:
ஆசியா
:
இலங்கை
On-the-spot report
Tsunami victims struggling to survive in
eastern Sri Lanka
நேரடி அறிக்கை
கிழக்கு இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் உயிர்வாழப் போராடுகின்றனர்
By M. Aravindan and Sarath Kumara
23 July 2005
Back to screen
version
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழுவொன்று அண்மையில் கிழக்கு இலங்கையின்
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன் டிசம்பர் 26 கரையோரப் பிரதேசத்தின் பெரும் பகுதியை சீரழித்த
சுனாமியிலிருந்து உயிர் தப்பியவர்களுடன் உரையாடியது. உள்ளூர் அலுவலர்களின்படி அந்த மாவட்டத்தில் ஏறத்தாள
25,000 பேர் கொல்லப்பட்டும் மேலும் 166,000 பேர் இருப்பிடம் இழந்தும் உள்ளனர். ஆறு மாதங்கள் கடந்தும்
பாதிக்கப்பட்டவர்களில் 40,000க்கும் அதிகமானோர் இன்னமும் சிறியளவிலான அல்லது எதுவித அரசாங்க நிதியுதவியும்
இன்றி வசதிகளற்ற தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்சமயம் அநேகமாக சகல அவசரகால அகதி முகாம்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
3,450 பேர்கள் குடியிருக்கும் ஐந்து அகதி முகாம்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மிகப்
பெரும்பாலானவர்கள் --37,321 பேர்-- 100 தற்காலிக இருப்பிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் பெயர்
மற்றும் இருப்பிடத்திலான மாற்றங்கள் வாழ்க்கை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தரவில்லை. அநேக
அகதிகள் கட்டுப்பாடுகளுக்குள் பிடிபட்டுள்ளார்கள். அவர்கள் முன்னர் வாழ்ந்த கடற்கரை பிரதேசத்தில் 200 மீற்றர்களுக்கு
உட்பட்ட பகுதியில் மீண்டும் வீடுகள் கட்டப்படுவதை அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் தடை செய்துள்ளது. அதே
சமயம், உத்தியோகபூர்வ மீள் குடியிருப்பு மற்றும் மீள் கட்டுமானத் திட்டங்கள் எதுவும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
அக்கரைப்பற்று வை.எம்.சீ.ஏ மற்றும் மெதடிஸ்த தேவாலயத்திலுமுள்ள அகதிகள் யாவரும்
மீனவர்களாவர். இக்குடும்பங்கள் சின்ன முகத்துவாரம் கிரமாத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளன. வை.எம்.சீ.ஏ பிரதான
மண்டபம் மூன்றுக்கு மூன்று மீற்றரளவில் செலோபேன் துணிகளை கொண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளியில்
முரட்டுத்துணிகளாலான ஒரு சில கூடாரங்கள் உள்ளன. எல்லா வசதிகளும் பழைய முறையிலானவையே. உதாரணமாக,
தண்ணீர் ஒரு தற்காலிக பிளாஸ்டிக் தாங்கியிலிருந்தே பெறப்படுகிறது. எனினும் 37 குடும்பங்கள் அந்த முகாங்களில் வசிக்கின்றனர்.
மெதடிஸ்த தேவாலயத்திலும் இந்த நிலமையே காணப்படுகிறது. மரப்பலகைகளாலும்
தகரங்களாலும் கட்டப்பட்ட சிறு குடிசைகளில் குடும்பங்கள் வாழ்கின்றன. அறைகள் மூன்றுக்கு ஐந்து அடி அளவில் சற்று
பெரிதாக இருந்தாலும் கூட வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. தற்போதைய வரட்சியான
காலநிலையில் கட்டிடங்கள் தாங்கமுடியாதளவு உஷ்ணமாக உள்ளன. 74 குடும்பங்களுக்கு இங்கு ஒரே ஒரு தண்ணீர்
தாங்கியே உள்ளது. உள்ளூர் கிணறு துர்நாற்றம் வீசிய போதிலும், கழுவவும் குளிக்கவும் அதையே பயன்படுத்துவதை தவிர
வேறு மாற்றீடு கிடையாது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அநேக மீனவர்கள் தமது தொழிலுக்கு மீண்டும் திரும்பமுடியாத நிலையில் உள்ளனர்.
தங்குமிடம் கடலுக்கு அண்மையில் இல்லாதததோடு அவர்களின் படகுகள் அருகிலுள்ள கடலேரியில் பயன்படுத்த
பொருத்தமற்றவையாக உள்ளன. ஒரு சிலரிடம் வலைகள் இருப்பினும் பெரும்பாலானவர்கள் தினக் கூலிகளாக வேலை
செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் முயற்சிக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நடுத்தர வயது மீனவரான ஏ. தேவநாதன் இங்ஙனம் விளக்கினார்: "எம்மால்
இங்கிருந்து மீன்பிடிக்க போக முடியாது. கடல் வெகு தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நாங்கள் எப்படி இங்கிருந்து
படகுகளை கொண்டு செல்வது? நாங்கள் வாகனங்களில் படகுகளை கொண்டு சென்றாலும் மீன்பிடித்த பின் என்ன செய்வது?
முன்னர் நாங்கள் கடலுக்கு அருகாமையில் வாழ்ந்தோம். அப்போது படகுகளை பழுதுபார்க்கவும் அவற்றை பாதுகாக்கவும்
முடிந்தது. இப்போது ஒருவரும் கரையோரத்தில் வாழ்வதில்லை. நாங்கள் அங்கு இல்லாத போது எங்களது படகுகளை
பார்த்துக்கொள்வது யார்?"
அவரது மனைவி பிரேமாவதி தனது நான்கு பிள்ளைகளில் இருவரை சுனாமிக்கு
பறிகொடுத்தவர். "இது நரகத்தில் வாழ்வதை போன்றது. ஒரு நாளைக்கு ஒருவேளை உணவுண்டு எமது சொந்த வீட்டில்
வாழ்வது இதிலும் பார்க்க மேலானது. அரசாங்கம் தகுதியான இடத்தில் எமக்கு ஒரு துண்டு காணி கொடுத்தால் ஒரு
குடிசையாவது கட்டிக்கொண்டு ஜீவிக்கலாம்," என அவர் குறிப்பிட்டார்.
வை.எம்.சீ.ஏ முகாமில் சுமார் 65 மீனவர்கள் இருந்தாலும் பத்துபேருக்கு மட்டுமே
படகுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கே. விஜயராஜா தெரிவித்தார். "எங்களுக்கு கரை மீன்பிடி வலைகள்
கொடுத்துள்ளார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்ல முடியாது" என அவர் கூறினார். ஒரு
விதவையான சந்திரமலர், தான் உள்ளூர் சந்தையில் மீன் வியாபாரியாக இருந்ததாகவும் தற்போது எல்லாவற்றையும்
இழந்துவிட்டதாகவும் கூறினார். பணம் இல்லாமல் அவரது வியாபாரத்தை ஆரம்பிக்க முடியாதுள்ளதாகவும் எதிர்காலத்தில்
என்ன செய்வதென்றே புரியாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு இளம் வீடுகட்டும் தொழிலாளியான தனபால சிங்கம்: "அலுவலர்கள் எங்களை
கவடபட்டிக்கு போகச் சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. அது அக்கரைப்பற்று நகரிலிருந்து ஏழு
கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. அங்கு ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் அல்லது தண்ணீர் வசதிகள் கிடையாது. அது
வெறும் காடு. பிரதேச செயலாளர் எங்களை அங்கு போகச் சொன்னார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்,"
என்றார்.
அம்மாவட்டத்தில் நடக்கும் கொலைகள் பற்றி குறிப்பிடுகையில்: "எங்களுக்கு யுத்தம்
வேண்டாம். எல்லா சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியப்பட வேண்டும். நாங்கள் யுத்தத்தால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போதைய யுத்த நிறுத்தத்துக்கு முன்பு எம்மால் பஸ்சில் பிரயாணம் செய்த முடியாதிருந்தது.
நாங்கள் இறங்கி எமது அடையாள அட்டைகளை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. சில வேளைகளில்
மக்கள் கைதுசெய்யப்பட்டனர். சில வேளைகளில் அவர்கள் கொல்லப்பட்டனர். இந்த முகாமிலும் கூட போரினால் தமது
கணவன்களை இழந்த 15 விதவைகள் உள்ளனர்," என
அவர் மேலும் தெரிவித்தார்.
இராமகிருஷ்னா கல்லூரி மாணவியான புஷ்பநந்தினி: "அடுத்த ஆண்டு நான் பல்கலைக்கழக
புகுமுகப் பரீட்சை எழுதவுள்ளேன். ஆனால் படிக்க ஒரு இடமும் இல்லை. மேசையோ அல்லது வேறு ஏதாவது தளபாடங்களோ
இல்லாததோடு ஒரே சத்தமாகவும் உள்ளது. படிப்பை முடித்த பின்னரும் அநேக இளைர்களுக்கு வேலை கிடையாது. சிலர்
தொண்டர் ஆசிரியராக வேலை பார்க்கின்றனர். அவர்கள் பல அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்வதுடன் சிறு
கொடுப்பணவையே பெறுகின்றனர்," என விளக்கினார்.
இராசையா தங்கராணி குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு மாதாந்த உதவித் தொகையாக
ரூபா 5,000 (50 அமெரிக்க டொலர்கள்) தருவதாக உறுதியளித்த போதும், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை
கொடுத்தனர். சாப்பாட்டுக்கு மட்டும் எங்களுக்கு 500 ரூபா தேவைப்படுகிறது. எனது கணவருக்கு ஆஸ்துமா நோய்
உள்ளது. ஒவ்வொரு வாரமும் மருந்துக்காக நாங்கள் 200 ரூபா செலவு செய்கிறோம். முகாமில் விநியோகிக்கப்படும்
அரிசி நல்லதல்ல. அதை சாப்பிட முடியாது. அரசாங்கத்தின் உணவு முத்திரையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு
வாரத்துக்கு ரூபா 200 காசாகவும், ரூபா 75 மதிப்புள்ள உலர் உணவு பொருட்களும் கிடைக்கும். பிரதானமாக
அரசி, பருப்பு மற்றும் சீனி சில வாரங்களுக்கு அதுவும் கிடைக்காது."
"நான் ஒரு பிள்ளையை சுனாமியில் இழந்துவிட்டேன். ஒரு மகனும் ஒரு மகளும் பாடசாலை
செல்கிறார்கள். ஒருவர் 6ம் வகுப்பிலும் மற்றவர் ஏழாம் வகுப்பிலும் படிக்கின்றனர். அவர்களிடம் சைக்கிள் இல்லாததால்
அதிக தூரம் நடந்துதான் போக வேண்டும். இன்று எனது மகள் நடந்து போக முடியாதென என்னுடன்
சண்டையிட்டுக்கொண்டு பாடசாலை போகவில்லை."
பத்தூர் நகரில் 18 குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வசிக்கின்றனர். தங்களது முகாமில்
உள்ள நிலைமைகள் வேறு முகாம்களைப் பார்க்கிலும் வேறுபட்டதல்ல என என்.டி பசீலா எங்களிடம் கூறினார். குடிநீர்
மோசமாக இருப்பதால் பிள்ளைகள் காய்ச்சல் மற்றும் வயிற்று நோய்க்கு ஆளாகின்றனர் என அவர் தெரிவித்தார்.
"இந்த நரக வாழ்க்கையின் காரணமாக நாங்கள் முன்னர் வாழ்ந்த இடத்திற்கே போய்விடலாமென நினைக்கின்றோம்.
அது கடலுக்கு அருகிலானாலும் பரவாயில்லை. எங்களை கடல் கொண்டு சென்றாலும் அது இந்த மோசமான நிலைமையில்
வாழ்வதை விட நல்லதாகவே இருக்கும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் 38 குடும்பங்கள் மீரா நகர் பீ தற்காலிக குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
ஜமால்டீன் நஜீமா பின்வருமாறு விளக்கினார்: "எனது கணவர் அவருக்கு சொந்தமான த்ரீ வீலரில் (முச்சக்கர வண்டி)
வேலை செய்துகொண்டிருந்தார். ஆனால் அதை சுனாமியில் இழந்துவிட்டோம். தற்போது எங்களுக்கு ஒரு வருமானமும்
இல்லை. வெய்யில் காலமாக இருப்பதால் நாங்கள் பகல் நேரங்களில் நிழலுக்காக முகாமுக்கு வெளியே இருந்து
சாப்பாட்டுக்கும் தூங்கவும் மட்டும் உள்ளே வருவோம். இரவில் பிள்ளைகள் உள்ளே படுத்து தூங்குவார்கள். அறைகள்
போதாததால் நானும் என் கணவரும் திறந்த வெளியில் வெளியே படுத்துக்கொள்வோம். மழை பெய்தால்தான் பெரும்
பிரச்சினை."
