:
ஆசியா :
சுனாமி பேரழிவு
South Indian fishing villages devastated
by tsunami
சுனாமியால் சீரழிந்த தென்னிந்திய மீன்பிடி கிராமங்கள்
By Ram Kumar and Sasi Kumar
19 January 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னைக்கு தெற்கே 175 கி.மீ அப்பால் உள்ள
கடற்கரை மாவட்டமான கடலூர், டிசம்பர் 26-ல் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சுனாமி தாக்கிய நேரத்தில் படுமோசமாக
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அதிகாரபூர்வமான தகவல்களின்படி, 51 கிராமங்கள் கடுமையாக சேதமடைந்தன,
15,000 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, ஏற்கனவே வறுமை பீடித்திருக்கும் இந்த மாவட்டத்தில் 615 பேர்
மடிந்துள்ளனர். இந்த பேரழிவினால் மேலும் 214 பேர் காயமடைந்துள்ளதாகவும், 99,700 பேர் இடம் பெயர்ந்திருப்பதாகவும்
மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனவரி 5-ல் மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, மாவட்ட கலெக்டர்
பேடி பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, 38 நிவாரண முகாம்களில் 24,204 பேர் தங்கியுள்ளனர் விளைச்சல்
நிலம் 610 ஹெக்டேரில் கடல் தண்ணீர் புகுந்துள்ளது. அதன் மூலம் அந்த நிலம் விளைச்சலுக்கு பயனற்றதாகிவிட்டது
மற்றும் 5,500 மரத்தால் ஆன மற்றும் நுலிழைகளால் தயாரிக்கப்பட்ட 5,500 கட்டுமரங்கள், 547
மோட்டார் படகுகள், 5,539 மீன்பிடிப்பு வலைகள் சேதமடைந்துள்ளன என்றார்.
மாவட்ட தலைநகரான கடலூருக்கு 3 கிலோமீட்டர் அப்பாலுள்ள தேவனாம்பட்டினம்
மீன்பிடி கிராமத்திற்கு நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். அந்த கிராம வாழ்வின் அனைத்து அம்சங்களும் சீரழிந்து
கிடந்தன. குடிசைகளும் அதிலிருந்த பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன. கிராம மக்கள் பலர் தங்களது குழந்தைகளையும்,
சில குழந்தைகள் தங்களது பெற்றோரையும் பறிகொடுத்து நிற்கின்றனர். சகோதரர்கள், சகோதரிகள் என்றும்
ஏன் முழு குடும்பங்களே கூட பலியாகி இருக்கின்றன, அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாது உள்ளன. உயிர் தப்பிய
பலர் எப்படி சகஜ வாழ்விற்கு திரும்புவது என்று தெரியாத நிலையில் அதிர்ச்சியில் உள்ளனர்.
40 வயது நிரம்பிய, ராஜ சண்முகம் மஞ்சிக்குப்பன், டிசம்பர் 26 அன்று காலை
சுமார் 8.30 மணிக்கு முதலாவது அலை வருவதைப் பார்த்தார். அந்த அலை அவரை ஒரு தென்னை மர உச்சிக்கு
வீசி எறிந்தது. அவர் எப்படியோ ஒரு தென்னை மர மட்டையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினார்.
அதற்கு பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். "இன்னும் எனக்கு முதுகுவலி உள்ளது
இந்த கிராமத்தில் மொத்தம் 90 பேர் மடிந்துவிட்டனர்" என்று அவர் எங்களிடம் கூறினார்.
உள்ளூர் கிராம மக்களுக்கு பசும்பால் விற்று பிழைப்பு நடத்தி வருபவர் அனுசூயா கிருஷ்ண
மூர்த்தி அவர், தனது 10 பசு மாடுகளையும் காப்பாற்றிவிட்டார் ஆனால் தனது வாடிக்கையாளர்கள் அனைவரையும்
இழந்துவிட்டார்.
"எனது வீடு கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. அலை
வந்ததும் எனது பசு மாடுகளை கடலூரிலிருந்து 24 கி.மீ அப்பால் உள்ள பண்ருட்டியிலுள்ள எனது மகளது வீட்டிற்கு
கொண்டு சென்று விட்டேன், இதற்காக நான் 2,000 ரூபாய் செலவிட வேண்டி வந்தது". என்று அவர் விளக்கினார்.
அனுசூயா கிருஷ்ண மூர்த்திக்கு இரண்டு புதல்வர்கள். மூத்த மகன் வேல் முருகன் வயது
32, மாநில அரசின் விவசாயத் துறையில் புல்டோசர் மற்றும் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு
அந்த வேலையை வாங்கித் தருவதற்காக 40,000 ரூபாய் அவர் செலவிட்டார். ஆனால், தற்பொழுது வேல்
முருகன் மாநில அரசாங்கம் கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கைகளையும் ஆட்குறைப்பையும் செய்த
பின்னர் வேலையில்லாமல் இருக்கிறார்.
"இப்போது எனது இரண்டு புதல்வர்களும் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே,
வாழ்வதே கடினமாகிவிட்டது" என்று அவர் கூறினார்.
கடற்கரையிலிருந்து 70 மீட்டர் தள்ளி வாழ்பவர், ஏழுமலை கிருஷ்ணன். இவர் முதல்
அலை தாக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது 16 வயது மகளுக்கு சமையல் செய்வதில் உதவிக்கொண்டிருந்தார்.
அவரது மனைவி மீன் விற்க வெளியில் சென்றுவிட்டார், 12 வயது நிரம்பிய அவரது கடைசி மகன் ஜெயசேஸ் குமார்
கடற்கரையில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். கடலில் இருந்து 750 மீட்டருக்கு அப்பால்
இருக்கும் கல்லூரிக்கு அருகில் அவரது மற்றொரு மகன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.
"திடீரென்று ஒரு பெரிய அலை எனது வீட்டில் புகுந்தது எனது மகள் கூச்சலிட்டாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு எனது வீட்டு மாடிக்கு ஏறினேன். அவள் கதறினாள், தனது சகோதரர்கள்
பாதுகாப்பு தொடர்பாக கவலைப்பட்டாள். மறுநாள் காலை எனது இளையமகன் மடிந்து புதர்களுக்குள் அவனது
உடல் சிக்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். திங்களன்று மறுபடியும் ஒன்று சேர்ந்தோம், ஆனால் எனது புதல்வன்
உடலை மீட்க ஒரு மணிநேரம் செலவிட்டோம்.
"குடும்ப உறுப்பினர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசாங்கம்
1,00,000 ரூபாய் (2,300 அமெரிக்க டாலர்கள்) நிவாரண உதவியை வழங்கிய போதிலும், எனது மகன் பெயர்
அரசாங்க பட்டியலில் இல்லை என்பதின் காரணமாக எனக்கு அந்த உதவி மறுக்கப்பட்டது. உள்ளூர் அரசு அதிகாரிகளிடம்
இப்படி ஏன் நடந்தது என்று நான் கேட்டபொழுது, எனது மகன் பெயர் தவறாக எழுதப்பட்டதால் விளைந்த தவறு!
என்று அவர்கள் கூறினார்கள்.
"எங்களது கட்டுமரத்தையும், மீன் வலைகளையும் அத்துடன் நகைகள் தொலைக்காட்சி
மற்றும் பணத்தையும் இழந்துவிட்டோம், நாங்கள் வழக்கமான வாழ்விற்கு திரும்ப நீண்டகாலமாகும். சில தனியார்
அமைப்புகள் உணவு, அரிசி, சேலைகள் மற்றும் பாய்களை வழங்கிக்கொண்டிருந்தாலும் நிவாரணப் பொருட்கள் பல
இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்து சேரவில்லை."
சண்முகம் மாரிக்கண்ணு அவரது மூத்த சகோதரி 32 வயது, கலை அரசியை இழந்துவிட்டார்,
இந்த மாதம் கலை அரசியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது வீடு கடலில் இருந்து 200
மீட்டர் அப்பால் இருந்தது.
1998-ல் கடல் அரிப்பினால் அந்தப் பகுதியிலிருந்த 100 வீடுகள் அடித்துச் செல்பப்பட்ட
பின்னர், சேதத்தை தவிர்ப்பதற்காக கடற்கரையில் கற்சுவர்களை எழுப்பவேண்டிய கட்டாயம் மாநில அரசாங்கத்திற்கு
ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் கால்வாசி இடங்களில்தான் அவ்வாறு தடுப்புச் சுவர் எழுப்ப ஒப்புதல்
அளிக்கப்பட்டது. அந்த சுவர் விஸ்தரிக்கப்படவேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரியபோதும், இறுதியாக அரசாங்கத்தால்
அந்த திட்டம் கைவிடப்பட்டது.
"அவர்கள் அந்த தடுப்புச் சுவரை முறையாக அமைத்து விரிவு
படுத்தியிருப்பார்களானால் சுனாமி விளைவித்த ஏராளமான சேதத்தை ஓரளவிற்கு மட்டுப்படுத்தியிருக்க முடியும்,"
என்று மாரிக்கண்ணு கூறினார்.
கடலூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ள சுமார்
3,000 மக்கள் வாழும் சிங்காரத்தோப்பு கிராமத்திற்கு
WSWS நிருபர்கள்
சென்று பார்த்தனர். 2 வயது பெண் குழந்தையின் இளம் தந்தையான முருகன் சிவராஜ் தனது மகளை
காப்பாற்றினார், ஆனால் சுனாமி அருகாமையிலுள்ள ஆற்றுப் புதர்களுக்குள் தனது மனைவியை இழுத்துச் செல்வதை
பார்த்தார்.
"எனது அத்தை ஏகம்மாள் அதே நேரத்தில் பலியானார். அவர் எங்கள் வீட்டிற்கு
வந்திருந்தார் ஆனால் அவரது உயிரை நாங்கள் காப்பாற்ற முடியவில்லை" என்று அவர் கூறினார்.
"மாநில அரசாங்கம் 100,000 ரூபாய்
[அவரது குடும்பத்திற்கு]
இழப்பீடு வழங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு
குடும்பத்திற்கும் வழங்கப்படும் 4,000 ரூபாய் மற்றும் 60 கிலோ அரிசி எங்களுக்கு தரப்படவில்லை. எங்களது
வீட்டை நாங்கள் இழந்துவிட்டோம் மற்றும் எங்கள் வீட்டில் நான் ஒருவன்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நாளைக்கு 100 ரூபாய் ஊதியத்தில் நான் மீன்பிடி தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன்" என்று அவர்
மேலும் கூறினார்.
"நேருயுவகேந்திரா (இளைஞர் மையம்) தொண்டரான அகிலன் குட்டியாண்டி,
சுனாமியில் உயிர்தப்பியவர்களுக்கு, குறிப்பாக அந்த பேரழிவினால் அதிர்ச்சியுற்ற மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு
ஆலோசனைகளை வழங்குகின்ற பணி குறித்து விளக்கினார், அந்த ஆலோசனை மையம்
UNICEF சார்பில்
நடத்தப்படுகிறது.
"சுனாமி தாக்கும்போது, 3 வயது சுபீனா தனது சகோதரன் தனது தாயின் கையிலேயே
மடிந்ததை நேரில் பார்த்தாள். கடந்த 10 நாட்களாக அந்த சிறுமி எவருடனும் முறையாக பேசவில்லை. நாங்கள்
அவளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கியபின்னர் இன்றைய தினம் பேசத் தொடங்கியுள்ளாள் மற்றும் வழக்கமாக
விளையாடுகிறாள்."
சுபீனாவின் அத்தையான அலமேலு பச்சையப்பன், தனது அனுபவங்களை விவரித்தார்:
"நான் அந்த அலை ஓசையை முதலில் கேட்டபோது, அந்த கிராமத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஏதோ ஒரு
கலவரத்தின் கூக்குரல் என்றுதான் நினைத்தேன், ஆனால் என்ன நடந்து கொண்டிருந்தது என்று எவருக்கும் தெரியாது.
கருப்பாக அழுக்கு படிந்த பெரிய அலையை பார்த்தேன். அது என்னைத் தாக்கியது. சில நொடிகளுக்குள் அருகாமையிலுள்ள
ஒரு பாலத்திற்கு என்னை தள்ளிக் கொண்டு போனது. இந்தப் பாலம் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால்
உள்ளது, எனது கிராமத்தை சேர்ந்த மிகப் பெரும்பாலோர் உயிர்பிழைத்தது இந்த பாலத்தினால்தான்."
இந்த சம்பவம் அடிக்கடி எனது உள்ளத்தை அலைகழித்துக்கொண்டிருப்பதால், நான்
வழக்கமாக சாப்பிட முடியவில்லை" என்று WSWS
நிருபர்களிடம் அலமேலு பச்சையப்பன் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் சுனாமியில் தப்பிப்பிழைத்த மக்கள் ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும்
அழிவுகரமான சூழலை தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் பல்வேறு அதிகாரத்துவ தாமதங்கள்
இப்போது மேலும் மோசமடையச் செய்து வருகின்றன..
தங்களது வீடுகள், உடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை இழந்துவிட்டவர்கள்
இடிபாடுகளை அகற்றாமல் இருக்கின்ற அரசாங்கத்தின் செயல்படாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்தனர். அவர்களே
அவற்றை சீர்செய்தால் ''சேதத்திற்கான சான்று இல்லை'' என்று கூறி அதிகாரிகள் இழப்பீடுகளை வழங்குவதற்கு
மறுத்துவிடுவார்கள் என்று அந்த மக்கள் அஞ்சுகின்றனர்.
"வலைகளை நாங்கள் அப்புறப்படுத்தவில்லை ஏனென்றால் அதிகாரிகள் நிவாரணம் தரவேண்டும்"
என்று ஒரு மீனவர் கூறினார். "நான் எனது வீட்டை திரும்ப கட்டியெழுப்பினால் அவர்கள் எனது வீடு சேதமடைந்ததை
நம்பமாட்டார்கள்" என்று மற்றொரு மீனவர் கூறினார்.
இந்த பேரழிவு நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சுனாமியால் வெகுதூரம்
தூக்கி எறியப்பட்டு உட்பகுதியில் கிடக்கும் சேதமடைந்த படகுகளை அப்புறப்படுத்த கிராம மக்கள் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றனர்.
தங்களது கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காக கிராம மக்கள் தெருக்களில் பல்வேறு மறியல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிவாரணப்பணிகளில் சம்மந்தப்பட்டிருக்கிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும் தந்துள்ள தகவலின்படி,
சில கிராம மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு செல்வதற்கு மறுத்துவிடுகின்றனர். ஏனெனில் அப்படிச் செய்தால்
தங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காது என்று அஞ்சுகின்றனர்.
See Also :
Top of page |