World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Marxism, the International Committee, and the science of perspective: an historical analysis of the crisis of American imperialism

மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு

பகுதி 3

By David North
13 January 2005

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் குழு, மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் கடந்த 8-9 ஜனவரி வார இறுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் இதன் ஆரம்ப உரையை வழங்கினார். இந்த அறிக்கை மூன்று பகுதிகளாக வெளியிடப்படும். தமிழில் முதல் பகுதி ஜனவரி 15 அன்றும், இரண்டாம் பகுதி ஜனவரி 18 அன்றும் பிரசுரிக்கப்பட்டது. மூன்றாம் பகுதியை கீழே காணலாம்.

ஆகஸ்ட் 1988ல் ஏற்கப்பட்டிருந்த முன்னோக்குகள் பற்றிய தீர்மானத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), வெளிப்படவிருக்கும் ஒரு புரட்சிகர நெருக்கடியின் முக்கியமான கூறுபாடுகளை அடையாளம் கண்டது:

1) உலகச் சந்தை மற்றும் உற்பத்திமுறையின் பூகோளம்தழுவிய ஒருங்கிணைப்பு என்பது வரலாற்றளவில் முன்னர் என்றுமிருந்திராத தன்மையைக் கொண்டுள்ளது; இதன் அமைப்புரீதியான வெளிப்பாடாகத்தான் நாடுகடந்த நிறுவனம் இருந்தன. இந்த பூகோள நிகழ்ச்சிப்போக்கு உலகப் பொருளாதாரத்திற்கும், தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

2) தன்னுடைய பூகோளரீதியான பொருளாதார மேலாதிக்கத்தை அமெரிக்கா இழத்தல்: இது அமெரிக்கா ஒரு கடன் கொடுக்கும் நாடு என்பதில் இருந்து கடன்வாங்கும் நாடு என்ற முக்கியமான வெளிப்பாட்டைக் கண்ட ஒரு வரலாற்று மாற்றம் ஆகும். அமெரிக்காவின் செங்குத்தான பொருளாதார சரிவுதான் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதிகளிடையே வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மோசமடைவிற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

3) ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான மோதல், ஜப்பானும் ஐரோப்பாவும் நேரடியாகவே உலகச் சந்தையில் அமெரிக்காவிற்கு சவால் விட்டுள்ள நிலையில் தீவிரமடைந்துள்ளது.

4) ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதாரங்களின் விரைவான வளர்ச்சி, முற்றிலும் புதிய வகையில் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்திற்கு ஏராளமானவர்கள் இணைத்ததைக் குறித்தது. இதேபோன்ற போக்குகள்தாம் ஆபிரிக்காவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் உருவாயின. உலகப் பார்வையில், தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார, சமூக சக்தியின் மகத்தான வலிமையை இது குறிக்கிறது.

5) "மூன்றாம் உலகம்" என்று அழைக்கப்படுவதின் பெரும் பகுதி தொடர்ந்து ஏழ்மை நிலையில் இருப்பதும், அந்த நாடுகளில் தேசிய முதலாளித்துவத்தின் எண்ணற்ற "வளர்ச்சிக்கான" மூலோபாயங்களின் அப்பட்டமான தோல்வியும் .

6) சோவியத் சோசலிச குடியரசு, கிழக்கு ஐரோப்பா, சீனா ஆகியவற்றில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அனைத்து தேசியப் பிரிவுகளும், முதலாளித்துவ மீட்சிக் கொள்கைகளுக்கு மாற்றம் பெற்ற தன்மையினால் விளைந்துள்ள, இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் ஒழுங்கு முறையின் உறுதியற்ற தன்மை.

இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு புதிய உலக முன்னோக்கை விரிவாக்குவதற்கு, 1988ல் விரிவாக்கம் செய்யப்பட்ட முன்னோக்கை தக்க முறையில் மதிப்பீடு செய்தல் மிகவும் தேவையானதாகும். முதலில் ஒரு முன்னோக்கு என்பது உறுதிமொழியளிக்கும் கடன் பத்திரம் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். அது எவ்வாறு வரவிருப்பவை இருக்கக்கூடும் என்பதின் முன்கூறல்கள் என்பதோடு, ட்ரொட்ஸ்கி குறிப்பட்டுள்ளதுபோல் முற்கூறல்கள் எவ்வளவிற்கு உறுதியானதாக இருக்கின்றனவோ அந்தளவிற்கு நிபந்தனைக்குரியவையும் கூட.

ஒரு பழமொழி கூறுவது போல், விஷேடமாக வருங்காலத்தைப் பற்றி முற்கூட்டி கணிப்புக்களை தெரிவித்தல் மிகவும் கடினமானதாகும். சிறிதும் பிழையற்ற முறையில் வருங்காலத்தைப் பற்றி அறிய விரும்புவோர் அருகில் உள்ள குறி சொல்லுவோரிடம்தான் அனுப்பப்பட வேண்டியவர்கள் ஆவர்.

ஆயினும்கூட, இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர், 1988 இன் பகுப்பாய்வு உறுதியாக நிலைத்திருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன். 1988ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ள உலக நெருக்கடியின் அடிப்படைக் கூறுபாடுகளில் கடைசிக் கூறுபாட்டுடன் நான் தொடங்குவேன்: அதாவது, ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள், சந்தைசார்பான கொள்கைகளுக்கு மாறியதால் ஏற்பட்ட விளைவானது, எவ்வாறு உறுதியற்ற தனமையையும், புரட்சிகரமான விளைவுகளையும் நாங்கள் எதிர்பார்த்தது போல் கொண்டிருந்தது என்பதே அது. 1988ம் ஆண்டு தீர்மானத்தின் முன்னோக்குகளில் நாங்கள் விடுத்திருந்த எச்சரிக்கைகள் பற்றிக் குறிப்பிட (அக்காலக்கட்டத்தின் மற்றைய ஆவணங்களில் இருந்த முன்னோக்குகளையும்கூட) எனக்கு அனுமதி கொடுங்கள்; கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை), பெரஸ்துரோய்கா (மறுசீரமைப்பு) என்ற பதாகையின் கீழ் கோர்ப்பச்சேவினால் பின்தொடரப்பட்ட கொள்கைகள் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகர கொள்கைகளின் உச்சக் கட்டத்தை பிரதிபலித்தன; இவை கடைசிச் சோவியத் தலைவர் பப்லோவாத தத்துவார்த்தவாதிகளிடம் இருந்து பெற்ற உற்சாகமான ஆதரவிற்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தன.

