World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஸ்பெயின்EU budget debacle leaves Spain isolated ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் நெருக்கடி ஸ்பெயினை தனிமைப்படுத்துகிறது By Mike Ingram and Vicky Short ஐரோப்பிய ஒன்றியம், ஜூன் 18 உச்சி மாநாட்டில், தன்னுடைய 2007-2013க்கான பட்ஜெட் பற்றி ஒர் உடன்படிக்கை காண்பதில் தோல்வியுற்றதை அடுத்து ஸ்பெயின் நாட்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் (PSOE), வெளியுறவு, உள்நாட்டுக் கொள்கையில் பெரும் சங்கடத்தை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க தலைமையிலான ஈராக்கிற்கு எதிரான போரில் முந்தைய மக்கள் கட்சிக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த பின்னர், PSOE ஸ்பெயின் நாட்டை மீண்டும் ஐரோப்பிய சார்புடையதாக செய்வதற்கும், பிரான்ஸ், ஜேர்மனியுடன் நெருக்கமான உறவு கொள்ளுவதற்கும் முயன்று வந்துள்ளது. ஆனால் உச்சி மாநாட்டில் பிரதம மந்திரி ஜோஸ் ஜாபடெரோ, ஐரோப்பிய பட்ஜெட்டிற்கு இசைவு கொடுப்பதை தடுக்கும் வகையில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயருடைய புறத்தே ஆதரவு நல்குவது போன்ற துரதிருஷ்டமான நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டார். ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தின் உட்குறிப்புக்கள் ஸ்பெயினுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி ஜாபடெரோ கவலையுற்றிருந்தார்; குறிப்பாக உதவித் தொகைகள் வருவதில் 8 பில்லியன் யூரோக்கள் பின்னர் இழக்க நேரிடும் என்பது பற்றி அவர் கவலை இருந்தது. ஆனால் ஐரோப்பிய பட்ஜெட்டு திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால் ஸ்பெயினைப் பொறுத்தவரையில் உதவித் தொகைகள் உடனடியாக நிறுத்தப்படாமல் நாளடைவில் மெதுவாகக் குறைக்கப்படலாம் என்றும் அவர் நம்பினார்; அப்படி இருந்தால் தக்க பொருளாதார மாறுதல்கள் செய்யப்படலாம் என்ற கருத்தும் அவருக்கு உண்டு. ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு இசைவு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொண்ட முதலும் இதுவரை ஒரே நாடும் ஸ்பெயின்தான். ஜாபடெரோவும் PSOE உம் தங்கள் முழுச் செல்வாக்கையும் "வேண்டும்" பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வகையில், 76 சதவிகித வாக்காளர்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். ஸ்பெயினில் கிடைத்த இத்தகைய வெற்றி மற்ற நாடுகளிலும் அரசியலமைப்பிற்கு வெற்றியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரான்சிலும், நெதர்லாந்திலும் பெரும்பாலான வாக்காளர்களால் இது நிராகரிக்கப்பட்டுவிட்டது; இதையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே ஒரு நெருக்கடி ஏற்பட்டது; பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாட்டில் பட்ஜெட் பற்றி உடன்பாட்டிற்கு வருவதில் தோல்வி ஏற்பட்டு அரசியலமைப்பு இசைவு அளிக்கும் வழிவகையில் காலவரையற்ற தாமதமும் வந்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் கடுமையான விவாதத்தை தொடர்ந்து, ஸ்பெயின் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் பதவி முடிந்து வெளியேறிச் செல்லும் தலைவரான லுக்சம்பர்க்கின் பிரதம மந்திரி ஜோன் குளோட் ஜங்கர் கொண்டுவந்த சமரசத் திட்டத்திற்கு எதிராக பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டு வாக்களித்தது. இதனால் பிளேயரின் நிலைப்பாடான, ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் நிதி உதவியில் 20 ஆண்டுகளாக இங்கிலாந்து பெற்று வந்த உதவித் தொகைபற்றி, பொது விவசாய கொள்கை (Common Agricultural Policy CAP) முழுமையாக மாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் உடன்பாட்டை ஸ்பெயின் கொண்டது என்ற உட்குறிப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, CAP மற்றும் பல வளர்ச்சி ஆரம்ப முயற்சிகளின் கீழ் ஸ்பெயின் பெற்று வந்த உதவித் தொகைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாடுதான் ஜாபெடரோவின் வாக்கை உறுதி செய்தது. புதிதாக வந்துள்ள 10 கிழக்கு ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு உதவித் தொகைகள் தேவை என்பதால் 2008க்குள் ஸ்பெயினுக்கு கொடுக்கப்பட்டு வரும் உதவித் தொகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய திட்டத்திற்கு எதிராக அவர் உச்சி மாநாட்டில் இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு வேண்டும் என்று வாதிட்டார். ஸ்பெயினுக்கு வரக்கூடிய உதவித் தொகைகள் 2006 வரை கிடைக்கும்; அதற்குப் பின் அவை ஐயத்திற்குரியவையாகும். எனவேதான் ஸ்பெயினின் துணை ஜனாதிபதி மரியா டெரிசா பெர்னாண்டஸ் டி லா வேகா, ஒரு மோசமான சமரசத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் பெறுவதற்கு பதிலாக உச்சி மாநாட்டில் இருந்து உடன்பாடு காணாமலேயே நகர்ந்துவிடலாம் என்று கூறினார். பிரிட்டிஷ் பட்ஜெட் வரிச்சலுகை தொடரப்படுவதற்கும் வெளிப்படையாக ஜாபெடரோ எதிர்ப்பு தெரிவித்தார். உச்சிமாநாட்டிற்கு பின்னர் அவர் ஸ்பெயின் பார்லிமென்டில் கூறினார்: "GNP யை அடிப்படையாகக் கொண்டுள்ள உதவித் தொகை முறையைத்தான் நாம் ஏற்க விரும்புகிறோம்; இது பிரிட்டிஷாருக்கு கொடுக்கும் சலுகையுடன் பொருந்தாது." ஸ்பெயினை பொறுத்தவரையில் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் தொகை இழப்பு பெரும் அழிவைத்தான் கொடுக்கும். ஐரோப்பாவிலேயே அதிக உதவித் தொகை பெறும் நாடாக இது உள்ளது; கிட்டத்தட்ட 93 பில்லியன் யூரோக்களை 1975ல் இருந்து இது பெற்றுள்ளது. Spiegel Online ல் வந்துள்ள ஒரு கட்டுரையின்படி, இந்தப் பணம் ஸ்பெயின் நாட்டின் நெடுஞ்சாலைகளில் பத்து கிலோமீட்டர்களில் நான்கைக் கட்டுவதற்கும், மிக வேகமான இரயில் பாதைகள், விமான நிலையங்கள், சாக்கடை திட்டங்கள் அமைக்கப்படுவதற்கும், ஆண்டு ஒன்றுக்கு 300,000 வேலைகளை தோற்றுவிப்பதற்கும் பயன்பட்டது. சில பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய நிதியத்தை பெறும் தகுதியை இழக்கும் நிலைக்கு ஏற்கனவே வந்துள்ளன; இதற்கு காரணம் அவற்றின் உற்பத்தித் திறனில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது; தாராளமான உதவித்தொகை வந்துள்ளதால் அவ்வாறு ஏற்பட்டுள்ளது. இது ஒரு Catch 22 நிலைமையை சுட்டிக் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியை வாய்ப்பாகக் கொண்டு Popular Party தன்னுடைய தாக்குதல்களை PSOE மீது முன்வைத்துள்ளது. PP கட்சியின் தலைவரான Mariano Rajoy, "இழந்தோரின் அச்சு" என்று தன்னை ஜாபெடெரோ மாற்றிக் கொண்டதாகக் கூறியிருக்கிறார். ஏனெனில் இவர் பிளேயரின் சீர்திருத்த அழைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது அவருடைய கருத்து. முன்னாள் பிரதம மந்திரியான ஜோஸ் மாரி அஜ்நர், அரசியலமைப்பிற்கு இசைவு கொடுக்கும் வழிவகை தொடரப்படவேண்டும் என்று ஜாபெடெரோ முன்வைத்துள்ள கருத்து "விசித்திரமானது" என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ராஜோயுடைய ஏளனம் எப்படி இருந்தாலும் "அவர் வேறுவிதமாகச் சிறந்த முறையில் நடந்து கொண்டிருப்பார் என்பதற்கு குறிப்பு ஏதும் இல்லை" என்று International Herald Tribue தெரிவிக்கிறது. PP இன் நிலைப்பாடு முற்றிலும் முரணானதாக இருக்கிறது. ராஜோய் "ஸ்பெயினுடைய நலன்களை இரும்பு போல் உறுதியாக காப்பாற்றாவிட்டால்" ஜாபெரெடோதான் பொறுப்பாவார் என்று அச்சுறுத்தியுள்ளார்; ஆனால் அத்தகைய வகை ஸ்பெயினை மற்ற ஐரோப்பிய நாடுகளுடனும், வாஷிங்டனுடனும், மற்ற உலகப் பெருவணிக நிறுவனங்களுடனும், பூசலுக்கு கொண்டுவரும். பிரிட்டனின் மானியங்களுக்கு எதிரான விரோதப் போக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கு நிதிகள் ஒதுக்கப்படவேண்டும் என்ற பிரான்ஸ், ஜேர்மனியின் கோரிக்கைகளும் ஸ்பெயினுடைய நலன்களுக்கு விரோதமானவை; பழைய ஸ்ராலினிச நாடுகளுக்கு எதிராக ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு என்ற வகையில் ஸ்பெயின் போட்டியிட முடியாது. இதே அளவிற்கு முக்கியத்துவத்தை கொண்டுதான், ஸ்பெயினின் முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பிய மானிய உதவிகளின் அடிப்படையில் மிகப்பெரிய விவசாயிகள் தொகுப்பை கொண்டிருக்கிறது. இந்த சமூக அடுக்கு வரலாற்றளவில் வலதுசாரிக்கு தளமாக பிராங்கோவின் சர்வாதிகாரம், அதற்கும் முந்தைய காலங்களில் இருந்து, தொழிலாள வர்க்கத்திற்கு எதிர் ஈடு கொடுக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மானிய உதவிகள் அகற்றப்பட்டுவிட்டால், இந்த அடுக்குகளிடையே ஒரு பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி அது PP க்கு பாதக விளைவுகளை கொடுக்கும். பிளேயரின் தடையற்ற சந்தை கொள்கைகள் வகைக்கு கொள்கையளவில் ஆதரவு கொடுத்திருந்தாலும், PP ஐ பொறுத்தவரையில், அதையொட்டி தனக்கு ஆதரவுத் தளத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மானியங்களை அகற்றுவதற்கு PP ஒப்புக் கொள்ள முடியாது. உதாரணமாக இந்த உதவிக்கான தகுதியை இனிப் பெற முடியாது என்ற நிலை Galicia மற்றும் Castillia-La Mancha என்ற பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ளது; இவை 2000ல் இருந்து வளர்ச்சித் தொகையாக 1.3 பில்லியன் யூரோக்களை பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய சராசரியைவிட ஊதிய உயர்வு இப்பகுதியில் ஏற்பட்டிருப்பதற்கு இது ஒரு காரணம் ஆகும். 1990ல் இருந்து சர்வாதிகாரி தளபதி பிராங்கோவின் மந்திரி சபையில் இருந்த Manuel Fraga வினால் ஆளப்பட்டு வரும் பகுதியான Galicia 2 பில்லியன் யூரோக்களை இழக்கும் நிலையில் உள்ளது. ஜூன் 19ல் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு தொகுதி இழப்பினால் ப்ராகா தன்னுடைய பெரும்பான்மையை இழந்துவிட்டார். ஆயினும்கூட, ஸ்பெயினின் பொருளாதார கஷ்டங்களுக்கு விடை காணவேண்டும் என்றால் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதலில்தான் இறுதி விடை பெரு வணிக நலன்களுக்கு இருக்கிறது என்று PP பறைசாற்றிவருகிறது. ABC என்னும் வலதுசாரி நாளேடு மார்ச் 2000ல் லண்டனும் மாட்ரிடும் அமெரிக்க பொருளாதார இயக்க சக்திக்கு ஒப்பாக ஐரோப்பாவும் நிற்பதற்கு வகைசெய்யும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்று ஐரோப்பிய குழுவிற்கு கிடைக்க வகைசெய்துள்ளன என்று கூறியிருக்கிறது. அது தொடர்கிறது: "நம்முடைய நாட்டின் துரதிருஷ்டம் லண்டனுடன் நாம் கொண்டிருந்த சிறப்பு உறவு 2004 அரசாங்க மாற்றத்திற்கு பின்னர் ஆவியாகிவிட்டது; இப்பொழுது இரண்டு அரசாங்கத் தலைவர்களுக்கும் இடையே, மைய-இடதைப் பற்றி நிற்க வேண்டும் என்ற கோட்பாட்டு பிணைப்பு இருந்தபோதிலும், செயலாக்கத்திற்கு நல்ல உறவு இல்லை. ஒன்றியத்திற்கு தேர்ந்த முறையில் அளிப்புக் கொடுப்பதில் பிளேயர் வெற்றியடைந்தால், ஐரோப்பிய கொள்கையை நாம் மீண்டும் வரையறுக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்து, ஒரு புதிய ஒருமித்த கருத்தில் சேர்வதற்கும், பிரான்சிடம் நாம் கொண்டுள்ள சார்தலை குறைப்பதற்கும் உதவும்."பெருவணிக நிறுவனங்கள் கோரியிருப்பதை ஜாபெடெரோ செய்ய முற்பட்டுள்ளார். நிரந்தர ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்புவதை எளிதாக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு அவர் முயல்கிறார்; பெருகிய முறையில் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தலாம் என்ற திரை மூலம் அதை நடைமுறைக்கு கொண்டுவரப் பார்க்கிறார். ஆனால் பெருவணிகம் கோரும் ஒவ்வொரு கோரிக்கையையும் அவரால் நிறைவேற்றமுடியாது; ஏனெனில் அது போரிடும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடும்; தன்னுடைய சமூக நலன்களை காக்க வேண்டும் என்பதில் தொழிலாள வர்க்கம் முனைப்புடன் உள்ளது; இத்தொகுப்பின் பல பிரிவுகளும் பிராங்கோவின் சர்வாதிகாரத்தில் இருந்து மூன்று தசாப்தங்களுக்கு முன் மாறுதல் ஏற்பட்டபோது, தோன்றியவை ஆகும். தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த முற்பட்ட முந்தைய முயற்சிகளும் கணக்கிலடங்கா பொதுவேலை நிறுத்தங்களுக்கு தூண்டுதலாயின. எத்தகைய அரசியல் விளைவுகள் இப்படி சமூகத் தாக்குதல்கள் நடத்துவதின் மூலம் ஏற்படும் என்பதை ஜாபெடெரோ நன்கு அறிவார். தன்னுடைய பதவிக்காலத்தில் PP இதையும் விடக் குறைவான முயற்சிகளைத்தான் மேற்கொண்டது: அப்பொழுது அது ஐரோப்பிய ஒன்றிய உதவித் தொகைகள் என்ற நலன்களை கொண்டிருந்தாலும், மார்ச் 11, 2004 மாட்ரிட் ரயில் வண்டி குண்டுகள் வெடிப்பை அடுத்து ஏற்பட்ட மக்கள் இயக்கத்தின் விளைவினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. மேலும், முதலாளித்துவத்தினால் கோரப்படும் பொருளாதார மாற்றத்தின் அளவானது மகத்தானதாக உள்ளது. ஸ்பெயினில் பெருவணிகத்தின் மீதான வரி 35 சதவிகிதமாக உள்ளது; 25 மாநிலங்களில் சராசரியாக இது 25 சதவிகிதம் என்று உள்ளது. புதிதாக சேர்ந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சராசரி 18 சதவிகிதமாக இருக்கிறது. ஸ்பெயினில் 67,400 யூரோக்களுக்கும் மேலாக வருமானம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோரில் உயர் 48 சதவிகிதத்தினராக உள்ளனர்; பிரிட்டனில் இந்த உயர் விகிதம் 40தான். ஜேர்மனியின் உயர்விகிதம் அடுத்த ஆண்டு 42 சதவிகிதத்திற்குக் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |