:
ஆசியா
:
இலங்கை
A spate of police killings in Sri Lanka
இலங்கையில் பெருந்தொகையான பொலிஸ் படுகொலைகள்
By Saman Gunadasa
28 April 2005
Back to screen version
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட ஒழுங்கு பிரச்சாரத்தின் மத்தியில்,
ஒரு தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கொலைகளும் நடைபெற்றுள்ளன. கடந்த நான்கு மாதங்களுக்குள்
மட்டும் குறைந்தபட்சம் 19 பேரின் இறப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சகல விடயத்திலும்,
சந்தேகநபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது தற்பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டதாக
பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்து மெளனம் சாதிப்பதன் மூலம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமான ஒப்புதலை வழங்கியுள்ளது.
பொதுவாக, அதிகளவு பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் உறுதியான செயற்பாடுகளுக்கு அழைப்பு
விடுக்கும் டெயிலி மிரர் பத்திரிகையும், கடந்த மாத ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் பொலிசாரின் கதைகள்
உறுதியற்றவை என ஏற்றுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை "பூமியின் கழிவுப் பொருட்களென" ஒதுக்கித் தள்ளிய
அது, மேலும் பின்வருமாறு கூறுகிறது:
"ஆயினும் ஒட்டுமொத்தமாக, இச்சகல விடயங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள காரணம்
என்னவென்றால், ஒவ்வொரு கைதியும் தனது ஆயுத மறைவிடங்களை காட்டுவதற்காக பொலிசாருடன் சென்றபோது, பொலிசாரை
தாக்குவதற்காக திடீரென ஒரு கிரனேட்டையோ அல்லது ஒரு துப்பாக்கியையோ இழுத்து எடுக்கும் போது, உடனடியாக
பொலிசார் திருப்பி சுட்டதில் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார் என்பதேயாகும். விசாரணை நடத்திய நீதித்துறை அலுவலர்
ஒன்றுக்கு மேற்பட்ட பல சம்பவங்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை கவனிக்கத் தவறியமை மிகவும் பதுமையானதே!"
பொலிசாரின் கூற்றுக்களின் போலித் தன்மையை அம்பலப்படுத்த இரு கதைகள் போதுமானவையாகும்.
ஏப்பிரல் 12ம் திகதி லக்பிம பத்திரிகை, கீர்த்தி பிரசன்னகுமார என்னும் குற்றவாளி சந்தேக நபரின் இறப்பு
பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. பொலிசார் இவரை ஏப்பிரல் 11 அதிகாலை கொழும்பிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில்
உள்ள மினுவாங்கொடை பகுதியில் கொட்டுகொட என்ற இடத்திலுள்ள மயானமொன்றுக்கு கூட்டிச் சென்றுள்ளனர். பொலிசாரின்படி,
இங்குள்ள ஒரு புதைகுழியில் ஆயுதங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குமார தெரிவித்துள்ளார். அந்த ஆயுதங்களை
தேடிக்கொண்டிருந்த வேளையில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது பாய்ந்து அவரது ரிவோல்வரை பிடுங்கிய குமார,
சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக பொலிசாரை சுடத்தொடங்கியுள்ளார். ஒரு பொலிசாரும் காயப்படவில்லை.
கடந்த மாத ஐலண்ட் பத்திரிகை இதே விதமான கதையொன்றைக் கூறியுள்ளது:
"மார்ச் 5 அன்று, சந்தேக நபராகிய மதுர பெர்னான்டோவை கொழும்பு புறநகர் பகுதியான ராகமவிற்கு
அதிகாலையில் கொண்டு சென்றுகொண்டிருந்த போது, அவர் திடீரென குனிந்து கைவிலங்கை பயன்படுத்தி ஜூப்பை ஓட்டிச்
சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளார். ராகம புகையிரத கடவை அருகில் ஜீப்
பாதையை விட்டு திசைமாறிய அளவில் பொலிஸ் அலுவலர் கொல்லப்படுவதை தவிர்க்க துப்பாக்கிப் பிரயோகம்
செய்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை."
இலங்கை சிவில் உரிமைகள் இயக்கம், இவையாவும் பொலிசாரின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட
கொலைகள் என்பதையிட்டு அக்கறை செலுத்தியிருப்பதோடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை
கோரியுள்ளதாக உலக சோசலச வலைத் தளத்திற்கு தெரிவித்துள்ளது. சிவில் உரிமைகள் இயக்கப்
பிரதிநிதிகள், 1989-91 கால கட்டத்தில் வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி) சந்தேக நபர்களும் பரந்தளவில் கொல்லப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுடன் ஒத்தவையாக
இவை உள்ளன என குறிப்பிட்டுள்ளனர். அக்காலகட்டத்தில் தீவின் தென்பகுதியில் சமூக அமைதியின்மையை நசுக்கும் முயற்சியில்
ஒரு மதிப்பீட்டின்படி 60,000 இளைஞர்கள் பாதுகாப்பு படையினராலும் அதனுடன் தொடர்புபட்ட கொலைக்
குழுக்களாலும் கொன்று குவிக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுப்பதில்
இராணுவத்துடன் அந்தரங்கமாக பொலிசார் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் கேடுகெட்ட அவசரகாலச் சட்டங்களின் கீழ்
பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை "விடுதலைப் புலி சந்தேக நபர்களென" சுற்றிவளைத்து பிடித்து
எந்தவித விசாரணையுமின்றி அவர்களை காலவரையறையற்ற நீண்டகால தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். சில
விவகாரங்களில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளர். 2002 யுத்த நிறுத்தத்திலிருந்து பொலிசார் கிரிமினல்
குற்றவாளிகள் மீது தமது கவனத்தை திருப்பியுள்ளனர் போலும்.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராகரம், 2004ல் முதல் மூன்று மாத
காலத்திற்குள் குறைந்தபட்சம் பொலிஸ் காவலிலுள்ள 7 பேரின் இறப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 2004
நடுப்பகுதியில், விசேட அதிரடிப்படை அங்கத்தவர்களுடனும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் சேர்ந்து
செயற்படும் பயிற்சி பெற்ற பொலிஸ் கமாண்டோக்களுடனும் இணைந்து "குற்றத் தடுப்பு பிரிவு" ஒன்று பொலிஸ்
திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க "வளர்சியடைந்துவரும் குற்ற
அலைக்கு" எதிரான நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக மாவட்ட நீதிபதி சரத் அம்பேபிட்டிய பட்டப்பகலில் அப்பட்டமாக
கொலை செய்யப்பட்டமையை பற்றிக்கொண்டதுடன், நாட்டின் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுலாக்குவதற்கான வாய்ப்பை
புகுத்தினார். ஒரு போதைப் பொருள் கடத்தல்காரன் நீதிபதியை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஏனைய நாடுகளில் முன்னெடுக்கப்படும் "சட்டம் ஒழுங்கு பிரச்சாரத்தைப் போல், குமாரதுங்கவும் கொடூரமான பொலிஸ்
வழிமுறைகளை நியாயப்படுத்தவும் மற்றும் குற்றங்களுக்கு வழியமைக்கும் சமூக பிரச்சினைகளை உருவாக்கிவிட்டதில் அரசாங்கத்தின்
பொறுப்பைப் பற்றிய கவனத்தை திசை திருப்புவதன் பேரிலும் சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை பயன்படுத்திக்கொள்கிறார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும் பரந்த விரக்தியும் ஒன்றுசேர்ந்து
வன்முறை குற்றங்களுக்கான தோற்றுவாய் ஒன்றை சிருஷ்டித்துள்ளன. இராணுவத்திலிருந்து தப்பியோடிய, பயிற்சி பெற்ற
மற்றும் ஆயுதங்களுடன் பரீட்சியமான ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் பங்காளர்களாகவோ
அல்லது வாடகைத் துப்பாக்கிகளாகவோ ஆகியுள்ளனர். இத்தகைய குண்டர்களில் அநேகர், தமது எதிரிகளை அச்சுறுத்தும்
இழிவான வேலைகளுக்காக அரசியல்வாதிகளால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். நீதிபதி அம்பேபிட்டியவை கொலை செய்தவர்கள்
உட்பட சில குற்றவாளிகள், உயர்மட்ட அரசியல் புள்ளிகளுடனும் மற்றும் பொலிசாருடனும் கூட தொடர்புகள் வைத்திருந்ததாக
குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அலுவலர்கள், வெறும் குற்றவாளி சந்தேகநபர்களின் கொலைகளுக்கு மட்டுமன்றி வேறு
கொலைகளுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 2004 அக்டோபர் 3 அன்று, வடமத்திய மாகாணத்தில் பொலநறுவையில்
உணவு விடுதியொன்றில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள சமய நாளான போயா தினத்தன்று மதுபானம் வழங்க
மறுத்தமைக்காக அந்த விடுதியின் முகாமையாளர் குவின்டஸ் பெரேரா பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. 2004 நவம்பர் 21 அன்று கொழும்பின் புறநகர் பகுதியான மாபோலவில் மேவின் ஜெராட் பெரேராவை
பொலிசார் பட்டப்பகலில் படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக பொலிஸ் சித்திரவதை
சம்பந்தமாக பெரேரா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்
குமாரதுங்கவின் புதிய பொலிஸ் எதிர்நடவடிக்கைகளை ஊடகங்கள் ஆதரிக்கின்றன. "கிரிமினல்களின்
உரிமைகளும் நாகரீகமானவர்களின் அவலநிலையும்" என தலைப்பிடப்பட்டிருந்த ஏப்பிரல் 1ம் திகதி ஐலண்ட் பத்திரிகையின்
ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறது: "இந்த அரக்கர்கள் (குற்றவாளிகள்) குழு யுத்தத்திலாவது ஏதாவதொரு
வழியில் கொல்லப்பட வேண்டும். இல்லேயேல் எல்லவாற்றிலும் மோசமான முறையில், அவர்கள் தமது வாழ்நாளில்
கொலை, கொள்ளையில் ஈடுபடுவதோடு மேலும் பலரை துஷ்பிரயோகம் செய்வார்கள். நாம் இதை சொல்வதில் கவலையடைந்தாலும்
உண்மை இதுவே."
இந்த ஆசிரியர் தலையங்கம் பொலிசாருக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுப்பதுடன்
முற்றுப்பெறுகிறது: "நீண்டகாலமாக பொலிசார் கிரிமினல்களுடன் கடினமான பந்தை விளையாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள்
தமது சொந்த ஆட்டத்தில் அவர்களை தோற்கடித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கு
தடையேற்படாமல் இருக்க அவர்களது வழியில் தடங்கல்களை அகற்றவேண்டும். அந்த ஆர்வமிக்க மனிதர்களுக்கும்
உத்தியோகத்தர்களுக்கும் மேலும் பலம் கிடைக்கட்டும்!"
ஏப்பிரல் 3 சண்டே ஐலண்ட் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை பொலிஸ்
மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, இந்த கொலைகளை நியாயப்படுத்தினார். "நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை.
பாரிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட கும்பல்களை நாம் நிச்சயமாக கைது செய்துள்ளோம். அவ்வாறு
கைதுசெய்யப்பட்ட பின் எவராவது உயிரிழந்திருப்பின் அது அவர் பொலிஸாருடன் மோதி தப்பிச் செல்ல முயற்சித்ததன்
விளைவேயாகும்," என அவர் தெரிவித்தார்.
சந்திரா பெர்ணான்டோ ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக தனது அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனநாயக உரிமைகளுக்கும் மேலாக பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குவதற்காக "ஒழுக்கத்திற்கு" முன்னுரிமை
வழங்க வக்காலத்து வாங்கும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை அவர் மேற்கோள் காட்டுகிறார். "சிவில்
சமூகத்திற்குள் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அத்துடன் அது பொலிசார் மட்டுமன்றி சகலராலும் கையாளப்பட
வேண்டியதாகும். பொலிசை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன்றி ஒரு நன்னடத்தையுள்ள ஒழுக்கமான சமுதாயத்தை உறுதிப்படுத்துவதற்காக
பொலிசாருக்கு சட்டவரம்பிற்குள் செயற்பட உதவியளிப்பதே மனித உரிமை அமைப்புகளது முதல் தெரிவாக இருக்க
வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
இந்த பொலிஸ் பிரச்சாரமானது கை கோர்த்தபடி அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்குள்ளும்
ஊடறுத்துள்ளது. எதிர்க் கட்சி கடந்த மாதம் இரு சட்ட மூலங்களை சட்டமாக்குவதற்காக அரசாங்கத்துடன்
சேர்ந்துகொண்டது. முதல் சட்டம், பிடி ஆணையின்றி ஒரு சந்தேக நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்கும்
காலத்தை 24 மணித்தியாலங்களில் இருந்து 48 மணித்தியாலங்களாக நீடிப்பதுடன் டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த
மாதிரிகளை எடுக்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கின்றது.
சட்டமூலத்தின் இரண்டாவது பகுதி, நீதி வழங்கப்படுவதை விரைவுபடுத்துதல் என்ற பெயரில்,
மேல் நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக நடத்தப்படும் சுருக்கமற்ற விசாரணைகள் என அழைக்கபடுவதை தட்டிக்கழிக்க
அனுமதியளிக்கிறது. இந்த சுருக்கமற்ற விசாரணைகளின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் பதிலளிக்க வேண்டிய வழக்கு
ஒன்று உள்ளதாக பொலிசார் நீதிபதிக்கு நிரூபித்துக் காட்டவேண்டும். தற்போது வழக்குகள் நேரடியாக விசாரணைக்கு
செல்ல முடியும் --இது சந்தேக நபர்கள் மீது அழுத்தத்தை திணிப்பதில் பொலிசாரின் கரங்களை பலப்படுத்தவுள்ள ஒரு
நடவடிக்கையாகும்.
பொலிசையும் "சட்டம், ஒழுங்கு" நடவடிக்கைகளையும் பலப்படுத்துவதானது அடிப்படையில்
குற்றவாளிகளை இலக்காகக் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு
திட்டங்களின் தாக்கத்தினால் வெளித்தோன்றியுள்ள வளர்ச்சிகண்டுவரும் சமூக அமைதியின்மை பற்றி கொழும்பு ஆளும்
வட்டாரம் ஆழமான அக்கறையை செலுத்துவதையே பிரதிபலிக்கின்றது. விலைவாசி உயர்வு, உயர் மட்ட வேலையின்மை,
வறுமை மற்றும் சமூக சேவைகள் வெட்டு ஆகிய அனைத்தும் டிசம்பர் 26 சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட அழிவினால் மேலும்
உக்கிரமடைந்துள்ளன. |