:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Marxism, the International Committee, and the science of perspective: an
historical analysis of the crisis of American imperialism
மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய
நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு
By David North
11 January 2005
பகுதி 1 |
பகுதி 2 |
பகுதி 3
Use this
version to print |
Send this link by email |
Email the author
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் குழு, மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில்
கடந்த 8-9 ஜனவரி வார இறுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய
செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் இதன் ஆரம்ப
உரையை வழங்கினார். இந்த அறிக்கை மூன்று பகுதிகளாக வெளியிடப்படும். முதல் பகுதி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் கூட்டத்தை ஆரம்பித்து வைக்கையில்,
கடந்த மாதம் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளை தாக்கிய சுனாமி அலைக் கொந்தளிப்பால் தெற்கு ஆசியாவில்
மடிந்துவிட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுடைய நினைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிஷம் மெளனம்
கடைப்பிடிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
உலகம் முழுவதில் இருந்தும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆழ்ந்து உணரப்பட்ட இரங்கல் வெளிப்படுத்தப்படுவதுடன்,
ஓர் உண்மையான ஒற்றுமையுணர்வின் வெளிப்பாடும் தோன்றியுள்ளன. விருப்பமற்ற, பாசாங்குத்தனமான, சடங்கு
போல் தெரிவிக்கப்படும் அக்கறைகளை அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் வெளிப்படுத்தியதிலிருந்து,
உண்மையான துன்பஉணர்வின் வெளிப்பாடுகள் எத்துணை வேறுபட்டதாக இருந்தன! எவரும் நம்பக்கூடிய வகையில், பேரழிவினால்
சிதைந்துள்ள மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வைப்பற்றியும், அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகள் பற்றியும்
புஷ்ஷினாலோ, பிளேயரினாலோ எடுத்துக் கூற முடியாது
இப்பேரழிவை வெள்ளை மாளிகை எதிர்கொண்ட முறையினால் செய்தி ஊடகம்கூட
பெரும் சங்கடத்திற்குள்ளாயிற்று; இன்னும் சுருக்கமாகக் கூறினால், கண்ணெதிரே, படர்ந்து விரிந்திருந்த
இச்சோகத்தைப் பற்றி எதிர்கொள்ளாமல் நடந்த முறை சங்கடத்தை கொடுத்தது. முதலில், தன்னுடைய டெக்சாஸ்
பண்ணைவீட்டில் ஜனாதிபதி வெறுமனே உலாவிக் கொண்டிருக்கையில் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரியோ ஒரு
எகிப்திய கடற்கரையில், சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகளான விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலையற்று, சூரிய
வெளிச்சத்தால் தன்னுடைய உடலைப் பழுப்பாக்கிக் கொள்ளும் வகையில் உலாவிக் கொண்டிருந்தபொழுது,
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தொடர்ந்திருந்த அசாதாரண மெளனம். இதன் பின் அற்பத்தனமாக முதலில் $15
மில்லியன் உதவித் தொகை என்று அறிவித்து, விருப்பமற்று $35 மில்லியனாக அது உயர்த்தப்பட்டு, இன்னும் பின்னர்
வெள்ளை மாளிகையின் கருமித்தனம் உலகம் முழுவதும் ஏளனத்துடன் எள்ளி நகையாடப்பட்டபோது $350 மில்லியனாக
உயர்த்தப்பட்டமை ஆகியவை நிகழ்ந்தன. மக்களைக் கொல்லுவதற்காக, அதிலும் குறிப்பாக ஈராக்கில்,
செலவழிக்கப்படும் பணத்துடன் ஒப்பிடும்பொழுது $350 மில்லியன் என்பது வெறும் சில்லறைச் செலவுபோல்தான்
என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
சொல்லப்போனால், $350 மில்லியன் என்பது, ஒவ்வொரு ஆண்டும் ஊதியம், பங்குகளில்
இருந்து சாத்தியமான (Stock Options) வகையில்
உயர்மட்டத்தில் இருக்கும் பெருநிறுவன நிர்வாக அதிகாரிகள் 500 பேருக்குக் கொடுக்கப்படும் தொகையில் ஒரு
மிகச் சிறிய சதவிகிதம்தான். அத்தொகை பில்லியன்களின் மடங்கில் டாலர்களில் பெருத்துள்ளதாகும். 2003ம்
ஆண்டில் MBNA இன்
Charles M. Cawley உடைய மொத்த ஊதியம்
$45 மில்லியனைக் கடந்திருந்தது; Merrill Lynch
நிறுவனத்தின் ஸ்ரான்லி ஓ நீல் பெற்ற ஊதியம் $28.3 மில்லியன் டாலர்கள் ஆகும்;
Aflac நிறுவனத்தின் டானியல் பி.அமோசுடைய ஊதியம்
$37.3 மில்லியன் டாலர்கள்; அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உடைய கென்னெத் எல். ஷேனால்ட்டுடைய ஊதியம் $40
மில்லியன் டாலர்கள் ஆகும். Anheuser Busch இன்
பாட்ரிக் ஸ்டோக்ஸின் ஊதியம் $49 மில்லியன் ஆகும். பெருநிறுவனங்களின் உயர் 1000 பேருடைய பட்டியல், அவர்கள்
பெறும் ஊதியம் பற்றிய தொகுப்பு, ஒன்று வலைத் தளத்தில் வந்திருந்தது; அதில் இருந்து சிலவற்றை அங்கொன்றும்
இங்கொன்றுமாய் எடுத்துக் கொடுத்த புள்ளிவிவரங்கள்தாம் இவை.[1]
இவர்களுடைய மூதலீட்டுக் கணக்குகளில் நிறைந்து வழியும் பணத்தைக் கணக்கில் எடுத்துக்
கொண்டால், செய்தி ஊடகங்களில் இருந்து நாம் அறியும், அமெரிக்காவில் இருந்து நன்கொடையாகக்
கொடுக்கப்படும் தொகையின் அளவு, ஒரு மதிப்புத் தரும் வகையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சராசரி
உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த நன்கொடை அளிப்பவர் தன்னுடைய வாராந்திர ஊதியத்தில் இருந்து நிவாரணப்
பணிகளுக்கு வழங்கிய பணம், காசோலை எழுதும் முன்பு தங்களுடைய கணக்காளர்களைக் கேட்டு அதில் கிடைக்கும்
வருமான வரி நன்மைகளை அறிந்து தொகைகள் எழுதும் பெருநிறுவன அதிகாரிகள் கொடுக்கும் சதவிகிதத்தைவிட
அதிகம் என்பதில் ஐயமில்லை.
சுனாமிக்குப் பின்பு, செய்தி ஊடகத்தில் புவியியல் அடிப்படையில் இப்பேரழிவிற்கான
காரணங்களை விளக்கி நிறைய கட்டுரைகள் வந்துள்ளன. இவை முக்கியமான விஞ்ஞானத் தகவல்கள் ஆகும். ஆனால்
கொடூரமான முறையில் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கான காரண காரியத் தொடர்பு, சமுதாயக் காரணிகளில்
முக்கியத்துவம் நிறைந்து உள்ளதும் அவற்றைப் பற்றிய பகுப்பாய்வும் இவற்றுடன் கூட வெளிவரவேண்டும். இந்தப்
பணியைப் பொதுவாகச் செய்தி ஊடகங்கள் தவிர்க்கவே செய்கின்றன; இயற்கையின் மகத்தான சக்திகளையும்
அவற்றை விளக்க இயலாத தன்மையையும் குறித்து உபதேசம் செய்வது இதற்கு எளிதுதான். உதாரணமாக
இதையொட்டி, நியூ யோர்க் டைம்ஸ்- இன் கட்டுரையாளர் டேவிட் புரூக்ஸ் நமக்குக் கொடுக்கும்
தகவலாவது: "அண்டசராசரத்தில் முக்கிய கவலை மனிதர்களைப் பற்றியது இல்லை; பூமியின் பரப்பில் நாம் வெறும்
சிற்றினங்கள்தாம். பூமி தன்னை அசைத்துக் கொண்டால் 140,000 சிற்றினங்கள் தம்மை விட மிக வலியதும்,
நிரந்தரமானதுமான சக்தியின் பாதிப்பிற்கு உட்பட்டு மடிகின்றன." இவ்விதமான வர்ணனைகள், மனித குலத்தைப்
பற்றிய அறியாமையையும், இகழ்வையும் சமமாக கலந்து தொகுக்கப்பெற்றவை, இவை உண்மையை ஆராய
மறுப்பதையும், சமூக பொருளாதார, அரசியல் உண்மைகளை மறைப்பதையும் உறுதியான இலக்காகக் கொண்டவை
ஆகும்.
சுனாமியின் பாதிப்பு மிகத் தெளிவான முறையில் முதலாளித்துவம், பெரும்பாலான மக்களுடைய
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உற்பத்தி சக்திகளை அது பயன்படுத்த இயலாத தன்மை இவற்றின் பகுத்தறிவற்ற
முறையை அம்பலப்படுத்தியுள்ளது. "ஆசிய அற்புதம்" பற்றி செய்தி ஊடகம் களிப்புடன் கூறினாலும், அப்பகுதியில் கடந்த
பத்தாண்டுகளாக மூலதனம் செயல்பட்டுவருவதின் நன்மைகள் ஒரு சலுகைமிக்க மிகச் சிறிய தட்டிற்குத்தான் சென்று
வருகிறது. ஆசிய மக்களில் நூறு மில்லியன் கணக்கான மக்களை, சிறந்த காலநிலை சூழல் இருந்போதிலும் இயற்கையில்
இருந்தும் பாதுகாப்புக் கொடுக்காத, சேரி இல்லங்களில்தான் வசிக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் மனிதத்தன்மையற்ற நிலைக்குச் சான்றாக,
150,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் குடித்துள்ள பேரழிவு சர்வதேச நிதியச் சமூகத்தால் ஒரு பெரிய
பொருளாதார நிகழ்வாகக் கருதப்படவில்லை. இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கையும் உட்பட்டவகையில்,
இப்பகுதியில் உள்ள பங்குச் சந்தைகள் சுனாமிப் பேரழிவிற்குப் பின் குறிப்பிடத்தக்கவகையில் சரிவு எதையும்
கொள்ளவில்லை. இதற்குக் காரணம் இப்பகுதியில் உள்ள மக்களில் ஏராளமான பிரிவினர் மிக
மிக வறிய நிலையில் வாழும், வாடும் நிலையில், தேசியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அவர்களுடைய பங்கு
மிகவும் அவசியமற்று இருக்கிறது.
இந்த நாடுகளில் இருக்கும் சமுதாய நிலைமைகள் அவற்றின் அரசியல் வரலாற்றுடன்
பொருத்திக் காட்டப்படவேண்டும். கடந்த வாரம் மிகப் பெரிய இழப்புக்களைச் சந்தித்த நாடுகள் பற்றிக்
காண்போம்: அதாவது இந்தோனேசியா மற்றும் இலங்கை பற்றி. அதன் கொடுமையான வறுமை, பரந்திருக்கும்
உணவு ஊட்டமின்மை, 65 வயது கூடச் சராரரியாக மக்கள் வாழமுடியும் என்று எதிர்பார்க்கமுடியாத நிலைமை,
மற்றும் 1965 அக்டோபர் நிகழ்வுகள் ஆகியவை தெரியாமல் தற்கால இந்தோனேசியாவின் தன்மை பற்றி புரிந்து
கொள்ளுவதற்கு இயலாது. அன்றுதான், CIA
பாசிசவாதிகளான இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, ஜெனரல் சுஹார்டோ தலைமையில், ஓர்
இராணுவரீதியான ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி, இடது-தேசியவாத ஜனாதிபதியான தளபதி சுகர்ணோ
பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்னர், இராணுவ அதிகாரிகளும் வலதுசாரி
முஸ்லீம்களின் கொலைப் படையினரும் CIA கொடுத்த
பட்டியல்படி, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சியை சேர்ந்த அரை மில்லியன்
உறுப்பினர்களை கொன்று குவித்தனர். அடுத்த முப்பது ஆண்டுகளில் ஜெனரல் சுஹார்ட்டோவின், மிருகத்தனமான,
அடக்குமுறை, அமெரிக்க ஆதரவு ஆட்சி இந்தோனேசியாவை மூலதன முதலீட்டிற்கு உகந்ததாகச் செய்திருந்தன.
முதலாளித்துவ வளர்ச்சியின் பெருங்குழப்பம் மற்றும் அழிக்கும் தன்மை, நிதிவகையிலான சுனாமியாக 1998இல்
தாக்கி இந்தோனேசியப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்கு உட்படுத்தியது.
இலங்கையை பொறுத்தவரையில், சுனாமி அதன் தாக்குதலுக்குட்படக்கூடிய கடலோரப்
பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியது; இப்பகுதியோ அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் பிற்போக்கு மற்றும்
இனவாதம் நிறைந்திருந்த கொள்கைகளால் அழிவிற்குட்பட்டிருந்தன. இன்றியமையாமல் தேவைப்படும் அடிப்படைக்
கட்டுமானங்கள், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால் தூண்டப்பட்டுள்ள உள்நாட்டுப் போரின் நிதித்தேவைகளினால்
பாதிப்பிற்கு ஆளாகி வந்திருந்தன.
உண்மையான சமுதாய, பொருளாதார, அரசியல் பின்னணியில் இது
ஆராயப்படும்போது, மனிதனுடைய செயலின் விளைவு, இயற்கையைவிடக் கூடுதலான முறையில் சுனாமியின் பாதிப்பில்
அழிவுத் தாக்கத்தை கொடுத்துள்ளது என்பது தெளிவாகும்.
வருங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பங்களின்
வளர்ச்சி, மனித குலத்தை இயற்கையின்மீதான கட்டுப்பாட்டை பெருக்கிக் கொள்ள வகை செய்திருக்கும் விதத்தில்,
சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் இவ்வளவு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடிக்கும் அளவிற்கு விட்டு
விடும் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது ஆகும். குறைந்த பட்சம், அத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடும்
என்பதை மனிதன் சற்று முன்கூட்டி அறிந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவக் கூடும்
என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் பசிபிக் பகுதி முழுவதும் இத்தகைய தொழில்நுட்பம் இப்பொழுது உள்ளது
என்பது நாம் அறிந்ததேயாகும். மனிதன் தன்னுடைய சொந்த இருப்பிற்கான சமூக பொருளாதார கட்டமைப்புகளை
தனது கட்டுப்பாட்டினுள் கொண்டிருப்பதிலேயே அவன் இயற்கையின் மீதான ஆதிக்கத்தைக் கொள்வது தங்கியுள்ளது
என்பதுதான் முக்கிய புள்ளி ஆகும்; சமுதாயத்தின் பொருளாதார அமைப்பில் இருந்து பகுத்தறிவற்ற கூறுபாடுகள்
அனைத்தும் அகற்றப்பட்டுள்ள நிலையில், அதாவது, முதலாளித்துவத்தை சோசலிசத்தால் பதிலீடு செய்வதில்
தங்கியுள்ளது.
இப்பொழுதுள்ள அரசியல் பிற்போக்குச் சூழ்நிலையில், மக்களுடைய உணர்வுகள், அறிவு
இவற்றின் மீது ஒடுக்கும் தன்மை கொண்டுள்ள அதன் தன்மையில், இத்தகைய மாற்றத்திற்கான சாத்தியப்பாடு
தொலைதூரத்திலில்லை; இதுவே அத்தகைய மாற்றத்திற்கான வரலாற்று நிலைப்பாடுகள் விரைவில் முதிர்ச்சியடையும்
என்பதற்கான அடையாளங்களில் ஒன்றாகும். உண்மையில் இப் புத்தாண்டை ஆரம்பிக்கும்போது, உலக முதலாளித்துவம்
ஒரு புதிய பொருளாதார நெருக்கடி, அரசியல் பிரச்சினை இவற்றில் நுழைய உள்ளது என்பதற்கான பெருகிவரும்
அடையாளங்களைக் காண்கிறோம். இக்கூட்டத்தில் நம்முடைய பணி, உலக நிலைமையைப் பற்றி எவ்வளவு துல்லியமாக
கணிக்கமுடியுமோ அதைச் செய்தலும், அந்த அடிப்படையில் சோசலிசத்தின் வருங்கால எதிர்பார்ப்புக்கள் பற்றிய
உண்மைநிலையை மதிப்பீடு செய்தலும், இந்த மதிப்பீட்டில் இருந்து எவ்விதமான அரசியல் பணிகள் விளையும் என்பதைக்
கண்டறிதலும் ஆகும். இந்தப்பணி விஞ்ஞானபூர்வமான பண்பு கொண்டதாகும்.
Nation என்ற ஏட்டிற்கு
சிட்னி ஹூக் என்னும் இளைய தீவிரப்போக்கான பேராசிரியர் "மார்க்சிசம்--வறட்டுச்சூத்திரமா அல்லது வழிமுறையா?"
என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ள சில கருத்தாய்வுகளுக்கு சவால் விடும் வகையில் அவருக்கு ஏப்ரல்
1933ல் லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு கடிதம் எழுதினார். மார்க்சிசம் "ஒரு வறட்டுத்தத்துவமும் அல்ல,
புனையுரையும் அல்ல, புறநிலை அறிவியலும் அல்ல, மாறாக வர்க்க நடவடிக்கையின் யதார்த்தமான வழிவகை"
என்று ஹூக் எழுதியிருந்தார். இதற்கு விடையிறுக்கையில், ட்ரொட்ஸ்கி, " 'யதார்த்தமான' என்ற சொல்லிற்கு
இங்கு என்ன பொருள்?. தெளிவாகவே, புறநிலையைப் பற்றிய உண்மையான அறிவின் அடிப்படையில்தான் அது
அமைந்துள்ளது என்று அது அர்த்தப்படுத்துகிறது; அப்படியானால், சமூக நிகழ்ச்சிப்போக்குகள், மற்றும் புறநிலை
பற்றிய அறிவு விஞ்ஞானமாகும். மார்க்சிசம் ஓர் விஞ்ஞானம் என்னும் முறையில் அமைந்திருக்கும் வரை
மார்க்சிச கொள்கையானது யதார்த்தமானதுதான்" என்று கூறினார்.
[2]
அரசியல் முன்னோக்குகளின் உருவாக்கம் ஒரு விஞ்ஞான முறையிலான படைப்பு என்ற
ட்ரொட்ஸ்கியின் கருத்துரு, அரசியல் வழிவகைகள் ஒரு சட்டவரையறைக்குட்பட்ட வகையில் வெளிப்படுகின்றன என்ற
ஆரம்பக் கருத்தை தன்னுள்ளே அடக்கியுள்ளது. இந்தப் பார்வை மார்க்சிச-எதிர்ப்பு செய்முறைவாத வகையறாக்கள்
பலவகையினருக்கும் அறவே பிடிக்காத கருத்தாகும்; அவை தற்செயல் நிகழ்வு மற்றும் எதிர்பாரா நிகழ்வை
வரலாற்று நிகழ்வுப்போக்கில் முழுமையின் மட்டத்திற்கு உயர்த்துபவை ஆகும்; இறுதிஆய்வில், ஏராளமான
எதிர்பாராத நிகழ்வுகள், (முன்னரே பார்க்க முடியாத) அளவற்ற எண்ணிக்கை கொண்ட எதிர்பாராத மற்றும்/
அல்லது கணிக்கமுடியாத பல்வேறு மாறிலிகளின் பரஸ்பர தாக்கங்களினாலும்தான், வரலாறும் அரசியலும்
தீர்மானிக்கப்படுகின்றன என்ற கருத்தை அவை வலியுறுத்துகின்றன. காலம் சென்ற வரலாற்றாசிரியரும்,
ஒருகாலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் இருந்தவருமான, பிரான்சுவா ப்யூரே
(Francois Furet) தன்னுடைய கருத்தை
இவ்விதத்தில் கூறுகிறார்: "இன்றியமையாமை (அத்தியாவசியம்) பிரமையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக்
கொண்டால்தான் நம்முடைய காலத்தைப் பற்றிய உண்மையான புரிதல் சாத்தியம். எந்த அளவிற்கு விளக்கம்
காணமுடியுமோ அந்த வகைக்கு, இருபதாம் நூற்றாண்டை பற்றிய விளக்கத்தை காண்பதற்கு ஒரே வழி, அதன்
கணிப்பிற்கு இயலாத தன்மையை மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டும்; இந்த காரணம் கற்பித்தல் இதன்
பெருந்துன்பங்களுக்கு மிகவும் பொறுப்பானவர்களால் மறுக்கப்படுகிறது."
[3]
ப்யூரே இன் வாதம் ஒரு கடுமையான வடிவமைப்புக்குள் தன்னை வெளிப்படுத்திக்
காட்டுகிறது: வருங்காலத்தைப் பற்றி குறிப்பிடத்தக்க
உறுதியான அளவில் கணித்துக்கூற இயலாது என்பதன் காரணமாக, வரலாற்று இன்றியமையாமை பற்றிப் பேசுவது
அபத்தமானது. ப்யூரே ஐ பொறுத்தவரையில் இன்றியமையாமை என்பது தடுக்கவியலாத சக்திகள் ஒரே ஒரு
வரக்கூடிய விளைவை நோக்கித்தான் செல்ல முடியும் என்ற உட்கருத்தைக் கொண்டுள்ளது. வரலாற்று வளர்ச்சிப்
பாதை என்பது பல விதங்களில், எதிர் விதங்களிலும் கூட விளைவுகளைக் கொடுக்கக்கூடும் என்பது தெளிவாகையால்,
வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு சில சட்டங்களுக்கு உட்பட்டவை, இந்த சட்டங்கள் அறியத்தக்கவை, அதற்கேற்ப
நடக்கலாம் என்பது ஒரு மார்க்சிச பிரமையாகும். வரலாற்று நிர்ணயவாதம் பற்றிய உறுதிப்பாட்டிற்கு எதிரான
ப்யூரே இன் கருத்து, முதலாளித்துவத்தை இப்பொழுதும் எப்பொழுதும் இன்றியமையா முறையில் நிலைநிறுத்துவதற்கான
ஒரு புத்தக அளவிலான கருத்துவாத விவாதங்களின் பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது ஆகும்.
்மார்க்சிச எதிர்ப்பாளர்களிடையே பொதுவாகவே நிலவும் ப்யூரே இன் நிலைப்பாடு,
விதி, இன்றியமையாமை என்ற கருத்துப்படிவங்களில் குறிப்பிடப்படுவது பற்றிய தவறான உணர்தலைத்தான் வெளிப்படுத்திக்
காட்டியுள்ளது. மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ தன்மை அதன் கணிப்புக்களின் துல்லியத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுவதில்லை.
மார்க்சிசம் அல்லது எந்த விஞ்ஞானரீதியான பிரிவும் ஒரு குறிப்பிட்ட இயல்நிகழ்வை பற்றிக் கொடுக்கும் விளக்கம்,
அந்த இயல்நிகழ்வின் தன்மையைப் பொறுத்துத்தான் இறுதியில் அமையும். இயல்நிகழ்வின் புறநிலைத் தன்மை, அதாவது
வரலாற்றின் கருப்பொருள் - மனித சமுதாயத்தின் புறநிலைத் தன்மை - மிகவும் மனச்சான்றினின்று பிறழாத வரலாற்றுச்
சடமுதல்வாதியை கூட அடுத்த இரண்டு நாட்களிலோ, இரண்டு வாரங்களிலோ, இரண்டு மாதங்களிலோ என்ன நடக்கும்
என்பதைக் கணித்துக் கூற இயலச்செய்யும் தன்மை பற்றியது அல்ல. இது வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் சட்ட நெறித்தன்மைக்கு
எதிரான வாதமோ அல்லது அதன் அறிவியல் முறை ஆய்விற்கு எதிரான வாதமோ அல்ல. மாறாக, அதற்கு எப்படி
வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளில் சட்டபூர்வ நெறி விளக்கிக்காட்டப்படுகிறது என்ற ஆழமான சரியாகப் புரிதல்
தேவைப்படுகிறது. ஒரு முறை Lukacs விளக்கினார்:
"உண்மை உலகில் விஞ்ஞான விதிகள் ஒரு போக்குகளாக மட்டுமே தம்மைத்தாமே நிறைவு செய்துகொள்ள
முடிவதுடன், மற்றும் இன்றியமையாமைகள் எதிரெதிரானசக்திகளின் குழப்பங்களாகவும், அது கணக்கிலடங்காத் தற்செயல்
நிகழ்வுகளின் ஒன்றை ஒன்று சமாதானப்படுத்தும்போது இடம்பெறும் ."[4]
வரலாற்று வழிவகையில் ஏற்படும் விளைவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை, அதன்
வளர்ச்சி பல திசைகளில் செல்லக்கூடும் என்பது, வர்க்கப் போராட்டங்களின் மூலம் சமுதாய வளர்ச்சி ஏற்படுகிறது,
அவை வெவ்வேறு, ஒன்றையொன்று தவிர்க்கும், பொருந்தா இயைபுகளைக் கொண்ட தன்மையில் இருந்து வெளிவரும்
என்ற உண்மையில் இருந்து தோன்றியது ஆகும். ஆனால் வர்க்கங்கள் முழுமையாகவோ அல்லது அவற்றின் சமூக
பொருளாதார நலன்களை வெளிப்படுத்தும் கட்சிகள், நபர்கள் மூலம் பகுதியாகவோ, சுதந்திரமாகச் செயல்படும்
வகையில் தங்கள் தன்மையை போதுமான அளவில் கொண்டிருக்கவில்லை. அவர்களின் செயல்பாட்டின் பரந்த
நோக்கும் இயல்பும் அடிப்படைரீதியில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதிகளால் வரையறுக்கப்படுகின்றன.
இது தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் பொருந்தும் என்பதில்லாமல், முதலாளித்துவ
ஆளும் தட்டிற்கும் பொருந்தும். எமது கட்சியின் அரசியல் முன்னோக்கு அகநிலையால் உந்தப்பெற்ற நம்பிக்கைகள்,
விருப்பங்கள் இவற்றில் இருந்து மேலே புறப்பட்டுச் செல்லுவதில்லை. முதலாளித்துவ வாதிகளின் தீச்செயல்களுக்கான
தண்டனை என்றோ, வறுமையை அகற்றுவதற்கு தங்களுடைய பரந்த பெருந்தன்மை முயற்சிகளுக்கான வெகுமதி
என்றோ மார்க்சிசவாதிகள் புரட்சியை பற்றி கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவ உற்பத்தி
முறையில் இருக்கும் உண்மையான முரண்பாடுகளைப்பற்றிய புறநிலையான பகுப்பாய்வின் அடிப்படையில்தான் ஒரு
புரட்சிகரக் கட்சியின் முன்னோக்கு வளர்ந்தாக வேண்டும். இந்த ஆய்வு புரட்சிகர முன்னோக்கின் மிகவும்
பொதுவான அடிப்படையை அமைக்கிறது. இதன் விபரமான விரிவாக்கம், இந்த முரண்பாடுகளின் வளர்ச்சி, அவற்றின்
உண்மை வாழ்விலுள்ள சமுதாய, அரசியல் வெளிப்பாடு ஆகியவை, அவை கடந்து செல்லவேண்டிய, பல தட்டுக்களான
வரலாற்று, சமூக, பண்பாட்டு, அறிவார்ந்த செயற்பாடுகளின் தலையீட்டின் மூலம் கண்டறியப்படவேண்டும்
ஒரு மார்க்சிச முன்னோக்கு, பல தசாப்தங்களின் ஊடே நீடித்த பரந்த வரலாற்று
போக்கினை பற்றிய அக்கறையையோ அல்லது மிகக் குறுகிய கால அளவில் நடைபெற்ற புரட்சி நடவடிக்கையின்
காலத்தன்மையில் இருந்த உறுதியான அரசியல் நிலைமைகளின் உடனடித் தொகுப்பு பற்றியோ அக்கறையைக்
காட்டலாம். ஆனால் பிந்தையதைப் பொறுத்த வரையில், மார்க்சிச கட்சியின் நிர்ணயப் புள்ளி எப்பொழுதும்
வரலாற்று போக்கின் பரந்த தன்மையாகத்தான் இருக்கும். எத்தகைய பிரச்சினைகள், சூழ்நிலைகளில் எத்தகைய
தன்மையுடைய தந்திரோபாயங்கள் தயாரிக்கப்பட்டுக் கையாளப்படவேண்டும் என்பது வரலாற்று வேலைத்திட்டம்,
சர்வதேச சோசலிச இயக்கத்தின் பணிகள் இவற்றால் வரையரை செய்யப்பட்டுள்ள கொள்கை உறுதியுடைய
இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். எத்தன்மையில் பிரச்சனைகளும் நிலைமைகளும் ஏற்படும்
என்பதை அறிந்து கொள்ளுவது என்பது, வரலாற்றுச் சகாப்தத்தின் தன்மையை விளக்கும் மூலோபாய இலக்குகளின்
வடிவமைப்பிற்குள் பயின்றால்தான் இயலும்.
இறுதியாக, புரட்சிகர முன்னோக்குகளின் அபிவிருத்திக்கு, வர்க்கப் போராட்டம்,
சமுதாயத்தை அணுகுதலில் ஊகம்மிக்க போக்கு என்பதை விட செயலூக்கமானபோக்கு என்பது தேவையாகிறது. புறநிலைப்
பார்வை என்பது ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுவது என்ற பொருளைத் தந்துவிடாது. புறநிலை உண்மை மற்றும்
வர்க்க சக்திகளில் சமநிலை பற்றிய புரட்சிகரக் கட்சியின் மதிப்பீடு என்பது புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கில் அதன்
சொந்த தலையீட்டின் விளைபயன் மற்றும் பாதிப்பு பற்றிய ஒரு மதிப்பீட்டை உள்ளடக்கியுள்ளது.. உலகத்தைப்
பற்றிய சரியான விளக்கம் என்பது, தன்னுடைய ஃபயர்பாக் பற்றிய பதினோராவது ஆய்வுக்கட்டுரையில் மார்க்ஸ்
விளக்கியுள்ளதுபோல், அதை மாற்றுவதற்கான போராட்டத்தின் மூலம்தான் வளர்க்கப்படமுடியும்.
அறிதலில், "இந்த செயலூக்க" கூறுபாடு பற்றிய சரியான மதிப்பீடு என்பதற்கு புறநிலை
உலகு எளிதில் மாற்றி, ஒருவர் விரும்பும்வகையில் சீரமைக்கப்பட்டுவிட முடியும் என்று கட்டாயம் எடுத்துக் கொள்ளப்படக்கூடாது;
இது பற்றிய கண்டுபிடிப்பு மற்றும் நயம்பட உரைத்தல், பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி மற்றும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், (எல்லாவற்றுக்கும் மேலாக, ஹெகலின் படைப்புக்களில்) ஜேர்மனியின்
தொல்சீர் கருத்துமுதல்வாத தத்துவஞான முறைகளின் மிகப் பெரிய சாதனைகளுள் ஒன்றாகும். "விருப்பத்தின்" செயற்பாட்டை,
மனிதனுடைய சமூக நடவடிக்கைகளை அடிப்படைரீதியாக தீர்மானிப்பவைகளான, சட்டத்திற்குட்பட்ட சமூக நிகழ்ச்சிப்போக்குகள்
பற்றி விஞ்ஞானபூர்வமான அறிதலிலிருந்து பிரிக்கும் மிக ஆபத்தான பிற்போக்குத்தன்மை நிறைந்த உட்குறிப்புக்கள் இதில்
நிறைந்துள்ளதுபோல், வேறு எந்த தத்துவரீதியான போக்குகளிலும் இல்லை. ஒரு புரட்சிகரக் கட்சியின் செயல்பாடு
உலகந்தழுவிய முறையில் சமூக பொருளாதார வளர்ச்சியின் இத்தகைய அடிப்படை போக்குகளைப் பற்றிய சரியான
மதிப்பீட்டில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். இந்த அஸ்திவாரத்தில் நன்கு வேரூன்றியிருக்கவில்லை என்றால், புரட்சிகர
இயக்கம் கணிசமான அளவில் வெற்று நினைவுகள், ஊக பணிகளில் தங்கியிருக்கவேண்டியிருக்கும். அது... அதிபேரழிவில்தான்
போய்முடியும்.
தொடரும்
Notes:
1. http://www.aflcio.com/corporateamerica/paywatch/ceou/database.cfm
2. Writings of Leon Trotsky 1932-33 (New York, 1972), pp. 232-33.
3. The Passing of an Illusion (Chicago 1999), p. 2.
4. The Ontology of Social Being, Volume 2 (London, 1978), p. 103.
Top of
page |