World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

State Department cable details ethnic cleansing by US-backed forces in Iraq

ஈராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகளின் இன சுத்திகரிப்பை விவரிக்கும் அரசுத்துறைக்கான தந்தி

By Patrick Martin
16 June 2005

Back to screen version

அமெரிக்க ஆதரவு குர்திஸ் போலீஸாரும், அதனது பாதுகாப்பு பிரிவுகளும் நூற்றுக்கணக்கான சிறுபான்மை அராபியர்களையும், துருக்கியர்களையும் ஈராக்கின் வடக்கு நகரமான கிர்குக்கில் கடத்தி சென்றிருப்பதாக அரசுத்துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு ரகசியத் தந்தி பற்றிய தகவல் வாஷிங்டன் போஸ்ட்டில் கசியவிடப்பட்டிருக்கிறது.

அந்தத் தந்தியிலுள்ள வாசகங்களை மேற்கோள்காட்டி, போஸ்ட் புதன்கிழமையன்று வெளியிட்ட செய்தியில், அவர்கள் கடத்தப்படுவதற்கு முன்னர் சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பணையத் தொகைகள் கேட்கப்பட்டதாகவும், அவை இரண்டு முன்னணி குர்திஸ் கட்சிகள் ''தங்களது ஆதிக்கத்தை கிர்குக்கில் நிலைநாட்டுவதற்காக மிகப்பெருமளவில் ஆத்திரமூட்டும் வகையில்'' மேற்கொண்டுள்ள ''திட்டமிட்ட பரவலான முயற்சியின்'' ஓர் அங்கம் என்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அந்த தந்தியை, அந்தப் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க தூதரகத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர், ஜூன் 5 தேதியிட்டு வெள்ளை மாளிகைக்கும், பென்டகனுக்கும் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் அனுப்பியிருக்கிறார். இந்த கடத்தல்கள் -----கிர்குக்கிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குர்திஸ் நகரங்களான சுலைமானியா மற்றும் இர்பிள் சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்----- முற்றிலும் இன சுத்திகரிப்பு வழிகளில் இருப்பதால் பதட்டங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. மற்றும், அமெரிக்க அரசாங்கத்தை இழிவுபடுத்தும் வகையில் இவை அமைந்திருக்கின்றன என்று அந்த தந்தி எச்சரிக்கிறது.

"இந்தக் கைதிகள் மாற்றம் தொடர்பாக ஈராக் சட்டங்களை செயற்படுத்துவதற்கான நடைமுறையை ஸ்தாபிக்காவிட்டால் இந்தப் பிராந்தியத்தில் கூட்டணிப்படைகளின் முயற்சிகள்.... இந்த கடத்தல்களால் ''கடுமையான சீர்குலைவிற்கு இலக்காகும்" என்று அந்த தந்தி மேலும் எச்சரித்தது.

கிர்குக்கில் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் இனப்பதட்டங்கள் வெடித்து சிதறுவதாக உள்ளது. அந்த நகரம் உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களை அருகாமையில் கொண்டுள்ளது. அவற்றின் மூலம் எதிர்காலத்தில் அமையவிருக்கும் சுதந்திர குர்திஸ் அரசிற்கு தேவையான வள அடித்தளம் கிடைக்கும் என்று குர்திஸ் தலைவர்கள் நம்புகின்றனர். என்றாலும், குர்துகள் அந்த மாகாணத்தின் பல்வேறு வகைப்பட்ட இனங்களில் ஒருபகுதியினர்தான். அரபு மற்றும் துருக்கியினரை விட அவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமானவர்களாக உள்ளனர்.

போஸ்ட்டின் கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை, கிர்குக்கிலுள்ள அரபு சமுதாய தலைவர்களை மேற்கோள்காட்டி ரெய்ட்டார்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சிறிய அரபு அரசியல் கட்சியின் தலைவரான அஹ்மது அல்-ஒபேய்டி, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பின்னர் இந்தக் கைதுகள் துவங்கின என்றும், ஆனால் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஸ் தேசியவாத கட்சிகளான குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியும் (KDP), குர்திஸ்தான் தேசபக்தி ஒன்றியமும் (PUK) ஜனவரி 30 தேர்தலில் கிர்குக் மாகாண சபையின் கட்டுப்பாட்டை வென்றெடுத்த பின்னர்தான், இந்தக் கைது நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறினார்.

குர்திஸ் பொதுமக்கள் வாழ்கின்ற பிராந்தியங்களில் தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டுகின்ற வகையில் KDP ம், PUK யும் பெரிய பலத்த ஆயுதந்தாங்கிய குடிப்படைகளை நிலைநாட்டி வருகின்றன. PUK தலைவரான ஜலால் தலபானி தற்போது ஈராக் ஜனாதிபதியாக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் KDP தலைவரான மசூத் பர்சனி, பிராந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இப்பிராந்தியம் கிர்குக்கிற்கு வடக்கேயுள்ள குர்து இனத்தவர் பெரும்பாலும் வாழ்கின்ற மூன்று மாகாணங்களை ஐக்கியப்படுத்துகிறது.

மொத்தமாக கைது செய்யப்பட்ட 250 பேர்களில் 40 பேர்கள் இதுவரை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அஹ்மது அல்-ஒபேய்டி குறிப்பிட்டுள்ளார். 600 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக போஸ்ட் இதர மதிப்பீடுகளை தந்திருக்கிறது. தாங்கள் 180 வழக்குகளை இதுவரை பதிவு செய்திருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்க மற்றும் ஈராக் அதிகாரிகளையும் அரசாங்கத்துறை தந்தியையும் மேற்கோள்காட்டி போஸ்ட் தந்துள்ள தகவலில், "திட்டமிட்டு, அசாயேஸ் என்றழைக்கப்படும் குர்து புலனாய்வு அமைப்பு, மற்றும் கிர்குக் போலீஸ்படையில் இருக்கும் அவசர சேவை பிரிவில் உள்ள குர்துகள் தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான 500 படையினர்கள் ஆகிய இரண்டும் அரபு மற்றும் துருக்கியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருவதுடன், அமெரிக்க இராணுவத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.

1988 ல் குர்திஸ் நகரமான Halabja-வில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதல் மற்றும் 1991 பாரசீக வளைகுடா போருக்கு பின்னர் ஏற்பட்ட ஒரு குர்திஸ் எழுச்சியை ஒடுக்கியது, மற்றும் ஹூசேன் ஆட்சியின்போது நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்கிறோம் என்ற அடிப்படையில் குர்திஸ் பாதுகாப்பு சேவைகள் சில வழக்குகளில் தங்களது ஆள் கடத்தல்களை கைதுகள் என்று மூடிமறைப்பு செய்கின்றன.

கிர்குக்கிலுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள், அங்கு கைது செய்யப்பட்ட பல கைதிகள் சுலைமானியாவிற்கும் இர்பிளுக்கும் அப்புறப்படுத்தப்பட்டனர் என்று ஒப்புக்கொண்டனர். கிர்குக் சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை நிரம்பி வழிந்ததால் அது அவசியமாயிற்று என்று அவர்கள் கூறினர். என்றாலும் அத்தகைய மாற்றங்களுக்கு நீதிமன்ற அங்கீகாரம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

கிர்குக்கிலுள்ள 116 வது போர்ப்படை பிரிவை சேர்ந்த புலனாய்வு அதிகாரியான மேஜர் டாரன் பிளாக்பர்ன் போஸ்ட்டிற்கு பேட்டியளித்தபோது, ஒரு மாதத்திற்கு முன்னர் கைதுகள் பற்றி தான் அறிந்ததாகவும் இப்போது அவை நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் மிக ''உறுதியாக கருதுவதாக'' குறிப்பிட்டார். ஆனால் இதர இராணுவ மற்றும் ஈராக் வட்டாரங்கள் சென்றவாரம் மட்டுமே ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டன.

சுலைமானியாவிற்கும், இர்பிளுக்கும் மாற்றப்பட்ட கைதிகள் வழக்கமான அரசு சிறைகளில் அடைக்கப்படவில்லை. ஆனால், இரண்டு குர்திஸ் அரசியல் கட்சிகளின் புலனாய்வு பிரிவுகள் நடத்தி வருகின்ற சிறைகளில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிளாக்பர்ன் உறுதிப்படுத்தினார். அந்த இரண்டு நகரங்களையும் தலைமை இடங்களாகக் கொண்ட இக்கட்சிகள் கொண்டுள்ளன. (சுலைமானியாவில் PUK யும் இர்பிளில் KDP யும் நிர்வாகத்தை நடத்துகின்றன). இந்த சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பல கைதிகள், இச்சிறைகளில் அளவிற்கு அதிகமாக கூட்டம் இருக்கிறது என்றும் ----19x9 அடி சிறையில் 50 பேர்வரை அடைக்கப்பட்டனர்----வன்முறையும் முறைகேடுகளும் அப்பட்டமான சித்திரவதையும் நடைபெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டனர்.

கடத்தப்பட்டு கடந்த வாரம் இர்பிள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அபு அப்துல்லா ஜபோரியை போஸ்ட் மேற்கோள்காட்டியுள்ளது. ஒரு கேபிள் வயரினால் அடிக்கப்பட்டு காயத்தின் வடுக்கள் காணப்பட்ட ஒரு சக கைதி பற்றி அவர் வர்ணித்திருக்கிறார். சில நேரங்களில், அந்தக் கேபிளை தீயில் முதலில் சூடுகாட்டியிருக்கிறார்கள்.

பேட்டிகாணப்பட்ட இதர கிர்குக் குடியிருப்பாளர்கள் தங்களது குடும்பங்கள் முழுவதும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறினர். பல கைது நடவடிக்கைகளின்போது, அமெரிக்க துருப்புக்களும் பங்கெடுத்துக் கொண்டதாக போஸ்ட் தெரிவித்திருக்கிறது.

"அமெரிக்கர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்கள் போலீஸாரிடம் எங்களை அனுப்புகிறார்கள். போலீஸாரிடம் நாங்கள் செல்லும்போது அவர்கள் அமெரிக்கர்களிடம் எங்களை அனுப்புகிறார்கள். இப்படியே நாங்கள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம்" என்று ஒஸாமா தானோக் என்பவர் கூறினார்.

ஆள் கடத்தல்களில் சம்மந்தப்பட்டிருந்த ஒரு குர்திஸ் பிரிவை "மிகவும் ஒத்துழைப்பும் கூட்டணிப் படைகளோடு நட்பும் கொண்டுள்ளது'' என்று மேஜர் பிளாக்பர்ன் வர்ணித்தார். மற்றும் ஈராக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர்கள் தொடர்ந்தும் மதிப்பு மிக்க உதவியை வழங்கி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். "அத்தகைய ஒரு பிரிவைத்தான் அடிப்படையிலேயே நாங்கள் நம்பமுடியும்" என்று போஸ்ட்டிடம் அவர் தெரிவித்தார்.

மாகாண அரசாங்கத்திற்கான அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் குழுவிற்கு தலைமை வகிக்கும் லெப்டினட் கேர்னல் அந்தோனி விக்கம் என்பவர், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட கைதுகளின் அளவை மதிப்பிட்டு, பிளாக்பர்ன் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் மத்தியில், ஆள்கடத்தல்கள் மற்றும் நபர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்கள் "ஒரு வெள்ளம் போல் பெருகிவிட்டது" என்று அவர் கூறினார்.

சதாம் ஹூசேனின் ஒடுக்குமுறையையும், கொடுங்கோன்மையையும் புரட்டிவிட்டு ஈராக்கில் ஜனநாயகத்தை அந்த இடத்தில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுதான் அமெரிக்க படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் நடைபெற்றது என்ற பாசாங்கிற்கு கிர்குக்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அம்பலப்படுத்தப்பட்டுவரும் சம்பவங்கள் மற்றொரு பேரிடியாகும். முன்னாள் ஈராக் சர்வாதிகாரி கடைப்பிடித்து வந்த பிரித்தாளும் நடவடிக்கையையும் அதே வெகுஜன ஒடுக்குமுறையையும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சி தற்போது பயன்படுத்தி வருகிறது.

ஹூசேன் ஆட்சியின்கீழ், ஈராக்கின் மத்திய அரசாங்கம் பாக்தாத் எண்ணெய் வயல்களில் தனது கட்டுப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்காக திட்டமிட்டு அரபு இனத்தவர்களை கிர்குக்கின் தென்பகுதியில் புலம் பெயர்வதற்கு ஊக்குவித்து, ஆயிரக்கணக்கான குர்துகளை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டியது. தற்போது குர்திஸ் கட்சிகள் பதிலடியாக அதே நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அவர்கள் அராபியர்களையும், துருக்கியர்களையும் விரட்டுவதற்கு அடக்குமுறையையும் மிரட்டலையும் பயன்படுத்தி கிர்குக்கில் ஒரு குர்திஸ் பெரும்பான்மையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

1999 சேர்பியா மீது அமெரிக்கா மற்றும் NATO இராணுவத் தாக்குதல்கள் நடைபெற்ற நேரத்தில் கொசவோ விடுதலை இராணுவம் (KLA) நடத்தியது போன்ற பங்களிப்பை குர்திஸ் கட்சிகள் இப்போது செய்து கொண்டிருக்கின்றன. சேர்பியாவில் மிலோசேவிக் அரசாங்கம் நடத்திவந்த முறைகேடுகளை ஒரு சாக்குப்போக்காகக் கொண்டு முன்னாள் யூகோஸ்லாவியாவில் கிளிண்டன் நிர்வாகம் தலையிட்டது.

சேர்பியா படைகள் அல்பேனியா மாகாணத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக கொசோவாவில் இன சுத்திகரிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் கூறிற்று. கொசவோவை நேட்டோ படைகள் ஆக்கிரமித்ததுடன், KLA சேர்பியர்களையும், ஜிப்ஸிகளையும் தனது அதிரடி சூறையாடல் நடவடிக்கைகள் மூலம் மாகாணத்தைவிட்டு மிகப்பெரும்பாலான எண்ணிக்கையில் வெளியேற்றியது. தற்போது, அதே இன சுத்திகரிப்பு பிரச்சாரத்தை கிர்குக்கிலுள்ள குர்திஸ் படைகள் செய்வதில் குறியாக உள்ளன.

கிர்குக்கில் அரபு மற்றும் துருக்கி இனத்தவரை வெளியேற்றுவதற்கான அமெரிக்க ஆதரவு இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இதுவரை அமெரிக்க ஊடகங்கள் புறக்கணித்துள்ளன. என்றாலும் போஸ்ட் கட்டுரை அந்தப் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது, அரசியல் வட்டாரங்களிலும் அதிகாரபூர்வமான ஊடகங்களிலும் பரவலான ஒரு கலைந்துரையாடல்களை தூண்டிவிட்டிருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. புதன்கிழமை கேபிள் செய்தி அலை வரிசைகளில் இதுபற்றி வந்தபோதிலும், ஒலி/ஒளிபரப்பு வலைப்பின்னல் மாலை செய்தி நிகழ்ச்சிகளில் போஸ்ட் செய்திபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கிர்குக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் திட்டமிட்டு கடத்தப்பட்ட அராஜக நடவடிக்கைகளை, பாக்தாத்தில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அல்லது பிணைப்பணம் கோருகின்ற கிரிமினல் கும்பல்களால் கடத்தப்பட்டது பற்றிய செய்திகள் வெளிவந்த முறையோடு ஒப்பிடத்தக்கது. செவ்வாய் கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, மார்ச் 2003 ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் இதுவரை சுமார் 200 வெளிநாட்டவர் கடத்தப்பட்டிருக்கின்றனர்---- இது கடந்த சில மாதங்களில் கிர்குக்கின் ஒரு நகரத்தில் கடத்தப்பட்ட மக்களைவிட குறைவானதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved