World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot-report

Devastation on the east coast of Sri Lanka

நேரடி அறிக்கை

இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் பேரழிவு

By M. Aravindan and Sarath Kumara
6 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டமானது நேரடியாக டிசம்பர் 26 சுனாமியின் பாதையில் அமைந்திருப்பதோடு முதன் முதலாக பாதிப்புக்கும் உள்ளானது. தாழ்வான கடற்கரைப் பகுதிகளை முன்னெச்சரிக்கையின்றி கழுவிச் சென்ற இராட்சத பேரலைகள் கட்டிடங்களை தரைமட்டமாக்கியதுடன் மக்களையும் இழுத்துச் சென்றது. இது ஏற்கனவே 20 வருடகால யுத்தத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய அனர்த்தமாகும்.

அரசாங்கம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 13,703 ஆக குறிப்பிட்ட போதிலும் உண்மையான புள்ளிவிபரம் அநேகமாக இதில் இருமடங்காக இருக்கும். பல பிரதேச செயலாளர்கள் உட்பட எங்களுடன் பேசியவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை 25,000 எனவும் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் மதிப்பீடு செய்தனர். இது பயங்கரமான துன்பமாகும்: 512,000 ஜனத்தொகையில் 5 வீதமானவர்கள் அல்லது 20 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெருந்தொகையான மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதியின்றி வீடுகளை இழந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட 100 அகதி முகாம்களில் 80,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 166,000 பேர் --மாவட்டத்தில் மூவரில் ஒருவர்-- இந்த அழிவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமிக்கு முன்னதாக கிழக்கு கரையோரப் பிரதேசங்கள் பருவமழை வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதைகள் சீரழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறினர். இந்த மாவட்டம் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என இரு பிரிவுகளாக பிரிந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் கணக்கிட பல வாரங்கள் எடுக்கும்.

சுனாமி தாக்கி இரு நாட்களின் பின்னர் டிசம்பர் 28 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் குழுவொன்று கொழும்பிலிருந்து அங்கு சென்றது. கொழும்பு- கண்டி - அம்பாறை பிரதான வீதிகளில் லொறிகளும் ஏனைய வாகனங்களும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி தொடரணியாக பயணித்துக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பாதிக்கப்படாத மேற்கு, வடமேற்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் இருந்து மக்கள் திரளாக சென்றுகொண்டிருந்தனர்.

மண்வாரிகள், மண்வெட்டிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் அழிமானங்களை அப்புறப்படுத்தவும் வீடுகளை துப்பரவு செய்யவும் மற்றும் குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் இருத்தவும் உதவுவதற்காக தாங்களாகவே அங்கு சென்றுகொண்டிருந்தார்கள். இந்த நிலைமையிலும் அரசாங்கமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ புணர்வாழ்வைப் பற்றி அக்கறைசெலுத்தியிருக்கக் கூட இல்லை. சிரச தொலைக் காட்சியில் விடுத்த வேண்டுகோளின் பிரதிபலனாக அதிவேக வீதியெங்கும் மக்கள் அழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.

மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கிழக்கில் உள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். தசாப்த காலங்களாக இலங்கையில் உள்ள ஆளும் கும்பல்கள் அழிவுகரமான விளைவுகளைக் கொண்ட இனவாத முரண்பாடுகளை தூண்டிவந்துள்ளன. ஆயினும், சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் மொழி மற்றும் மத பேதமற்று அனைவரும் ஒரே பிரச்சினைக்கே முகம்கொடுக்கின்றனர் என்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதை இந்த நெருக்கடி உடனடியாக வெளிப்படுத்தியது.

கொழும்புக்கு அருகில் உள்ள கடவத்தையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் மூன்று யுவதிகள் உதவிப் பராமரிப்பாளர்களுக்கு கையளிப்பதற்காக ஒரு பொதியை சுமந்துகொண்டு கிழக்குக்கு சென்றுகொண்டிருந்தனர். மாதாந்தம் 5,000 ரூபாய்கள் (50 அமெரிக்க டொலர்கள்) குறைந்த சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தாங்களும் ஏதாவது உதவி செய்யவேண்டும் என உணர்ந்துள்ளனர்.

உதவிப் பொருட்களை விநியோகித்துக்கொண்டிருந்த மீரிகமையில் வசிக்கும் இளைஞரான அனுர குமார எங்களுடன் பேசும் போது: "பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களா அல்லது முஸ்லிம்களா என்பதில் எங்களுக்கு அக்கறையில்லை. இங்கு வறுமைநிலை நிலவுகிறது. அது நெஞ்சை உருக்குகிறது. இங்கு தேசிவாதத்திற்கு இடம்கிடையாது. இங்கு எல்லோருடைய கண்ணீரும் இரத்தமும் ஒன்றே. எல்லா இரத்தமும் சிவப்பு," என்றார்.

அம்பாறை, பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையின் அகதி முகாமில் இருந்த ரோகன மற்றும் மகிந்த ஆகியோர்: "ஒரு பிரமாண்டமான மக்கள் கூட்டம் திடீரென வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனம் அல்லது சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடையாது. நாம் அனைவரும் மனிதர்கள்," என்றனர்.

அம்பாறையில்

அம்பாறை மாவட்டம் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கியது. கடற்கரையை அண்மித்து வாழ்ந்துவந்த தமிழர்களும் முஸ்லிம்களுமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்களும் அவர்களின் குடும்பங்களுமாகும். தாழ்வான கடற்கரைப் பிரதேசத்தில் ஒரு பெரும் பகுதி கழுவிச் செல்லப்பட்டுள்ளது. கடலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை எதுவும் எஞ்சவில்லை. 10 மீட்டர் வரை உயரமாக எழுந்த பேரலைகளால் அதிகளவிலான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பேரலைகள் தென்னை மரம் அளவிற்கு உயர்ந்ததாக உள்ளூர்வாசிகள் விபரித்தனர். சில இடங்களில் தண்ணீர் நிலப்பரப்பில் மூன்று கிலோமீட்டர்கள் வரை பாய்ந்துள்ளது.

எல்லா இடங்களிலும் ஒரே காட்சியே இடம்பெற்றுள்ளது. வீடுகள், ஆஸ்பத்திரிகள், இந்து கோயில்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களும் ஒரே தலைவிதியை பகிர்ந்துகொண்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு கார்கள், வான்கள் மற்றும் பஸ்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன. டீ.வி, குளிர்சாதனப் பெட்டி, சைக்கிள், குக்கர்கள் மற்றும் ஏனைய வீட்டுப் பாவனைப் பொருட்களும் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. மீன்பிடிப் படகுகள் இரு கிலோமீட்டர்கள் வரை நிலப்பரப்பில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அழிவின் அடையாளத்தை மேலும் இரு கிலோமீட்டர்கள் வரை காணக்கூடியதாக இருந்தது.

கல்முனையில் அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. கடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எல்லா கட்டிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்திற்குள் கம்பளவிரிப்பு குண்டு வீசப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

முன்னர் நெருக்கமான ஜனத்தொகையிருந்த காரைதீவில் முழு பிரதேசமும் தரைமட்டமாகியுள்ளது. முதல் 50 மீட்டர்களுக்கு அழிமானங்களைத் தவிர ஒரு உடைந்த சுவரைக் கூட காணவில்லை. கரையிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரைதீவு மத்திய கல்லூரி கட்டிடத்தின் முதலாவது மாடிவரை தண்ணீர் நிரம்பியிருந்தது. கல்லூரியின் முன்பகுதியில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்திற்கு ஒரு பெரும் பரப்பில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடற்கரைக்கு அருகில் உள்ள காரைதீவு வைத்தியசாலையும் மோசமாக சேதமாகியுள்ளது. அங்கிருந்த 25 நோயாளர்களும் ஒரு தாதியும் பலியாகியுள்ளனர். எஞ்சிய மருத்துவ உத்தியோகத்தர்கள் தப்பிப்பிழைத்துள்ளனர். ஆஸ்பத்திரி வைத்தியர் அலைகளில் மூழ்கிய போதிலும் ஒரு மரக்கிளையை பற்றிப் பிடித்து உயிர்தப்பியுள்ளார்.

டிசம்பர் 29 அன்று, நாங்கள் கடற்கரை வீதிவழியாக செல்லும் போது காரைதீவு முதல் மருதமுனை வரை 20 அகதி முகாம்களை கண்டோம். அவை பிரதான பாதையிலிருந்து தொலைவில் இருந்தன. மக்களால் தஞ்சமடையக் கூடிய எல்லா பாடசாலைகளும், இஸ்லாமிய பள்ளிகளும், கிறிஸ்தவ தேவாலயங்களும் மற்றும் கோவில்களும் அகதி முகாம்களாக மாறியுள்ளன. ஆனால் பல இடங்களில் அரசாங்க அலுவலர்கள் இருக்கவில்லை.

ஒரு மெக்கானிக்கான சிவகுமார் விளக்குகையில்: "இந்த அகதி முகாம் சிங்கள மக்களால் பராமரிக்கப்படுகிறது. அவர்கள் எங்களை நன்றாகப் பராமரிக்கிறார்கள். நாங்கள் இதுவரை எந்தவொரு அரசாங்க உதவியையும் பெறவில்லை. நான் விசேடமாக சிங்கள மக்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன். யுத்தத்தின் காரணமாக எங்களிடம் ஒரு தவறான அபிப்பிராயம் இருந்தது. நிலைமைகள் வேறுபட்டவை என்பதை இப்போது நாங்கள் புரிந்துகொண்டோம். நான் உடுத்தியிருக்கும் ஆடைகளை சிங்களப் பெண்கள் வழங்கினார்கள். அவர்கள் என்னுடன் அரசாங்கத்திற்கு சொந்தமான மக்கள் போக்குவரத்து நிலையத்தில் சேவையாற்றுகிறார்கள்," என்றார்.

டிசம்பர் 26 அன்று முழு குடும்பங்களும் துடைத்துக் கட்டப்பட்டன. 31 வயது சமையல்காரரான தலிப் டீன் அவரது குடும்பத்தில் ஏழு உறுப்பினர்களையும் இழந்துள்ளார். அவரது மனைவி, மாமி, மாமா மற்றும் நான்கு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். அவரது மகள் மட்டுமே உயிர்தப்பியுள்ளார். 50 வயது பாதுகாப்பு உத்தியோகத்தரான மொகமட் அலி, அவரது உறவினர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

சுகாதாரப் ஒரு பிரதான பிரச்சினையாகும். டிசம்பர் 29ம் திகதி கூட பல சடலங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இளம் தொண்டர்கள் அவற்றை அடக்கம் செய்வதிலும் தகனம் செய்வதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். டிசம்பர் 28 அன்று சம்மாந்துறையில் மாத்திரம் 4,000 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக மெல்லிய வள்ளங்களையும் கட்டுமரங்களையும் பயன்படுத்தும் வறிய மீனவர்களாகும். பெரும்பாலான மீனவர்கள் அவர்களால் மீன்பிடிக்க முடியாத போது கூலி வேலைகளைத் தேடிக்கொள்வதுண்டு. சில நாட்களுக்கு அவர்கள் 200 முதல் 500 ரூபா வரை சம்பாதிப்பதுண்டு; ஏனைய நாட்களில் அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு கடலுக்கு அருகில் குடிசைகளில் வாழ்வதை தவிர வேறு பதிலீடு இருக்கவில்லை.

தப்பிப்பிழைத்தவர்கள் முன்னெச்சரிக்கை செய்யப்படாததையிட்டு ஆத்திரம்கொண்டனர். முன் அனுபவமோ அல்லது விளக்கமோ இல்லாத பலர், விசேடமாக சிறுவர்கள், சுனாமிக்கு முன்னதாக கடல் வற்றியபோது கடலைப் பின்தொடர்ந்துள்ளார்கள். கடற்கரையில் இருந்தவர்களும் ஏனையவர்களும் பெரும் அலைகள் வருவதைக் கண்டு ஓட ஆரம்பித்தார்கள். முதியவர்களும், நோயாளர்களும் மற்றும் இளைஞர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழந்தனர்.

கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அம்பாறை நகரில் இருந்த மக்கள், அனர்த்தத்தை கேள்விப்பட்டவுடன் தபிப்பிழைத்தவர்களுக்கு உதவுவதற்காக விரைந்தனர். முச்சக்கர வண்டிகள், பஸ்கள், வான்கள் மற்றும் லொறிகளும் உதவுவதற்காக கடற்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ஒரு இளம் முச்சக்கர வண்டி சாரதியான செனவிரத்ன உரையாடும் போது: "கடல் நிலத்துக்குள் பெருக்கெடுப்பதாக சிலர் எங்களிடம் சொன்னார்கள். அன்று ஞாயிறு, சுமார் 9.30 மணியிருக்கும். நாங்கள் கடற்கரை நோக்கி விரைந்தோம். நாங்கள் அந்தப் பிரதேசத்தை அடைந்த போது அது முழுவதும் அழிக்கப்பட்டிருந்தது. நான் எனது முச்சக்கர வண்டியில் பாதிக்கப்பட்ட ஆறுபேரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றேன். வாகனங்களை வைத்திருந்த அனைவரும் அதையே செய்தனர்.

உத்தியோபூர்வ செயலின்மை

அதிகாரிகள், முற்றிலும் வேறுபட்டவகையில் அதிகாரத்துவ அக்கறையீனத்துடனும் செயல்திறமின்மையுடன் பிரதிபலித்தனர். முதலாவது பேரலை தாக்கிய பின்னரும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஹேரத் அபேவீர, அழிவைப் பற்றி மு.ப 10 மணியளவிலேயே அறிந்துகொண்டதாக எம்மிடம் தெரிவித்தார். அவரது பிரதிபலிப்பைப் பற்றிக் கேட்டபோது மிகவும் தற்காப்புடனேயே பதிலிறுத்தார்: "அன்று ஞாயிற்றுக் கிழமையாகவும் மற்றும் பெரும்பாலான அலுவலர்கள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்ததால் அவர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தார்கள். நாங்கள் திங்களன்றே வேலையை ஆரம்பித்தோம்," என அவர் கூறினார்.

தான் வானிலை நிலையத்துடன் தொடர்புகொண்டதாக அபேவீர விளக்கினார். "அவர்கள் ஏதோ நடந்திருப்பதாக உறுதிப்படுத்திய போதிலும் தாக்கம் பெரியதாக இருக்காது என்று குறிப்பிட்டனர்... கடல் நீர் நிலத்துக்குள் பெருக்கெடுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்."

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஸ்தாபித்த விபத்து நிர்வாகப் பிரிவின் நடவடிக்கைகள் பற்றி கேட்டபோது, கேள்வியை தட்டிக்கழித்த அபேரத்ன, அந்தப் பிரிவு வெள்ளம் மற்றும் புயல் போன்றவற்றுக்காக ஸ்தாபிக்கப்பட்டதே அன்றி இத்தகைய நெருக்கடிகளுக்காக அல்ல எனக் குறிப்பிட்டார்.

அலுவலர்களின் அக்கறையின்மை மற்றும் அறிவித்தல்கள் இன்மையும் பீதியை மட்டுமே அதிகரிக்கச் செய்தன. முச்சக்கர வண்டி சாரதியான செனவிரத்னம் எங்களுடன் பேசும்போது: "நான் அம்பாறைக்கு சென்றிருந்த போது எனது மனைவி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பேரலைகள் அம்பாறையையும் தாக்கும் என வதந்திகள் இருப்பதையிட்டு அவர் பீதியடைந்திருந்தார். ஆகவே நான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்காக திரும்பிச் சென்றேன். இல்லையெனில் நான் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேரை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றிருக்க முடியும்," என்றார்.

நாங்கள் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இருந்த போது, இன்னுமொரு சுனாமியை இந்தியா எதிர்கொண்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்குள் அது கிழக்கு கரையோரத்தை தாக்கும் எனவும் சக்தி டீ.வி யில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அனைவரும் கிலிகொண்டனர். யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவ்வாறான அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வானிலை அவதான நிலையத்துடன் தொடர்புகொள்ள 15 நிமிடங்களுக்கு மேல் சென்றது. அரசாங்கத் தொலைக்காட்சியில் நண்பகல் செய்தி வெளியாகும் வரை யாருக்கும் அறிவிக்கும் சாத்தியம் இருக்கவில்லை.

அகதி முகாம்களில் பெருங்குழப்பம் நிலவியது. இன்னுமொரு சுனாமியைப் பற்றிய செய்தி வெளியாகும்போது மட்டக்களப்பில் உள்ள ஏறாவூர் முகாமில் 2,500 அகதிகள் இருந்ததாக எங்களுக்கு நெருக்கமானவர் ஒருவர் குறிப்பிட்டார். அனைவரும் கிலிகொண்டு ஓடத்தொடங்கினார்கள். நிவாரணப் பணியாளர்களால் கொடுக்கப்பட்டவற்றை கூட போட்டுவிட்டு அவர்கள் ஓடினார்கள். அவர்கள் எங்கு ஓடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. சிலர் எங்கு ஓடினார்கள் என்றே எங்களுக்குத் தெரியாது."

"பிள்ளைகள் போராடிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். ஒரு மூன்று வயது சிறுவன் முட்கம்பி வேலியில் சிக்கிக்கொண்டான். அவனுடைய சேட்டும் காட்சட்டையும் முட்கம்பியில் மாட்டிக்கொண்டன. அவன் சத்தமாக அழுதான். அதிஷ்டவசமாக என்னால் அவனை விடுவிக்க முடிந்தது." முன்னெச்சரிக்கை வழங்கப்படாததையிட்டு அனுரவும் ஆத்திரமடைந்திருந்தார். "கிராம சேவகர் அங்கு இருந்த போதிலும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்புகள் இருக்கவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் தேவையற்றவை," என்றார்.

டிசம்பர் 29 அன்று, விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அருகில் இருந்த பெரும்பாலான அகதி முகாம்களுக்கு எந்தவித அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை. நிவாரணத்திற்காக அரசாங்கம் போதுமானளவு நிதி வழங்கிவருவதாக கூறிக்கொண்ட போதிலும் பணம் வந்துசேரவில்லை என டிசம்பர் 30 அன்று பல பிரதேச செயலாளர்கள் எங்களிடம் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் இதுவரை ஒரு சதத்தைக்கூடப் பெற்றிருக்காததோடு தமது சொந்த பணத்தை செலவிடுகின்றனர்.

வளங்கள் பற்றாக்குறை பற்றி எல்லா இடங்களிலும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அகதி முகாம்களுக்காக குறைந்தபட்சம் 40 நீர் தாங்கிகளாவது தனக்குத் தேவையாயுள்ள போதிலும் 5 மட்டுமே இருப்பதாக ஒரு பிரதேச செயலாளர் தெரிவித்தார். சுத்தமான தண்ணீர் தேவையான இடங்களுக்கு தண்ணீர் வழங்க அவரிடம் ஒரு தண்ணீர் வாகனம் மட்டுமே உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து ஆஸ்பத்திரிகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் பிரதான வைதியசாலையான அம்பாறை பொது வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிவழிகின்றது. பெரும்பாலான உத்தியோகத்தர்கள் அவர்களால் முடிந்தவரை துரிதமாக மீண்டும் சேவைக்குத் திரும்பியதாகவும், பெரும்பாலானவர்கள் டிசம்பர் 26 இரவும் பணியாற்றியதாகவும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். பலர் அழிவு நடந்த அன்று காலையில் ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணியாற்றியுள்ளனர்.

வைத்தியர்கள் முதல் தாதிமார், சிற்றூழியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், அதே போல் தனியார் ஒப்பந்தக்காரரிடம் இருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் வரை அனைவரும் அங்கிருந்தனர். எவரும் மேலதிக ஊதியம் கேட்கவில்லை. அவர்கள் சுயாதீனமாக சேவையாற்றினார்கள். சிலர் தங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் கூட இழந்திருந்தனர். அந்த அசாதாரணமான முயற்சியின் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து நோயாளிகள் மட்டுமே உயிரிழந்தனர்.

சில பிரதேசங்களுக்கு இன்னமும் பயணிக்க வழியில்லை. நாங்கள் டிசம்பர் 31 அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய கல்லாறுக்கு மீரிகமையில் இருந்து லொறி நிறைய நிவராணப் பொருட்களை கொண்டு சென்ற ஒரு தொண்டர் குழுவுடன் சேர்ந்து அம்பாறையில் இருந்து பயணித்தோம். பெரிய கல்லாறு சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததோடு ஐந்து நாட்களாக உதவியின்றி கைவிடப்பட்டிருந்தது. எல்லா வீதிகளும் மோசமாக சேதமாகியிருந்தன.

அந்தக் குழு பெரிய கல்லாறில் ஒரு அகதி முகாமுக்கு உணவுப் பொருட்களில் அரைவாசியை விநியோகித்த பின்னர் கல்லாறு பாலத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதிலும் மேலும் செல்ல முடியவில்லை. தொண்டர்கள் உணவுப் பொருட்களை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தூக்கிச் சென்றனர். குழுவில் இருந்த ஒருவர், "முழு அரிசிப் பொதியையும் என் முதுகில் சுமந்தது இதுவே முதற் தடவை" என்றார். அம்பாறை ஆஸ்பத்திரியிலிருந்து வந்த ஒரு வைத்தியர் மோட்டார் சைக்கிளில் அகதிகளுக்கு பொருட்களை கொண்டு சென்றார்.

கோட்டைக் கல்லாறில் நாங்கள் தொடர்ந்தும் இருக்கத் தள்ளப்பட்டோம். உள்ளூர்வாசிகள் எங்களைக் கண்டவுடன் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக உடைந்து நீரில் மூழ்கியிருந்த பாலத்தின் வழியாக ஓடிவந்தனர்.

நாங்கள் திரும்பி வந்தபோது, ஒரு லொரி மணலில் சிக்கியிருந்தமையால் பாதை தடைப்பட்டுப் போயிருந்தது. மழையில் நனைந்து சோர்வுற்றிருந்த எம்மை அவ்வழியாக வந்த ஒரு பொலிஸ் படையணி காரைதீவுவரை திறந்த வாகனத்தில் எங்களை கொண்டுசென்றது. அவர்கள் எங்களை அன்றிரவே அம்பாறைக்கு கொண்டுசெல்ல முற்பட்ட போதிலும் வெள்ளம் பாதைகளை தடுத்ததையடுத்து அன்றைய இரவை நாங்கள் அவர்களது முகாமிலேயே கழித்தோம். மறுநாள் நாங்கள் அம்பாறைக்குத் திரும்பிய போது நாங்கள் பயணித்த வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததோடு சில இடங்கள் கழுவிச் செல்லப்பட்டிருந்தன.

இந்த மூன்று நாட்களும் நடப்பில் உள்ள சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் தரங்கெட்ட தோல்விகளை மட்டுமன்றி, சிறந்த அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சாதாரண உழைக்கும் மக்களின் மறைந்துகிடக்கும் ஆற்றலையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

Top of page