World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Inauguration Day 2005: imperial delusions and political reality

2005 அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு விழா: ஏகாதிபத்திய பிரமைகளும் அரசியல் யதார்த்தமும்

By Barry Grey and David North
20 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

கீழேயுள்ள அறிக்கை PDF அமைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ், முறையாக இரண்டாம் முறை நிர்வாகப் பொறுப்பில் இருத்தப்பட்டுள்ளமை அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்கான அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி கிட்டத்தட்ட நாட்டின் தலைநகர் முழுவதும் பாதுகாப்பிற்குட்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளதில் வெறும் அடையாள முக்கியத்துவத்தைவிடக் கூடுதலாகக் காணப்படுகிறது; இதன் உண்மையான நோக்கம் அச்சத்தை தூண்டிவிடுவதும், உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை மிரட்டுவதும்தான்; அதேநேரத்தில் இந்த போலீஸ்/இராணுவ தடுப்புக்களுக்குப் பின் புஷ்ஷின் பெருநிறுவன ஆதரவாளர்கள் சிறிதும் வெட்கமின்றி நடனங்களிலும், விருந்துகளிலும் கேளிக்கை நடத்துகின்றனர்.

புஷ்ஷின் இரண்டாம் பதவிக்காலம் பற்றிய நிதானமான மதிப்பீட்டைக் கொள்ளுவது இன்றியமையாதது ஆகும். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மந்திரத்தின் அடிப்படையில், இந்த அரசாங்கம் ஒரு நிலைத்த பீதி மற்றும் மன அச்சப் போக்கை நிலைநிறுத்திக்கொள்ள முற்படுகின்றது. ஆழ்ந்த நிலையற்ற மற்றும் நெருக்கடி மிகுந்த ஆட்சியின் வியாபார இருப்பாக இருப்பது பீதியைப் பரப்புதலாகும்.

2005 ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவிற்கு முன்பே, காற்றலைகள் மெக்சிகோ எல்லைப்புறத்தை கடந்து போஸ்டனை இலக்காகக் கொண்டு ஒரு பயங்கரவாத தாக்குதல் வரக்கூடும் என்ற பரபரப்பான அறிவிப்புக்களைக் கொடுத்தன; மாலைச் செய்தி நேரக் காலத்தில், இவை அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்று ஒதுக்கப்பட்டுவிட்டன.

பொருளாதார பெருமந்த நிலையில், அமெரிக்க சமுதாயம் வங்கிகள் முறிதல், ஆலைகள் மூடல், சமவெளிப்பகுதிகளில் புழுதிப் புயல்கள் என்று நிலை தடுமாறிய நேரத்தில், 1933ம் ஆண்டு தன்னுடைய பதவியேற்பு தின உரையில் பிராங்ளின் ரூஸ்வெல்ட், "நாம் அச்சப்படவேண்டிய விஷயம் ஒன்றுதான், பெயரற்ற, காரணமற்ற, நியாயமற்ற வகையிலான பயங்கரம்தான்...." என்று குறிப்பிட்டார். அந்தக் காலக்கட்டம் அமெரிக்க ஆளும் வர்க்கம் பிரச்சினைகளுக்கு அறிவுபூர்வமான விடைகளைக் காணமுடியும் என்று நம்பியிருந்த காலமாகும்.

தற்போதுள்ள அரசாங்கம் தான் எப்படியும் மிக உயர்ந்து வரும் உலகந்தழுவிய, உள்நாட்டுப் பிரச்சினைகளை "பெயரற்ற, காரணமற்ற, நியாயமற்ற அச்சத்தை" பரப்புவதின் மூலம் எப்படியாவது துல்லியமாகத் தவிர்த்துவிட முடியும் என்று கருதுகின்றது. மக்களை நிரந்தரமான பீதியில் வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சி, உண்மையில் இந்தக் குண்டு வெடிப்பு, கத்தி உரசல் ஒலிகள் ஆகியவற்றிற்குப் பின் தன்னை எதிர்கொண்டுள்ள முரண்பாடுகளுக்கு அறிவார்ந்த ரீதியில் வழியைக் காணமால் அது திகைத்து நிற்கிறது என்ற உண்மையைப் பறைசாற்றுகிறது.

2004 தேர்தல், புஷ்ஷின் சொற்களிலேயே, அவருடைய "கணக்கைக் கூறும் கணம்" கடக்கப்பட்டுவிட்ட பின்னர், கொள்கையை நிர்ணயிக்கும் சதிகார வட்டம், செனி, ரம்ஸ்பெல்ட், வொல்போவிட்ச், ஏனையோர், ஏற்கனவே மத்திய கிழக்கில் போரை விரிவாக்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; மேலும் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்க தொழிலாள வர்க்கம் போராடி பெற்ற சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளில் எஞ்சியிருப்பவற்றை தகர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

புலிட்செர் பரிசை வென்ற ஆய்வுச் செய்தியாளர் சேய்மோர் ஹெர்ஷ் தன்னுடைய சமீபத்திய New Yorker கட்டுரையில் புலப்படுத்தியுள்ளபடி, ஈரானுக்கு எதிரான போர்த்திட்டங்கள் ஏற்கனவே மிக முன்னேற்றமான கட்டத்தில் உள்ளன; மேலும், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தெற்கு ஆசியாவில் பத்து நாடுகள் வரை பென்டகனால் நடத்தப்படும் படுகொலைக்குழுக்களின் இலக்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள், சர்வதேச சட்டத்தையும் தேசிய இறைமை கோட்பாட்டையும் மீறி நடத்தப்படுபவை, உலகந்தழுவிய அராஜக சட்ட விரோதத்தன்மையை கொண்டுள்ளன; இதற்கு மிக நெருக்கமான ஒப்புமை ஜேர்மனிய ஏகாதிபத்திய நாச வேலையின் சான்றுகளும், ஹிட்லரின் நாஜி ஆட்சி பெற்ற வெற்றிப்படையெடுப்புக்களும்தான் எனலாம்.

இந்தத் திட்டங்கள் அமெரிக்கச் சிறப்புப் படைகள் பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளுடன் பங்கு கொள்ளுதலையும் உள்ளடக்கியுள்ளன என்று ஹெர்ஷ் கூறுகிறார்: இதன் விளைவாக புதிய இராணுவ வெறி நடவடிக்கைகள் ஈரானிலோ அல்லது வேறு எங்காவதோ மேற்கொள்ளப்படுவதற்கு அடிப்படைக் காரணம் உற்பத்தி செய்யப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இத்தகைய தூண்டுதல் தரும் வழிவகைகளும் சதிகளும் ஜனநாயக முறையில், தேசிய சட்டமன்றத்திற்கோ, மக்களுக்கோ, பொறுப்புக் கூறுதலை எவ்விதத்திலும் தவிர்த்திட வேண்டும் என்று நினைக்கின்ற ஓர் அரசாங்கத்தின் செயல் முறையாகும்.

இதை எதிர்கொள்ளும் வகையில் ஹெர்ஷை, அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களின் சாராம்சத்தை பற்றி விளக்கம் கொடுக்காமல் பென்டகன் தாக்கியது. NBC செய்திக்கு கொடுத்துள்ள பேட்டியொன்றில், புஷ், அமெரிக்கா ஏற்கனவே ஈரானிய மண்ணில் இராணுவத்தை இறக்கியுள்ளது என்ற ஹெர்ஷின் கூற்றை மறுக்காமல், தன்னுடைய நிர்வாகம் இந்நாடு தொடர்பான இந்தக் கொள்கை; பற்றி எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் நிராகரித்துவிடவில்லை என்று தெரிவித்தார்.

இத்தகைய அமெரிக்காவின் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு விரிவாக்கம் மிகுந்த பேரழிவையும், குருதி சிந்தும் தீயவிளைவுகளையும்தான் கொடுக்கும். இராணுவ வலிமையின் மூலம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற மனச் சிதைவான உந்துதலினால், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் போட்டி சக்திகளும் தவிர்க்கமுடியாத வகையில் தூதரக, பொருளாதார, இராணுவ எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான தொடரான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்; இதையொட்டி மீண்டும் உலகம் ஒரு பெரிய இராணுவப் பேரழிவின் விளிம்பில் நிற்கக் கூடும்.

அமெரிக்க ஒருசிலவராட்சியின் ஏகாதிபத்திய நோக்கங்களை வெளிநாட்டில் செயல்படுத்துவதற்கான திகைப்பூட்டும் செலவினங்கள், உள்நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுடைய முதுகுகளில்தான் சுமக்கவைக்கப்படும். அச்சத்தைப் பரப்புதல், பொய்களைக் கடைந்தெடுத்துக் கொடுத்தல் என்ற முறையில் "பயங்கரவாதத்தின் மீதான போரை" நியாயப்படுத்தும் வகையில் எந்த வேகக் குறைப்பும் காட்டப்படமாட்டாது என்பதுடன் போலீஸ்-அரச நடவடிக்கைகளும் அதையொட்டி செயல்படுத்தப்படும்.

இரண்டாம் புஷ் நிர்வாகம் நீதிமன்றங்களில் மிகப் பழமையான பிற்போக்கு வாதிகளைக் கொண்டு நிரப்பும் வழிவகையை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது; இவர்கள் அரசியல் அமைப்பை சிதைக்கும், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் முத்திரையிடுவர். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பாசிசப் பிரிவில் முதுநிலையுடைய கிளாரென்ஸ் தோமஸ் தலைமை நீதிமன்றப் பொறுப்பில் இருந்து விரைவில் ஓய்வுபெறப்போகும் வில்லியம் ரெஹ்ன்க்விஸ்டுக்குப் பதிலாக நியமனம் பெறுவார் என்று கருதப்படுகிறது.

அரசாங்க ஆதரவு இருந்த பொருளாதாரப் பாதுகாப்புக்கள் அனைத்தையும், சமூக பாதுகாப்பு, மருத்துவ நலம், சுகாதார உதவி உட்பட, அகற்றிவிடும் திட்டங்களை நிர்வாகம் நடைமுறைக்கு விரைவில் கொண்டுவர உள்ளது. வரிச் "சீர்திருத்தங்கள்" என்ற முறையில் அழைப்புவிட்டு, இது படிப்படியாக கூடுதலான வருமானத்திற்கு அதிக வரி என்பதற்குப் பதிலாக பிற்போக்கான வரிவிதிப்பு முறைகளைக் கொண்டுவந்து இன்னும் கூடுதலான வகையில் பெருவணிகம், செல்வம் கொழித்தவர் என்ற பிரிவுகளில் இருந்து உழைக்கும் மக்கள் தலையில் கட்டுவதற்கு முயலுகின்றனர். "Tort சீர்திருத்தம்" என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் தங்களுடைய தணிக்கமுடியாத இலாப உந்துதலின் சமுதாயத் தீயவிளைவுகள் எதற்கும் பொறுப்பேற்க முடியாத வகையில் அனைத்துச் சட்டபூர்வ தடைகளையும், தனியார் சொத்துக்குவிப்பிற்கு எதிராக இருப்பவற்றை, அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் முன்னியில் புஷ்ஷின் கோரிக்கை அமைந்துள்ளது.

புஷ்ஷின் மறு தேர்தலில், ஜனநாயகக் கட்சி வாக்காளர்களின் போரெதிர்ப்பு முறையை நிராகரித்தும், குடியரசுக் கட்சியினரின் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளுக்கு தீவிர மாற்றீடு கொடுக்காத வகையிலும் எளிதாகப் பாதையமைத்துக் கொடுத்துள்ள ஜனநாயகக் கட்சி, இரண்டாம் புஷ் நிர்வாகத்திற்கும் உண்மையான எதிர்ப்பை அளிக்காது. நிர்வாகம் கிழிக்கும் கோட்டை தாண்ட மாட்டோம் என்ற வகையில் விருப்பத்தை தெரிவிக்கும் முறையில், புஷ்ஷின் முக்கிய அமைச்சரவை நியமனங்களுக்கு தேவையான வாக்குகளை அது அளித்துள்ளது; இதில் வருங்கால போர்க்குற்றவாளிகள் விசாரணையில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்படப் போகிறவர்கள் கொண்டலீசா ரைஸ், அல்பேர்டோ கொன்சலேஸ் ஆகியோர், மற்றும் 9/11 க்கும் பின்னர் போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் கொண்டுவருவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த மைக்கேல் ஷேர்ட்டோப் ஆகியோரும் அடங்குவர்.

இரண்டாம் புஷ் நிர்வாகம் அடுத்த நான்கு ஆண்டுகளும் அமெரிக்க சமுதாயத்தை முற்றிலும், இனி திரும்பிவர முடியாத வகையில், தான் தாழ்ந்து நிற்கும் நிதி ஆதிக்க ஒருசிலவராட்சியின் நலன்களின் வெளிநாட்டு, உள்நாட்டுத் தேவைகளுக்கேற்ப, மாற்றி அமைத்து விடுவது என்று உறுதியாக இருக்கிறது. இந்தப் பொறுப்பற்ற, தலைகீழாக விழும் கொள்கைகளின் தன்மை செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டாலும், தாக்குதலுக்குட்படாத வலிமையின் அடையாளம் என்று நிர்வாகத்தின் பிரச்சாரத்தால் மயங்கியுள்ளோரால் தவறான முறையில் விளக்கம் காணப்படுகிறது.

பொய்யுரைகளின் அடிப்படையில், தன்னுடைய ஆயுத ஆய்வாளரே தவறானவை என்று அறிவித்தபின்னரும், தொடரப்பட்ட ஈராக் படையெடுப்பின் பேரழிவு விளைவுகளையும், இன்னும் கூடுதலான முறையில் மக்களுடைய எதிர்ப்பு அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் நிலையில், போரின் பரப்பை அதிகமாக்கும் வகையில், தயாரிப்புக்களை மேற்கொண்டு அவற்றை, புஷ்ஷின் வெள்ளை மாளிகை எதிர்கொள்ளும் முறைக்கு எவ்விதம் விளக்கம் காண்பது? அமெரிக்க மக்களுக்குள்ளேயே பெரும்பான்மையானவர்களின் எதிர்ப்புக்களுக்கிடையே திமிர்த்தனமாக செல்வந்தர்களுக்கு ஆதரவு கொடுக்கும் உள்நாட்டுக் கொள்கைகளைத் தொடருவதில் ஊக்கம் காட்டுவதை எப்படி விளக்குவது?

இந்த அரசாங்கம் ஒரு நிரந்தர நெருக்கடியில் உள்ளது என்பதுதான் அடிப்படையான விடையாகும். இது ஒரு குறுகிய, உறுதியற்ற சமுதாயத் தளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது; அறிவார்ந்த முறையில் விடைகாண முடியாத முரண்பாடுகளைக் கொண்டுள்ள பெருகிய பொருளாதார நெருக்கடிகளினால் உந்தப்பெறும் ஆளும் செல்வந்தத்தட்டின் உந்துதலைத்தான் இது பிரதிபலிக்கிறது.

புஷ் நிர்வாகத்தின் நோக்குநிலை தவறிய இயல்பு, ஆழ்ந்த பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்குப் புறநிலைத் தர்க்கத்திலும், அறிவார்ந்த முறையிலும் ஒரு விளக்கத்தைக் காணமுடியும். அமெரிக்க முதலாளித்துவம் இராணுவ சக்தியைத் தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய கருவியாக பயன்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டது, புஷ்ஷின் சொற்களில் கூறவேண்டுமானால், முன்னரே தாக்கும் போர்க் கொள்கைவழி என்பது, இறுதியில் அமெரிக்காவின் பொருளாதார சரிவின் பிரதிபலிப்பு என்பதோடு, அதன் தொழில்துறை, நிதிய மேலாதிக்கத்தின் இழப்பையும் பிரதிபலிக்கிறது என்றுதான் கூறவேண்டும். திகைப்பில் ஆழ்ந்து வெளியேறத் துடிக்கும் ஆளும் செல்வந்தத்தட்டு, உலகில் தன்னுடைய சரிவைத் தடுத்து மாற்றும் முயற்சியில் ஈடுபடும்போது, அல்லது அந்தச் சரிவின் வேகத்தையாவது ஆத்திரமூட்டுதல் மூலம் அல்லது இராணுவ வன்முறை மூலம் குறைக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

இந்தச் சரிவின் குறியீடுகள் அப்பட்டமாகவும், மறுக்கமுடியாமலும் உள்ளன; எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் மிகப் பெரிய, பெருகிவரும் கடன்சுமை, இதுவரை கண்டிராத பட்ஜெட், வணிக, கடன் திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. உலக நாணயச் சந்தையில் அமெரிக்க டாலர் விளிம்பில் நிற்கும் சரிவுத்தன்மை, இதற்குப் போட்டியான உலகின் இருப்பு நாணயமாக யூரோ எழுச்சி பெற்றுள்ளது, உலகப் பொருளாதாரத்தில் புறநிலை ரீதியான அமெரிக்க நிலை ஆகியன, பென்டகன் கொண்டுள்ள பேரழிவு ஆயுதக் கிடங்குகளின் தன்மையைவிட இன்னும் கூடுதலான நம்பிக்கையற்ற குறிப்புக்களாக அமைந்துள்ளன.

முற்றிலும் தேர்தல் வகையிலேயே, புஷ் நிர்வாகம் பாதுகாப்பற்ற முறையில்தான் உள்ளது. ஜோன் கெர்ரியின் பிரச்சாரத்தில் கோழைத்தனமும், திறமையற்ற தன்மையும் மலிந்து காணப்பட்டிருந்த போதிலும்கூட, பதவியில் இருக்கும் ஜனாதிபதி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெற்ற ஒரு குறுகிய வித்தியாச வெற்றியைத்தான் புஷ் மறு தேர்தலில் கண்டார்.

செய்தி ஊடகத்தின் சொந்தக் கருத்துக் கணிப்புக்கள்கூட தேர்தலின் முடிவுகள் அவருடைய வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகளுக்கு தொடரும் அதிகாரத்தை கொடுத்தன என்ற புஷஷின் கூற்றை நிராகரித்துள்ளன. புஷ் பற்றிய மதிப்புப் புள்ளிகள் 48 சதவீதத்திற்கும் 51 சதவீதத்திற்கும் இடையே ஊசலாடியது, நூறாண்டு காலத்தில் பதவி ஏற்பு விழாவிற்கு முன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜனாதிபதியாலும் கொள்ளப்பட்டிராத குறைந்த புள்ளிகளாகும். உறுதியான, நிறைந்த பெரும்பான்மை ஈராக்கியப் போர் ஒரு தவறு என்றுதான் நினைக்கிறது; புஷ்ஷின் திட்டங்களான சமுதாய பாதுகாப்பு "சீர்திருத்தங்கள்" ஓரளவு தனியார்மயமாக்கப்படல், மற்றும் வரிவிதிப்பு முறைகளை ஒரு பெரும்பான்மை எதிர்க்கத்தான் செய்கிறது.

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு புஷ்தான் என்று ஆகிவிட்டது என்று கருதுபவர்கள் நிக்சனுடைய இரண்டாம் நிர்வாகத்தின் விதியையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதேபோல்தான், செல்வாக்கற்றிருந்த போரின் நடுவேதான், பிற்போக்குத் தன்மை, குழப்பமான மக்கள் உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்திருந்த வகையில் நிக்சன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏதேனும் கூறவேண்டும் என்றால், புஷ் மறு தேர்தல் தன்மையைவிட, நிக்சனின் மறுதேர்தல் இன்னும் பாதுகாப்பான முறையில் இருந்தது. அவர் மக்கள் வாக்குகள், தேர்தல்குழு வாக்குகள் என்ற இரு பிரிவுகளிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். இன்னும் அடிப்படையாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படையில் இருந்த நெருக்கடி, அப்பொழுது அமெரிக்கா உலகின் மிகப் பெரிய கடன் வழங்கும் நாடாக இருந்தது, இப்பொழுதை விட 32 ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்த அளவே முன்னேற்றமடைந்திருந்தது.

ஆயினும் கூட, இரண்டு ஆண்டுகளுக்குள் நிக்சன் அதிகாரத்தில் இருந்து மிகப் பெரிய போர் எதிர்ப்பு வெடிப்பினாலும், தொழிலாள வர்க்கத்தின் சமுதாயப் போராட்டங்களின் நிலைமைகளினாலும், வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்க இராணுவ தீரச்செயல்கள் வெளிநாட்டில் விளைவிக்கும் குருதிப் பெருக்கு நாசம், மற்றும் முன்னோடியில்லாத வகையில் உள்நாட்டில் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல் இவற்றிற்கான அரசியல் எதிர்ப்பு சமுதாய போராட்டம் காணும் வகையில் ஒரு புதிய மக்கள் இயக்கமாக வெளிப்படும். வரும் பெப்ரவரிக்குச் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலவிய சூழ்நிலையினால் ஏற்பட்ட, உலகவரலாற்றிலேயே இதுகாறும் காணப்பட்டிராத அளவு நிகழ்ந்த சர்வதேச ஆர்ப்பாட்டங்களின் தன்மை மாறிவிடவில்லை. அத்தகைய நிலைமைகள் தீவிரம்தான் ஆகியுள்ளன.

புஷ்ஷின் போர், மற்றும் சமூக பிற்போக்குக் கொள்கைகளுக்கு, மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கும் என்று நம்பும் வகையில் எவரும் கூறமுடியாது. இந்த நிர்வாகத்தின் விதி இன்னும் நிர்ணயிக்கப்பட்டுவிடவில்லை. இதற்கு எதிராக எழுச்சியுற இருக்கும் மக்கள் இயக்கத்தின் அரசியல் தன்மையினால் அது நிர்ணயிக்கப்படும்.

இந்த இயக்கம் முழு நனவுடனும், அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட வேண்டும்; இதற்கான ஆயத்தங்கள் இப்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிர்வாகத்தை எதிர்த்துப் போரிடும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்; 2008 தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் கணக்குகளின் அடிப்படையில் அது இருக்கக் கூடாது; மாறாக, இப்போராட்டத்தினுள் ஈர்க்கப்பட இருக்கும், பெருகி வரும் தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றவர்களுடைய அரசியல் ரீதியாக தெளிவூட்டும் முறையில் அது இருக்க வேண்டும்.

புஷ்ஷுக்கு எதிர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய, சோசலிச அரசியல் நோக்குநிலை, போர், பிற்போக்குத்தனம் இவற்றின் அடித்தளத்தை சவாலுக்கு உட்படுத்தும் சக்தியுடைய, முதலாளித்துவ இலாப அமைப்பு முறையையே கவனிக்கும் போராட்டத்தை கட்டாயம் பொறுப்பெடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பெருகிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சக்திகளைத் திரட்டி, அவற்றை ஜனாநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்திற்காகவும் போராடும் வகையிலான போராட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும்.

See Also:

2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்


மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு -- பகுதி 1

Top of page