World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Fallujah two months after the US military assault

The "City of Mosques" has become the "City of Rubble"

அமெரிக்க தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் பல்லூஜா

"மசூதிகள் நகரம்" "குப்பை மேட்டு நகரமாயிற்று"

By Harvey Thompson
20 January 2005

Back to screen version

பல்லூஜா நகரத்தில் சென்ற நவம்பர் மாதம் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் பாரியளவு விளைவிக்கப்பட்டுள்ள சேதம் பற்றி பிரிட்டனின் Channel Four News ஒரு சிறிய ஒளிநாடா செய்தியறிக்கையை அண்மையில் ஒளிபரப்பியது.

ஈராக்கின் பல்லூஜா நகரத்தின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதல் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய போர் குற்றங்களில் ஒன்றாகும். 9 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற Operation Phantom Fury நடவடிக்கையில் 10,000 அமெரிக்கத் துருப்புக்கள் 500 பிரிட்டிஷ் படையினரது ஆதரவோடு இறங்கினார்கள், 120 மசூதிகளைக் கொண்ட மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதியுடைய நகரம் என்று புகழ் பெற்ற அந்நகரம் அழிந்துள்ளது.

அதற்கு பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக, பல்லூஜா நகரத்தின் கதி பற்றியோ, அதனது மக்களது நிலை குறித்தோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கொரு காரணம் அமெரிக்க இராணுவம் அந்த நகரத்தை சுற்றி வளைத்துகொண்டிருக்கிறது மற்றும் நகருக்குள்ளேயும், வெளியிலும் நடக்கின்ற நடமாட்டங்கள் அனைத்தையும் நெருக்கமாக கண்காணித்து வருகிறது. ஆனால் இப்படி வாய்மூடிக் கிடப்பது நேர்மை குறைவானதும், கொத்தடிமை அணுகு முறையில் ஊடகங்கள் செயல்படுவதையும் காட்டுகிறது.

என்றாலும் ஒரு சில அபூர்வ விதிவிலக்குகளும் உண்டு. அதில் ஒன்று ஜனவரி 11 இல் பிரிட்டீஷ் தொலைக்காட்சி ஒளி பரப்பியதாகும். அலைவரிசை 4 செய்தி அலை வரிசைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு செய்தி அறிக்கை. அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கு பின்னர் அந்த நகரம் என்னவாயிற்று என்பதை கண்டுபிடிப்பதற்காக Dr.Ali Fadhil, பல்லூஜா பகுதிக்கு பயணம் செய்ததை Channel 4 News கார்டீயன் படத்தயாரிப்பு சிறப்பு செய்தியாக வெளியிட்டது.

பாக்தாதில் பணியாற்றிய ஒரு மருத்துவமனை டாக்டரான அவர் பின்னர் பத்திரிகையாளராக மாறி பயணம் செய்தார், ஆரம்பத்தில் அவர் அந்த நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. எனவே சுற்றியுள்ள கிராமங்களிலும் அகதிகள் முகாம்களிலும் பல்லூஜா மக்களை தேடத்தொடங்குகிறார், அங்குதான் அந்த நகரத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முதலில் அவர் பலூஜாவிற்கு மேற்கே 35 கிலோ மீட்டர் அப்பாலுள்ள Habbaniyah நகரத்திற்கு முதலில் செல்கிறார். முன்னாள் சுற்றுலா மையமான இந்த நகரத்தின் பிரதான தெருவில் உறையும் குளிரில் தற்காலிகமாக நெருப்பு மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டு மக்கள் குளிர்காயும் வருந்தத்தக்க காட்சியை காண்கிறார். அந்த அகதி முகாமில் உள்ளவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக உணவு எதுவும் கிடைக்கவில்லை.

Habbaniyah முகாமில் கடந்த இரண்டு மாதங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற Abu Rabe'e, Fadhil நோக்கி கூறுகிறார்: "நாங்கள் எண்ணெய் கிணற்றுக்கு நாட்டின் சொந்தக்காரர்கள் இல்லையா? ஆனால் என்னைப் பாருங்கள்: சொட்டு சொட்டாக இந்த விளக்கிற்கு நான் மண்ணெண்ணெய் அளந்து ஊற்றிக் கொண்டிருக்கிறேன். இங்கு வெப்பமூட்டும் வசதியில்லை-----நெருப்பு பற்றவைக்க விறகை நாங்கள் பயன்படுத்துகிறோம்."

ஜனவரி 30இல் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் பற்றி கேட்கப்பட்டதற்கு Rabe'e பதிலளிக்கிறார்: "நாங்கள் வாக்களிக்க முடியாது! நாங்கள் வாக்களிக்கவே முடியாது! முதலில் எங்களது வீடுகளுக்கு அவர்கள் எங்களை கொண்டு செல்ல வேண்டும்." இதுதான் திட்டமிட்ட தேர்தல்களுக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கிற பொதுவான பதிலாகும். முன்னாள் பல்லூஜாவின் மக்கள் எவருக்கும் அதிகாரிகள் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கவில்லை. மற்றொரு அகதியான ஹமீத் அல்லாவி, தனக்கு வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கவில்லை என்று Fadhil யிடம் கூறுகிறார், எப்படியாயினும் "மேலும் அதை நான் விரும்பவில்லை. இங்குள்ள பல்லூஜா மக்கள் எவருக்கும் வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கவில்லை."

பல்லூஜாவிற்கு வடக்கேயுள்ள ஒரு கிராமம் Saqlawyah இல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் அங்கு தேர்தல்களைப் பற்றிதான் பேசினர். ஒரு மதபோதகர் "இங்குள்ள மக்களுக்கு அரசாங்கம் ஏன் வாக்குச் சீட்டுக்களை தரவில்லை?" என்று கேட்கிறார். தொழுகைக்கு பின்னர் நடைபெறும் ஷேக் ஜமால் அல் மிகிண்டி இன் போதனைகளை கேட்பதற்கு பல்லூஜாவிலுள்ள ஏராளமான அகதிகள் திரண்டு செல்கின்றனர். சேக் ஜமால் அல் மிகிண்டி தொழுகைக்கு வருகின்ற மக்கள் கூட்டத்தினரிடம் அமெரிக்க இராணுவ தாக்குதல் குறித்து உணர்வு பூர்வமாக உரையாற்றுகிறார்: "மற்றும் நான் என் கண்ணாலேயே பார்த்தேன் மசூதியின் தரைகளில் அந்த பன்றிகளின் மற்றும் அந்த குரங்குகளின் பிள்ளைகள் புனித குரானை தரையில் வீசி எறிந்தார்கள். அமெரிக்கர்கள் புனித குரான் மீது ஏறி மிதுத்துக்கொண்டு சென்றபோது என் இதயம் வெடித்தது." உரையாற்றிய அந்தக் கட்டத்தில் நிலைகுலைந்து கண்ணீர் விட்டு அழுதார்.

ஷேக் ஜமாலை, அமெரிக்க இராணுவம் பல்லூஜாவிலிருந்து உடல்களை அப்புறப்படுத்துமாறு கூறியது. அவர் அங்கு கண்டதை விவரிக்கிறார்: "அமெரிக்கர்கள் இறந்த சடலங்கள் கிடந்த வீடுகளுக்கு முன்னர் சிலுவை அடையாளமிட்டனர். அங்குதான் நாங்கள் தியாகிகளைக் கண்டோம். எனது கருத்துப்படி அவர்கள் பொதுமக்கள் பயங்கரவாதிகள் அல்ல. தங்களது வீடுகளை காப்பாற்றிக்கொள்வதற்காக நாங்கள் உள்ளேயிருந்தோம். இதை நான் சொல்வதற்கு காரணம் உடல்கள் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு என்று குவியலாக காணப்பட்டது. அது ரம்ழான் மாதம் எனவே நோன்பு இருப்பதற்காக கூடியிருப்பார்கள், விரதத்திற்கு பிறகு முதல் உணவை சாப்பிடுவார்கள்.

"நுழைவு வாயில் கதவுகளுக்கு பக்கத்தில் நாங்கள் உடல்களை பார்த்தோம். கதவைத் திறந்ததும், அமெரிக்கர்கள் அவர்களை சுட்டுக்கொன்றிருப்பதாக தோன்றுகிறது. அப்படித்தான் அவர்களை நாங்கள் பார்த்தோம்".

ஷேக் Fadhil ஐ நகரத்தின் எல்லையிலுள்ள ஒரு கல்லறைக்கு அழைத்து சென்று இறந்தவர்களை அவர் புதைத்ததை காட்டுகிறார். அந்தக் கல்லறைக்கற்களில் பெயர்கள் எதுவுமில்லை, எண்கள்தான் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் எவரும் ஆயுதங்கள் வைத்திருக்கவில்லை என்று ஷேக் ஜமால் கூறுகிறார், 90 வயதான ஒரு முதியவர் தனது சமையல் அறையில் நிற்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்ததாக கூறினார்.

பல்லூஜாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க இராணுவத்திடம் ஒரு சிறப்பு அடையாள அட்டை பெறுவது அவசியமாகும். இப்படிச் செய்வது மிகப் பெரும்பாலான பலூஜா மக்களுக்கு மோசமான அவமதிப்புக்குள்ளாக்கும் அனுபவமாக உள்ளது. இது ஒரு அமெரிக்க சிப்பாய் தனது வீட்டிற்கு செல்வதற்கு பெருவிரல் ரேகை பதிக்கச் செய்யும் மிகவும் சங்கடம் அளிக்கும் நிலை போன்றதுதான்.

அந்த செய்திப்படம் அடையாள அட்டை பெறுவதற்காக ஆண்கள் நீண்ட வரிசையில் தங்களது முகத்தை மறைத்துக்கொண்டு பகிரங்கமாக தங்களது சங்கடத்தை காட்ட விரும்பாமல் இருப்பதை படம்பிடித்து காட்டியது. "பல்லூஜா மக்களுக்கு இது மற்றொரு இழிவுப்படுத்தலாகும். எங்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இதை செய்கின்றனர்" என்று ஒருவர் கூறினார்.

Fadhil உம் அவரது புகைப்படகருவியாளரும் பல்லூஜா செல்லுகின்ற சாலையில் முதலில் பார்த்தது சாலையோரத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு வாசகம், "முஜாஹிதீன் நீடூழி வாழ்க", என்று சுவரில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரும் சேதம் அந்த நகரத்தில் ஏற்பட்டிருப்பதை Fadhil ஏற்றுக்கொள்வதற்கு தயாரற்றவராக இருந்தார். "நான் அதை நம்பமுடியவில்லை, ஒட்டுமொத்த நகரமும் அழிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய அதிர்ச்சியாகும். இவ்வளவு பெரிய பேரழிவு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்னர் பலூஜாவில் நான் இருந்திருக்கிறேன். அதே நகரம்தானா என்பதை இப்போது என்னால் நம்ப முடியவில்லை, எங்குபார்த்தாலும் நம்புவதற்கு முடியாத அழிவே காணப்படுகிறது. பல்லூஜா ஈராக் நகரங்களிலேயே ஒரு சில நவீன நகரங்களில் ஒன்று, இப்போது அங்கு எதுவுமில்லை".

குப்பை மேடாக காட்சிகளிக்கும் அந்த நகரத்தில் பொது பேரழிவிற்கிடையே Fadhil தப்பிப் பிழைத்தவர்கள் சொல்வதைக் கேட்கிறார். எப்படி அப்பாவி பொதுமக்கள் இராணவத் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்கள், நிராயுதபாணிகளான அந்நகரத்து மக்கள் எப்படி தங்களது படுக்கைகளிலேயே சுடப்பட்டார்கள் என்பதை கேட்கிறார். தெருக்களில் கிடந்த உடல்களை நாய்கள் தின்றன. மூன்று மில்லியன் மக்கள் வாழ்ந்த அந்த நகரத்தில் இப்போது தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை அல்லது கழிவுநீரகற்றும் வசதி செயல்படவில்லை, மிகப்பெரும்பாலான அந்நகரத்து மக்கள் வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் ஆகிவிட்டனர். பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகள் குப்பைமேடாக காட்சியளிப்பதைப் பார்த்தனர், நகரத்தின் பெரும்பகுதி தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மாறிப்போயிருக்கிறது.

அந்த செய்திப்படம், ஒரு மனிதர் மிகவும் சீற்றங்கொண்டு, சிறதி கிடக்கும் செங்கல் குவியல்களில் பெரும்பாலும் உடைந்து கிடக்கும் வீட்டு சமான்களை தேடுவதை காட்டுகிறது. Abu-Salah வின் வீட்டில் கிடப்பதெல்லாம் இடிந்த குப்பை கூளம் தான். அவர் காமிராவை அழைத்து, "இந்த படுக்கைகளை இங்கே பாருங்கள்! அவை எனது மகனின் திருமணத்திற்காக வாங்கப்பட்டவை. இது எனது மகனின் அறை, இங்கே பாருங்கள்! இது எங்களது சமையல் அறை....சமையல் அறையில் எங்களது சர்க்கரை பை இதுதான்", மீண்டும் நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் பற்றி ஆத்திரத்தைத்தான் பதிலாக பெற முடிகிறது. "[அமெரிக்க பொம்மை ஈராக் ஜனாதிபதி] அல்லாவிக்கு இந்தத் தேர்தல்களில் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் அவர் இங்கே வந்து நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையை பார்க்கட்டும்."

Fadhil அந்த நகரத்தை சுற்றிவரும்போது நடைபெற்றுவிட்ட படுகொலை தொடர்பான சம்பவங்களை பெருமளவில் சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இடிபாடுகளுக்கிடையில் இறந்து கிடக்கும் சடலங்களிலிருந்து வெளிப்படும் நெடியை சுவாசிக்க முடிகிறது என்று கூறுகிறார்.

நான்கு அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் சென்ற மார்ச் மாதம் கொல்லப்பட்ட பல்லூஜா பழைய நகரத்திற்கே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். "அமெரிக்கர்கள் அங்கு செல்ல எவரையும் அனுமதிப்பதில்லை: அது பாதுகாப்பானதல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். அது ஒரு அச்சமூட்டும் இடம், ஆனால் இந்த பல்லூஜா மக்கள் என்னை அங்கு ஏதாவதொரு இடத்திற்கு அழைத்து செல்லவேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். உண்மையிலேயெ ஒரு கொடூரமான காட்சியை எனக்கு காட்ட விரும்புகிறார்கள்." எவருமில்லாத வீட்டின் ஒரு முன்பகுதி அறையில் நான்கு உடல்கள் தரையில் அழுகிக்கொண்டிருக்கின்றன அவர்கள் தூங்கும்போது சுடப்பட்டவர்கள். ஒரு துப்பாக்கி சண்டை நடந்த எந்த அடையாளமும் இல்லை குண்டு பாய்ந்த எந்த துளையுமில்லை. "எந்த ஆயுதத்தையும் நான் பார்க்கவில்லை, கிளர்ச்சிக்காரர்கள் அங்கிருந்தார்கள் என்பதற்கான எந்த தெளிவான அடையாளமுமில்லை... நான் கேட்டதற்கு அவர்கள் பொதுமக்கள் என்று கூறப்பட்டது."

அந்த நகரத்தை அமெரிக்க துருப்புக்கள் ஆக்கிரமித்த பின்னர் முதலில் தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்களில் Nahida Kham ஒருவர். அவர் Fadhil ஐ அழைத்து தனது வீடு என்னவாயிற்று என்று பார்க்க கூறுகிறார். "இதைப் பாருங்கள்! வீட்டு சாமான்களை, துணிகளை கண்ட இடங்களில் வீசியிருக்கிறார்கள்! அலுமாரிகளை உடைத்திருக்கிறார்கள், ஆடை உடுத்தும் மேஜை கண்ணாடியில் ஏதோ கெட்டவார்த்தை எழுதியிருக்கிறார்கள்" என்று அந்த பெண் கூறினார். Nahida விற்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, அந்த நிலைக்கண்ணாடியில் உண்மையிலேயே ஆங்கிலத்தில் கொச்சையான வார்த்தைகளைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்று Fadhil அந்த பெண்ணிற்கு ஈராக்கையும் மற்றும் ஈராக்கில் உள்ள அனைவரும் F**k என எழுதப்பட்டிருந்தது என விளக்கி கூறினார்.

பல்லூஜாவிலுள்ள பிரதான கல்லறைக்கு Fadhil செல்கிறார் இன்னமும் மடிந்தவர்களை அங்கு புதைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சண்டை தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பின்னரும் எத்தனை பல்லூஜா மக்கள் மடிந்தார்கள் என்பது இன்னும் கணக்கிடப்படவில்லை.

அந்த கல்லறைக்குள் நுழைந்ததும் அவர் கண்ட காட்சியை Fadhil விளக்குகிறார்; "நான் அந்த கல்லறைப்பகுதிக்குள் நுழைந்தபோது, இரண்டு இளைஞர்களது உடல்கள் அங்கே வந்தன. முகங்கள் அழுகிக்கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு கையெலும்பை மேலே தூக்கினார், தோல் அழுகி விழுந்துவிட்டது"

Fadhil 76 கல்லறைகளை எண்ணுகிறார். "அமெரிக்கர்கள் 1,200 பேரை கொன்றுவிட்டதாக கூறுகின்றனர். இவர்கள் அனைவருமே கிளர்ச்சிக்காரர்களாக இருந்தாலும், அவர்களது கல்லறைகள் எங்கே?" என்று அவர் கேட்கிறார். பலூஜாவை தங்களது தலைமை இடமாக பயன்படுத்தி வெளிநாட்டு போராளிகள் நூற்றுக்கணக்கில் சண்டையிட்டு வருவதாக அமெரிக்கர்கள் சொன்னதற்கு சான்று எதையும் தான் பார்க்கவில்லை என்று Fadhil கூறுகிறார். "சில யேமனியர்கள், சவுதியை சேர்ந்தவர்கள் டுனீஷியா மற்றும் எகிப்திலிருந்து வந்த சில தொண்டர்கள் இருந்தனர். ஆனால் மிகப்பெரும்பாலான போராளிகள் பல்லூஜாவை சேர்ந்தவர்கள். நகரத்திற்கு தெற்கே 5 கி.மீ அப்பால் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் குளிரூட்ட அறையில் நூற்றுக்கணக்கான உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் சொல்கிறது. செம்பிறைச்சங்கம் உட்பட கடந்த 2 மாதங்களில் எவரும் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை."

