World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Bulgarian elections: support for former king collapses

பல்கேரியா தேர்தல்கள்: முன்னாள் மன்னர் ஆதரவு வீழ்ச்சியடைந்தது

By Markus Salzmann
13 July 2005

Back to screen version

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கேரிய ஜனாதிபதி இரண்டாவது சிமியோனும் அவரது தேசிய இயக்கமும் (NM) ஜூன் 25 ல் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 சதவீதமான வாக்குகளை பெற்றதுடன், சென்ற தேர்தலோடு ஒப்பிடும்போது 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை இழந்திருக்கின்றனர்.

இந்த வாக்குப்பதிவில் (31 சதவீதத்திற்கும் மேல்) மிகப்பெரும் பங்கை பெற்றுள்ள கட்சி ''பல்கேரியா கூட்டணியாகும்.'' இந்தக் கூட்டணியில் பல்கேரிய சோசலிஸ்ட் கட்சியும் (BSP) மற்றும் ஏழு சிறிய கட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. பல்கேரிய சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவாகியதாகும். இதற்கு தலைமை வகிக்கும் சேர்ஜே ஸ்ரனிசேவ் (Sergei Stanishev) அடுத்த அரசாங்கத்தின் தலைவராக ஆவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளவர் என்று கருதப்படுகிறார்.

12.1 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் பின்தங்கியிருக்கும் கட்சி DPS ஆகும். இந்தக் கட்சி துருக்கி சிறுபான்மையை கொண்டதுடன், இதற்கு முந்தைய இரண்டாவது சிமியோனின் தேசிய இயக்கத்தில் ஒரு இளைய பங்குதாரர் ஆகவும் இடம் பெற்றது. அவர்களுக்கு அடுத்து 6.45 சதவீதத்துடன் வெற்றி பெற்றது ஒரு வலுவான பல்கேரியாவிற்கான ஜனநாயக (DSB) கட்சியாகும். இது முந்தைய அரசாங்க தலைவர் ஐவன் கோஸ்டோவினால் தலைமை தாங்கப்படுகிறது. இறுதியாக, பல்கேரிய மக்கள் ஒன்றியம் (BNS) மற்றும் ஐக்கிய ஜனநாயக படை (ODS) ஆகிய இரண்டும் முறையே 5.2 மற்றும் 7.7 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றன. அந்த வாக்குகள் பல்கேரியாவின் நாடாளுமன்றமான சபரைனில் (Sabranie) நுழைவதற்கு போமானதாகும்.

இத்தேர்தலில், புதிதாக அமைக்கப்பட்ட பாசிச "தேசிய தாக்குதல் இயக்கம்" (National Attack Movement) வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளின் வீழ்ச்சியால் பயனடைந்துள்ளது. இந்தக் கட்சி வாக்காளர்களில் 8 சதவீதத்திற்கும் மேற்பட்ட 400,000 வாக்குகளை பெற்றுள்ளது.

இக்கட்சியின் தலைவரான வோலன் சிதரோ (Wolen Siderov) அரசியலுக்கு புதியவர் அல்ல. அவர் கோஸ்டோவ் முகாமிலிருந்து வந்திருப்பதுடன், துருக்கி, ரூமேனியா மற்றும் யூத சமுதாயங்களுக்கு எதிரான உணர்ச்சியை கிளறும் இனவாத தாக்குதலுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்கேரியா நுழைவதற்கும் எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார். அரசியல் ஸ்தாபனத்தில் உள்ளவர்களில், அவர் ஒருவர் மட்டுமே 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்கேரியா நுழைவதற்கு திட்டமிட்டிருப்பதற்கு எதிராக பேசுபவர் ஆவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முன்னேற்பாடாக நிறைவேற்றியதிலிருந்து பெரும்பாலான பல்கேரியர்கள் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்தனர்.

நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் பெரிய கட்சிகள், ஸ்ராலினிச ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு பிற்போக்குத்தனமான பங்களிப்பை செய்து வருகின்றன. எனவேதான் ஆச்சரியப்படத்தகாத வகையில், தீவிரமான ஒரு தேர்தல் பிரசாரத்திற்கு பின்னரும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னரும், மற்றும் கூடுதலாக வாக்களிப்பவர்களுக்கு கார்கள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் அதுபோன்று பரிசுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் 53 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். இது ஸ்தாபன கட்சிகளின் பிரதிநிதிகளின் மீது பல்கேரிய மக்கள் கொண்டுள்ள ஆழந்த நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இது 1990 தேர்தலில் வாக்கு அளித்ததிலிருந்து மிகவும் குறைவானதாகும்.

பல்கேரிய சோசலிஸ்ட் கட்சி பிரச்சார காலத்தின் போது அளித்த உறுதிமொழிகள் என்பன NM கட்சி அளித்தது போன்றே அமைந்திருக்கிறது. நாடு முழுவதிலும் 200,000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், அரசாங்க ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு வழங்கப்படும், ஏழை விவசாயிகளுக்கு கூடுதலாக அரசு மானியங்கள் வழங்கப்படும் மற்றும் சுகாதார வசதி மற்றும் ஓய்வூதியங்கள் பாதுகாக்கப்படும் போன்றவைகளே இந்த உறுதிமொழிகள் ஆகும்.

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, சோசலிஸ்ட்டுகள் ஈராக்கில் உள்ள 450 பல்கேரிய படையினர்களையும் திரும்பப் பெறுவதாக உறுதியளித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதால் ஒவ்வொருவரது வாழ்க்கைத்தரமும் மேம்படும் என்று அவர்கள் கூறினர். உண்மையிலேயே, பல்கேரிய சோசலிஸ்ட் கட்சி (BSP) அரசாங்கத்தினால் சமூக மேம்பாடுகள் ஏற்படும் என்ற சாத்தியம் எதுவுமில்லை. அந்தக்கட்சி அமைக்கப்பட்டது முதல், BSP சர்வதேச நிதி நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படுகின்ற ஒரு கருவியாக பயன்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

பல்கேரிய தொழில் துறையை அழிப்பதில் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரதான பங்களிப்பை செய்துள்ளது. 1990 இறுதிவாக்கில், பல்கேரியாவில் இருந்த தொழிற்சாலைகளில் பாதி மூடப்பட்டுவிட்டன மற்றும் இவை இலாபமில்லாத தொழிற்சாலைகள் என்பதற்காக மட்டும் முடப்படவில்லை. பெரிய அரசு நிறுவனங்கள் திட்டமிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன, மற்றும் அவர்களது சொத்துக்கள் CP நிர்வாகிகளுக்கு சொந்தமான தனியார் நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

1995 ல் அதே கட்சி மீண்டும் ஆட்சியிலிருந்தது. இந்த முறை புதிய பெயரில் பல்கேரியன் சோசலிஸ்ட் கட்சி என்று செயல்பட்டது. தங்களது வலதுசாரி முந்தவையவர்களிடமிருந்து பெற்ற பொருளாதார சமூக முறைகளை தீவிரமாக மறுசீரமைக்கும் நடவடிக்கையை BSP தலைமையிலான அரசாங்கம் துவக்கியது.

நவீன "சிவப்பு கோடீஸ்வரர்கள்" வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி உச்சகட்டத்திற்கு சென்றது. வேலையில்லாதோர் எண்ணிக்கை வளர்ந்தது. உயர் பணவீக்க விகிதம் 1000 சதவீதமாகியது. மற்றும் 1996-97 குளிர்காலத்தில் பட்டினிப் போராட்டங்கள் நடைபெறுகிற அளவிற்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை நிலவியது. அதன் காரணமாக அமைச்சர் - ஜனாதிபதி Zhan Widenov பின்வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் BSP ல் ஒரு பிளவு ஏற்பட்டது.

அவரது வாரிசான, கோஸ்டோவ் காலத்தில் சமூக செலவீனங்களில் கடுமையான வெட்டுக்கள் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. 1997 ஜூலை மாதம், lew (பல்கேரியா நாணயம்) ஒரு நாணயச் செலவாணி வாரியத்தின் மூலம் ஜேர்மனியின் மார்க் நாணயத்திற்கு இணையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆக, பல்கேரியாவின் சமூக பொருளாதாரக் கொள்கைகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளைக்கு கீழ்ப்படிந்து செல்ல வேண்டியதாயிற்று. அதன் மூலம் மேலும் மக்களின் துன்பம் பெருகியது.

2001 வாக்கில், கோஸ்டோவ் ஆட்சி ஆழமாக வெறுக்கப்பட்டது. மற்றும் பல்கேரியா மக்களிடையே BSP சீரழிந்ததாக காணப்பட்டது. இதனால், பிரபுத்துவ செல்வந்த தட்டை சேர்ந்த Simeon Sakskoburggotski ன் (அவர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், தனது கட்சியை அமைத்தவர்) வெற்றிக்கு வழியமைத்துக் கொடுத்தது. அவர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதிலிருந்து தவறி, ஒரு கணிசமான வெற்றி பெற்றார். இந்த முன்னாள் மன்னர் தனது வாய்வீச்சு தேர்தல் பிரச்சாரத்தில், இன்னும் 800 நாட்களுக்குள் ஒவ்வொரு பல்கேரியரும் நன்றாக இருப்பார்கள் என்று உறுதியளித்தார்.

ஆனால், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரும் மக்கள் மீது பாரியளவு தாக்குதல்களைத் தொடுத்தார். வர்த்தகங்களுக்கு வரிகள் வெட்டப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் காரணமாக உலக சந்தை மட்டத்திற்கு ஏற்ப 2002 ல் எண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன் மூலம் எரிவாயு (gasoline) செலவு 30 சதவிதம் அதிகரித்தது. ஒப்பு நோக்கும்போது, இன்றைய தினம் சராசரியாக நிலவுகின்ற ஊதிய விகிதங்கள் 1989 ல் இருந்ததைவிட 30 முதல் 40 சதவீதம் குறைவாகவே உள்ளன. குறைந்தபட்ச அரசாங்க ஓய்வூதியம் சுமார் 50 யுரோக்களாகவே உள்ளன. பல மக்கள், அடிப்படை உணவு பொருட்களை வாங்க முடியாத அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன. எனவே, மக்களில் ஏறத்தாழ பாதிப்பேர் தாங்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்களையே நம்பியிருக்கின்றனர்.

ஒரு உயர்மட்ட ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் 38 வயது மகன் ஸ்டானிச்சேவ் ஒரு கலப்படமற்ற நடைமுறையாளர் என்று கருதப்படுகிறார். தனது முன்னுரிமை நடவடிக்கைகள் தற்போதுள்ள நாணயச் செலவாணி கொள்கையை நிலை நாட்டுவதும் மற்றும் 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்து பயனடைவதும்தான் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருந்த போதிலும், தனது விருப்பத்திற்குரிய பங்குதாரர்களுடன் சேர்ந்தும் கூட, DPS சோசலிஸ்ட் கட்சி ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவைப்படுகின்ற நாடாளுமன்ற உருப்பினர்களை பெற முடியவில்லை.

BSP, DSP மற்றும் NM ஆகியவை இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்கக்கூடுமென்று தோன்றுகிறது. "tol" என்ற ஒரு இணையத் தள சஞ்சிகை, சோசலிஸ்ட் கட்சிக்கும், தேசிய இயக்க கட்சிக்கும் இடையில், கடுமையான கொள்கை வேறுபாடுகள் இல்லாததை சுருக்கமாக இவ்வாறு எடுத்துரைத்திருக்கிறது: "பழைய சூத்திரம் ----ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள்--- என்பது இனி செல்லுபடியாகாது. மற்றும் கட்சியின் செயல்திட்டங்கள் ஒரே தலைவர் எழுதியது போன்று உள்ளன". ஏற்கனவே சாக்சோபர்கோட்ஸ்கியின் கீழ், சோசலிஸ்ட் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது சிவில் பணிகளில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதன் பொருள் என்னவென்றால், சாக்சோபர்கோட்ஸ்கியின் அமெரிக்க-சார்பு நிலைப்பாடு ஏறத்தாழ நிச்சயமாக நிலை நாட்டப்படும். அமெரிக்கத் தூதரான ஜேம்ஸ் பார்டியூ, ஈராக்கிலுள்ள பல்கேரிய படையினர்கள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி இந்த ஆண்டு பல்கேரியாவில் மேலும் மூன்று அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.

தேர்தலுக்கு முன்னர், சோசலிஸ்ட்டுகள் சாக்சோபர்கோட்ஸ்கியுடன் ஒரு கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை திரும்பத் திரும்ப மறுத்து வந்தனர். ஆனால், தற்போது BSP மற்றும் NM கட்சிப் பிரதிநிதிகளுடன் அவர்கள் பேச்சுக்களை நடத்த துவங்கியிருக்கின்றனர். "கூட்டணி பெரிதாகுவது, அது பல்கேரியவிற்கு நல்லது" என்று சாக்சோபர்கோட்ஸ்கி அறிவித்தார். எங்கள் முன்னால் கடினமான பணிகள் இருக்கின்ற காரணத்தினால் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்குவதுதான் எங்களது முன்னுரிமை" நடவடிக்கை என்பதை BSP கட்சியின் துணைத் தலைவரான ரூமன் ஊச்சரோ குறிப்பிட்டார்.

பிரஸ்ஸல்சிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய கமிஷனில், அதன் உறுப்பினர் ஆவதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தப் பணிகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறு கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது. பிரஸ்ஸல்சில் உள்ள ஒரு அதிகாரத்துவாதி வெளியிட்ட கருத்தில் "கடிகாரத்தில் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.

பிரான்சிலும், ஹாலந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு கருத்தெடுப்புகள் தோல்வியடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த நெருக்கடி தற்போது முற்றியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பல்கேரியாவும், ருமேனியாவும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் ஆவது குறித்து சந்தேகங்கள் வளர்ந்து வருகின்றன. ஆஸ்திரியாவின் அதிபர் வொல்கா் சூசெல், அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த இரண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கான காலக்கெடு ஓராண்டு பின்தள்ளிப் போடப்படும் என்று தமக்கு தெளிவாகத் தோன்றுவதாக சூசெல் அறிவித்தார்.

வாக்காளர்களுக்கு எந்த சலுகையும் தருவதை பிரஸ்ஸல்ஸ் சகித்துக் கொள்ளாது என்றும், கடுமையான சீத்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கைகளில் இருந்து அது பின் வாங்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், பல்கேரியாவில் அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் தீவிரமடைவதற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு அது சேவை செய்திருக்கிறது. அங்கே எந்த அரசாங்கமும் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

சென்ற மாதம் முடிவடைந்துள்ள தேர்தல்களில் பாதிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பல்வேறு வகையான எதிர்க்கட்சிகள் மீது சமூக மாற்றம் பற்றிய தங்களது நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். மக்களுக்கு எதிரான ''மகத்தான கூட்டணி'' என்றழைக்கப்படுவதை அமைப்பதன் மூலம், இந்த அரசியல் ஸ்தாபனம் உண்மையிலேயே மிகத்தீவிரமான வலதுசாரி சக்திகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்டிருக்கின்ற ஆபத்துக்கள் ஏற்கனவே தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிற வகையில், நவ-பாசிச "அட்டாக்" (National Attack Movement) இயக்கம் மிக வேகமாக முன்னணியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved