World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

At least 50 dead in London bombings

லண்டன் குண்டுத்தாக்குதல்களில் குறைந்து 50 பேராவது உயிரிழந்தனர்

By Chris Marsden
9 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 7ம் தேதி லண்டனில் வெடித்த நான்கு குண்டுகளினால் இறுதியான இறந்தவர் எண்ணிக்கை குறைந்தது 50 ஆகலாம் எனத் தெரிகிறது. லண்டன் சுரங்க இரயில் பாதையில் இன்னும் பல சடலங்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளன; ஆனால் லண்டன் பேரூந்து வெடிப்பின் விளைவாக குறைந்தது 13 பேராவது கொல்லப்பட்டனர் என உறுதியாகியுள்ளது.

காலையில் பரபரப்பான நேரத்தில் வெடிக்கும் வகையில் இத்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன; அந்த நேரத்தில்தான் ஏராளமான சாதாரண குடிமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் பொதுப் போக்குவரத்து வசதியை அதிகம் நம்பியிருப்பர். இத்தாக்குதலை எவர் செய்திருந்தாலும் அதன் குற்றம் சார்ந்த, பிற்போக்குத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதுவரை போலீஸ், அரசாங்க விசாரணை அதிகாரிகள் இக்கொடூரத்தை செய்தவர்கள் எவர் என உறுதியாக கூறமுடியவில்லை என்றுதான் தெரிவித்துள்ளனர்.

சுரங்கப்பாதை வழிகளில் மூன்று இடங்கள் மற்றும் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700 பேர் காயமுற்றனர்; இவர்களில் 100 பேர் மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டனர்; 22 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் அவரசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு, கூடுதலான பணியாளர்களை வரவழைத்ததுடன், மற்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் ஒத்திவைத்தனர். பல நோயாளிகளும் உறுப்புக்கள் இழந்ததாலும், தீக்காயங்கள், கூடுதலான காயங்களுக்காக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பேருந்தின் மீது நடந்த தாக்குதல் ஒரு தற்கொலை படையாளியின் செயலாக இருக்குமோ என்ற ஊகம் கணிசமாக உள்ளது. ஆனால் மாநகரப் போலீஸ் ஆணையாளர் ஸேர் இயன் பிளேயர் "இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் எனக் கூறவதற்கு எந்த தடயமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

மாநாகர பயங்கரவாத-எதிர்ப் பிரிவைச் சார்ந்த ஆண்ட்ரூ ஹேமன் ஒவ்வொரு தாக்குதல் கருவியிலும் 10 இறாத்தலுக்கும் குறைவான சக்திவாய்ந்த வெடிமருந்துகள் இருந்ததாகவும், இவற்றை சாதாரண தோள்பையில் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார். இவை சுரங்க ரயில்களின் உட்தரையில் வைக்கப்பட்டிருக்க கூடும் என்றும் பேருந்தை பொறுத்தவரையில் மாடித் தளத்தில் இருக்கையிலோ, தளத்திலோ வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த நாளின் நிகழ்வுகள், பயங்கவாதம் ஏகாதிபத்தியத்தை தடை செய்வதற்கு பதிலாக அவர்களுடைய பிடிக்குள் சிக்கும் வகையில், பயத்தையும் அரசியல் குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்துதல், ஆளும்தட்டினருக்கு இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஒரு போலிக் காரணம் கொடுக்கும் வகையில்தான் முடியும் என்பதை காட்டுகின்றது.

முக்கிய அரசாங்க பிரமுகர்களும், செய்தி ஊடகத்தில் பெரும்பாலோரும் குண்டுத்தாக்குதல்களை பயன்படுத்தி இன்னும் கூடுதலான முறையில் குடி உரிமைகள் மீது இன்னும் கூடுதலான முறையில் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திட்டமிட்டபடி அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் கிலெனேகிள்ஸில் கைத்தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் G8 உச்சிமாநாடு, அமெரிக்க ஜனாதிபதி புஷ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் இருவரின் தலைமையில் அவர்களுடைய ஈராக்கிற்கெதிரான போர் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பவற்றை நியாயப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுவிட்டது. புஷ்ஷும் பிளேயரும் இந்தப் பெரும் சோகத்தையும் விட்டுவைக்காமல் தங்களுடைய அரசியல் செயற்பட்டியலுக்கு வாதிடப் பயன்படுத்திக் கொண்டனர். வியாழனன்று காலை, குண்டுத் தாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, புஷ் காமெராக்கள் முன்பு தோன்றி, "பயங்கரவாத்திற்கெதிரான போர் தொடரும்" என்று அறிவித்தார்.

செய்தித்தாள்கள் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அடிப்படை உரிமைகள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தன. Daily Mail கூறியது: "இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: பிரிட்டன் நம்முடைய குடிமக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் தன்னுடைய பன்னெடுங்கால சட்டபூர்வ உரிமைகளில் சிலவற்றை உறுதியாக தியாகம் செய்தே தீரவேண்டும்."

வலதுசாரி செய்தித்துறை பிரபுவும் பிளேயரின் ஆதரவாளருமான ரூபெர்ட் மேர்டோக்கினால் வெளியிடப்படும் The Sun, ஒரு படி மேலேயே சென்றது. தன்னுடைய தலையங்கத்தில் அது அறிவித்ததாவது: "சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்று பலரும் பிரிட்டனில் ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் செயலாற்ற வேண்டும்; நம்முடன் இருக்கும் இந்த விரோதியை சிறைப்பிடித்து, முகாம்களில் பூட்டி வைக்க வேண்டும்."

"அவர்களுடைய 'உரிமை' என்ற நலனுக்காக நம்முடைய பாதுகாப்பு புறக்கணிக்கப்படக் கூடாது."

"நம்முடைய தெருக்களில் இழிந்த அறிவுரை போதிப்பவர்களை இனியும் அவ்வாறு விட்டு வைக்கக் கூடாது."

"தடையற்ற பேச்சுரிமை மகத்தானதுதான்; ஆனால் இந்த தீய மனிதர்கள் நம்முடைய பொறுமையை இழிவுபடுத்துகின்றனர்."

இப்படி அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான அடக்குமுறை அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் எனக் கூறும் அழைப்புக்களுடன், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடக்கும் போர்களுக்கு பிரிட்டன் கொடுக்கும் ஆதரவிற்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பு இருக்கக் கூடும் என்பதற்கும் அசாதாரண முறையில் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அனைவருமே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்தான் இத்தாக்குதல்கள் என்று ஒப்புக் கொண்ட நிலையிலும், இக்கொடுமையை நடத்தியவர்களை பற்றிய அடையாளம் ஏதும் தெளிவாக தெரியாத நிலையிலும்கூட இத்தகைய மறுப்பு இருக்கிறது.

அரசியல்வாதிகளும், செய்தி ஊடகமும் "ஐரோப்பாவில் உள்ள ஜிகாத் அமைப்பின் இரகசிய அல் கொய்தா அமைப்புக் குழுதான்" பொறுப்பேற்றுள்ளது என்று மேற்கோளிட்டு காட்டுகின்றன. ஒரு இஸ்லாமிய வலைத் தளத்தில் மட்டும் வெளிவந்துள்ள விவரம் தெரியாத இந்த குழுவின் நம்பகத்தன்மை பற்றி அதிகாரிகளுக்கே சந்தேகமாகத்தான் உள்ளது. வலைத் தள அறிக்கையின்படி, தாக்குதல்கள் "பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகவும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பிரிட்டிஷார் நடத்தும் படுகொலைகளுக்கு எதிராக நடாத்தப்படுகின்றன" என்று அறிவித்துள்ளது.

ஆயினும் கூட உள்துறை மந்திரி சார்ல்ஸ் கிளார்க் இணைய தளத்தில் ஏற்கப்பட்டுள்ள பொறுப்பு பற்றி "தீவிர கவனம்" கொள்ளப்பட வேண்டும், என்றும் உடனடியாக, "ஈராக் போருடன் எத்தொடர்பும் இருப்பதாக சான்றுகள் இல்லை... அது ஈராக் அல்லது எந்த குறிப்பிட்ட வெளிநாட்டுக் கொள்கை பற்றியும் இல்லை; இது எமது வாழ்க்கைமுறை மீதான அடிப்படைவாதிகளின் தாக்குதலாகும்." என்று கூறினார்.

மேர்டோக்கின் மற்றொரு வெளியீடான The Times வலியுறுத்தியுள்ளதாவது: "லண்டன் இறப்புக்களுக்கும் ஈராக்கில் தலையீடு செய்ததற்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று சிலர் கருதலாம். அது பிழையான சிந்தனையாகும்.... பயங்கரவாதிகள் தங்களுக்கும் ஜனநாயக சமூகத்திற்கும் இடையே "ஒரு புனிதப் போரை" பற்ற வைக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால் லண்டன் தாக்கப்பட்டது.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பை வெளிப்படையாக கூறிய ஒரு முக்கியமான அரசியல் தலைவர் ஜோர்ஜ் காலோவே ஆவார். Respect கட்சியின் சார்பில் இப்பொழுது பாராளமன்ற உறுப்பினராக இருக்கும் காலோவே தொழிற்கட்சியில் இருந்து ஈராக்கிய போரை எதிர்த்ததற்காக விலக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் அவர் ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டநாமோ ஆகியவற்றில் நடைபெறும் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் செயல்களுக்காக மாநகர மக்கள் விலைகொடுக்க நேர்ந்துள்ளது; அங்கு நடக்கும் செயல்கள் மேற்கை பற்றி முஸ்லிம் உலகில் பெரும் வெறுப்பை மூட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

காலோவேயுடைய அறிக்கை கடுமையான பிரதிபலிப்பை தூண்டியது. படைத்துறை மந்திரியான ஆடம் இங்க்ராம், "காலாவே தன்னுடைய விஷ நாக்கை இரத்தச் சகதியில் தோய்த்து பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

The Sun இன் தலையங்கம் காலோவையை "ஒரு இழிந்த தன்மையுடைய நபர்" என்று விவரித்தது.

Daily Mirror இல் கிறிஸ்டோபர் ஹிட்சின்ஸ் காலோவே "மனநோயால் பீடிக்கப்பட்டுள்ள கொலைகாரர்களின் ஒலி பெருக்கி போல்" செயல்படுகிறார் என்று எழுதியுள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தானத்திற்கும் பயங்கரவாத குண்டுகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதற்கு இத்தகைய காழ்ப்புணர்வு காட்டப்படுகிறது ஏன் என்பது தெளிவாகத்தான் உள்ளது. மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தில் வாஷிங்டனுடன் சேர்ந்து கொண்டு ஒரு பங்கைப் பெறும் முயற்சியில் அரசாங்கம் பயங்கரவாதிகளின் குற்றச் செயல்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளது. குண்டுவீச்சுக்களினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய எதிரிகளை அச்சுறுத்தி மெளனப்படுத்தியும் விடலாம் என்று அது நம்புகிறது.

See Also:

லண்டனில் பயங்கரவாத குண்டுவெடிப்புக்கள்: ஓர் அரசியல் குற்றம்

Top of page