World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

European Constitution rejected

The political consequences of the French "no" vote

ஐரோப்பிய அரசியலமைப்பு புறக்கணிக்கப்பட்டது

பிரெஞ்சு மக்களின் "வேண்டாம்" வாக்கின் அரசியல் விளைவுகள்

By Peter Schwarz
1 June 2005

Back to screen version

ஐரோப்பிய அரசியலமைப்பை பிரெஞ்சு வாக்காளர்கள் நிராகரித்திருப்பது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் ஆளும் வட்டங்களை ஒரு பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளது. வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும்தான் இந்த அதிர்ச்சியின் முழு விளைவும் நன்கு தெரியவரும்.

ஜனாதிபதி ஜாக் சிராக், ஆளும் கட்சிகள், முக்கிய எதிர்க் கட்சிகள், மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகியவை "வேண்டும்" வாக்கிற்காக இருக்கின்ற ஒவ்வொரு வழிகளையும் பயன்படுத்தியும்கூட, தெளிவான 55 சதவிகித பெரும்பான்மை அரசியலமைப்பை நிராகரித்து விட்டது. இந்த வாக்கு ஐயத்திற்கிடமின்றி முழு ஐரோப்பிய சமூக, அரசியல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கைக்கும் எதிர்ப்பை பிரகடனப்படுத்தியுள்ளது. முடிவை பற்றிய தன்னுடைய ஆரம்ப கருத்தில்கூட, சிராக் பிரான்ஸ் ஒரு "ஜனநாயக" மற்றும் "இறையாண்மை" முடிவை இப்பிரச்சினையில் எடுத்திருக்கிறது என ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்.

சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரும், "வேண்டும்" முகாமிற்கு வாதிடுபவருமான Dominique Strauss-Kahn, அறிவிற்கு ஒவ்வாத "பயம்", "வாய்வீச்சு" இரண்டும்தான் அரசியலமைப்பின் தோல்விக்குக் காரணம் என்று கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு பயத்தைத் தோற்றுவிக்கும் நிலை இருந்திருந்தால், அது அரசியலமைப்பின் ஆதரவாளர்கள் ஏற்படுத்தியதுதான். கணிசமான மக்கள் அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில், அவர்கள் அச்சுறுத்துதல், மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

வெளியுறவு மந்திரி மிசேல் பார்னியேர், "வேண்டாம்" என்ற வாக்கு பிரான்சை "ஒரு குளிர் நிலையிலும்", "ஒரு இரண்டாந்தரக் குழுவிலும்" மீண்டும் வைத்துவிடும் என்று எச்சரித்திருந்தார். உள்துறை மந்திரியான டொமினிக் டு வில்ப்பன், ஐரோப்பிய ஒன்றியத்தின் புறஎல்லைகள் பற்றிய விதிகளை வலியுறுத்தும் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால், நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோர்கள் ஏராளமாக வந்துவிடுவர், அதனால் என்ன நேரும் என்ற சித்திரத்தை தீய கனாக் காட்சி போல் தீட்டியிருந்தார்.

"வேண்டாம்" வாக்கின் மகத்தான வெற்றி கடந்த நான்கு வாரங்களில் வியத்தகு முறையில் வேகமாக அபிவிருத்தியடைந்த பரந்த அரசியல் அணிதிரட்டுதலின் விளைவு ஆகும். நூறாயிரக்கணக்கான மக்கள், அரசியலமைப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற கணக்கிலடங்கா கூட்டங்களில் பங்கு கொண்டனர். தொலைக் காட்சி கலைந்துரையாடல்கள் மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்தன. நாட்டில் இருந்த சூழ்நிலையே, பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் இருக்கும் பெரும் பரபரப்பு பிரச்சாரத்தை ஒத்ததாக இருந்தது. வாக்காளர்கள் தாங்கள் எதிர்க்கும் சமூக அரசியல் வளர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற நம்பிக்கையை பெற்றனர்.

பரந்த அரசியல் அணிதிரட்டல் என்றால், தீவிர வலதுசாரிகளுடைய, புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, நாட்டுவெறி, இவற்றில் "விசுவாசத்தைக் காட்டுங்கள்" என்ற ஓலத்தின் தீவிரம் குறைவாக கேட்கப்பட்டு, கூடுதலான முறையில் சமூக, அரசியல் பிரச்சினைகள் வெளிப்பட்டுவந்தன. புதிய தாராளவாத கொள்கை மற்றும் ஜனநாயகமற்ற தன்மையில் இருக்கும் அரசியலமைப்பு ஆகியவை "வேண்டாம்" பிரச்சாரத்தின் மையத்தானமாக இருந்தன. "ஐரோப்பாவிற்கு" எதிராக இயக்கப்படவில்லை, மாறாக சமூக-எதிர்ப்பு, பிற்போக்கு அரசியலமைப்பிற்கு எதிராகத்தான் இது இருந்தது. "வேண்டும்" முகாம் "ஒரு வலுவான பிரான்ஸ்" என்ற கருத்திற்குப் பிரச்சாரம் செய்திருந்த நிலையில், "வேண்டாம்" முகாமின் மிகப் புகழ்பெற்ற கோஷம், "மற்றொரு ஐரோப்பாவிற்காக" என்று இருந்தது.

முகாம்களிடையே இருந்த பிளவு சமூக நிலைமையை ஒட்டித்தான் இருந்தது. நீல அங்கி தொழிலாளர்களில் நான்கில் மூன்று பகுதியினரும், வெள்ளை அங்கி தொழிலாளர்களில் மூன்றில் இரு பங்கினரும், பெரும்பாலான விவசாயிகளும், கிராமப்புறத் தொழிலாளிகளும் "வேண்டாம்" என வாக்களித்தனர்.

அரசியல் பிளவுகள்

வாக்கெடுப்பு தோல்வியில் முடிவுற்றதை அடுத்து, பிரான்சின் ஆளும் செல்வந்த தட்டு தங்கள் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கையில் எதிர்கொள்ளும் பிளவை சந்திக்கின்றனர்.

அரசியலமைப்பு புறக்கணிப்பு என்பது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதவியை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி சிராக்கிற்கு, மிகப்பெரிய சொந்த மற்றும் அரசியல் தோல்வியை தீர்க்கமாகக் கொடுக்கிறது. பிரதம மந்திரியை மாற்றுவது என்பது நெருக்கடியை அகற்றிவிடாது. பிரதம மந்திரி Jean-Pierre Raffarin-ன் ராஜிநாமாவை சிராக் ஏற்றுக் கொண்டதுடன் தனக்கு உற்றவரான டொமினிக் டு வில்ப்பனை அப்பதவியில் இருத்தினார்; தன்னுடைய UMP கட்சியில் இருக்கும் கடுமையான எதிர்ப்பாளரும், ''பிரான்சின் தாட்சரிசத்திற்கு'' வாதிடுபவருமான, தலைவர் நிக்கோலா சார்கோசியின் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்திற்குள் நடக்கும் பதுங்குகுழிப் போர் தீவிரமாகும் என்பதுடன் தவிர்க்கமுடியாமல் மக்களிடையே இதன் செல்வாக்கின்மையும் வளர்ச்சியடையும்.

ஆனால், இந்த கருத்தெடுப்பில் மிகப் பெரிய இழப்பு பெற்றது சிராக்கோ அல்லது UMP-யோ அல்ல, இப்பிரச்சினையில் மிகவும் பிளவுற்றிருந்த சோசலிஸ்ட் கட்சிதான் பெரும் இழப்பை கண்டுள்ளது. அதிகாரபூர்வமாக கட்சி, "வேண்டும்" வாக்கிற்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் "வேண்டாம்" முகாமிற்கு முக்கிய ஆதரவாளர்களாக இருந்தனர். கட்சி உறுப்பினர்களிடையே பிளவு இன்னும் ஆழ்ந்து காணப்பட்டது, பெரும்பாலானவர்கள் அரசியலமைப்பிற்கு மிகவும் தீர்க்கமாக எதிர்ப்பைக் காட்டினர்-----60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களித்திருந்தனர். கட்சி பிளவுறுதல் என்பது நிச்சயமாக நடக்கக் கூடியதுதான்.

லியோனல் ஜொஸ்பனின் அரசியல் ஏற்றத்திற்கு காரணமாக இருந்த François Hollande இன் தலைமையின்கீழ் இப்பொழுதுள்ள தலைமைக்குழு, ஆதரவற்ற அரசியலமைப்பிற்கு கடுமையாக வாதிட்டதின் மூலம் தன்னை இழிவுபடுத்திக் கொண்டுள்ளது. ஜொஸ்பன் உட்பட, அரசியலமைப்பிற்கு ஆதரவு தேடுவதற்காக, தன்னுடைய மூன்று ஆண்டுகள் மெளனத்தையும் கலைத்திருந்து தன்னுடைய "இடதுசாரி" சோசலிஸ்ட் என்ற புகழிற்கு முடிவை இறுதியாகக் கண்டார்.

ஆனால் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் அரசியலமைப்பின் எதிர்ப்பாளர்கள், முந்தைய சோசலிஸ்ட் அரசாங்கங்களுடைய வலதுசாரி அரசியலுடன் தெளிவாக தொடர்பு கொண்டவர்கள் தங்களை நம்பிக்கைக்கு உகந்த மாற்றீடு எனக் காட்டிக் கொள்ளுவதிலும் வெற்றி பெறவில்லை. இதேதான், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், ஜொஸ்பன் அமைச்சரவையில் விளையாட்டுத் துறை மந்திரியாகவும் இருந்த, Marie-George Buffet க்கும் பொருந்தும். மேலும் "இடதுசாரி" சோசலிஸ்டுகளும் தங்களுக்குள்ளேயே பெரும் பிளவைக் கொண்டுள்ளனர்.

சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சியின் சர்வதேசத் தன்மை இப்பொழுது ஜேர்மனி மற்றும் ஸ்பெயினில் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகள்----ஜேர்மனிய, ஸ்பெயின் அரசாங்கங்களின் தலைவர்கள் ஹெகார்ட் ஷ்ரோடர், ஜோஸ் லூயிஸ் சப்பத்தெரோ உட்பட -- அரசியலமைப்பிற்காக பிரான்சில் பங்கு பெற்றதில் இருந்து நன்கு புலனாகிறது. ஜேர்மனியில் SPD (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி), மாநில, உள்ளாட்சி தேர்தல்களில் பதினோராவது முறையாக தொடர்ந்து தோல்வியடைந்ததை அடுத்து விரைவில் தேசிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் நெருக்கடி, அசாதாரணமான சூழ்நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது. பாராளுமன்ற ஜனநாயகங்களில் அரசியல் நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு பதிலாக எதிர்க்கட்சியை பதவியில் இருத்துவதின் மூலம் மரபுரீதியாக தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் இங்கு இருக்கும் நிலையைக் காணும்போது, ஆளும் கூட்டணிக் கட்சிகளும் அதிகாரபூர்வ இடது எதிர்ப்புக்களும் இழிவிற்கும், நிராகரிப்பிற்கும் உட்பட்டு, வாக்களர்களிடம் தோல்வியுற்று நிற்கின்றன. எனவே அரசியல் நெருக்கடி தவிர்க்கமுடியாமல் ஆழ்ந்த தன்மை அடையும் என்றும் பெருகிய முறையில் கெடுதலான வடிவமைப்புக்களை பெறக் கூடும் என்று கூறவியலும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் செயலிழந்த நிலை

அரசியலமைப்பு தடுமாற்றத்திற்கு உட்பட்டமை கடந்த 15 ஆண்டுகளாக பிரான்ஸ் மேற்கொண்டு வந்துள்ள மூலோபாயத்திற்குக் கடும் அடியை கொடுத்துள்ளது.

ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமூகத்தை 1950-ல் இருந்து Jean Monnet, Maurice Schuman இருவரும் முதலில் ஸ்தாபித்ததிலிருந்தே, பிரான்சும் ஜேர்மனியும் ஐரோப்பாவை பொருளாதார முறையில் ஒன்றிணைக்கும் முயற்சியில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. இப்பொழுது செயல்படாமல் இருக்கும் அரசியலமைப்பு ஒப்பந்தம் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான Valéry Giscard d'Estaing-னால் அவர் ஐரோப்பிய அரசியலமைப்பு மன்றத்தின் தலைவராக இருக்கும்போது இயற்றப்பட்டதாகும். ஐரோப்பிய ஐக்கியத்திற்கு உச்ச கட்ட வெற்றிக் கணமாக இது கருதப்பட்டது; கண்டத்தின் பொருளாதார உறவுகளின் வழிவகைகளில் கண்ட வெற்றிக்கு அரசியலில் இணையாக இது போற்றிவைக்கப்பட்டிருந்தது. ஐரோப்பாவும்---- அதனால் பிரான்சும்----அரசியலமைப்பின் மூலம் உலக அரங்கில் தன்னுடைய இடத்தைக் கொண்டு முக்கிய பங்கைப் பெற்று, அமெரிக்காவை சம அந்தஸ்த்தில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றுவிட்டதாகவும் கருதப்பட்டது.

அத்தகைய திட்டங்கள் இப்பொழுது குளிர்சாதன பெட்டியில் போடப்பட்டு ஒருவேளை பின்னடைவு ஏற்படவும் கூடும். வாக்கெடுப்பிற்கு சற்று முன்னர் தற்போதைய ஐரோப்பிய சபையின் தலைவரான, Jean-Claude Jucker (Luxemburg), ஒருவேளை "வேண்டாம்" வாக்கு வெற்றிபெற்றுவிட்டால் அது "பிரான்சிற்கு, சிராக்கிற்கு மற்றும் உலகம் முழுவதிற்குமே ஒரு பேரழிவை கொடுக்கும்" என்று விவரித்திருந்தார்.

இப்பொழுது அவர் ஒரு தைரியமான தோற்றத்தைக் காட்ட முயன்றுள்ளார். "ஐரோப்பா தன் வழியே செல்லும்; அதன் அமைப்புக்கள் தொடர்ந்து பணியாற்றும். இப்பொழுது ஏற்பட்டுள்ள கஷ்டங்களை கண்டு விழிப்புணர்வு அடைவோம், ஆனால் ஐரோப்பா முன்னேறுவதற்கு ஒரு வழியைக் காண முடியும் என்று நம்புகிறோம்" என்று ஜங்கர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் José Manuel Barroso மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர் Josep Borrell ஆகியோர் பிரெஞ்சு வாக்கெடுப்பு முடிவிற்கு பின் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

ஐரோப்பாவை முன்னேற்றுவிக்க ஒரு வழிவகையை காண்பது கடினமே. ஹாலந்தில் இன்று அரசியலமைப்பு கருத்தெடுப்பில் அது நிராகரிக்கப்படுவது உறுதியேயாகும், அனேகமாக பிரிட்டனின் பிரதம மந்திரியான பிளேயர் திட்டமிடப்பட்டுள்ள கருத்தெடுப்பை நடத்தக் கூட மாட்டார் எனலாம். அடுத்த செப்டம்பர் மாதத்தின் மூலம் தேசிய தேர்தல்கள் ஏற்படுத்தக் கூடிய மாறுதல்கள், ஜேர்மனியில் அதிகார மாற்றத்திற்கு வகை செய்யக்கூடியவை, பாரிசுக்கும் பேர்லினுக்கும் இடையே இருக்கும் உறவுகளை குலைக்குமோ என்ற அச்சத்தையும் கொடுத்துள்ளன; இந்த இரண்டு நாடுகளும்தான் இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு சக்தி வாய்ந்த இயக்கு கருவிகளாகும். அதிபர் பதவிக்கான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் வேட்பாளரான ஆங்கேலா மெர்கல் பலமுறையும் ஷ்ரோடரையும், சிராக்கையும் வாஷிங்டனுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்காக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவிலும் அரசியல், பொருளாதார நெருக்கடி பெருகி வருகிறது. ஈராக்கின் ஆக்கிரமிப்பு என்ற நிலை தவிர்க்கமுடியாத ஒரு பேரழிவாக வளர்ந்து கொண்டிருக்கிறது; உள்நாட்டுக் கடனும், வணிகப் பற்றாக்குறையும் கட்டுக்கு மீறிய வகையில் திருகுச்சுருள்போல் உயர்ந்து வருகின்றன. தன்னுடைய சிக்கல்களை தீர்ப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தவிர்க்க முடியாமல் ஒருதலைப்பட்ச கொள்கையை செயல்படுத்த முற்பட்டு, ஐரோப்பிய போட்டியாளர்களின் செலவில் இன்னும் கூடுதலான இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ளக் கூடும்.

ஒரு புறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலிழந்த நிலை, மறுபுறத்தில் அமெரிக்காவில் இருந்து பெருகி வரும் அழுத்தமும், ஐரோப்பா தனியே செல்லலாம் என்ற போக்கை வெளிநாட்டுக் கொள்கையிலும், இராணுவ திட்டத்திலும் பெருக்கும் எனலாம். ஏற்கனவே பரந்த முறையில் விவாதிக்கப்பட்டுள்ள ஒரு விருப்பம், ஒரு ஜேர்மனிய பிரெஞ்சுத் தலைமையிலான முக்கிய குழு தன்னை அமெரிக்க சார்புடைய பிரிட்டிஷ், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் செயலிழக்கப்பண்ணும் செல்வாக்கில் இருந்து விடுவித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறது.

இங்குதான் அரசியலமைப்பின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே உள்ள படை அணிவகுப்பு ஒன்றோடொன்று கரைந்து நிற்கிறது. இந்தத் திசையில் மிகவும் ஆக்கிரோசமான அழைப்பு, அரசியலமைப்பின் எதிர்ப்பாளரான அற்றாக்கின் பிரெஞ்சுப் பிரிவின் தலைவர் Jacques Nikonoff இடம் இருந்து வந்துள்ளது. ஜெனரல் சார்ல்ஸ் டு கோலின் பெரும் இசைவினை பெற்றிருக்கக் கூடிய வகையில் உள்ள Le Monde-க்கு எழுதிய கட்டுரை ஒன்றில், நிக்கனோவ், "அரசியலமைப்பின் அரக்கத்தனமான நிறுவன அமைப்புக்கள் பிரெஞ்சு-ஜேர்மனிய இயக்க வகைகளை நெரித்துவிட இலக்கைக் கொண்டுள்ளதாக" விமர்சித்துள்ளார்.

அரசியலின் நய உரைகளை ஒருபுறும் ஒதுக்கிவைத்துவிட்டால், பிரான்சின் பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு அமைப்பின் தலைவர் பிரிட்டன் மீது வெளிப்படையான தாக்குதலை, ஐரோப்பிய ஒன்றியத்தில் "நெருக்கடி இடத்தில் உட்கார்ந்திருப்பதற்காக" நடத்தியுள்ளது. "மூன்று பழைய பாசிஸ்டு சர்வாதிகாரங்கள் (ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் கிரேக்கம்) ஆகியவற்றை, "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெரிதும் கடமைப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஐரோப்பிய நிதியைப் பெற்று வந்தாலும்", "ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் வளர்ச்சித் தேவைகளுக்கு பணம் கொடுக்கும் கருவியாக காண்கின்றனவே ஒழிய உண்மையான நாடுகளின் சமூகம் எனக் காணவில்லை" என்று வன்மையாகச் சாடியுள்ளார். இறுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள முன்னாள் வார்சோ ஒப்பந்த நாடுகள், கூடுதலான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலாக அமெரிக்க சார்புடையதாக இருப்பதையும் சாடியுள்ளார். "ஈராக் போர் அவற்றிற்கு ஐரோப்பாவுடன் ஈடுபாடு பற்றி நிரூபிக்க ஒரு வாய்ப்பை கொடுத்த போதிலும், அவை தவறான முகாமிற்குத்தான் செல்ல விரும்பின."

"ஜேர்மனிய-பிரெஞ்சு கூட்டிற்கும் Benelux நாடுகளுக்கும்" நிக்கோனப்பின் கட்டுரை கிட்டத்தட்ட கவிதைப் பாராட்டையே கொடுத்துள்ளது: "இங்குதான் ஒன்றியத்தின் மோட்டார், இயக்கு சக்தியைக் காணமுடியும்: இந்த இயக்கு சக்தி அரசியலமைப்பின் சேற்று சகதியில் உழன்று கொண்டிருக்கும் தன்மையை மீட்கும் சக்தி உள்ளது.... பேரார்வம் உடைய அரசியல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒருவித குறிப்பிட்ட வகையிலான சக்தி தேவை. ஒன்றியம் இத்தகைய சக்தியை கொண்டிருக்கவில்லை."

சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி பிரிவைச் சேர்ந்த Laurent Fabius, அரசியலமைப்பிற்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டிலும் இதேபோன்ற வாதத்தைத்தான் முன்வைத்துள்ளார். பிரான்சின் நலன்களை காத்திடல் வேண்டும் என்ற நிலைக்கு வரும்போது, அத்தகைய அரசியல் அணுகுமுறை Jean-Pierre Chevenement இன் குடிமக்கள் இயக்கம், கோலிசவாதிகளைவிட கூடுதலான கோலிச முறையை கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றிடையே ஆதரவை கொள்ளும்.

அரசியல் பணிகள்

அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளமை பல முக்கியமான அரசியல் வினாக்களையும் எழுப்பியுள்ளது; அவை தீர்க்கப்படவில்லை. ஆளும் வட்டம் இத்தகைய தோல்வியை ஒரு போராட்டம் இல்லாமல் ஏற்றுவிடாது. உலகப் பொருளாதாரத்தின் அழுத்தம் மற்றும் அமெரிக்காவை பெருகிய முறையில் எதிர்கொள்ளவேண்டிய நிலை இரண்டும் இவற்றை தொழிலாள வர்க்கத்தின்மீது புதிய தாக்குதல்களை தொடர உந்ததுலை கொடுக்கின்றன.

வாக்காளர்களின் முடிவை புரிந்துகொள்ளுவதாக சிராக் பாசாங்குத்தனமாகவேனும் கூறியுள்ளபோது, ஆளும் கட்சிகளின் மற்ற பிரதிநிதிகள் அரசியலமைப்பிற்கு தங்கள் ஆதரவை திமிர்ப்போக்குடன் இன்னும் கூறுகின்றனர். தாராளவாத UDF இன் தலைவரான François Bayrou, தான் அரசியலமைப்பிற்கு ஆதரவாக இருந்ததற்காக பெருமைப்படுவதாக அறிவித்துள்ளார். உடனடியான, அடிப்படை கொள்கை மாற்றங்களையும் அவர் கோரியுள்ளார்.

UMP இன் தலைவரான நிக்கோலா சார்க்கோசியும், கருத்தெடுப்பின் முடிவு நாட்டில் அடிப்படை "சீர்திருத்தம்" செயலாற்றப்படவேண்டும் என்பதற்கான உத்தரவு என்றுதான் விளக்கம் கொடுத்துள்ளார். முடிவுகள் வந்த பின்னர் இவருடைய முதல் அறிக்கை, பிரெஞ்சு அரசாங்கத்திற்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்பாக இருந்தது. நெருக்கடி ஆழ்ந்து போனால், ஆட்சி செலுத்த முடியாது ஜனாதிபதியின் ராஜிநாமா கூடக் கோரப்படும் என்பதை மறுப்பதற்கில்லை, சிராக்கின் ஏற்கப்பட்ட வாரிசுதான் சார்க்கோசி ஆவார்.

ஸ்தாபன கட்சிகளால் இன்னும் அனுபவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான ஆதாயம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நோக்குநிலை அல்லது சுயாதீனமான கட்சி இல்லை என்பதேயாகும். சோசலிஸ்ட் கட்சி மற்றும் Ligue Communiste Révolutionnaire, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் "தீவிர இடது" பிரிவுகள் என்று அழைக்கப்படும் பிரிவுகளின் முக்கிய பங்கே இத்திசையில் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துவதுதான். கீழிருந்து அழுத்தம் வந்தால் ஆளும் வட்டங்கள் அடிப்படையில் வேறு கொள்கையை ஏற்க நேரிடக் கட்டாயப்படுத்தப்படும் என்றும் மற்றும் இந்தவகையில் அவர்கள் முதலாளித்துவத்தின் "இடதாக" இன்னும் இருப்பதாக போலித் தோற்றத்தை பரப்பி வருகின்றனர்.

LCR கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்படிக்கையை வளர்த்துக் கொள்ள இன்னும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது; தன்னுடைய பங்கிற்கு கம்யூனிஸ்ட் கட்சி சோசலிஸ்ட் கட்சியின் இடது பிரிவுடன் கூட்டைக் காண விரும்புகிறது; அதுவோ தன் பங்கிற்கு கட்சியின் வலதுசாரி சார்பை ஆதரவுடன் நோக்குவதோடு Laurent Fabius-க்கும் ஆதரவை கொடுக்கிறது. Fabius, Henri Emannuelli (SP) அல்லது Marie George Buffet (CP), ஆகியவர்கள் அரசியல் செல்வைக்கை பெருக்கிக் கொண்டால், அவர்களுடைய நிலைநோக்கு பற்றிச் சந்தேகம் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் பிரெஞ்சு அரசையும், முதலாளித்துவ ஒழுங்கையும் பாதுகாப்பவர்கள் ஆவர்.

இதே போன்ற இடது ஒலிகளை 1970-களில் எழுப்பி பின்னர் 1982-ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டுகாலத்தின் பின்னர், வேகமாக வலதிற்கு பாய்ந்த François Mitterrand (French Socialist Party) ஆட்சியில் இருந்த காலம்தான் நினைவிற்கு வருகிறது. அந்நேரத்தில் அவருடைய பிரதம மந்திரிகளில் ஒருவராக Fabius இருந்தார், அவர் இப்பொழுது அரசியலமைப்பின் இடது எதிர்ப்பாளர்களின் தயவை நாடுகிறார். லியோனல் ஜொஸ்பன் தன்னுடைய "இடது" தோற்றத்தை நயப்படுத்தி வைத்தார், ஆனால் பிரெஞ்சு அரசாங்கத்தின் தலைவர் என்று மாறிய பின்னர், சாதாரண முதலாளித்துவ அரசியல்வாதிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டார்.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளும் சமூக நலன்களும், முதலாளித்துவ சொத்துடமை உறவுகளுக்கு சவால் விடும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான் பாதுகாக்கப்பட முடியும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற அமைப்புத்தான் கண்டத்தில் பிளவு போட்டி நாடுகள் என்று இருப்பதைக் கடக்க முடியும் என்பதோடு ஐரோப்பாவின் மகத்தான செல்வம், உற்பத்தி சக்திகள் ஆகியவற்றை சமுதாயம் முழுவதிற்குமான வகையில் பயன்படுவதற்கும் வகைசெய்ய முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved