 வீதமானவையும் "கடனாக வழங்கப்படவில்லை மற்றும் மீள்செலுத்தவும்
வேண்டியதில்லை. அரசாங்கம் இந்த நிதிகளை செலவிடுவதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது," என அவர் பெருப்பித்துக்
காட்டினார்.
இந்தப் புதிய பொதியில் முன்னரே வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த 1.8 பில்லியன்
டொலர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். சில அறிக்கைகளின்படி, சுனாமியால்
பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கானவர்களின் தேவைகள் இருந்த போதிலும், ஆரம்பத்தில் வெறும் 55 மில்லியன்
டொலர்கள் மட்டுமே கொண்ட சிறிய நிவாரணப் பொதி வழங்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக "நாம்
பேச்சுவார்த்தை (விடுதலைப் புலிகளுடன்) பாதையில் செல்லும் வரை இந்த வாக்குறுதிகளும் மற்றும் நிதிகளும் கிடைக்கப்
போவதில்லை" என அமுனுகம தானாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் ஆசியாவிற்கான உப தலைவர் ப்ரஃபுல் படெல் நிலைமையை பின்வருமாறு
விவரிக்கையில்: "நாங்கள் இலங்கை மீது நிபந்தனைகளை விதிக்கவில்லை. ஆனால், சர்வதேச சமூகம், சுனாமி உதவிகளை
பங்கிடுவது சம்பந்தமாக அரசாங்கம் புலிகளுடன் ஒரு உடன்பாட்டை அடைவதை காண விரும்புகிறது" என்றார்.
"இலங்கை, சர்வதேச நிதி வழங்குபவர்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்ள முடியாது... பல அபிவிருத்தி
இணைப்பாளர்களை பொறுத்தவரையில், இலங்கையின் சமாதான முன்னெடுப்பானது இலங்கையில் அவர்களின் நலன்களின்
மையத்தில் உள்ளது," என அவர் எச்சரித்தார்.
பட்டெலின் குறிப்புக்கள், பெரும் வல்லரசுகளும் நிதி நிறுவனங்களும் சமாதானத்தைப்
பற்றியோ அல்லது சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்கள் பற்றியோ உண்மையில் அக்கறை செலுத்தவில்லை என்ற
உண்மையை வெளிக்காட்டுகிறது. சர்வதேச சமூகத்தால் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த நாட்டின் நீண்ட கால
உள்நாட்டு யுத்தம், இப்போது தீவின் மலிவு உழைப்பையும் வளங்களையும் சுரண்டுவதற்கு தடையாக இருப்பதாகக்
கருதப்படுவதோடு, அதிகரித்துவரும் வெளிநாட்டு முதலீட்டின் குவிமையமாக உள்ள அயல் நாடான இந்தியாவில்
ஸ்திரமின்மைக்கு செல்வாக்குச் செலுத்தும் காரணியாகவும் கருதப்படுகிறது.
பெரும் வல்லரசுகள் சமாதானக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அதே
அளவில், அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதோடு சமூக செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
எனவும் கோருகின்றன. உலக வங்கி, பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய பேரவை மற்றும் ஆசிய அபிவிருத்தி
வங்கியாளும் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, வரவு செலவுத் திட்டத்தில் வெட்டு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்
தொழில் சட்டங்களை மறுசீரமைப்பையும் அரசாங்கம் பேண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குமாரதுங்க தனது உரையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபை உட்பட
பிரதான அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்த போதிலும் அவற்றை அரச கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் அரசாங்கம்
முன்செல்லத் திட்டமிட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். சுதந்திர முன்னணி, தொழில் மற்றும் நிலைமைகளின் இழப்பு சம்பந்தமாக
அக்கறை செலுத்தும் எண்ணெய் மற்றும் மின்சார ஊழியர்களின் எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.
பூகோள நிதி மூலதன பிரதிநிதிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இலங்கை அமைச்சர்களிடம் மேலும் உறுதியான நடவடிக்கைகளை
கோரியிருப்பர் என்பதில் சந்தேகம் கிடையாது.
மாநாட்டுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிராவிட்டாலும் விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுக்கள்
மீண்டும் தொடங்குவதை ஊக்குவிக்கின்றனர். நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம், விடுதலைப் புலிகளின் பிரதான
பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கத்தை மாநாட்டுக்கு முன்பதாக லண்டனில் சந்தித்தார். பாலசிங்கம், "இலங்கை
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பொதுக் கட்டமைப்பை அமைப்பதில் நிதி வழங்குநர்களின் உறுதிப்பாட்டை"
வரவேற்றார். "அவர்களுக்கு சர்வதேச நன்கொடையாளர்களின் உதவி கட்டாயம் தேவை" என குறிப்பிட்ட அவர், தமிழர்கள்
மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அதிருப்தியையிட்டு தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.
ஆயினும், கொழும்போ அல்லது விடுதலைப் புலிகளோ சமாதான முன்னெடுப்புகளை மீண்டும்
முன்னெடுக்க நெருக்கமாகியுள்ளனர் எனக் கூறுவதற்கு அறிகுறிகள் ஏதும் கிடையாது. ஆளும் சுதந்திர முன்னணி,
பொதுக்கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜே.வி.பி விடுக்கும் அச்சுறுத்தல்களின்
காரணமாக ஆழமாக பிளவடைந்துள்ளது. குமாரதுங்கவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்க் கட்சியான
ஐ.தே.க ஆகிய இரண்டும் சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப்போயுள்ளதுடன், அதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு
வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் தங்களின் எதிரிகளின் கரங்களைப் பலப்படுத்தும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன.
இந்த நீண்டகால அரசியல் முட்டுக்கட்டை வியாபார வட்டாரங்களில் ஆழமான அக்கறையை
தூண்டிவிட்டுள்ளன. உதவி மாநாட்டுக்கு சற்று முன்னதாக, முன்னணி வியாபார அமைப்புக்களின் கூட்டு வர்த்தக சம்மேளனம்
வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கமும் எதிர்க் கட்சியும் மிகவும் தேவையாகவுள்ள வெளிநாட்டு உதவியை ஆபத்துக்குள்
தள்ளுவதாக விமர்சித்தது. ஒரு படி மேலே சென்ற, மே 24 வெளியான டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர்
தலையங்கம், "தேசியப் பிரச்சினைகளை தீர்க்க தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் வழங்க மறுக்கும்
எந்தவொரு கட்சிக்கும், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதை" இடைநிறுத்த வேண்டும் என பெரும் நிறுவன தலைவர்களுக்கு
அழைப்பு விடுத்தது.
கூட்டு வர்த்தக சம்மேளனமோ அல்லது ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியவரோ, தற்போதைய
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என ஆலோசனை தெரிவிக்கவில்லை.
இந்த முட்டுக்கட்டையானது சமாதானம், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுங்கான வாழ்க்கை நிலைமைகளுக்கான சாதாரண
உழைக்கும் மக்களின் அபிலாஷைகளையும் அடிப்படை தேவைகளையும் வழங்குவதற்கு ஆளும் வர்க்கத்தில் உள்ள எந்தவொரு
பிரிவும் இலாயக்கற்றுப் போயுள்ளதையே சாதாரணமாக கோடிட்டுக் காட்டுகிறது. |