World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: tsunami warnings could have been made

இந்தியா: சுனாமி அலை பற்றிய எச்சரிக்கைகளை கொடுத்திருக்க இயலும்

By Ganesh Dev
10 January 2005

Back to screen version

டிசம்பர் 26ம் தேதி சுனாமி இந்திய கிழக்குக் கடற்கரையோரப்பகுதியை தாக்கி, வங்கக் கடலில் அந்தமான், நிகோபர் தீவுகளையும் சூழ்ந்தபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், மற்றும் வீடுகளையும் இழந்தனர். இந்திய அரசியல் அமைப்புமுறை இதற்கு விடையிறுக்கும் முறை, அதன் அசட்டைத் தன்மையையும் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்களான வறுமையில் வாடும் கிராமவாசிகள், மீனவர்கள் ஆகியோர்மீது அவர்கள் கொண்டுள்ள இகழ்வுணர்வையும் புலப்படுத்துகிறது.

புது தில்லியில் உள்ள முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் (UPA), மற்றும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் உள்ள மாநில அரசாங்கங்கள், சுனாமியை பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் உயிர்களைக் காப்பாற்ற எதுவும் செய்திருக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளன. அனைத்து அரசாங்கங்களும் பசுபிக் பெருங்கடல் பகுதி போலன்றி, இந்தியப் பெருங்கடல் அடிக்கடி சுனாமித் தாக்குதல்களுக்கு உட்பட்டிருக்கவில்லை என்று வலியுறுத்திய வகையில், சுனாமி பற்றிய எச்சரிக்கை முறை இல்லாததை ஒரு காரணமாகவும் காட்டியுள்ளனர்.

இத்தகைய நியாயப்படுத்தும் முறைகளின் வெற்றுத்தன்மை, பாண்டிச்சேரியில் ஒரு சிறிய கடலோரக் கிராமமான நல்லவாடுவில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் தீவிர கவனக்குவிப்பிற்கு ஆளாகியுள்ளது. சரியான நேரத்தில் வரவிருக்கும் சுனாமி பற்றிய எச்சரிக்கை தொலைபேசியில் வந்ததை அடுத்து இந்தக் கிராமத்தில் இருக்கும் 3,600 மக்களும் அருகில் இருந்த மூன்று கிராமத்தின் மக்களும், முழுமையாகக் காப்பாற்றப்பட்டனர்.

நல்லவாடு, எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி அமைப்பின் கிராம ஆராய்வுத் திட்ட தகவலுடன் தொடர்பு கொண்டிருந்தது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த, முன்னாள் திட்ட ஆர்வலரான விஜயகுமார் அங்கு சுனாமி பற்றிய எச்சரிக்கை விடுப்பைக் கேள்வியுற்றார். உடனே இவர் தன்னுடைய கிராமத்தில் இருந்த ஆய்வு மையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்; மையமும் இதையொட்டி ஓர் எச்சரிக்கையை விடுத்தது. அவர் விரைவில் சிந்தித்துச் செயலாற்றியதும், அதைத் தொடர்ந்து நடந்திருந்த ஒருங்கிணைந்த செயற்பாடுகளும், கடலோரப் பகுதியை சுனாமி தாங்குவதற்கு முன்பு நான்கு கிராமங்களின் மக்களையும் வெளியேறச் செய்திருந்தது.

சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற எச்சரிக்கை அறிவிக்கப்படும் முறை செயல்படுத்தப்பட்டுள்ள நடைமுறையின் ஒரு பகுதியாக இந்தியாவும் இருந்திருந்தால் பெரும்பாலான இறப்புக்கள் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். அதுபோல் தொடர்பு முறை இல்லையென்றாலும் கூட, ஏற்பட்டிருந்த சில அபாய அறிவிப்புக்களை இந்திய அதிகாரிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தெற்கு இந்தியக் கடலோரப்பகுதியைச் சுனாமி தாக்குவதற்குப் பெரிதும் முன்னரே, வங்கக் கடலில், மிகப் பெரிய அலைகள் தனித்திருந்த அந்தமான், நிக்கோபர் தீவுகளைச் சூழ்ந்துவிட்டன.

சுமத்திரா கடலோரப்பகுதியின் கீழ் ஏற்பட்டு, சுனாமிக்கு உந்துதல் கொடுத்திருந்த நிலத்தடி அதிர்வுகள் நிகழ்ந்தது காலை 6.29 க்கு ஆகும். ஐம்பது நிமிஷங்கள் கழித்து, அதாவது, 7.19 க்கு இதன் பின்விளைவுகளான அதிர்வுகளில் ஒன்று அந்தமான், நிக்கோபர் தீவுகளை அதிர்ச்சிக்கு உட்படுத்தியது. 11 நிமிஷங்கள் கழித்து, 7.30 மணிக்கு, இந்தியப் பகுதியில் உள்ள இந்திய விமானப் படை கார் நிக்கோபர் பகுதியில் இருக்கும் தன்னுடைய சிறு பிரிவில் இருந்து ஓர் எச்சரிக்கையை பெற்றது; அதற்குப் பின் தீவுக்கூட்டங்களில் இருந்து தொடர்புகள் முற்றிலுமாக, தற்காலிக துண்டிப்பை அடைந்தன.

காலை 7.50க்கு, இந்திய விமானப் படையின் சென்னைப்பிரிவு கார் நிக்கோபருடன் ஓர் உயர்மதிப்புக் கருவியின் மூலம் தொடர்பு கொண்டிருந்தது. தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 25 விமானப்படை அலுவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் சுனாமி தாக்கிக் கொல்லுவதற்குமுன் அனுப்பிய கடைசி அவசரச் செய்தி, "தீவு முழ்கிக் கொண்டிருக்கிறது, எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்திருக்கிறது." என்பதேயாகும்.

இந்தியாவுடைய சொந்த செயற்கைக்கோள்களான IRS-P4, IRS-P6 இரண்டுமே, 7.30 ல் இருந்து 7.50 வரை, பேரலைகள் கார் நிக்கோபரைச் சுழன்று தாக்குதல்கள் நடத்தியைதைப் நிழற்படங்கள் எடுத்துள்ளன. இந்தச் செயற்கைக் கோள் எடுத்த நிழற்படங்கள் சுனாமி பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் சீறிப்பாய்ந்ததைக் காட்டுகின்றன.

இந்தியக் கடலோரப் பகுதி மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் எச்சரிக்கை விடுப்பதற்கு நேரம் இருந்தது என்பது தெளிவாகிறது. செயற்கைக் கோள்மூலம் நிழற்படங்கள் எடுக்கப்பட்டது 8.32க்கு ஆகும்; இவை முதல் சுனாமி அலைகள் முக்கிய கடற்கரைகளை சென்னைக்கு அருகில் தாக்கியதைக் காட்டி அடையாறு கடலில் சேரும் பகுதியில் ஏற்பட்ட எழுச்சியையும் காட்டுகின்றன. இந்த முதல் அலைக்குப் பிறகு நான்கு தாக்குதல்கள் நிகழ்வுற்றன. இரண்டாவது கொந்தளிப்பு காலை 9:20க்கும், மூன்றாவது 10:20க்கும், நான்காவது 10:40க்கும் இறுதித் தாக்குதல் 11:00 மணிக்கும் நிகழ்ந்தன.

இதற்கு அதிகாரபூர்வ பிரதிபலிப்பானது, திறமையற்றதன்மை, அசட்டைத் தன்மை இரண்டின் கலவையாகும். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள தகவலின்படி, விமானப் படைத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி, புது தில்லியில் இருந்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருந்தார். அவருடைய உதவியாளர் ஒரு செய்தியை ஃபாக்ஸ் மூலம் முன்னர் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதைத் தவிர, மேற்கொண்டு, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

UPA அரசாங்க மந்திரிசபையின் தனிச் செயலாளருக்கு இந்த சுனாமி பற்றிய தகவல் இரண்டாவது அலைக்கொந்தளிப்பு சென்னையையும், தென்தமிழ்நாட்டு கடலோரத்தை தாக்கிய இரண்டு நிமிஷங்கள் வரை கொடுக்கப்படவில்லை. காலை 10:20 க்குத்தான் மந்திரிசபை செயலகத்தின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் முக்கிய நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரிவான Crisis Management Group, பிற்பகல் ஒரு மணி வரை, அதாவது இந்தியாவை இறுதி அலை தாக்கி இரண்டு மணி நேரமும், கார் நிகோபர் விமானத் தளத்தில் இருந்து "காப்பாற்றுங்கள்" என்ற தகவல் அனுப்பப்பட்டு 5 மணி நேரமும் கடந்த பின்னர்தான் கூடிற்று. அதற்குள் மிகவும் காலம் கடந்து விட்டது.

