WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The logic of the irrational: Bush's inaugural address and the global
strategy of American imperialism
அறிவுக்குப் பொருந்தா தர்க்கம்: புஷ்ஷின் பதவியேற்பு உரையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
பூகோள மூலோபாயமும்
By David North
22 January 2005
Back to screen
version
எவ்வளவுதான் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவமற்ற மனிதனாக இருந்தாலும், வியாழனன்று
ஜனாதிபதி புஷ்ஷால் அளிக்கப்பட்ட பதவி ஏற்பு உரை ஒரு பெரிய அரசியல் அறிக்கை என்பதும் முழுக் கவனத்துடனும் இது
ஆராயப்படவேண்டும் என்பதும் உண்மையாகும். அமெரிக்காவின் பூகோள மூலோபாயத்தின் வெளிப்பாடு என்ற முறையில்,
இந்த உரையானது உலகம் முழுவதும் இராணுவ நடவடிக்கைகள் மிகப் பெரிய அளவில் பெருகும் என்ற முன்னறிவுப்புக்களை
கொடுக்கிறது.
இலக்கணம் பிறழாமல் ஒரு சொற்றொடர்கூட எழுதக்கூடிய திறன் பெற்றிராத புஷ்ஷினால்
இந்த உரை எழுதப்படவில்லை; ஜனாதிபதி எதைப் பேசவேண்டும், பேசக் கூடாது என்பதற்கு பெரும் கவனம் செலுத்தும்
மிக உயர்ந்த திறமை படைத்த ஆலோசனை குழுவினால், மைக்கல் ஜெர்சனுடைய தலைமையில் இந்த உரை எழுதப்பட்டது.
பல வர்ணனையாளர்களாலும் கவனிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பதவி ஏற்பு உரையில் இருந்த
முக்கியமான பளிச்சென்று தெரிந்திருந்த நீக்கம், ஈராக்கைப் பற்றி வெளிப்படையான குறிப்பு ஏதும் இல்லை என்பதாகும்.
புஷ்ஷின் உரையெழுதுபவர்கள், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்ததின் பேரழிவு விளைவுகளைப் பற்றி
சுட்டிக்காட்டுதல் பொருத்தமற்றதாக இருக்கும் என்று கூறுதல் ஒரளவு வெளிப்படையாக உள்ள காரணம்தான். இன்னும் கூடுதலான
வகையில், "பயங்கர வாதத்தின் மீதான போர்" என்பது ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு காரணமாக இருந்ததாக
கருதப்பட்டது பற்றியும் புஷ் எக்குறிப்பும் கூறாததும் ஒரு வியப்புத்தான். அந்தச் சொற்றொடரோ, அல்லது
"பயங்கரம்", "அச்சுறுத்தல்" போன்ற சொற்களோகூட ஜனாதிபதி புஷ்ஷினால் ஒருமுறைகூட உச்சரிக்கப்படவில்லை.
"பயங்கரவாதத்திற்கு" எதிரான பூகோள ரீதியான போராட்டம் என்பது கணக்கிலடங்கா
முறையில் புஷ் நிர்வாகத்தால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற
உண்மையின் பின்னணியில், தற்போதைய அதன் நீக்கம் மிக அசாதாரணமானது ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக,
பயங்கரவாதத்திற்கெதிரான புனிதப்போரின் கட்டாயங்கள் ஈராக்கின் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த வேண்டி
கொண்டுவரப்பட்டதுடன், ஈரான், வடகொரியா போன்றவற்றிற்கும் எதிராக "முன்கூட்டியே தாக்கித் தடுக்கும் போரை"
தொடங்குவதற்கான எதிர்பார்ப்புக்களும் அதையொட்டி இருந்தன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 29, 2002 அன்று தன்னுடைய நாட்டு நிலை பற்றிய
வருடாந்த உரையை வழங்குவதற்கு தேசியச் சட்ட மன்றத்திற்கு சென்றபோது, இந்த மூன்று நாடுகளையும் "அவர்களுடைய
பயங்கரவாத கூட்டாளிகளையும்", "தீமையின் அச்சு, உலக அமைதியைக் குலைக்கும் பொருட்டு ஆயுதமேந்துபவர்கள்"
என்று கண்டனம் செய்தார். "பேரழிவு ஆயுதங்களை அடையும் முயற்சியினால், இந்த ஆட்சிகள் மிகப் பெரிய, பெருகிய
ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை தங்களுடைய வெறுப்பை நன்கு வெளிப்படுத்துவதற்கு வகை செய்யும் வகையில்,
பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடும். அவர்கள் நம்முடைய நட்பு நாடுகளை தாக்கக் கூடும் அல்லது
அமெரிக்காவை மிரட்டும் முயற்சியில்கூட ஈடுபடலாம். இவற்றில் எது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி அக்கறையற்று இருந்து
விட்டால், அதற்கான விலை பேரழிவாகப் போய்விடும்" என்று புஷ் அறிவித்திருந்தார்.
இதற்குப் பின்னர், பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடித்தல் மற்றும் சதாம் ஹுசைனுக்கும் அல்
கொய்தாவிற்கும் இடையே உள்ள தொடர்புகளை கண்டுபிடித்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வியானது, அமெரிக்காவால்
பூகோள மேலாதிக்க தலைமைநிலை மற்றும் உலக மேலாதிக்கம் பின்பற்றப்படலை - ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கான
உண்மைக் காரணத்தை மறைக்கும் பொய்கள் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டு வந்திருந்தது என்பதை நன்கு
தெளிவாக்குகிறது.
அமெரிக்காவின் குற்றம் சார்ந்த சூழ்ச்சி உலகம் முழுவதும் அம்பலமானதில் இருந்து புஷ்
நிர்வாகம் கற்றுக்கொண்ட படிப்பினை, அடுத்த சுற்று இராணுவ நடவடிக்கைகளில் அது ஈடுபடும்போது, அதுவும்
குறிப்பாக, திட்டவட்டமான, இயற்பொருள் சார்ந்த அச்சுறுத்தலை ஈரான் அல்லது இராணுவ தாக்குதலுக்காக தான்
இலக்குகொண்டுள்ள எந்த நாட்டில் இருந்தும் எதிர்கொள்வதாக கூறுவதன் மூலம், அது அடுத்த சுற்று தாக்குதலை
நியாயப்படுத்தக் கூடாது என்பதுதான். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு உடனடியாய் நிகழக்கூடிய அல்லது எதிர்காலத்தில்
தரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய கூற்றுக்கள் கூட புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் இனித் தேவையில்லை, அவற்றை
சரிபார்த்தல் என்பது எரிச்சலூட்டும், நேரத்தையும் வீணடிக்கும் கோரிக்கைகள் என்று கருதப்படுகின்றன.
இந்தக் காரணத்தினால்தான் பதவி ஏற்பு விழா உரையில் "பயங்கரம்", "பயங்கரவாதம்"
பற்றிய குறிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டு, இன்னும் கூடுதலான அருவமான வகையில், புலனாகாத வகையில்,
"சுதந்திரம்" மற்றும் "விடுதலை" ஆகியவற்றிற்காக நடத்தப்படும் மற்றும் "கொடுங்கோன்மையை" எதிர்க்கும்
போராட்டம் என்று போரை நியாயப்படுத்த புதிய வகையில் சொற்கள் வேண்டிக் கொண்டுவரப்பட்டன.
தன்னுடைய உரையின் முக்கிய பகுதியில், புஷ் அறிவித்தார்: "பாதிப்புக்காளாகும் நம்முடைய
பகுதியை அறிந்துள்ளோம்; அதனுடைய மிக ஆழ்ந்த ஆதாரத்தையும் பார்த்துவிட்டோம். உலகின் முழு பிராந்தியங்களும்
அதிருப்தி மற்றும் கொடுங்கோன்மையில் குமுறிக்கொண்டிருக்கும்பொழுது-, வெறுப்பை வளர்க்கும், கொலையை
நியாயப்படுத்தும் கருத்தியல்களுக்கு இடம் கொடுக்கையில், வன்முறை பெருகும், பேரழிவு ஆற்றல் பன்மடங்கு பெருகும்,
மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ள எல்லைகளை கூட கடக்கும், மரண அச்சுறுத்தலை எழுப்பும்."
இந்த "கொடுங்கோன்மையால்" எழுப்பப்படும் "மரண அச்சுறுத்தலை" இப்பொழுது
அமெரிக்கா "தேவைப்பட்டால் ஆயுத வலிமையுடன்" எதிர்க்கும்.
போருக்கான அறிவுபூர்வமான காரணம் பகட்டான அரசியல் மற்றும் உளவியல் ரீதியான
அபத்தத்தின் மீது நிற்கிறது. "கொடுங்கோல் ஆட்சியின் கீழ், எதிர்ப்புணர்வில் கொதித்துக் கொண்டிருக்கும்", "உலகில்
பல முழுப்பகுதிகளும்" ஏன் அமெரிக்காவை வெறுக்க வேண்டும் என்றோ, அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க
வேண்டும் என்றோ புஷ் விளக்குவதற்கு முற்படவில்லை. இந்த நிகழ்விற்கு ஒரே அறிவார்ந்த விளக்கம் அவர்கள்
அமெரிக்காவை ஓர் ஒடுக்கும்நாடு, எதிரி நாடு என்று கருதுவது என்பதுதான். எனவே அமெரிக்கா கொடுங்கோன்மைக்கு
எதிராக ஒரு பூகோள புனிதப் போரில் ஈடுபட்டுள்ளது என்ற கூற்று, அங்கிருக்கும் நிலைமைகள் மற்றும் போரை
நியாயப்படுத்துவதற்காகக் கூறும் புஷ்ஷின் காரணங்கள் இவற்றினாலேயே மறுக்கப்பட்டுவிடுகிறது.
இந்த வாதத்தின் மட்டமான, அபத்தமான நிலை புஷ்ஷின் ஆலோசகர்களுடைய அகநிலை
அறிவுஜீவித வரம்புகளில் ஆழ்ந்துள்ளது என்றில்லாமல், அவர்கள் உண்மையிலேயே குறை வரம்புடையவர்கள் என்றாலும்கூட,
உலக மக்களுடைய தேவைகள், விழைவுகள் இவற்றிற்கும் அமெரிக்காவின் பூகோள கொள்கைகளின் மிருகத்தனமான
இலக்குகளுக்கும் இடையே காணப்படுகின்றன.
நடைமுறைக் கொள்கை என்ற வகையில், பயங்கரவாதத்திற்கு எதிரானபோராட்டம்
கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் என்று பிணைக்கப்படுவது உடனடியான, ஆழ்ந்த விளைவுகளைக்
கொண்டிருக்கிறது: இது அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான உணர்ச்சியை தோற்றுவிப்பதற்கான நரம்புக் கிளர்ச்சியின்
குறைந்தபட்ச நிலையையும் குறைப்பதோடு, அதன் இலக்குகளின் அளவை அதிகரிப்பதாகவும் அமைகிறது.
புஷ்ஷின் கொள்கைவழியான முன்கூட்டிய தடுப்புப் போர் என்பது மறுவரையறை
செய்யப்பட்டுள்ள நிலையில், ஏதோ ஒரு நாடு பயங்கரவாதப்பேரழிவு ஆயுதங்களை அல்லது வேறுவிதத்தில்
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலைத் தரும் வகையில், வருங்காலத்தில் பயன்படுத்த திட்டத்தை கொண்டுள்ளதால் அமெரிக்கா
ஆபத்திற்குட்படுகிறது என்று கூறவேண்டிய தேவையில்லை. மாறாக, அமெரிக்கா, "கொடுங்கோன்மை" படைத்துள்ளது
என்று தான் விரும்பும் எந்த ஒரு நாட்டையும், அங்கு வன்முறை புலப்படாத நிலையிலும், புதிர்வாய்ந்த வகையிலும்,
பெருகி சேர்ந்துவருகிறது என்று அடையாளம் கண்டுவிட்டாலே போதும்.
உண்மையில் புஷ் நிர்வாகம் தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தை தொடங்கும்போது,
மனத்தில் எந்தக் கருத்தை துல்லியமாகக் கொண்டுள்ளது?
புஷ்ஷின் பதவி ஏற்பு விழா உரைக்கு மறுநாள் வெளியான வாஷிங்டன் போஸ்ட்டில்,
சார்ல்ஸ் கிரெளதாம்மெர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இதற்கான விடை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெளியிடப்பட்ட
நேரமும் உண்மையில் தற்செயலானது அல்ல. மற்ற பல தலையங்கங்கள், கட்டுரைகள் போலன்றி, கிரெளதாம்மெரின்
கட்டுரை, பதவி ஏற்பு உரையை வரவேற்று, அது இரண்டாம் புஷ் நிர்வாகத்தின் செயல்பட்டியலுக்கு ஏற்ப பொது
மக்களின் கருத்துக்கள், உணர்வுகள் ஆகியவற்றை சமாதானப்படுத்தும் வகையிலும், திரிக்கும் வகையிலும் ஒரு
தொடக்கத்தைக் குறிப்பிடும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
புஷ்ஷின் முதல் பதவிக்காலத்தில் பெரிதும் கவனத்திற்குட்பட்டிருந்த பழைய,
பயங்கரவாதத்தின் மீதான போர் என்பது, இப்பொழுது முக்கியத்துவத்தில் குறைந்துவிட்டது என்று கிரெளத்தாம்மெர்
விளக்குகிறார். "புதிய ஆபத்துக்கள் வானில் வட்டம் இடுகின்றன என்று அவர் கூறுகிறார். பெரும்பாலான
பார்வையாளர்கள் உணர்வதைவிட அபிவிருத்தியானது மிக தொந்திரவுடையதாக இருக்கிறது என்பது மோசமான செய்திகள்
ஆகும்: சோவியத் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் முதலாவது முறையாக பெரும்வல்லரசுகளால் நங்கூரமிடப்பட்ட அமெரிக்க
எதிர்ப்பு வெளிப்பாட்டின் அடையாளம் ஆகும்." எதைப்பற்றி கிரெளத்தம்மெர் பேசுகிறார்?
"சீனாவுடன் பொதுக் காரணங்களுக்காக கூடுதலாக தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று
ரஷ்யா கூறியுள்ளது தற்செயலான நிகழ்வு அல்ல. சீனாவின் எழுச்சி கொண்டுள்ள சக்தியையும், செல்வக் கொழிப்பு அற்ற
நாடுகளில் அதன் தலைமைதாங்கும் அந்தஸ்து இருக்கும் நிலையின் திறனையும் பார்க்கும்போது, இது 21ம் நூற்றாண்டின்
ஜேர்மனியாகி விடுமோ என்ற ஆபத்தான தன்மையை காட்டுகிறது. டிசம்பர் மாதம் உக்ரேனிய தேர்தல் பழையபடி நடத்தப்பட்டு
மேலை நாடுகளின் ஆதரவுடைய விக்டர் யுஷ்செங்கோ அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட வாரத்தில், ரஷ்யா குறிப்பிடத்தக்க
வகைகளில் இருமுறை சீனாவை அணுகியது. முதலாவது, ரஷ்யாவின் மிகப் பரந்த சக்தி (ஆற்றல்) இருப்புக்களை வளர்ப்பதில்
தீவிரமான பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய அறிவிப்பாகும். இதையும் விட ஆபத்தான முறையில், ரஷ்ய பாதுகாப்பு
மந்திரி, 27 டிசம்பரில், 'வரலாற்றிலேயே முதல் தடவையாக சீனப் பகுதிகளில் கூட்டாக மிகப் பெரிய இராணுவப்
பயிற்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இரண்டாவதாகும்.
"தன்னுடைய பங்கிற்கு சீனா, அமெரிக்க எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டுள்ள மதம்பிடித்த
நாடுகளில் ஒன்றான ஈரானுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகிறது. தன்னைத்தானே ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள்
என்று கூறிக்கொண்டிருக்கும் சிரியா, வட கொரியா, கியூபா, ஹ்யூகோ சாாவேசின் வெனிசூலா ஆகியவற்றையும்
சேர்த்துக் கொண்டால், "மேலாதிக்க எதிர்ப்பு முகாம் என்று நம்மை இலக்கு கொள்ளும்" நாடுகளின் முக்கியத்துவம்
வாய்ந்த தொடக்கத்தை பார்க்க முடியும்."
அமெரிக்க விரோதிகளின் பட்டியல் உண்மையிலேயே முடிவில்லாததாக இருக்கிறது! உலகின்
அனைத்துக் கண்டங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள், "கொடுங்கோன்மையில் இருந்து", "விடுவிக்கப்பட வேண்டியவர்கள்"
என்று அமெரிக்காவினால் இலக்கு கொள்ளப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முடிவே கிடையாது; ஏனெனில் தன்னுடைய
கட்டுரையின் முடிவுப் பகுதியில், "களைப்படைந்தவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது" என்று கிரெளத்தாம்மெர்
பிரகடனப்படுத்தியுள்ளார்.
இவை அனைத்தும் கிறுக்குத்தனமாக தோன்றுகின்றதற்கான காரணம், அவை கிறுக்குத்தனமாக
இருப்பதுதான். ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள முரண்பாடுகளின்படி, இந்தக் கிறுக்குத்தனமானது புஷ்,
கிரெளத்தாமெர் அல்லது பதவியேற்பு உரையின்பால் புகழாரம் சூட்டியுள்ள ஏராளமானவர்களின் மூளையில் இருந்து வரவில்லை;
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்திய செயல் திட்டத்தில்தான் உறைந்திருக்கிறது.
இப்பொழுது புஷ் நிர்வாகம் இரண்டாம் பதவிக்காலத்தை தொடங்கியுள்ளது; இதன்
கொள்கைகளும் செயற்பாடுகளும் இன்னும் கூடுதலான முறையில் இரத்தம் சிந்த வைத்தல் என்பதுடன், மனிதத் துன்பங்கள்,
பெரும் சோகங்கள் ஆகியவற்றை முதல் பதவிக்காலத்தில் விளைவித்ததைவிடக் கூடுதலாக விளைவிக்கும். பெரும் மீளமுடியாத
பள்ளத்தில் அது விழ இருக்கும்போது, எழும் கேள்வி இதுதான்: எந்த அளவிற்கு இந்நாட்டையும், உலகையும் அது தன்னுடன்
இட்டுக் கொண்டு செல்லும்? |