1953ம் ஆண்டில் மிசேல் பப்லோவிற்கு மிக நெருங்கிய சக சிந்தனையாளராக இருந்த ஏர்னஸ்ட் மண்டேல், பின்னர் திரித்தல்வாதத்தின் முக்கிய தத்துவாசிரியராக இருந்து, கோர்ப்பச்சேவை உலகத்திலேயே மிகச்சிறந்த அரசியல்வாதியென புகழ்ந்து, இவருடைய கொள்கைகள் முதலாளித்துவத்தை மீட்கும் இலக்கைக் கொண்டவை என்ற கூற்றை "அபத்தமானவை" என்று கண்டித்தார். மண்டேலின் ஆசி பெற்றிருந்த சீடர், தாரிக் அலி, தான் எழுதிய புத்தகம் ஒன்றை போரிஸ் யெல்ட்சினுக்கு சமர்ப்பணம் செய்யும் அளவிற்குச் சென்றார். இந்த திரித்தல்வாதிகளுடைய குறும்பார்வையான கோர்ப்பச்சேவின் கொள்கைகளின் விளைவுகள் பற்றிய அவர்களுடைய மதிப்பீடுகள், மிகவும் தொலை நோக்குடைய தன்மையில் சர்வதேச முதாலாளித்துவத்தினரால்கூட செய்யப்படவில்லை என்ற குறிப்புடன் ஒருவேளை மன்னிக்கப்பட்டு விடலாம். இவர்கள் அனைவருமே பின்னர் தாங்கள் ஸ்ராலினிச ஆட்சிகள் கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ஒன்றியத்திலும் திடீரென சரிந்தது பற்றி முற்றிலும் வியப்படைந்ததாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் செய்யப்பட்ட ஸ்ராலினிச ஆட்சிகளின் நெருக்கடி பற்றிய பகுப்பாய்வை மீள்பார்வை செய்யும்போது, 1989-91 பெரும் மாறுதல்களை இது முன்கூட்டி கருத்திற்கொண்டு தெரிவித்தது என்பது பற்றி, மறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திற்கு சிறிதும் இடமில்லாமல் கூறவியலும்; இதில் சீனாவில் மாணவர்களும், தொழிலாளர்களும் நிகழ்த்திய மகத்தான எழுச்சி, தியனான்மென் சதுக்கப் படுகொலைகளில் முடிவுற்றதும் அடங்கும். ஆனால் ஸ்ராலினிச ஆட்சிகளின் நெருக்கடி பற்றிய உடனடி அரசியல் விளைவு பற்றித்தான் கணித்துக் கூறவியலவில்லை. இந்த நெருக்கடியின் போக்கின்போது, பல தசாப்தங்களாக இருந்த ஸ்ராலினிச அடக்கு முறை, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கம், அறிவுஜீவுகள் மத்தியில் நிலவிய சோசலிசப் போக்குகளுக்கு எதிராக ஏவிவிடப்பட்டமை, மக்களுடைய உணர்மையில் ஆழ்ந்த வடுக்களை விட்டுச் சென்றிருந்தது. அதிகாரத்துவத்தினரின் ஊக்கத்துடன் கிழக்கு ஐரோப்பாவிலும், பின்னர் சோவியத் ஒன்றியத்திலும் நிகழ்ந்த பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முதலாளித்துவ வழியில் இயக்கப்பட்டன. இவ்வாறு ஸ்ராலினிச எதிர்ப்பு எழுச்சிகளின் ஆரம்ப விளைவு மீள ஒப்படைப்பு ஆட்சிகளை நிறுவியதாகும்.

ஆனால் பரந்த வரலாற்று மாறுதல்கள் 1989ல் இருந்து 1991 வரை நடைபெற்றவற்றில் இருந்து குறிப்பாக ஆராய்ந்தோமானால், நா.அ.அ.குழுவால் முன்னெடுக்கப்பட்ட முன்நோக்கு பிழையாகிப் போய்விடவில்லை. இறுதிப்பகுப்பாய்வில், கிழக்கு ஐராப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆட்சிகள் திடீரென்று சிதைந்து போவதற்கு, எவை வழிவகுத்தன? உலகப் பொருளாதார நெருக்கடி பற்றிய தன்னுடைய பகுப்பாய்வில் அனைத்துலகக் குழு அடையாளம் காட்டியிருந்த, மிக விரைவான பொருளாதார பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்கு இயைந்துபோகாததனைத்தான் விந்தையான புதிர் முறையில் இந்த ஆட்சிகள் நிரூபித்தன. கிழக்கு ஐரோப்பிய, மற்றும் சோவியத் ஒன்றியப் பொருளாதாரங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தவை என்பதனால் அல்லாமல், சர்வாதிகார முறையிலான தேசியத்தன்னிறைவு அவற்றின் சிக்கல் வாய்ந்த தன்மையைப் பெருக்கியதாலேயே அவை தொடர்ந்து இயங்கமுடியாமல் போயின. தேவைகளின் அழுத்தத்தின் கீழ் இன்னும் கூடுதலான முறையில் இப்பொருளாதாரங்கள், வணிக விரிவாக்கல், சர்வதேச முதலீட்டை ஊக்குதல், கடன்களை நாடுதல் இவற்றின் மூலம் உலகச் சந்தையின் இருப்புக்களுடன் தொடர்பு காண முற்பட்டதால், தாங்கள் தயாரற்ற தன்மையில் இருந்ததின் விளைவாக, அவை செயற்கையான முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்த தங்களுடைய தேசிய நிறுவன அமைப்புகளின் நலன்களை இரக்கமற்ற உலகப் பொருளாதார அழுத்தங்களுக்கு திறந்துவிடவேண்டியதாகப் போயிற்று.

கோர்ப்பச்சேவின் சந்தை சார்பு கொள்கைகளுக்கு சோவியத் தொழிலாள வர்க்கம், ஆரம்பத்தில் காட்டிய பதில்கள் வரிசைக்கிரமமான, மிகுந்த போர்க்குணமான வேலைநிறுத்தங்கள் ஆகும்; குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் ஆகும். தொழிலாள வர்க்கத்தால் இடதுபுறம் இயக்கம் செல்வதை கண்டு அஞ்சிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர், தங்களுடைய சிதைந்த ஆட்சிகள் பொறிவது முதலாளித்துவ சார்பு சக்திகளின் கையில் அதிகாரத்தை பொறுப்பேற்கவைக்க உத்தரவாதம் செய்யும் அனைத்தையும் செய்தனர். இதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். ஆனால் இந்தப் பெரும் மாறுதல்களின் அரசியல் விளைவு, தங்களுடைய பொருளாதார அத்திவாரம் பூகோளமயமாக்கலால் தொடங்கிவைக்கப்பட்ட வெடிக்கும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்தது என்ற உண்மையை மாற்றவில்லை.

அரசியல் வடிவம் பற்றிய பிரச்சினை முக்கியத்துவம் பெறாமல் போய்விடவில்லை. ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிடவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் முதலாளித்துவ மீட்சி உலக அரசியலின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தது; 1990 களின் மற்றும், இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் உலகப் பொருளாதாரத்திலும் இது இருந்தது என சேர்த்துக்கொள்ளலாம். முதலாளித்துவ மீட்சியின் அளவை நன்கு அறிந்துகொள்ளுவதற்கு, கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் அரசியல் புரட்சிகளின் உச்சக்கட்டமாக ஜனநாயக மற்றும் சோசலிச தொழிலாள வர்க்க ஆட்சிகள் என்பன அமைந்திருந்தால், இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வியாகும். குறைந்த பட்சமாக, 1990 களில் வோல்ஸ்ரீட்டிலும் உலகத்தின் மற்ற பங்குச் சந்தைகளிலும் ஏற்பட்டிருந்த பெரும் ஊக ஆர்வ வளர்ச்சி பங்குகளின் மதிப்பை பெரிதும் உயர்த்திய நிலையை, நாம் கண்ணுற்றதுபோல், நடந்திருக்குமா என்பதைப் பற்றி, நான் மிகவும் சந்தேகிக்கிறேன். சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, தற்காலிகமாகவேனும், அமெரிக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் தன்னம்பிக்கையைப் பெரிதும் பெருக்கியுள்ளது என்பதில் ஐயம் இல்லை. அதிலும் குறிப்பாக, சோவியத் ஒன்றியத்தின் பொறிவு தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்த அமெரிக்காவிற்குப் பரந்த புதிய வாய்ப்புக்களைத் திறந்து விட்டன.

ஆனால், 1988 ஆவணத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியின் ஏனைய கூறுபாடுகளின் கட்டமைப்பிற்குள் அமெரிக்காவின் நிலை மற்றும் உலக முதலாளித்துவத்தின் நிலைப்பாடு ஆகியவை நம்மால் பரிசீலிக்கப்பட்டால், இன்னும் பரந்த முறையில் பிரெட்டன் வூட்ஸ் உடன்பாட்டிற்குப் பிந்தைய உள்ளடக்கத்தில் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டால், இன்னும் உண்மையான தோற்றத்தைக் காணமுடியும். நெருக்கடியின் பல கூறுபாடுகள் பற்றி 1988 ஆவணம் அடையாளம் சுட்டிக் காட்டியவை அனைத்தும் 2005லும் தொடர்கின்றன. உண்மையில் அவை கூடுதலான, ஆழ்ந்த, ஆபத்தான தன்மையை பெற்றுள்ளன என்றுதான் கூறுவேண்டும்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், சோவியத் ஒன்றியத்தின் பொறிவு உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த சீர்கேடுகளைக் குணப்படுத்தவில்லை என்பதும் அதன் வளர்ச்சிக்கான புதிய வகைகளை ஏற்படுத்தவில்லை என்பதும் நன்கு புலனாகும். மாறாக, அதனுடைய இயல்பான அழிவுதரும் போக்குகள் விரிவடைவதற்கு புதிய பகுதிகளையே இது திறந்துவிட்டுள்ளது. சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர், கடந்த பதினைந்து ஆண்டுகள், முரண்பாடுகள் குறைவதற்குப் பதிலாக, பொருளாதார பூகோளமயமாதலின் தடைசெய்யமுடியாத நிகழ்ச்சிப்போக்கிற்கும் பழைய தேசிய-அரசு முறையின் அசையாத் தன்மை படைத்த கடமைப்பாடுகளுக்கும் இடையேயான, முரண்பாடுகள் மிகப் பயங்கரமானமுறையில் தீவிரப்பட்டுள்ளதைத்தான் பார்த்திருக்கிறது. பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையில் வரலாற்றுரீதியான மோதல்களைப் பொறுத்தவரையில், இவை சோவியத் ஒன்றியத்தின் பொறிவினால் முன்னிலும் பெருகி உள்ளன; சோவியத் ஒன்றியம் இருந்ததே, இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்தில் இருந்து முதலாளித்துவ அரசுகள் தங்களிடையே மோதிக் கொள்ளும் போக்கைத் தடுத்து நிறுத்தியிருந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகள், இன்னும் கூடுதலான முறையில் ஆசிய தொழிலாள வர்க்கம் அளவிலும், சக்தியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதையும் கண்ணுற்று வருகிறது.

1988 ஆவணம் அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவு பற்றியும் அதன் விளைவாக அதன் மேலாதிக்கத் தன்மையை இழந்துவருவது பற்றியும் அதிகமாக வலியுறுத்தியிருந்தது. இந்த நிகழ்ச்சிப்போக்கு கடந்த 17 ஆண்டுகளில் மாறிப் பின்புறம் சென்றுவிடவில்லை; அத்தகைய பின் மாற்றத்திற்காக அமெரிக்கா இராணுவ சக்தியைப் பயன்படுத்திக் கொண்டுவரவேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும் மாறுதல் வந்துவிடவில்லை. உண்மையில், தனது பூகோள இலக்குகளை அடைவதற்கு இன்னும் பெருகிய வகையில் வன்முறை மீது தங்கி இருப்பது, பொருளாதரா அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை மட்டும் சுட்டிக் காட்டாமல், அமெரிக்காவில் உள்ள பணப்பைத்தியம் பிடித்த ஆளும் செல்வந்தத்தட்டிற்குள்ளே இருக்கும் ஆழ்ந்த நோக்குநிலை தவறல் நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

என்னுடைய அறிக்கையில் முன்னரே பிரெட்டன் வூட்ஸ் முறை உடைந்தமை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவத்தின் விதியில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை என்று நான் விளக்கியிருந்தேன். டாலர் தங்கமாக மாற்றப்படாலாம் என்றிருந்த முறை முடிவடைந்தது, அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோளப் பொருளாதார சக்தியின் மட்டுப்பாடுகளை புலப்படுத்தி, ஒரு நீண்டகால பொருளாதாரச் சரிவின் நிகழ்ச்சிப்போக்கை தொடங்கியது. அமெரிக்க இராணுவத் திறனின் சக்தியை விட, அதன் பற்றாக்குறைகள், கடன்கள் நிறைந்துள்ள, தற்போதைய அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலை பற்றி ஆய்ந்தால், ஆகஸ்ட் 1971ல் பிரெட்டன் வூட்ஸ் முறையின் பொறிவின்போது ஏற்பட்ட நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்போது மிக அதிகமான நிலையில் நெருக்கடி உள்ளது என்பது தெளிவாகத் தெரியும்.

அமெரிக்கச் சரிவின் புறநிலைப் பொருளாதாரக் குறியீடுகள்

கடந்த ஆண்டில், சர்வதேச நிதிய வட்டங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய பெருகிய கவலைகள் வெளிப்பட்டுள்ளன; அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நிகர சர்வதேச முதலீட்டு நிலை (Net International Investment Position NIIP), மற்றும் அதன் தற்போதைய நிகரக் கணக்கு பற்றாக்குறைகள், இந்தப் பற்றாக்குறைகளின் தாக்கம் அமெரிக்க டாலரின் மதிப்பில் எந்த அளவிற்கு இருக்கும் என்பது போன்ற கவலைகள் வந்துள்ளன. இந்தப் பற்றாக்குறைகள் பற்றியும், டாலரின் சரிவு பற்றியும் காட்டப்படும் உள்ளார்ந்த அக்கறை இவை அமெரிக்கப் பிரச்சினைகள் என்று மட்டும் கருதப்படவில்லை என்பதை அறியப்படுத்துகின்றன. இவை உலகப் பிரச்சினைகள் ஆகும்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த பின்னரும், பிரெட்டன் வூட்ஸ் முறைக்கு தக்க உறுதியான மாற்று முறையை உலக முதலாளித்துவத்தினால் காண இயலவில்லை. தற்போதுள்ள மிதக்கும் விகிதங்கள் தற்காலிகத் தன்மையுடைய உடன்பாடுகள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; இவை எப்பொழுதும் உலக நாணய மாற்றுமுறையில் பெரும் சூறாவளிக்கு உட்பட்டுவிடும் தன்மையைக் கொண்டவை ஆகும். 1971க்கு முன்பு, அமெரிக்க டாலர் உலக நிதிய ஸ்திரத்தன்மைக்கு உறுதியளித்திருந்தது. அதன் பின்னர், உலக நிதிய ஸ்திரமின்மைக்கு அது முக்கிய கருவியாகப் போயிருக்கிறது. இந்த ஆபத்தான நிலைமை, உலக நாணய சந்தையில் தொடர்ந்த ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்கூட, உலகின் முக்கிய இருப்பு நாணயமாக அது உள்ளது என்ற உண்மையில் இருந்து இந்த ஆபத்தான நிலை எழுகின்றது. இந்த உண்மையைத் தொடர்ந்து சில கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, பணச் சீர்குலைவுகளின் இறுதி முக்கியத்துவம் என்னவென்றால், தேசிய அரசின் தொடர்ச்சியான இருப்பால் சிதைக்கப்படும் உலகப் பொருளாதாரத்திற்குள்ளேயான அடிப்படை சமநிலைச் சீர்குலைவை அவை வெளிப்படுத்துகின்றன என்பதுதான். உலகப் பொருளாதாரத்தின் அறிவார்ந்த பொருளாதார ஒழுங்கமைத்தல், எங்கும் மதிப்புள்ள, உறுதியான ஓர் ஒற்றை உலக நாணயத்தினால் பெரிதும் ஊக்குவிக்கப்படும். இது 1940களிலேயே முதலாளித்துவத்தின் பெருந் தொலைநோக்குடைய பிரதிநிதிகளால் உணரப்பட்டது. ஓர் உலக நாணயம் நிறுவப்பட வேண்டும் என்ற சிந்தையை பிராங்கிளின் டிலானோ ரூஸ்வெல்ட் கொண்டிருந்தார்: அதையொட்டி அவர் unitas என்று அது அழைக்கப்படலாம் என்றும் அவருடைய சோசலிசச் சார்புடைய பொருளாதார ஆலோசகர் Harry Dexter White ஐ அதை அடையும் வகையில் திட்டம் தீட்டச் சொன்னார். ஆனால், எப்பொழுதும் நடைமுறையின் உண்மையை நன்கு அறிந்திருந்த ரூஸ்வெல்ட் இந்த உள்ளுணர்வின் அடிப்படையில் அமைந்த சமுதாயத்திற்கான அரிய பொதுநலச் செயல் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுடன் பொருந்தா தன்மையுடையது என்பதைப் புரிந்து கொண்டார். எனவே இந்தத் திட்டம் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. குறிப்பாக அதேநேரத்தில் பிரிட்டிஷ் பொருளாதார மேதையான ஜோன் மேனார்ட் கீன்ஸ் (John Maynard Keynes), bancor என்று தான் பெயரிட்டிருந்த, உலக நாணயத்திற்காக தன்னுடைய திட்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்காவின் ஆதரவு இல்லாததால் பிரிட்டிஷார் கூறுவது போல் இது "பந்தயத்தில் தொடக்கத்திலேயே பங்கு பெறாமல் போய்விட்டது." முதலாளித்துவத்தின்கீழ், ஒரு தேசிய நாணயம் என்பது எந்த நாட்டில் இருந்து வெளிவருகிறதோ, அந்த நாட்டு முதலாளித்துவத்தின் தூதராகச் செயலாற்றுகின்றது. நாட்டின் நாணயம் ஒரு பிரதிநிதித்துவ தன்மையைக் கொண்டிருப்பதால், ஒரு தேசிய நிதியக் கொள்கை அதன் மேம்பாட்டிற்காக உலகப் பொருளாதாரத்தின் இசைவுடன் கூடுமேயாயின், அது வரவேற்கத்தக்கது; ஆனால் இறுதிப்பகுப்பாய்வில் உலகப் பொருளாதார நலனுக்காக, நாட்டின் நாணய முறை அடகு வைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் ஏற்கப்பட்டிருந்த கருத்தாகும்.

இரண்டாவதாக, 1947ம் ஆண்டில் இருந்து, உலகின் முக்கிய இருப்பு நாணயம் என்னும் முறையில் டாலர் இருப்பதால், அந்த வகையில் கிடைக்கும் சிறப்புச் சலுகையினால், அமெரிக்கா மகத்தான நலன்களை அனுபவித்துள்ளது, அனுபவித்தும் வருகிறது. எந்த அளவிற்கு டாலர் சர்வதேச நிதிச் செயற்பாடுகளில் ஊடகக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளினால் விருப்பத்துடன் குவிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அமெரிக்கா, மற்ற நாடுகள் மீது சுமத்தப்பெறும் நிதிய, வரவு செலவுத் திட்ட தடைகளில் இருந்து சுதந்திரமாக இருக்கிறது. வேறு எந்த நாட்டினாலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நடப்புக் கணக்குகளில் மிக அதிக முறையில் பற்றாக்குறைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவிற்கும் கூட பற்றாக்குறையின் அளவு ஒரு பெரும் கவலையைத் தந்து, எச்சரிக்கை ஊட்டும் விதத்திலும் உயர்ந்துள்ளது. ஓரிடத்தில் ஒரு டிரில்லியன் டாலர் கடனும், வேறு ஓரிடத்தில் ஒரு டிரில்லியன் கடன் என்றும், திடீரென்று பழமொழி கூறுவதுபோல் உண்மையான பணம் பற்றி ஒருவர் பேசக்கூடும். அந்த நிலையில் மத்திய வங்கிகள் கூட பயத்தில் வேர்த்து விறுவிறுத்து, தங்களுடைய பாதுகாப்பறைகளில் குவிந்திருக்கும் டாலர்களின் மதிப்பைப் பற்றிக் கவலையுற்று தூங்கா இரவுகளைக் கழிப்பர்.

மூன்றாவதாக, இப்பொழுதுள்ள டாலர் நெருக்கடி அமெரிக்க நாணயத்தின் உலக இறையாண்மைக்கு வரலாறு காணாத முறையில் யூரோ என்ற வடிவத்தில் அது சவாலைச் சந்தித்துள்ள நேரத்தில் வந்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான ரொபேர்ட் மண்டெல் சமீபத்தில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய நிகழ்வுகள் 1971ல் பிரெட்டன் வூட்சின் முடிவும், மற்றும் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது என்ற இரண்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் முதல் தடவையாக, உலக இருப்பு நாணயமாக, டாலருக்கு மாற்று என்ற வகையில், அனைவராலும் உணரப்படும் அளவிற்கு ஒரு நாணயம் வந்துள்ளது. ஏற்கனவே கணிசமான, இன்னும் கூடுதலான வகையில் பெருகும் சர்வதேச நிதிய நடவடிக்கைகள் யூரோவில் நடைபெறுகின்றன. இது அமெரிக்காவின்மீது நிதி அழுத்தங்களை அதிகப்படுத்தும்.

வலதுசாரிப் போலித் தோற்றத்தில் ஆழ்ந்திருக்கும் கிறுக்கர்களான சார்ல்ஸ் க்ரெளதம்மெர் போன்ற கட்டுரையாளர்கள், அமெரிக்காவால் மேலாதிக்கம் செய்யப்படும் ஒருமுனை (unipolar) உலகம் எழுச்சியுறுவதை வரவேற்கும் நிலையில், உலக நிதியச் சந்தைகள் இன்னும் உறுதியான அளவில் இருமுனை (bipolar) உலகம் என்ற கருத்தை ஏற்றுவிட்டன. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மூலோபாயம் கூறும் மற்றொருவரான வால்டர் ரஸ்ஸல் மேட், ஈராக்கின்மீதான போருக்கு ஐரோப்பா எழுப்பியுள்ள எதிர்ப்புக்களை இகழ்வுடன் உதறித்தள்ளுவதுடன், பிரெஞ்சுத் தடுப்பாளர்களை உரிய முறையில் அமெரிக்க தக்க நேரத்தில் எதிர்கொள்ளும் என்றும் திமிர்ப் போக்கில் "மிகக் குளிர்ந்த முறையில் அளிக்கப்படும் விருந்துதான் பழிவாங்குதல்" என்றும் தெரிவித்துள்ளார்; இவ்வாறு கூறுகையில், அத்தகைய விருந்தில் உணவுகளைத் தயாரிப்பதற்காகத் தேவையான பொருட்களை வாங்குதற்கு அமெரிக்கா யூரோக்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படக் கூடும் என்பதை இவர் பரிசீலிக்க மறுக்கிறார்.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு இந்த சாதகமற்ற பொருளாதாரப் போக்குகளுடன் ஆழ்ந்த முறையில் தொடர்புடையதாகும். தன்னுடைய பொருளாதாரச் செல்வாக்கின் சரிவை ஈடுகட்டும் வகையில் அல்லது முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமெரிக்கா தன்னுடைய புவிசார் மூலோபாய நலன்களை இராணுவத் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் அடைய நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் மிகப் பெரிய இராணுவத் தளவாடங்களை நிறுவி அவற்றை உலகம் முழுவதும் நடத்தும் இராணுவ நடவடிக்கைகளுக்கு செலவழிப்பது என்பது, அடிப்படையில், இருக்கும் நிதி நெருக்கடியையும் அதிகப்படுத்திவிடும். மிக மிகப் பெரிய வரவுசெலவுதிட்ட பற்றாக்குறைகள் நடப்புக் கணக்குகளிலும் பெரும் பற்றாக்குறைச் சரிவை ஏற்படுத்துவதுடன், டாலர் மதிப்பு கூடுதலாகச் சரிவதும் யூரோ ஒரு மாற்றீடாக பெருகிய வகையில் மற்ற நாடுகளை ஈர்ககும் தன்மையும் பிரச்சினைகளைக் கூடுதலாக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக டாலர், யூரோவுடன் கொண்டுள்ள மாற்று மதிப்பு கிட்டத்தட்ட 35 சதவிகிதம் குறைந்து விட்டது [அட்டவணை 1 ஐக் காணவும்]. இவ்வாறு அமெரிக்க கொள்கை அடிப்படையில் ஒரு பெரும் சங்கடத்தை எதிர்கொண்டு, அதிலிருந்த அறிவுபூர்வமான வகையில் வெளியேற முடியாமல் இருக்கிறது.

அட்டவணை 1. ஒரு டாலருக்கு மாற்று விகிதத்தில் யூரோக்கள் (மாத சராசரிகள்), 2001-2004. ஆதாரம்: www.x.rates.com

யூரோவைப் பொறுத்தவரையில் அதன் ஈர்க்கும் தன்மை, முற்றுமுழுதானது என்பதைவிட சார்புரீதியான தன்மையைக் கொணடுள்ளது என்பதை குறிப்பிட்டாகவேண்டும். இதனுடைய அவலட்சணமான பெரியண்ணாவின்(டாலர்) அருகில் இருக்கும்போதுதான் இது நல்ல தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒற்றுமை என்ற திட்டத்தின் விளைவான யூரோ தன்னுடைய உள் முரண்பாடுகளினாலும் பெரிதும் பாதிப்பிற்குட்பட்டுள்ளது.

இப்பொழுது மீண்டும் புள்ளிவிவரங்களைக் காண்போம். அமெரிக்காவின் வணிகப் பற்றாக்குறை 2002ம் ஆண்டில் $420 பில்லியன் டாலர்களாக மொத்தத்தில் இருந்தது. இது 2004ல் $500 பில்லியனையும் விடக் கூடுதலாயிற்று. இந்தப் பற்றாக்குறை 2005ல் $600 பில்லியனுக்கும் மேலாகப் போகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [ அட்டவணை எண் 2 ஐப் பார்க்கவும்.] அமெரிக்காவின் நிகர சர்வதேச முதலீட்டு நிலை (net international investment position NIIP), அதாவது "அமெரிக்காவின்மீது குவிந்திருக்கும் வெளிநாட்டினரின் மொத்த மதிப்பு (கடன், பங்குமுறை கழித்தபின்) உலகின் மற்ற பகுதிகளில் அமெரிக்கா கொண்டிருக்கும் மொத்த குவிப்பு" [1] என்பது 1997 இல் $360 பில்லியன் என்பதில் இருந்து 2003 இல் $2.65 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. நமக்கு இன்னும் இறுதி விவரங்கள் கிடைக்கவில்லை; ஆனாலும் NIIP, 2004 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $3.3 டிரில்லியன் என்ற வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகை அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இல் 24 சதவிகிதம் என்று உள்ளது. அமெரிக்க NIIP 1989 வரை சாதகமானதாக இருந்தது. 1995இல் கூட NIIP, $306 பில்லியன்தான் இருந்தது. ஆனால் 1999 இறுதிக்குள்ளோ அது 1 டிரில்லியன் டாலர்களாக ஆகிவிட்டது. இந்த இரத்தக் கசிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க தொடர்ந்து அதன் நடப்புக் கணக்கில் பற்றாக்குறைகளையே கொண்டிருக்கும் என்பதால், அது 2004ஆம் ஆண்டில் 665 பில்லியன் டாலர்களைக் கடன் வாங்கவேண்டியதாகப் போயிற்று.[அட்டவணை எண் 3 ஐப் பார்க்கவும்]. ஒருகால், புஷ் மற்றும் அவருடைய அருகில் உள்ள குழாத்தைவிட, வேறு எவரும் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அட்டவணை 2. அமெரிக்க ஏற்றுமதிகள், இறக்குமதிகள், 1960-2002. ஆதாரம்: அமெரிக்கப் பொருளாதார ஆய்வுக் கழகம்.( US Bureau of Economic Analysis)

அட்டவணை 3. அமெரிக்க நடப்புக் கணக்கில் மீதித் தொகை, 1960-2002.. அமெரிக்கப் பொருளாதார ஆய்வுக் கழகம்.

நடப்புக் கணக்குகளில் உள்ள பற்றாக்குறை கூட்டாட்சி வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையினால் பெருகியுள்ளது [See: Chart 4]

அட்டவணை 4. அமெரிக்க அரசாங்க வரவுசெலவுத் திட்டம், உபரித் தொகை/பற்றாக்குறை, 1972-2003. ஆதாரம்: Congressional Budget Office. Figures from 2003 are projected from July 2003.

கருவூலச் செயலர் றோபர்ட் ரூபின் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஆலென் சினாய், பீட்டர் ஓர்ஸ்ஜாக் ஆகியோர் எழுதிய கட்டுரையில் இருந்து மேற்கோளிட என்னை அனுமதியுங்கள்:

"அமெரிக்கக் கூட்டாட்சியின் வரவு செலவுத்திட்டம் தக்க வகையில் ஏற்கமுடியாத பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்கள் ஏதும் இல்லாத நிலையில், கூட்டரசின் பற்றாக் குறைகள் அடுத்த தசாப்தத்தில் மொத்தமாக கிட்டத்தட்ட 5 டிரில்லியன் டாலர்களுக்கு போய்விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய பற்றாக்குறைகள் அமெரிக்க அரசாங்கக் கடனை, மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது மிக அதிகமாக உயர்த்திவிடும். மருத்துவ நல வசதிகள், அரசாங்கப் பற்றாக்குறைகள் மற்றும் கடன்கள் ஆகியவை இன்னும் கூடுதலான கடுமையுடன் வளர்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் எதிர்நோக்கக் கூடிய சமச்சீரற்ற தன்மை எந்த அளவு உயர்ந்து உள்ளது என்றால், எப்பொழுது அத்தகைய விளைவுகள் தோன்றக்கூடும் என்பது பற்றி கணிப்பது சற்று கடினம் என்றாலும், கடுமையான, எதிர்மறை விளைவுகள் பற்றிய அக்கறை தீவிரத்துடன் காட்டப்பட வேண்டும் என்று இருக்கிறது...

"உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் [இந்தப் பற்றாக்குறைகளின் விளைவாக] நம்பிக்கை இழப்பு ஏற்பட்டால், அதையொட்டி டாலர் மேலாதிக்கம் செய்யும் சொத்துக்களில் இருந்து அவர்கள் துறைகளை மாற்றக் கூடும் மற்றும் உள்நாட்டு வட்டி விகிதத்தில் உயர் அழுத்தத்தை ஏற்படுத்துவர். அதே சக்திகள் முதலீட்டாளர்களையும் வணிகர்களையும் டாலரை சர்வதேச வணிகச் செயற்பாடுகளுக்காக முன்னணி உலக நாணயமாக பாவிப்பதில் இருந்து பின்னடிக்க செய்யும். அதையொட்டி, அமெரிக்கா தன்னுடைய நடப்புக் கணக்குகளில் உள்ள பற்றாக் குறைகளை டாலரில் உள்ள கடன்கள் மூலம் நிதியளிக்கும் திறமையைக் குறைக்கக் கூடும் என்பதால், நாட்டின் மாற்றுவிகித முறையிலும் கணிசமான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

"இந்த வட்டிவிகிதத்தில் பெருக்கம், டாலரின் மதிப்புக் குறைவு, மற்றும் இத்தகைய நிலையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கைச் சரிவு ஏற்படுத்ல் என்பவை பங்கு விலைகளைக் குறைக்கும் என்பதோடு, வணிகத்திற்கு தேவையான நிதியை பெறும் செலவையும் உயர்த்தும். இந்த விளைவுகள் பின்னர் நிதிச் சந்தைகளில் இருந்து உண்மைப் பொருளாதாரத்திற்குப் பரவிவிடும்." [2]

ரூபின், சினாய், மற்றும் ஆர்ஸ்ஜாக் தங்களுடைய அறிக்கையில் மேற்கோளிட்டுள்ள, தேசியச் சட்ட மன்றத்தின் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தினால் (CBO) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்று கீழ்க்கண்ட இறுதி அழிவு நாளின் தன்மையைக் கொண்ட தோற்றத்தைக் கூறுகிறது:

"வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதை நிறுத்திவிடக்கூடும், டாலரின் மாற்று விகித மதிப்புப் பெரும் சரிவிற்குட்படக் கூடும், வட்டி விகிதங்கள் மிகப் பெரிய அளவில் உயரும், நுகர்வோர் பொருட்களின் விலைகள் பெரிதும் உயரும், பொருளாதாரம் திடீரென்று சுருங்கிவிடக்கூடும். இலாபங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பிலும், உயரும் பணவீக்கத்தினாலும், உயரும் வட்டி விகிதத்தினாலும், பங்குச் சந்தைகள் சரியலாம்; நுகர்வோர்கள் திடீரென்று தங்கள் நுகர்வைக் குறைத்துக் கொண்டு விடுவர். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்ற நாடுகளுக்கும் உலகெங்கிலும் பரவி, அமெரிக்க வணிகக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களையும் வலுவிழக்கச் செய்யும்.

"கூடுதலான பணவீக்கக் கொள்கை அரசாங்கக் கடனின் உண்மை மதிப்பைக் குறைக்கக் கூடும்; ஆனால் பணவீக்கம் என்பது தொடர்ந்த வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைக்கு பரிகாரம் காண்பதற்கு பயன்படுத்த உகந்த நீண்டகால மூலோபாயம் அல்ல. ...அரசாங்கம் தொடந்து பணத்தை அச்சிட்டு பற்றாக்குறை நிவர்த்திக்க நிதிஅளிக்குமேயானால், அந்த நிலை மிக உயர்பணவீக்கத்திற்கு (1920களில் ஜேர்மனியிலும, 1940களில் ஹங்கேரியிலும், 1980களில் ஆர்ஜென்டினாவிலும், 1990களில் யூகோஸ்லாவியாவிலும் நடந்தது போல்) வழிவகுத்துவிடும். ...அரசாங்கம், நிதிச் சந்தையில் ஒருமுறை நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டால், அதை மீட்பது மிகக் கடினமாகும்.

இந்தப் புள்ளி விவரங்களை அளிப்பதிலும், வல்லுநர்களின் கருத்துக்களை மேற்கொளிடுவதிலும், எங்கள் விருப்பம் CBO அறிக்கையில் சுட்டிக்காட்டிய வடிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் எவ்வாறேனும் வந்தே தீரும் என்பது அல்ல. அனைத்துச் சான்றுகளும் வேறுவிதத்தில் இருந்தாலும்கூட, இன்னும் அமெரிக்க ஆளும் தட்டின் செல்வாக்குடைய சில பிரிவுகள் புஷ் நிர்வாகம் கண்மூடித்தனமாகப் பாதாளத்தில் விழும்போது அதைப் பின்பற்றத் தயாராக இல்லை என்பது ஏற்கப்படலாம். இப்பொழுதைய நடப்புக் கணக்குகளின் பற்றாக்குறை மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 50 அல்லது 70 சதவிகிதத்தை எட்டி, டாலரின் மதிப்பு இன்னும் 30ல் இருந்து 40 சதவிகிதம் குறைந்தால், அல்லது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது போல், உயர்மட்ட 35 சதவிகிதச் சரிவு ஏற்பட்டால், முதலாளித்துவத்தின் சில சக்திவாய்ந்த பிரிவுகள் தலையிட்டு போக்கை மாற்றுமாறு கோரும். ஆனால் அதற்கு எத்தன்மையான மாற்று விருப்பங்கள் இருக்கின்றன? எத்தகைய மாற்றுக் கொள்ளைகள் முன்வைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் தீவிரமான விளைவுகளைத்தான் கொண்டுவரும். மேலும், அனைத்து மாற்றுக் கொள்கைகளும், இப்பொழுதுள்ள போக்கின் தொடர்ச்சியைப் பற்றிக் கூறத் தேவையில்லை, அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம், சமுதாய நிலைகள் ஆகியவற்றின் மீது கடும் தாக்குதல்களுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவு.

அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட காலச் சரிவின் வெளிப்பாடாகத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் அமைந்து, அவை வரலாற்று வழிவகையின் அடித்தளத்திலும் உள்ளன என்பது ஒருபோதும் மறக்கப்படலாகாது. டாலருடைய விதி தவிர்க்கமுடியாமல் உற்பத்தித்திறன், அமெரிக்க தொழில்துறை உலகத்தில் எந்த நிலை வகிக்கிறது என்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இழிவுதரும் வகையில் தன்னைத்தானே செல்வக்கொழிப்பு ஆக்கிக் கொள்ளும் ஆளும்தட்டின் தன்மையினால், உண்மையில் அதனால்தான் இன்னும் கூடுதலான முறையில் அது அருவருப்பைத் தருகிறது, பணம் உருவாகும் வழிவகை அதிகரித்தளவில் அமெரிக்கத் தொழில்துறையின் உண்மையான உற்பத்தி கொள்திறனில் இருந்து பிரிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க மூலதனம் உலகம் முழுவதும் தேடித் துருவி அலைந்து, மலிவான கூலி உழைப்பு, குறைந்த விலை மூலப் பொருட்கள் இவற்றை அமெரிக்கத் உற்பத்தித்தொழில் துறையின் தளத்திற்கு நாடி நிற்கும் நிலை, சீரழிவை ஏற்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரத்தை தேக்க நிலைக்கு உட்படுத்துகிறது அல்லது பெரும் சீர்குலைவிற்கு உட்படுத்திவிடுகிறது.

அப்படியானால் நம்முடைய அரசியல் முன் கணிப்பு என்ன? அமெரிக்க ஆளும்தட்டினர் இந்த நெருக்கடியில் இருந்து அமைதியான நடவடிக்கைகள் மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது: இது அதன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு மட்டும் பொருந்தாமல், அமெரிக்க உள்நாட்டுக் கொள்கைகளுக்கும் பொருந்தும். அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் இன்னும் கண்மூடித்தனமாகவும், மிருகத்தனமாகவும் இருக்கும். அமெரிக்க அரசாங்கம் வெட்கம் கெட்டவகையில் போர் என்பது புவியியல் மூலோபாய நோக்கங்களை அடைவதற்காகத் தக்க வழிவகை என்றும், ஏற்கத்தக்கது என்றும் கூறியுள்ள அசாதாரணமான உண்மை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இருந்த தசாப்தங்களில் இது பெற்றிருந்த தலைசிறந்த நிலைமையின் இழப்பை ஈடுசெய்வதற்கு அமெரிக்காவிற்கு வேறு வழி ஏதும் இல்லை என்ற உணர்வு தோன்றிவிட்டதின் வெளிப்பாடுதான் என்பது உணரப்பட வேண்டும்.

ஒரு மேலாதிக்கம் நிறைந்த ஏகாதிபத்திய சக்தி என்ற நிலையை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அது மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் இருக்கும் எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்புகளின் மீது தன்னுடைய கட்டுப்பாட்டைக் கொள்ளுவதற்கான வழிவகைகளை நாட வேண்டும். அது மட்டும் இல்லாமல், இந்த முக்கிய வளங்கள் மற்ற பெரிய சக்திகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்பதை இறுதியாக நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் கொள்ள வேண்டும்; அந்தப் பெரும் சக்திகளில் ஐரோப்பாவும் ஜப்பானும் மட்டும் இல்லாமல் சீனாவும், இந்தியாவும் உள்ளன. மேலும் இறுதியாக எண்ணெயின் விலை டாலரில் குறிப்பிடும்படியாக இருந்தாக வேண்டும், யூரோவில் அல்ல என்பதையும் அது உறுதியாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குருதி தோய்ந்த செயற்பட்டியல், நிதி இருப்புக்களின் முக்கிய கூறுபாடுகளை, பொருளாதாரத்தின் சமுதாயப்பிரிவில் இருந்து பொருளாதாரத்தின் இராணுவப் பிரிவை நோக்கிச் செலவிடும் தேவையைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்கனவே மிகைப்பட்டுவிட்ட, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் சமுதாய பதட்டங்களை இன்னும் வலுவாக்காமல் இராணுவ முறையில் இயக்குதல் என்பது அடையப்படமுடியாததாகும். புஷ் நிர்வாகம் என்ன செய்ய முடியும்? இதற்கு நல்ல, எளிதான விடைகள் இல்லை. தேவையான மாற்றங்களுடன்- (Mutatis mutandis), வெளிப்படையான வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு பார்த்தால் - தானே பிரகடனப்படுத்தியிருந்த போலியான "பயங்கர வாதத்திற்கு எதிரான போரில்" நான்காம் ஆண்டில் புஷ் நிர்வாகம் நுழைகையில், அது எதிர்கொண்டுள்ள நிலை மிக நம்பமுடியாத தன்மையில் நாஜி ஆட்சி 1930களின் கடைசியில், இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை ஒத்ததாக இருக்கிறது.

"[நாஜி] கண்ணோட்டத்தில்,1938/39-ல் பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளில் எவ்வித பிரச்சனைகளும் இருந்ததாக தெரியவில்லை, அவற்றுக்கு வெளிப்படையான தீர்வுகள் கைவசம் தயாராய் இருந்தன. 1938ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கட்டாய வற்புறுத்தலில் போருக்கான தயாரிப்பு அனைத்துப் பிரிவுகளிலும் அளவையும் இருப்பையும் பெரிதும் பாதித்த வகையில் இருந்தது. ...மிகக் கடினமான செயல்கள் ...முழுப் பொருளாதார, அரசாங்க முறை முற்றிலும் தழுவிய நெருக்கடியில் மூழ்கிப்போயின; இதன் இதயத்தானத்தில் சமூக உற்பத்தியானது எவ்வாறு இராணுவ மற்றும் குடிமக்களின் சாதாரணத் தேவைகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்ற பிரச்சினையும் எழுந்தது. வேறுவிதமாகக் கூறினால், அரசாங்கம், தான் மீண்டும் ஆயுதமேந்துவதற்கும், போருக்கும் எத்தகைய விதத்தில் மக்கள் தியாகத்திற்கு தயாராக வேண்டும் என்று கேட்பதற்கான, முக்கிய அரசியல் சிக்கலை எதிர்கொண்டது."[3]

முதலாளித்துவ வர்க்கம் உலகிலேயே இதுகாறும் காணப்படாத வகையில், ஏற்கனவே அதிகாரத்தில் மிகவும் மிருகத்தனமான, இரக்கமற்ற சர்வாதிகாரத்தை பதவியில் இருந்திய பின், அந்த நாட்டில் இத்தகைய சிக்கல் இருந்தது என்றால், புஷ் நிர்வாகத்தை எதிர் கொண்டுள்ள அரசியல் சங்கடம் இன்னும் கூடுதலான நெருக்கடித்தன்மையைத்தான் கொண்டிருக்கும். பரந்த முறையில் ஏற்கனவே புஷ் நிர்வாகத்திற்கு மக்களுடைய எதிர்ப்பு இருக்கிறது. இப்பொழுள்ள அரசியல் அமைப்பு நிறுவனங்களில் இதற்கான வெளிப்பாடு காண்பதற்கில்லை என்ற உண்மை, இந்த உள்ளுறைந்து நிற்கும் சமூக எதிர்ப்பிற்கு இன்னும் கூடுதலான வகையில் வெடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பணி தாமே, உலகப் பொருளாதார நெருக்கடியின் தர்க்கவியல் மீது கட்டாயம் தளமிடப்பட வேண்டும்; அமெரிக்காவில் சமூகப் போராட்டம் புதுப்பிக்கப்படலை எதிர்நோக்க வேண்டும்; அமெரிக்க சமுதாயத்தில் மிகப் புரட்சிகரமான சக்தியாகிய தொழிலாள வர்க்கத்துடன் தன்னை நோக்குநிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். 1870களில் இருந்து 1980களின் இறுதிவரை, அமெரிக்காவில் சமூக மோதல்களின் வரலாறு எப்படி இருந்தது என்பது பற்றி அறியாதவர்களுக்கு, வேலை நிறுத்தங்கள், போலீசுடன் மோதல்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதேவிதமான வர்க்கப் போராட்டத்தின் மாதிரி வடிவங்கள் பாரம்பர்யமாக அமெரிக்காவில் எவ்வாறு கடைப்பிடிக்கப்படட்டன என்பதை ஒரு நூற்றாண்டு காலமாக தெரிந்திராதவர்களுக்கு, தொழிலாள வர்க்கத்தின் இந்தப் புரட்சிகரமான பங்கு என்பது ஒரேயடியாக வினோதமானதாக இல்லாவிட்டாலும், ஒரு கற்பனாவாத காட்சிபோல் தோன்றலாம். ஆனால் வரலாற்று அனுபவம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் தோன்றியுள்ள மிக அமைதியான நிலை, அல்லது இன்னும் சரியாகக் கூறவேண்டும் என்றால் செயலற்ற தன்மை, தேக்க நிலை, அமெரிக்க சமுதாய வரலாற்றின் அடிப்படை முன்மாதிரிகளில் இருந்து பெருத்த வேறுபாட்டைக் கொண்டு நிற்கிறது.

அமெரிக்காவில் உள்ள வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை புள்ளிவிவரங்களை -அதாவது வேலைநிறுத்தங்கள் பற்றி, ஒருவர் ஆராய்ந்தால், கடந்த இரு தசாப்தங்களில் மிகப் பெரிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கைகள் இல்லாமற் போய்விட்டது பற்றி உடனடியான கவனத்தைப் பெறுவர். [அட்டவணைகள் 5,6,7 இவற்றைக் காணவும்] வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளரின் எண்ணிக்கை, இழக்கப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை, இன்னும் முக்கியமாக வேலைநிறுத்தத்தின் விளைவாக மொத்த உழைக்கும் நேரத்தில் இழக்கப்பட்டுவிட்ட நேரத்தின் சதவிகிதம் ஆகியவை சிறிதும் முக்கியத்துவம் அற்றவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இந்தப் புள்ளி விவரங்கள் அமெரிக்காவில் 1870ல் இருந்து 1980 கள் வரை வளர்ச்சி பெற்றிருந்த வர்க்க உறவுகளின் அடிப்படை முன்மாதிரியில் இருந்து முற்றிலும் மாறுபட்டவிதத்தில் உள்ளன.

அட்டவணை எண் 5. 1,000 அல்லது கூடுதலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1947-2003. ஆதாரம்: US Bureau of Labour Statistics.

அட்டவணை எண் 6. 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் வேலையின்றி இருந்த உழைக்கும் நாட்கள், 1947-2003. ஆதாரம்: US Bureau of Labour Statistics

அட்டவணை எண் 7. 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் இழக்கப்பட்ட நேரத்தின் பகுதி அல்லது பிரிவு, 1947-2003. ஆதாரம்: US Bureau of Labour Statistics.

அமெரிக்காவில், சமூக மோதலின் மிக அடிப்படையான புறநிலைக் குறியீட்டில் இத்தகைய வியத்தகு சரிவு ஏற்பட்டுள்ளதற்கு என்ன விளக்கம் கூறவியலும்? தன்னுடைய சமூக அந்தஸ்தின் சரிவு பற்றி முற்றிலுமாக அமெரிக்க தொழிலாள வர்க்கம் அசட்டையாக உள்ளது என்றோ அல்லது கடந்த இருபது ஆண்டுகளில் அடையப்பட்டுள்ள மிகப் பெரிய சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி எந்த விதத்திலும் அமெரிக்க சமுதாயத்தில் சமூக நெருக்கடிகளையும், உடைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றோ அல்லது மரபுரீதியாக அமெரிக்க தொழிலாளர்கள் இதுகாறும், தங்கள் சமூக அதிருப்தியை தெரிவித்திருந்த தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு, அமைப்பு வடிவங்கள், முற்றிலுமாக தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தின் வெளிப்பாடுகள் அனைத்தையும் ஒடுக்குவதாக மாறிவிட்டனவா? கடைசியாகக் கூறப்பட்டது பொருத்தமான விளக்கமாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. அது ஒரு சரியான விளக்கமும் கூட.

தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான, புரட்சிகரமான அரசியல் சக்தியாக எழுச்சி கொள்ளுவது என்பது அமைப்பு பற்றிய பிரச்சினை மட்டுமின்றி, சமூக நனவு பற்றிய, அரசியல் முன்னோக்கு பற்றிய, வரலாற்று விதிகள் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய தத்துவார்த்த நுண்ணறிவுத் திறம் பற்றிய பிரச்சினையும் கூட ஆகும். அமெரிக்காவில் கணிசமான செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், உத்தியோகபூர்வமான தொழிலாளர் இயக்கம் இந்த வர்க்க நனவிற்கு இன்றியமையாத அடிப்படை அறிவுஜீவித கூறுபாடுகள் அனைத்தின் தடங்களையும் பூண்டோடு அழிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மேலும், அதன் தேசிய பிராந்தியவாதம், ஜனநாயகக் கட்சியின்பால் கொண்டுள்ள அடிமைத்தனமான பற்று 1980களில் முதலாளித்துவ தாக்குதலுக்கு எந்தவிதத் திறமையான எதிர்கொள்ளுதலையும் ஏற்படுத்தாததோடு, முதலாளித்துவ பூகோளமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள புதிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ளுவதற்கும் வகை செய்யவில்லை.

அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் சமூக மற்றும் வர்க்க மோதலை ஆழ்ந்த முறையில் புதுப்பித்தல் என்பது தவிர்க்க இயலாதது ஆகும். தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களுக்கு கட்டாயம் தளமாகக் கொள்ள வேண்டிய சர்வதேச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் இவற்றை விரிவுபடுத்துவதன் மூலம், உலக சோசலிச வலைத் தளத்தின் செல்வாக்கை பரந்த முறையில் ஆற்றலுடன் விரிவாக்கம் செய்வதன் மூலம், ஒரு புதிய தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை சோசலிசத்திற்கு அறிமுகப்படுத்துதல் மூலம், மற்றும் அவர்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒப்புவமையில்லாத வரலாற்றின் அடிப்படையில் மார்க்சிசவாதிகளாக பயிற்றுவித்தல் மூலம் தவிர்க்க முடியாத வகையில் வர்க்கப் போராட்டத்தை உலகளாவிய முறையில் புதுப்பிப்பதற்கு தயாரித்தலே இப்பொழுது நம்முடைய பணியாகும்.

Notes:
1. The U.S. as a Net Debtor: The sustainability of the U.S. External Imbalances, by Nouriel Roubini and Bred Setser (November 2004)
2. "Sustained Budget Deficits: Longer-Run U.S. Economic Performance and the Risk of U.S. Financial and Fiscal Disarray," January 4, 2004, available at http://www.brook.edu/views/papers/orszag/20040105.pdf
3. Nazism, Fascism and the Working Class, by Tim Mason (Cambridge, UK, 1995), p. 106.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved