World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Palestinian election: a travesty of democracy

பாலஸ்தீன தேர்தல்: ஒரு ஜனநாயக கேலிக்கூத்து

By Jean Shaoul and Chris Talbot
12 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

எதிர்பார்த்தபடி, ஜனவரி 9 ல் பாலஸ்தீன ஆணையத்தின் (PA) தலைவராக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) புதிய தலைவரும், அபுமாசன் என்றழைக்கப்படுபவருமான முஹமது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் ஒரு புதிய விடியல் என்று உலகத் தலைவர்கள் வரவேற்றிருக்கின்றனர். அது ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்கும் சமாதான சமரசத்திற்கு சாத்தியக் கூறுகளை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இருந்த போதிலும், இந்தத் தேர்தலில் ஜனநாயகம் என்பது மிகச் சிறிய அளவிலும் கிடையாது. அது இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாட்டு துப்பாக்கி முனையிலும், தனக்கு சாதகமான PLO தலைவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வாஷிங்டன் கொடுத்த மகத்தான அழுத்தத்திலும் நடைபெற்ற தேர்தலாகும். புஷ் நிர்வாகமும், இஸ்ரேல் பிரதமர் ஷரோனும் இந்தத் தேர்தலை ஒருவகை மிரட்டலாக ஆக்கிவிட்டனர். பாலஸ்தீனிய மக்கள் தாங்கள் விரும்புகிற வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பீரங்கி குண்டுகள் பாயும், புல்டோசர்கள் தகர்க்கும் மற்றும் அவர்கள் பட்டினி போடப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டார்கள்.

தேர்தல் முடிந்தவுடன் அப்பாஸை தொலைபேசியில் அழைத்து 10 நிமிடங்கள் பாராட்டியும், வாஷிங்டனுக்கு விஜயம் செய்யக் கோரி அழைப்பும் விடுத்த ஜனாதிபதி புஷ், காலஞ்சென்ற யாசீர் அரபாத்திற்கு அத்தகைய சந்தர்ப்பத்தை மறுத்தது மட்டுமல்ல அவரை ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தினார்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்டிரோ தனது பாராட்டுதல்களை தெரிவித்தார். "பாலஸ்தீனிய மக்கள் ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டை ஏற்கெனவே தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டனர்" என்று அறிவித்தார். "ஒரு புதிய பாலஸ்தீனிய அரசிற்கு அடித்தளத்தை அமைப்பதற்கு புதிய ஜனாதிபதி தமக்கு தரப்பட்டுள்ள கட்டளையை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் மிஷல் பார்னியே இப் பொதுவான பாராட்டில் தனது குரலையும் இணைத்துக் கொண்டார். "இந்த வாக்குப் பதிவு ஜனநாயகத்திற்கு ஒரு வெற்றி, சமாதானத்திற்கு ஒரு முதல் வெற்றி" என்று கூறினார்.

ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவரான ஜோஸ் மனுவேல் பாரஸோ "தேர்தல்கள் சிறப்பாக நடைபெற்றன" என்று கூறினார். தேர்தல்களை பார்வையிடுவதற்காக ஐரோப்பிய யூனியன் 200 பார்வையாளர்களை அனுப்பியது. அத்துடன் பாலஸ்தீன ஆணையத்திற்கு நிதியுதவி அளித்த பிரதான அமைப்பும் அதுவாகும்.

இந்த உலகத் தலைவர்கள் ஜனநாயகம் பற்றியும், சமாதானம் பற்றியும் பேசுவதற்கும் உண்மையான நிலவரத்திற்குமிடையில் ஒரு அப்பட்டமான வேறுபாடு உள்ளது. ஒரே ஒரு அரசியல்வாதிதான், எந்த சூழ்நிலையில் அந்தத் தேர்தல் நடைபெற்றது என்பதில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவர் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பணியாற்றிய பிரான்சின் முன்னாள் பிரதமர் மிஷல் ரோக்கார் ஆவர். அவர் தான் சொல்லுகின்ற கருத்தை நனவாக புரிந்து கொள்ளாமலேயே "வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல்கள் உலகிலேயே, இங்கு நடைபெற்றிருப்பது தனித்தன்மை கொண்டது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் விதித்த நிபந்தனைகள் அடிப்படையில் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது. ஐ.நா. தீர்மானங்களை மீறுகின்ற வகையில் 1967 முதல் மேற்குக் கரையையும் காஸா பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் ஆயுதப் படைகள்தான் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குப் பதிவிற்கான நிபந்தனைகளையும் வெளியிட்டது.

இஸ்ரேலுக்கும் அதன் சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கும் எதிராக வன்முறை எதிர்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமைய வேண்டுமென்றும் அந்தச் சூழ்நிலையில் அப்பாஸ் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் என்றும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்தன.

வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜனநாயகத் தேர்தல் நடக்குமானால், அது உண்மையிலேயே தனித்தன்மை கொண்டதுதான். ஆனால், இது, வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பி வந்திருக்கிற புதிய தத்துவமாகும். ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று புஷ் வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவதுதான் என்ற ஒரு பிரச்சார இயக்கத்தின் நலன்களுக்கு பாலஸ்தீனிய மற்றும் ஈராக் தேர்தல்கள் சேவை செய்கின்றன.

அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயகத்தை விரிவுபடுத்த முயன்று வருகிறது என்ற மோசடியான கூற்றை, அப்பாஸிற்கு நெருக்கமாக உள்ள பாலஸ்தீனிய தலைவர்கள் மிகுந்த மித மிஞ்சிய மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றனர். இந்தத் தேர்தல் முடிவு ''ஒரு புதிய சகாப்த்தத்திற்கான ஆரம்பமாக இருக்க முடியும். மத்திய கிழக்கில் இரண்டாவது செயல்படும் ஜனநாயகத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைக்க கூடும்" என்று சாயிட் அபு அமார் கூறினார்.

சர்வதேச ஊடகங்கள் எதிரொலித்ததைத் தொடர்ந்து அப்பாஸ் தனக்கு மகத்தான வெற்றி கிடைத்திருப்பதாக கூறினார். அவர் 62 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதனை மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது ஒரு கணிசமான வெற்றிதான். அவருக்கு நெருங்கி வந்த எதிர் வேட்பாளர் பாலஸ்தீனிய மக்கள் விடுதலை முன்னணியோடு (PFLP) தொடர்புள்ளவரான டாக்டர் முஸ்தாபா பார்கோட்டி ஆவார். சுயேட்சையாகப் போட்டியிட்ட அவருக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்தன. நவம்பரில் அரபாத் காலமான பின்னர், PLO விற்குள் இருக்கும் மிகப்பெரிய அமைப்பான பட்டா (Fatah) அமைப்பின் சார்பில் அப்பாஸ் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்பாஸ் வெற்றியை விட வாக்குப்பதிவு மிகக் குறைவாக நடைபெற்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பாலஸ்தீனிய ஆணையம் இதுவரை அதிகாரபூர்வமான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது. ஆனால், பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, தகுதி வாய்ந்த வாக்காளர்களில் பாதிக்கும் குறைந்தவர்களே வாக்குப்பதிவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, உரியநேரம் முடிந்த பின்னரும் கூடுதலாக இரண்டு மணிநேரம் வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்கப்பட்டது. அதற்கு பின்னரும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்காளர் எண்ணிக்கையை பெருக்கிக் காட்டும் ஒரு முயற்சியாக குடியிருப்புப் பற்றிய விதிமுறைகளும் மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் கூடுதலாக 30,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

கிழக்கு ஜெருசலத்தில், இஸ்ரேல் அதிகாரிகள் வாக்குப்பதிவில் சங்கடத்தை உருவாக்கினர். அவர்கள் அதை இஸ்ரேலின் ஒருபகுதி என்று வலியுறுத்தி அங்குள்ள பாலஸ்தீன மக்களை தபாலில் வாக்களிக்க கட்டாயப்படுத்தினர். அத்துடன் அவர்களை பிற்பகல் வரை வாக்குப்பதிவில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. ஆனால், பொதுவாக குறைந்த வாக்குப்பதிவிற்கு இந்த வகையில் காரணம் கூற முடியாது.

அப்பட்டமாக எதிர்க்காவிட்டாலும் பாலஸ்தீனிய மக்களிடையே நிலவுகின்ற மகத்தான ஐயுறுவுவாதத்தின் எதிரொலிதான் இந்த குறைந்த வாக்குப் பதிவாகும். ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறை மீதும், வெற்றி பெறப்போவதாக கருதப்பட்டவர் மீதும் மக்களின் உற்சாகமில்லாத நிலையினால், இந்த வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

அப்பாஸ் சிறிதுகாலம் பிரதம மந்திரியாக பணியாற்றியபோது, அரபாத்தின் இடத்தில் அவர் தன்னை அமர்த்திக் கொள்ள முயன்றார். "இந்த வெற்றியை யாசீர் அரபாத்தின் ஆன்மாவிற்கு காணிக்கையாக்குகிறேன். நமது மக்களுக்கு, நமது தியாகிகளுக்கு இஸ்ரேல் சிறைகளிலுள்ள 11,000 போர்க் கைதிகளுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன்" என்று அவர் கூறினார். பட்டா அமைப்பின் பழம் பெரும் தலைவரான அப்பாஸ், நீண்ட காலம் PLO வின் நிதி மேலாளராகப் பணியாற்றியவர். அவர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்தபோது, பல மில்லியன்களை சம்பாதித்து பணக்காரர் ஆனார். அவர் ஓஸ்லோ உடன்படிக்கைளில் முக்கிய பங்களிப்பு செய்ததுடன், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பாலஸ்தீனிய மக்களது ஆயுதந் தாங்கிய கிளர்ச்சியை எதிர்த்து வருகிறார்.

2000 ல் நடைபெற்ற கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் பாலஸ்தீனிய மக்கள் ஜெருசலம் தொடர்பான தங்களது உரிமைக் கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டுமென்று இஸ்ரேல் கோரியதை அராபத் ஏற்றுக்கொள்ளாததால் அது முறிந்து போனது. அரபாத்தினது முதலாளித்துவ தேசியவாத அரசியல் முன்னோக்கின் தர்க்க ரீதியான முடிவு ஒரு உடன்பாட்டிற்கு வரக் கோரினாலும், அவர் தனது இளமைக்காலம் முழுவதிலும் பாலஸ்தீனிய மக்களது அபிலாஷைகளுக்கு தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த உறுதிப்பாடு நீடித்து நிலைத்திருந்தது.

அரபாத் மரணத்திற்கு பின்னர், ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் வெறுக்கத்தக்க அவசரக் கோலத்தில் அப்பாஸை பதவியில் அமர்த்துவதற்காக நடைபெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும், புதிய ஜனாதிபதி உடனடியாக, ''சமாதான முன்னெடுப்பு'' என்றழைக்கப்படுவதற்கு எதிராகவும் தற்கொலைக் குண்டு வெடிப்பு உட்பட இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற ஹமாஸையும் மற்றும் இதர குழுக்களையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெளிவாக அறிவித்தன. தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டிய மேற்கு நாடுகளின் அரசுகள் மற்றும் இஸ்ரேலின் கோரிக்கைகளை அப்பாஸ் மனநிறைவு தரும் வகையில் நிறைவேற்ற முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தல்கள் நடைபெற்ற விதமே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஒரு பேரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசு எத்தகையத் தன்மைகளைக் கொண்டதாக இருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. பரவலாக துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு பாலஸ்தீனிய எல்லை என்று விளக்கம் தரப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசையோ, அல்லது பொருளாதாரத்தையோ உருவாக்கிவிட முடியாது. அப்பாஸ் எந்த உடன்படிக்கைக்கு வர முடிந்தாலும், அது பாலஸ்தீனிய மக்களை அரசியல் அடிப்படையில் ஒடுக்குவதாகவும், பொருளாதார அடிப்படையில் வறுமையில் தள்ளுவதாகவும்தான் அமையும். அப்பாஸ் போன்றவர்கள் அடங்கிய ஒரு சிறுகுழுவினர்தான் பாலஸ்தீன ஆணையத்திற்கு ஐரோப்பிய யூனியனும் பிற நன்கொடையாளர்களும் வழங்குகின்ற நிதி ஒதுக்கீடுகளால் பயனடைவார்கள். இது ஒரு ஊழல் மிக்க ஆட்சியை அரவணைத்துச் செல்வதாக அமையும். அந்த ஆட்சியின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பொதுமக்களது எதிர்ப்பை ஒடுக்குவதாகத்தான் இருக்கும்.

அப்பாஸை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஷரோன், "நேற்று நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து தற்போது ஊன்றிக் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய நடவடிக்கை என்னவெனில், பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை சிதைப்பதற்கு எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதே அவருக்குரிய சோதனையாகும்" என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஷரோனும், புஷ்ஷும் அரபாத்திற்கு எதிராக தெரிவித்து வந்த பிரதான ஆட்சேபனைகளில் ஒன்று அவர் Al-Aqsa தியாகிகள் படை, இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் ஆகிய இயக்கங்களை ஒடுக்குவதற்கு இயலவில்லை அல்லது விரும்பவில்லை என்பதுதான். இப்போது அவர்கள் இந்த அமைப்புக்களுக்கு எதிராக அப்பாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஹமாஸும் இஸ்லாமிய ஜிஹாத்தும் இந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தன. ஆனால், அவை இரண்டும் அப்பாஸ் தான் சட்டபூர்வமான வேட்பாளர் என்று ஏற்றுக்கொண்டு ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. "உணர்ச்சி கொந்தளிப்பு மிக்க வருங்காலம் என்று நாங்கள் நம்புகின்ற தருணத்தில் முஹமத் அப்பாஸூடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று ஹமாஸ் பேச்சாளரான முஷிர் அல் மஸ்ரி என்பவர் கூறினார்.

இஸ்லாமிய ஜிஹாத்தும் ஹமாஸும் அப்பாஸின் தலைமையை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரு தேசியவாத முன்னோக்கு, அது ஒரு மதச்சார்பற்ற முகமூடி அல்லது மத அடிப்படைவாதம் என்ற எந்த வடிவத்தில் வந்தாலும், அதன் வங்குரோத்தை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்திருக்கிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, அமைதி நிலவும் எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்கு இஸ்லாமிய தேசியவாதமோ அல்லது மதச்சார்பின்மை தத்துவமோ எதையும் செய்துவிட இயலவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் அப்பாஸ் அகதிகளை தாயகம் கொண்டு வருவதாகவும், கிழக்கு ஜெருசலத்தை தனது கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டு வருவதாகவும் உறுதியளித்திருந்தார். அவர் பெரும்பாலும் இந்த அடிப்படையிலேயே மக்கள் ஆதரவை வென்றெடுத்தார். என்றாலும், புஷ்ஷூம் ஷரோனும் இந்த உறுதிமொழிகளை அவர் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.

காசாவிலிருந்து வெளியேறுவதற்கான தனது ஆலோசனைகளுக்கு ஷரோன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு அதனால் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பயனும் ஏற்படப் போவதில்லை. பாலஸ்தீன மக்களது எல்லைகளைச் சுற்றி இஸ்ரேல் தடுப்புச்சுவர் எழுப்புவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காசா பகுதியில் வாழுகின்ற பாலஸ்தீனிய மக்கள் ஒரு சிறை முகாம் அல்லது சேரிப் பகுதி போன்று தோற்றமுடைய அமைப்பின் கீழ், வாழ்கின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி துருப்புக்கள் நடமாட்டம் இருக்காதே தவிர, வான் எல்லை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எந்த நேரத்திலும் தனது துருப்புக்களை அங்கு அனுப்புகின்ற உரிமை இஸ்ரேலுக்கு உண்டு.

காசா பகுதியிலுள்ள, சட்டவிரோதமான இஸ்ரேல் குடியிருப்புக்கள் ஷரோனின் தன்னிச்சையான திட்டத்தின் மூலம் நீக்கப்படவிருக்கின்றன. ஆனால், மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியிருப்புக்கள் விரிவுபடுத்தப்படும். பாலஸ்தீனியர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதப்படும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக சங்கிலித் தொடர்போல் இராணுவ சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் இணைத்துக் கொள்ளும். எனவே, பாலஸ்தீன மக்களது அன்றாட வாழ்வு நிரந்தரமான சோதனையாக அமைந்துவிடும்.

உலகத் தலைவர்களும் தாராளவாத பத்திரிக்கைகளும் எடுத்துக்கூறி வருவதுபோல் அல்லாமல் ஷரோன் காசாவிலிருந்து ''வாபஸ் பெறுவது'' பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்தும் ரத்தக்களறி ஒடுக்கு முறையில் சிக்கிக் கொள்வதை மாற்றாது. எனவே, அடுத்த சில வாரங்களில் அப்பாஸ் எந்த பேரங்களை உருவாக்க முயன்றாலும், அவை எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லாதவையாக இருப்பதுடன் வெறும் மாய தோற்றமாகவே அமையும்.

Top of page