அந்த செய்திப்படம் திரு,திருமதி.சாலமனும் தங்களது 18 வயது மகன் அஹமதை தேடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது. அவர்களது புதல்வர் அங்கேயிருக்கிறார் என்று இன்னமும் அவர்கள் நினைக்கிறார்களா? என்று Fadhil கேட்கிறார். "இறைவன் நாட்டமிருந்தால் கிடைப்பான்" என்று திரு.சாலமன் பதிலளிக்கிறார். அப்போது அவர்கள் இருவரையும் நோக்கி வருகிற ஒருவர் அவர்களது புதல்வர் ஒரு டூனீஷியன் போராளியின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தனது புதல்வர் கல்லறை மீது கண்ணீர் விட்டு கதறி அழுத திருமதி சால்மன் "என் அன்பு மகன் அஹமதே, அந்த மனிதர்களோடு செல்லவேண்டாம் என்று நான் உனக்கு சொன்னேன் அவர்கள் உன்னை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னேன்" என்று கதறி அழும்போது பக்கத்தில் நின்ற சால்மன் படபடப்பானார். "வாயை மூடு பெண்ணே, இவை அனைத்திற்கும் அயத் அல்லாவிதான் காரணம் அவரது தொண்டையை அறுக்க நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

இரண்டு வாரங்கள் வரை Fadhil கிராமங்களில் சுற்றிவந்தார், கிளர்ச்சி தலைவர்களில் ஒருவரை சந்தித்து ஏன் ஒரு சில போராளிகளின் சடலங்கள் மட்டுமே கிடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முயன்றார். இறுதியாக பல்லூஜாவிற்கு தெற்கேயுள்ள al-Shuhada மாவட்டத்தில் செயல்பட்டுவரும், "முகம்மது இராணுவ" (Army of Mohammad) தளபதி al-Shuhada- இனை தொடர்பு கொள்கிறார். முகத்தை மூடிக்கொண்டு Shaiba தனது தலைமையின் கீழ் பணியாற்றிய போராளிகளுக்கு என்ன? நடந்தது என்பதை விவரிக்கிறார்: "எங்களது மூத்த தலைமையின் ஒரு கட்டளையை தொடர்ந்து போராளிகள் அந்த நகரத்திலிருந்து வெளியேறினோம். அமெரிக்கர்களோடு போரிட்டு தோற்றுவிட்டதால் நாங்கள் அவ்வாறு வெளியேறவில்லை. நாங்கள் மீண்டும் இணைந்துகொள்வதற்கான ஒரு தந்திரோபாய முடிவு".

இறுதியாக Fadhil அந்த நகரத்திற்கெதிராக அமெரிக்க இராணுவம் தொடுத்த தாக்குதலின் விளைவுகளை ஊகிக்கிறார். "இவ்வளவு கிளர்ச்சிக்காரர்கள் தப்பி ஓடியபின்னர், அமெரிக்க படைகள் உண்மையிலேயே பல்லூஜாவில் சாதித்ததென்ன? நாட்டின் இதர பகுதிகளுக்கும் வன்முறை பரவிவிட்டது, 3,00,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்துவிட்டனர். இப்போது அமெரிக்கர்களை கடுமையாக எதிர்த்து நிற்கின்றனர். ''மசூதிகள் நகரம்'', ''குப்பைமேட்டு நகரமாக'' ஆகிவிட்டது.

"எப்படி இது ஈராக்கின் புதிய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை நம்ப முடியவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. ஆனால் நான் சந்தித்த மிகப்பெரும்பாலான பல்லூஜா மக்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்குக்கூட வாய்ப்பு தரப்படமாட்டாது."

பல்லூஜாவிலிருந்து கிடைத்துள்ள செய்திபட அறிக்கை தெளிவுபடுத்துவது என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டிருப்பது மலரும் ஜனநாயகமல்ல, ஆனால் ஆத்திரமடைந்துள்ள கிளர்ச்சி செய்துவரும் மக்களது அனைத்து எதிர்ப்பையும் அச்சமூட்டி ஒடுக்குவதுதான்.

http://www.journeyman.tv/?lid=18059#18048 வலைத் தளத்திலிருந்து அந்த செய்திபட அறிக்கையையும், உரையாடலையும் பெறலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved