World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush, Congress snatch funds from injured 9/11 workers

9/11 ல் காயமடைந்த தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை பறித்துக்கொண்ட நாடாளுமன்றமும் புஷ்ஷூம்

By Bill Van Auken
22 June 2005

Back to screen version

2001 செப்டம்பர் 11 முதல், அன்று நடைபெற்ற வெகுஜன படுகொலைகள், குறிப்பாக தீயணைப்பு படையினர்கள் மற்றும் தொழிலாளர்களின் வீரத்தை, அவர்கள் அந்த பேரழிவிற்கு முகம் கொடுத்த விதத்தை, புஷ் நிர்வாகம் தனது பூகோள இராணுவவாதக் கொள்கையை வளர்ப்பதற்கும், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறது.

தற்போது ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், உலக வர்த்தக மைய பகுதியில் மீட்பு மற்றும் தற்காப்புப் பணிகளில் ஈடுபட்டு உடல் ஊனமுறுகிற அளவிற்கு காயமடைந்த மீட்பு தொழிலாளர்களுக்கு இதற்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட 125 மில்லியன் டாலர்களை திரும்ப எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்றமும் புஷ் நிர்வாகமும் தயாராகி வருகின்றன.

சென்ற வியாழனன்று, நிதி அப்படியே இருப்பதற்கு வகை செய்யும் ஒரு திருத்த தீர்மானத்தை நியூயோர்க் சட்டமன்றம் முயற்சித்ததை 35 க்கு 28 என்ற வாக்குகளில் அந்த கீழ்சபையின் ஒதுக்கீடுகள் குழு முறியடித்தது.

நாடாளுமன்றக் குழு, நியூயோர்க் மாநிலம் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு நிதியில் மொத்தம் 44 மில்லியன் டாலர்களை தனிக்கணக்கில் வைத்திருக்க முடிவு செய்தது. துவக்கத்தில், புஷ் நிர்வாகம் அந்தப் பணத்தையும், 2006 பட்ஜெட் திட்டத்தில் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு பகுதியையும் திரும்ப ஒப்படைக்கக் கோரியது. என்றாலும், அப்படி நிதியை திரும்ப ஒப்படைக்கக் கோருவதன் மூலம் 9/11 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினரிடமிருந்து கசக்கிப் பிழிந்து திரும்பப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற நிலை தெளிவான பின்னர் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற தலைமை பின்வாங்கியது.

''உலக வர்த்தக மைய கட்டிடப் பகுதியில்'' காயமடைந்த கட்டுமான தொழிலாளர்கள், அவசர பணிகளில் ஈடுபட்ட நடவடிக்கையாளர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக, நியூயோர்க் மாகாண அரசாங்கத்தின் உதவிக்காக நாடாளுமன்றம் 175 மில்லியன் டாலர்கள் மொத்த உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. சென்ற ஆண்டு அரசாங்க கணக்கு அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த சட்டத்தில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்ட காரணத்திற்காக 44 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டது.

உதவியை மிக வேகமாக வழங்குகின்ற ஒரு வழியாக பொது ஊழியர்களுக்கான அரசாங்க காப்பீட்டு நிதிக்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் திட்டத்திற்காகவும் நியூயோர்க் மாநில அரசு அந்த நிதியை செலவிட்டது. அதில் ஒரு பகுதி, மருத்துவ மற்றும் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது.

நிர்வாகமும் அதன் ஆதரவாளர்களும் வாதிடுவது என்னவென்றால், 125 மில்லியன் டாலர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், ஏனெனில் நியூயோர்க் மாகாண அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பணத்தை செலவிட தவறியிருப்பதால், அதற்கு அந்த பணம் தேவையில்லை என்பதை நிரூபிப்பதாக குறிப்பிட்டனர்.

''ஆரம்பத்தில் அஞ்சியதை போன்ற அளவிற்கு அவசியம் பெருமளவிற்கு இல்லை மற்றும் அந்த நிதி ஒதுக்கீடுகள் இனி தேவைப்படவில்லை'' என்று புஷ்ஷின் பட்ஜெட் பற்றிய பேச்சாளர் ஸ்கோட் மில்பர்ன் அறிவித்தார்.

இந்த ஒதுக்கீடுகள் குழுவில் இடம்பெற்றுள்ள ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரால்ப் ரெகுலா ''அவர்களிடம் அந்தப் பணம் இருக்குமானால் அதை செலவிடாமல் வைத்திருப்பது ஏன் என்பது எனக்கு புரியவில்லை'' என்று குறிப்பிட்டார்.

உலக வர்த்தக மைய கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாகவும், அது தொடர்பான நோய்கள், காயங்கள் காரணமாகவும் இழப்பீடுகள் கோரி வந்த மனுக்களுக்கு திட்டமிட்டு அரசாங்க அமைப்புக்களை சேர்ந்த அதிகாரிகள் உட்பட நியூயோர்க் மாகாண முதலாளிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் அதிக பணம் செலவிடப்படவில்லை என்பது பிரதான காரணமாகும். இது தவிர, இதுபோன்ற இழப்பீடு கோரிக்கைகளை தாக்கல் செய்யும் தொழிலாளர்கள் வழக்கமாக தொந்தரவுகளையும், இழிவுகளையும், நீண்ட தாமதத்தையும் சந்திக்க வேண்டி வந்ததால் வேறு பலர் இழப்பீடு கோரி மனுச் செய்யவே இல்லை.

தொழிலாளர்களுக்கான இழப்பீடுகளை கோரி 10,000 திற்கு மேற்பட்ட மக்கள் மனுச் செய்தனர் என்று மாகாண அரசாங்கம் உறுதிபடுத்தியது. ஆனால், இந்த மனுக்களில் எத்தனை தள்ளுபடி செய்யப்பட்டன என்று அது தெரிவிக்கவில்லை.

என்றாலும், சென்ற வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம் கோடிட்டுக் காட்டியது என்னவென்றால், மற்ற கோரிக்கைகளைவிட 9/11 தொடர்பான கோரிக்கைகள் மீது முதலாளிகள் 10 மடங்கு கூடுதலாக ஆட்சேபனைகளை தெரிவித்தனர் என்பதாகும். காயமடைந்த தொழிலாளர்களுக்கான மருந்தகம் என்ற நிறுவனம், இழப்பீடு கோரிக்கைகள் மீது முடிவிற்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மருந்துகளை வழங்குகின்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் மேலே கண்ட புள்ளி விவரத்தை தந்திருக்கிறது. இந்தக் கம்பெனி காப்பீட்டு நிறுவனங்களோடு நிதி பேச்சுவார்த்தைகளை நடத்தி, இழப்பீட்டு கோரிக்கைகள் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் ஒரு கட்டணத்தை விதிக்கிறது. 9/11 மீட்பு தொழிலாளர்கள் பலரது கோரிக்கைகள் மீது ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டு அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் பலரை திருப்பி அனுப்பியதாக இந்த நிறுவனம் தெரிவித்தது.

மேலும் செப்டம்பர் 11 அன்று காயமடைந்தவர்கள் உடல் மற்றும் உள்ளத்து பாதிப்புக்களுக்கும் மற்றும் அதை தொடர்ந்து பல மாதங்கள் ஏற்பட்ட பாதிப்புக்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தொழிலாளர்களின் நீண்ட கால தேவைகளை ஈடுகட்டுவதற்கு 125 மில்லியன் டாலர்கள் முற்றிலும் போதுமானவையல்ல என்பது ஒவ்வொரு அம்சமும் கோடிட்டு காட்டுகின்றன.

அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏறத்தாழ ஆரம்ப மீட்புப் பணிகளில் 40,000 பேர் ஈடுபட்டு, அதில் சிதைந்துவிட்ட இரட்டை கோபுரத்திலிருந்து எரிந்துகொண்டிருந்த பகுதிகளை இடைவிடாது அவர்கள் தூய்மை படுத்திக்கொண்டிருந்தனர். அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 100,000 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களில் பலர் ஆஸ்பெஸ்டோஸ், ஈயம் மற்றும் மேர்க்குரி போன்ற விஷத்தன்மை கொண்ட தூசிகளின் மேகமூட்டம் என்பன, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் மன்ஹாட்டன் கீழ் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துக் கொண்டதால் பாதிப்புக்குள்ளாகினர்.

உலக வர்த்தக மைய தொழிலாளர் மற்றும் தொண்டர் மருத்துவ சோதனை வேலைத்திட்டத்தில் பணியாற்றி வருகின்ற மருத்துவர்கள் ஏறத்தாழ கட்டிடத்தின் தரைப்பகுதியில் இருந்து செயற்பட்ட 12,000 தொழிலாளர்களை பரிசோதித்தனர். அதில் பாதிப்பேர் அந்த இடத்தில் பணியாற்றியதால் மூச்சு விடுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு இலக்காகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று உடனடியாக தாக்குதல்கள் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளுக்கு வந்தவர்களில் பாதிப்பேர், 2001 செப்டம்பர் 11 ன் சம்பவங்களை நேரில் கண்ட அனுபவங்களால் அதிர்ச்சி நரம்பு நோய்களுக்கு இலக்காகினர். இதில் பல நோய்கள்--- புற்று நோய் உட்பட விஷப் புகையினால் உருவானவை---- பல ஆண்டுகளுக்கு பின்னரே நோயாக முற்றும்.

''9/11 சம்பவங்களின் விளைவாக நோயுற்ற பல தொழிலாளர்கள் மருத்துவ உதவியோ மற்றும் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் மருந்தோ கிடைக்கவில்லை'' என்று தேர்ச்சி பெற்ற பாதுகாப்பு மற்றும் நியூயோர்க் சுகாதாரக் குழுவின் நிர்வாக இயக்குனர் (NYCOSH) Joel Shufro குறிப்பிட்டார். ''இந்தப் பணம் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கு மட்டுமே தேவைப்படுவதல்ல. ஆனால், அரசாங்க அமைப்பு இழப்பீடு முடிவுகளை உருவாக்கும் போது அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டாக வேண்டியது மிகப்பெரிய தேவையாகவுள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.

சென்ற வியாழனன்று இந்த தொழிலாளர்களில் பலர், அந்த நிதி ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது அப்படியே விட்டுவிட வேண்டும் என்று வாஷிங்டனுக்கு பயணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தனர்.

ஒரு மருத்துவமனை அம்புலன்சில் பணியாற்றும் ஊழியரான மார்வின் பேத்தா என்பவர், உலக வர்த்தக மையம் எரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக தூசி மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் பணியாற்றினார். ''ஒரு பெரிய பக்கெட் நிறைய தூசிகளை நிரப்பி தொண்டைக்குள் திணிப்பது போல் இருந்தது'' என்று அச் சம்பவம்பற்றி அவர் நினைவுபடுத்தினார். இதன் விளைவாக, அவருக்கு கடுமையான ஆஸ்துமாவும், உயர்ந்த ரத்தக் கொதிப்பும் ஏற்பட்டது. மற்றும் அந்த தாக்குதல் நடந்து சில வாரங்களுக்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், அவருக்கு இழப்பீடுகள் மறுக்கப்பட்டது.

''9/11 நடைபெற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், மக்கள் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் எங்களை கவனிக்காமல் நாங்கள் முன்னேறிச் செல்வது எப்படி? ஜனாதிபதி புஷ் அவர்களே! செப்டம்பர் 11 ல் ஏற்கெனவே ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே, எங்களை இரண்டாவது முறை பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று மார்வின் பேத்தா ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

ஒரு கட்டுமான மேற்பார்வையாளரான ஜோன் பீல் என்பவர், வர்த்தக மைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் இச் சம்பவத்தின்போது தனது ஒரு காலின் பாதியை இழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் உதவியாளர்களின் அறிவிப்பை அவர் மறுத்து, ''இது ஒரு பிரச்சனையே அல்ல என்று கூறுவது தவறானது. நாங்கள் பிச்சை எடுத்து தவழ்ந்து வந்து தொழிலாளர்களுக்கான இழப்பீடு கோர வேண்டியுள்ளது. வெள்ளை மாளிகை சொல்வது தவறு. நிர்வாகம் செய்வதும் தவறு. ஜனாதிபதிக்கு இது வெட்கக்கேடானது'' என்று அவர் கூறினார்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், அந்தப் பகுதியை புஷ் புகைப்படம் எடுக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, சிதைந்துவிட்ட தீயணைப்பு லாரி ஒன்றின் மீது தீயணைப்பு படைவீரர் ஒருவருடன் நின்று படம் எடுத்துக்கொண்டார். ஒரு காளை மாட்டின் கொம்பை பிடித்து அடக்குவதுபோல் பழிக்கு பழிவாங்க அதில் உறுதி எடுத்துக்கொண்டார். 2004 ல் ஒரு தொலைக்காட்சியில் பிரச்சார விளம்பரப் படத்தை வெளியிட்டு, தீயணைப்பு படையினர்கள் இருவர் ஒரு ஸ்டெச்சரில் மடிந்துவிட்ட மனிதர்களை தூக்கிச் செல்வதைப் போல் அந்தப் படத்தில் காட்டியதன் மூலம், தீயணைப்பு படையினர்களது குடும்பங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை ஆத்திரமூட்டினார்.

செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடைபெற்ற முதல் ஆண்டு நிறைவின் போது புஷ் ஆற்றிய ஒரு உரையில், ஈராக் போருக்கு தமது நிர்வாகம் தயாராகி கொண்டு வருவதாக குறிப்பிட்டார். அது ஜனாதிபதியின் தனித்தன்மை கொண்ட இரட்டை வேட வாய்வீச்சாகும். ''அமெரிக்கா எவ்வளவு மகத்தான நாடு என்பதை காட்டுகின்ற வகையில் ஆபத்தை நோக்கி மாடி படிக்கட்டுகளில் மீட்புப் பணியாளர்கள் ஓடோடிச் சென்று மக்களை காப்பாற்றினர். நமது மக்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற கருணையையும், கவனிப்பையும் அதே மகத்தான அமெரிக்கா நீடித்திருப்பதில் காண்கிறோம்'' என்று அறிவித்தார்.

இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த தொழிலாளர்களுக்கு காட்டப்பட்ட ''கருணையும் கவனிப்பும்'' எதில் முடிந்திருக்கிறது என்றால், நிர்வாகம் அவர்கள் பட்ட காயத்திற்கு இழப்பீடு தருவதற்கு ஒதுக்கிய பணத்தை பறிப்பதில் முடிந்திருக்கிறது. இச் சம்பவங்களில் பலர் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலையில் உள்ளனர்.

தினசரி வாஷிங்டன் ஈராக் போருக்காக செலவிட்டு வரும் தொகையில் பாதிக்கும் குறைந்த தொகைதான் இப்போது காயம்பட்ட தொழிலாளர்களது இழப்பீட்டிலிருந்து பறிக்கப்படுகிறது. 2006 நிதியாண்டிற்கு மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ள 2.57 டிரில்லியன் டாலர்களோடு ஒப்பிடும்போது, இந்த 125 மில்லியன் டாலர்கள் என்பது ஒரு பக்கட்டில் விழும் ஒரு துளி தண்ணீருக்குக்கூட சமமாகாது.

அப்படியிருந்தும், உலக வர்த்தக மையக் கட்டிட இடிபாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீது நிர்வாகமும், நாடாளுமன்றமும், மாநில அரசாங்கங்களும் நாடு முழுவதிலும் நடத்தி வருகின்ற தாக்குதல்கள் மிக அப்பட்டமான எடுத்துக்காட்டாக இருக்கிறது. அந்தப் பணியில் ஈடுபட்டு உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற பயன்களை குறைத்து, பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பெருக்குகின்ற நோக்கத்தோடு ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் அவசரமாக ''தொழிலாளர் இழப்பீட்டு சீர்திருத்தத்தை'' நிறைவேற்றி வருகின்றன.

9/11 தொழிலாளர்களை நிர்வாகம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, முன்னர் நாட்டின் வீரர்களாக அணிவகுத்துக் காட்டியது. அதே வீரர்கள் இப்போது அதே வழியில் முறைகேடாக நடத்தப்படுகின்றனர். இது குடியரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி தலைமையின் அத்தியாவசியக் கொள்கையை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்திக் காட்டுகிறது. நாட்டிற்கு வெளியில் மேற்கொள்ளப்படும் போருக்காக, தவறான அடிப்படையில் சுரண்டப்பட்ட மக்களது தியாகங்கள் உட்பட உள்நாட்டுத் தொழிலாளர்களின் அடிப்படை பயன்களையும், வாழ்க்கை தரங்கள் முழுவதையும் வெட்டித் தள்ளுவது, நிதியாதிக்க செல்வந்தத்தட்டை சேர்ந்தவர்கள் மேலும் பணக்காரர்களாக ஆவதற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved