World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா
G8 communiqué fails to cover over conflicts between great powers G8 மாநாட்டு அறிக்கை பெரும் வல்லரசுகளுக்கிடையே உள்ள மோதல்களை மறைக்க தவறிவிட்டனBy Ann Talbot மகத்தான அளவில் செய்தி ஊடகம் பரபரப்பை ஏற்படுத்தியும்கூட, எடின்பரோவிற்கு அருகில் உள்ள கிளனெக்ளசில் நடைபெற்ற G8 மாநாடு வெளியிட்ட இறுதி அறிக்கையினால், மாநாடு முழுவதும் பெரும் வல்லரசுகளுக்கிடையேயான மோதல்களை மறைக்க முடியவில்லை என்ற சான்று நிலவியிருந்தது. இந்த அறிக்கையில் ஆபிரிக்காவிற்கு உதவி அல்லது சுற்றுச்சூழலுக்கு உதவி பற்றிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் காண்பதற்கில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளிலும்தான் தான் கணிசமான முன்னேற்றத்தை காணவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் கூறியிருந்தார். அமெரிக்கா ஈராக்மீது படையெடுத்ததை ஒட்டிய கசப்பான மோதல்களை குறைப்பதற்கு காலத்தாலும் முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய உச்சிமாநாடும் பிளவுகளை அதிகப்படுத்துவதில்தான் வெற்றியைக் கண்டிருந்தது. இதன் விளைவாக, முறையான விவாதம் என்று ஏதும் இல்லாமல், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கைதான் மாநாட்டை ஆதிக்கம் செலுத்தியது. லண்டன் மீதான குண்டுவெடிப்புக்கள் பற்றி ஐக்கியம் காட்டப்பட்டாலும், கிளனெக்ளஸ் கூட்டத்தை மோதலும் போட்டியும்தான் பண்பிட்டுக் காட்டியது. கூட்டத்தில் இருந்த பதட்டங்களின் தன்மையை ஒட்டி முதலாளித்துவ அமைப்பின் தொடர்ந்த ஸ்திரப்பாட்டை அச்சுறுத்தக் கூடும் என்றிருந்தும் கூடியிருந்த தலைவர்கள் அது பற்றி உடன்பாட்டை காணவில்லை. மாநாட்டிற்கு முன்பு, சர்வதேச உடன்பாடுகளுக்கான வங்கி, வளர்ந்து வரும் அமெரிக்க வணிகப் பற்றாக்குறை "ஒழுங்கற்ற முறையில் டாலரின் சரிவிற்கு" வழிவகுக்கலாம் என்று எச்சரித்துள்ளது. ஆனால் G8 மாநாடு இந்தப் பிரச்சினை பற்றியும் விவாதிக்கவில்லை; சீன யுவானின் குறையும் மட்டம் பற்றியும் விவாதிக்கவில்லை, யூரோவின் தொடர்ந்து உயரும் மதிப்பு பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிளேயர், நிகழ்வை தன்னுடைய சுய மிகைப்படுத்தல் பிரச்சார சதிக்கு பயன்படும் வகையில், ஆபிரிக்க பிரச்சினைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாறுதல்களுக்கு செயல்பட்டியலில் முக்கியம் கொடுத்தார். நிறைய இணை நிகழ்வுகள், அணி வகுப்புக்கள் என்று Live 8, "வறுமையை வரலாற்றுப் பொருள் ஆக்கிவிடு" பிரச்சாரத்தில் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருந்த அறக் கட்டளைகளின் கனவுகள் சிதைந்து போயின. பிளேயருக்கு விசுவாசமாக உற்சாகமூட்டும், முர்டோக்கின் சொந்த Sun செய்தித்தாள்தான் மாநாட்டை பிளேயரின் தொடர்ந்த வெற்றிகளில் ஒன்றாகக் கருதியது. இந்த நாளேட்டின் அரசியல்துறை ஆசிரியர் Trevor Kavanagh இரண்டு மாதங்களுக்கு முன் "ஒரு நொண்டி வாத்து தலைவர்" என்று பிளேயர் ஒதுக்கப்பட்டுவிட்டதாக எழுதியிருந்தார். அந்த நேரத்தில் "விமர்சிப்பவர்கள் கட்சித் தலைவர் கோர்டன் பிரெளன் பிரதமராக வருவது இன்னும் 18 மாதங்களுள் நடந்துவிடும்" என்று கூறப்பட்டது. இப்பொழுது எல்லாம் மாறிவிட்டதாக கவனா கூறுகிறார்: "நொண்டி வாத்து நடை போடும் சேவலாகி விட்டது". ''அனைத்துத் துறைகளிலும் மாற்றுவதற்கு" இந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டு அழுத்தம் கொடுக்குமாறு அவர் பிளேயருக்கு அழைப்பு விடுத்துள்ளார். "10 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன" என்ற பெரிய தலைப்பின்கீழ், ஆபிரிக்காவில் நிலைமை வியத்தகு முறையில் முன்னேறுவதற்கு உதவி பற்றிய முடிவுகள் அழுத்தம் கொடுக்கும் என்பதை Sun தன்னால் இயன்ற வகையில் பாராட்டிக் கூறியுள்ளது. "அது பிர்ஹன் வோல்டுவைப் போல் இன்னும் பத்து மில்லியன்" என்று Sun இடம் பாப் கெல்டாப் கூறினார். லண்டனில் மடோனாவுடன் Live 8 நிகழ்வு அரங்கில் தோன்றிய எத்தியோப்பிய பெண்மணியை பற்றி அவர் குறிப்பிட்டார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு எதியோப்பியாவிற்கு உதவுவதற்காக Live Aid இசை நிகழ்ச்சியில் ஒரு பட்டினி கிடக்கும் குழந்தையாக படமாக்கப்பட்டிருந்தார். கெல்டாப்பின் முயற்சிகளுக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையில் அவரை Live 8 நிகழ்ச்சிக்குப் பிரிட்டனுக்கு விமானமூலம் Sun அழைத்து வந்திருந்தது. ஆனால் உடன்பாட்டின் குறைந்த தன்மை வெளிப்பட்டதும், Live 8 இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த கெல்டாப்பும் U2 முன்னணியாளர் போனோவும் சீற்றம் நிறைந்த விமர்சனங்களின் இலக்காக தங்களைக் கண்டனர். தலைப்புச் செய்தி புள்ளிவிவர இரட்டிப்பு உதவித்தொகை பணமான 50 பில்லியன் டாலர்கள் நன்கு ஆய்ந்ததில் மிகக் குறைவாகவே தோன்றியது. அதிகமாக்கப்பட்ட உதவிப்பணம் 2010 வரை கிடைக்காது. வறுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலகத்திற்கு அழைப்பு என்ற அமைப்பின் தலைவர் குமி நாயுடு குறிப்பிட்டுள்ளது போல் 2010 வரை இரட்டிப்பான உதவிக்கு காத்திருப்பது என்பது "சுனாமி தாக்குதலுக்கான உதவிக்கு ஐந்து ஆண்டுகள் காத்திருப்பது போல் ஆகும்." அனைத்து G8 நாடுகளும் புதிய இலக்கிற்கு உதவியளிக்கும் என்ற உறுதியில்லை. ஜேர்மனியும் ஜப்பானும் தக்க உறுதிமொழிகளை இவ்வகையில் கொடுக்கவில்லை. அதிக உதவி கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ள நாடுகளிலும், இதற்கு முன்பு இத்தகைய உறுதிமொழிகள் கொடுக்கப்பட்ட போதிலும் அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. 50 பில்லியன் டாலர்கள் என்னும் தொகை எப்படிப்பார்த்தாலும், மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ள தொகையாகும். கொடுக்கப்படவேண்டிய பணம் ஏற்கனவே பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. கிளனெக்ளஸுக்கு செல்லுவதற்கு முன்பே ஆபிரிக்காவிற்கு கொடுக்கும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும் என்று ஜனாதிபதி புஷ் கூறியிருந்தார். ஆபிரிக்க சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டறிக்கை, "உச்சிமாநாடு ஏற்கனவே நிலவுகின்ற முடிவுகளான கடன் ரத்து மற்றும் உதவித் தொகை இரட்டிப்பு ஆகியவற்றை உறுதிதான் செய்துள்ளது. கடன் பொதி மொத்த தேவையில் பத்து சதவிகித நிவாரணமாகத்தான் உள்ளது மற்றும் தேவைப்படும் நாடுகளில் மூன்றில் ஒரு பகுதிக்குத்தான் அவை கிடைக்கும்." என்று தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவிற்கு கொடுக்கப்படும் உதவியில் பெரும்பகுதி, மேலை நாடு ஆலோசகர்களுக்கு செல்லுமே அன்றி ஏழைகளுக்கு அல்ல. Action Aid என்ற அறக்கட்டளையின் சமீபத்திய அறிக்கை 61 சதவிகித உதவித் தொகைகளை "மாயத்தோற்றம்" எனக் குறித்துள்ளது; இது "கூடுதலான ஊதியம் பெறும் சர்வதேச ஆலோசகர்களுக்குத் தான்'' 90 சதவீதத்திற்கு மேலானவை சில நேரம் செல்லுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. "மாயத்தோற்றம்" உதவியை கணக்கில் இருந்து எடுத்து விட்டால், பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை 0.07 சதவிகித தேசிய வருமானத்தைத்தான் உதவிக்குக் கொடுக்கின்றன. ஒரு அமெரிக்க டாலரின் உதவியில் 86 சென்ட்டுகள் ''மாயத்தோற்றத்திற்கு சென்றுவிடும்'' ஏனெனில் உதவி விதிகளின்படி அமெரிக்கப் பொருட்கள், பணிகளுக்கு அவை கொடுக்கப்பட வேண்டும். HIV-AIDS பிரச்சினையை பொறுத்தவரையில், G8 உச்சி மாநாடு, 2010-ல்தான் அனைவருக்கும் மருத்துவ வசதிக்கு ஏற்பாடு கொடுக்க முடியும் என்ற வெளிப்படையான உறுதிமொழியை கொடுத்துள்ளது. உண்மையில், அரசியல் அளவில் வலுவான விருப்பமோ, தேவையான வழிவகைகளோ இந்த உறுதிமொழியை காப்பாற்றக் கூட இல்லை. பிரச்சாரகர்கள் 18 பில்லியன் டாலர் உதவித்தொகை அடுத்த மூன்று ஆண்டுகளில் AIDS ஐ எதிர்த்து போரிடத் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளனர். அந்த அளவு பணம் கிடைத்தாலும், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் மிகப் பரந்த முறையில் அதைச் செயல்படுத்துவதற்கான மருத்துவ வசதிகள் கிடையாது. AIDS பாதிப்பிற்குட்பட்ட குடும்பங்களுக்கு தேவைப்படும் நல்ல தண்ணீர், மின்சக்திக்கு கூட வழிகிடையாது: இவை இரண்டும் நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரம், ஆரோக்கியமான உணவு என்ற இரண்டிற்கும் கட்டாயமாகும். AIDS எதிர்ப்பு தீவிரத் திட்டத்திற்கு வறுமையை எதிர்த்துப்போரிடுவதும், ஆபிரிக்காவில் சமூக உள் கட்டுமானம் முழுவதையும் முன்னேற்றுவிப்பதுமான கூட்டான முயற்சிகளினால்தான் முடியும்.HIV பரவுதலை தடுத்து அதன் பாதிப்பில் இருப்பவர்களுடைய வாழ்வை நீட்டிக்கும் வகையில் இந்த வழிவகைகள் கூட அதிக பலனை தரவில்லை. ஆணுறைகள் பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்கான பிரச்சாரங்கள் பலனை தந்துள்ளன என்றாலும், வலதுசாரி கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் அமெரிக்க நிதியங்கள் பாலியல் தொடர்பே இல்லாத திட்டங்களுக்குத்தான் பணத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. எதிர்ப்புச் சக்தியுடைய மருந்துகள் தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில்தான் AIDS பாதிப்பாளர்கள் மரணத்தை நிறுத்த உதவியுள்ளன. ஆபிரிக்காவை பொறுத்தவரையில் அவை பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய தடை அதிக விலை ஆகும், ஆனால் பெரிய மருத்துவ நிறுவனங்கள் மலிவான முறையில் அத்தகைய மருத்துகளை தயாரிப்பதை போட்டியிட்டுக் கொண்டு தடை செய்கின்றன. AIDS சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பணம் தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த மருந்துகள் வாங்குவதற்கென்றே ஒதுக்கப்படுகின்றன.தென்னாபிரிக்காவில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அரசாங்கம் தேவைப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து தடைக்குட்படுத்தி வருகிறது. தென்னாபிரிக்க ஜனாதிபதி Thabo Mbeki கிளனெக்ளஸ் கூட்டத்திற்கு வந்திருந்தார். இறுதி அறிக்கை அவருடைய அரசாங்கம் அதனுடைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. கடன் நிவாரணத்தை பொறுத்தவரையில், கிளனெக்ளஸ் கூட்டம், சர்வதேச நிதி அமைப்புகளுக்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும், மிக அதிக அளவில் கடன்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு 100 சதவிகித நிவாரணம் கிடைக்கும் என உறுதி கொடுத்துள்ளது. இது நைஜீரியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது; அது அதிக கடன்பட்டுள்ளது என்ற வகையைத்தான் சேர்ந்தது; மற்றும் தனியாக கடன் கொடுப்பவர்களிடம் பணம் வாங்கியுள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால்தான் கடன் நிவாரணம் நாடுகளுக்கு கிடைக்கும். அந்நாடுகள் குடிநீர் வழங்கல் போன்ற துறைகளை தனியார் மயமாக்க வேண்டும்; அயல்நாட்டு பொருட்கள் அந்த நாடுகளில் தடையின்றி விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். கிளனெக்ளசில் ஆபிரிக்காவிற்கு வணிகத்தில் எவ்வித சலுகைகளையும் கொடுக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் தங்கள் சந்தைகளை தடையின்றி செய்தால்தான் உதவி கிடைக்கும் என்பதோடு, அவற்றிற்கு பாதுகாப்புடன் இருக்கும் மேலைச் சந்தைகளில் நுழைவிடம் கிடையாது என்பதும் ஆகும். வெப்பநிலை மாற்றம் ஏற்கனவே ஆபிரிக்காவில் பாதிப்பை கொடுத்துள்ளது, சமீப ஆண்டுகளில் கண்டத்தின் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. "வெப்பநிலைமையில் ஆபத்து விளைவிக்க கூடிய அந்த்ரோபோஜெனிக் தலையீடு" இருக்கக் கூடும் என்பதை G8 அறிக்கை ஒப்புக் கொள்ளுகிறது. ஆனால் greeenhouse வாயுக்கள் வெளியிடுதலை தடுப்பதற்கான தீர்க்கமான முன்மொழிவுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை; பல விஞ்ஞானிகளும் இதுதான் பூகோள வெப்ப பெருக்கத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளனர். புஷ் நிர்வாகம் வாயு வெளியிடுதலை வறையறுக்கும் எந்தச் சட்டத்தையும் தொடர்ந்து அனுமதிப்பதில்லை; கிளனெக்ளஸ் அறிக்கை அமெரிக்க நலன்களுக்கு பாதகம் இல்லாவகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபிரிக்கா மற்றும் சுற்றுச் சூழல் மாறுதல் பற்றிய உச்சி மாநாட்டின் முடிவுகளுக்கு வழிகாட்டி கொள்கை ஏதேனும் இருக்குமானால் --அமெரிக்காவிடம் சரணடைதல் என்பதை தவிர-- அதற்கு தனியார் நிறுவனம்தான் ராஜவாக வேண்டும் என்பதாகும். தட்பவெப்ப மாறுதல் நடைபெற்றுவருகிறது என அசைக்க முடியாத சான்றுகள் உள்ளபோதிலும், அதற்குக் காரணம் greenhouse வாயுக்கள் என்றிருந்த போதிலும், கூடியிருந்த உலகத் தலைவர்கள், இப்படி மாசுபடுத்தும் பெரு நிறுவனங்களுக்கு சவால் விடுவதற்கு மறுத்துள்ளனர். ஆபிரிக்காவை பொறுத்தவரையில் அறிக்கை கூறுவதாவது, "தனியார் நிறுவனங்கள்தான் வளர்ச்சியின் முக்கிய இயந்திரம் ஆகும்." அவ்வாறு நினைப்பவர்கள் மேற்கு ஆபிரிக்காவை காணவேண்டும், இங்கு பெருகிய அளவில் எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது; வெகுஜன மக்கள் இங்கு வறுமையில் வாழ்கின்றனர்; ஜாம்பியாவிலும், தென்னாபிரிக்காவிலும் சுரங்கங்கள் இருக்கும் மாவட்டங்களில் தொழிலாளர்கள் வேலையில் இருந்து கூட்டம் கூட்டமாக தள்ளப்படுகின்றனர்; தனியார்மய பொறுப்பில் குடிநீர் வழங்கல் இருக்கும் இடங்களில் சாதாரண மக்களுக்கு இந்த அடிப்படை வளங்களை வாங்குவதற்கும் பணம் கிடையாது. வறுமையை வரலாற்றுப் பொருளாக்கு என்ற பிரச்சாரத்தில் தொடர்பு கொண்டிருந்த சில அறக் கட்டளைகள் G8 ஐ ஆபிரிக்காவில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரியவை, தனிப்பட்ட முறையில் கெல்டாப்பையும் போனோவையும் உச்சிமாநாட்டை விமர்சிக்குமாறு கேட்டுக் கொண்டன. "மக்கள் பேசிவிட்டனர், ஆனால் அரசியல் வாதிகள் கேட்கவில்லை" என்று கெல்டாப்பும் போனோவும் சொல்ல வேண்டும் என்று இவை விரும்பின. ஆனால் இரண்டு ராக் இசைஞர்களும் மறுத்து விட்டதுடன் மாநாட்டின் விளைவுகளை பற்றிப் பிளேயரைவிட களிப்புடன் இருந்தனர்; பிளேயரோ விளைவுகள் சற்று ஏமாற்றம் கொடுப்பவை என்றுதான் கூறினார். சிறப்பு விருந்தினர்களுக்கும் அறக்கட்டளையாளர்களுக்கும் இடையே உறவுகள் சற்று மந்தமாயின. ஆனால் அறக்கட்டளையாளர்கள், தாங்கள் பிளேயருக்கும் இசை நிகழ்ச்சிகளுக்குப் பணம் கொடுத்த பெரிய நிறுவனங்களுக்கும் பிரச்சாரத்தில் துணையாக நிற்பதற்கு ஒப்புக் கொண்டு விட்டனர். மக்கள் என்ற வார்த்தை ஜனநாயக முறையில் ஏதேனும் அங்கீகரிக்கக்கூடியதாக இருக்குமானால், மக்கள் ஏதும் பேசவில்லை. Live 8 ல் அனுமதிக்கப்பட்ட ஒரே குரல் அரசாங்க மந்திரிகள், பெரும் செல்வம் கொழித்த பிரமுகர்கள், செய்தி ஊடக பிரபுக்கள், சர்வதேச பெருநிறுவனங்கள், பொதுத்தொடர்பு நிறுவனங்கள், விருப்பப்படி எழுதத்தயாராக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்தான். |