World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report

Lack of aid for tsunami victims on Sri Lanka's east coast

நேரடி அறிக்கை

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பற்றாக்குறை

By M. Aravindan and Sarath Kumara
18 July 2005

Back to screen version

உலக சோசலச வலைத் தள நிருபர்கள் குழுவொன்று கிழக்கு இலங்கையில் டிசம்பர் 26 சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான அம்பாறை மாவட்டத்திற்கு அண்மையில் சென்றிருந்தது. பேரழிவு தாக்கி ஆறு மாதங்களின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் சிலரால் தங்களது வாழ்க்கையை பழைய நிலைக்கு திருப்ப முடிந்துள்ளது. ஆயினும் பெரும்பாலான ஏழைகள் அன்றாட வாழ்க்கைக்கு ஈடுகொடுப்பதற்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, மாவட்டத்தில் 3,450 பேர் ஐந்து அகதி முகாம்களில் வாழ்வதோடு 37,321 அகதிகளுக்காக 100 தற்காலிக வீட்டுத் திட்டம் இயங்கிவருகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, கிட்டத்தட்ட 80,000 பேர் அகதி முகாங்களில் வாழ்ந்துகொண்டிருந்ததுடன் சுமார் 166,000 பேர் சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்க அதிகாரிகளால் ஜனவரியில் இருந்து அகதி முகாம்களை விட்டு வெளியேறிய பத்தாயிரக் கணக்கானோர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்க முடியவில்லை. முன்நாள் அகதிகள் அவர்களுடைய உறவினர்களுடன் வசிக்கின்றார்கள் அல்லது அவர்களது வீடுகள் சேதமடைந்திருந்த போதிலும் அங்கு திரும்பியுள்ளார்கள் என அவர்கள் சாதாரணமாக குறிப்பிடுகின்றார்கள்.

மாவட்டத்தின் பிரதான நகரமான அம்பாறை நகரிலும் அதேபோல் பாடசாலைகளிலும் ஏனைய பொதுக் கட்டிடங்களிலும் மற்றும் நெருக்கமான கரையோரப் பிரதேசங்களிலும் இருந்த எல்லா அகதி முகாம்களும் காலியாக்கப்பட்டுள்ளன. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலைமைகள் உயர்த்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தற்காலிக உறைவிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதோடு கரையோரப் பிரதேசத்தில் வசதிகளின்றி பலகைகளால் அமைக்கப்பட்ட அறைகளில் வாழ்கின்றார்கள்.

இலங்கையின் தென் பகுதியைப் போலவே, பாதிக்கப்பட்டவர்கள் கணிசமான அரசாங்க உதவிகள் எதையும் பெற்றிருக்கவில்லை. அத்துடன் மீள் கட்டுமான வேலைகளும் அரிதாய் தொடங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபா 5,000 (50 அமெரிக்க டொலர்கள்) வழங்கும் அரசாங்கத்தின் வாக்குறுதி இரண்டு முறை மாத்திரமே அமுல்படுத்தப்பட்டது. நிவாரணங்களை விநியோகிப்பதற்கு பொறுப்பாளியான அரச வங்கியான மக்கள் வங்கியின் ஒரு அலுவலர், திறைசேரி இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமான நிதியை ஒதுக்கியதாக எம்மிடம் குறிப்பிட்டார்.

இதேபோல், சுனாமியால் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை மீளக் கட்டுவதற்காக தனிமனித சலுகையாக ரூபா. 250,000 (2,500 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியும் நிதி பற்றாக்குறைக்குள் மூழ்கியுள்ளது. எடுத்துக் காட்டாக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில், "முழுமையாக சேதமடைந்ததாக" மதிப்பீடு செய்யப்பட்ட 428 வீடுகளில் 110 வீடுகளுக்கு மட்டுமே ஜூலை 8 வழங்கப்பட்ட உதவிகள் கிடைத்துள்ளன.

இறுதியாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கொழும்பில் மாதக்கணக்கான அரசியல் சர்ச்சைகளுக்கு பின்னர் உதவிகள் வழங்கவும் மற்றும் மீள் கட்டுமானத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு இணங்கினார். ஜூன் 24 அன்று சுனாமிக்கு பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பு கைச்சாத்திடப்பட்ட போதிலும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி பிராந்திய செயலகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தில் பல ஊழியர்கள் தங்களது நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். "உடன்படிக்கையை கைச்சாத்திட ஆறுமாதங்கள் எடுத்தது. ஆகவே ஏதாவதொரு வகையிலான அமைப்புரீதியான கட்டமைப்பை அமைக்க இன்னும் ஆறு மாதங்கள் செல்லும்," என ஒருவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் பதட்ட நிலைமையை குறைக்க எதையும் செய்யவில்லை என குறிப்பிட்ட இன்னொருவர், "அரசாங்கம் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு அடுத்த நாளே விடுதலைப் புலிகளின் அம்பாறை பிரதேச அரசியல் தலைவர் குயிலின்பன் ஆயுதக் குழுக்களால் தாக்கப்பட்டார்," என்றார்.

முஸ்லிம்கள் மத்தியல் மனமுறிவு

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஜனத்தொகை இருப்பதோடு பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் அரசியல் ஆர்ப்பாட்டங்களின் குவிமையமாகியுள்ளது. பிரதேச செயலகங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் என இனவாத ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளும் அவ்வாறே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிராந்தியங்கள் ஒரு சிறு முஸ்லிம் அதிகாரத்துவம், நில உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர் தட்டில் இலாபமடைந்துள்ளது. மிகப் பெரும்பாலான தமிழர்களை போலவே மிகப் பெரும்பாலான முஸ்லிம்களும் ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள் அல்லது விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம்கள் உதவி பற்றாக்குறையாலும் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா) மற்றும் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஐக்கிய கூட்டமைப்பு (நூஆ-NUA) ஆகியவற்றிடமிருந்து அரசியல் ஆதரவின்மையை பற்றியும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜூலை 27 அன்று, சுனாமிக்கு பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பின் சபைகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் பற்றாக்குறைக்கு எதிராக ஒரு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த உடன்படிக்கையில் தனது கட்சி உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட வேண்டும் என கோரினார். ஆயினும் அங்கு இந்த எதிர்ப்புக்கு பெரும் ஆதரவு இருக்கவில்லை. அன்றைய தினம் காலையில் கடைகள் மூடப்பட்டிருந்தபோதும் ஆர்ப்பாட்டங்களோ, கூட்டங்களோ அல்லது ஊர்வலங்களோ இருக்கவில்லை.

உண்மையில், எதிர்பார்த்திருக்காத ஒரு பகுதியிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அது ஒடுக்குமுறை வழிமுறைகளுக்கும் இனவாத போக்குகளுக்கும் பேர்போன விசேட அதிரடிப்படை அல்லது பொலிஸ் கொமான்டோக்களின் ஆதரவாகும். விசேட அதிரடிப்படை பொலிஸார் அக்கரைப்பற்று நகருக்கு சென்று முஸ்லிம் பிரதேசங்களில் கடை உரிமையாளர்களை காலையில் கடைகளை மூடுமாறு கூறியதாக ஒரு விவசாயி எம்மிடம் தெரிவித்தார். சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை என அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சிங்கள பேரினவாத அமைப்புக்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவாக உள்ளனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிலரே ஹர்த்தாலுக்கும் அதன் குறிக்கோளுக்கும் ஆதரவளித்தனர். ஒரு அகதி முகாமில், சிலர் இந்த உடன்படிக்கை அமுல்படுத்துவதில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் பங்காற்ற வேண்டும் என எம்மிடம் கூறினர். ஏனைய இடங்களில் அனைவரும் இந்த எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சிலர் ஆத்திரத்தையும் பகைமையையும் வெளிப்படுத்தினர். அது தங்களது வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கான அவகாசங்களை கீழறுத்துவிடும் என அவர்கள் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில், கடந்த ஆறு மாதங்களாக சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையுமே செய்யவில்லை என முஸ்லிம் அரசியல்வாதிகளை விமர்சித்தனர். அல் பதுர்நகர் தற்காலிக வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் அஹமத் அப்துல்லாவின்படி, தரகுக் கூலியையும் ஏனைய நிதி ஆதாயங்களையும் பெற்றுக்கொள்வதற்காக பொதுக் கட்டமைப்புக்குள் நுழைந்துகொள்ள வேண்டிய தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. "அவர்கள் சொந்த இலாபத்திற்காக ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளனர். எங்களுக்கு 10,000 ரூபா கொடுக்கப்பட்டால் அதில் அவர்கள் 5,000 ரூபாக்களை எடுத்துக்கொள்வார்கள். எங்களுக்கு எஞ்சிய 5,000 ரூபா மட்டுமே கிடைக்கும்," என அவர் கூறினார்.

ஒரு சிறு விவசாயியான நைனார் மொஹமட் தெரிவித்ததாவது: "இந்தப் பிரதேசத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் நண்பர்களாக ஒன்றாக வாழ்கின்றார்கள். பொதுக் கட்டமைப்புக்கு எதிராக நேற்று சில முஸ்லிம் அமைப்புக்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. பெரும்பாலான மக்கள் அதற்கு ஆதரவளிக்காததோடு ஹர்த்தால் வெற்றிகரமாக அமையவில்லை. பகல் 12 மணிக்கு பின்னர் அதிகளவிலான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்ததோடு நிலைமை வழமைக்கு திரும்பியது."

கீழிருந்து தொடக்குதல்

மாவட்டத்தில் பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளின் நிலைமைகள் திகைப்பூட்டுகின்றன. பல தற்காலிக தங்குமிடங்களில் இயங்குவதுடன் மீள் கட்டுமானத்திற்கான உறுதியான திட்டம் அரசாங்கத்திடம் கிடையாது.

200 மீட்டர்களுக்குள் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கக் கூடாது என்ற எதேச்சதிகாரமான உத்தியோகபூர்வ தடை இந்த நிலையங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மீள் கட்டுமானங்கள் இங்கு தொடங்காமேலேயே உள்ளன. புதிய கட்டிடங்களுக்கான பொருத்தமான நிலங்களை தேடுவது பெற்றோர்களதும் பாடசாலை "பழைய மாணவர்களதும்" பொறுப்பாகும் என அவர்களுக்கு ஒரு உயர் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் தெரிவித்ததாக அக்கரைப்பற்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சில் திட்டமிடலுக்கான மேலதிக செயலாளர் திரு. அமரசிங்க, செயற்பாடுகள் பற்றாக்குறையாக இருப்பதை நியாயப்படுத்தினார். "கிழக்கில் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கூறுவது சரியானது அல்ல. பாடசாலைகளை மீள் நிர்மாணம் செய்ய அரசாங்கம் ஒரு தொகை வேலைகளை செய்துவருகிறது," என அவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அம்பாறை மாவட்ட விபரங்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது அவர் பிரகடனப்படுத்தியதாவது: "அது பற்றி என்னால் திட்டவட்டமாக கூற முடியாது. அக்கரைப்பற்றிலும், கல்முனையிலும் நிலப் பிரச்சினை உள்ளது." அவர் எங்களுடனான உரையாடலை சுருக்கமாக முடித்துக்கொண்டு மற்ற அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதிகாரத்துவ இரக்கமின்மையும் அலட்சியமும் உள்ளூர் மக்களை அவர்களது சொந்த ஆரம்பிப்புகளுக்கு தள்ளியுள்ளது. நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருதில் மல்ஹருஸ் ஷான்ஸ் மஹா வித்தியாலயம் உட்பட ஒரு சில இடங்களில், அரசாங்கத்திற்கு சொந்தமான பாடசாலைகள் அல்லது ஆஸ்பத்திரிகளை மீளமைப்பதில் சுயாதீனமாக உதவுகின்றனர்.

ஜூலை 2 அன்று, நாங்கள் மல்ஹருஸ் ஷான்ஸ் கல்லூரியை பார்வையிடச் சென்றபோது, சில ஆசிரியர்கள் சம்பளமின்றி மேலதிக வகுப்புக்களை நடத்திக்கொண்டிருந்தனர். மருதமுனையில் வேறு ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பாடங்களை பற்றிக்கொள்வதற்காக மாணவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார். மாணவர்கள் பாராட்டத்தக்கவர்கள். ஆனால் அரசியல்வாதிகள் மீதான அவர்களது வெறுப்பு சான்று பகர்கின்றது. "எமது பிரதிநிதிகளான பேரியல் அஷ்ரப் மற்றும் எல்.எம் அப்துல்லாவும் எதையும் செய்யவில்லை," என ஒரு மாணவன் பிரகடனம் செய்தார்.

மீள் கட்டுமான வேலைகளை மேற்கொள்வதில் விடுதலைப் புலிகளுக்கு பிரதான பாத்திரத்தை வழங்கும் பொதுக் கட்டமைப்பு கொடுக்கல் வாங்கல்களுக்கு ஜனாதிபதி குமாரதுங்க இணங்கியமைக்கு அரசாங்கம், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரத்துவத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பும் ஒரு காரணமாகும். அதை மூடிமறைப்பதற்காக, கிழக்கில் அலையெனப் பெருக்கெடுக்கும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் கரைத்துவிடுவதற்கு கொழும்புக்கு விடுதலைப் புலிகளின் உதவி தேவைப்படுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved