World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tsunami survivors in Sri Lanka's east speak to the WSWS

இலங்கையின் கிழக்கில் சுனாமியில் இருந்து உயிர்தப்பியவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடுகின்றனர்

By M. Aravindan and Sarath Kumara
8 January 2005

Back to screen version

டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கிழக்கு இலங்கை நகரமான அம்பாறை மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களில் சுனாமியில் இருந்து உயிர்பிழைத்தவர்களுடன் உரையாடினர். டிசம்பர் 26 அனர்த்தத்தால் இந்தப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 166,000 க்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். மேலும் 80,000 பேர் அகதி முகாங்களில் வாழ்கின்றனர்.

நாங்கள் பார்வையிட்ட எல்லா முகாமிலும் ஒரேவிதமான நிலமையே நிலவியது: அவை அரசாங்கத்தின் அக்கறையின்மை, அதிகாரத்துவ புறக்கணிப்பு, பயங்கரமான நிலைமகள் மற்றும் விசேடமாக கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளாகும். அதே சமயம், பல்வேறுபட்ட இன மற்றும் மதக்குழுக்களைச் சேர்ந்த சமூகத்தவர்களிடையில் முன்னெப்போதும் இல்லாத கடமையுணர்ச்சி காணப்பட்டது. அங்கு சாதாரண சிங்கள மக்களால் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் உதவிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பரந்த மதிப்பு இருக்கின்றது. சுனாமி அவலங்கள் சம்பந்தமான பிரதிபலிப்புகள், நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் போது ஆளும் கும்பலால் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களிடையே நனவுடன் திணிக்கப்பட்ட வேறுபாடுகளை கீழறுத்துவிட்டுள்ளன.

நாங்கள் டிசம்பர் 29 அன்று சரியாக 9.30 மணிக்கு அம்பாறை சத்தாதிஸ்ஸ வித்தியாலயத்தில் உள்ள அகதி முகாமை அடைந்தோம். இந்த முகாமில் கல்முனை, பண்டிருப்பு, காரைதீவு, நிந்தவூர் மற்றும் பெரிய நிலாவனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,300 க்கும் மேற்பட்ட அகதிகள் இருந்தனர். பிரதேசத்தில் உள்ள அமைப்புகளில் இருந்து இளம் தொண்டர்கள் காலை உணவை தயார் செய்துகொண்டிருந்தனர். சுமார் 250 அகதிகள் தமது வீடுகளில் ஏதாவது எஞ்சியுள்ளதா என பார்ப்பதற்காக பஸ்களில் ஏறிக்கொண்டிருந்தனர்.

சுகாதாரம் ஒரு பயங்கரப் பிரச்சனையாக இருந்தது. அங்கு இரண்டு மலசலகூடங்கள் மட்டுமே இருந்ததோடு அவை மோசமான நிலையிலேயே இருந்தன. இது எல்லா முகாம்களிலும் காணப்பட்ட பொதுவான பிரச்சினையாகும். சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்த போதிலும் அவை கடுமையான மழையின் காரணமாக விரைவில் நிரம்பிப்போயிருந்தன. தங்களது முறைப்பாடுகளை அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக அகதிகள் எம்மிடம் குறிப்பிட்டனர். அதே வேளை அகதிகளுக்கு உணவு மற்றும் துணிகள், தூங்குவதற்கான பாய்கள் மற்றும் படுக்கைகள் அரைகுறையாகக் கிடைத்திருந்தன. ஒரு பாடசாலையின் வகுப்பறைகளில் பெருந்தொகையானவர்கள் கூட்டமாக இருக்கின்ற நிலையில் தங்குமிடமும் ஒரு பிரச்சினையேயாகும்.

நாள் முழுதும் நாங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடினோம். பாடசாலையில் இந்துசமயம் கற்பிக்கும் 18 வயது ஆசிரியையான காரைதீவைச் சேர்ந்த ஜி. புனிதவதி, சூழவுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்கள் வழங்கிய உதவிகளை நன்றியுணர்வுடன் விபரித்தார். "யுத்த நிறுத்தத்தின் காரணமாக நாங்கள் அவர்களின் ஆதரவைப் பெற்றோம். யுத்தம் நீடித்திருக்குமானால் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும். இந்த முகாமில் இருப்பவர்களுக்கு சிங்கள மக்கள் உடை, உணவு, தண்ணீர், நுளம்புத் திரி மற்றும் ஏனைய பொருட்களையும் கொண்டுவந்து தந்தனர்," என அவர் குறிப்பட்டார்.

புனிதவதி பேரழிவுகளுக்கு முன்னர் மதாரை நகரில் சர்வோதயத்தல் (ஒரு சமூக சேவை நிறுவகம்) சேவையாற்றியுள்ளார். "நான் அங்கு ஒரு வாரம் இருந்த போது பெருந்தொகையான சிங்கள மக்களுடன் பேச முடிந்தது. அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியவர்கள் மற்றும் எல்லா தமிழர்களும் விடுதலைப் புலகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பிழையான புரிந்துணர்வு காணப்பட்டது. உரையாடல்களின் மூலம் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம்.

சுனாமியை அடுத்து அவரது குடும்பமும் கிராமத்தவர்களும் முகம்கொடுக்கின்ற சிரமங்களை அவர் விளக்கினார். "எனது தந்தை ஒரு ஓய்வுபெற்ற கல்வித் திணைக்கள ஊழியர். அவருக்கு மாதம் 5,000 ரூபா (ஏறத்தாழ 50 அமெரிக்க டொலர்கள்) மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும். நானும் ஒரு தொண்டர் ஆசிரியர், எனக்கு சம்பளம் கிடையாது. டிசம்பர் 28 அன்று நானும் எனது அப்பாவும் எங்கள் வீட்டை பார்க்கச் சென்றோம். அது தரைமட்டமாகியிருந்தது. இன்னமும் அங்கு சடலங்கள் கிடக்கின்றன.

"எனக்கு அங்கு போய் வாழ அச்சமாக இருக்கின்றது. மற்றும் அரசாங்கம் எங்களை ஆதரிக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் 10,000 அல்லது 15,000 ரூபாய்கள் கொடுக்கக் கூடும். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? கடைசியாக நடந்த தேர்தலில் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம். எனக்கு வாக்குரிமை இருக்கவில்லை, ஆனால் எனது பெற்றோர் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் எங்களைப் பார்க்கக் கூட வரவில்லை. இந்த பேரழிவிற்கு முன்னர் நாங்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தோம். ஒரு அரசாங்க அதிகாரிகூட எங்களை பார்வையிட்டு எந்தவொரு உத்தியோகபூர்வ நிவாரணமும் வழங்கவில்லை," என்றார்.

சுனாமிக்கு முன்னதாக வந்த வெள்ளம் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் 2,000 வீடுகள் அழிக்கப்பட்டதோடு 16,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கட்டிடத் தொழிலாளியான வி. மகேஸ்வரனும் இருந்தார்: "வெள்ளம் எங்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்ததால் சுனாமி தாக்கும் போது நாங்கள் கடலுக்கு நெருக்கமாக இருந்த எங்களது உறவினர் வீட்டில் இருந்தோம். அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை எனது வீடு மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. முதல் தடவையாக இங்கு வந்து எங்கள் நிலைமைகளைப் பற்றி கேட்பவர்கள் நீங்கள்தான். நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது நிவாரண நிதிகள் வழங்கப்படவில்லை. எனக்கு நிலையான தொழில் கிடையாது. எனது நாள் சம்பளம் வெறும் 300 ரூபா மட்டுமே. சில நாட்களுக்கு எனக்கு எந்த வேலையும் கிடைக்காது," என அவர் குறிப்பிட்டார்.

முகாமில் இருந்த ஒரு இளம் யுவதி பேசும் போது: "அனைத்தும் சுனாமியால் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு தொண்டர் குழு என்னை அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்காக ஒரு ட்றக் வண்டியில் ஏற்றியது. நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது ஒரு சிங்கள நகரம். எனது குடும்பம் என்னுடன் இருக்கவில்லை. ஒரு பகைமையான சூழலுக்குள் என்னை யார் பாதுகாப்பார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் பீதியடைந்திருந்தேன். எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் என நான் நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது பிழை.

"நான் அம்பாறைக்கு சென்றபோது, சிங்கள மக்கள் பற்றிய எனது எல்லா எண்ணங்களும் மாறிவிட்டன. அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எங்களுக்கு உணவும் உடையும் வழங்கினார்கள். அவர்கள் எங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் எங்களுக்காக உணவு சமைத்தார்கள். நாங்கள் சென்ற வழியில் முஸ்லிம் பிரதேசங்களையும் கடந்து சென்றோம். அவர்களும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று முன்னர் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது பிழை என்பதை புரிந்துகொண்டுள்ளேன். அவர்களும் சுனாமியில் பாதிக்கப்பட்டிருந்தும் கூட எங்களுக்கு உதவி செய்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்," என அவர் விளக்கினார்.

சுனாமியில் தங்களது குடும்பங்களை இழந்த ஆயிரக்கணக்கானவர்களில், அரசாங்கத்திற்கு சொந்தமான மத்திய போக்குவரத்துத் துறையில் மெக்கானிக் தொழில் செய்யும் சிவகுமாரும் ஒருவர்: "நான் கல்முனை போக்குவரத்து நிலையத்தில் தொழில் செய்கிறேன். எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இப்போது எனது மூன்று பிள்ளைகளும் எனது மனைவியும் உயிரிழந்துவிட்டனர். எனது மனைவியின் காலில் வருத்தம் இருந்ததால் நடக்கமுடியாமல் இருந்ததோடு ஒரு முச்சக்கர வண்டியைப் பயன்படுத்திவந்தார். அது அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனது வீடு முழுமையாக அழிந்துவிட்டது. எனது மூத்த மகள் மட்டுமே உயிர்தப்பியுள்ளார். அவள் அயலவர்களின் உதவியோடு தப்பியுள்ளாள்," என அவர் கூறினார்.

சிவகுமார் அரசாங்க உத்தியோகத்தர்களை குற்றம்சாட்டினார்: "எங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கவில்லை. உயர் அதிகாரிகளும் வானிலை அலுவலர்களும் இந்த அழிவை அனுமதித்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக செயற்பட்டிருந்தால் பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்."

கிழக்கின் பல பாகங்களைப் போல் கல்முனையும் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுனாமியை அடுத்து இரு சமூகத்தையும் சார்ந்த மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். "சாதாரணமாக தமிழர்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் வாக்களிப்பார்கள். ஆனால் இங்கு எங்களைப் பார்க்க ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் வேலை செய்வதற்காக சிங்களவர்கள் மட்டுமே வந்தார்கள். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம்," என சிவகுமார் விளக்கினார்.

முஸ்லிம் பிரதேசங்கள்

உலக சோசலச வலைத் தள நிருபர்கள் குழு, கடந்த வருடம் அயலில் உள்ள தமிழர்களுடன் இனவாத பதட்டநிலைமைகள் கிளறிவிடப்பட்டிருந்த, முஸ்லிம்கள் நிறைந்த சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள ஒரு அகதி முகாமிற்குச் சென்றது. இந்த முகாம் இரு சமூகங்களையும் சார்ந்த இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பியிருந்ததுடன், சுனாமி தாக்கியதில் இருந்து அவர்களுக்கு உணவும் அவசர தங்குமிடங்களும் வழங்கப்பட்டிருந்தன. கடந்த காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவு திரட்டுவதற்காக பேரினவாதத்தை பயன்படுத்திய போதிலும், இந்த அவலங்கள் இன மத பேதங்களை தகர்த்துள்ளன.

மருதமுனை பிரதான நிவாரண மையத்தில் வேலைசெய்துகொண்டிருந்த ஒரு தொண்டர், அப்துல் ஹலாம் எங்களுடன் பேசியபோது: "நாங்கள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படாத கிராமத்தவர்களை வந்து எங்களுக்கு உதவுமாறு அழைப்புவிடுத்தோம். பெருந்தொகையான இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள். டிசம்பர் 28 அன்று இங்கு சுமார் 2,000 தொண்டர்கள் இருந்ததோடு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளார்கள். சடலங்களைக் கண்டுபிடித்தல், துப்புரவு செய்தல், அகதிகளுக்கு உதவுதல் போன்ற அனைத்தையும் இந்தத் தொண்டர்களே செய்கின்றார்கள். பிரதான பாதை தடைப்பட்டுள்ளதால் அவர்கள் இங்கு வர வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் வந்துசேர்ந்துள்ளார்கள். தமிழ் பிரதேசங்களில் உள்ள சில அகதி முகாம்களில் உதவிகள் பற்றாக்குறையாக இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆகவே இன்று எங்களுக்கு கிடைத்த நிவாரணங்களில் சிலவற்றை அங்கும் அனுப்பிவைத்தோம்," என்றார்.

இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மீனவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகும். அவர்களது சராசரி மாத வருமானம் 5,000 ரூபாய்கள். இங்கு ஒன்பது அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கிணறுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாசுபட்டுள்ளதால் தண்ணீர் வெளியில் இருந்தே வழங்கப்பட வேண்டியுள்ளது.

நாங்கள் மருதமுனைக்கு அருகில் சுனாமியால் அழிக்கப்பட்ட அக்பார் கிராமத்தில் உயிர்தப்பியவர்களுடன் உரையாடினோம். கிராமத்திலும் அதைச் சூழவுள்ள பிரதேசத்திலும் இருந்த 6,000 மக்களில் குறைந்தபட்சம் 2,500 பேர் பலியாகியுள்ளனர். உயிர்தப்பிய ஒருவரின்படி, ஒரு பெரும் குடும்பத்தின் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிர்தப்பியவர்களில் சிலர் இன்னமும் அதிர்ச்சியுடன் இருப்பதோடு பேசமுடியாமலும் உள்ளனர்.

அல்மா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொகமட் சாமிர்: "எனது குடும்பம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். சுனாமி தாக்கிய போது நான் வீட்டில் இருந்தேன். முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கவில்லை. நான் பாடசாலையின் மாடிப்பகுதிக்கு ஓடினேன். ஓட முடிந்தவர்கள் தப்பிக்கொண்டார்கள். பெண்கள், முதியவர்கள், சிறு பிள்ளைகள் மற்றும் விழுந்தவர்கள் எல்லோரும் பலியாகினர். இரண்டு நாட்கள் நாங்கள் சாப்பாடு இல்லாமல் சிரமப்பட்டோம். டிசம்பர் 28, நேற்று முதற்தடவையாக எங்களுக்கு போதுமான உணவு கிடைத்தது.

"அரசாங்கம் உதவவில்லை. அரசியல் கட்சிகள் உதவவில்லை. சாதாரண மக்கள் மட்டுமே எங்களுக்கு உதவிசெய்தனர். என்னுடைய எல்லா புத்தகங்களும் அழிந்துவிட்டன. இந்த அவலத்தின் பின்னர் எனது படிப்பைத் தொடரமுடியும் என நான் நினைக்கவில்லை. எங்களது ஆங்கில ஆசிரியை கொல்லப்பட்டுள்ளார். எமது அஹமட் ஸரவ்டீன் பாடசாலை தரைமட்டமாகியுள்ளது," எனத் தெரிவித்தார்.

1999ல் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மொஹமட் ஹசன் எங்களுடன் உரையாடும் போது: "எனது பல்கலைக்கழக படிப்பை முடித்த பின்னரும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அரசாங்கத்தால் சம்பளம் வழங்கப்படும் பட்டதாரிகள் பயிற்சித் திட்டத்திற்கு சென்றேன். அதில் எனக்கு 6,000 ரூபா கிடைத்தது. அதற்கு முன்னர் நான் சில சிறு தொழில்கள் செய்து வந்தேன்.

"எனது அப்பா ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். நாங்கள் இங்கிருக்கப் பயப்படுகிறோம். நாங்கள் இந்த இடத்தை விட்டுப் போகத் திட்டமிட்டாலும் எங்கு போவதென்று தெரியவில்லை. எங்களை உறவினர்களும் நண்பர்களும் பராமரிக்கின்றார்கள். அவர்களால் எவ்வளவு காலத்திற்கு இந்த உதவியைத் தொடர முடியும்? நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நிலமைக்குத் திரும்புவதற்கு 25 வருடங்கள் ஆகும். நான் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடுவதிலும் அடக்கம் செய்வதிலும் ஈடுபட்டேன். இப்போது எனது கைகளில் ஒருவிதமான சொறி வந்துள்ளது," எனத் தெரிவித்தார்.

சுனாமியில் அனைத்தையும் இழந்த காதர் நுபாயிஸ்: "நான் கட்டாரில் மூன்று வருடங்கள் சாரதியாக இருந்தேன். காது குத்துவதில் தொடங்கி நான் ஒரு நகைக் கடையை ஆரம்பித்தேன். ஆனால் இப்போது கடை தரைமட்டமாகிவிட்டது. கடை எனது வீட்டின் முன்பக்கத்தில் இருந்தது. எனது வீடு, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் போய்விட்டன. நான் மீண்டும் வெளிநாடு செல்வது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். நான் இங்கிருக்க வேண்டியதில்லை.

50 வயதான பாதுகாப்பு உத்தியோகத்தரான மொஹமட் அலியும் தனது வீட்டை இழந்துள்ளார். "நானும் எனது மனைவியும் சவுதி அரேபியாவில் 10 வருடங்கள் வேலை செய்து சம்பாதித்ததில் இந்த வீட்டைக் கட்டினோம். இப்போது எல்லாம் போய்விட்டன. நாங்கள் மூன்று இறந்த உடல்களை தரைமட்டமான வீட்டுக்குள் இருந்து எடுத்தோம். வெளியில் 15 சடலங்கள் கிடந்தன. நான் 23 உறவினர்களை இழந்துவிட்டேன்.

"நான் எப்படி இன்னொரு வீட்டைக் கட்டுவது? எனக்கு வயது போய்விட்டது. நான் உறவினர்களுடன் வாழ்கிறேன். எனது இரு மகள்களும் தங்களது வீட்டை இழந்துவிட்டனர். அவர்கள் இங்கு வாழவும் பயப்படுகின்றனர். நான் கொழும்பில் வேலை செய்கிறேன், நான் மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டும். ஆனால் என்னால் என் மனைவியையும் குடும்பத்தையும் இங்கு விட முடியாது. அவர்கள் தனிமையில் இருக்க அஞ்சுகிறார்கள்."

பல அகதிகள் அரசியல் ஸ்தாபனத்தையிட்டு ஆத்திரமடைந்துள்ளார்கள். 36 வயது ஆசிரியரான அப்துல் ஹக்கீம் அக்பர் கிராமத்தின் கரையோரத்தில் வசித்துவந்துள்ளார். அவருக்கு அந்த வீட்டைக் கட்டுவதற்கு ஆறு வருடங்கள் கடந்துள்ளன. இப்போது அனைத்தும் இழந்து அவரது உறவினர்களில் 16 பேரையும் இழந்துள்ளார். "நாங்கள் அரசாங்க உதவியை எதிர்பார்க்கின்றோம், ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியும் வழக்கப்படவில்லை," என அவர் குறிப்பிட்டார்.

உயிர்தப்பிய ஒருவர் குறிப்பிடும் போது: ஐக்கிய தேசியக் கட்சியும் (எதிர்க் கட்சி) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் (ஸ்ரீ.ல.மு.கா) எதுவும் செய்யவில்லை. ரவுப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரப்பும் (ஸ்ரீ.ல.மு.கா தலைவர்) வருகை தந்தார்கள். ஆனால் எங்களுக்கு உதவி கிடைக்கும் என அவர்கள் வாக்குறுதியளிக்கவில்லை. இங்கு ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் பலியாகியுள்ளனர். பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சிகண்டுள்ளன. எங்களது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு எங்களுக்கு அரசாங்க உதவி தேவை."

கல்லாறு

டிசம்பர் 31, நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான அரசாங்க ஊழியர்கள் வாழும் பெரிய கல்லாறு பிரதேசத்திற்குச் சென்றோம். ஏனையவர்கள் தச்சுவேலை, கட்டுமான வேலை, மீன்பிடி மற்றும் நிலையற்ற தொழில்களை செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். சுனாமி இரு திசைகளிலும் வீதிகளை சேதமாக்கியுள்ளது. உயிர் தப்பியவர்கள் ஒரு பக்கம் கடலாலும் மறுபக்கம் கடல் ஏரியாலும் சூழப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக பிரதேசத்திற்கு உணவு கிடைக்காததால் மக்கள் பட்டினி கிடந்தார்கள். பிரதேச வைத்தியசாலை பேரலைகளால் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.

உலக சோசலச வலைத் தள நிருபர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டார்கள். முதியவர்கள் மற்றும் பெண்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் உட்பட சுமார் 20 பேர் தங்களது பிரச்சினைகள் அனுபவங்களைப் பற்றி பேச வந்தனர்.

ஒரு இளம் குடும்பப் பெண்னான சுமதி: "எனது வீடு கடலுக்கு அருகில் இருந்தது. நான் அலைகள் வருவதைக் கண்டேன். நான் ஏனைய வீடுகளுக்கும் ஓடி எச்சரித்ததால் அவர்களால் தப்ப முடிந்தது. பெரும்பாலானவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் நாசமாகியுள்ளன," என விபரித்தார்.

அவரது குடும்பத்தின் அவல நிலையை விபரித்த அவர்: "எங்கள் வீடு முற்றாக அழிந்து விட்டது. வீட்டுப் பொருட்களில் எதுவும் மிஞ்சவில்லை. ஒரு கட்டிடத் தொழிலாளி 500 ரூபா பெறும் போது ஒரு கூலித் தொழிலாளி 300 ரூபா மட்டுமே பெறுவார். சில சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு எதுவும் அகப்படாது. நான் பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டேன். ஆனால் எனக்கு தொழில் கிடைக்கவில்லை. எனது கணவருக்கு நிலையான தொழில் கிடையாது. அவரும் அன்றாட தொழிலே செய்கின்றார். சாதாரணமாக அவர் ஒரு நாளுக்கு 200 ரூபா பெறுவார். ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை.

"சிங்கள மக்கள் எங்களுக்கு நிறையவே உதவி செய்துள்ளார்கள். இன்று முதல் நிவாரணங்களை விநியோகிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் எல்லாப் பொருட்களும் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கப்படி பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் சாரதியாகத் தொழில் புரியும் சுந்தரலிங்கம்: "விடுதலைப் புலிகளும் விசேட அதிரடிப் படையினரும் (பொலிஸ் கொமான்டோக்கள்) எங்களுக்கு உதவிய போதிலும், எங்களுக்கு உதவுவதற்காக தூரத்திலிருந்து சிங்கள மக்கள் வந்தார்கள். நாங்கள் அதை மறக்க மாட்டோம். முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போக்குவரத்து பிரச்சினை இருந்ததால் எங்களுக்கு உணவு கிடைத்திருக்கவில்லை. நாங்கள் பட்டினி கிடந்தோம்," என விளக்கினார்.

கல்லாறு மத்திய கல்லூரியின் 12 வயது மாணவனான லக்ஷான்: "எனது பாடசாலையும் சேதமாகியுள்ளது. சிங்கள மக்கள் வந்து எங்களுக்கு உதவினார்கள். நாங்கள் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். எங்களுக்கு இன, மத மற்றும் மொழி வேறுபாடுகள் தேவையில்லை. எங்களுக்கு யுத்தமும் தேவையில்லை. எங்களுக்கு எந்தவொரு தனி (தமிழ்) நாடும் தேவையில்லை. நாங்கள் சிங்களவர்களுடன் வாழ வேண்டும். பாதை திருத்தப்பட்டவுடன் எங்களுக்கு முதலாவதாக நிவாரணப் பொருட்களை எடுத்து வந்தது சிங்கள மக்கள்தான்," என்றார்.

சுனாமி, விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்களை நல்லபடியாக முடிவுக்குக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பை சுந்தரலிங்கம் வெளிப்படுத்தினார். "யுத்தத்தின் போது நாங்கள் பயத்துடனேயே வாழ்ந்தோம். 2001 யுத்த நிறுத்தத்தில் இருந்து நாங்கள் பிரச்சினையின்றி வாழ்கின்றோம். இது சமாதானத்திற்கான சந்தர்ப்பம். இந்த அழிவின் மூலம் கடவுள் எல்லோரையும் ஐக்கியப்படுத்தியுள்ளார்."

இன்னுமொருவர் பேசும்போது: "அனைவரும் ஓன்றிணைந்து ஓன்றாக வேலை செய்கின்றனர். எங்களுக்கு நடந்ததைப் பார்த்து சிங்கள மக்கள் அழுதார்கள். நாங்கள் தொடர்ந்தும் இன, சாதி அல்லது மத வேறுபாடுகளைக் கொண்டிருக்கக் கூடாது. அதே வழியில் அரசாங்கமும் மக்களை வேறுபடுத்தக் கூடாது," என்றார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் (கண்டி) கலைப்பீட இறுதியாண்டு மாணவியான துசார்ஸினி மக்களுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டார். "முதலில் அராசங்கம் வீதியைத் திருத்த வேண்டும். எங்களது வைத்தியசாலை சேதமாகியுள்ளது. தேவைப்படும் போது நாங்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும். ஒரு வீதி இல்லாமல் நாங்கள் எப்படி செல்வது? சுனாமி தாக்கியபோது நான் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்றுத்தான் இங்கு வந்தேன். பஸ் இருக்காததால் நடந்தே வந்தேன். எங்களுக்கு இழப்புக்கள் அதிகம். எங்களுக்கு யுத்தம் தேவையில்லை. மீன்டும் யுத்தம் வெடித்தால் நாங்கள் முடிந்துவிடுவோம். நாங்கள் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும். சிங்கள மக்கள் எங்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றார்கள்."

சுந்தரலிங்கம் மேலும் கூறியதாவது: "அரசாங்கம் வீதியை உடனடியாகத் திருத்த வேண்டும். அதுதான் முதல் விடயமாக இருக்க வேண்டும். மக்கள் கடலுக்கு அருகில் வீடுகளை மீளக்கட்ட அஞ்சுவதால் அரசாங்கம் கடற்கரைக்கு அப்பால் பொருத்தமான நிலங்களை கொடுக்க வேண்டும். உதவியின்றி வீடுகளை மீண்டும் கட்ட பல வருடங்களாகும். ஆகவே அரசாங்கம் புதிய வீடுகளைக் கட்ட உதவவேண்டும்."

கொழும்புக்குத் திரும்புவதற்கு முன்னர், ஜனவரி 1 அன்று பண்டாரநாயக்க பாடசாலையில் தங்கியிருந்த உயிர்தப்பிய இளைஞர்களுடன் உரையாடினோம். ஏனைய இடங்களில் உள்ள தமிழ் அகதிகளைப் போலவே, அவர்களும் சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தவர்களின் உதவிக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினர். இந்த அழிவில் இருந்து நாங்கள் நிறையவே கற்றுக்கொண்டோம்," என ஒரு மாணவியான சியானி கூறினார். "அரசாங்கம் எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் மட்டுமே எங்களுக்கு ஆதரவளித்தார்கள்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கு உடன்பட்ட பிரவி என்னும் ஒரு இளைஞர்: "சிங்களவர்கள், முஸ்லிம்களும் மற்றும் தமிழர்களும் ஒன்றாக ஐக்கியப்பட வேண்டும். விடுதலைப் புலிகளும் மக்களுக்கு உதவுகின்றனர். எங்களுக்கு தனியான தமிழீழ அரசு தேவையில்லை," என்றார். "எங்களுக்கு தமிழீழம் தேவையில்லை. நாங்கள் சிங்களவர்களுடனும் முஸ்லிம்களுடனும் ஐக்கியமாக வாழவேண்டும்," என ஒரு யுவதியும் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved