World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president puts military in charge of relief operations

இலங்கை ஜனாதிபதி நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை நியமித்துள்ளார்

By Wije Dias
14 January 2005

Back to screen version

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனவரி 3 அன்று வழக்கத்திற்கு மாறாக தீவின் அனைத்து நிவராண நடவடிக்கைகளையும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார். அடுத்த நாள் அவர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசரகால நிலைமையை அமுல்செய்ததுடன், இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்களையும் வழங்கியுள்ளார். இந்த முடிவு பகிரங்கப்படுத்தப்பட்டிருக்வில்லை.

பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவராக அண்மையில் நியமனம் பெற்ற, ஜனாதிபதியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான அட்மிரால் தயா சந்தகிரி நிவாரண நடவடிக்கைகள் அனைத்துக்குமான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் திருப்பமாக, அவர் கடற்படை துணை அதிகாரிகள், விமானப்படை கொமான்டர்கள், மேஜர் ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் கேனல்களையும் டிசம்பர் 26 சுனாமியில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இராணுவ இணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

இதன் விளைவு, நாட்டின் 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் விளைபயனுள்ள வகையில் இராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அழிவு பிரமாண்டமாக இருப்பதால், இந்தப் பிரதேசங்களில் நிவாரணப் பணிகளுக்கு பொறுப்பாக இருப்பதானது உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதே என அர்த்தப்படுத்தப்படுகிறது. மீள் கட்டுமானம், பெருக்கெடுக்கும் அவசர விநியோகங்களை இணைப்பதற்கான சேவை மற்றும் போக்குவரத்தை மீளமைப்பது மற்றும் பொலிஸ் நடவடிக்கை முதல் அனைத்தும் இராணுவ ஆளுனர்களுக்கு சமமானவர்களால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக, சுனாமி அழிவைப் பற்றி கலந்துரையாடுவதற்காக குமாரதுங்க ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்தினார். ஆனால் தனது திட்டத்தைப் பற்றி அங்கு சமூகமளித்திருந்த அரசியல்வாதிகளுக்கு அவர் சமிக்ஞை செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர எந்தவொரு கட்சியும் எதிர்க்கவில்லை. வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியின் "நாட்டை மீளக் கட்டியெழுப்பும்" திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் பிரகடனம் செய்தது.

சாதாரண மக்கள் ஏன் இராணுவத்தை நன்கொடையாளர்களாக கருதவேண்டும் என்பதற்கு காரணம் கிடையாது. இராணுவம் தீவின் வடக்கு கிழக்கில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை இலக்காகக் கொண்ட 20 வருட கால யுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. 2002ல் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்படும் வரை, பாதுகாப்பபு படையினரால் தமிழர்கள் கைதுசெய்யப்படுவது வழமையாக இருந்ததோடு ஆயிரக்கணக்கானவர்கள் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், சில நேரங்களில் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இராணுவம் 1980 களின் பிற்பகுதியில் தென்பகுதியில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கிளர்ச்சியை மூர்க்கத்தனமாக அடக்கியது. ஒரு மதிப்பீட்டின்படி இராணுவத்தாலும் மற்றும் அதோடு சேர்ந்த கொலைகாரக் கும்பல்களாலும் 100,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் இந்த நடவடிக்கையானது, ஜே.வி.பி க்கு எதிராக மட்டுமன்றி வேலையின்மை மற்றும் வறுமையின் காரணமாக நிலவிய அமைதியின்மைக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

இராணுவத்தை பொறுப்பில் இருத்தும் தீர்மானத்திற்கு எதிராக ஏற்கனவே பல தொண்டர் உதவி அமைப்புக்கள் கண்டனம் செய்துள்ளன. இதற்கு பிரதிபலித்த குமாரதுங்க, அகதி முகாங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் மட்டும் இராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்படுவர் என அறிவித்தார். ஆயினும் யதார்த்தத்தில், உயர்மட்ட அதிகாரிகள் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பொதுமக்கள் நிர்வாகம் சம்பந்தமாக பலம்வாய்ந்த பாத்திரத்தை தொடர்ந்தும் இட்டுநிரப்புவார்கள்.

நிவாரண நடவடிக்கைகளை இராணுவம் பொறுப்பேற்பது "பாதுகாப்பை" உறுதிப்படுத்துவதற்கு தேவையானதே என அரசாங்கமும் ஊடகங்களும் நியாயப்படுத்த முயற்சிக்கின்றன. சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒரு தொகை அறிக்கைகள் கொழும்பு ஊடகங்களில் அம்பலமாகியிருந்தன. எவ்வாறெனினும், யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் அகதி முகாங்கள் 20 வருடங்களாக இருந்து வந்தாலும் கூட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதல் தடவையாகும்.

இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்புத் துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ், இந்த தீர்மானத்தை "எல்லாமே தற்காலிகமானது" என விவரித்துள்ளார். அகதி முகாம் ஒன்றில் ஒரு சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது பற்றி "கொழும்பில் ஒரு உயர்மட்ட மாநாட்டில்" கலந்துரையாடப்பட்டு வருகிறது, மற்றும் "பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது அத்தியாவசியமானது என உடனடியாக முடிவெடுக்கப்பட்டது," என அவர் எழுதுகிறார்.

உண்மையான உள்நோக்கம், சமூக அமைதியின்மை பற்றி அதிகார மட்டத்திலுள்ள பீதியேயாகும். இந்தப் பேரழிவில் 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். முதல் இரு நாட்களும், ஆயுதப் படைகள் உட்பட முழு நிர்வாக இயந்திரமும் முற்றிலும் செயலிழந்து போய் இருந்தது. சாதாரண உழைக்கும் மக்களின் நடவடிக்கைகளும் உதவிகளும் இன்றேல் உயிர்தப்பியவர்களில் பலர் உயிரிழந்திருப்பர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களும், அதேபோல் ஏனைய பத்திரிகையாளர்களும் மட்டுப்படுத்தப்பட்ட உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளுடன் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் மக்களின் உணர்வுகள் ஆரம்ப அதிர்ச்சியின் பின்னர் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளதை கண்டனர். அரசாங்கத்தின் திருப்தியற்ற நடவடிக்கைகளும் உத்தியோகபூர்வ நிவாரண நடவடிக்கைகளின் தாறுமாறான நிலமையும் கசப்பான விமர்சனங்களைத் தூண்டிவிட்டுள்ளன. எந்தவொரு ஸ்தாபனக் கட்சியும் வருகைதரவில்லை அல்லது அக்கறை செலுத்தவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இராணுவத்தை பொறுப்பில் இருத்துவதன் மூலம், எந்தவொரு கிளர்ச்சியையும் தவிர்ப்பதாகும்.

அரசியல் பதட்டநிலைமைகள்

இந்த கூர்மையான சமூக மற்றும் அரசியல் பதட்டநிலைமைகள் வெறுமனே புதிய பேரழிவின் உற்பத்தியல்ல. முன்னைய ஐ.தே.மு அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டு சமாதானப் பேச்சுக்களுக்கு செல்ல எடுத்த தீர்மானம், ஆளும் வட்டாரங்களுக்கிடையில் ஒரு நீண்டகால நெருக்கடியை உக்கிரப்படுத்தியுள்ளது. வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் தட்டினர், யுத்தத்தை நிறுத்தவும் பொருளாதார குழப்பங்களை தவிர்க்கவும் விடுதலைப் புலிகளுடனான அதிராகாரப் பரவலாக்கல் ஒழுங்கு தேவை என விவாதித்தனர்.

விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்திக்கொள்ளும் அதேவேளை, பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களையும் அமுல்படுத்தும் எதிர்பார்ப்புடன் ஐ.தே.மு பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் "சமாதான முன்னெடுப்புக்களை" ஆரம்பித்தது. அப்போது எதிர்க் கட்சியாக இருந்த பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவரான குமாரதுங்க, ஜே.வி.பி உடனும் இராணுவ உயர்மட்டத்தினருடனும் சேர்ந்து, சமாதான பேச்சுக்கள் நாட்டை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என கண்டனம் செய்தார். அட்மிரால் தயா சந்தகிரி விடுதலைப் புலிகளுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளை கீழறுத்த ஒருதொகை இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கு கருவியாகப் பயன்பட்டார்.

வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கான விடுதலைப் புலிகளின் பிரேரணையை அது வெளியிட்டதை அடுத்து, நவம்பர் 2003ல் விவகாரங்கள் உச்ச நிலையை அடைந்தன. அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாக பிரகடனம் செய்த ஜனாதிபதி, மூன்று முக்கிய அமைச்சுக்களின் பொறுப்பக்களையும் அபகரித்துக்கொண்டதுடன் அவசரகால நிலைமையையும் அறிவித்தார். அவர் வாஷிங்டனதும் மற்றும் புது டில்லியினதும் நெருக்குவாரங்களின் கீழ் பின்வாங்கத் தள்ளப்பட்ட போதிலும், கொழும்பில் மூன்று மாத கால அரசியல் செயலின்மையை அடுத்து ஒருதலைப்பட்சமாக அரசாங்கத்தைப் பதவி விலக்கியதுடன் புதிய தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜே.வி.பி உடன் சேர்ந்து குமாரதுங்க ஸ்தாபித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியின் பொருளாதார நடவடிக்கைகள் மீதான பரந்த மக்களின் அதிருப்திக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் 2004 ஏப்பிரல் தேர்தலில் சற்றே வெற்றிபெற்றது. அந்தத் தேர்தல் ஒரு ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்தை பெறுபேறாக்கியதுடன் அடிப்படை பிரச்சினைகள் எதையும் தீர்க்கவில்லை. விடுதலைப் புலிகளின் இடைக்கால நிர்வாகசபை பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்தால் விலகிக்கொள்ளப் போவதாக ஜே.வி.பி அச்சுறுத்தி வருகின்ற நிலையில், சுதந்திர முன்னணி சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அதனது சொந்த முயற்சிகள் சம்பந்தமாக ஆழமாக பிளவுண்டுள்ளது. அதே சமயம், அதன் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வாழ்க்கை தரத்திலான தொடர்ச்சியான வீழ்ச்சியையிட்டு அரசாங்கத்திற்கெதிரான பகைமை வளர்ச்சி கண்டுவருகின்றது.

டிசம்பர் 26 பேரழிவு இந்த பதட்ட நிலைமைகள் அதிகரிக்க சேவையாற்றியுள்ளது. அரசாங்கத்தின் செயலின்மையானது ஆளும் வர்க்கம் அது முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள இலாயக்கற்றுள்ளதற்கான அறிகுறியேயாகும். நவம்பர் 2003 சம்பவங்கள் சுட்டிக்காட்டுவது போல், ஆளும் கும்பலின் சில தட்டுக்கள் சர்வாதிகார முறையிலான ஆட்சி நோக்கி நகர முயற்சிக்கின்றன.

"செயல்திறம் மிக்க மனிதர்கள்"

ஐலன்ட் பத்திரிகை இந்தப் பதத்தை தொடர்ச்சியாக வலியிறுத்தியது: ஜனநாயக விரோத வழிமுறைகளை பயன்படுத்துவதை நியாயப்படுத்துவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மீதான வெகுஜன எதிர்ப்புக்கு அது அழைப்பு விடுத்தது. நிவாரணப் பணிகளை இராணுவத்திடம் கையளிக்கும் குமாரதுங்கவின் தீர்மானத்தை அது பாராட்டுவது ஆச்சரியத்திற்குரியதல்ல.

ஜனவரி 5 அன்று "தேவை: செயல்திறம் மிக்க மனிதர்களே, கட்சி விசுவாசிகளும் நெருங்கிய நண்பர்களுமல்ல" எனத் தலைப்பிடப்பட்டிருந்த அதன் ஆசிரியர் தலையங்கத்தில், இந்த செய்திப் பத்திரிகை பேரிழிவையிட்டு அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகளையும் மற்றும் அவர்கள் உடனடி தேவைகளை வழங்கத் தவறியதையிட்டும் கடுமையாகக் கண்டித்திருந்தது. "இத்தகைய ஒரு பேரழிவை நிர்வகிக்கும் நடவடிக்கைகளை பொறுப்பேற்க, அனுபவங்கள் நிறைந்த இராணுவ அதிகாரிகளே சிறந்தவர்கள் என நாங்கள் ஆலோசனை கூறி வந்துள்ளோம். சிவப்பு நாடாக்களை வெட்டியெறியவும் மற்றும் செல்லும் பாதையை புல்டோசரில் துப்புரவு செய்யவும், அந்த வழியில் நிற்கும் எந்தவொரு மீறமுடியாத புட்டத்தை உதைத்துத் தள்ளும் இயலுமை அவர்களுக்கு இருக்க வேண்டும்," என அது நிறைவு செய்கின்றது.

கிழக்கு மற்றும் வடக்கில் இனவாத பதட்டநிலைமைகளை தூண்டி விடுவதையும் கணக்கில் கொண்டே நிவாரண நடவடிக்கைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் உள்ள சாதாரண மக்கள் மொழி, மத அல்லது இன பின்னணிகளைக் கருதாமல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக உடனடியாக செயலாற்றியுள்ளார்கள். ஆயினும், இராணுவத்தினர் சிங்களப் பேரினவாதத்தில் தோய்ந்துபோயுள்ளதோடு இராணுவ உயர்மட்டத்தினரில் குறிப்பிடத்தக்க தட்டினர் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கல்களையும் எதிர்க்கின்றனர்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து, கிழக்கை அடித்தளமாகக் கொண்டு தனது எதிரிகளுடன் மோதலில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகளில் இருந்து பிளவடைந்து சென்ற ஒரு கும்பலுடன் இராணுவப் புலனாய்வுத் துறை கூட்டாக செயற்பட்டுவந்தது. இந்த நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான நகர்வுகளை கீழறுத்துள்ளதோடு நடப்பில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறிவின் விளிம்புக்கே இட்டுச் சென்றது.

நிவாரண நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உராய்வுகள் பற்றிய செய்திகள் இப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் பலாத்காரமாக இளைஞர்களை இயக்கத்தில் சேர்ப்பதாக குற்றம் சாட்டிய இராணுவம், நிவாரண முகாங்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (த.பு.க) நடவடிக்கைகளுக்கு தொந்தரவு செய்து வருகின்றது. "விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் நிவாரணப் பொருட்கள் அடங்கிய இரு த.பு.க ட்றக்டர்களை கைப்பற்றி த.பு.க விவரச் சீட்டுக்களை அகற்றிய பின் அவர்களாகவே விநியோகித்ததாக" கடந்த வாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாக அதிகாரி கே.பி. ரெஜி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

குமாரதுங்கவின் புதிய தீர்மானம், ஜனநாக உரிமைகளை நசுக்கும் மற்றும் வடக்கு கிழக்கில் ஆயுத மோதலை துரிதப்படுத்தும் ஆற்றல் மிக்க ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். வாழ்க்கையில் பேராபத்தை எதிர்கொண்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சாதாரண மக்களின் அவலங்களுக்கு அவரது கடைசி வாக்குறுதி இதுவேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved