:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Afghan president feigns outrage over latest
US torture revelations
அமெரிக்க சித்திரவதை அண்மையில் வெளியானது தொடர்பாக தமக்கு தெரியாதென்று ஆப்கானிஸ்தான்
ஜனாதிபதி நடிக்கிறார்
By Peter Symonds
24 May 2005
Back to screen
version
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாய் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற
நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ விசாரணை அதிகாரிகள் கைதிகளை திட்டமிட்ட சித்திரவதைக்கு உள்ளாக்கி
வந்ததற்கான விளக்கத்தை, சென்ற வெள்ளிக்கிழமையன்று நியூயோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள்ளது. 2002
டிசம்பரில் காவலில் ''இயற்கையான காரணங்களால்'' இரண்டு பேர் இறந்தனர் என்று அமெரிக்கா அந்த நேரத்தில்
கூறியபடி நடைபெறவில்லை என்றும், தொடர்ச்சியான தாக்குதல்களாலும் உடலியல் ரீதியாக முறைகேடாக நடத்தப்பட்டதாலும்
இது நடந்தது என்றும் அந்தக் கட்டுரை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அம்பலத்திற்கு வந்ததும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளை
மேலும் தூண்டிவிடும் என்று கவலையடைந்த கர்ஸாய் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் எதிர்க்கட்சிகள்
மீது கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். அந்த தகவல் குறித்து தான் ''முற்றிலும் அதிர்ச்சியடைந்ததாக'' அவர்
கூறினார். மற்றும் குற்றம்செய்தவர்கள் மீது ''மிக மிகக் கடுமையான நடவடிக்கையை'' எடுக்க வேண்டும் என்று வாஷிங்டனை
கேட்டுக்கொண்டார். அனைத்து ஆப்கானிஸ்தான் கைதிகளையும் காபூலின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென்றும்,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மீது அதிக கட்டுப்பாடு வேண்டும் என்றும், அமெரிக்க ஜனாதிபதி
ஜோர்ஜ் புஷ்ஷிடம் தான் வலியுறுத்தி கேட்கப்போவதாக கர்ஸாய் அறிவித்தார்.
''ஆக்பானிஸ்தானுக்குள் எந்த நடவடிக்கைகளும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல்
நடைபெறக்கூடாது'' என்று கர்ஸாய் கூறினார். ''ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு தெரியாமல் இனி எங்கள் மக்களின்
எவரது வீட்டிற்கும் செல்லக்கூடாது. ஒரு வீட்டில் இருக்கும் சந்தேகத்திற்குரிய எந்த நபரை அவர்கள் விரும்பினாலும்,
எங்களுக்கு அதை தெரிவிக்கவேண்டும் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதற்கான ஏற்பாட்டைச் செய்யும்'' என்று அவர்
மேலும் கூறினார்.
கர்ஸாய்யின் இந்தக் கூற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க இராணுவ
நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டுள்ள விரோதப்போக்கு பரந்த ரீதியாக உள்ளதால், குறிப்பாக நாட்டின் தெற்கு
மற்றும் கிழக்குப் பகுதியில் பெருபான்மையினாராக உள்ள பட்டாணியரிடையே ஏற்பட்டுள்ளதை, மற்றும் அமெரிக்கப்
படைகளுக்கு ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு நிலவுவதை நசுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை
சமாதானப்படுத்தும் நோக்கில் இருக்கின்றது. கிராமங்கள் தாக்கப்படுகின்றன அல்லது அதிரடி சோதனைகள், வீடுகளில்
திடீர் சோதனைகளை நடத்தி தாக்குவது மற்றும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவிதமான
வரைமுறையுமில்லாமல் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் குற்றச்சாட்டு எதுவும் அல்லது விசாரணையில்லாமல் சிறையில்
வைக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
குவாண்டாநாமோ வளைகுடா
கைதிகள் முகாமில் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் குரானை
இழிவுபடுத்துகிற வகையில் நடந்துகொண்டதாக மே 9 நியூஸ் வீக் வார இதழில் ஒரு சிறிய கட்டுரை
வெளிவந்ததைத் தொடர்ந்து ஜலாலாபாத், காபூல் மற்றும் இதர ஆப்கான் நகரங்களில் அமெரிக்காவிற்கு எதிரான
ஆவேச கண்டனப் பேரணிகள் வெடித்துச் சிதறின. கண்டனப் பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் அமெரிக்க தேசியக்
கொடியை எரித்து, ''அமெரிக்காவிற்கு சாவு'' ''கர்ஸாய்க்கு சாவு'' என்று முழக்கமிட்டனர். குவாண்டாநாமோ
வளைகுடாவில் உள்ள கைதிகளை திரும்ப அனுப்ப வேண்டுமென்று கோரினர், மற்றும் தங்களது நாட்டில் நிரந்தர அமெரிக்க
தளங்களை ஸ்தாபிப்பதை ஆதரிக்கும் கர்சாயின் முடிவை கண்டித்தனர். அந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு ஆப்கான்
போலீஸார் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்று தள்ளினர்.
கர்சாய் இந்தக் கண்டனங்கள் அரசிற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களது வேலை என்று
தள்ளுபடி செய்தாலும், அவரது ஆட்சி சாதாரண ஆப்கான் மக்களால் துச்சமாக மதிக்கப்படுகிறது என்பது அவருக்கு மிக
நன்றாகவே தெரியும். போக்ஸ் நியூசிற்கு (Fox News)
அவர் தந்த கருத்துகளில், ஆப்கானிஸ்தானில் சுதந்திரப்போக்கும்,
சுய-நம்பிக்கையும் வளர்ந்து கொண்டிருப்பதாக வலியுறுத்திக் கூறினார். ''எந்த ஆப்கான் பிரஜையும் பொம்மையல்ல
என்பது உங்களுக்குத் தெரியும்'' என்று அவர் ஈனத் தொனியில் அறிவித்தார். ஆனால், கர்ஸாய் துல்லியமாக
அமெரிக்காவின் பொம்மைதான்.
அவர் வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டவர் மற்றும் நிதிரீதியாகவும், அரசியல்ரீதியாகவும்,
இராணுவ அடிப்படையிலும், முற்றிலும் வாஷிங்டனையே சார்ந்திருக்கின்றார்.
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் ''பங்குதாரர்கள்'' என்ற அனைத்து பேச்சுக்களுக்கும்
அப்பால் அமெரிக்காவில் அவர் காலடி எடுத்து வைத்ததும் வாஷிங்டனுக்கு கர்சாய் கீழ்படிந்து நடப்பவர் என்பது
தெளிவாக வெளிப்பட்டது. கர்சாயின் கண்டனங்களும் சித்திரவதை தொடர்பான ஆத்திர நடிப்புக்களும் போய்விட்டன.
ஆப்கான் கைதிகள் அமெரிக்காவினால் விடுதலை செய்யப்படுவார்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளை
மேற்பார்வையிடுவதில் காபூலுக்கு ஒரு பெரிய பங்களிக்கப்படும் என்ற எந்த ஆலோசனையையும் புஷ் தள்ளுபடி செய்தார்.
என்றாலும், அவர்களது கூட்டு பத்திரிகையாளர் மாநாடு நேற்று நடைபெற்றபோது, விமர்சனம் பற்றிய ஒரு குறிப்பு கூட
இல்லை. இரண்டு கைதிகள் மரணம் ''சோகமானது'' என்று கர்ஸாய் சாதாரணமாக வர்ணித்தார். மற்றும் தனிப்பட்ட
படையினர்கள் மீது அதற்காக பழிபோட்டார். இதன்பின்பு, நீண்டகாலம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா
தங்கியிருப்பதற்காக வழி செய்யும் ஒரு ''மூலோபாய பங்குதார'' ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். மற்றும்
அமெரிக்கப் படைகள் ''சுதந்திர நடவடிக்கையை'' ஆப்கானில் தொடர்ந்து எடுப்பதையும் ஏற்றுக்கொண்டார்.
அது என்ன குறிக்கிறது என்பதை வலியுறுத்திக் காட்டுகிற வகையில் நியூ யோர்க் டைம்ஸ்
கட்டுரை விவரங்களை வெளியிட்டது. இந்தப் பத்திரிகை, அமெரிக்க இராணுவ விசாரணை அதிகாரிகள் தொகுத்த
2000 பக்கங்களைக் கொண்ட ஒரு ரகசிய கோப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டுரை தீட்டியுள்ளது. இராணுவ அறிக்கை
இரண்டு மரணங்களை ஆராயும் குறிப்பிட்ட நோக்கத்தால் ஏற்படுகின்ற அரசியல் தாக்கத்தை மட்டுபடுத்துவது குறித்து கவலைப்படுவது
தெளிவாகத் தெரிந்தது. என்றாலும், அமெரிக்க இராணுவம் காபூலுக்கு வடக்கேயுள்ள பாக்ராம் (Bagram)
விமானத் தளத்திலுள்ள அதன் சிறைச்சாலையில் திட்டமிட்ட உடலியல், உளவியல்
சித்திரவதைகளை செய்து வருகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கே கூட கவனமாக அந்தக் கட்டுரையை முடிக்க
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது:
''பாக்ராம் கோப்பில் போதுமான அளவிற்கு கடுமையான நடவடிக்கை பற்றிய சாட்சியமும் அடங்கியிருக்கிறது. சில
விசாரணை அதிகாரிகள் வழக்கமாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர் மற்றும் விலங்கிடப்பட்ட
கைதிகளை காவலர்கள் தட்டிகேட்பார் இன்றி தாக்க முடியும் என்ற நிலையில் முக்கியமான அல்லது தொந்தரவு
கொடுக்கக்கூடியவர்கள் என்று கருதப்படும் கைதிகள் கைவிலங்கிடப்பட்டு உச்சியில் அல்லது கதவுகளில்
தொங்கவிடப்பட்டனர். சில காலங்களில் நீண்ட நேரத்திற்கு இவ்வாறு வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையை
அண்மையில் இராணுவ நீதிபதிகள் கிரிமினல் தாக்குதல் என்று வகைப்படுத்தியுள்ளனர்'' என்று இப்பத்திரிகை முடித்துள்ளது.
இரண்டு கொலைகள்
30 வயதுடைய முல்லா ஹபீபுல்லா மற்றும் 22 வயதுடைய விவசாயியும் பகுதி நேர டாக்ஸி
ஓட்டுனருமான திலாவர் ஆகிய இருவரது மரணம், அமெரிக்க விசாரணை அதிகாரிகள் கையில் நேரடியாக அவர்கள்
நடத்தப்பட்டதன் விளைவுதான்.
ஒரு ஆப்கான் யுத்த பிரபுவினால் 2002 நவம்பர் 28 ல் ஹபீபுல்லா பிடிக்கப்பட்டு,
CIA உளவாளிகள்
பாக்ராமில் கைதிகளை சேர்க்கும் காவலரனில் (Bagram
Collection Point) இரண்டு நாட்களுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டார்.
ஹபீபுல்லா ஒரு முன்னாள் தாலிபான் தளபதியின் ஒரு சகோதரர் என்று கருதப்பட்டார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக, ஹபீபுல்லா மீது அவதூறுகள் கூறப்பட்டன. தாக்குதல்கள்
மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் நடந்தன. அவருடைய இறுமாப்பு என்று கூறப்படுவதை ஒழிக்கவும், கீழ்படிய
மறுப்பதையும், ஒத்துழைக்க மறுத்ததற்காகவும் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். நியூயோர்க் டைம்ஸ் அவர்
நடத்தப்பட்ட விதம் குறித்து ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் ஒரு பயங்கரமான முறையில் விவரித்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு,
தலையில் சுமை ஏற்றப்பட்டு, கையில் விலங்கிட்டு அறையின் கம்பி உச்சியில் அவரைக் கட்டினார்கள். இரண்டாவது நாளில்
அவர் இருமலுடன் நெஞ்சுவலிப்பதாகக் கூறினார். அவரது காலில் திரும்பத்திரும்ப அடித்ததால் விசாரணை அறைக்கு
நொண்டிக்கொண்டு வந்தார். அவருக்கு மருத்துவ உதவி தருவதற்கு பதிலாக, விசாரணை செய்தவர்கள் சிரித்தனர் மற்றும்
அவரை கேலி செய்தனர்.
டிசம்பர் 3 லும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தன. ஹபீபுல்லா ஒரு தனிமைச் சிறைக்கு
திரும்ப கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன மற்றும் அவரது இடுப்பைச் சுற்றி ஒரு
சங்கிலி கட்டப்பட்டது. அவர் முன்னோக்கி சரிவதை காவலர்கள் பார்த்தார்கள். அவரது உடலை சங்கிலிகள்
தாங்கிக்கொண்டன மற்றும் அவரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. அவரது தலையில் வைக்கப்பட்டிருந்த சுமை
இறக்கப்பட்டபோது தன் மீது ஹபீபுல்லா காறித் துப்பியதாக ஒரு காவலர் கூறினார். அது மேலும் அவர்மீது
தாக்குவதற்கான சாக்குப்போக்காக இருந்தது. இருபது நிமிடங்களுக்கு பின்னர் ஹபீபுல்லா அவரது அறையில் இறந்து
கிடந்தார்.
''ஹபீபுல்லாவின் பிரேதப் பரிசோதனை டிசம்பர் 8 ல் பூர்த்தி செய்யப்பட்டது. அதில்
அவரது மார்பிலும், கைகளிலும், தலையிலும், கீறல்கள் இருப்பது தெரியவந்தது. அவருடைய முழங்கால் தொடை பகுதியில்
ஆழமான காய வீக்கப் பகுதிகள் காணப்பட்டன. அவரது இடது கணுக்காலில் ஒரு காலணியின் அடிப்பகுதி சுவடு
காணப்பட்டது. அவரது கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் உருவான ஒரு ரத்தக்கட்டியினால் அவர்
இறந்தார். அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தம் கட்டியாகிவிட்டதால் அவரது நுரையீரல் பகுதியில் ரத்த ஓட்டம்
தடுக்கப்பட்டது'' என்று டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 5 ல், திலாவார் பாக்ராமில் ஒப்படைக்கப்பட்டார். ஒரு அமெரிக்க இராணுவத்
தளத்தில் நடைபெற்ற ஒரு தாக்குதலில் சம்மந்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடன் அவரது
டாக்ஸியிலிருந்த மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டனர். அவர் குள்ளமான மனிதர் மற்றும் அவரை அவரது சகோதரர்
ஒரு ''வெட்க குணம்'' கொண்டவர் என்று வர்ணித்தார். அவர் ''ஒத்துழைக்க மறுக்கிறார்'' என்பதற்காக
தனிமைப்படுத்தப்பட்டார். ஏனென்றால் அவர் உதைக்கப்படும்போதும், தாக்கப்படும்போதும் கூச்சலிட்டார். டிசம்பர் 8
ல் நடைபெற்ற ஒரு விசாரணை குறித்து ஒரு மொழிபெயர்ப்பாளரான அஹமத்சாய் விளக்கும்போது ''முதல் 10
நிமிடங்களில் அவர்கள் அவரை கேள்விகள் கேட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்குப்பின்னர் அவரைப் பிடித்துத்
தள்ளுவதும், தூக்கி வீசுவதும், காலால் உதைப்பதும், அவரை நோக்கி கூச்சலிடுவதுமாக அவர்கள் இருந்தார்களே ஒழிய,
விசாரணை எதுவும் நடைபெறவில்லை'' என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் 10 ல் நடைபெற்ற இறுதி விசாரணையின்போது திலாவார் மிகவும் குழம்பிப்
போய், திக்குத் திசையின்றி காணப்பட்டார். அவரை சித்திரவதை செய்தவர்கள் கட்டளையிட்ட ''அழுத்தமான
நிலைகளில்'' அமர அவரால் இயலவில்லை. அப்படியிருந்தும் அவர் மேலும் மோசமாக தாக்கப்பட்டார். மற்றும்
அமெரிக்காவிலுள்ள ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கு ''மற்ற மனிதர்களால் ஒரு பெண்ணைப் போல்
நடத்தப்படுவார்'' என்று இழிவுபடுத்தும் வகையில் அவருக்கு அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. அவர், தனது அறைக்கு
கொண்டு செல்லப்பட்டார் மற்றும் மீண்டும் ஒரு முறை அவர் தலைக்கு மேல் கட்டப்பட்டார். அடுத்த நாள் காலை அவர்
இறந்துவிட்டார்.
அவரது பிரேத விசாரணை அறிக்கையில் சில வகை ரத்தக்குழாய் நோய் என்று
கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இறுதியாக ஹபீபுல்லா வழக்கை போன்று திலாவரின் "உடலின் கீழ் பகுதிகளில்
பலாத்காரத்தால் ஏற்பட்ட கடுமையான காயங்களினால்" அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று முடிவு கூறப்பட்டது.
பிரேத விசாரணை நடத்திய ஒருவரான லெப்டினட் கேர்னல் எலிசபெத் ரெளஸ் பின்னர் சாட்சியமளிக்கும்போது,
திலாவரின் கால்கள் "அடிப்படையிலேயே மிகவும் வீங்கியிருந்தன. ஒரு தனிமனிதன் மீது ஒரு பஸ் ஏறினால் ஏற்படுவது
போன்ற காயங்களை நான் இதேபோன்று பார்த்துள்ளேன்'' என்று அவர் கூறினார்.
இறுதியாக நடைபெற்ற விசாரணையை நேரில் பார்த்த அமெரிக்க இராணுவ சிப்பாய்
ஒருவர் டைம்ஸிற்கு பேட்டியளிக்கும்போது, ''எங்களில் மிகப்பெரும்பாலோர் இந்தக் கைதி அப்பாவி என்பதை
ஏற்றுக்கொண்டோம்'' என்று கூறினார். திலாவருடன் பயனம் செய்த மூன்று பயணிகளும் குவாண்டாநாமோ வளைகுடாவிற்கு
அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் அமெரிக்கப் படைகளுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக செயல்படவில்லை என்ற
அறிவிப்பு கடிதத்துடன் 2004 மார்ச்சில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நான்கு பேரையும் ஆரம்பத்தில் கைது செய்த
உள்ளூர் குடிப்படை தளபதி, அமெரிக்க தளத்தின் மீது தாக்குதலை நடத்துவதில் சம்மந்தப்பட்டிருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டிருந்த
அவர், அந்தப் பழியை இவர்கள் மீது திசை திருப்புவதற்காக அவர்களைக் கைது செய்தார். அதன்பின்பு பிப்ரவரியில்
அந்தத் தளபதி கைது செய்யப்பட்டார்.
அதிகாரபூர்வமாக மூடிமறைப்பு
புஷ் நிர்வகம் கர்சாய் ஒத்துழைப்போடு, இந்த மரணங்கள் ஒரு சில தனி மனிதர்கள்
புரிந்த குற்றங்கள் என்று தள்ளுபடி செய்துவிட முயலுகிறது. வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன், ஆப்கானிஸ்தான் மற்றும்
ஈராக்கில் நடைபெற்ற சித்திரவதைகளில் சம்மந்தப்பட்டிருந்ததை மூடிமறைப்பதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள
அப்பட்டமான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இந்த மரணங்கள் தொடர்பாக பதிலளித்த அமெரிக்க இராணுவம், அந்த இரண்டு பேருக்கும்
இயன்றவரை எல்லா மருத்துவ உதவிகளும் தரப்பட்டன மற்றும் ''இயற்கையான காரணங்களால்'' மடிந்துவிட்டார்கள்
என்று கூறியது. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ லெப்டினட் ஜெனரல் டானியல் மக்நீல் (Daniel
McNeill) 2003 பிப்ரவரி 7 ல் கூட அந்த இரண்டு பேரில் ஒருவர்கூட
காவலில் காயமடைந்ததாக சமிக்கை இல்லை என்று கூறினார். இந்த மரணங்கள் நடைபெற்று ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு
பின்னர் பிரேத விசாரணையில் அவை ''இரண்டும் கொலைகள்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த மரணங்கள் மூடிமறைக்கப்படவிருக்கின்றன என்பதை கோடிட்டுக்காட்டும் வகையில்
எல்லா சமிக்கைகளும் அமைந்திருக்கின்றன. இராணுவ புலனாய்வாளர்கள் அந்த வழக்குகள் மீது எந்த கிரிமினல்
குற்றச்சாட்டுக்களையும், தாக்கல் செய்ய வேண்டாம் என்று பரிந்துரை செய்தனர். கைதிகள் காயமடைந்ததற்கு
திட்டவட்டமாக யார் பொறுப்பு என்பதை முடிவு செய்ய இயலவில்லை என்று இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பாக்ராம்
இராணுவ வக்கீல்களோடு சேர்ந்து குறிப்பிட்டனர். 2003 மார்ச்சில் பிரேத விசாரணை அறிக்கைகள்
பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர்தான் இராணுவ கிரிமினல் புலனாய்வு தலைமை தனது போக்கை மாற்றிக்கொண்டு
விசாரணையை நீடித்தது.
இதற்குப் பின்னரும் கூட, விசாரணையில் குறைந்தபட்ச அளவிற்கே முடிவுகள் ஏற்பட்டன.
சென்ற அக்டோபரில் இராணுவ கிரிமினல் புலன் விசாரணைத் தலைமை, 27 அதிகாரிகள் மற்றும் படையினர்கள் மீது கடமை
தவறியது முதல், திலாவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று குற்றம்சாட்டலாம் என முடிவு செய்தது. ஹபீபுல்லாவின்
மரணத்திற்கு பதினைந்து பேர் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டனர். ஆனால், இன்றுவரை ஏழு பேர் மீதே குற்றம்சாட்டப்பட்டது.
---அவர்களில் நான்குபேர் மீது இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் குற்றம்சாட்டப்பட்டது--- ஆனால், இவர்களில் எவர்மீதும்
குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
ஈராக்கின் அபுகிரைப் சிறைச்சாலை கைதிகளை அமெரிக்கா சித்திரவதை செய்த வழக்கைப்
போன்று இராணுவம் சில பலிக்கடாக்களை தேடிக்கொண்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தாங்கள் அப்பாவிகள்
என்றும், ஏற்றுக்கொள்ளப்பட்ட புலன் விசாரணை முறைகளை பின்பற்றியதாகவும் கூறினர். குற்றம்சாட்டப்பட்ட ஒரு இராணுவ
சிப்பாயினது வக்கீலான ஜோன் கலிகான் டைம்ஸிற்கு பேட்டியளித்தபோது, ''அந்த நேரத்தில், பாக்ராம் இராணுவ சிறையில்
நடைமுறையில் இருந்த முறையைத் தான் எனது கட்சிக்காரர் பின்பற்றினார்'' என்று குறிப்பிட்டார்.
2003 ல் சில பாக்ராம் விசாரணை அதிகாரிகள், அவர்களது அதிகாரி காப்டன் கரோல்
வூட் என்பவருடன் ஈராக்கிற்கு மாற்றப்பட்டனர். மற்றும் அவர்கள் அபுகிரைப் சிறைச்சாலையில் கைதிகளுக்கு பொறுப்பேற்றனர்.
அமெரிக்காவிற்கு எதிரான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த சூழ்நிலையில், ஈராக் கைதிகளிடமிருந்து தகவலை
வரவழைப்பதற்காக இந்த அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொள்வதில் பென்டகன் அக்கரையுடன் செயல்பட்டது என்பது தெளிவாகத்
தெரிகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு விசாரணையில், இரண்டு சிறைச்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்ட விசாரணை
முறைகள் ''ஒரே மாதிரியாக இருந்தன'' என்று முடிவு கூறியிருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.
இராணுவத்தைப் போன்றே, நியூ யோர்க் டைம்சும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற
சித்திரவதை தொடர்பாக கடைசியாக கிடைத்துள்ள சான்றையும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. டைம்ஸ், இளம்
படையினர்களின் அனுபவமின்மையினாலும், மோசமான பயிற்சியினாலும் இது நடந்தது என்றும், ''பாக்ராமில் இத்தகைய
முறைகளை பயன்படுத்தியதில் மூத்த அதிகாரிகளின் பொறுப்பு இராணுவ கிரிமினல் அறிக்கையில் தெளிவாக இல்லை'' என்றும்
புத்திசாலித்தனமாக கூறுகிறது. ஆனால், இதில் மிக அடிப்படையான ஆரம்பப் புள்ளிகள் ஆராயப்படவில்லை. தலைமை
இராணுவ அதிகாரிகள் இந்த சாவுகள் பற்றி ஏன் பொய் சொல்ல வேண்டும்? விசாரணை முடிவுகள் ஏன் பகிரங்கமாக
அறிவிக்கப்படவில்லை? ஏன் இரண்டு மரணங்கள் பற்றி மட்டுமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது? ஏன் மற்ற
சித்திரவதை மற்றும் காவல் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை?
இதற்கு தெளிவான விடை என்னவென்றால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நடைபெற்ற
சித்திரவதைகளுக்கு புஷ் நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் தான் நேரடியாக பொறுப்பு என்பதாகும். கர்சாயை
பொறுத்தவரை, அவரது எள்ளி நகையாடத்தக்க நாடகம், அவர் அமெரிக்காவின் ஒரு கைப் பொம்மை என்பதை
அம்பலப்படுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவந்த பிரேத விசாரணை அறிக்கை, அவை கொலை என்று
அம்பலப்படுத்திய பின்னர், அவர் மிக விரைவாக வேகமாக ''அதிர்ச்சியடைந்ததாக'' அறிவிக்கிறார். அவர் ''மிக
மிகக் கடுமையான நடவடிக்கை கோருகிறார்''. அதற்குப்பின்னர் தனது ஆட்சேபனைகளை நிறுத்திக்கொள்கிறார்----
பின்பு ஆப்கானிஸ்தானில் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராணுவத்திற்கு ''சுதந்திரமான
செயலை'' அனுமதிக்கிறார். |