World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Increasing attacks on US and allies in Afghanistan

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் கூட்டணியினர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்

By Peter Symonds
23 June 2005

Back to screen version

ஊடகங்களில் செய்திகள் வராவிட்டாலும், அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு எதிராக ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு அதிகரிக்கின்றது என்பதற்கு வளர்ந்துவரும் சமிக்கைகள் காணப்படுகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, குறிப்பாக அந்த நாட்டின் தெற்கிலும் கிழக்கிலும் சண்டையில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அவற்றால், 30 இற்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தான் போலீசாரும், படையினரும், சுமார் 260 கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும் மற்றும் குறைந்தபட்சம் 100 பொதுமக்களும் மடிந்திருக்கின்றனர். மார்ச் முதல் 29 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்---- 2001 இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் இது சுமார் 20 சதவீதமாகும்.

இந்த வாரம் ஈராக்கில் தலைமை அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவிருக்கும் அமெரிக்க தூதர் Zalmay Khalilzad, ஆப்கானிஸ்தானிலிருந்து விடைபெற்று செல்லும் தனது உரையில் நீடித்துக்கொண்டுள்ள மோதல் குறித்து குறைத்து மதிப்பிட்டார். பயங்கரவாதம், தீவிரவாதம், போர்க்குழுக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் அறிவித்தார். "தற்போது நட்பும் சமரச இணக்கமும் ஏற்படவேண்டிய தருணமாகும். மீண்டும் ஆப்கானிஸ்தானில் சகோதரர்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்வதை அனுமதிக்க வேண்டாம்" என்று அவர் கூறினார்.

என்றாலும், கலீல்சாத் பதவியிலிருந்து மாற்றப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் கூட காபூலில் உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூதரை கொலை செய்வதற்கு நடைபெற்ற ஒரு முயற்சியை அது முறியடித்துவிட்டதாக தெரிவித்தது. ஆப்கான் அதிகாரிகள் மூன்று பாக்கிஸ்தான் குடிமக்களை உள்ளூர் தொலைக்காட்சியில் காட்டினர், லாக்மேன் மாகாணத்தில் தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் ராக்கெட்டுகளுடன் அவர்கள் பிடிக்கப்பட்டதாக கூறினர். பாதுகாப்பு அதிகாரிகள் தந்துள்ள தகவலின்படி, அந்த மூவரும் ஞாயிறன்று கலீல்சாத் கலந்து கொண்ட விழாவிற்கு அருகில் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்கள் அவரை கொல்வதற்கு கருதியிருந்தனர் என்று ஒப்புக்கொண்டனர்.

இந்த சம்பவம் பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு தூபம் போட்டது. பாக்கிஸ்தான் எல்லையில் ஊடுருவல் செய்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் ஊடுருவும் கிளர்ச்சிக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான அளவிற்கு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று பல சந்தர்ப்பங்களில் கலில்சாத் பாக்கிஸ்தான் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்--- அந்தக் கூற்றுக்கள் ஞாயிறு நிகழ்ச்சிக்கு பின்னரும் திரும்பத் தெரிவிக்கப்பட்டன. பாக்கிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் ஹேக் ரஷீத் அஹமது மிகுந்த கோபத்தோடு பதிலளித்தார், இஸ்லாமாபாத் அந்த படுகொலை சதியில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பாக கூறப்பட்டுள்ள தகவல்கள், "ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு" என்றார். இந்த மோதல் ஆப்கான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே அமெரிக்கா தலைமையிலான இராணுவம் ஆயுதாங்கிய எதிர்ப்பை ஒழித்துக்கட்ட தவறிவிட்டது என்பது தொடர்பாக நிலவுகின்ற விரக்தியை எடுத்துக்காட்டுகிறது.

"பாரிய நடவடிக்கைகள்" எடுத்திருப்பதற்கு பதிலாக, வாஷிங்டனின் கைப்பாவையான---- ஜனாதிபதி ஹமீத் கர்சாய்---- உறுதியான எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறார். அது தொடர்ந்து வெளிநாட்டு இராணுவம் இருப்பதாலும், கடுமையான ஒடுக்குமுறைகள் கையாளப்படுவதாலும், நெருக்குகின்ற பொருளாதார சமூக தேவைகளை கவனிக்கத் தவறிவிட்டதாலும் தூண்டிவிடப்பட்டுள்ளது. 18,000 அமெரிக்க மற்றும் கூட்டணியினர்களின் துருப்புக்கள் இருந்தாலும் அவற்றிற்கு ஹெலிகாப்டர் குண்டு வீச்சு விமானங்களும் போர்விமானங்களும் ஆதரவாக வந்தாலும், ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்காரர் குழுக்கள் அரசாங்க பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடுவது பலமுறை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

தெற்கு கண்டகார் மாகாணத்திலுள்ள மியான் நிஷின் மாவட்டத்தில் சென்றவாரக் கடைசியில் மிகப்பெரிய மோதல்கள் ஒன்று நடைபெற்றது. கிளர்ச்சிக்காரர்கள் ஒரு போலீஸ் கவச வாகனத்தை தாக்கினர், அதற்கு பின்னர் மியான் நிஷின் என்றே அழைக்கப்படும் மாவட்ட தலைநகர் மீதும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர், 31 போலீசாரை கைப்பற்றியும், பிரதான அரசாங்க கட்டிடத்தையும் பிடித்துக்கொண்டனர். ஒரு தலிபான் பேச்சாளர் ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் போலீசார் மீது விசாரணை நடைபெற்றதாகவும், போலீஸ் தலைமை அதிகாரி உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மீதமிருந்த 23 அதிகாரிகள் தலிபானை எதிர்த்து போரிடுவதில்லை என்று உறுதிமொழியளித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

400 ஆப்கான் போலீசார் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் உதவியோடு அந்த நகரை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஒரு பெரிய நடவடிக்கையை செவ்வாயன்று மேற்கொண்டனர். மாகாண துணை போலீஸ் தலைமை அதிகாரியான் சலீம் கான் செவ்வாயன்று Reuters செய்திக்கு பேட்டியளித்தபோது, கிளர்ச்சிக்காரர்களை அந்த நகரத்திற்கு வடக்கே உள்ள ஒரு பகுதிக்கு விரட்டியடித்தனர் மற்றும் Murghai கிராமத்தில் நடைபெற்ற சண்டையில் 11 பேரைக் கொன்றனர் என்று தெரிவித்தார். மற்றொரு அமெரிக்க விமானப்படை தாக்குதல்களில் 21 கெரில்லாக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

புதன்கிழமை வரை சண்டை நீடித்தது அப்போது அமெரிக்க படையினரும் ஆப்கான் போலீசாரும் தப்பி ஓடிக்கொண்டிருந்த கிளர்ச்சிக்காரர்களை விரட்டிச் சென்றனர் மற்றும் அவர்களது தளங்கள் மீது AC 130 குண்டுவீச்சு விமானங்கள், Apache ஹெலிகாப்டர்கள், மற்றும் A-10 போர் விமானங்களால் குண்டு வீசி தாக்கித் தகர்த்தனர். சலீம் கான் ஊடகங்களுக்கு நேற்று பேட்டியளிக்கும்போது '' தலிபான் வீழ்ச்சிக்கு பின்னர் நான் பார்த்த மிகக்கடுமையான குண்டு வீச்சு மற்றும் சண்டை இது'' என்று கூறினார். குறைந்தபட்சம் 64 தலிபான்கள் கொல்லப்பட்டும், மற்றைய 30 பேர் பிடிக்கப்பட்டும் உள்ளனர் என்று அவர் கூறினார். 12 ஆப்கான் படையினரும், போலீசாரும் இந்த நடவடிக்கைகளில் இறந்தனர் மற்றும் ஐந்து அமெரிக்க படையினரும் காயமடைந்தனர்.

கடந்த வாரத்திற்கு மேலாக நடைபெற்ற இதர தாக்குதல்களில் கீழ்கண்டவை அடங்கும்:

* ஜூன் 19 ஞாயிறு: ஹெல்மாண்ட் மாகாணத்திலும், தீவிரமான சண்டை நடைபெற்றது. ஒரு தொலைதூர மலைவாழ் பகுதியில் அமெரிக்கக் கூட்டணி ரோந்து தரைப்படையை எதிர்த்து சண்டையிட்ட கிளர்ச்சிக்காரர்கள் மீது விமானப்படைத் தாக்குதல்கள் நடைபெற்றதில் ''15 முதல் 20 எதிரிகள்'' கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க இராணுவம் கூறிற்று. ''இந்த கிரிமினல் குற்றவாளிகள் கூட்டணிப் படைகளோடு சண்டையிட்டபோது அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆபத்தை எதிர்கொண்டனர். அவர்கள் மீது நாங்கள் எங்களது நடவடிக்கையை தணித்துக்கொள்ளப் போவதில்லை. ஆப்கனிஸ்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருக்க போவதில்லை`` என்று அமெரிக்க பேச்சாளரான லெப்டினட் கர்னல் Jerry O'Hara அறிவித்தார்.

அதே நாளில் ,கண்டஹார் நகருக்குள் மூன்று ராக்கட்டுகள் வெடிக்கப்பட்டன. அந்தத் தாக்குதலின் இலக்கு தற்போது அமெரிக்க சிறப்புப் படைகள் தங்கியுள்ள தலிபான் தலைவர் முல்லா ஒமரின் முந்தைய வீடாகும். காபூல்-கண்டஹார் நெடுஞ்சாலையில் ஒரு போலீஸ் சோதனைச்சாவடி மீது ஞாயிறு நள்ளிரவிற்கு பின்னும் திங்கள் அதிகாலையிலும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிகள், ஏழு கிளர்ச்சிக்காரர்களை கொன்றதாக சாபுல் மாகாண போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் ஒரு அதிகாரியை கொன்றனர்.

* ஜூன் 18 சனிக்கிழமை: கிளர்ச்சிக்காரர்கள் ஒரு அரசாங்க அலுவலகத்தை தாக்கிய பின்னர் Zabul மாகாணத்தைச் சேர்ந்த டேகோபன் மாவட்டத்தில் ஒரு 2 மணி நேர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ஆப்கான் துருப்புக்கள் அமெரிக்கா குண்டு வீச்சு விமானங்கள் அனுப்பப்பட்ட பின்னர் 4 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை இரவில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஒரு நீதிபதி, ஒரு புலனாய்வு அதிகாரி மற்றும் ஒரு மாகாண கல்வித்துறை ஊழியர் ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

* ஜூன 17 வெள்ளிக்கிழமை: ஹெல்மாண்ட் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது சாலைேயோரத்து வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் ஒரு படையினர் கொல்லப்பட்டார். பிற பகுதிகளில், காண்டஹார் மாகாணம் ஷாவாலிகோர்ட் மாவட்டத்தில் ஆப்கான் துருப்புக்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் இரண்டு கிளர்ச்சிக்காரர்கள் மடிந்தனர்.

* ஜூன் 14 செவ்வாய்க்கிழமை: காண்டஹாருக்கும் உரூஸ்கான் மாகாணங்களுக்கும் இடையிலுள்ள எல்லையில் ஒரு ஆப்கான் - அமெரிக்கக் கூட்டணி ரோந்து படை மீது சுமார் 90 கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்தினர். ஒரு அரசாங்க அதிகாரி தந்துள்ள தகவலின்படி ஏழு கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காண்டஹார் மாகாணத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரு மலைவாழ் முதியவரை சுட்டுக்கொன்றனர். அவரது குடும்பம் பகிரங்கமாக ஜனாதிபதி கர்சாயை ஆதரித்தது.

* ஜூன் 13 திங்கள்: காண்டஹார் நகருக்கு வெளியில் ஒரு இராணுவ கவச வாகனத்தை ஒரு வெடிகுண்டு தாக்கியதில் குறைந்தபட்சம் நான்கு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் வந்த செய்திகள் ஐந்து அமெரிக்க துருப்புக்கள் ஒரு தற்கொலை குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டதாக கோடிட்டுக்காட்டின, ஆனால் அமெரிக்கப் பேச்சாளர்கள் பின்னர் அதை மறுத்தனர். அமெரிக்க துருப்புக்களில் ஒருவர் கடுமையான காயமடைந்ததாகவும், அவரை அப்புறப்படுத்த வேண்டி வந்ததாகவும் செய்திகள் வந்தன. பாக்டிக்கா மாநிலத்தில் ரோந்துப் படை மீது சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டார், மற்றும் மூவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் நடந்து சில நாட்களுக்குள் காண்டஹார் தாக்குதல் நடைபெற்றது.

மிக அண்மைக்காலம் வரை, தற்கொலை குண்டு வீச்சுக்கள் மிக அபூர்வமாகத்தான் ஆப்கானிஸ்தானில் நடந்துவந்தன. ஜூன் 1இல் காண்டஹாரிலுள்ள ஒரு மசூதியில் ஒரு தற்கொலை குண்டு வீச்சு தாக்குதல் என்று கருதப்பட்ட சம்பவத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காபூலின் போலீஸ் தலைமை அதிகாரி படை தளபதி Muhammad Akram Khakrezwa குறைந்தபட்சம் மற்ற 19 பேருடன் கொல்லப்பட்டார். தலிபானுக்கு எதிரான பிரபல மெளலவி அப்துல்லா பாயாஸ் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்த குண்டு வீச்சில் குறைந்தபட்சம் 50 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் ஆப்கான் அதிகாரிகள் குளிர்கால முடிவில் செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று கோடிட்டுக்காட்டினர். ''அல்கொய்தா மீண்டும் தனது அணியை திரட்டிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஈராக்கில் மட்டுமல்ல ஆப்கனிஸ்தானிலும் கவனம் செலுத்துவதற்காக அவர்கள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக்கொண்டிருக்கலாம் என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரஹீம் வார்டக் சனிக்கிழமையன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர் ''அடுத்த 3 மாதங்கள் எங்களுக்கு மிகவும் கடுமையாக இருக்குமென்று கருதுகிறோம். இந்த நாட்டின் எதிரிகள் தேர்தலை சீர்குலைப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்வார்கள்.'' என்றார்.

இப்படி அவர் வலியுறுத்திக் கூறியதற்கு வார்டக் சான்று எதையும் தரவில்லை. கர்சாயின் அவரது அமைச்சர்களும், இந்த தாக்குதல்களை தேர்தல் நிகழ்ச்சிபோக்கோடு இணைப்பதற்கு காரணங்களை வைத்திருந்தனர். அரசியலமைப்பு அதிகாரங்கள் மட்டுப்படுத்தியிருந்தாலும், காபூல் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்றம் சிக்கலாக்கிவிடும். தற்போது அத்தகைய கட்டுப்பாடு எதுவுமில்லை. ஆரம்பத்தில் 2004 ஜூனில் நடத்தப்படுவதற்கு திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல்கள் "பாதுகாப்பு காரணங்களுக்காக" திரும்பத்திரும்ப தள்ளி வைக்கப்பட்டன.

மேலும் அமெரிக்கா மற்றும் அரசாங்க இலக்குகள் மீது அல்-கொய்தா அல்லது தலிபான் மட்டுமே தாக்குதல்களை நடத்தவில்லை. அண்மையில் Christian Science Monitor இல் தனது கருத்துகளை வெளியிட்ட உள்துறை அமைச்சக பேச்சாளர் லட்புல்லாஹ் மஸல் ''ஆப்கான் அரசாங்கம் எத்தனை பயங்கரவாதிகள், மற்றும் குற்றவாளி தட்டினரோடும் போர் புரிவதற்கு முயன்று வருகிறது என்பதை மிகப்பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்ளவில்லை. பத்திரிகைகளில் பெரும்பாலும் வெளியிடப்படுபவை அல்-கொய்தா மற்றும் தலிபான் பற்றிய செய்திகள்தான், ஆனால் அதற்கு மேலும் உள்ளன'' என்று அறிவித்தார்.

தலிபான், அல்கொய்தா மற்றும் முன்னாள் ஆப்கான் பிரதமர் குல்புதீன் ஹெக்மட்யாருடன் சம்மந்தப்பட்ட போராட்டக்காரர்கள் 70 சதவீத மோதல்களுக்கு காரணம் என்று மஷல் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுடன் நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன----அவை போட்டிகள், கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் போர் பிரபுகள், குடிப்படை தளபதிகள், இராணுவ படை தளபதிகள், மலைவாழ் இனத்தலைவர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்றுக் கொண்டுள்ள மோதல்களில் விளைவாகும், இவர்களில் பலர் தலிபான் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு ஒரு வழியாக அமெரிக்காவை ஆதரித்தனர்.

மேலும் அமெரிக்க இராணுவமும் அதன் கூட்டணியினரும் தங்களது நடவடிக்கைளில் ஏற்படுகின்ற உயிர் பலி மற்றும் சேதங்களை வழக்கமாக ''எதிரி'', ''தலிபான்'' அல்லது ''அல்-கொய்தா'' என்று தள்ளுபடி செய்துவிடுகின்றது. ஆனால் மக்களில் பலர் ஆயுதந்தாங்கியுள்ள ஒரு நாட்டில் யார் எதிரி, யார் சாதாரண மலைவாழ் மக்கள் என்று வேறுபடுத்தி பார்ப்பதற்கு வழியில்லை. கிராமங்களில் தேடுதல் வேட்டைகளும் முறையற்ற கைதுகளும் பொதுமக்கள் மரணங்களும், காயங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை சாதாரண ஆப்கான் மக்கள் விரக்தியும் ஆத்திரமும் அடைவதற்கு ஒரு முக்கிய ஆதாரமாகும்.

பொதுமக்களது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஊட்டி வளர்க்கின்ற வகையில் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவுகள் உள்ளன. காபூலுக்கு வெளியில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையும் வறுமையும் பரவலாக உள்ளது. பிரதான பொருளாதார நடவடிக்கை கஞ்சா செடி வளர்ப்பது. இன்றைய தினம் உலகில் இதன் விநியோகிப்பில் மிகப்பெரும் பங்கு ஆப்கனிஸ்தானுக்கு உண்டு. ஆப்கனிஸ்தான் மக்கள் 21 முதல் 26 மில்லியனில் குறைந்தபட்சம் 6.5 மில்லியன் பேர் உயிர் வாழ்வதற்காக உணவிற்கான உதவிகளை நாடி நிற்பவர்கள் என்று உலக உணவு உதவித் திட்ட அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

ஆப்கனிஸ்தானின் சமூக அந்தஸ்த்து புள்ளி விவரங்கள் உலகிலேயே படுமோசமான ஒன்றாக உள்ளது. உயிர்வாழும் வயது 44.5 ஆண்டுகள், பிறக்கும் குழந்தைகள் 5இல் ஒரு பகுதி 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முன் இறந்துவிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 72,000 புதிய காச நோயாளிகள் சேர்கின்றனர். அடிக்கடி ஏற்படுகின்ற தொற்று நோய்களில் மலேரியா, அம்மை நோய், மூளைக் காய்ச்சல், மற்றும் விஷக் காய்ச்சல் ஆகியவையும் அடங்கும். அண்மையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒரு இனம் தெரியாத நீரில் பரவும் வியாதி காலராவாக இருக்கக்கூடும், காபூலில் இதுதொடர்பாக 3,000திற்கு மேற்பட்டவர்கள் பதியப்பட்டார்கள்.

அமெரிக்கா தலைமையிலான தலையீடு தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னரும் ஆப்கான் மக்கள் தங்களது நாட்டின் விவகாரங்கள் இந்த அளவிற்கு படுமோசமாக ஆனதற்கு வாஷிங்டன் மீது பழிபோடுவதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை மற்றும் சிலர் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயாராகிவிட்டனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved