:
ஆசியா
The social roots of the tsunami disaster
சுனாமிப் பேரழிவின் சமூகக் காரணிகள்
By the Editorial Board
22 January 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஆசிய சுனாமியினால் விளைவிக்கப்பட்ட பேரழிவுகள் தவிர்க்க இயலாதவை என்று
கூறிவிட முடியாது. மாறாக, இலாபநோக்கு முறையின் அறிவுக்குப் பொருந்தா, மனிதப்பண்பற்ற தன்மையின் மிகப்பெரிய
வெளிப்பாட்டு நிரூபணம் என்றுதான் கருதப்படவேண்டும். உடனடிக் காரணங்கள் மனிதகுலக் கட்டுப்பாட்டிற்கு அப்பால்
உள்ள சக்திகளில் இருந்தன என்பது உண்மையே. ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் வரம்புகளுக்குள்ளேயே, இந்தப்
பரந்த முறையில் நடந்துள்ள கஷ்டங்கள், இறப்புக்கள், நாசங்கள் ஆகியவை தடுக்கப்பட்டிருக்கக் கூடியவையே
ஆகும்.
இந்த நில அதிர்வும், சுனாமியும் பசிபிக் பெருங்கடலில் தோன்றியிருந்தால், முற்றிலும்
மாறுபட்ட விளைவுகள்தான் ஏற்பட்டிருக்கும். மிக உயர்ந்த தொழில்நுட்பவகை எச்சரிக்கை முறை, வட அமெரிக்கா
மற்றும் ஜப்பானிய கடலோரப்பகுதிகளை காப்பதற்காக செயல்படுபவை பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளன.
முதல் அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆரம்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும். மிகவும் பாதுகாப்பற்ற
சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் வறியவர்கள் தவிர்க்கமுடியாமல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும்,
பெரும்பான்மையினர், மற்றும் முக்கிய உள்கட்டமைப்புக்கள் அதிக சேதத்திற்கு உட்படாமல் தப்பித்திருக்க முடியும்.
ஆனால் அத்தகைய எச்சரிக்கை முறை இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளில்
அமைந்திருக்கவில்லை. எனவே முற்றிலும் தயாரிப்பற்ற மக்களை சுனாமி தாக்கியது. இதில் மிகவும் பாதிப்பிற்குட்பட்டவர்கள்,
எந்தப் பாதுகாப்பையும் கொடுக்க இயலாத சேரிகளிலும், குடிசைகளிலும் வாழ்ந்திருந்த கடலோரப்பகுதி கிராமவாசிகள்தாம்.
எந்த எச்சரிக்கையையும் அவர்கள் பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி தெளிவாகத்
தெரியும் முன் அடையாளங்களை எப்படி அறிந்து கொள்ளுவது என்பது கூட அவர்களுக்கு அதிகாரிகளால் கூறப்படவில்லை.
என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்ளுவதற்கு முன்பே, முழுக் கிராமங்களும் சிறுநகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டு,
அங்கு வசித்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆசியா முழுவதிலும், ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும் மில்லியன் கணக்கான மக்கள்
அடைந்துள்ள கொடூரமான கஷ்டங்கள் அடிப்படை உள்கட்டுமானம் போதுமான அளவில் இல்லாததால் இன்னும்
கூடுதலாகியுள்ளன. நல்ல நேரங்களில்கூட, இந்த பாதிக்கப்பட்ட நாடுகள் முழுவதிலும், போக்குவரத்து,
தொடர்புகள், மின்வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், மிகமிகக் குறைவாகத்தான் உள்ளன. இந்தப்
பேரழிவிற்குப் பின்னர், அவசரகால, மருத்துவப் பணிகள் மிகப் பெரிய அளவில் தேவைப்பட்டன. பல
நூறாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இன்றி வாடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து நான்கு
வாரங்கள் ஆகியுள்ளபோதிலும், சென்றடைவதற்கு இயலாத சில தொலைதூரப்பகுதிகளுக்கு பணியாளர்கள் இன்னும்
சென்றடையவில்லை.
உலகின் பிரதான தலைநகரங்களில் உள்ள அரசாங்கங்கள் முதலில் இதை எதிர்கொண்ட
விதம் ஆளும் செல்வந்தத்தட்டு மூன்றாம் உலகம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களின் பரிதாப
நிலைபற்றி இழிவும், அசட்டைத் தன்மையையும் கொண்டதைத்தான் நிரூபித்தது. சாதாரண மக்களிடம் இருந்து
பெருகிய பரிவு உணர்வு, தாராளமனப்பான்மையின் வெளிப்பாடு இவற்றிற்கு முற்றிலும் எதிரான வகையில், புஷ்ஷோ,
பிளேயரோகூட தங்கள் விடுமுறைக்கால திட்டங்களைக்கூட மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுடைய
அக்கறையின்மை, மிகத் தீவிரமான அரசியல் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலைமை ஏற்பட்டபின்புதான்
அவர்களுடைய காலம் கடந்த அறிக்கைகள் வெளிவந்தன.
இந்தப் பிரதிபலிப்பு ஒன்றும் தற்செயலானது அல்ல. அது உண்மையில் இருக்கும்
பொருளாதார உறவுகளின் அடிப்படையைத்தான் பிரதிபலித்துள்ளது; அன்றாடம் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் ஒடுக்கும்
நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளின் தன்மையைத்தான் இது வெளிப்படுத்துகின்றது. பிரதான ஏகாதிபத்திய
மையங்களில் உள்ள, தனிச்சலுகைப் பெற்ற ஒரு மிகச் சிறிய கும்பல் குவித்துக்கொண்டுள்ள பெரும் செல்வமானது,
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இன்னும் பல பகுதிகளிலும் மலிவு உழைப்பை சுரண்டுவதன் மூலம் பெற்றுக்கொண்ட
இலாபத்தின் நேரடி உற்பத்தியாகும்.
வேறுவிதமாகக் கூறினால், முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் உள்ள அரசியல்,
நிதிமுறை மற்றும் தொழில் துறை உயர் தட்டின் ஆடம்பர வாழ்க்கை மிக வறிய நாடுகளில் உள்ள மில்லியன்
கணக்கான மக்களுடைய துயரத்தில்தான் முற்றிலும் தளத்தைக் கொண்டுள்ளது.
இந்த உறவை உயர்த்திக் காட்டும் வகையில் பல புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.
உலகத்தின் பில்லியனர்கள் பட்டியலை ஆண்டுதோறும் விவரிக்கும்
Forbes இதழ் கடந்த ஆண்டில் இது மிக உயர்ந்த எண்ணிக்கையான 587 ஐ அடைந்தது என்றும்,
அதில் கிட்டத் தட்ட பாதிப்பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்றும் கூறுகிறது. அவர்களுடைய மொத்த
வருமானம் 1.9 டிரில்லியன் டாலர்கள், இது உலகின் 170 நாடுகளில் மிக வறிய நாடுகளின் இணைந்த மொத்த
உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். இதற்கு மாறாக, 2003ம் ஆண்டு வந்த ஐ.நா. அறிக்கை ஒன்று,
குறைந்தது ஒரு பில்லியன் மக்களாவது "தீவிர ஏழ்மை" எனப்படும் சிறிதும் அடிப்படை தேவைகளற்ற நிலைமையில்
வாழ்கின்றனர் என்றும், அவர்களுடைய நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் இன்னும் ஏனைய ஏகாதிபத்திய மையங்களைப்
பொறுத்தவரையில், குடும்ப உறுப்பினர்கள், வீடுகள், தாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கான உபகரணங்கள் என்று
அனைத்தையும் இழந்துவிட்ட இலங்கை, இந்தோனேசியா நாடுகளின் கிராமவாசிகளும், மீனவர்களும், பூகோள
மூலதனத்தின் நடவடிக்கைகளுக்கு தேவையற்றவர்களாவர். எனவேதான் அவர்களுடைய எதிர்காலம் இவர்களுக்கு
தேவையற்றது என்ற கருத்திற்குள்ளாகியுள்ளது. ஆசியாவில் இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து தாக்குதல்களை
அளிக்கின்றன என்பதை அனைவரும் அறிவார்கள். பெரும் வெள்ளங்கள், சூறாவளிகள் போன்றவை வீடுகளை அழித்து
உயிர்களையும் பெருமளவில் கவராமலும் ஓர் ஆண்டுகூடக் கழிவதில்லை; ஆயினும்கூட பாதிக்கப்பட்டவர்களுடைய
நிலைமையின் மோசத்தை குறைப்பதற்கு எதுவுமே செய்யப்படுவதில்லை.
உலகத்தின் நிதியங்கள் பற்றிய செய்தி ஊடகங்கள் சுனாமியின் தாக்குதல் பாதிப்பு
பற்றி முழுமையாகக் கேள்விப்பட்டவுடன் மொத்தமாக பெருமூச்செறிந்தது அவர்களுடைய கண்ணோட்டத்தை
சுருக்கமாகக் கூறுகிறது. ஆஷேயில் உள்ள எண்ணெய், எரிவாயு நிலங்கள், அதிக முதலீடு நிரம்பிய இடங்கள், அதிகம்
பாதிப்பிற்கு உட்படவில்லை, காப்புத் தொகை வெளிப்பாடும் குறைவாகத்தான் இருந்தது; பாதிக்கப்பட்டவர்களில்
வெகு சிலரே காப்பு நிவாரணத்திற்குட்பட்டிருந்தனர். சுற்றுலாத் துறை சேதப்பட்டது; ஆனால் அது விரைவில் சரி
செய்யப்பட்டுவிட முடியும். ஆசியப் பகுதிகள் உட்பட, உலகம் முழுவதிலும் உள்ள பங்குச் சந்தைகள், இந்த நிகழ்வு
பற்றி எந்தவிதமான வெளியீட்டையும் காட்டவில்லை.
சுனாமியினால் பாதிப்பிற்குட்பட்டுள்ள நாடுகளில், நாடுகடந்த நிறுவனங்களினால் உள்ளூர்
மக்களை சுரண்டுவதற்கு துணையாக நிற்கும், ஒரு மிகச் சிறிய சமூக பிரிவுதான், வெளிநாட்டு முதலீட்டின் பெருக்கத்தினால்
பலன்களை அடைந்துள்ளன. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில், பூகோள மூலதனத்திற்காக உலக வங்கி,
பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றால் திணிக்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்தம், தனியார் மயமாக்கம், சீரமைப்பு
வேலைத் திட்டங்கள் வாழ்க்கைத் தரத்தைச் சீரழிவிற்கு உட்படுத்தும் தன்மையைத்தான் கொண்டுள்ளன.
அரசியல் அடக்குமுறையுடன் இணைந்தேதான், இந்தப் பொருளாதாரச் சுரண்டல்
நடைபெற்று வருகிறது. ஆசியா முழுவதிலும், தேசிய முதலாளித்துவ வர்க்கமானது இராணுவ சர்வாதிகாரங்கள்
மூலமும் அல்லது மக்களை வகுப்புவாதம், உள்நாட்டுப் போர் போன்றவற்றால் பிரித்து வைப்பதன் மூலமும்தான்
இந்த உறவுகளை நிலைக்க வைக்கவும், தன்னைப் பதவியில் தக்கவைத்துக் கொள்ளவும் முடிகின்றது.
"உதவி" உறுதிமொழிகளின் பின்னே
இந்தப் பேரழிவை கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பொருட்படுத்தாத பின்னர்,
பிரதான அரசாங்கங்கள் திடீரென்று மாறின. ஜாகர்த்தாவில் ஒரு சர்வதேச உச்சிமாநாடு - நன்கொடை
அளிக்கும் நாட்டின் பட்ஜெட் தொகையிலும், சுனாமியால் பாதிப்பிற்கு ஆளான மக்களின் தேவையிலும் மிகச் சிறிய
விகதம்தான் என்றாலும், 5 பில்லியன் டாலர்கள் உதவியை, நிவாரணத்திற்கு எனக் கொடுக்க உறுதிமொழியளித்தது.
ஆனால் இன்னும் கூட முக்கியத்துவம் வாய்ந்த வகையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை இன்னும் சில
நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தங்களுடைய இராணுவப் படைகளையும் "நிவாரண" நடவடிக்கைகளில் பங்கு
பெறுவதற்கு, அதிலும் மிக மோசமான முறையில் பாதிப்பிற்குட்பட்ட இலங்கை, இந்தோனேசியா ஆகிய இரண்டு
நாடுகளுக்கும் அனுப்பி வைத்தன.
இந்த மேலாட்டமான மனமாற்றத்திற்கு காரணம் உறுதியான வர்க்க நலன்கள்தாம்.
மிகப்பெரிய மக்கள் தொடர்பு நிலை என்பதோடு, தங்களுடைய முந்தைய வெளிப்படையாகத் தெரிந்திருந்த
அசட்டைத்தனத்தை மூடி மறைக்கும் வகையில், புஷ், பிளேயர், ஹோவர்ட் இன்னும் பலரும் பேரழிவு தங்களுடைய
பொருளாதார, மூலோபாய நலன்களுக்குப் பயன்படும் வகையில் உபயோகிக்கக் கூடியதே என்ற முடிவிற்கு
வந்தனர். வெள்ளை மாளிகையை பொறுத்த வரையில், இது ஈராக்கில் சட்டவிரோதமான நவீன காலனி
ஆதிக்கத்தை நிறுவும் ஆக்கிரமிப்பைக் கொண்டுள்ள, அமெரிக்க இராணுவத்தின் "மனிதாபிமான முகத்தை" காட்ட ஒரு
வாய்ப்பாக பயன்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற செனட் வெளியுறவுக் குழுவின் கூட்டம் ஒன்றில்,
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்குப் புஷ்ஷினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொண்டலீசா ரைஸ், சுனாமியானது,
"வியத்தகு முறையில் அமெரிக்க அரசாங்கத்தை என்றில்லாமல் அமெரிக்க மக்களுடைய இதயங்களைக் காட்டும் அரிய
வாய்ப்பை நல்கியுள்ளது" என்று அறிவித்தார். "இதனால் நமக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன என்றே நான்
கருதுகின்றேன்." என அவர் கூறியுள்ளார்.
இந்தப் பேரழிவு வியட்நாம் போருக்குப் பின்னர் மிகப் பெரிய முறையில் தெற்கு
ஆசியாவில் தன்னுடைய சக்தியைக் காட்டிக்கொள்ள ஒரு காரணத்தை அமெரிக்க இராணுவத்திற்கு கொடுத்தது;
2001ல் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின்னர் புஷ் நிர்வாகம் இத்தகைய வாய்ப்பைத்தான் எதிர்நோக்கியிருந்தது.
இதுவரை, "பயங்கரவாதத்தின் மீதான" போரில் இந்த இலக்கை அடையமுடியவில்லை; ஏனெனில் பொது மக்களிடையே
கடும் கசப்பு உணர்வு ஏற்படும் என்று இப்பகுதியில் இருக்கும் அரசாங்கங்கள் பதற்றத்தை கொண்டிருந்தன. இப்பொழுது
அமெரிக்கப்படைகள் இலங்கையிலும், இந்தோனேசியாவிலும் இறங்கியுள்ளன. இரு நாடுகளுமே மத்திய கிழக்கு மற்றும்
ஆசிய-பசிபிக் பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் முக்கியமான இடங்களில் உள்ளன; நீண்ட காலமாகவே
இப்பகுதி அமெரிக்க இராணுவ மூலோபாய வல்லுநர்களுக்கு முக்கியமானவை என்று கருதப்பட்டது ஆகும்.
இந்தோனேசியாவில், இந்தோனேசிய படைகளுடன் (TNI)
மீண்டும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சுனாமி வகை செய்துள்ளது. சுகோர்ட்டோவின் வீழ்ச்சிக்கு
பின்னர், அமெரிக்கா TNI உடனும் அதன் மிருகத்தனமான
அடக்குமுறையில் இருந்தும் தன்னை தொலைவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.
இப்பொழுது அமெரிக்க துருப்புக்கள் TNI துருப்புக்களுடன்
ஆஷேயில், பிந்தையவர்கள் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்கும், ஆஷே பகுதி மக்களை
அச்சுறுத்துவதற்கும் நடத்தும் போரில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
நிதி உதவியைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு டாலருடனும் ஏதேனும் திருப்பிக்
கொடுக்கவேண்டிய கடப்பாடும் கொடுக்கப்படுகிறது. பெரிய கட்டுமான நிறுவனங்கள், மறுசீரமைப்புத் திட்டங்கள்
கொடுக்கப்படும்போது அவற்றைப் பெறுவதற்காக இப்பொழுதே அங்கு வரிசையில் நிற்கின்றன. ஆஸ்திரேலிய
அரசாங்கம் தன்னுடைய 1 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையை, ஐ.நா. மூலம் இல்லாமல், ஜாகர்த்தாவில்
இருக்கும் தங்களுடைய சொந்த அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. வேறு
பல நன்மைகளுடன், இது ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அதிக நன்மைகளை பெறும் வாய்ப்பை கொடுக்கும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அக்கறை என்பது கடைசிபட்சமாக காட்டப்படுவது
என்றாகிவிட்டது. இந்த முழு நிவாரண நடவடிக்கைகளின் பின்னணியில் கூறப்படாத, அனுமானக் கருத்து தப்பிப் பிழைத்தவர்கள்
எந்த உதவிக்கும் பெரும் நன்றி செலுத்தும் உணர்வைக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில்
விலங்குகள் கூட வாழமுடியாத நிலைமைகள் --நெரிசல் மிகுந்து குப்பைகூளங்கள் நிறைந்திருப்பது, போதிய
சுகாதார வசதிகள் இல்லாமை, குடிநீர் வசதியற்ற நிலை போன்றவை- இன்னும் இரண்டாண்டுகள் அல்லது அதற்கும்
கூடுதலான காலத்திற்கு இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமானவையாக கருதப்படுகின்றன. அதற்குப் பின்னர்
தங்களுடைய முந்தைய வாழ்விற்கு திரும்புதலே அதிர்ஷ்டகரமானது என்று இவர்கள் கருதினால், அதாவது வாய்க்கும்,
வயிற்றுக்கும் போதுமானது என்ற நிலைக்கு மீண்டும் வந்துவிட்டது என்ற நிலையில், அதே ஏழ்மை நிலைமையில் வசிக்கும்
நிலைமையில், இவர்களுடைய கடலோரப்பகுதிகளும் முன்போலவே தாக்குதல்களுக்கு தயாரற்ற நிலையில்தான்
இருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் எச்சரிக்கை முறை இப்பொழுது ஏற்படுத்தப்பட்டு விடலாம்.
ஆனால் வெள்ளங்கள், புயல்கள் மற்ற இயற்கைச் சீற்றப் பேரழிவுகளின் விளைவுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும்
இறப்புக்களைக் கொடுக்கும் சூழ்நிலையை மாற்றுவதற்கு ஏதும் செய்யப்படமாட்டாது.
டிசம்பர் 26ம் தேதி பெருந்துன்பம், மீண்டும் கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல்
சாதனைகளுக்கும் மில்லியன்கணக்கான மக்கள் பிற்போக்கான நிலைமையில் வாடி இழிவாக வாழ்ந்து வருவதற்கும்
இடையே உள்ள பெருத்த பிளவை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் உற்பத்தி
பூகோளமயமானது மனிதனுடைய பொருளாதாரத் திறனைப் பெரிதும் உயர்த்தியுள்ளது, உலக அளவில் அறிவார்ந்த
வகையில் திட்டமிடல், வளங்களைப் பயன்படுத்துதல் என்ற முறையில் சில நிலைமைகளை ஏற்படுத்தி, உலகின்
ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கெளரவமான வாழ்க்கைத் தரத்தை பெறுவதற்கு வழிசெய்யும்.
இலாப முறை தொடரும் வரைக்கும், இது நடைமுறைப்படுத்த முடியாததாகும்.
செல்வம் கொழிப்போருக்கும் வறியவருக்கும் இடையே உள்ள மகத்தான சமூக பிளவு, முதலாளித்துவத்தின் இயல்பாக
உள்ள உறவுமுறைகளின் விளைவு ஆகும். சமூக சமத்துவமின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, அதில் ஒரு சிலரின் இலாப
தேவைகளுக்கு பதிலாக பெரும்பான்மை மக்களுடைய உடனடி சமுதாய தேவைக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில்
சமுதாயத்தை சோசலிசப் பாதையில் புரட்சிகரமான வகையில் மறுசீரமைப்பது தேவைப்படுகிறது..
See Also:
Top of page |