World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

White House blocked Senate ban on torture

சித்திரவதை மீதான செனட் தடையை தடுத்து நிறுத்திய வெள்ளை மாளிகை

By Bill Van Auken
15 January 2005

Back to screen version

சென்ற ஆண்டு கடைசியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை, வெளிநாட்டுக் கைதிகளை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) சித்திரவதை செய்வதற்கு தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை புஷ் வெள்ளை மாளிகை தலையிட்டு முடக்கிவிட்டது என்று நியூயோர்க் டைம்ஸ் வியாழன் அன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க இராணுவம் கைதிகளை புலன் விசாரணை, செய்யும்போது மனிதநேயமற்ற முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கும், இதுபோன்றதொரு நடவடிக்கையை பென்டகன் இரத்து செய்ததன் பின்னர் இந்த வெள்ளைமாளிகை நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

அபுகிரைப் சிறைச்சாலையில் நடைபெற்ற கேவலமான நடவடிக்கைகளும், மற்ற இடங்களில் நடைபெற்ற சித்திரவதை போன்ற நடவடிக்கைகளும் நிர்வாகம், பகிரங்கமாக கண்டித்தாலும் வெள்ளை மாளிகையின் ஆதரவோடும், அதற்குத் தெரிந்தும்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் நீடிக்கின்றன என்பதற்கு அந்தக் கட்டுரை மேலும் சான்று தருவதாக அமைந்திருக்கிறது.

CIA இன் சித்திரவதை செய்பவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியை சீர்குலைகும் நிர்வாகத்தின் நடவடிக்கைளுக்கு தலைமைவகித்து செயல்பட்டிருப்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் அரசுத்துறை செயலராகவும் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டிருக்கும் கொண்டலீசா ரைஸ் ஆகும். அவர் சென்ற அக்டோபரில் அமெரிக்க, செனட் மற்றும் கீழ்சபையில் சட்டம் இயற்றும் பொறுப்பிலுள்ள புலனாய்வு சீர்திருத்த சட்டக்குழு உறுப்பினர்களுக்கு இறுதி சட்ட நகலை தயாரிப்பதற்கு முன் ஒரு கடிதத்தை அனுப்பினார். முன்மொழிவு கட்டுப்பாடுகள் ''வெளிநாட்டுக் கைதிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு தருவதாக அமையும், இப்போது சட்டப்படியும், மற்றும் கொள்கைப்படியும் அவர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு தரப்படுகின்ற உரிமையில்லை'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ரைஸ் தலையிடுவதற்கு முன்னர், செனட் புதிய கட்டுப்பாடுகளை, 90-க்கு 2 என்ற வாக்குகளில் ஏற்றுக் கொண்டது. என்றாலும், கீழ் சபை தனது சொந்த மசோதாவில் அதே போன்ற வாசகத்தை சேர்த்துக்கொள்ள தவறிவிட்டது.

சித்திரவதைகளை தடுத்து நிறுத்துவதுடன், முன்மொழிவு திருத்தம், CIA உம், பென்டகனும் உலகம் முழுவதிலும் அமெரிக்க அரசாங்கம், சங்கிலித்தொடர்போல் உருவாகியுள்ள சிறைகளில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற விசாரணை முறைகள் மற்றும் சிறைக்குள் இருகின்ற நிலவரங்கள் ஆகியவை குறித்து, நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கோரியது.

மைன் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக்கட்சி செனட்டரான சூசன் காலின்ஸ் டைம்ஸிற்கு பேட்டியளித்தபோது முன்மொழிவு தடையை கைவிட்ட செனட் புலனாய்வுக் குழு, "இந்த ஆண்டு அந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்ளும்" என்று கூறினார்.

இந்த முடிவில் சம்மந்தப்பட்டிருந்த முன்னணி ஜனநாயகக்கட்சி செனட்டரான கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜானே ஹார்மனும் மற்றவர்களும் CIA இரகசியத்தையும் காக்க வேண்டும் மற்றும் தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று விடுத்த கோரிகைகளுக்கு பணிந்துவிட்டதாக கோடிட்டுக்காட்டினார். "சில புலன்விசாரணைகள் தொடர்பாக சிறப்பு சூழ்நிலைகள் இருக்குமானால் சட்டம் இயற்றும் முன்னர் அவற்றை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் அந்த செய்தி பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.

நிர்வாகம் டைம்ஸ் செய்தியை மறுத்தது, "யாரோ ஒருவர் இல்லாத ஒரு கதையை இட்டுக்கட்ட முயற்சிக்கிறார் என்பதுதான் இது" என்று வெள்ளை மாளிகை பேச்சாளரான ஸ்காட் மெக்கல்லன் வியாழனன்று கூறினார். "ஜனாதிபதி எப்போதுமே சித்திரவதையை அங்கீகரிக்கமாட்டார். இந்தப் பிரச்சனைகளுக்காக ஏற்கனவே சட்டங்கள் இருப்பதால்தான்'' நிர்வாகம் செனட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் புஷ் நிர்வாகம் ----வெள்ளை மாளிகை வக்கீலும் புஷ்ஷின் புதிய அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருப்பவருமான ஆல்பர்டோ கொன்சலேஸ்---- சர்வதேச அளவில் சித்திரவதைகளுக்கு தடைசெய்யும் சர்வதேச ஒப்பந்தங்கள் உட்பட ''பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்'' என்ற அடிப்படையின் ஓர் அங்கமாக இது போன்ற சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று முடிவு செய்திருக்கிறார்.

இது, உடல் உறுப்புக்கள் எதுவும் செயல்படாத தன்மை, பாதிப்பு அல்லது மரணம் ஏற்படுவது தவிர்ந்த எந்த சித்ரவதையும் அனுமதிக்கப்படகூடியது என்ற ஒரு மோசமான வரைவிலக்கணத்தை சித்ரவதைக்கு வழங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் செனட் சபையில் அவரது பதவி நியமனத்தை உறுதிப்படுத்துவதற்கு நடைபெற்ற விசாரணையில் கொன்சாலேஸ் சம்பிரதாய முறையில் சித்திரவதைக்கு ஆதரவு இல்லை என்று மறுத்தாரே தவிர ஜனாதிபதி அதுபோன்ற நடவடிக்க்ைகளை தடை செய்யும் சட்டங்களை புறக்கணிக்க முடியும் என்ற தனது முடிவை திட்டவட்டமாக மறுக்க தயாராக இல்லை அல்லது எதிர்காலத்தில் சித்திரவதை நடைபெறாது என்று உறுதியளிக்கவும் இல்லை.

இந்த விசாரணை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மரணம் அல்லது உடல் உறுப்பு சிதைவது நீங்கலாக மற்ற எல்லா நடவடிக்க்ைகளுக்கும் அனுமதிக்கப்படும் என்ற விளக்கத்தை நிர்வாகம் இரத்து செய்தது மற்றும் ஒரு புதிய குறிப்பை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, எல்லாவகையான சித்திரவதைகளையும் ''வெறுப்பிற்குரியது.'' என குறிப்பிட்டது.

என்றாலும் டைம்ஸ் கட்டுரை புதிய குறிப்பு தொடர்பாக இதற்கு முன்னர் கூறப்பட்ட காரணங்களுக்கு மேற்பட்ட விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் புதிய ஆவணத்திற்கு கீழே ஒரு திட்டவட்டமான அடிக்குறிப்பு காணப்டுகிறது, அது ''கைதிகளை நடத்துகின்ற விதம்பற்றி'' இன்னும் இரகசிய கருத்துக்களை பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது" என்று அந்த செய்தி பத்திரிக்கை கூறியுள்ளது". அதிகாரிகள் கூறியபடி அந்த அடிகுறிப்பிற்கு பொருள் என்னவென்றால் சித்திரவதை சட்டங்கள் தொடர்பாக நீதித்துறை தந்துள்ள தளர்த்தப்பட்ட நிர்பந்த நடைமுறைகள் இன்னமும் சட்டபூர்வமானதுதான். புதிய கட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தின் கீழ்கூட இந்த நடவடிக்கைகள் சட்டபூர்வமானவைதான்."

இதை சற்று வெளிப்படையாக சொல்வதென்றால், அபுகிரைப்பிலும் இதர பகுதிகளிலும் சித்திரவதை தொடர்ந்து, புஷ்-ம் இதர நிர்வாக அதிகாரிகளும் வெளியிட்ட கண்டன அறிக்கைகள் பொதுமக்களை திருப்திபடுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவை. அதிர்ச்சி அடைந்ததாகவும் வெறுப்புற்றதாகவும் நடத்தப்பட்ட நாடகத்திற்கு பின்னணியில் தங்களது பிடியில் சிக்கிக்கொள்பவர்களை தொடர்ந்து அமெரிக்க இராணுவமும் CIA உம் சித்திரவதை செய்வதற்கு பச்சை கொடி காட்டப்பட்டுவிட்டது என்பதுதான்.

தெளிவாக சித்திரவதை என்று கருதப்படும் விசாரணை முறைகளுக்கு நீதித்துறை வெளிப்படையாக அங்கீகாரம் அளித்துள்ளது அதற்கு ஏற்ப பல்வேறு வகையான இரகசிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன, அந்த நடவடிக்கைகள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் கைதிகளை ''படகில் இறக்கிவிட்டு மூழ்கடிப்போம்'' என்ற வகையில் அவர்களை பயமுறுத்துவது மற்றும் புதை குழிக்குள் தள்ளிவிட்டு அவர்களை பயமுறுத்துவது ஆகிய நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள கொன்சலேஸ் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவாதங்களில் நேரடியாக பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் இது போன்ற சட்டங்களில் வெள்ளை மாளிகை தலையிடுவதை தெளிவாக அறிந்தவரின் பேட்டியை டைம்ஸ் கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது. "CIA பிடித்துள்ள கைதிகளுக்கு எதிராக "சித்திரவதை நடவடிக்க்ைகளை பயன்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்கு ஒரு தப்பிக்கும் வழியை உருவாக்கிக்கொள்ள நிர்வாகம் விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.

சந்தேகத்திற்கிடமின்றி இதே காரணத்தினால்தான் சென்ற ஜூனில் இராணுவம் சித்திரவதையைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட நகலை தடுத்து நிறுத்துவதில் பென்டகன் தலையீடு வெற்றி பெற்றது. டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, பாதுகாப்புத் துறையின் துணை ஆலோசகர் டானியல் டெல்'ஆர்டோ நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் முன்மொழிவு சட்டம் தேவையற்றது என்று வாதிட்டார், சிறைகளை பற்றியும் அதற்குள் உள்ள கைதிகள் நிலை பற்றியும் பென்டகன் ஆண்டு அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் ''சுமையானதும், பொருத்தமற்றதும்'' என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதன் விளைவாக, சென்ற ஆண்டு இயற்றப்பட்ட இராணுவ நடவடிக்கை அங்கீகார மசோதாவில் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாத அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கைதிகளை சித்திரவதை செய்யக்கூடாது என்ற கருத்தை எடுத்துக்காட்டும் தீர்மானம் மட்டுமே இயற்றப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்க இராணுவமும் புலனாய்வு அதிகாரிகளும் பிடித்த மற்றும் கடத்தியவர்கள் மீது சித்திரவதைகள் நடைபெற்று வருவது தொடர்பான செய்திகள் அம்பலத்திற்கு வருவது பெருகிக்கொண்டு வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வியாளனன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் பாக்கிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் முஹமது ஹபீப் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார், பின்னர் ஒரு CIA ஜெட் விமானத்தில் எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டார். எகிப்தில் அவரை பிடித்துக்கொண்டவர்கள் அவருக்கு உயர்அழுத்த மின்சார அதிர்ச்சியை கொடுத்தனர், சுவற்றில் ஆணி அறைந்து அவரை தொங்கவிட்டனர், அவரை தண்ணீரில் மூழ்கடிக்கும் நிலைக்கு கொண்டுவந்தனர், இரக்கமற்ற வகையில் அவரை அடித்து, உதைத்தனர் என்று அந்த பத்திரிகை அவரது வக்கீல்களை பேட்டி கண்டு செய்தி தந்திருக்கிறது.

எகிப்து சித்திரவதை முகாமிலிருந்து ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பின்னர் அவர் கியூபா குவாண்டாநாமா வளைகுடா சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது மூன்றாண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்த பின்னர், எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருக்கிறார். சித்திரவதை மூலம் பெறப்பட்ட தவறான வாக்குமூலங்கள் அடிப்படையில் அவரை ''எதிரி போராளி'' என்றும் அல்கொய்தா உறுப்பினர் என்றும் முத்திரை குத்திய அமெரிக்க அதிகாரிகள் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவிற்கு வந்திருப்பதாக தெரிகிறது.

இப்படி மத்திய கிழக்கிலுள்ள சர்வாதிகார ஆட்சிகளிடம் சித்திரவதை செய்கின்ற ஒப்பந்தம் தருவது சர்வசாதாரணமாக பெருகிவிட்டது. அண்மையில் ஓய்வு பெற்ற CIA அதிகாரி ஒருவர் இப்படிப்பட்ட ''நடைமுறைகள்'' ஒரு வளரும் தொழிற்துறையாகிவிட்டது என்று கூறியதாக ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது. "இறுதியாக தன் கையில் சிக்கும் இது போன்ற மக்கள் மறைந்துவிட வேண்டுமெ என்றே அந்த ஏஜென்ஸி விரும்புகிறது" என்று அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

ஈராக் கைதிகளை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது அமெரிக்க இராணுவத்தினரான சார்லஸ் கிரானர் ஜூனியர்-- மீதான வழக்கு விசாரணை இராணுவ நீதிமன்றத்தில் முடிவிற்கு வந்து கொண்டிருக்கிற தறுவாயில் சித்திரவதையை தடை செய்யும் சட்டத்தை இயற்றவிடாது தடுக்கும் உயர்மட்ட நிர்பந்தம் தொடர்பான செய்தி அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

கிரானர் விசாரிக்கப்பட்டபோது இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சான்று முன்னாள் அபு கிரைப் சிறைக்காவலரான அவர் ஒரு மற்றவர்களின் துன்பத்தில் இன்பம்காணுபவர் என்றும் கைதிகளை துன்புறுத்துவதிலும் பாலியல் வகையில் இழிவு படுத்துவதிலும் இன்பம் கண்டவர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

என்றாலும் வெள்ளை மாளிகையும் பென்டகனும் தலையிட்டது, கார்னரின் மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுவதும் கொடுங்கோன்மையும் வாஷிங்டனில் உள்ள நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான கொள்கை என்பதை தெளிவுபடுத்துகிறது. பதவியேற்கவிருக்கும் வெளியுறவு செயலாளரும், அட்டர்னி ஜெனரலும் ஜனாதிபதியும் உட்பட இந்த காட்டுமிராண்டி சித்திரவதை நடவடிக்கைகளை விவாதித்து ஏற்றுக்கொண்டு உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள தலைமை அதிகாரிகள் அந்த நடவடிக்க்ைகளுக்கு சமாதானம் கூறியுள்ளார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved