:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: the JVP's bogus appeal for "unity"
and "voluntary labour"
இலங்கை: "ஐக்கியத்திற்கும்" "தொண்டர் உழைப்புக்குமான" ஜே.வி.பி யின் போலித்தனமான
அறைகூவல்
By K. Ratnayake
24 January 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டாவது பிரதான கட்சியான
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), சுனாமி பேரழிவை அடுத்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கடுமையாக
கீழறுக்கும் மற்றும் மீள் கட்டுமான சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் கட்டியடிக்கும் திட்டமொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் பேரழிவு இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமானதாகும்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக இருப்பதோடு இன்னமும் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
சுமார் 90,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதோடு கிட்டத்தட்ட பத்துலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
பெரும்பாலானவர்கள் தமது ஜீவனோபாயங்களையும் அதேபோல் குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர். தவிர்க்கமுடியாத
வகையில் பாதிக்கப்பட்டவர்கள் வறியவர்களாக இருப்பதோடு, அவர்கள் மிகவும் ஆபத்தான நிலைமையில்
வாழ்ந்துவரும் கிராமவாசிகள், மீனவர்கள் மற்றும் குடிசைவாசிகளுமாவர்.
இந்தப் பேரழிவு சுதந்திர முன்னணியை பொறுத்தளவில் அதன் அரசியல் நெருக்கடியை
அதிகரிக்க செய்துள்ளது. இந்தக் கூட்டணி, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு)
அரசாங்கத்தை முன்கூட்டியே பதவி விலக்கிய பின்னர் ஏப்பிரலில் நடந்த தேர்தலில் சற்றே வெற்றி பெற்றது. ஆனால்
இந்தப் புதிய அரசாங்கம், நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான சமாதானப்
பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் தோல்வி கண்டது, அல்லது பொருளாதார பிரச்சினைகளின் குழப்பத்தை
தீர்க்கத் தவறியது. வாழ்க்கை நிலைமைகளை கீழறுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியை குற்றம் சாட்டிய சுதந்திர
முன்னணியே இப்பொழுது மறுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களின்
இலக்காகியுள்ளது.
சுனாமி தாக்கி நான்கு வாரங்களின் பின்னர், அரசாங்க விரோத அலை
உருவாகிக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான உயிர்தப்பியவர்கள், அவசர சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களும்
முன்னெச்சரிக்கை வழங்கப்படாமை மற்றும் உத்தியோகபூர்வ நிவராண நடவடிக்கைகளின் பற்றாக்குறைகளையிட்டு
நியாமான முறையில் ஆத்திரமடைந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கத்தின் துயர்துடைக்கும்
முயற்சிகளுக்கு வேறுபட்ட விதத்தில், பிரச்சினைகளை சாதாரண உழைக்கும் மக்கள் தாங்களாகவே
பொறுப்பேற்றுக்கொண்டதோடு இன மத பின்னணிகளைக் கருதாமல் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.
ஜே.வி.பி இந்த சுய அர்ப்பணிப்பு உணர்வுகளை அரசாங்கத்திற்கு முண்டுகொடுப்பதன்
பேரில் சுரண்டிக்கொள்ளவும் திசைதிருப்பிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கின்றது. 1960களில் சிங்களப்
பேரினவாதம் மற்றும் கிராமப்புற தீவிரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கட்சி
முதற் தடவையாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. இந்தக் கட்சியின் பிரதான சிறப்பியல்பு, தமிழர் விரோத
இனவாதமும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்குவதற்கான யுத்தம் தொடர்வதை ஆதரிப்பதுமாகும். பல
சந்தர்ப்பங்களில் சோசலி்ஸ்டுக்கள் என்று கூறிக்கொண்ட போதிலும், இப்போது ஜே.வி.பி வீழ்ச்சி கண்டுவரும்
வாழ்க்கை நிலைமைகளின் மத்தியில் ஆட்சி செய்யும் முதலாளித்துவ அரசாங்கத்தின் ஒரு பகுதியாகியுள்ளது.
ஜே.வி.பி யின் பிரேரணைகளின் பிரதான இலக்கு "தேசிய ஐக்கியமாகும்". அது ஸ்தாபிக்கக்
கோரும் "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய நடவடிக்கை நிலையம்" ஜனாதிபதியால் அல்லது அவர்
இல்லாத போது பிரதமரால் தலைமை வகிக்கப்படும். இந்த நிலையம், பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளின்
தலைமை அதிகாரிகளையும் வர்த்தகத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுனர்களையும் சேர்த்து,
"அனைத்து அரசியல் கட்சிகளையும் தகுதிவாய்ந்த அலுவலர்களையும்" உள்ளடக்கியிருக்கும். இந்த சபை ஒரு "தேசிய
மாநாட்டின்" ஊடாக ஸ்தாபிக்கப்படுவதுடன் அனைத்து மீள் கட்டமைப்பு பணிகளுக்கும் பொறுப்பாக இருக்கும்.
இந்த "தேசிய நடவடிக்கை நிலையத்தில்" எந்தவொரு கட்சியும் அங்கம் வகிக்க
முடியும். ஆயினும், அவ்வாறு செய்வதானால் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு "எதிர்மாறான அரசியல் வேறுபாடுகளை"
ஓரங்கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். "ஐக்கியம்" மற்றும் "தேசத்தை மீள கட்டியெழுப்புதல்" என்ற
போர்வையின் கீழ் ஜே.வி.பி பிரேரிப்பது என்னவென்றால், எதிர்ப்புக்களையும் கருத்து வேறுபாடுகளையும் நசுக்குவதற்காக
அரசாங்கம், இராணுவம் மற்றும் அரச கருவிகளும் மேலாதிக்கம் செய்யும் ஒரு சர்வாதிகார இயந்திர அமைப்பை
ஸ்தாபிப்பதே ஆகும். "அரசியல் வேறுபாடுகளை" முடிவுக்குக் கொண்டுவருவதானது எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கத்தை
விமர்சிப்பதை நிறுத்துவதையே அர்த்தப்படுத்துகின்றது.
கோட்பாட்டளவில் ஜே.வி.பி ஐக்கியத்திற்காக அழைப்பு விடுக்கும்போது, அது
விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புக்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என்பதை
தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையில், விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுக்க
அனுகூலமான நேரம் இதுவே என அதன் தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து இராணுவ
உயர்மட்டத்தில் சில பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜே.வி.பி பாராளுமன்ற தலைவர் விமல் வீரவன்ச, ஜனவரி 9 ஐலண்ட்
பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் சுனாமியின் விளைவாக "முன்னொருபோதும் இல்லாத
மனித மற்றும் பொருள் இழப்புக்கு" முகம் கொடுத்துள்ளனர். இது "நிச்சயமாக அவர்களது எதிர்ப்பு இயலுமையை
மழுங்கச் செய்யும்," எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுதலைப் புலிகளின் இடைக்கால நிர்வாக சபை பிரேரணை
பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தவொரு திட்டத்தையும் கைவிடுமாறு அரசாங்கத்திற்கு
அழைப்பு விடுத்தார். இது முடிவில் யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் என விடுதலைப் புலிகள் முன்னெச்சரிக்கை
செய்திருந்தனர்.
ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்புகளூடாக சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் அனுப்பப்படுவதை எதிர்ப்பதன் மூலம் இனவாதப் பதட்ட நிலைமைகளை கிளறிவிட
முயற்சித்தது. இரு தசாப்த கால யுத்தத்தால் பாழாக்கப்பட்டுள்ள நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கும் சுனாமியின்
பாதையில் நேரடியாக அமைந்துள்ளன. பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுதலைப்
புலி கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களாக இருப்பதுடன் அவர்களுக்கு உதவவல்ல பதிலீடுகள் கிடையாது.
இந்தக் கட்சி, வெளிநாட்டு அரசியல்வாதிகள் அல்லது ஐக்கிய நாடுகள் சபை
செயலாளர் கோபி ஆனான் உட்பட்ட அதிகாரிகளும் விடுதலைப் புலிகளுடன் உத்தியோகபூர்வமாக
தொடர்புகொள்வதை எதிர்க்கின்றது. ஜனவரி 8 அன்று ஒரு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் போது,
ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, விடுதலைப் புலிகள் பற்றி அனானுக்கு முறைப்பாடு செய்ததோடு
சர்வதேச உதவிகள் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு அமைப்புக்கும் அனுப்பப்படக் கூடாது என
வலியுறுத்தினார்.
"தொண்டர் சேவை"
தனது "தேசிய நடவடிக்கை நிலையத்தின்" கீழ், ஜே.வி.பி ஒரு நிலைத்திருக்கக்
கூடிய அதிகாரத்துவத்தை பிரேரிக்கின்றது. செய்திக் குறிப்புகள் சேகரித்தல், திட்டமிடல், பொதுநல
நடவடிக்கைகள், மனித வள முகாமைத்துவம், சர்வதேச மற்றும் தேசிய உதவிகளை சேகரித்தல், தேசிய வெகுஜன
ஊடகம், நிதி மற்றும் கணக்குப் பரிசோதனை ஆகியவற்றுக்காக ஏழு உப நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இந்த "உப மையங்களில்" ஒன்றான "மனிதவள முகாமைத்துவம்", குறிப்பாக
ஜே.வி.பி யின் திட்டங்களின் வர்க்க சுபாவத்தை அம்பலப்படுத்துகின்றது. இந்த கருவிகளின் பிரதான நடவடிக்கை,
"தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதை" நோக்கி மக்களை "தொண்டர் சேவையை" மேற்கொள்வதற்காக
தூண்டுவதும் மற்றும் தேவையானால் கட்டாயப்படுத்துவதுமாகும். இதில் "தொண்டு" அல்லது "அரைச் சம்பளம்"
உள்ளடக்கப்படும், ஆனால் இந்த நிலையம் "வாரத்தில் ஒரு நாளை தொண்டர் உழைப்புத் தினமாக அறிவிக்க
வேண்டும்", மற்றும் "இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தொண்டர் சேவையை எங்கு எவ்வாறு இட்டுநிரப்ப
வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்."
"தொண்டர் சேவைக்கான" ஜே.வி.பி யின் பிரேரணையை, பாதிக்கப்பட்டவர்களுக்கு
பணம், பொருள்களை வழங்கி மற்றும் அவர்களுக்கு உதவுவதற்காக குழுக்களாக சென்று நடவடிக்கையில் ஈடுபட்ட
சாதாரண மக்களின் அர்ப்பணிப்புடன் ஒப்பிட முடியாது. அரசாங்கம் உதவப் போவதில்லை என்பதை அவர்கள்
அறிந்திருந்ததால், பல விடயங்களில் அவர்கள் தங்கள் சொந்த அர்ப்பணிப்பை வழங்கியிருந்தார்கள். ஜே.வி.பி யின்
திட்டம் அதற்கு எதிர்மாறான தாக்கத்தைக் கொண்டுள்ளது: அது, எல்லா தொண்டர்களையும், தனது
பொருத்தமின்மையை அம்பலப்படுத்தியுள்ள ஒரு அரசாங்கத்திற்கு கீழ்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதையும் மற்றும்
ஏனையவர்களையும் "தொண்டர்" சேவை படைகளுக்குள் வலுக்கட்டாயாமாக சேர்ப்பதையும் குறிக்கோளாகக்
கொண்டுள்ளது. "தொண்டர்களால்" தாங்கள் செய்யவிரும்புவதை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது என்பதை
சொல்லத் தேவையில்லை.
ஜே.வி.பி வகுத்துள்ள திட்டத்தின் தன்மை அதன் சொந்த வரலாற்றாலேயே
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1980களின் பிற்பகுதியில், இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அதன்
பேரினவாத பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இணையுமாறு
தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் தள்ளிச் சென்றது. ஜே.வி.பி யின் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகள்,
"தேசத்தைப் பாதுகாக்கும்" அதன் நாட்டுப் பற்று பிரச்சாரத்தை ஆதரிக்க மறுத்த நூற்றுக்கணக்கான
தொழிற்சங்கத் தலைவர்கள், கட்சி அலுவலர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களையும் படுகொலை செய்தன.
1994ல் சட்டபூர்வமான கட்சியாக்கப்பட்டதை அடுத்து இந்த வழிமுறைகளை அது உத்தியோகபூர்வமாக கைவிட்டது.
ஆனால் இப்போது ஆளும் கூட்டணியின் ஒரு பங்காளி என்ற வகையில், தேசிய மீள் கட்டுமானத்திற்காக
"தொண்டர்களை" ஒழுங்குபடுத்துவதற்கு தனது திட்டத்தின் பின்னால் ஜே.வி.பி அரச இயந்திரங்களை
வைத்திருக்கின்றது.
சுனாமி பேரழிவுக்கு முன்னரும் கூட, ஜே.வி.பி கடந்தாண்டு வரவு செலவுத்
திட்டத்தில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு பிரதியுபகாரமாக அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தை
"தொண்டர்" நடவடிக்கைகளுக்காக அதிகரிக்கச் செய்ய முற்பட்டது. இப்போது அரசாங்கத்தின் மீள்கட்டுமான
முயற்சிகளுக்கு உதவுவதற்காக அந்தத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு பிரேரிக்கின்றது.
பல ஊழியர்களுக்கு இந்த சம்பளக் குறைப்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும். சாதாரண
உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்தும் அதேவேளை, அரசாங்கம் அதன் முந்தைய ஏற்பாடுகளில்
மாற்றம் செய்ய வேண்டும் அல்லது உதாரணத்திற்கு அதன் பெருந்தொகையான பாதுகாப்பு வரவு செலவில்
வெட்டுக்களை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனைகள் எதையும் ஜே.வி.பி தெரிவிக்கவில்லை.
ரது லங்கா ஜனவரி மாத வெளியீட்டின்படி, ஜே.வி.பி தொழிற்சங்கத்தின்
5,000 உறுப்பினர்கள் ஏற்கனவே சுயாதீன நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அகில இலங்கை புகையிரத
பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் சரத் மானவடு, தொழிற்சங்கத்தின் "நல்ல வேலை" பற்றி போக்குவரத்து
அமைச்சரின் கருத்துக்கள் சம்பந்தமாக பத்திரிகைக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார். "மானவடுக்கள் (மானவடுவின்
உறுப்பினர்கள்) அர்ப்பணித்திருக்காவிடில், எங்களால் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தியிருக்க முடியாது," என
அந்த அமைச்சர் அவரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேசிய மீள் கட்டுமானம்" என்ற பெயரில், தமது சொந்த கோரிக்கைகளுக்கான
தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதாகவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
"கைத்தொழில் அமைதிக்காக" குமாரதுங்கவின் தொழிற்சங்க ஆதரவாளர்களில் ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்த
ஜே.வி.பி யை சேர்ந்த கிராமிய, சிறு கைத்தொழில் அமைச்சரான கே.டி. லால் காந்த, "சம்பள உயர்வு
மற்றும் ஊழியர்கள் நலன்புரி சேவைகள் சம்பந்தமான கோரிக்கைகளுக்கான தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட
உடன்படுவதாக" பிரகடனம் செய்தார்.
ஜே.வி.பி யின் திட்டங்கள் அமுலுக்கு வந்தால் பரந்த எதிர்ப்பை தோற்றுவிக்கும் என்பதில்
சந்தேகம் கிடையாது. எதிர்ப்பை நசுக்குவதன் பேரிலும் சிங்களப் பேரினவாத சக்திகளை தூண்டுவதற்காகவும் "ஒரு
தேசிய வெகுஜன ஊடக மையத்தை" இந்தக் கட்சி பிரேரிக்கின்றது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, தேசியக்
கருத்துப் போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்புவதன் பேரில்... நாட்டுப்பற்றையும் மற்றும் தேசிய ஐக்கியத்தையும்
முன்னேற்றுவதற்காக விசேடமாக இளைஞர்களை இலக்கு வைக்குமாறு" இந்த நிலையத்திற்கு ஜே.வி.பி அழைப்பு
விடுக்கின்றது.
ஜே.வி.பி யின் பிரேரணைகள், தேசத்தின் நிமித்தம் அனைத்து அரசியல் கட்சிகளையும்
ஐக்கியப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தின் பொது குறிக்கோளுடன் சேர்ந்துகொள்கிறது. சுனாமியை அடுத்து ஜனாதிபதி
குமாரதுங்க நிகழ்த்திய முதலாவது உரையில், பாதிக்கப்பட்டவர்களின் நிமித்தம் "ஐக்கியத்திற்காக" அழைப்பு
விடுத்தார். பல ஆசிரிய தலையங்கங்கள், இத்தகைய நெருக்கடியான காலத்தில் தங்களது வேறுபாடுகளை ஓரங்கட்டுமாறு
பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. உயிர்தப்பிய இலட்சக் கணக்கானவர்கள் எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான
நெருக்கடிகளைப் பற்றியன்றி, மாறாக உழைக்கும் மக்களின் பக்கத்தில் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான பகைமை
வெடிக்கும் ஆபத்து இருந்து கொண்டுள்ளதைப் பற்றியே அரசியல் ஸ்தாபனம் அக்கறை செலுத்துகின்றது.
ஜே.வி.பி யின் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ பிரதிபலிப்புகள் உடன்பாடானவையாக
இருக்கின்றன. குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், ஜே.வி.பி யின் பிரேரணைகள்
கிடைத்துள்ளதாகவும் அதுபற்றி அக்கறைசெலுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். அவர் நிவாரண நடவடிக்கைகளுக்கு
இராணுவத்தை பொறுப்பில் இருத்துவது மற்றும் கொடூரமான அவசரகால சட்டத்தை பரிந்துரை செய்தல் உட்பட
ஏற்கனவே பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட்
கட்சி போன்ற அவமானத்துக்குள்ளாகியுள்ள மரபுவழி தொழிலாளர் கட்சிகளில் நீண்டகாலம் தங்கியிருக்க முடியாத
நிலையில், ஆளும் கும்பல்கள் எதேச்சதிகார நடவடிக்கைகளையும் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பும்
நசுக்கப்படுவதையும் நியாயப்படுத்துவதற்காக மேலும் மேலும் ஜே.வி.பி யில் தஞ்சமடைகின்றன.
See Also :
சுனாமிப் பேரழிவின்
சமூகக் காரணிகள்
ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள்
விடுக்கப்படவில்லை
Top of page
|