:
ஆசியா
:
இலங்கை
Tsunami aid deal plunges Sri Lanka into
deeper political turmoil
சுனாமி நிவாரண உடன்படிக்கை இலங்கையை ஆழமான அரசியல் குழப்பத்திற்குள் மூழ்கடித்துள்ளது
By Sarath Kumara
27 June 2005
Back to screen
version
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஏராளமான தயக்கங்களின் பின்னர், சுனாமியால்
அழிவுற்ற வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளிநாட்டு மீள் கட்டமைப்பு உதவியை விநியோகிப்பதற்காக ஒரு பொதுச் சபையை
ஸ்தாபிப்பதன் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்காக வெள்ளியன்று அதிகாரமளித்தார்.
இந்த தீர்மானத்தை வெளிநாட்டு உதவியாளர்களும் கொழும்பில் உள்ள வர்த்தகர்களும் வரவேற்றுள்ள அதேவேளை, அது
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளுவது நிச்சயமாகும்.
ஜூன் 16 அன்று சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி),
அரசாங்கத்தை சிறுபான்மை அரசாங்கமாக்கியுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தற்பொழுது
சுதந்திர முன்னணி அரசாங்கம் வெறும் 79 உறுப்பினர்களையே கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஏனைய சிங்கள
பேரினவாத குழுக்களோடு சேர்ந்து, பொதுக் கட்டமைப்புக்கு எதிராக ஜே.வி.பி தனது இனவாத பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துவது
நிச்சயம். பொதுக் கட்டமைப்பை தேசத் துரோகமாக ஜே.வி.பி கண்டனம் செய்கிறது.
வெள்ளியன்று அரசாங்கம் உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சித்தபோது,
ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, சபாநாயகர் முதலில் கூட்டத்தை இடை
நிறுத்தவும் பின்னர் ஜூலை 5 வரை ஒத்திவைக்கவும் தள்ளப்பட்டார். சுமார் 1,000 ஜே.வி.பி ஆதரவாளர்கள், "புலி
கட்டமைப்பை சுருட்டிக்கொள்" போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு கலகம்
அடக்கும் பொலிசாருடனும் மோதிக்கொண்டனர். அதேபோல், அதற்கு முன்தினம், கட்சி ஒரு பொது வேலை நிறுத்தத்தை
ஏற்பாடு செய்வதாக அறிவித்த ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, மக்களை ஆர்ப்பாட்டத்தில் இணையுமாறு அழைப்புவிடுத்தார்.
விடுதலைப் புலிகளுடனான இந்த ஒப்பந்தம் அரசியல் யாப்பிற்கு முரணானது என குற்றம் சாட்டும் ஜே.வி.பி, சட்ட நடவடிக்கை
எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரினவாத ஆர்ப்பாட்டம், இனவாத அரசியலில் ஊறிப்போயுள்ள குமாரதுங்கவின்
சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) உட்பட சுதந்திர முன்னணியில் எஞ்சியிருப்பதையும் ஆட்டங்காணச்
செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மக்கள் ஐக்கிய முன்னணி (ம.ஐ.மு) மற்றும் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்ட
தேசிய ஐக்கிய முன்னணி (தே.ஐ.மு) ஆகிய சுதந்திர முன்னணியின் இரண்டு சிறிய பங்காளிகளும் ஏற்கனவே இந்த நிவாரண
உடன்படிக்கையை விமர்சித்துள்ளதுடன், அதன் உள்ளடக்கத்தை பொறுத்தவரையில் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக குறிப்பிடுவதோடு
அரசாங்கத்திலிருந்து வெளியேறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்க் கட்சிகளின், குறிப்பாக அதனது நீண்டகால கசப்பான எதிரியான ஐக்கிய தேசியக்
கட்சியின் (ஐ.தே.க) மெளன ஆதரவில் தங்கியிருக்கும் அரசாங்கம், தற்போது ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.
நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கைகளின் படி, ஐ.தே.க குமாரதுங்க வழங்கிய இரு
திட்டங்களையும் நிராகரித்துள்ளது. இதில் முதலாவது, அமைச்சுக்களை 50 க்கு 50 ஆக பகிர்ந்து கொண்டு சுதந்திர
முன்னணியில் இணைவது. இரண்டாவது, அதனது சொந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதாகும்.
ஐ.தே.க அதனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வைத்துள்ளது. அமெரிக்க தூதுவரின்
ஊக்குவிப்புடன், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க உதவி உடன்படிக்கைக்கு ஆதரவளிப்பதாக குமாரதுங்கவிற்கு
உறுதியளித்தார். அதே சமயம், அரசாங்கத்தில் இணைவதன் மூலமும் மற்றும் பல விடயங்களில் அதனது சொந்த
"ஒதுக்கீடுகளை" வழங்குவதன் மூலமும் இந்த உடன்படிக்கைக்கு அரசியல் பொறுப்பேற்க ஐ.தே.க மறுத்து விட்டது.
உயர்மட்ட நிவாரண சபையில் சிங்கள பிரதிநிதித்துவத்தின் பற்றாக்குறை பற்றிய ஐ.தே.க வின் எதிர்ப்பானது, ஜே.வி.பி
க்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் மற்றும் அவர்களின் இனவாத பிரச்சாரத்திற்கும் கதவைத் திறந்து விட்டுள்ளது.
நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஐ.தே.க கோருவதோடு,
அதனது கோரிக்கைக்கு ஆதரவாக ஜூலை 2 முதல் ஒரு பெரும் "மக்கள் சக்தியை அணிதிரட்டும்" பிரச்சாரத்தையும்
முன்னெடுக்கவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு ஒரு சட்ட நடவடிக்கையாக இருந்து
வருவதோடு, ஜனாதிபதிக்கு பரந்த நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கின்ற அளவில் குமாரதுங்கவாலும் விக்கிரமசிங்கவாலும்
நீண்ட சூழ்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ளது. 2004 பெப்பிரவரியில், இந்த அதிகாரங்களை சுரண்டிக்கொண்ட குமாரதுங்க,
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள் மூலம் "தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக" கூறி அப்போதைய
ஐ.தே.க தலைமையிலான ஆளும் கூட்டணியை ஏதேச்சதிகாரமான முறையில் பதவி விலக்கினார்.
குமாரதுங்க ஒரு உயர்ந்த வாய்ப்பை கோரும் முஸ்லிம் ஆளும் கும்பலின் எதிர்ப்புக்கும் முகம்
கொடுக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) தலைவர் ரவுப் ஹக்கீம், தனது கட்சியும்
உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட வேண்டும் என அண்மையில் கோரினார். இந்த கோரிக்கை
விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ரீ.ல.மு.க உடன்படிக்கையை நிராகரித்தது. சனியன்று இடம்பெற்ற
பத்திரிகையாளர் மாநாட்டில்: "அவர்கள் எங்களை பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பவர்களாக
நோக்குகின்றார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாம் இதில் பங்குகொள்ள முடியாது," என ஹக்கீம்
தெரிவித்தார்.
அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சுதந்திர முன்னணியின்
அமைச்சரவை உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல், ஒரு இரகசிய போர்வையின் கீழ் இந்த நிவாரண உடன்படிக்கையை
குமாரதுங்க முன்னெடுத்தார். பொதுக் கட்டமைப்பு என அழைக்கப்பட்ட சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை
முகாமைத்துவ அமைப்பு ஒரு இறுக்கமான உறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கை அடுத்தநாள்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது பற்றிய அரசாங்க அறிவித்தலானது முதல் நாளான வியாழன் பிற்பகல்
அளவிலேயே வெளிவந்தது.
இந்த உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக, ஜனாதிபதியோ அல்லது
பிரதமரோ கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்தின் சார்பில் புணர்வாழ்வு அமைச்சின் செயலாளரும் ஒரு சிரேஷ்ட
அதிகாரியுமான எம்.எஸ். ஜயசிங்க கையொப்பமிட்டார். பின்னர், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான
நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் பேரில், பெரும் வல்லரசுகளின் சார்பில் இலங்கை வந்திருந்த நோர்வே வெளியுறவு
அமைச்சர் விதார் ஹெல்கிசன் இந்த ஆவணத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றார்.
அங்கு விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அலுவலரான சன்முகலிங்கம் ரஞ்சன் கையொப்பமிட்டார்.
கையொப்பமிடுவதற்கு முன்னதாக, சிரேஷ்ட மதகுருக்களை சந்திக்க கண்டி நகருக்கு
ஹெலிகொப்டரில் பரந்த குமாரதுங்க, பெளத்த பெருந்தலைவர்களை அமைதிப்படுத்த முயன்றார். அஸ்கிரிய பீடத்தின்
பிரதான பிக்குவான உடுகம ஸ்ரீ புத்தரக்ஹித, உடன்படிக்கைக்கு உத்தியோகபூர்வமாக ஒப்புதலளித்தார். ஆனால் அடுத்த
பெளத்த பீடமான மல்வத்த பீடத்தின் தலவைரும் பிக்குவுமான திபுத்துவெவ ஸ்ரீ சுமங்கள குறிப்பிடத்தக்கவகையில்
அங்கிருக்கவில்லை. அவர் தனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
ஜூன் 17 அன்று, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி பிரச்சாரங்களை தணிக்கும் ஒரு
முயற்சியாக, அரசாங்கம் கொழும்பில் நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகளின் மாநாடு ஒன்றை ஒழுங்குசெய்திருந்தது.
குமாரதுங்க ஆர்பாட்டம் செய்யும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி பிக்குகளை விட, தான் "சிறந்த பெளத்தன்"
என மாநாட்டில் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீ.ல.சு.க விற்குள் பிளவுகளுக்கான
அறிகுறிகள் தோன்றியுள்ளன. பெளத்த பெருந்த தலைவர்களுடன் வெளிப்படையான நெருங்கியத் தொடர்புகளைக்
கொண்டுள்ள பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, உடன்படிக்கயுடன் எந்த முரண்பாடும் இல்லை என மறுத்த போதிலும்,
பொதுக் கட்டமைப்பு ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அவர் அங்கு வருகைதந்திருக்கவில்லை.
குமாரதுங்க, 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நிதி பொதுக் கட்டமைப்பை
ஸ்தாபிப்பதுடன் இணைக்கப்பட்டிருந்ததால் மட்டுமே உடன்படிக்கையை கைச்சாத்திட முன்வந்தார். மேலும் பல சர்வதேச
நிதி உதவிகள், 2003 ஏப்பிரலில் இடைநிறுத்தப்பட்ட விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும்
தொடங்குவதிலேயே தங்கியிருக்கின்றன. நாட்டின் 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமானது பொருளாதார ரீதியிலும் மற்றும்
மூலபாய ரீதியிலும் மேலும் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவரும் மிகப் பரந்த இந்திய துணைக்கண்டத்தின் ஸ்திரநிலைக்கு
அச்சுறுத்தலாக இருப்பதன் காரணமாகவே அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் பெயரளவிலான சமாதான
முன்னெப்புகளுக்கு ஆதரவளிக்கின்றன.
கொழும்பில் உள்ள பெரும் வர்த்தகர்களில் ஒரு பிரிவினர், தீவின் பொருளாதார
வாய்ப்புகளை புத்துயிர்பெறச் செய்வதன் பேரில் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க நெருக்குகின்றனர்.
கூட்டுத்தாபன வட்டாரங்கள், பொது நிவாரண கட்டமைப்பை ஸ்தாபிக்கும் முடிவிற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, அதனுடன்
இணைந்த அரசியல் ஸ்திரமின்மை பற்றி மேலும் மேலும் கலவரமடைந்துள்ளனர். கடந்த வாரம் கொழும்பு பங்குச்
சந்தையின் விற்றுமுதல் 650 மில்லியன் ரூபாய்கள் வரை 45.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது.
சனியன்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தின்
தலைவர் தேவா ரொட்ரிகோ, பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்து பேசிய போது: "இந்த
வகையிலான திட்டங்கள் நாட்டுக்கு சிறந்தவை. நாடு வெளிநாட்டு உதவியுடன் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய
முடியும்," என்றார்.
பொதுவில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளைப் போலவே, சுனாமிக்குப் பின்னரான
நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பும் நிபந்தனைகளை இணைத்துக்கொண்டே வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியமும் உலக
வங்கியும், அரசாங்கம் தனியார்மயமாக்கம், தொழில் வெட்டு மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை வெட்டு
உட்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் முன்செல்ல வேண்டும் என வலியுறுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, நிவாரண கட்டமைப்பானது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையிலான எந்தவொரு சமாதான உடன்படிக்கையினதும் இனவாத பண்பை வெளிக்காட்டுகிறது. இந்த உடன்படிக்கை,
தேர்வுசெய்யப்படாத தலைவர்களின் குழுவை ஸ்தாபிக்க அதிகாரமளிக்கின்றது -- ஒரு உயர்மட்ட குழு பின்னர் பிராந்திய
மற்றும் மாவட்டக் குழுக்கள் ஒவ்வொன்றும், விடுதலைப் புலிகள், அரசாங்கம் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளைக்
கொண்டிருக்கும். உயர்மட்டக் குழு, இந்த ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை கொண்டிருப்பதோடு வெளிநாட்டு
நிதி உதவியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு கண்காணிப்பாளரையும் உள்ளடக்கியிருக்கும்.
உயர்மட்ட குழுவின் முடிவுகள் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்படுவதானது
அனைத்து பக்கங்களிலுமான பரஸ்பர சந்தேகங்களை பிரதிபலிக்கின்றது. கருத்தொருமைப்பாடு இல்லையெனில், உடன்பாட்டை
எட்டுவதற்காக பிரதிநிதிகள் அவர்களது கட்சிகளுடன் கலந்தாராய வேண்டும். அது தோல்வியில் முடிந்தால் உடன்படிக்கை
தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். பிராந்திய மட்டத்தில், அரசாங்கம் இரு பிரதிநிதிகளையும் விடுதலைப் புலிகள் ஐந்து
பிரதிநிதிகளையும் முஸ்லிம் குழுக்கள் மூன்று பேரையும் மற்றும் நிதி உவியாளர்கள் ஒரு பிரதிநிதியையும் கொண்டிருப்பர். பிராந்தியத்திற்கு
வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் கிடைக்கும் நிதிகளின் பாதுகாவலாராக ஒரு பலதரப்பு முகவர் நியமிக்கப்படல்
வேண்டும்.
எந்தவொரு ஜனநாயக பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில், இத்தகைய ஒரு அமைப்பு,
ஒவ்வொரு சாராரும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்காக செயற்படும்போது கூர்மையான இனவாத
பதட்டங்களை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. குமாரதுங்கவின் கோரிக்கைகளின் படி, இந்த
உடன்படிக்கையின் இலக்கு ஆறு மாவட்டங்களுக்கும் மற்றும் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூர நிலப்பரப்பிற்கும்
மட்டுமே கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு வருடத்தில் காலாவதியாகிவிடும்.
விடுதலைப் புலிகள் தம் பங்கிற்கு, உடன்படிக்கைக்காக அழுத்தம்
கொடுத்துக்கொண்டிருப்பதோடு குமாரதுங்கவின் தாமதங்களுக்கு முடிவுகட்டுமாறு பெரும் வல்லரசுகளை தூண்டிவருகின்றது.
இந்த உடன்படிக்கை விடுதலைப் புலிகளுக்கு ஒரு அளவு சர்வதேச அங்கீகாரத்தை கொடுப்பதோடு சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்களின் விமர்சனங்களை தவிர்க்கவும் உதவுகிறது. விடுதலைப் புலிகள், கிழக்கில் தங்களிடமிருந்து பிரிந்து
சென்ற குழுவின் ஆயுத எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், இந்த உடன்படிக்கை கிழக்கில் தமது நிலையை
தூக்கிநிறுத்தும் என கணக்கிடுகின்றனர்.
இறுதியாக நோக்கும் போது, எந்தவொரு கட்சியினதும் கணக்கீடுகள், ஆறு மாதங்களாக
துன்பகரமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள அல்லது முஸ்லிம்கள் மீது
அக்கறை செலுத்துவதாக இல்லை. |