World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Exposure of Rove's lies throws Bush White House into crisis

ரோவின் பொய்கள் அம்பலம் புஷ்ஷின் வெள்ளை மாளிகையை
நெருக்கடியில் தள்ளுகிறது

By Patrick Martin
13 July 2005

Back to screen version

CIA வேலையாள் வலரி பிளாம் ஐ அடையாளம் காட்டிய அதிகாரிகளில் ஒருவர் புஷ்ஷிற்கு அரசியல் மூலோபாயத்தை வகுத்துத்தரும் தலைமை அதிகாரியான கார்ல் ரோவ் என்ற பரவலான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது புஷ்ஷின் வெள்ளை மாளிகையை அரசியல் நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது. பிளாம் ஐ அம்பலப்படுத்துதல் ஈராக்கில் அமெரிக்கா கடைபிடித்துவரும் கொள்கையை முக்கியமாய் விமர்சிப்பவராக ஆன, பிளாமின் கணவரான முன்னாள் தூதர், ஜோசப் வில்சனை மதிப்பிழக்கச் செய்வதற்கான "கீழ்த்தர தந்திரங்கள்" நடவடிக்கையின் ஒரு பாகமாகும்.

ரோவின் பங்களிப்பு பற்றி மிக அண்மையில் கண்டனத்திற்குரிய சான்றை நியூஸ்வீக் வார இதழ் தந்திருக்கிறது, அந்தத் தகவலை திரும்பத்திரும்ப வெள்ளை மாளிகை பேச்சாளர்களும் ரோவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே மறுத்து வந்திருக்கின்றனர். ஞாயிறு இரவு அந்த சஞ்சிகையின் வலைத் தளம் டைம் பத்திரிகை நிருபர் மாட் கூப்பர் எழுதிய மின்னஞ்சல்களின் வாசகத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் ரோவுடன் நடத்தப்பட்ட ஒரு இரகசியமான உரையாடல் குறித்து நினைவுபடுத்தியுள்ளார். அதில் ரோவ், வில்சனின் மனைவியை அவரது பெயரை பயன்படுத்தாமல் ஒரு CIA முகவாண்மை என்று அடையாளப்படுத்தியுள்ளார்.

பிளாம் பெயர் அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பாக, புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்ற சிறப்பு பிராசிகியூட்டர் பட்ரிக் பிட்ஸ்ஹெரால்டிற்கு சென்ற வாரம் டைம் பத்திரிகை தாக்கல் செய்த ஆவணங்களில் இந்த மின்னஞ்சல்களும் அடங்கியிருக்கின்றன. அதுவரை பிட்ஸ்ஹெரால்டின் கோரிக்கையை ஏற்க மறுத்துவந்த கூப்பரின் முடிவை, கீழறுக்கின்ற வகையில் அந்த சஞ்சிகை அந்த ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு முடிவு செய்தது, அது வில்சன்-பிளாம் விவகாரத்தில் தான் ஒரு கட்டுரை எழுதியதற்கு பயன்படுத்திய இரகசிய மூலாதாரத்தை அம்பலப்படுத்துவதாகும். இறுதியாக கூப்பர் ஜீலை 7-ல் சாட்சியமளிக்க சம்மதித்தார், ரோவின் வக்கீல் அவரை அழைத்து அந்த உறுதிமொழியிலிருந்து அவரை விடுவித்தார். நியூயோர்க் டைம்சின் இரண்டாவது நிருபரான ஜூடித் மில்லர், சாட்சியமளிக்க மறுத்ததில் உறுதியாக நின்றார், எனவே அதே நாளில் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கூப்பருக்கு, ரோவிற்கும் இடையே 2003 ஜீலை 11-ல் தொலைபேசி உரையாடல் இடம் பெற்றது, பிளாம் CIA-இன் ஒரு இரகசிய உளவாளி பேரழிவுகரமான ஆயுதங்களில் (WMD) சிறப்பு கவனம் செலுத்துபவர் என்று அடையாளம் காட்டும் வகையில் கட்டுரையாளர் ரொபேர்ட் நோவக் எழுதுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இடம் பெற்றது. கூப்பருக்கு இந்த தகவலை ரோவ் கட்டுக்கதையாக சரடுவிட்டது. நோவக்கின் கட்டுரையை போன்றே அமைந்திருந்தது. அது என்னவென்றால் வில்சனின் மனைவி 2002-ல் நைஜர் பயணத்திற்கு ஏற்பாடு செய்தார், அங்கு அவர் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேன் அந்த வடக்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான அளவில் யுரேனியத்தை பெறுவதற்கு முயன்று வருகிறார் என்ற கூற்றுப்பற்றி விசாரணை செய்தார்.

சதாம் ஹூசேன் ஒரு அணுகுண்டை தயாரிப்பதிலிருந்து தடுப்பதற்கு ஈராக் மீது படையெடுப்பதாக புஷ் நிர்வாகம் கூறிய பொய்க்கு மையமாக அமைந்த, ஈராக் அணுப்பொருள்களை பெறுவதற்கு ஒரு தீவிரமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்ற கூற்றாகும். 2003ல் மாநிலங்களின் அவையில் புஷ் ஆற்றிய உரையிலும், ``ஆபிரிக்க யுரேனியம்`` பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஐந்து மாதங்களுக்கு பின்னர், ஈராக்கை அமெரிக்கா வெற்றி கொண்ட பின்னர், வில்சன் நியூயோர்க் டைம்சில் ஒரு தலையங்கப்பக்க கட்டுரையை எழுதியிருந்தார், அதில் அவர் அம்பலப்படுத்தியிருந்தது என்னவென்றால் 2002-ல் CIA கேட்டுக்கொண்டதற்கு இணங்க யுரேனியம் கூற்று பற்றி விசாரித்ததாகவும் அவை மோசடியானவை என்று கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார். நைஜர் கதைக்கு ஒரு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் வெள்ளை மாளிகைக்கு ஏற்பட்டது, ஆனால் சில நாட்களுக்குள் வில்சனை இழிவுபடுத்தும் ஒரு முயற்சியாக அது தகவல்களை கசியவிட்டது.

நோவக் எழுதிய கட்டுரை மற்றும் கூப்பருக்கு ரோவ் தெரிவித்த கருத்துகளின் உட்குறிப்பு என்னவென்றால் தலைமை CIA அதிகாரிகளின் ஒரு பணிக்காக வில்சன் நைஜர் செல்லவில்லை, ஆனால் ஒரு இணையான தனிப்பட்ட பயணமாக, அவரது மனைவி பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் என்பதாகும். இந்த விவரத்தில் பன்முகப்பொய்கள் அடங்கியிருக்கின்றன--- வலரி பிளாம் ஒரு CIA ஆய்வாளர் அத்தகையதொரு பயணத்தை ஏற்பாடு செய்வதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை மற்றும் உலகிலேயே பரம ஏழை நாடுகளில் ஒன்றான நைஜருக்கு செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பயணம் அது, அதில் எந்த பயனும் இல்லை. மேலும், வில்சனது விசாரணை முடிவுகள் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட் வரையிலுள்ள சங்கிலி தொடர் போன்ற அதிகாரிகளுக்கு அறிக்கையாக தரப்பட்டு இறுதியாக வெள்ளை மாளிகையை அடைந்தது.

அரசியல் விமர்சனத்திற்கு புஷ் நிர்வாகம் தருகின்ற ஜனநாயக-விரோதமான முரட்டுத்தனமான பதிலை நியூஸ்வீக் செய்தி உறுதிப்படுத்துகிறது என்பதுதான் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. வில்சன் அரசுத்துறையிலிருந்து மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இரண்டு தசாப்தங்களாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர் அவரது விமர்சனத்திற்கு பதிலாக வெள்ளை மாளிகை அவர் ஊழல் செய்தவர் என்று அவரை களங்கப்படுத்த முயன்றது மற்றும் வாழ்க்கைக்கு ஆபத்து வைக்கின்ற வகையிலும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துகின்ற வகையிலும் முயன்றது.

ரோவ் அம்பலப்படுத்தியது புஷ், ரோவ் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஸ்காட் மெக்கல்லன் மற்றும் இதர வெள்ளை மாளிகை உதவியாளர்கள் அனைவரும் திட்டமிட்டு பொய் சொல்லியதையும் அம்பலப்படுத்தியது. திங்களன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிருபர்கள் பேட்டியில் மெக்கல்லனை குறிவைத்து சூடான கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன, அங்கு ஒரு நிருபரை தொடர்ந்து இன்னொரு நிருபர் அந்த பேச்சாளரின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவரது வார்த்தைகளையே சுட்டிக்காட்டி ரோவ், பிளாம் ஐ அம்பலப்படுத்தியதில் எந்தவிதமான பங்களிப்பும் செய்யவில்லை என்று கூறியதையும், அதில் சம்மந்தப்பட்ட எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க புஷ் உறுதிமொழி அளித்திருந்தது பற்றியும் நினைவுபடுத்தினர்.

பிளாம் வழக்கு தொடர்பாக எந்த கேள்விக்கும் தான் பதிலளிக்க முடியாது, ஏனெனில் அந்த கசியவிடப்பட்ட விடயத்தைப் பற்றி சிறப்பு பிராசிகியூட்டர் பிட்ஸ்ஹெரால்டு ஒரு குற்றவியியல் புலன் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மெக்கல்லன் அறிவித்தார். அப்படியிருந்தும் ஒரு 40 நிமிடம் நடைபெற்ற நிருபர்கள் மாநாட்டில் அதே விவகாரத்தில் 35 கேள்விகளை சந்தித்தார், ஏறத்தாழ இரண்டு டசின் தடவை ஒரே வார்த்தையில் ``எந்த கருத்தும் இல்லை'' என்று பதிலளித்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, இந்த வழக்கில் அவரது தரப்பை நிலை நாட்டுவதற்காக தனது சொந்த வக்கீலை வைத்திருக்கிறாரா என்பதாகும்.

ரோவ், புஷ், செனி மற்றும் இதர வெள்ளை மாளிகை தலைமை அதிகாரிகள் அனைவரும் பிட்ஸ் ஹெரால்டு ஏற்பாடு செய்த ஜீரிகளிடம் செய்தி கசியவிடப்பட்டது தொடர்பாக சாட்சியமளித்திருக்கின்றனர். புஷ் உட்பட இந்த சாட்சியத்தில் ரோவ் மற்றும் இதர தலைமை அதிகாரிகள் அனைவரும் பொய்சாட்சி சொன்னதாக அல்லது நீதி வழங்குவதற்கு இடையூறு செய்ததாக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகக்கூடும்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், குடியரசுக் கட்சியின் வலதுசாரிகள் தங்களது இணையற்ற பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துவார்கள். மொனிக்கா லெவின்ஸ்கியுடன் தனது விவகாரத்தில் சாட்சியமளிக்கும்போது பில் கிளின்டன் பொய் சொன்னார் என்பதற்காக அவரது இரத்தத்தை குடிக்க கூச்சலிட்ட அவர்கள், பின்னர் சுதந்திரமாக செயல்படும் வக்கீல் கென்னத் ஸ்டார் ஏற்பாடு செய்த ஜீரிகளிடம் வார்த்தைகளுக்கு நுட்பமான விளக்கம் தர முயன்றனர். குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்க கீழ்சபையில் பொய் சொன்னதாகவும் நீதிக்கு இடையூறு செய்ததாகவும் இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிளிண்டன் மீது பதவி நீக்க விசாரணையை நடத்தினர். இப்போது குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றத்தில் அதே அணுகுமுறையை எவரும் எதிர்பார்க்க முடியாது. ரோவ் பொய் சொல்லியதும் நீதிக்கு இடையூறு செய்ததும் ஒரு தனிப்பட்ட செக்ஸ் விவகாரமல்ல, ஆனால் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய ஒரு கடுமையான குற்றச்சாட்டு----ஒரு அரசியல் விமர்சகரை மிரட்டுவதற்கு களங்கப்படுத்துவதற்கும் மேற்கெள்ளப்பட்ட முயற்சியாகும்.

இதை சொல்லிய பின்னர், பிளாம் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பு கோழைத்தனமானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். சமீபத்திய ரோவினுடைய நியூஸ்வீக் அறிக்கையை கையில் எடுத்துக்கொண்ட முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களை CIA-வையும் தேசிய பாதுகாப்பையும் காத்து நிற்பவர்கள் என்று சித்தரித்துக் கொண்டனர், அதே நேரத்தில் CIA இரகசிய முகவாண்மை அடையாளம் காட்டியதன் மூலம் ரோவ் ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' கீழறுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டினர்.

பிளாம் அம்பலப்படுத்தப்பட்டது ஈராக் போரை எதிர்ப்பவர்களை ஒடுக்குகின்ற ஒரு முயற்சி, அமெரிக்க-ஈராக் உறவுகளில் கணிசமான உள்விவகாரங்களை அறிந்த பிரபலமான ஒரு விமர்சகரை மிரட்டுகின்ற செயல் என்பதை எந்த முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரரும் சுட்டிக்காட்டவில்லை (1991 வளைகுடா போருக்கு முன்னர் ஈராக்கில் பணியாற்றிய கடைசி அமெரிக்கத்தூதர் வில்சன்)

ரோவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலைத் தளம் மூலம் புஷ்ஷை கேட்டுக் கொள்ளும் ஒரு மனுவில் கையெழுத்திடுமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தும் மின்னஞ்சலை தோற்கடிக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் கெர்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச்செய்வதற்கு நடத்தப்பட்ட ஒரு நிருபர்கள் மாநாட்டில் கெர்ரிக்கு பக்கத்தில் செனட்டர் ஹில்லாரி கிளிண்டன் அமர்ந்திருந்தார்.

``பிளாம் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட எவரும் இனி இந்த நிர்வாகத்தில் இருக்க முடியாது என்று வெள்ளை மாளிகை உறுதிமொழியை நிறைவேற்றுவார்கள்'', இந்த உறுதிமொழியை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.'' ''இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமானால் இது அரசியலுக்கு மேலே உள்ளதாகும் மற்றும் இது நமது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்டதாகும்`` என்று செனட் ஜனநாயகக் கட்சி தலைவர் ஹாரி ரீடு கூறினார்.

நியூ ஜெர்ஸியை சேர்ந்த செனட்டர் பிராங்க் லாட்டன் பெர்க், புஷ், ரோவிற்கான பாதுகாப்பு அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியுள்ளார். அண்மையில் நியூயோர்க் நகரில் ரோவ் ஆற்றிய உரையொன்றில் விஷத்தனமாக மெக்கார்த்தே பாணியில் பேசியிருப்பதைப் பற்றி குறிப்பிட்ட லாட்டன்பர்க் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, ``கால் ரோவ், தாராளவாதிகள் 9/11 விளைவுகளை புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் அவர்தான் ஒரு CIA இரகசிய உளவாளியை அம்பலப்படுத்தியவர்`` என்று கூறினார்.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர் லூயிஸ் ஸ்லோட்டர் ``இங்கே சந்தேகத்திற்குரிய பகுதி என்பது எதுவுமில்லை. எவ்வாறு அவர் அந்த வார்த்தைகளை பயன்படுத்தினார், எவ்வளவு விவரங்களை தந்தார் என்பதை பற்றி கவலைப்படாவிட்டால் கூட, அவர் CIA-வின் இரகசிய உளவாளியின் அடையாளத்தை அம்பலப்படுத்தியுள்ளார். ரோவ் செய்தது வெறுக்கத்தக்க ஒன்று. ஒரு CIA இரகசிய உளவாளியின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுவதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே அவரை பதவியிலிருந்து நீக்குவதுதான் சரியான தண்டனை`` என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சி தேசிய குழுவின் தலைவரான ஹோவர்ட் டீன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ``பயங்கரவாதத்தின் மீதான போரில் முன்வரிசைகளில் போர் புரிந்து வரும் ஒரு இரகசிய அதிகாரியின் பெயரை கூறியதன் மூலம் ரோவ் காட்டிக் கொடுத்துவிட்டார்..... இந்த உயர்மட்ட புஷ் ஆலோசகர் இன்னமும் வெள்ளை மாளிகையில் பணியாற்றிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இப்போது நமது தேசிய பாதுகாப்பு கொள்கையை வகுப்பதில் ஒரு கணிசமான பங்களிப்பை செய்து வருகிறார்`` என்று குறிப்பிட்டது.

கிளின்டனிலிருந்து டீன் வரை ஒட்டு மொத்த ஜனநாயகக் கட்சி ஸ்தாபனமும் ரோவையும் புஷ்ஷையும் வலது அடிப்படையில் தாக்குவதற்கு முடிவு செய்திருக்கிறதே தவிர இடதுசாரி அடிப்படையில் அல்ல- CIA-விற்கு சேதம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டுக்களில் குவிமையப்படுத்துகிறார்களே தவிர, ஈராக் போர் தொடர்பான விமர்சனத்தை ஒடுக்குவதற்கான முயற்சி என்பதில் குவிமையப்படுத்தவில்லை. 2006 நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எடுக்கின்ற அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்றதாக இந்த அணுகுமுறை அமைந்திருக்கிறது, அப்போது அவர்கள் ஈராக்கில் மிகத்தீவிரமாகவும் பயனுள்ள வகையிலும் ஈராக்கில் தலையிடவேண்டுமென்று பிரசாரம் செய்வார்களே தவிர துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப் பட வேண்டுமென்று கோரமாட்டார்கள்.

போர் எதிர்ப்பு உணர்வோடு எந்த வகையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை கைவிடுவது என்ற இந்த முடிவைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது, பிளாம் வழக்கில் பிட்ஸ்ஹெரால்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார் என்பதற்காக மத்திய மாவட்ட நீதிபதி தாமஸ் ஹோஹன் ஜூடித் மில்லரை சிறைக்கு அனுப்பியது தொடர்பாக மவுனம் சாதிப்பதாகும். அல்கொய்தா பயங்கரவாதி சர்காரியாஸ் மெளசவ்வி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் வெர்ஜினியாவிலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் மில்லர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக புஷ் நிர்வாகத்தின் பொய்களை வளர்ப்பதற்கு மில்லர் தனது சொந்த பிற்போக்குத்தனமான பங்களிப்பை செய்திருந்தாலும், அவரை சிறையில் அடைத்திருப்பது பத்திரிகை சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுவதாகும். ஆனால் ஜனநாயகக் கட்சியோ அல்லது ஊடகங்களோ அதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்க முயலவில்லை.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் வெள்ளை மாளிகை பேச்சாளர் மெக்கல்லனிடம் 40 நிமிடங்கள் வரை கேள்விகளை கேட்ட பத்திரிகையாளர்களில் ஒருவர் கூட தங்களது உடன் பணியாளர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை குறிப்பிடவில்லை. மில்லர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வெள்ளை மாளிகை என்ன கருதுகிறது என்பதைக்குறித்து எந்த நிருபரும் கேள்விகேட்கவில்லை.

அதே போன்று, பெரிய தினசரி பத்திரிகையின் தலையங்கப்பக்கங்களிலும் தொலைக்காட்சி வலைப்பின்னல்களில் விமர்சனங்களை செய்பவர்களும் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தனர். வாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை பொதுவாக திரும்பக் கூறுகின்ற ஞாயிறு தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சிகளிலும் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தனது தலையங்கத்தில் மில்லரின் நிலைப்பாட்டை ஆதரித்த நியூயோர்க் டைம்ஸ் கூட அவர் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக பிளாம் வழக்கு பற்றி திங்களன்றும் செவ்வாயன்றும் வெளியிட்ட செய்திகளில் எந்தக் குறிப்பையும் தரவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved