WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா
"Live 8"-a political fraud on behalf of imperialism
"Live 8"- ஏகாதிபத்தியத்தின்
சார்பாக ஓர் அரசியல் மோசடி
Statement by the Socialist Equality Party (Britain)
1 July 2005
Back to screen version
எடின்பரோ நகரத்தில் நடைபெறவுள்ள
Live 8 இசை நிகழ்ச்சிக்கு
முன்னர் ஜூலை 2ம் தேதி நடக்க உள்ள "Make Poverty
History" (வறுமையை வரலாற்றுப் பழைமையாக்கிவிடு) ஆர்ப்பாட்டபேரணியில்
சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களால் வினியோகப்பட்ட துண்டுப் பிரசுரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறை வளர்ச்சி பெற்றுள்ள
G-8 நாடுகளின் உச்சிமாநாட்டை
ஒட்டி அதற்கு முன்னதாக லண்டன், எடின்பரோ, பாரிஸ், பேர்லின், ரோம், பிலடெல்பியா, பார்ரி, டோக்கியோ
ஜோஹன்னெஸ்பர்க் மற்றும் மாஸ்கோ நகரங்களில் Live 8
இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவ் உச்சிமாநாடு ஸ்கொட்லாந்தில்
இது ஜூலை 6-8 ல் நடக்கும். Live 8
ஆபிரிக்காவில் வறுமைப் பிரச்சினையை பற்றி முக்கியப்படுத்தி காட்ட உள்ளது.
"வறுமையை வரலாற்றுப் பழைமையாக்கிவிடு" பிரச்சாரத்தின் மத்தியாக இருக்கும்
Live 8 நிகழ்ச்சி,
ஆபிரிக்காவிலுள்ள கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கும் மற்றும் ஏழ்மையை உண்மையில் தீர்க்கப்படவேண்டும் என்று
விரும்புவோர்களுக்கு எதிராக ஓர் அரசியல் மோசடியாக செயற்படுகின்றது. அதன் அமைப்பாளர்களும், அதன் செய்தித்
தொடர்பாளர்களும் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் மனிதாபிமான
அக்கறை இருப்பது போல் ஒரு போலிமுகமூடியை வழங்க முற்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், ஆபிரிக்காவில் ஏகாதிபத்திய
சக்திகளின் திட்டங்களை நியாயப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் பேரழிவாகிக் கொண்டிருக்கும் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் இருந்து தாங்கள் அரசியல்
ரீதியாக ஒதுங்கி இருப்பதாக காட்டிக்கொள்ள முற்பட்டுள்ள நேரத்தில் பிளேயருக்கும் புஷ்ஷிற்கும் பல மில்லியன் டொலர்
செலவில் பிரச்சாரம் நடத்தும் கருவியாகத்தான் Live 8
நிகழ்ச்சி உள்ளது. முந்தைய G 8
உச்சிமாநாடுகளை கடும் விரோதப் போக்குடன் வரவேற்ற மக்கள் இப்பொழுது இவ்வாறான பணிவான கோரிக்கையை
முன்வைப்பதை காணும்போது அனைத்து பெரிய சக்திகளின் தலைவர்களும் சந்தோசப்படுவர்.
எடின்பரோவில் ஜூலை 6 - 8 நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்குப் பெரும் பண ஊக்கம் தரும்
தலைவர்களுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு தருபவர்களில் சிலர், ஈராக் நிகழ்வு அதிகாரம் மற்றும் பணம் பிற்போக்கு
இலக்குகளுக்குப் பயன்பட்ட நிலையில், மக்களுடைய அழுத்தம் உலகத் தலைவர்களை முற்போக்கான பாதையில்
கொண்டுசெல்ல பயன்படுத்தப்படலாம் என கூறுகின்றனர். இது வெறும் சொற்ஜாலம் ஆகும். ஆபிரிக்காவில் ஏகாதிபத்தியத்தின்
திட்டங்கள், மத்திய கிழக்கில் அது நடத்திவரும் தாக்குதலுக்கு முரணானது அல்ல; மாறாக இது அதே பூகோள-அரசியல்
மூலோபாயத்தியின் ஒரு பகுதிதான்.
மத்திய கிழக்கில் தங்களுடைய போர்வெறிச்செயல்களுக்காகவும், உள்நாட்டில் சமூக, ஜனநாயக
உரிமைகள்மீது தாக்குதல் நடத்துவதற்காகவும், புஷ்ஷும், பிளேயரும் மில்லியன் கணக்கான மக்களின் வெறுப்பைத்தான்
உரிய முறையில் பெற்றுள்ளனர். ஆனால் "Make Poverty
History" யில் அடங்கியிருக்கும் அரசுசாரா அமைப்புக்கள்,
திருச்சபை குழுக்கள், Bob Geldof, U2
இசைக்குழுவின் முன்னணித் தலைவரான
Bono போன்றவர்கள்
இவர்களை வறியவர்க்கும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவுவதற்கு வரவழைக்கமுடியும் என்று எம்மை நம்பச் சொல்லுகிறார்.
Live 8 நிகழ்ச்சிகளில், எந்தவிதமான
உண்மை எதிர்ப்பு பற்றிய குறிப்பையும் ஒதுக்கிவைப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். லண்டனில் இசைவிழாவில்
பங்கேற்க இருக்கும் ஓர் அமைப்பின் மேலாளர்
Telegraph ஏட்டிற்கு கூறுகையில் புஷ்ஷின் மீது கலைஞர்கள்
எந்தக் குறைபாட்டையும் கூறக்கூடாது என Geldof
உத்திரவிடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். ஏனெனில் இந்த விழாக்கள் பிளேயரும்
பிரிட்டிஷ் நிதி மந்திரி கோர்டன் பிரெளனும் வரைந்துள்ள ஆபிரிக்க குழுத் திட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்டுவதைத்தான்
நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அத்திட்ட தயாரிப்பில்
Geldof இற்கும் பங்கு உண்டு எனக் கூறியுள்ளார். இதே காரணத்தையொட்டி,
ஜூலை 2ம் தேதி எடின்பரோவில் நடக்கவிருக்கும் "Make
Poverty History" விழாவில் பிரெளனுக்கு உயர்ந்த கெளரவம்
அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதற்கு பிரதியுபகாரமாக
Geldof உம்
Bonoஉம்,
G 8 உச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ளுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கூறும் அனைத்து கருத்துக்களும் பிளேரும் புஷ்ஷும் ஆபிரிக்காவை காப்பாற்றப் போகிறவர்கள் என்பது
போல் சித்திரிக்கின்றன; ஆனால் ஈராக் போரைப் பற்றி இவர்கள் மெளனம் சாதிக்கின்றனர். "உலக வளர்ச்சிக்
கட்டத்தில் பிளேயரும் பிரெளனும் John [Lennon],
மற்றும் Paul [McCartney]"
போன்றவர்களாவர் என்று Bono
விவரித்துள்ளார்; "தன்னுடைய இரண்டாம் ஆட்சிக்காலத்தில் ஆபிரிக்காவிற்கு முதல் பதவிக்காலத்தில் இருந்தது போலவே தைரியமான
ஆதரவை புஷ் கொடுத்தால், அந்தக் கண்டத்தை உயர்த்தும் நிலையில் வரலாற்றில் அவருக்கு உறுதியான இடம் உண்டு"
என்றும் அவர் கூறியுள்ளார்.
உச்சிமாநாட்டிற்கு முன்னர் வெளிவந்துள்ள அறிவிப்பான சில ஆபிரிக்க துணை சகாரா நாடுகளுக்கு
கடன் தள்ளுபடித்திட்டத்தை Geldof
"மில்லியன் கணக்கான மக்களுக்கு வெற்றி" என்று பாராட்டியிருப்பதுடன் "நாளை 280 மில்லியன் ஆபிரிக்கர்கள் முதல் தடவையாக
காலையில் எழுந்திருக்கும்போது எவருக்கும் ஒரு பைசாகூட கடன் கொடுக்கவேண்டியதில்லை என்ற நிறைவுடன் எழுந்திருப்பர்"
என்றும் கூறியுள்ளார்.
இது என்ன பிதற்றல்! முதலில் ஆபிரிக்காவின் வறியவர்கள் "உங்களுக்கோ, எனக்கோ
எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய கடன்கள் பெருநிறுவன, பெருநிதிய அமைப்புக்கள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள்
மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியும் போன்ற பலதேசிய நிறுவனங்களுக்குத்தான். இவற்றில் எதுவும் ஆபிரிக்காவில்
வறிய நிலையை குறைப்பதற்கு எந்த தீவிர நடவடிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை; ஏனெனில் அவை கண்டத்தை
சுரண்டுவது தொடர்ச்சியாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தை உடையவை.
