World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிFor social equality. For the United Socialist States of Europe. Vote PSG. Statement of the Partei für Soziale Gleichheit (Socialist Equality Party) on the 2005 German elections சமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள். 2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை 29 June 2005 சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஜேர்மனியில் வருவிருக்கும் தேசிய தேர்தல்களில் குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தும். சோசலிச சமத்துவக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாகும். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மானிலத் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சிக்கு (SPD) க்கு ஏற்பட்ட பேரழிவுத் தோல்வியை அடுத்து, சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் மே 22 அன்று கூட்டாட்சி பாராளுமன்றத்திற்கு (Bundestag) விரைவில் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்தார். செப்டம்பர் 18 அன்று இத்தேர்தல்கள் நடைபெறும் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் பங்கு பெறுவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி ஆகஸ்ட் ஆரம்பத்திற்குள், தான் நிற்க இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் 2,000 உறுதிப்படுத்தப்பட்ட கையெழுத்துக்களை சேர்த்து தேர்தல் திணைக்களத்தின் முன்வைக்க வேண்டும். பேர்லின், சாக்சனி, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்ஸ மாநிலங்களில் குழுக்களால் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படுகின்றன; அவற்றிற்கு உற்சாகமான வரவேற்பும் கிடைத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த இலையுதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஜேர்மன் பாராளுமன்ற தேர்தல்களில் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. பேர்லின், சாக்சனி, வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா மற்றும் ஹெஸ்ஸ மாநிலங்களில் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தும். உழைக்கும் மக்கள், ஓய்வூதியம் பெறுவோர், வேலையின்மையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு புதிய கட்சியை கட்டமைக்கும் அடிப்படையைக் கொண்டு இத்தேர்தலில் நாங்கள் பங்கு பெறுகிறோம். ஜேர்மன் பாராளுமன்றமான Bundestag இல் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்ற சமூக நலச் செலவினங்களில் ஏற்படும் குறைப்புக்களை நாங்கள் எதிர்க்கிறோம்; பெரிய கட்சிகளை முற்றிலும் எதிர்க்கும் அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்: பெரு வணிகம், வேலைகொடுப்போர் இவர்களுடைய இலாப நலன்களைவிடக் கூடுதலான முன்னுரிமை மக்களுடைய தேவைகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். சமூக சமத்துவம் மற்றும் நீதி என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சோசலிச சமுதாயத்திற்காக நாங்கள் போராடுகிறோம். சர்வதேச உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைந்து, தேசிய, இன, மத பிரிவினைகள் கடக்கப்பட்டால்தான் இது அடையப்பட முடியும். நம்முடைய இலக்கு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்குவது ஆகும். இத்தேர்தலில், தொழிலாளர் வர்க்கம் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி என்ற கூட்டணி அரசாங்கத்தின் திவாலான தன்மையை மட்டும் எதிர்கொள்ளாமல், முதலாளித்துவ அமைப்பு முறையின் வரலாற்றுரீதியான நெருக்கடியையும் எதிர்கொள்ளுகிறது. உற்பத்திமுறை உலகந்தழுவியிருக்கும் தன்மையிலும், தேசிய அரசு முறைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையே பெருகிவரும் முரண்பாடுகளும் கடந்த நூற்றாண்டில் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகள், முரண்பாடுகளையும் ஒன்றாக கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. ஈராக்கில் நடக்கும் போரும், அந்நாட்டை மிருகத்தனமான இராணுவ வெறி முறையில் ஆக்கிரமித்திருப்பதும் ஒரு தொடக்கம்தான். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களையொட்டி உலகத்தை மறுபங்கீட்டிற்கு உட்படுத்தும் முயற்சியிலும், முதலாளித்துவ முறைக் கொள்ளை, சுரண்டல் இவற்றின் அடாவடித்தனமான முறைகளில் ஓர் உலக ஒழுங்கை அமைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த அழுத்தத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துகொண்டிருக்கிறது. அதனது முற்போக்கான இயல்புகள் அகற்றப்பட்டு, பெருவணிகம் தன்னுடைய தன்மையை சமூக நலன்களின் பேரழிவுத் தாக்குதல்களை நடத்தும் ஒரு கருவியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, சமூக சமத்துவமின்மை ஆகியவை ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுவதுடன் இணைந்திருப்பதோடு திட்டமிட்ட வகையில் இராணுவ வலிமை மறு எழுச்சி பெற்று வருகிறது. மீண்டும் ஐரோப்பா கண்டம் தேசிய மோதல்களின் அரங்காக மாறிக் கொண்டுவருவதுடன், கடந்த நூற்றாண்டில் நடந்த இரு பெரும் அழிவுப் போர்களில் இருந்து எதையும் கற்கவில்லை என்பதுபோல் உலகப் போர் என்ற தீய உருவமும் மீண்டும் கண்முன்னே நிற்கிறது. முதலாளித்தவ முறைக்கு எதிராக ஒரு பரந்த அரசியல் இயக்கத்தை தயார் செய்யும் வகையில் நாங்கள் இந்தத் தேர்தலில் பங்கு பெறுகிறோம். ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமான அரசியல் தலையீட்டை மேற்கொள்ளாவிட்டால், பிற்போக்கு பேரலையை தடுத்து அதன் விளைவாக ஏற்படும் பேரழிவு விளைவையும் தடுக்க இயலாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போருக்கு எதிராக பெரும் மக்கள் பிரிவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதும், பிரான்சிலும், நெதர்லாந்திலும் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக "வேண்டாம்" வாக்கெடுப்பு வந்துள்ளதும் அத்தகைய இயக்கத்தின் முன்னிழல்களாக உள்ளன. ஆனால் ஒரு சோசலிச திட்டத்தின் அடித்தளத்தில் ஓர் ஐரோப்பிய ரீதியான கட்சியை கட்டுவதன் மூலம்தான் தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுத்தப்பட முடியும். ஜேர்மனியிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள எந்த ஒரு பிரச்சினையும் தேசிய அரசு என்ற வடிவமைப்பின் கீழ் தீர்க்கப்பட்டுவிட இயலாததாகும். ஓரிடத்தில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மற்றோர் இடத்தில் உள்ள தொழிலாளரை நிறுத்தும் சர்வதேச நிறுவனங்கள், நிதிவணிக அரக்கர்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே ஒரு பாதுகாப்புத்தான் இருக்க முடியும்: தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேச உத்தியை ஒற்றுமை, ஒத்துழைப்பு இவற்றின் அடிப்படையில் கட்டமைத்து வளர்க்க வேண்டும். ஜேர்மனியிலும் ஏனைய தொழிற்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு இன்னும் பல குறைவூதிய நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்; அவர்களுடைய பரிதாபத்திற்குரிய நிலைமை மற்ற இடங்களிலும் ஊதியத்தைக் குறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது; எவ்வாறு ஜேர்மனியிலேயே கிழக்கில் இருக்கும் குறைவூதிய நிலையை காட்டி மேற்கிலும் ஊதியங்களை குறைக்கும் முயற்சிகள் உள்ளனவோ அதபோல்தான் எல்லா இடங்களிலும் கொண்டுவர முயற்சி நடக்கின்றது. இக்காரணத்தினால் நாங்கள் முன்னாள் சமூக ஜனநாயக கட்சித் தலைவரான ஒஸ்கார் லாபொண்டைனும் (Oskar Lafontaine) மற்றும் அவருடைய ஜனநாயக சோசலிச கட்சியான (PDS) உடனான கூட்டு, மற்றும் சமூக சமத்துவத்திற்கான தேர்தல் மாற்றீடு (WASG) இவற்றிற்கு உறுதியான எதிர்ப்பாளர்களாக உள்ளோம். லாபொண்டைன் இன் சமீபத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் (Fremdarbeiter- நாஜிக்கள் வெளிநாட்டு தொழிலாளரைப் பற்றி கூற பயன்படுத்திய சொற்றொடர்) களுக்கு எதிரான எச்சரிக்கைகள், ஜேர்மனிய தொழிலாளர்களின் வேலைகளை எடுத்துக் கொள்ளுபவர்கள் என்ற குற்றச்சாட்டை அவர் கூறியிருப்பது, அவருடைய நிலையில் இருந்து ஏற்பட்ட பிழை அல்ல; அவருடைய முன்னோக்கின் ஒரு பகுதிதான் இவை. அவர் ஒரு வலுவான முதலாளித்துவ முறையை பிரான்ஸ்-ஜேர்மனியின் தலைமையின் ஆதிக்கத்தின் கீழ் காண விழைகிறார்; இது உலகம் முழுவதும் எதிர்த்து நின்றாலும் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் என்றும் நினைக்கிறார். அவருடைய சமீபத்திய புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு-ஜேர்மன் கூட்டமைப்புத்தான் ஐரோப்பாவை "அதன் நலன்களை பாதுகாப்பதற்கு" உதவமுடியும் என்று அவர் வாதிட்டுள்ளார். இந்த இலக்கை அடையும் பொருட்டு அவர் தேசியவெறி உணர்வையும் பயன்படுத்த தயாராக உள்ளார். முஸ்லிம்கள் குடிபெயர்ந்து வருவதற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்; ஏனெனில் முஸ்லிம்களுடைய அதிக பிறப்பு விகிதம் ஐரோப்பாவின் கலாச்சார அடையாளத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் கூறுகிறார். இதே காரணத்தை காட்டித்தான் அவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி நுழையவிடக் கூடாது என்றும் எதிர்ப்பை காட்டியுள்ளார். ஒன்று அல்லது சில நாடுகளை சுற்றி ஒரு பாதுகாப்பு சுவரினை நிறுவி வேலைகளையும், ஊதியங்களையும் பாதுகாப்பது என்பது பலனற்றதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். பூகோளமயமாக்கம் என்பது அனைத்து தேசிய முன்னோக்குகளையும் இல்லாதொழித்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் கிழக்கு ஜேர்மனி, கிழக்கு ஐரோப்பா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் தேசிய கொள்கையை ஒட்டியும், "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாடு உலகந்தழுவிய முறையின் உண்மை நிலைப்பாட்டிற்கு எதிராக நிற்கமுடியாமலும் சரிந்தது. இதே விதிதான் இப்பொழுது உலகில் எல்லா இடங்களிலும் சமூக ஜனநாயகத்தை பற்றிக் கொண்டுள்ளது. தேசிய வடிவமைப்பிற்குள் சமூக சீர்திருத்தங்களை செய்ய முடியாத சூழ்நிலையில், சமூக ஜனநாயக கட்சிகள் பெருவணிகத்துடன் திரும்பிவரமுடியாத அளவிற்கு இணைந்துவிட்டன. சமூக ஜனநாயத்தை மீட்பது என்பது முடியாததாகும். யதார்த்தத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்ட அரசியல் திட்டங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு பதிலாக, ஓர் அரசியல் இருப்பிநிலை ஏட்டை தயாரித்தல் வேண்டும்; சோசலிச முன்னோக்கு பற்றி தீவிர விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு என்னும் முறையில் சோசலிச சமத்துவக் கட்சி, சமூக ஜனநாயக கட்சியையும், ஸ்ராலினிசத்தையும் பல தசாப்தங்களாக எதிர்த்து மார்க்சிசத்தை காப்பாற்றிய ட்ரொட்ஸ்கிச உலக இயக்கத்தின் மரபுகளின் உருவமாக விளங்குகிறது. சமூக ஜனநாய கட்சி-பசுமைக் கட்சி கூட்டணியின் இருப்புநிலை ஏடு (ஐந்தொகை) பதவிக்காலம் முடிய முன்னரே தேர்தல்களுக்காக அதிபர் ஷ்ரோடர் விடுத்த அழைப்பானது சமூக ஜனநாயக கட்சியின் அரசியல் திவால்தன்மையின் பிரகடனம் ஆகும். பிற்போக்காளர்களான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சிக்கு (Free Democratic Party -FDP) அதிகாரத்தை மாற்றுவார்களே அன்றி சமூக ஜனநாயக வாதிகளின் "செயற்பட்டியல் 2010" (Agenda 2010) இன் கீழ் கொண்டுவரப்பட்ட சமூக நல செலவுக் குறைப்புத்திட்டங்களில் இருந்து பிறழ மாட்டார்கள்; அத்திட்டம் பெருநிறுவன இயக்குனர்களின் திட்டமிடல் அறைகளில் தயாரிக்கப்பட்டது ஆகும். ஷ்ரோடர் ஓர் இறுதி எச்சரிக்கையை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார்: "நீங்கள் செயற்பட்டியல் 2010, ஹார்ட்ஸ் IV இவற்றுடன் இணைந்த அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது அவற்றைவிட மோசமாக உங்களுக்கு ஒரு CDU/CSU/FDP அரசாங்கம்தான் கிடைக்கும்" என்பதே அது. ஆறரை ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பின்னர், தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தட்டுக்களின் நலன்களை பிரதிபலிப்பதாக கூறிய சமூக ஜனநாயக கட்சியின் கருத்துக்கள் முற்றாக மதிப்பிழந்துள்ளது. 1988 இலையுதிர்காலத்தில், ஷ்ரோடர் அரசாங்கம் அதிகாரத்தை ஏற்றபின், இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிறுவப்பட்ட கூட்டாசி குடியரசில் மிக அதிகமான முறையில் சமூக, ஜனநாயக உரிமைகளை பரந்தளவில் தாக்கியுள்ளது. ஒரு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைமையிலான அரசாங்கம் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்குமானால் அதற்கு கணிசமான எதிர்ப்பு இருந்திருக்கும். அரசாங்கத்தின் சமூக கொள்கையின் இருப்புநிலை ஏடு கூறுகிறது: ஐந்து மில்லியனுக்கு மேல் வேலையில்லை, வேலையில் இருப்பவர்களில் 20 சதவிகிதத்தினர் குறைவூதிய பிரிவில் உள்ளனர், ஏழு இல்லங்களில் ஒன்று வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளது, மில்லியனர்களின் அணி 510,000 ல் இருந்து 775,000 ஆக உயர்ந்துள்ளது, சமுக செல்வத்தின் 47 சதவிகிதம் மக்கட்தொகையின் உயர் செல்வக்கொழிப்பு உடைய 10 சதவிகிதத்தினரால் சொந்தமாக்கப்பட்டுள்ளது, அதேவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களில் பாதிப்பேருக்கு கிட்டத்தட்ட உடைமை ஏதும் கிடையாது. உயர்ந்த வருமானம் பெறுவோரின் வரிவிதிப்பை 53 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதத்திற்கு ஷ்ரோடர் அரசாங்கம் குறைத்துள்ளது; பெருவணிகத்தின் மீதான வரியை 42 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைத்துள்ளது; இந்த மறு பகிர்வு செல்வந்தரை கொழிக்கச் செய்து பொதுக்கருவூலத்தை காலி செய்துள்ளது. இது உள்ளூர் மற்றும் மாநில அளவில் பெரும் கடன் சுமையை விளைவித்துள்ளது மற்றும் கல்வி, கலாச்சார, விடுமுறைக்கால பொழுதுபோக்கு வசதிகளை சிதைத்துவிட்டுள்ளது. சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலும் கடுமையானதுதான். இரகசியப்படைகள், போலீஸ் துறைகள், கூட்டாட்சி எல்லைப் பாதுகாப்பு படை ஆகியவை மக்கள்மீது கொண்டுள்ள அதிகாரம் தீவிர விரிவிற்கு உட்பட்டுள்ளது. வேவு பார்க்கும் அரசாங்கத்தின் காதுகளில் இருந்தும் கண்களில் இருந்தும் தனியார் பற்றிய தகவல் எதுவும் மிஞ்சியிருப்பதில்லை. ஹிட்லரின் கெஸ்டாபோ அனுபவத்தை ஒட்டி போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் அரசியலமைப்பு சட்டத்தில் நிலையூன்றியிருந்த போலீசை, உளவுத்துறையில் இருந்து பிரித்தது. இப்பொழுது கிட்டத்தட்ட அகற்றப்பட்டுவிட்டது. ஜோர்ஜ் ஓர்வெல்லின் பெரிய அண்ணனின் அரசாங்கம் என்பது நடைமுறையில் விரைவாக நிறுவப்பட்டுள்ள யதார்த்தமாகிவிட்டது. வெளிநாட்டு தொழிலாளர்களும், அகதிகளும்தான் அரசின் இந்தவகை முக்கிய இலக்கில் பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். அவர்கள் சட்டரீதியாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். முழு மக்கட்தொகுப்பின் உரிமைகளையும் தாக்கும்பொருட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். தடுப்புக் காவலில் வைத்தல், முழுக் குடும்பங்களையும் கட்டாயமாக நாடு கடத்துதல், ஒருதலைப்பட்சமாக விசா தருவதை மறுத்தல், எல்லைகளில் இறப்புக்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற திகைப்பு ஆகியவை ஜேர்மனியில் இருக்கும் அகதிகளின் அன்றான வாழ்க்கை உண்மைகளாகும். இறுதியாக, இராணுவம் (Bundeswehr) 1990கள் வரை அரசியலமைப்பின்படி தற்காப்பிற்காக மட்டும் என்று செயலாற்றியவை இப்பொழுது உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் ஹெல்முட் கோலின் முந்தைய அரசாங்கத்தின்கீழ், மிக மூத்த இராணுவ அதிகாரியாக இருந்த ஜெனரல் இன்ஸ்பெக்டர் Klaus Naumann ஒரு புதிய மூலோபாயத்தை இராணுவத்திற்காக தயாரித்தார்; அது தெளிவான வகையில் ஏகாதிபத்திய நோக்கத்தை கொண்டிருந்தது: ஜேர்மனிய இராணுவத்தின் மிக முக்கியமான பணி, "சர்வதேச அரசியல், பொருளாதார, இராணுவ, சுற்றுச்சூழல் உறுதித்தன்மையை காப்பதும்," "தடையற்ற உலக வணிகத்தை காத்தலும், மிக அடிப்படை மூலப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதற்கு வகை செய்தலும்" என்று கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் அதிபர் ஷ்ரோடர் மற்றும் அவருடைய பசுமைக்கட்சி வெளியுறவு மந்திரியின்கீழ் நடைமுறையாயிற்று. இப்படி பசுமைக் கட்சியனர் வலதுபுறம் பாய்ந்தது சமூக ஜனநாயக் கட்சியுடைய வலது பாய்ச்சலை விட வியப்பை குறைவாகக் கொடுத்துவிடவில்லை. 1968 எதிர்ப்பு இயக்கத்தின் எச்சங்களில் இருந்து வெளிப்பட்டு, அவர்களுடைய ஆரம்ப நோக்கங்கள் சுற்றுச் சூழலை காப்பது, அடிமட்டம் வரை ஜனநாயகம், அமைதிவாதம் மற்றும் ஓரளவிற்கு சமூக நீதி என்று இருந்தன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுவதை பசுமைக் கட்சியினர் எப்பொழுதுமே நிராகரித்துள்ளனர். இன்று அவர்கள் சமூக ஏணியில் சற்று உயர்படியில் ஏறியுள்ள மத்தியதர வர்க்கத்தின் சிறு தட்டு ஒன்றின் நலன்களை பிரதிபலிக்கின்றனர். கீழிருந்து எவ்விதமான சமூக கோரிக்கைகள் வருவதற்கும், அதிகரித்த அளவில் அவர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றனர். அவர்களை பொறுத்தவரையில் சமூகநல அரசாங்கத்தின் "சீர்திருத்தங்கள்" என்பது விரைவாகவோ, போதுமானதாகவோ இல்லை. நேற்றைய அமைதிவாதிகள் இன்றைய உலகந்தழுவிய முறையில் செயலாற்றும் இராணுவவாத தேவையை வலியுறுத்துபவர்களாகிவிட்டனர். பூகோளமயமாக்கலும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமும் சமூக ஜனநாயக- பசுமைக் கட்சி கூட்டணியின் அரசியல் திவால்தன்மையின் பின்னணியில், உலகப் பொருளாதாரத்தின் அடிப்படையான மாறுதல்கள் உள்ளன. கணினி தொழில்நுட்பத்துறை, தொலைத் தொடர்புகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான புதிய மாறுதல்கள் உற்பத்தி முறைகளின் வளர்ச்சியை உண்மையிலேயே உலகளாவியதாக மாற்றும் அடிப்படையை கொடுத்துள்ளது. இத்தன்மையிலேயே இது ஒரு மகத்தான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. முதன் முதலாக, உலகம் முழுவதும் இருக்கும் மனிதகுலத்தின் உற்பத்தி ஆற்றல் சக்திகளை இணைத்து ஆலைகள் மற்றும் அலுவலக பணிகளை தானியக்க முறையில் செய்யமுடியும். இப்படி மனித உற்பத்தி திறனில் வந்துள்ள மகத்தான முன்னேற்றம் உலகம் முழுவதிலும் இருக்கும் வறுமை, பிற்போக்குத்தனம் போன்றவற்றை அகற்றி அனைவருடைய பொது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு வகை செய்யும். ஆனால் நடப்பதோ இதற்கு முற்றிலும் மாறானது ஆகும். உலகப் பொருளாதாரமானது, உலகம் முழுவதும் குறைவூதியம், குறைந்த வரிகள், குறைந்த செலவில் மூலப் பொருட்களை பெறுதல், ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு எதிராக திருப்புதல், சீனா போன்ற மற்றய நாடுகளில் இருக்கும் குறைவூதியங்களை பயன்படுத்தி மற்ற நாடுகளிலும் குறைவூதியங்கள், சமுகத் தரத்தை குறைத்தல் இவற்றைக் கொண்டுவர விரும்பும் சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச நிதி அமைப்புக்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அனைத்து மனிதத் தேவைகளும் இலாபங்களுக்கான மற்றும் தனியார் செல்வப் பெருக்கிற்கான இந்த போராட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்படுகின்றன. முதலாளித்துவ பெருநிறுவனங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டாகவேண்டும் மற்றும் சந்தையின் ஏறுமாறான நிலைமைக்கு ஆளாவேண்டும் என்பதன் காரணத்தால் அவை அறிவார்ந்த முறையில் உற்பத்தியை ஒழுங்கமைக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக இயங்குவது சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்ற கட்டுக்கதை உண்மைகளினால் நாள்தோறும் தவறு என்று நிரூபணம் ஆகியுள்ளது. சமூகச் சீரழிவு எங்கும் பரவிவருவதுடன், உலகின் ஒட்டுமொத்தப் பகுதிகளும் விவரிக்கவொண்ணா ஏழ்மையில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன, அதேவேளை ஒரு சிறு பிரிவு மட்டும் பகட்டுத்தனமான ஆடம்பரத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. இயற்கையான சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டுவருவதுடன், உலக வல்லரசுகளிடையே பதட்டங்கள் பெருகிவருகின்றன. சமூக முரண்பாடுகள் கூடுதலாக வளரச்சியடையும்போது, சீர்திருத்த கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மூலதனத்தின் பக்கம் நகர்ந்து, தொழிலாளர்களினதும் பெருவணிகங்களினதும் நலன்கள் ஒத்தே உள்ளன என்று பிரகடனப்படுத்துகின்றன. தொழிற்சங்கங்கள் தங்கள் மொழியில் "ஜேர்மனியை ஒரு தொழில்துறை நிலையமாக காப்பதற்கு" என்று கூறிக்கொண்டு தங்களை "தேசிய நலன்" என்பதில் அடித்தளமாகக்கொண்டு அவையே ஊதியம், சமூக உரிமைகள் இவற்றின் மீது தாக்குதல்களை ஒழுங்கமைக்கின்றன. "சமூகப் பொருளாதார சந்தையை மாறியிருக்கும் உலகந்தழுவிய பொருளாதாரத்தின் நிலைமக்கு ஏற்ப முற்றிலும் ஏற்கும் வகையில் கொள்ளும் தேவைக்காக" என்று ஷ்ரோடர் அரசாங்க ''2010 செயற்பட்டியலை'' நியாயப்படுத்தியுள்ளது. பூகோளமயமாக்கமானது, சமூக ஜனநாயகத்தின் தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையை இல்லாதொழித்ததுடன், உலகந்தழுவிய ரீதியில் தொழிலாள வர்க்கம் சர்வதேச தாக்குதலை நடாத்துவதற்கான புறநிலை சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கை, அதாவது தங்களுடைய உழைக்கும் திறனை விற்றால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், பாரியளவில் உலகம் முழுவதும் பெருகிவிட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிதும் விவசாயத்தின் ஆதிக்கத்தைக் கொண்டிருந்த பகுதிகள் கூட இப்பொழுது உலகின் உற்பத்திப்பட்டறைகளாக மாறிவிட்டன. சமூக வேறுபாடுகள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் வேலைப்பழுக்கள் ஒத்த முறையில் உள்ளன. உலகம் முழுவதிலும் இருக்கும் தொழிலாளர்கள் இதே சர்வதேச நிறுவனங்களையும், ஊதியம், வேலைச் சுமை இவற்றின்மீதான அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர்; நவீனதொடர்பு முறையினால் உலக நிகழ்வுகளை பற்றி முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலான அறிவை பெற்றுள்ளனர். மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்படும் அலுவலகம் செல்லுபவர்கள், பல்கலைக் கழகப் பட்டதாரிகள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருடைய நிலைமை எவ்விதத்திலும் ஆலைத் தொழிலாளர்களிடம் இருந்து அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை. அவர்களும் மோசமடைந்துவரும் வேலைசூழ்நிலை, சரிந்து வரும் ஊதியங்கள், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றனர். பலரும் தங்களுடைய பழைய, சீர்திருத்த அமைப்புக்களில் இருந்து விலகியுள்ளனர். சமூக ஜனநாயக கட்சி தன்னுடைய உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும் சரிவைக் கொண்டுள்ளது; கிட்டத்தட்ட 300,00 உறுப்பினர்கள் 1990களின் தொடக்கத்தில் இருந்து விலகிவிட்ட நிலை மற்றும் பதினோரு மாநில தேர்தல்களில் தோல்விகளை கண்டுள்ள நிலையில் அது இருக்கிறது. சந்தையினதும் மூலதனத்தினதும் கோரிக்கைக்காக சமூகத் தேவைகளை அடிபணியச்செய்த கொள்கைக்கு கிடைத்த அதிகரித்துவரும் எதிர்ப்பின் விளைவுதான் இது. முதலும் முக்கியமானதுமாக, சமூக ஜனநாயக கட்சியின் பாரம்பரிய தளத்தில் இருந்து தொழிலாள வர்க்க வாக்காளர்கள் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திவிட்டனர். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தலில் ஏற்பட்ட நெருக்கடி இந்த வழிவகையின் முக்கிய உதாரணம் ஆகும். பாரம்பரியமாக பெரும் சமூக ஜனநாயக கட்சிக் கோட்டையாக இருந்த இதில் அக்கட்சி 50 ஆண்டுகளில் மோசமான முடிவை பதிவு செய்துள்ளது; மாநில சட்ட மன்றத்தில் முதல் தடவையாக 39 ஆண்டுகளில் தன்னுடைய பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துள்ளது; 1998 கூட்டாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளில் 40 சதவிகிதத்தைக்கூடப் பெறவில்லை. அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக்கள் எப்பொழுதும் அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வகைகளுக்கெல்லாம் மீறி புறத்தே நன்கு வேகமாக வளர்ந்து வருகிறது. 2004 வசந்த காலத்தில், தொழிற்சங்கங்கள் தங்களை, செயற்பட்டியல்-2010க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் தலைமையில் இருத்திக் கொண்டன; ஆனால் பின்னர் அதிபருடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து அதற்கு உடன்பாட்டை தெரிவித்தன. இக்கோடையில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்களானது, தொழிற்சங்கங்கள், முக்கிய அரசியல் கட்சிகள் இவற்றின் கட்டுப்பாட்டிற்கும் அப்பால் முதன் முதலாக வெளியே தோன்றிய பரந்த இயக்கத்தின் தன்மையை சுட்டிக் காட்டின. தொழிலாள வர்க்கத்திற்கும் அரசியல் உயர் செல்வந்த தட்டுக்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த பிளவு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதிலும் இளைஞர்கள், தொழிலாளர்கள் என்று ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள், எதிர்கால வேலையின்மை, வறுமை, அடக்குமுறை, போர் என்பவற்றையே ஏற்கத்தயாரற்ற நிலையில் மில்லியன் கணக்கானவர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கைக்காக போராட தயாராக உள்ளனர். ஆனால் இந்தப் போராட்டங்கள் அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தயாரிப்பிற்குட்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணியை செய்யும் வகையிலேயே சோசலிச சமத்துவ கட்சி எதிர்வரும் தேர்தலில் பங்கு கொள்கின்றது. லாபொன்டைனும் ஜனநாயக சோசலிச கட்சியும் ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் ஜனநாயக சோசலிச கட்சியின் (PDS) தலைவரான Gregor Gysi இருவரும் வழிநடத்தும் ''இடதுகளின் கட்சி'' (Party of the Left) என்பது தோற்றுவிக்கப்பட்டதை இப்பொழுது ஆராய்தல் அவசியமானதாகும். இத்தகைய கட்சியின் செயற்பாடு தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீனமான வளர்ச்சியையும் ஒடுக்குவதாகும். சமூக ஜனநாயக கட்சிக்கு உண்மையான மாற்றீடு எதையும் இக்கட்சி பிரதிபலித்துக் காட்டவில்லை. மாறாக இது சமூக ஜனநாயகத்தை மீட்கத்தான் பார்க்கிறது; இப்பொழுதுள்ள சமூக ஜனநாயகக் கட்சி என்ற வடிவமைப்பில் இல்லை என்றால் வேறுவித சீர்திருத்த, தேசியவாத வேலைத்திட்டத்தின் பதிப்பாக வேறு ஒரு உருவில் மீட்க முயல்கிறது. லாபொன்டைனும் அவருடைய கூட்டாளிகளும் சாதாரண மனிதனுக்காக வாதிடுபவர்களாக காட்டிக் கொள்ள முற்பட்டு செயற்பட்டியல் 2010 ஐயும் ஹார்ட்ஸ் IV ஐயும் உரத்த குரலில் கண்டிப்பர். ஆனால் அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கான உண்மையான சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் ஒரு சோசலிச சமூக மறுசீரமைப்பையும் எதிர்ப்பவர்கள் ஆவர். ஷ்ரோடரின் புதிய தாராளவாத கொள்கைகள் பற்றிய குறைகூறல்கள் இருந்தபோதிலும், லாபொன்டைன் தான் ஒரு சமூக ஜனநாயகவாதியாக இருப்பதையும், எப்போதும் அவ்வாறுதான் இருப்பேன் என்பதையும் மறைத்தது இல்லை. ஜனநாயக சோசலிச கட்சிக்கு தான் கொடுத்துள்ள ஒத்துழைப்பு அக்கட்சி "சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படை கூறுபாடுகளுக்கு" அதாவது, "ஜனநாயகம், தடையற்ற சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வியாபாரம் மற்றும் இலாபம்" இவற்றிற்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பதால்தான் என்று நியாயப்படுத்தியுள்ளார். (Süddeutsche Zeitung, June 16, 2005). சுதந்திர வியாபாரத்திற்கும் இலாபத்திற்கும் விசுவாசம் காட்டி, அதே நேரத்தில் சமூக நலன்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் எவ்வாறு இயலும் என்பது லாபொன்டைனின் இரகசியமாகவே உள்ளது. உண்மையில் இந்த புதிய கட்சி, இரண்டு பெரும் அதிகாரத்துவ கருவிகளான சமூக ஜனநாயகத்தினதும் மற்றும் ஸ்ராலினிசத்தின் கூட்டைத்தான் பிரதிபலிக்கிறது; இத்தகைய அரசியல் அடிப்படை முறைகள்தான் மேற்கு ஜேர்மனியிலும், கிழக்கு ஜேர்மனியிலும் போருக்குப் பின்னர் நிலவியிருந்தன. தேர்தல் மாற்றீட்டின் (WASG) முக்கிய தலைவர்கள் நீண்டகால சமூக ஜனநாயகவாதிகளாகவும், தொழிற்சங்க தலைவர்களாவும் இருந்தவர் ஆவர். தன்னுடைய பங்கிற்கு லாபொன்டைன் தன்னுடைய 39 ஆண்டு கால சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தொடர்பை நினைவு கூரலாம்; இக்காலக்கட்டத்தில் அவர் சமூக மோதல்களை ஒடுக்குவதில் வல்லுனராக வெளிப்பட்டிருந்தார். சார்புரூக்கன் நகர சபைத்தலைவர் என்னும் முறையில் அவர் சமூக நல உதவித் தொகைகளை நம்பியிருந்தவர்களுக்கு குறைவூதிய வேலைகளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாக இருந்தார். சாரில் மாநில அரசாங்கத்தின் தலைவராக இருந்தபோது, IG Metall இன் தொழிற்சங்கத்தின் ஒத்துழைப்புடன் இவர்தான் எஃகு, நிலக்கரி தொழில்களை அப்பகுதியில் இருந்து தகர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். 1998ம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்தபோது, லாபொன்டைன்தான் ஷ்ரோடரின் வெற்றி உறுதியாக கிட்டுவதற்கு பெரும் பாடுபட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சக்திவாய்ந்த வணிக பிரிவினரின் நலன்களின் விமர்சனத்தை அடுத்து அவர் ஜேர்மனியின் நிதி மந்திரி, சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்தார். ஒரு போராட்டம் நடத்தி மக்களுக்கு நேரடி ஆதரவு கோராமல், இவர் நிபந்தனையற்ற சரணை அடைந்தார். இவருடைய முக்கிய அக்கறை, அரசாங்கத்தின் சிக்கன, சமூகநல வெட்டுக்களை எப்படியும் மக்கள் திரண்டு, தடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. தன்னுடைய பங்கிற்கு, ஜனநாயக சோசலிச கட்சியானது (PDS) சோசலிச ஐக்கிய கட்சியின் (SED) பொறுப்பை எடுத்துக் கொண்டது; அது, பெயர் ஒருபுறம் இருக்க, சோசலிசத்துடன் எந்தப் பொதுக் கருத்தையும் கொண்டதில்லை. முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிச கட்சி என்னும் முறையில், தொழிலாள வர்க்கத்தின் எந்தவிதமான, அனைத்து எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அது அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற அடுக்கின் ஆட்சியை பாதுகாத்தது. 1989ல், கிழக்கு ஜேர்மனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் மக்கள்திரளின் ஆர்ப்பாட்டங்கள் வந்தபோது, SED/PDS இரண்டும் முதலாளித்துவ "தடையற்ற சந்தைப்" பொருளாதார முறையின் தடங்கலற்ற மாறுதலை உறுதிப்படுத்திக் கொடுத்தன. கட்சித் தலைவர்கள் அதிகாரத்துவ அமைப்பிற்கு தங்கள் விசுவாசத்தை உறுதிபடுத்தினர். இம்முறையில்தான் ஜனநாயக சோசலிச கட்சி தோன்றியது. இக்காலக் கட்டத்தை நினைவு கூர்கையில், கிழக்கு ஜேர்மனியின் கடைசி SED/PDS அரசாங்கத்தின் தலைவரான Hans Modrow எழுதினார்: "நாட்டை ஆளுவதை பாதுகாக்கப்பதுதான் என்னுடைய வேலை என்று உணர்ந்தேன். என்னுடைய கருத்தின்படி (ஜேர்மனிய) இணைப்பு என்பது தவிர்க்கப்பட முடியாதது, உறுதியான முறையில் கையாளப்பட்டு அது அடையப்படவேண்டும்." அப்பொழுதிலிருந்து, ஜனநாயக சோசலிச கட்சி கிழக்கு மாநிலங்களில் முதலாளித்துவ அமைப்பிற்கு ஒரு தூணாகவும், உத்தரவாதம் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சோசலிச ஐக்கிய கட்சியை போன்றே, ஜனநாயக சோசலிச கட்சியும் சோசலிசத்திற்கு உதட்டளவு மரியாதைதான் கொடுக்கிறது; நடைமுறையில் சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்தவ ஜனநாய யூனியனில் இருந்து அதிகம் வேறுபட்டதில்லை. மாநிலத்திலும், உள்ளூர் ஆட்சிகளிலும் அவற்றின் அதிகாரபூர்வ அரசாங்கப் பங்கு என்னவெனில், ஜனநாயக சோசலிச கட்சியின் பிரதிநிதிகள் மக்களிடையே வரவேற்பு பெறாத ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுதான். பேர்லின் நகரத்தில் இருக்கும் சமூக ஜனநாயக கட்சி-ஜனநாயக சோசலிச கட்சி கூட்டணியானது, வேலைகள் அழித்தல், ஊதியங்கள் தகர்த்தல், அரசாங்க துறையில் தொழிலாளர்களின் வேலை நேரச் சுமைகளை அதிகரித்தில் போன்றவற்றை செயல்படுத்துகிறது. ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் லாபொன்டைன் மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான ஒரு திட்டத்தைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. எங்களுடைய நோக்கம் சமூக ஜனநாயக சீர்திருத்தத்திற்கு புத்துயிர் கொடுப்பது அல்ல; மாறாக சமுதாயத்தை சோசலிச முறையில் சீரமைக்க வேண்டும் என்பதேயாகும். இது தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் அரசியல் இயக்கத்தை பெரும் மக்கள் இயக்கமாக கொண்டுவருவதின் மூலம்தான் அடையப்பட முடியும். ஐரோப்பாவை மேல் இருந்து ஒற்றுமைப்படுத்தும் வகைக்கு மாற்றீடாக நாங்கள் கீழிருந்து ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரே ஜனநாயக, முற்போக்கான மாற்றீடு ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள்தான். ஓர் ஒன்றுபடுத்தப்பட்ட சோசலிச ஐரோப்பா கண்டம் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் தேசிய அரசுகள் என்ற பிரிவினையைக் கடந்து, ஐரோப்பாவின் மகத்தான செல்வமும், உற்பத்தித் திறனும் சமுதாயத்தில் அனைவருடைய நலன்களுக்காகவும் வளர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிடும். அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தொழிலாளர் எதிர்கொள்ளுவதற்கு உறுதுணையாக இருக்கும்; அமெரிக்க தொழிலாளர்களையும் வெள்ளை மாளிகையில் இருக்கும் போர்வெறியர்களை எதிர்த்துப் போராட்டம் காண ஊக்குவிக்கும். உலகங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊக்கம் கொடுத்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரட்டவும், தங்கள் நாடுகளிலேயே அடக்குபவர்களை அகற்றுவதற்கும் பெரும் உந்துதல் கொடுக்கும். இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு நாங்கள் கீழ்க்காணும் திட்டத்தை முன்வைக்கிறோம் சமூக சமத்துவத்திற்காக வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதார பாதுகாப்பு, கல்வி ஆகியவை அடிப்படை சமூக உரிமைகள் ஆகும். பெருவணிக இலாப நலன்களின் மீது இவை முன்னுரிமை பெறவேண்டும். பாரியளவில் வேலையின்மை இருப்பதை அகற்றுவதற்கு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, முதியோர் ஆதரவு, கலாச்சார வளர்ச்சி, சமூக பொருளாதார உள்கட்டுமான வளர்ச்சி என்னும் முக்கிய பிரிவுகளில் மில்லியன் கணக்கான வேலைகள் தோற்றுவிக்கப்படுதல் என்ற பெரிய திட்டம் தேவையாகும். ஆரம்பத்தில் இது கிழக்கு ஐரோப்பாவில் செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் வசதியும் பாதுகாப்பும் நிறைந்த முதுமைக்கால ஓய்வூதியம், பரந்த அளவில் பொதுநிதியத்தில் இருந்து அளிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு, பல்கலைக்கழக அளவு வரையிலும்கூட தடையற்ற, இலவசக் கல்வி ஆகியவை கிடைக்க வேண்டும். இத்தகைய கொள்கைக்கு எதிரான முக்கிய வாதம் பொதுக் கருவூலங்களில் பணக் குறைவு என்றும் அதிக பணம் இல்லை என்பதும் ஆகும். உண்மையில் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு செல்வம் நிறையவே உள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் செல்வம் சலுகை பெற்றுள்ள ஒரு சிலரிடம்தான் குவிந்துள்ளது. சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் பரந்த திட்டம் என்பதற்கு பொருளாதாரம் சமுதாயம் முழுவதிற்குமாக பகுத்தறிவு முறையில் அமைந்திருக்க வேண்டும் என்ற முன்கருத்து உள்ளது; அது பெருவணிகம், வங்கிகள் இவற்றின் இலாப நோக்கத்திற்காக மட்டும் இருக்கக் கூடாது. பெரு வணிக நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் பொது உடைமையாக்கப்பட்டு, சமுதாய, ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள்தான் இயங்க வேண்டும். பெருவணிகத்தின் அழுத்தத்தில் தத்தளிக்கும் சிறு வணிகங்களுக்கு எளிய கடன் வசதிகள் கொடுக்கப்பட வேண்டும்; ஆனால் இதற்குப் பிரதியாக அவர்கள் தங்களிடம் உள்ள தொழிலாளர்களுக்கு கெளரவமான ஊதியத்தை வழங்க வேண்டும். மிக உயர்ந்த வருமான தரத்தை உடையவர்களுக்கு வரிவிதிப்பு கடுமையாக இருக்கவேண்டும்; அப்பொழுதுதான் சமூக வளர்ச்சி திட்டத்திற்கு போதிய நிதி கிடைக்கும். அடையாளத்திற்கு மில்லியனர்களுக்கு வரி உயர்த்தவேண்டும் என்ற சமீபத்திய முன்வைப்புக்கள் அவ்வாறான திட்டத்திற்கு போதாதவையாகும். ஜனநாயகத்திற்கும், குடியேறுபவர்களின் உரிமைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், உண்மையான அரசியல் சமத்துவம் அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைப்பதற்கும் ஒரு சோசலிச முன்னோக்கு கூறுபாடு மையமாக இருத்தல் வேண்டும். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். ஜனாநாயக உரிமைகளுக்கான போராட்டம் மற்றும் சமூக உரிமைகளுக்காக போரிடல் என்பவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவையாகும். சமுதாயத்தின் செல்வம் ஒரு சிறுபான்மையிரிடம் குவிந்திருக்கும் வரையில், வேலை செய்யும் இடம் நடைமுறையில் எஜமானர்களுடைய சர்வாதிகார இடமாக இருந்து தொழிலாளர்களுக்கு முடிவெடுக்கும் உரிமை ஜனநாயகக் கட்டுப்பாடு கொடுக்கப்படாத வகையில், செய்தி ஊடகம் பெருவணிகத்தின் எடுபிடியாக இருக்கும் வரை, கல்வியும், கலாச்சாரக் கூறுபாடுகளும் ஒரு சிறு குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும் வரை, உண்மையான ஜனநாயகம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. கலாச்சாரம், கல்வி, கலைகள் இவற்றில் குறிப்பாக செலவினங்களில் வெட்டுக்கள் என்றால் அவை சமுதாய இழையில் மாபெரும் நாசத்தை ஏற்படுத்தும். இராணுவவாதம், மிருகத்தனம், மிகுந்த சுயநலம் இவற்றைப் போற்றுதலுக்கும், பழைய கலை, கலாச்சார பாரம்பரியங்களை தூற்றுவதற்கும் இடையே ஆழ்ந்த தொடர்பு உண்டு. ஐரோப்பாவில் கடுமையான அடக்குமுறை, இழப்புக்கள் என்ற சூழ்நிலையில் இருக்கும் மில்லியன் கணக்கான அகதிகள், குடியேறுவோருடைய பொறுப்பை எடுத்துக் கொண்டால் ஒழிய தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. ஜேர்மனியின் பிற்போக்குத்தனமான, பிரிவினை உணர்வு காட்டும் குடியேற்றச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்; அகதிகளைக் குற்றவாளிகளாக்கி, நாட்டினின்றும் கடத்துதலையும் முற்றிலும் எதிர்க்கிறோம். தங்களுக்கு விருப்பமான ஐரோப்பிய நாட்டில் மக்கள் வாழ்ந்து, வேலை செய்யும் உரிமைக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஊக்கம் கொடுக்கிறோம். குடியேறுபவருக்கு எதிரான வேட்டைகளும், மதம், தோல்நிறம், பிறந்தநாடு என்ற பிரிவை ஏற்படுத்துவதும் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கும் நோக்கமுடையவும், பெரும் மக்கட்தொகுப்பை கட்டிற்குள் வைக்கக் கருதும் திட்டங்களுமாகும். அகதிகளும், குடியேறுவோரும் உழைக்கும் வர்க்கத்தின் முக்கியமான பிரிவினராகும்; எதிர்வரும் போராட்டங்களில் அவர்கள் முக்கியமான பங்கை கொள்ளுவர். போருக்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பில் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் தங்களின் சுதந்திரமான விடையிறுப்பை தொழிலாளர் தொகுப்பு வளர்த்துக் கொள்ள வேண்டும். வாஷிங்டனுடன் ஜேர்மனி, மற்ற ஐரோப்பிய நாடுகள் சமரசம் காணும் முயற்சியை கண்டு அமைதிப்படுத்திக்கொண்டுவிடக் கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு மனித சமுதாயத்தையே பேரழிவில் ஆழ்த்திவிடும் தன்மையை கொண்டுள்ளது. உலக சமாதானத்தை அச்சுறுத்தும் ஒற்றைப் பெரும் ஆபத்தாக அது உள்ளது. நேட்டோ உடனடியாக கலைக்கப்பட்டுவிட வேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் ஆதரவு தருவதுடன் அனைத்து அமெரிக்க இராணுவ தளங்களும் ஐரோப்பாவில் மூடப்படவேண்டும் என்றும் கோருகிறோம். அதே நேரத்தில், வாஷிங்டனுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களுடைய ஏகாதிபத்திய திட்டங்களையும் தொடர்கின்றன. இதுதான் ஜேர்மனிய இராணுவ சீரமைப்பின் பின்னணியிலும், கூட்டாக ஐரோப்பிய தாக்கும் படைகளை வளர்த்தல், சுதந்திரமான ஐரோப்பிய ஆயுத தளவாடங்கள் தொழில் வளர்க்கப்பட வேண்டும் என்று கூறுவதின் பின்னணியிலும் உள்ளது. அத்தகைய வளர்ச்சிகளை நாங்கள் எதிர்க்கிறோம்: உடனடியாக ஜேர்மனி, மற்றும் ஐரோப்பிய படைகள் பால்கன்கள், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா மற்றும் ஈராக், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் ஆகியவற்றில் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறோம். சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருக நாங்கள் ஒன்றும் இனிமையான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டமைப்பது என்பது மிகவும் கடினமான செயல் ஆகும்; இதற்கு தொலைநோக்கும், விடா முயற்சியும் தேவையாகும். முதலாளித்துவ நெருக்கடிக்கும், அதில் இருந்து தோன்றும் ஆபத்துக்களுக்கும் அற்புதமான தீர்வு ஏதும் இல்லை. மிக விரைவான, எளிதான தீர்வு இருக்கிறது என்று எவரேனும் உறுதியாகக் கூறினால் அவர் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது வாய்வீச்சாளனாக இருக்க வேண்டும் இல்லாவிடில் வெறுமே மக்களை திருப்திப்படுத்தவதற்கு பேசுபவராக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் பணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும். பிற்போக்குத்தனமான யூனியன் கட்சிகள் மற்றும் "தடையற்ற சந்தை" ஆதரவுக் கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சி இவற்றைவிட "குறைந்த தீமையாளர்கள்" என கருதி சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் அல்லது லாபொான்டைன் மற்றும் ஜனநாயக சோசலிச கட்சியிடம் நம்பிக்கை வளர்ப்பவர்கள் புதிய தோல்விகளுக்குத்தான் வழிவகுக்கிறார்கள். அரைகுறை நடவடிக்கைகள், தந்திர உத்திகள், சலுகைகள், தேர்ந்த கொள்கைகளை கண்டால் அதற்கு வெறுப்பு இருப்பது, தைரியமான பார்வைக்கும் செயலுக்கும் பதிலாக, சந்தர்ப்பவாத குறுகிய கண்ணோட்டத்தை ஆதரிப்பது ஆகிய சமூக ஜனநாயக கொள்கைகள் அரசியல் சிந்தனையில் மூச்சை திணறவைக்கும் செல்வாக்கைத்தான் கொண்டுள்ளது. இப்பொழுது, சமூக ஜனநாயக கட்சியின் கொள்கை சரிவு சூழ்நிலையை தூய்மைப்படுத்தி, தீவிர அரசியல் விவாதத்திற்கு தடையற்ற பாதையைக் கொடுத்துள்ளது. சமூக ஜனநாயக கட்சியுடன் கணக்குத் தீர்க்கப்படவேண்டும் என்றால் அதற்கு அடிப்படையில் ஒரு புதிய அரசியல் அணிதிரள்வு தேவையாக உள்ளது. அதாவது அதன் அரசியல் கருத்துகளிடம் இருந்து முழு உணர்வுடன் முறித்துக் கொண்டு மார்க்சிசத்தின் புரட்சிகர மரபுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவைப் பொறுத்தவரையில், சோசலிச சமத்துவக் கட்சி தனக்கென ஒரு பிரத்தியேகமான வரலாற்று மரபுத் தளத்தை கொண்டுள்ளது. சமூக ஜனநாயகத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் ஒரு மார்க்சிச மாற்றீடு உள்ளது என்பதற்கு நான்காம் அகிலம் உயிர்த்த நிரூபணமாக உள்ளது; ஸ்ராலினிசம், மாஸ்கோவிலோ, கிழக்கு பேர்லினிலோ மோசடித்தனமாக மார்க்சியத்தின் தொடர்ச்சியை பிரதிபலிப்பதாக கூறிவந்திருந்தது. நான்காம் அகிலம் 1938ம் ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கியால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சீரழிவிற்கு எதிராக சர்வதேச சோசலிச திட்டத்தை காப்பதற்காக நிறுவப்பட்டது. இதன் வேர்கள் இடது எதிர்ப்பிற்கு செல்கிறது; அது 1923ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவிற்கு எதிராக போராடியது. ஸ்ராலினிசத்தை எதிர்த்த பல நூறாயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிரை 1930களில் நடந்த கொடூரங்களில் இழந்தனர்; அவர்கள் அனைவருமே ட்ரொட்ஸ்கிசத்தை ஆதரிப்பவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் ஏராளமான கட்டுரைகளில் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலின், ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் Thalmann ஆகியோருடைய கொள்கைகளின் விளைவாக ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்திருந்தார். ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியையும் சமூக ஜனநாயக கட்சியும் நாஜிக்களுக்கு எதிராக ஒன்றுபட்ட கூட்டணியை அமைக்குமாறு வலியுறுத்தினார். அவருடைய எச்சரிக்கைகள் பலனற்றுப் போயின. இதன் விளைவாக அதிதீவிர இடது மற்றும் ஸ்ராலினிச தோற்கடிப்பு கொள்கைகள், ஆகியவற்றின் மூலம் சமூக ஜனநாயக கட்சி தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் மீது கட்டுப்பாட்டை தொடர்ந்து கொண்டிருந்ததுடன், ஹிட்லர் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. 1940ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி, மெக்சிக்கோவில் ஒரு சோவியத் இரகசிய படை நபரால் படுகொலை செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இயைந்துள்ளது. தொழிலாளர் இயக்கத்தின்மீது சமூக ஜனநாயகத்தினதும் ஸ்ராலினிசத்தினதும் ஆதிக்கம் மார்க்சிச மரபுகளை தனிமைப்படுத்த முடிந்தது. இப்பொழுது இந்த அதிகாரத்துவங்களின் திவாலான அரசியல் தன்மை ஒரு புதிய வரலாற்றுக் காலத்தை திறக்கிறது; இதில் நான்காம் அகிலம் பெருகிய வரவேற்பைக் காண்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகம் முழுவதும் படர்ந்திருக்கும் வாசகர்களை கொண்டுள்ள ஒரு கருவியை பெற்றிருப்பதுடன் அதே மார்க்சிசத்தின் உண்மைக் குரல் எனவும் அறியப்பட்டுள்ளது. இதன் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறும் வகையில் சோசலிச சமத்துவ கட்சிக்கு கையெழுத்துக்கள் சேகரிக்க, அரசியல் பிரசுரங்களை வினியோகிக்க, தேர்தல் கூட்டங்களை தொடர்ச்சியாக அமைக்க என்ற விதங்களில் பரந்த ஆதரவு தேவைப்படுகிறது. பிரச்சாரத்தின் நிதித் தேவைகளுக்கும் தாராளமான நன்கொடைகளும் எங்களுக்கு தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஓர் உண்மையான சோசலிச மாற்றீட்டின் தேவையை உணர்பவர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறு ஊக்குவிக்கிறோம்; அவர்கள் சோசலிச சமத்துவ கட்சியுடன் தொடர்பு கொள்ளுமாறும், அரசியல் விவாதத்திலும் செயற்பாடுகளிலும் பங்கு பெறுமாறும் சோசலிச சமத்துவ கட்சியையும் நான்காம் அகிலத்தையும் கட்டிமைக்கும் பணியில் ஈடுபடுமாறும் அழைக்கிறோம். |