சுனாமித் தாக்குதலுக்குப் பின், பல இந்திய அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற இயலாத தன்மையை நியாயப்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நில அதிர்வுத்துறை இயக்குனரான ஆர்.எஸ். தத்தாத்ரேயம், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்கு தெரிவிக்கையில், "சுனாமிகள் இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கவே இல்லை என்பதால், (அதற்கான தயாரிப்புத் தேவை என்பது) எங்களுக்கு தோன்றவே இல்லை" என்றார். ஜனவரி 3ம் தேதி இதேபோன்ற கூற்றைத்தான் பிரதம மந்திரி மன்மோகன்சிங் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்பொழுது, "இது (சுனாமி) ஒரு புதிய இயல்நிகழ்வு, நாட்டில் இதுகாறும் ஏற்பட்டிராத ஒன்று" என்று தெரிவித்தார்.

வரலாற்றுப் பதிவுகள் வேறுவிதமாயுள்ளன. சுனாமிகள் பசிபிக் பெருங்கடலில் இருப்பதைப் போல் அடிக்கடி ஏற்பட்டிருக்கவில்லை என்றாலும்கூட, பேரழிவு தரும் விளைவுகளுடன் இந்தியப் பெருங்கடலில் இதற்கு முன்னரும் ஏற்பட்டுள்ளன. இதற்குச் சிறந்த உதாரணம் 1883ல் தெற்கு சுமத்திராவில் க்ரகடோவாவிற்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை ஒட்டி தோற்றுவிக்கப்பட்ட அலைக் கொந்தளிப்பு, இந்தியா உட்பட, இப்பகுதி முழுவதும், 36000 மக்களின் உயிரைக் கவர்ந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பு, 1881ல் கார் நிகோபாரை ஒட்டி நிகழ்ந்த 7.5 அளவு கொண்டிருந்த நில நடுக்கமும் ஒரு சுனாமி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் விட அண்மைக்கால நிகழ்வுகளும் உள்ளன. கடந்த ஆண்டு Current Science என்ற விஞ்ஞான ஏட்டில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, ஜூன் 26ம் தேதி 1941 அன்று ரிக்டர் அளவுகோலில் 7.5க்கும் 8.5 க்கும் இடையிலான வகையில் ஒரு சுனாமி அந்தமான் தீவுகளின் மேற்குப் புறத்தை மூழ்கடித்தும், இந்திய கடலோரப்பகுதியைத் தாக்கி ஏராளமான உடைமைகளை அழித்தும், கணக்கிலடங்கா உயிர்களை குடித்ததாகவும் தெரிகிறது. நில நடுக்கமே அந்தமானில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது; ஆங்கிலேயர்கள் காலனியமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசியல் வாதிகளை சிறையில் வைத்திருந்த இகழ்விற்குரிய சுற்றுச் சிறையின் மத்தியக் கோட்டையும் கீழே தகர்ந்து விழுந்திருந்தது.

The Week என்ற வார ஏட்டில், டாக்டர் அருண் பாபட் என்றும் ஒரு புனேயைத் தளமாகக் கொண்டுள்ள நில நடுக்க ஆராய்ச்சியாளர், இந்தியக்கீழைக் கடலோரப்பகுதி, அந்தமான் தீவுகள் என்றில்லாமல், இந்திய மேற்குக் கடலோரப்பகுதிகளும் சுனாமிப் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன என்று விளக்கியுள்ளார். 1945, நவம்பர் 27ம் தேதி அரேபியக் கடலில் 8.35 ரிக்டர் அளவுகோலில் பதிவு ஆகியிருந்த நிலநடுக்கம் ஒன்று இந்தியாவின் மேற்குக் கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரும் அலைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியப் பெருங்கடலில் மற்ற ஆபத்துத் திறன் உடைய பகுதிகளும் இத்தகைய நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சுனாமிக்கள் குறைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த இரண்டு வார நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டியது போல், நீண்டகால ஆபத்துக்கள் அசட்டை செய்யப்படுவது குற்றம் சார்ந்த அலட்சியத்திற்கு ஒப்பாகும். ஒப்புமையில் ஓரளவு செலவே ஆகும் சுனாமி பற்றிய எச்சரிக்கை முறை ஏற்படுத்தப்படாதது பல்லாயிரக்கணக்கான மக்களுடைய உயிரைக் குடித்ததுடன், மில்லியன்கணக்கான மக்களுக்கு பெரும் துன்பங்களையும் விளைவித்துள்ளது. இதற்கான பொறுப்பு பிராந்திய அரசாங்கங்களையும், புது தில்லியையும்தான் சாரும்; எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய எச்சரிக்கை வலைப்பின்னல் கட்டாயம் தேவை என்று எச்சரித்திருந்த விஞ்ஞானிகளை அசட்டை செய்திருந்த அனைத்து வல்லரசுகளையும் சாரும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved