:
ஆசியா
:
இலங்கை
Under the guise of "humanitarianism", US
marines land in Sri Lanka
மனிதாபிமானம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படை இலங்கையில் தரையிறங்கியுள்ளது
By K. Ratnayake
12 January 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
டிசம்பர் 26 சுனாமி, தீவில் விசாலமான பிரதேசங்களை அழிவுக்குள்ளாக்கியதை
அடுத்து நிவாரண நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்காக சுமார் 200 அமெரிக்க துருப்புக்கள் இலங்கையில் தரையிரங்கியுள்ளன.
ஏற்கனவே தென் நகரமான காலியை வந்தடைந்திருந்த சிப்பாய்களுடன் இணைந்துகொள்வதற்காக கடந்த திங்களன்று
மேலும் 100 சிப்பாய்கள் புல்டோசர், ட்றக்குகள் மற்றும் ஏனைய கனரக உபகரணங்களுடன் யூ.எஸ்.எஸ் துலுத்
என்ற கப்பலில் இருந்து கொக்கலைக்கு அருகில் தரையிரங்கினர்.
வாஷிங்டனும் கொழும்பும் மனிதாபிமான காரணங்களுக்காகவே துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக
வலியிறுத்துகின்றன. ஆயினும் இலங்கை, இந்தோனேசியா மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நாடுகளிலும் அமெரிக்க இராணுவம்
நிலைகொண்டிருப்பதற்கான உண்மையான உள்நோக்கம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை
முன்னேற்றுவதேயாகும்.
டிசம்பர் 26 அழிவுகள் சம்பந்தமான அமெரிக்கவின் உத்தியோகபூர்வ பிரதிபலிப்புகள்,
பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றி அமெரிக்க ஆளும் வட்டாரத்துக்குள் நிலவும் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும்
அம்பலப்படுத்துகிறது. ஜனாதிபதி புஷ் மூன்று நாட்கள் இதுபற்றி முற்றிலும் மெளனமாக இருந்தார். இறுதியாக ஒரு
அறிக்கையை வெளியிடத் தள்ளப்பட்ட போது, அமெரிக்கா முதலில் வழங்கிய 10 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை
35 மில்லியன் டொலர்களாக அதிகரித்தார். முடிவாக விருப்பத்திற்கு மாறாக இந்ந முழுத் தொகையும் 350 மில்லியன்
டொலர்களாக அதிகரிக்கப்பட்டன.
அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதற்கான பிரேரணை, ஜனவரி 1 அன்று அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோருக்கிடையில்
இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது முன்வைக்கப்பட்டது. அன்று பிற்பகலே இலங்கைக்கான அமெரிக்கத்
தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டீட், நாட்டில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 1,500 அமெரிக்க கடற்படையினர்
வந்துசேரவுள்ளதாக அறிவித்தார்.
இந்த முடிவும் மற்றும் அது எடுக்கப்பட்ட விதமும் இலங்கை ஆளும் வட்டாரத்தில்
நெருக்கடியை தோற்றுவித்தது. இந்த விவகாரத்தை கலந்துரையாட அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவில்ல,
இந்தப் பிரேரணைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக பாராளுமன்றமும் கூடவில்லை. 1948 சுதந்திரத்தின் பின்னர்
பெருமளவிலான அமெரிக்க துருப்புக்கள் இலங்கை மண்ணில் கால்பதிப்பது இதுவே முதற்தடவையாகும்.
ஜனவரி 6 டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கொஞ்சம்
அக்கறையை வெளிப்படுத்தியது. அது "தலையில் சிந்திப்பதற்குப் பதிலாக இதயத்தில் சிந்திக்கின்ற மற்றும் பூகோள
அரசியல் நிபந்தனைகளினதும் நிகழ்ச்சி நிரலின் பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல்களினதும் நீண்டகால விளைவுகளைப்
பற்றி நோக்குவதற்குப் பதிலாக சில குறுகிய கால இலாபங்களை பற்றி சிந்திக்கின்ற" போக்கிற்கு எதிராக
எச்சரிக்கை செய்துள்ளது.
இலங்கையை மற்றும் சிறப்பாக திருகோணமலை துறைமுகத்தையும் மத்திய ஆசியா
மற்றும் மத்திய கிழக்கிலான தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அமெரிக்காவின் குறிக்கோளைப்
பற்றியும் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது. "இந்த சூழ்நிலையின் படி, இரு அமைச்சர்களும் தொலபேசியின் மூலம்
ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில், அமெரிக்க துருப்புக்கள் ஒரு யுத்தக் கப்பலுடன்
நிலைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன," என அது குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் நிவாரணப் பணிகளில் எந்தவொரு அமெரிக்க இராணுவத்
தலையீட்டுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. "தமது அரசியல் மற்றும் இராணுவ நலன்களை அடிப்படையாகக்
கொண்டுள்ள" அமெரிக்க மற்றும் இந்தியத் துருப்புக்கள், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக ஒற்றர் வேலைகளில்
ஈடுபட்டு கொழும்பு அரசாங்கத்திற்கு தகவல்களை வழங்கும் என ஒரு விடுதலைப் புலி பேச்சாளர் ஊடகங்களுக்குத்
தெரிவித்தார். இரு நாடுகளும் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக தமது பட்டியலில் தொடர்ந்தும்
பேணிவருகின்றன.
இந்த எதிர்ப்புக்கள், இலங்கையில் உள்ள ஆளும் கும்பலின் பல்வேறு தட்டுக்களின்
நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடும் என்ற அக்கறையை வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன் அமெரிக்க
இராணுவத்தை வெட்கங்கெட்டு தழுவிக்கொள்வதானது, பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் கொள்ளை
நடவடிக்கைகளை எதிர்ப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட உழைக்கும் மக்களின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்ற
பீதியும் இருந்துகொண்டுள்ளது.
இந்த உணர்வு சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை பின்தள்ள
வழிவகுக்கும் காரணிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஜனவரி 5 அன்று, இழுவை இயந்திரங்கள், ட்ரக்குகள்
மற்றும் காலியில் 1,300 கடற்படையினரை தரையிறக்கவிருந்த மூன்று பிரமாண்டமான தரையிறங்கு விமானங்களை
தாங்கி வந்துகொண்டிருந்த யூ.எஸ்.எஸ் பொன்ஹோம்மி கப்பல் திடீரென இந்தோனேசியாவில் நிவாரண
முயற்சிகளுடன் இணைவதற்காக திருப்பப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனம் மாறி அமெரிக்கா கொடுத்ததை
திருப்பிவிடுவதற்கு தீர்மானத்ததாக சில ஊடகங்களில் அறிக்கைகள் கசிந்திருந்தன.
இந்த முடிவு பிரச்சினையைத் தீர்க்கவில்லை. பவல் கடந்த வெள்ளியன்று கொழும்புக்கு
விஜயம் செய்திருந்தபோது, மேலும் முன்செல்வதற்கான அமெரிக்காவின் தீர்மானத்தை கோடிட்டுக் காட்டினார்.
"நாங்கள் நீண்ட காலத்திற்கு இங்கு இருப்போம்... எங்களது இராணுவப் படைகள் இந்தப் பிராந்தியத்தில்
இருக்கின்றன. அவர்கள் எவ்வளவு காலம் தங்கியிருப்பார்கள் என்று என்னால் கூறமுடியாது. நாளடைவில்
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் உள்ளன," என அவர் குறிப்பிட்டார். ஆயினும் செவ்வாய்க் கிழமையளவில்
அமெரிக்கத் தலையீடு 1,500 கடற்படையினரில் இருந்து 300 வரை குறைக்கப்பட்டிருந்தது.
படையினரின் பரிமாணம் எவ்வளவாக இருந்தாலும், குறிக்கோள்கள் தெளிவானவை.
புஷ் நிர்வாகம் அக்கறை செலுத்துவது போல், இந்த நிவாரணப் பணிகள் ஒரு முக்கியமான முன்னோடி நிகழ்ச்சியாக
இருப்பதோடு, தீவில் அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக நீண்டகாலமாக இருந்துவரும் எதிர்ப்பை
தகர்ப்பதற்கும் சுரண்டிக்கொள்ளப்பட உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற
நாடுகளுக்கு "உதவுவதற்காக" யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற இராட்சத கப்பல், அதே போல் யுத்த
விமானங்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் 13,000ற்கும் மேற்பட்ட துருப்புக்கள் உட்பட 20 யுத்தக் கப்பல்களை
தெற்காசிய கடல்பரப்பிற்கு பென்டகன் அனுப்பிவைத்துள்ளது. இது 1975ல் வியட்னாம் யுத்தத்தின் முடிவின் பின்னர்
இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் இராணுவக் குழுவாகும்.
வாஷிங்டன் தனது இராணுவத் தலையீட்டை மீள ஸ்தாபிப்பதை நீண்டகாலக்
குறிக்கோளாகக் கொண்டுள்ளது. புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பதாகையின் கீழ்
ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அடிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்தியாவுடனான நெருக்கமான
மூலோபாய உறவு, பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய நாடுகளுடனான இராணுவவியல் ஒழுங்குகள் உட்பட தெற்காசியா
முழுவதும் தனது இராணுவ உறவுகளை பலப்படுத்திக்கொண்டுள்ளது.
ஆனால் அங்கு எதிர்ப்புகள் இருந்துவந்துள்ளன. 2002ல் இலங்கையில் ஐக்கிய தேசிய
முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துடன் புஷ் நிர்வாகம் கையேற்றல் மற்றும் அந்நியோன்ய சேவை உடன்படிக்கை
ஒன்றைக் கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கை அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு தீவின் விமானத் தள
பிரதேசங்கள், துறைமுகங்கள் மற்றும் விமானத் தளங்களைப் பயன்படுத்தும் வசதியை வழங்கும். ஆயினும் கொழும்பு
இந்த ஏற்பாடுகளை நழுவவிட்டதுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை.
கடந்த ஆண்டு "பயங்கரவாத" அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் என்ற
பெயரில், மூலோபாய மலாக்கா நீரிணையில் நிரந்தர கடற்படை ரோந்தை ஸ்தாபிக்க வாஷிங்டன் பிரேரித்தது.
இந்தக் கடல்பகுதி லொம்பொக் நீரிணையையும் சேர்த்து, பாரசீக வளைகுடாவில் இருந்து ஜப்பான், தென்
கொரியா மற்றும் சீனாவுக்கான தீர்க்கமான எண்ணெய் வளங்கள் உட்பட உலக வர்த்தகத்தின் சுமார் அரைப்
பங்கிற்கான கடல் பாதையாகும். அயல் நாடுகளான இந்தோனேசியாவும் மலேசியாவும், உதவிகள் இன்றியே
கப்பல் போக்குவரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனக் கூறி இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.
இப்போது, சுனாமி வெடித்ததை அடுத்து, அமெரிக்கா யுத்த கப்பல்களை
கடற்கரைக்கு அப்பால் நிறுத்தியுள்ளதோடு இலங்கையிலும் மற்றும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ள
இந்தோனேஷிய மாகாணமான அசே பிரதேசத்திலும் தரையில் துருப்புக்களை நிறுத்தியுள்ளது.
கொழும்பு ஆளும் வட்டாரத்தில் என்னதான் அச்சம் நிலவினாலும், அமெரிக்க
இராணுவம் நிலைகொண்டிருப்பதை எவரும் பகிரங்கமாக சவால் செய்யவோ அல்லது அதன் உள்நோக்கத்தைப் பற்றி
சாடைகாட்டுவதை விட மேலதிகமாக எதனையும் செய்யவோ இல்லை. இதே "மனிதநேய" இராணுவம்,
பத்தாயிரக்கணக்கான ஈராக்கிய உயிர்களைப் பலிகொண்ட ஈராக் மீதான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை
நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதையிட்டு எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியும், வலதுசாரி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியும் அமெரிக்கத் துருப்புக்களை கைகளை விரித்து
வரவேற்றன.
சுதந்திர முன்னணியானது தரங்கெட்ட "இடதுகளான" இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
லங்கா சமசமாஜக் கட்சியையும் (ல.ச.ச.க) உள்ளடக்கிக்கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ஈ.டபிள்யு.
குணசேகர, தற்போதைய நிலைமையில் அமெரிக்காவிடம் இருந்து உதவி பெறுவது ஒரு விவகாரமே அல்ல என தனது
கட்சி நம்புவதாக தெரிவித்துள்ளார். சற்றே ஒரு இடதுசாரி பாவணையைக் காட்டிய ல.ச.ச.க அமைச்சர் திஸ்ஸ
விதாரன, தனது கட்சி "அடிப்படையில்" ஏகாதிபத்திய துருப்புக்கள் தலையீடு செய்வதை எதிர்த்த போதிலும்
நடைமுறையில் எதையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர முன்னணியின் இரண்டாவது பங்காளியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி),
தீவிரவாதம், சிங்களப் பேரினவதம் மற்றும் சோசலிச வாய்வீச்சுக்களையும் கூட சேர்த்த ஒரு கலவையின் மூலம்
தனது செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. அதன் தலைவர்கள் கடந்த காலத்தில் உரத்த ஆனால் வெற்று
ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்களின் ஊடாக, சிறப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு தனிச்சிறப்பை
கட்டியெழுப்பினர். ஆயினும், தற்போதைய நிலைமையில் அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கியுள்ளது பற்றி ஒரு
வார்த்தையைக்கூட வெளிவிடவில்லை.
கடந்த தசாப்தத்தில், விசேடமாக புஷ் நிர்வாகம் அதன் "பயங்கரவாதம் மீதான
யுத்தத்தை" முன்னெடுத்ததில் இருந்து, இந்த எல்லாக் கட்சிகளும் எந்தவொரு ஏகாதிபத்திய விரோத
பேச்சுக்களையும் முற்றிலும் கைவிட்டுவிட்டன. செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, கொழும்பில்
உள்ள அரசியல் ஸ்தாபனம், தனது சொந்த "பயங்கரவாதம் மீதான யுத்தத்தை" --நாட்டின் தமிழ் சிறுபான்மையினரின்
உரிமைகளை நசுக்கும் நீண்ட உள்நாட்டு யுத்தம்-- அமெரிக்காவின் பட்டியலில் சேர்த்துவிட முயற்சித்தது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த அனைத்துக் கட்சிகளும் வியட்னாம் யுத்தத்திற்கு
எதிரான வெகுஜன இயக்கத்திற்கு அடிபணியத் தள்ளப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமெரிக்க சார்பு வலதுசாரித்
தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவும் கூட ஒரு அழிவுச் சம்பவத்தின் போது தீவுக்கு அமெரிக்கத் துருப்புக்களை
அழைக்க கனவுகண்டிருக்க மாட்டார். 1980களில் இரனவிலவில் பிரமாண்டமான வானலை மாற்றிகளை அமைக்க ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு உறுதியான போராட்டங்களை தோற்றுவித்தது. இன்று இதே
கட்சிகள் அமெரிக்க கடற்படைகள் தரையிறங்குவதை முனுமுனுப்புகள் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளன.
Top of
page |