WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
Blair threatens European parliament: "change or die"
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு பிளேயர் அச்சுறுத்தல் தருகிறார்: "மாற்றுக அல்லது
மடிக"
By Chris Marsden
24 June 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஐரோப்பாவின் பொருளாதார சீர்திருத்தத்திற்கான தன்னுடைய அழைப்பின் முழு உட்குறிப்புக்களையும்
பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேயர் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார். பூகோளமயமாக்கலின் சவாலை எதிர்கொள்ளும்
வகையில் அவர் ஐரோப்பிய பொதுநலச் செலவினங்களில் எஞ்சியுள்ளவற்றையும் தகர்க்கும் கோரிக்கையை
கொடுத்துள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் முயற்சியையும் மகத்தான அளவில் அதிகப்படுத்தவேண்டும்
என்றும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என்னும் தன்னுடைய ஆறு மாதகால பதவிக்காலத்தை
தொடங்கும் முகமாக ஜூன் 22 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு வளங்கிய உரையானது, முக்கிய ஐரோப்பிய
நாடுகளிடையே பெரும் பதட்டங்கள் மோசமாகிவரும் நிலையில் வரத்தொடங்கியது. பிளேயர் பேசுவதற்கு
முன்பாக, பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக்கும், லுக்சம்பர்க்கின் பிரதம மந்திரியான ஜோன் குளோட் ஜங்கர்
இருவருமே இவரை நேரடியாக தாக்கியிருந்தனர்.
கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கியிருந்த ஜங்கர், உச்சி
மாநாடு சரிவுற்றதற்கு பிரிட்டனை குற்றம் சாட்டியதுடன், தன்னுடைய நடவடிக்கைகளுக்காக பிளேயர் "வெட்கப்படவேண்டும்"
என்றும் கூறியபோது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
தன்னுடைய வாரந்திர மந்திரிசபை கூட்டத்தில், சிராக்கும் இதேபோல் ஐரோப்பிய
ஒன்றிய பட்ஜெட் வடிவமைப்பில் உடன்பாடு ஏற்படுவதில் தோல்வியடைந்ததற்கு "பிரிட்டனின் வளைந்து கொடுக்காத
தன்மைதான்" காரணம் என குறைகூறினார். Le
Canard Enchainere இன் கருத்தின்படி, சிராக் பிளேயரை
பற்றித் தனிப்பட்ட முறையில், "இவர் தாட்சர் போல்தான் உள்ளார்; இன்னும் மோசம் என்றே கூறவேண்டும்,
அந்த அம்மையாரை போல் திமிர்பிடித்து, அதேநேரத்தில் கூடுதலான தன்னலத்தை கொண்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்கரெட் தாட்சரை பின்பற்றும் திறமை தனக்கு உள்ளது என்பதில் பெருமிதம்
கொள்ளுவதோடு, ஒரு முன்னேற்றமான சமூகநல செயற்பட்டியல் என்ற வனப்புரை போர்வையில் வலதுசாரி
பொருளாதாரக் கொள்கைகளை சுமத்துவதில் தாட்சரையும் மிஞ்சும் ஆற்றலையும் தான் கொண்டிருப்பதாக பிளேயர்
நம்புகிறார்.
1979ம் ஆண்டு முதல் முதலாக தாட்சர் பதவியேற்றபோது, அவர் டெளனிங் தெரு
10ம் எண் இல்லத்தின் வாயிற்படிகளில் நின்றுகொண்டு புனித பிரான்சிஸின் புகழ் பெற்ற பிரார்த்தனை ஒன்றை
உரைநடைப்படுத்திய வகையில், "எங்கு கருத்து வேறுபாடுகள் உள்ளனவோ, அங்கு நாம் ஒற்றுமையை
கொண்டுவருவோமாக" என்று உரைத்தார்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிட்டத்தட்ட இதற்கு இணையாக பிளேயர்
கூறியதாவது: "ஓர் அரசியல் திட்டம் என்னும் முறையில் நான் ஐரோப்பாவிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒரு
வலிமை பொருந்திய, சமூகப் பரிமாணம் பேணும் ஐரோப்பாவிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் வெறும்
பொருளாதார சந்தை முறை என்ற ஐரோப்பாவை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்."
"ஒத்திசைவு", "அரசியல் செயல்திட்டம்", "வலிமை பொருந்திய சமூகப்
பரிமாணம்" இவற்றை ஒருவர் பொருள் கொள்ளும் வகையை பொறுத்துதான் அவற்றின் குறிப்புக்கள் தெளிவாகும்.
1984ம் ஆண்டு பிரிட்டனுக்காக ஐரோப்பிய நிதிச் சலுகைக்கு தாட்சர்
வெற்றிகரமாக பேச்சு வார்த்தைகள் நடத்தியபோது, "எனக்கு என் பணம் திருப்பித்தரப்படவேண்டும்" என்று அவர்
கூறியதாகச் சொல்லப்படும் சொற்கள் புகழ்பெற்ற முறையில் அவருடைய நிலைப்பாட்டை சுருக்கிக் கூறியிருந்தன.
வேறொரு வகையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவர்கள் தங்கள் பணத்தை
தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்று பிளேயர் கூறினார். அவருக்குத் தேவையானது முழு ஐரோப்பிய ஒன்றியமும்
முற்றிலும் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
"ஒரு தீவிர ஐரோப்பிய ஆதரவாளர்" என்று தன்னுடைய வாழ்க்கை அமைந்திருப்பது
பற்றிய சமாதானச் சொற்கள் சிலவற்றையும் பிளேயர் கூறினார். ஆனால் அவருடைய பேச்சில் உண்மையாக இருந்த
நயம் கடந்த வாரம், திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க
மறுத்த அவருடைய நிலைப்பாடு எவ்வாறு போர்க்கோலம் கொண்டிருந்ததோ, அப்படியேதான் இன்னமும் உள்ளது.
"ஒரு தடையற்ற சந்தை" உடைய ஐரோப்பாவிற்கும் "ஒரு சமூக"
ஐரோப்பாவிற்கும் இடையே எந்தவிதமான இரண்டாய் பிளவுபடுதலை அவர் நிராகரித்தார்; மேலும்,
பிரான்சுடனும், ஜேர்மனியுடனும் அவர் கொண்டுள்ள கருத்து வேறுபாட்டை "பொதுச் சந்தை முறைக்கு திரும்பிச்
செல்லவேண்டும் என்று கூறுவோருக்கும், ஐரோப்பா ஒரு அரசியல் செயல்திட்டம்" என்ற நம்பிக்கை
கொள்வோருக்கும் இடையே நடக்கும் ஒரு பூசல் எனப் பண்பிடுவதை தனது எதிராளிகளின் கட்டுக் கதை என்றும்
தெரிவித்தார்.
தன்னுடைய அரசாங்கம் செயல்படுத்தியுள்ள பொருளாதார மாறுதல்கள், சமூகக்
கொள்கைகளின் மாதிரியை பின்பற்றுவதைவிட வேறு எந்த வழியும் இல்லை என்றும் அவர் அறிவித்தார். இல்லாவிடின்,
ஐரோப்பிய இலக்கு என்பது "அறைகூவலை எதிர்கொள்ளாத செயலற்ற தன்மையில் மடிந்துவிடும்" என்று அவர்
கூறினார்.
"கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சமாதானம், 50 ஆண்டுகள் செல்வச்செழிப்பு, 50
ஆண்டுகால முன்னேற்றம்" ஆகியவற்றைச் சாதித்ததற்காக ஐரோப்பியத் தலவைர்களை அவர் பெரிதும்
பாராட்டினார். ஆனால் உலகம் மாறிவிட்டது என்றார். ஐரோப்பிய சக்திகள் உலகத்தின்மீது தற்பொழுது
ஆதிக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்கா ஒன்றுதான் உலகத்தின் ஒரே வல்லரசாக உள்ளது. சீனாவும்
இந்தியாவும் இன்னும் சில தசாப்தங்களில் உலகின் பெரும் பொருளாதார வலிமையுடைய நாடுகளாக இருக்கும்,
இவை ஒவ்வொன்றின் மக்கட்தொகை ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கட்தொகையைவிட மூன்று மடங்கு
அதிகமாகவும் இருக்கும்."
"இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தின்" பொருளாதார, அரசியல்
சவால்களை எதிர்கொள்ளுவதற்காக, ஐரோப்பா கண்டிப்பாக ஒன்றுபடவேண்டும் என்று அவர் அறிவித்தார்.
"மக்களுடைய" நலன்களை கருத்திற்கொண்டும், ஐரோப்பிய ஒருமைப்பாடு
திட்டத்திற்கு அவர்களுடைய ஆதரவை பெறுவதற்கும்தான் மாறுதல்கள் வேண்டுமென்று தான் வாதிடுவதாக பிளேயர்
குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகள் விவாதத்திற்கு பின்னரும் கூட, ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான
வாக்கெடுப்பு பிரான்சிலும் டச்சு நாட்டிலும் நிராகரிக்கப்பட்டது தன்னுடைய கொள்கைகள் சரியானவை என்பதை
நிரூபணம் செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். "உண்மை என்னவென்றால் பெரும்பாலான உறுப்பு நாடுகளுக்கு ஒரு
வாக்கெடுப்பில் 'வேண்டும்' வாக்கைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்" என்றும் அவர் அறிவித்தார்.
நேர்த்தியாகவே இருக்கும் அரசியலமைப்பிற்கு எதிராக வாக்கு அளிக்கப்படவில்லை
என்றும் "பரந்து, ஆழ்ந்திருக்கும் ஐரோப்பிய நிலைமையில் அதிருப்தி" விவரிக்க இயலாத வகையில் இருப்பதை
தெரிவிக்கும் ஒரு கருவியாக வாக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். அப்படிப் பார்க்கும்
நிலையில், இது ஒரு "அரசியல் தலைமையின் நெருக்கடியை பிரதிபலிக்கிறது.... நகரங்களின் மதிற்சுவர்களை சுற்றி
மக்கள் முரசொலிக்கிறார்கள். நாம் அதை கேட்கிறோமா?"
இத்தகைய உத்தியை கையாண்டு, பரந்த சமூக அரசியல் அமைதியின்மைக்கும் அரசியல்
அமைப்பு நிராகரித்ததற்கும் இடையே உள்ள அடிப்படை தொடர்பை பிளேயர் ஒதுக்கி வைத்துவிட்டார்.
பிரான்சிலும், ஹாலந்திலும், ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பு தடையற்ற
முறையில் பெருவணிக பொருளாதார செயற்பட்டியலுக்கு எதிராக இருப்பதற்கும், குறிப்பாக சமூக, பொதுநலத்
திட்டங்களை தகர்ப்பதற்கும் எதிராகத்தான் இயக்கப்பட்டது; ஆனால் பிளேயரோ அவற்றிற்கு ஆதரவு
தருபவராவார்.
தற்போதுள்ள பிரச்சினையானது மாறுதல் தேவையா என்பது அல்ல,
பூகோளமயமாக்கல் சகாப்தத்தில் சமூக மாற்றியமைப்பு எந்த அளவிற்கு தவிர்க்கமுடியாமல், பயங்கரவாத
வளர்ச்சியை தடை செய்யும் வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் என்று பிரிட்டனின் பிரதம மந்திரி
கூறினார். "ஒரு கூடுதலான அறிவுபூர்வமான பட்ஜெட்" பற்றி விவாதத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின்
தள்ளுபடியை விட்டுவிடுதற்கும் மேல் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு, தோல்வியுற்றுவிட்ட ஐரோப்பிய சமூக முன்மாதிரியை "நவீனப்படுத்த
வேண்டும்" ஏனெனில் அதன்படி 20 மில்லியன் மக்கள் வேலையின்மை என்ற எண்ணிக்கை பெருகியுள்ளதுடன், ஐரோப்பிய
உற்பத்தித் திறன் விகிதங்களும் அமெரிக்காவை காட்டிலும் குறைந்துள்ளன என்று பிளேயர் அறிவித்தார். மேலும், "தற்கால
பொருளாதார ஒப்புமைக் குறியீட்டில், திறமைகள், ஆய்வு, வளர்ச்சி, உரிமங்கள், தகவல் துறை என்று எப்படி எடுத்துக்
கொண்டாலும், ஐரோப்பிய நிலைப்பாடு, சரிந்து கொண்டிருக்கிறதே அன்றி, உயரவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய உயிரி தொழில்நுட்ப துறையை இந்தியா ஐந்து
மடங்கு விரிவாக்கம் செய்யும்; சீனாவோ கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆய்வு, வளர்ச்சித்துறைக்கான செலவீனங்களை
மும்மடங்கு அதிகரித்துள்ளது" என்றும் எச்சரித்தார்.
தன்னுடைய வாதத்தின் மையப் பகுதியை வலியுறுத்தி அவர் கூறியதாவது, "எமது சமூக
மாதிரியின் நோக்கம் போட்டியிடுவதில் நம்முடைய திறமையை பெருக்குதல் என்று இருக்க வேண்டும்."
இதற்குப் பொருள் "ஒழுங்குபடுத்துதல் மற்றும் வேலைப்பாதுகாப்பு" ஆகியவற்றிற்கு
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்; "செயலூக்கமான தொழிலாளர் சந்தைக் கொள்கைகள்" கவனிக்கப்பட்டு மேலும்
போட்டியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஒரு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்
தொகுப்பைக் கல்வியூட்டலில் கவனம்செலுத்தப்பட வேண்டும்."
"இதை எவ்வாறு செய்ய வேண்டும்" என்பதை கோக் அறிக்கை காட்டியுள்ளது
என்றார் பிளேயர். டச் பிரதம மந்திரி விம் கோக், நவம்பர் 2004ல் ஐரோப்பிய ஆணையத்திற்கு அளித்த
அறிக்கை பற்றிய குறிப்பாகும் இது. இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியம் பல பொருளாதார, சமூக
மறுசீரமைப்புக்களை போதிய ஆற்றல் இன்றி செயல்படுத்தத் தவறியது பற்றி மிகவும் விமர்சித்து சுட்டிக்காட்டியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இடர்பாடுகளுக்கு கோக் பரிந்துரைத்தவற்றில்,
வேலைநேரங்களை மட்டுப்படுத்தும் சட்டத்தை திருத்துதல், தற்காலிக தொழிலாளரை பயன்படுத்தப்படுதல்,
தொழிலாளர் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் இடம் பெயரும் தன்மைக்கு தற்போதுள்ள இடையூறுகளை
அகற்றுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
சுருங்கக் கூறின், "ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய தேவையற்ற கட்டுப்பாட்டை
திருப்பப் பெறவேண்டும், அதிகாரத்துவத்தின் செயல்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டும் மற்றும் உலகந்தழுவிய,
வெளிப்பார்வை மிகுந்த, போட்டியை சமாளிக்கும் வெற்றிகரமான ஐரோப்பாவை உருவாக்க வேண்டும்" என்று
பிளேயர் கூறினார்.
தனக்குப் பெரிதும் விருப்பமான வலதுசாரி பொழுபோக்குக் குதிரைகளை -- சட்டம்
ஒழுங்கு, எதிர் பயங்கரவாத, குடியேற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் ஐரோப்பிய இராணுவத்
திறன்களை பெருக்கும் நடவடிக்கைகளை கடைப்பிடித்தலுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அந்தவிதத்தில்தான்,
"வெளியுறவுக் கொள்கையில்" ஐரோப்பா வலிமையான ஒரு சக்தியாக இருக்க முடியும் என்றும், இதில் அமெரிக்கா
ஒரு போட்டியாளராக இராது என்றும் "ஒரு சிறந்த பங்காளியாக" இருக்கும் என்றும் கூறினார்.
பிரிட்டனுடைய அரசுக்கட்டுப்பாடு அகற்றப்பட்டுவிட்ட பொருளாதாரமும், அவருடைய
அரசாங்கத்தின் சமூக நலன்கள் தகர்ப்பும் அனைத்து ஐரோப்பாவிற்கும் முன்மாதிரியாக இருக்கும் என்று அவர்
உறுதியளித்தார். பிரஸ்ஸல்ஸில் மறுப்புத் தெரிவித்தாலும்கூட, அந்த பிளேயரின் நிலைப்பாடு எவ்வாறு மிகப் பெரும்
செல்வம் கொழிக்கும் தட்டிற்கும் சமூக நலன்களை இழந்துள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் இடையே பெரும்
பிளவு உள்ளது என்ற உண்மையான டிக்கன்சிய பார்வையைத்தான் காட்டுகிறது. ஆனால் பிளேயர் இத்தோடு
நின்றுவிடவில்லை. சீனா, இந்தியா இவற்றிற்கு எதிராகப் போட்டியிடவேண்டிய தேவை பற்றி பல முறை பிளேயர்
கொடுத்துள்ள குறிப்பு, ஐரோப்பாவிற்கு எத்தகைய சமூக வெட்டுக்களும் வறிய வேலை நிலைகளும் வேண்டும் என
அவர் வாதிடுகிறார் என்பதை தெரிவிக்கின்றது.
இதே கருத்துத்தான் பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரெளனும் தன்னுடைய
Mansion House
ஆண்டு உரையில் தெரிவித்ததும் ஆகும். தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய கருத்து "காலம் கடந்து விடவில்லை;
ஆனால் உற்பத்திக்கு எதிராக உள்ளது" என்று அவர் எச்சரித்தார். "பூகோளமயமாக்கலின் விளைவினால்,
ஐரோப்பாவில், அதன் முதல் கட்டமான வணிக முகாம் சகாப்தத்திற்கு பொருத்தமான செயற்பட்டியல் பலவும்
இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டன."
"ஐரோப்பாவை இப்பொழுது எதிர்கொள்ளும் சவால் உலகப் போட்டியாகும்....
நம்முடைய பிரச்சினை பழைய உள்முக மாதிரியில் இருந்து மாறி ஒரு புதிய வளைந்து கொடுக்கும், சீர்திருத்த முறையிலான,
வெளிப்படைத் தன்மையையும், உலகந்தழுவிய பார்வையையும் கொள்ள வேண்டிய ஐரோப்பா ஆகும்; அதுதான் ஆசியா,
அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் இருந்து வெளிவரும் பொருளாதார சவால்களை வெற்றி கொள்ள
முடியும்.:"
சீனாவிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் பொருளாதார மட்டக்குறி ஐரோப்பாவில்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக உள்ள வேலை நிலைமைகள், சமூகநலப் பணிகள் ஆகியவற்றை பாதுகாக்கும் தன்மையை
அகற்றிவிட்டது. ஏற்கனவே மிக அதிக அளவில் இந்த நன்மைகள் அகற்றப்பட்டுவிட்டன என்றாலும், பிளேயரினால் திட்டமிடப்பட்டுள்ள
ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இதுகாறும் அழிக்கப்பட்டவை நிழல்
போன்றவைதான் என்ற உணர்வை கொடுக்கின்றன.
பிளேயர், ஜேர்மனி மற்றும் பிரான்சுடன் உள்ள வேறுபாடுகளைப் பற்றி
பேசும்பொழுது, ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் இருவரும் தன்னைப்
பற்றி "தேசிய வேட்கை" கொண்டவர் என்று கூறியுள்ளது மட்டும் ஒரு பிரச்சினை அல்ல என்றார். ஐரோப்பாவில்
பிரிட்டனுடைய நலன்களையும் வலியுறுத்துவதில் பிளேயர் உறுதியாக இருந்தாலும், அவர் சர்வதேச நிதிய தன்னலக்
குழுவின் வளைந்துகொடுக்கும் ஒரு கருவியாக, வாஷிங்டனிலுள்ள புஷ் நிர்வாகத்தின் கருவியாகவும்தான் பேசி வருகிறார்.
இந்த வட்டங்கள் பிரான்சை மறுசீரமைப்பே செய்யாத பொதுநலத்திட்டங்களை கொண்டிருப்பதுடன், அவற்றை
விட்டுக் கொடுக்க விரும்பாத அரசாங்கமாக கருதுகின்றன என்றும் ஜேர்மனியையும் அவ்வாறே சிறிதும் சீர்திருத்தங்களை
கொண்டுவராத அரசாங்கம் என்று கருதுகின்றன என்றும் குறிப்பிட்டார். அவை ஐரோப்பிய பொருளாதார சமூக
ஊறவுகள் அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றன, விளைவுகளைப் பற்றி
கவலைப்படவில்லை.
See Also:
''பழைய ஐரோப்பாவிற்கு''
எதிராக பிளேயர் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார்
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு
முன்னதாக தீவிர மோதல்கள் வெளிப்படுகின்றன
Top of page |