ஜுன் 11 நடந்த G8
உடன்படான ஆக்கூடிய கடன்பட்ட ஏழ்மை நாடுகளுக்கான முன்னெடுப்பு (Highly
Indebted Poor Countries Iniative- HIPC) என்பதில்
உள்ள, சந்தை சார்பான நெறிகளை நடைமுறைப்படுத்த ஏற்றுள்ள 18 நாடுகளுக்குத்தான் பொருந்தும்; இவை அதிகபட்சமாக
ஆண்டு ஒன்றுக்கு $1.5 பில்லியன் கடன்கள் திருப்பிச்செலுத்த வேண்டியிருக்கும்; ஒருவேளை அதில் பாதித் தொகையாவும்
இருக்கலாம். இந்த நடவடிக்கை பெரிய நாடுகள் உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டு பின்னர் செயல்படுத்தாத
தோல்வியை பற்றி குறைகூறல்கள் எழும்பக் கூடாது என்ற அடிப்படையை நோக்கமாகக் கொண்டதாகும்.
எது கொடுக்கப்பட்டாலும், உடனே அதற்கு இணையாக ஏழை நாடுகளுக்கு கொடுக்கப்படும்
உதவியில் இருந்து அதேஅளவு தொகை குறைக்கப்பட்டுவிடும்; அதாவது உண்மையில் அதிக உதவிப் பணம் எதையும் அவை பெறுவது
கிடையாது. இந்தப் புதிய சலுகையை பெறுவதற்குக் கூட அவை "தனியார் துறை வளர்ச்சி பெருகுவதற்கு" தொடர்ந்து
ஆதரவளிக்க வேண்டும் என்பதோடு "உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும்
தனியார் முதலீட்டிற்கு இடையூறுகளை" அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில் கடன் மன்னிப்பு என்று 40 பில்லியன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சகாரா உட்பகுதி ஆபிரிக்காவிற்கு மட்டும் வெளிக் கடனாக $230 பில்லியன் உள்ளது; அங்கு "வளர்ச்சி பெற்றுக்
கொண்டிருக்கும் நாடுகள்" எனக் கூறப்படுபவை மொத்தத்தில் $2.4 டிரில்லியன் கடனை கொண்டுள்ளன. அதிகாரபூர்வமாக
கொடுக்கப்படும் $1க்கும் பதிலாக மேலைநாட்டு வங்கிகள், நிறுவனங்கள், அரசாங்கங்களால் $3 உறிஞ்சி எடுத்துக்
கொள்ளப்படுகிறது. இதையும் விட கூடுதலாக அங்கு செயல்படும் சர்வதேச நிறுவனங்கள் கொள்ளையடித்துக்
கொண்டிருக்கின்றன.
வாஷிங்டன், லண்டன், பேர்லின், பாரிஸ், ரோம், ஓட்டவா, டோக்கியோ மற்றும்
மாஸ்கோ ஆகியவற்றில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆபிரிக்காவிடம் தன்னலம் கருதா உயர் முறையில் நடந்து கொள்ளுவார்கள்
என்று எதிர்பார்ப்பதற்கில்லை; எப்படித் தங்கள் உடலில் இருந்து அவர்கள் குதித்து வெளியேற மாட்டார்களோ, அப்படித்தான்
இதுவும். அவர்கள் நிதி உயர் பிரிவுகளின் பிரதிநிதிகள்; அவர்களுடைய நலன்கள் எங்கும் உள்ள தொழிலாள வர்க்கத்தின்
நலன்களுக்கு எதிரானவை ஆகும்.
உலகின் மிக வறிய நாடுகளை பீடித்துக் கொண்டிருக்கும் பாரிய கடன்களின் அளவுகள்,
அவற்றின் பொருளாதார பிற்போக்குத் தன்மையின் அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா
மற்றும் ஜப்பான் போன்றவற்றில் முதலில் முதலாளித்துவம் உருவாகியபோது அவை தங்களுடைய பொருளாதார, இராணுவ
வலிமையை பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுவதிலும் இருக்கும் மூலவளங்களையும் சந்தைகளையும் சுரண்டி வந்தன. இந்த
ஏகாதிபத்திய சக்திகள் இன்னமும் ஆபிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க நாடுகளை விலைமதிப்பற்ற மூலப் பொருட்கள் மற்றும்
தங்கள் விளைபொருட்களுக்கான சந்தைகளுக்கு ஆதாரமாகத்தான் கருதுகின்றன. இப்பகுதிகளில் உள்நாட்டுப் போட்டியின்
அதிகரிப்பை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது; அதேபோல் ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் உண்மையான ஜனநாயக
விருப்புக்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள ஆளும் பிரிவினர் தங்களுடைய சலுகைகள்
நிறைந்த நிலைமைக்கு மேற்குசக்திகளையும், மிகப் பெரும் நிறுவனங்களுடன் கொண்டுள்ள உறவுகளைத்தான் நம்பியிருக்கின்றன.
அதற்குப் பிரதியாக அவர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்பு இவற்றின் கட்டளைகளை தொழிலாள
வர்க்கத்தின் மீதும் விவசாயிகள் மீதும் சுமத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்; மேலும் எண்ணெய், தாதுப் பொருட்கள்,
விவசாயப் பொருட்கள் மற்ற தேவையான மூலப் பொருட்கள் ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கு தடையின்றி
செல்லவும், சர்வதேச நிறுவனங்கள் இந்நாடுகளில் அமைக்கும் ஆலைகளில் உற்பத்தித் தடையின்றி நடக்கவும் இவர்கள் பொறுப்பேற்று
உதவுகின்றனர்.
பிற்போக்கு நாடுகளிடையே ஏகாதிபத்தியம் செலுத்தி வந்த ஆதிக்கத்தின் வடிவமைப்புக்கள்
சற்று மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தபோதிலும்கூட, ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இடையே இருக்கும் அடிப்படை
பொருளாதார, சமூக உறவுகள் அப்படியேதான் இருக்கின்றன.
19ம் நூற்றாண்டில் ஆபிரிக்காவை ஒடுக்கியதும் சுரண்டியதும் காலனித்துவ முறை மற்றும் ஆக்கிரமிப்பு
ஆகிய வழிவகைகளால் நிறைவேறியது; உலகம் அப்பொழுது போட்டியிட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளின்
செல்வாக்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வளர்ச்சியுற்ற பாரிய காலனித்துவ
எதிர்ப்பு இயக்கங்கள், அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே இருந்த பனிப்போர் ஆகியவை ஆபிரிக்கா
முழுவதுமான ''மாறுதலுக்கான காற்றுடன்' பெரும் சக்திகளை நேரடியான காலனித்துவ ஆட்சியில் இருந்து பின்வாங்கச் செய்தது.
ஆனால் தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆட்சிகள் பொருளாதார
மற்றும் அரசியல்ரீதியாக பெரும் சக்திகளுக்கு அடிபணிந்துதான் உள்ளன. அவர்களுக்கு தங்களுடைய பொருட்களை உலகச்
சந்தையில் விற்பதற்கு இவற்றின் தயவு தேவைப்படுவதுமட்டுமல்லாது அவர்களுடைய இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டில்
இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல் என்பது பலனற்றுபோய்விட்டதுடன், அங்கு தங்களுடைய ஆட்சியை அச்சுறுத்தக்
கூடிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் விரோதப் போக்கு காட்டிவருகின்றனர்.
சோவியத் ஒன்றியத்தின் உடைவு புதிய காலனித்துவ முறையின் மறு எழுச்சிக்கு வகை செய்துள்ளது.
புஷ் நிர்வாகம்தான் இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வலிமையின் மூலம் அமெரிக்காவின் அறைகூவலுக்குட்படாத மேலாதிக்கத்தை
எங்கும் சுமத்த முற்பட்டுள்ளது; ஈராக்கை பெரும் இரத்தக்களரியாக்கி ஆக்கிரமிப்பு நடத்தியுள்ளதில் இது
முழுத்தன்மையையும் காட்டியிருக்கிறது.
இப்பொழுது நடைபெறுவது ஆபிரிக்க பகுதிகளுக்காக மீண்டும் பெரும் போட்டியாகும். மிக
முக்கியமான மூலப் பொருட்கள், எண்ணெய் இருப்புக்கள், மற்ற மூலப் பொருட்கள், சந்தை இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான
கடும் போட்டி நிலவுவதுடன்; இதற்கு காரணம் பெரும் சக்திகளிடையே உலக ஆதிக்கம் செலுத்துவதற்கான கடும் போட்டி
உள்ளது. எனவேதான் இந்த உதவி, கடன் தள்ளுபடி போன்ற செயற்பாடுகள் சர்வதேச நிறுவனங்கள் தடையற்று அந்நாடுகளின்
உள்சந்தையை அணுகும் வாய்ப்பை பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிணைத்து உள்ளன.
ஈராக்கில் இருப்பது போலவே, புஷ், பிளேயர் கோஷ்டி முழுவதிற்கும் முக்கிய அக்கறை
எண்ணெய்மீது கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதாகும். உலகில் உறுதியாக உள்ள எண்ணெய் இருப்புக்களில் 7.2
சதவிகிதம் ஆபிரிக்காவில் இருக்கிறது; இது வட அமெரிக்கா அல்லது முந்தைய சோவியத் ஒன்றியத்தில் இருந்ததைவிட கூடுதலாகும்.
ஆபிரிக்காவில் உப-சகாரா பகுதியில் இருக்கும் கச்சா எண்ணைய் உற்பத்தி 2000ல் நாள்
ஒன்றிற்கு 4 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக இருந்தது; இது அமெரிக்காவில் எண்ணெய் இறக்குமதியில் 16 சதவிகிதம்
ஆகும். வாஷிங்டனின் மூலோபாய திட்டத்தில் ஆபிரிக்க எண்ணெயின் முக்கியத்துவம் ஜனவரி 2002ல் "ஆப்பிரிக்க எண்ணெய்
-- அமெரிக்க தேசிய பாதுகாப்பு, ஆபிரிக்க வளர்ச்சிக்கு முன்னுரிமை" என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கின்
பொருள் அடக்கம் ஆகும்.
விக்டோரியா அரசாட்சியின் சகாப்ததத்தில் காலனித்துவ முறையை, "இருண்ட கண்டத்தை"
நாகரிகப்படுத்த வேண்டிய "வெள்ளை மனிதனின் சுமை" என நியாயப்படுத்திய அறிவு ஒளி சான்றவற்கள் குறைவில்லாமல்
இருந்தனர். அவர்களின் வாரிசான தற்கால தாராளவாதிகளும், தொலைத்தொடர்பாளர்களும் சந்தை ஆதரவு "நிபந்தனையாளர்களாக"
விளங்கி அற்பத்தனமான ஆரம்ப உதவி முயற்சிகளை பெருமைப்படுத்துவதுடன், அரசாங்கங்கள் மேற்கு ஆதரவு உடைய
கொள்கையை "வெளிப்படைத்தன்மை", "ஜனநாயகம்" என்ற பெயரில் தொடரவேண்டும் என்று கோருகின்றனர்.
ஆபிரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உண்மையான நண்பர்கள்
Gleneavles
ல் நடைபெற விருக்கும் G8
உச்சி மாநாட்டின் பகட்டு, ஆடம்பர சூழ்நிலையில் கிடைக்க மாட்டார்கள்; பிரிட்டன், ஐரோப்பா, ஆசியா, அமெரிக்க
கண்டங்கள் இவற்றில் உள்ள தொழிலாள வர்க்கத்தினரிடையேதான் இருப்பார்கள். ஆபிரிக்கா மற்றும் உலகின் மற்றைய ஒடுக்கப்பட்டுள்ள
மக்களின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை உதவித் தொகைகள் மூலமோ, ''நியாயமான வணிகத்திற்கான'' முறையீடுகள்
செய்வதன் மூலமோ வெளிவரா. அனைவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் உற்பத்தி முறைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும்
ஒரு ஏகாதிபத்திய-எதிர், சர்வதேச சோசலிச இயக்கத்தின் மூலம், வர்க்க ஒடுக்குமுறையையும் இலாப முறையையும்
அகற்றி திட்டமிட்ட பொருளாதாரத்தை செயல்படுத்தும் இயக்கத்தின் மூலம்தான் அது நிறைவேற்றப்பட முடியும். இந்த மாற்றீட்டிற்காகத்தான்
சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் போராடுகின்றது.
|