தடை செய்யப்பட்டுள்ள பிரதேசத்தில் வாழ்க்கை
அகதிமுகாம்களிலுள்ள மோசமான நிலைமைகளின் காரணமாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட
சிலர் அவர்களது சேதமான வீடுகள் அரசாங்கத்தின் 200 மீற்றர் தடை வலயத்தில் இருந்தாலும் அங்கு திரும்பிச்
சென்றுள்ளனர்.
கடற்கரையிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் வாழும் மீனவரான மொகமட் இஸ்மாயில்:
"சுனாமி தாக்கி இரு நாட்கள் கழித்து நான் எனது வீட்டுக்கு வந்தேன். எனக்கு வேறு வேலை எதுவும் செய்ய
தெரியாததால் இத்தொழிலுக்கே மீண்டும் வரத் தீர்மானித்தேன். எங்களுடன் வாழ்ந்த மூத்த மகள் திரும்பி வர
பயப்படுகிறார். என்னிடம் படகோ வலைகளோ கிடையாது. அதனால் நான் மற்றவர்களுக்காக வலை தயார்
செய்கிறேன். ஒரு வலையை செய்து முடிக்க நான்கு நாட்கள் எடுக்கும். எனக்கு ரூபா 1000 கிடைக்கும். அரசாங்கம்
இந்த வீட்டை திருத்த எங்களுக்கு பணம் கொடுக்க மறுக்கின்றது."
எம்.பீ. பாத்திமாவும் அவரது குடும்பமும் மிகவும் மோசமாக சேதமடைந்த வீட்டில் மிக
ஆபத்தான நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர். சுனாமியின் விளைவால் மனநோய்க்குள்ளாகியுள்ள அவரது கணவரால் வேலை
செய்ய முடியாதுள்ளது. அவரது மூன்று பிள்ளைகளில் இருவர் பாடசாலை செல்லும் வயதில் இருப்பினும் அவர்களை
பாடசாலைக்கு அனுப்ப அவரிடம் பணமில்லை.
மீனவரான அப்துல் காதர்: "எனது கிராமமான மீரா நகர் சுனாமியால்
அழிந்துபோய்விட்டது. நாம் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான போரினாலும்
பாதிக்கப்பட்டுள்ளோம். விடுதலைப் புலிகள் 1985ல் புட்டம்பையிலுள்ள எங்களது வீடுகளை விட்டு வெளியேறச்
சொன்னார்கள். அதனால் 150 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வந்தோம். இப்போது அரசாங்கம் எங்களை
நுரைச்சோலைக்கு போகச் சொல்கிறது. அநேகமாக இங்குள்ளவர்கள் மீனவர்கள் மற்றும் தினக் கூலிவேலை
செய்பவர்கள். அங்கு போய் (நுரைச்சோலைக்கு) அவர்கள் என்ன செய்ய முடியும்?
"அரசியல்வாதிகள் எங்களுக்கு உதவமாட்டார்கள். சுனாமி தாக்கியபோது எங்களுடைய
அமைச்சர் அப்துல்லாஹ் ஜப்பானில் இருந்தார். ஒரு கிழமை கழித்து இங்கு வந்து எங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப
வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அன்றிலிருந்து நாங்கள் அவரை காணவில்லை.
அவர் மக்காவுக்கு போய்விட்டார். மக்கள் இங்கு கஷ்டப்படும்போது மக்காவுக்கு போவது அவசர தேவையா?" என
அவர் கேட்டார். காதரும் அவரது குடும்பமும் தற்காலிக குடியிருப்புகளில் எந்தவொரு இருப்பிடத்தையும் பெறவில்லை.
எனவே அவர்கள் தமது வீட்டில் எஞ்சியுள்ள பகுதியில் வாழ்கின்றார்கள்.
நசிரா மஹ்ருப் கருத்துத் தெரிவிக்கையில்: "தடை செய்யப்பட்ட வலயத்தில் வாழும் மக்கள்
மிகவும் சிரமப்படுகிறார்கள். எங்களுக்கு வாழ ஒரு இடமும் கிடையாது. எங்களுக்காக ஒரு வீடும் கட்டப்படவில்லை.
அரசாங்கமோ அரசியல்வாதிகளோ எங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். தேர்தல் ஒன்று வந்தால் அவர்கள் எங்களை
சந்திக்க ஒழுங்கை ஒழுங்கையாக வருவார்கள். நாங்கள் மிகவும் வெறுப்டைந்துள்ளோம். அடுத்த தடவை தேர்தலில்
நாங்கள் ஒருவருக்கும் வாக்களிக்க மாட்டோம்."
பதூர் நகர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 121 உறுப்பினர்களும் சுனாமியால்
பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எம்.எல் அகமட் மொஹிதீன் எங்களிடம் கூறினார். அவர்களது படகுகள் மற்றும்
வலைகள் எல்லாம் அழிந்துவிட்டன. "நான் சகல அரசாங்க அலுவலர்களுக்கும் இது பற்றி கடிதம் எழுதினேன். ஆனால்
எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை அரசாங்கம் எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. எங்களது
முஸ்லிம் அரசியல்வாதிகளும் எமக்கென இதுவரை எதுவுமே செய்யவில்லை. சில அரச சார்பற்ற நிறுவனங்களூடாக மட்டுமே
சில மீனவர்களுக்கு படகுகள் வலைகள் கொடுக்கப்பட்டன," என அவர் தெரிவித்தார்.
மொஹிதீன், விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் ஸ்தாபிக்கவுள்ள பொதுக் கட்டமைப்பில்
பெரும் பங்குவகிக்க அனுமதிக்கக் கோரும் பல முஸ்லீம் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தார். "அரசியல்வாதிகள் இந்த ஹர்த்தாலை (கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவை)
தமது நலன்களை பாதுகாக்கவே ஏற்பாடுசெய்கின்றார்கள். மக்கள் நலனுக்காக அல்ல," என்று தெரிவித்த அவர்,
அரசாங்கமானது "ஜனநாயகம் மற்றும் சமத்துவம்" பற்றி பேசித் திரிந்தாலும் எதையும் செய்யாததையிட்டு அவர்
விமர்சித்தார். "எதைப் பெற வேண்டுமானாலும் நாங்கள் போராட வேண்டியுள்ளது. மக்கள் இன, மொழி, மத
பேதமற்று சமத்துவமான முறையில் எதையும் பெற்றுக்கொள்ள வெண்டும்," என்றார்.
பொதுக் கட்டமைப்புக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)
ஆர்ப்பாட்டங்களை பற்றி கருத்துத் தெரிவித்த மொஹிதீன்: "70 சதவீதமான சிங்களவர்கள் ஜே.வி.பி யின் பேரினவாத
பிரச்சாரத்தை எதிர்க்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஜே.வி.பி அரசாங்கத்தில் இணைந்து விவசாய அமைச்சையும்
மீன்பிடி அமைச்சையும் பெற்றுக்கொண்டது. அவர்களின் அமைச்சின் ஊடாக அடுத்த தேர்தலின் பின்னர் விவசாயிகளதும்
மீனவர்களதும் ஆதரவை பெற்று தமது சொந்த அரசாங்கத்தை அமைக்க முடியுமென அவர்கள் நினைத்தார்கள். ஆனால்
அவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்து வைக்கவில்லை. எனவே இப்போது அரசாங்கத்திலிருந்து விலகிய பின் தமது
சொந்த தோல்வி சம்பந்தமான மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பேரினவாத பிரச்சாரத்தை தூண்டி
விடுகின்றனர்," என்றார்.
மற்றுமொரு மீனவர் கூட்டுறவு சங்க அங்கத்தவரான எம்.எல். ஹரூன், தான் சேதமடைந்த
வீடுகள் மற்றும் சொந்த உடமைகள் இழப்பு போன்ற மீனவர்களின் பிரச்சினைகளை பற்றி ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க, எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட
செயலாளருக்கும் கடிதங்கள் எழுதியதாகவும், இதுவரை அவை கிடைத்ததற்கான அறிவித்தல் கடிதம் கூட
கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
தடை வலையத்தில் வசிப்பவர்களுக்கு உதவ ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை என ஹரூன்
அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினார். சுனாமியால் பாதிப்புற்றவர்களின் பிரச்சினைகளை கவனிக்குமாறு கிராம சபை
குழுவிடம் இவர் கேட்டபோது அவரை அங்கிருந்து வெளியேற சொல்லிவிட்டனர். "இப்போது அவர்கள் என்னை கூட்டங்களுக்கு
கூப்பிடுவதில்லை" என அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் அவல நிலை
காரைதீவில் இளைஞர்கள் குழுவொன்று "கலைமகள் சமூக நிலையம்" என்ற பெயரில் ஒரு
தற்காலிக சமூக அமைப்பை உருவாக்கியுள்ளனர். அது கடற்கரையோரத்திலிருந்து சுமார் 200 மீற்றர்களுக்குள் ஒரு அறை
மற்றும் ஒரு சிறு திறந்த மண்டபத்துடன் அமைந்துள்ளது. அதன் கூரை தென்னை ஓலையால் வேயப்பட்டும் தரை வெறும் மணல்
தரையாகவும் உள்ளது. பழுதடைந்த வலைகளால் வேலியமைக்கப்பட்ட ஒரு கரப்பந்தாட்ட திடல், ஒரு சில விளையாட்டுப்
பலகைகள், இரு மேசைகள் மற்றும் ஒரு சில நாற்காலிகளையும் அது கொண்டுள்ளது. தினசரி பத்திரிகைகளும் கூட அங்குண்டு.
சுனாமிக்கு முன்னர் பிரதேச சபை ஒரே ஒரு தினசரிக்கு மட்டும் சந்தா செலுத்தியுள்ளது. தற்போது இந்த நிலையத்திற்கு
நிரந்தரமான மண்டபம் கிடையாது என்ற சாட்டை கூறி எதற்கும் பணம் செலுத்த மறுக்கிறது. பழைய சனசமூக நிலையம்
அழிந்துபோய்விட்டது.
ஒரு மேற்பார்வையாளரான எஸ். சிவகாந்த் கருத்துத் தெரிவிக்கையில்: "சுனாமிக்கு
பின்னர் நாங்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்டவர்களாக உணர்கிறோம். யாரும் இங்கு திரும்பவும் வந்து வாழ
விரும்பவில்லை. இங்குள்ள எல்லா கிணறுகளும் உப்பு நீராகியுள்ளன. பிரதான நீர்வழங்கல் அமைப்பிலிருந்து தண்ணீர் குழாய்
தொடர்பை ஏற்படுத்த 2,500 ரூபா கட்ட வேண்டியுள்ளது. பணம் செலவு செய்ய முடியாதவர்களுக்கு தண்ணீர்
கிடையாது."
22 வயதான ஏ.எல். பகீரதன், தான் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் எஞ்சினியர்
படிப்பை முடிந்திருந்தாலும் இப்போது ஒரு கூலியாளாக வேலை பார்ப்பதாக கூறினார். "இந்த பிரதேசத்தில் வேலை
வாய்ப்பு என்பது பெரும் பிரச்சினைக்குரியது. இங்கு என்.ஜீ.ஓ க்களிடம் (அரச சார்பற்ற நிறுவனங்கள்) இருந்து
மட்டுமே வேலை பெற முடியும். இந்த அமைப்புக்கள் நாட்டை விட்டுப் போகும் போது இங்கு ஒரு வேலையும்
இருக்காது. நாங்கள் தெருவில் தள்ளப்படுவோம்" என்றார்.
எம். வினாயகமூர்த்தி குறிப்பிட்டதாவது: "நான் உயர்தரம் சித்தியடைந்துள்ளேன் ஆனால்
பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகவில்லை. பேரழிவு ஏற்படும்போது நான் ஒரு வெளிவாரி வர்த்தக பரீட்சைக்கு படித்துக்
கொண்டிருந்தேன். எனது புத்தகங்கள், குறிப்புகள் எல்லாம் அழிந்து விட்டதால் இப்போது நான் படிப்பதை
நிறுத்திவிட்டேன். எனது பெற்றோரையும் எனது ஒரே ஒரு சகோதரியையும் அவரது கணவரையும் சுனாமியில்
இழந்துவிட்டேன். நான் இப்போது தனியாக ஒரு தற்காலிக கூலி வேலையாளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். பல
அரச சார்பற்ற நிறுவனங்களிடம் நேர்முகப் பரீட்சைக்கு சென்றபோதிலும் எந்த தொழிலும் கிடைக்கவில்லை. இந்த
அப்புறப்படுத்தும் வேலை முடிந்த பின்னர் நான் வேலையற்றவராக நிற்பேன். நானும் இறந்துபோயிருந்தால் நல்லது என
சிலவேளைகளில் நினைத்துக்கொள்வேன்." |