World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union agrees on terms for membership negotiations with Turkey

உறுப்பினர் தகுதி வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படுகிறது

By Justus Leicht
23 December 2004

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பு நாடாகும் அந்தஸ்தை வழங்குவதற்காக அக்டோபர் 2005 இல் ஆரம்பிக்கவிருக்கும் துருக்கியுடனான பேச்சு வார்த்தைகளுக்கான நிபந்தனைகள் மற்றும் உடன்பாடுகள் பற்றி டிசம்பர் 17ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளும், அரசாங்கத்தின் தலைவர்களும் ஓர் உடன்பாட்டை கண்டனர்.

கடைசி நேரம் வரை தீவிரமாக குழப்பப்பட்ட இந்த இறுதி முடிவு, இப்பொழுது துருக்கியை அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முகாமிற்குள் உறுதியாக வேரூன்ற வைத்து, அந்த நாட்டை மத்திய கிழக்கு, காக்கசஸ் மற்றும் மத்திய ஆசிய பகுதிகள் மீது கொண்டுவரப்படவுள்ள பொருளாதார, மற்றும் இராணுவக்கட்டுப்பாட்டினை பாதுகாக்கும் ஒரு இடமாக மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்களின் நலன்கள் இணைந்துதான் இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில், எண்ணெய், எரிவாயு மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள நீர்நிலை இவற்றைக் கட்டுப்படுத்தும் கோட்டையாக துருக்கியின் வருங்கால பங்கு பற்றிய கடுமையான மோதல்களும் அடிமட்டத்தில் உள்ளது. அதாவது ஐரோப்பாவின் இழப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் வலுப்படுத்துமா அல்லது அமெரிக்காவின் இழப்பில் ஐரோப்பிய ஆதிக்கம் வலுப்பெறுமா என்பதே அந்தக் கேள்வியாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி அனுமதிக்கப்படவேண்டும் என்று வாதிடுபவர்கள் எந்த அளவிற்குப் பொருளாதார மற்றும் தந்திரோபாய இலக்குகள் உயர்ந்துள்ளவை என்பதை இரகசியமாக வைத்திருக்கவில்லை. கடந்த புதன்கிழமையன்று, பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக் TF1 செய்திப் பிரிவிற்கு, "துருக்கி ஆசியாவிடம் சார்ந்திராமல், நம் புறம் சார்ந்திருக்கவேண்டும் என்பது நம்முடைய நலன்களுக்கு உகந்தது ஆகும்; இல்லாவிடில் நம்முடைய எல்லைகள் முழுவதிலும் உறுதியற்ற தன்மை, நிலையற்ற தன்மை'' ஆகியவை பெருகிவிடும் ஆபத்து உண்டு என்று விளக்கினார்.

இந்தப் பொருளாதார, தந்திரோபாய இலக்குகள் துருக்கிக்கு முழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்ற அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதை எதிர்ப்பவர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் பல வேறுவிதக் காரணங்களுக்காக அவர்கள் துருக்கிக்கு உறுப்பினர் தகுதி கொடுத்து விட்டால் அது ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்று கூறுகின்றனர்.

உதாரணமாக, "புவியியல் அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா இன்னும் சரியான வகையில், அதைக் குலைக்காத வகையில் துருக்கியை பிணைத்துக் கொள்ளும் பெரிய அளவு அமைப்பை இப்பொழுது கொண்டிருக்கவில்லை" என்று பிஷ்ஷர் அறிவித்ததற்காக வரலாற்றாசிரியர் ஹென்ரிக் ஒகஸ்ட் விங்க்லர், ''அளவு மற்றும் பலம்'' என்பவற்றை குழப்புவதாக ஜேர்மன் வெளிவிகார மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷரை குற்றம்சாட்டுகிறார். இதற்கு விடையிறுக்கும் வகையில், "உலக அரங்கில் தன்னுடைய பங்கை ஐரோப்பா கொள்ள வேண்டும் என்றால், ஒருமித்த குரலில் தன் கருத்தைத் தெரிவிக்க அதானால் இயலவேண்டும். இதற்குப் பொருள் குறிப்பிட்டளவு ஒற்றுமையையும் ஒரு பொதுப் பார்வைத் தன்மையும் நம்மிடத்தே இருக்க வேண்டும். யூப்ரெடிஸ் வரை பரந்து விரியும் ஆற்றலுடைய ஐரோப்பா இனி அத்தகைய வளங்களின்றி இருக்கக் கூடாது." என்று விங்க்லர் கூறியுள்ளார்.

துருக்கியின் ஐரோப்பிய நுழைவிற்கு ஜேர்மனிய பழமைவாத எதிர்ப்பாளர்களான ஏஞ்சலா மெர்கல் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-CDU), எட்மண்ட் ஸ்ரொய்பர் (கிறிஸ்தவ சமூக யூனியன்-CSU) போன்றோர் இதேபோன்ற முறையில்தான் வாதிட்டு "கிறிஸ்தவ மேலைநாட்டு நாகரிக'' காப்பாளர்கள் என்ற தலைமையை தங்களுக்குக் கொடுத்துக் கொண்டு தங்களுடைய எதிர் கருத்துக்களில் பேரினவாதத்தை வெளிப்படையாகவே காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில், கிட்டத்தட்ட பாராளுமன்றக் குழுவில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்கும் UMP (Union for a Popular Movement) அரசாங்கத்தின் 90 பிரதிநிதிகள், துருக்கிய உறுப்பினர் அந்தஸ்தை "யூதர்கள்-கிறிஸ்தவர்கள் பாரம்பரியத்தின்'' பெயரில் நிராகரிக்கும் Philippe Pémezec இற்கு ஆதரவைத் தந்துள்ளனர்.

துருக்கியும் ஐரோப்பிய ஒன்றியமும்

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கியின் நுழைவு என்ற முன்னோக்கு, ஆரம்பத்தில் பனிப்போரின் ஒரு விளைவாகத்தான் இருந்தது. 1950களின் ஆரம்பத்தில் கொரியப் போரில் அமெரிக்காவுடன் துருக்கி சேர்ந்து கொண்டது, சோவியத் ஒன்றியத்தின் தென்மேற்கு எல்லையை ஒட்டிய மேலைநாட்டு கம்யூனிச-எதிர்ப்புக் குவிப்பிற்கு ஆதரவு தரும் வகையில் நேட்டோ ஒப்பந்தத்தில் ஒரு உறுப்பு நாடாகச் சேர்நதது. 1963ம் ஆண்டு, ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டபின் மூன்றே ஆண்டுகளில், இந்த நாட்டிற்கு வெகுமதியாக EEC ( ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம் என்ற EU-வின் முன்னோடி அமைப்பில்) இணை உறுப்பினர் தகுதி அல்லது அந்தஸ்து அளிக்கப்பட்டது; மேலும் மேலை முகாமில் அரசியல் வகையில் துருக்கி முழுமையாக இணைந்து கொள்ளுவதற்குப் பின்னர் வசதிகள் தரப்படும் என்றும் தெளிவற்ற முறையில் வருங்காலம் பற்றி உறுதியும் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில், அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் துருக்கியின் இராணுவத்திற்கு முறையாக நிறைய ஆயுதங்களை அளித்து வந்தன. இடதுசாரி தொழிலாளர்கள், மற்றும் மாணவர்கள் இயக்கங்கள், பின்னர் குர்திஷ் தேசிய இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை துருக்கி இராணுவம், போலீஸ், இரகசியப் பணித்துறை மற்றும் பாசிச மரணக் குழுக்கள் மேற்கொண்டு, மிகக் கொடூரமான அடக்குமுறைகளைக் கையாண்டபோது, மேலை நாடுகள் அவற்றிற்கு ஆதரவு கொடுத்தன அல்லது உள்ளார்ந்த முறையில் ஒப்புதல் தெரிவித்தன. 1971 மற்றும் 1980ல் நிகழ்ந்த சதிகளுக்கு பின்னர் இராணுவ அரசாங்கம் நடாத்திய பயங்கரச் செயல்கள் தொடர்பாகவும், மற்றும் தென்கிழக்கு துருக்கியில் குருதிஸ் பிரதேசத்தில் 1990களின் இறுதியில் இராணுவத்தாலும் பாதுகாப்புபடையினராலும் நடாத்தப்பட்ட அழிவுகரமான, மக்களை வெளியேற்றும் யுத்தத்திலும் அவை அவ்வாறான நிலைப்பாட்டையே எடுத்தன.

முழு உறுப்பினர் தகுதி தரப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று 1987ல் அங்காரா வலியுறுத்தத் தலைப்பட்ட பின்னர்தான், பிரஸ்ஸல்சும் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களும் அதைப்பற்றி நினைவு பெற்று, திடீரென்று துருக்கியில் "மனித உரிமைகள் மீறப்படும்" பிரச்சினையை எழுப்பினர். 1999ம் ஆண்டு நிலைமை முற்றுமுழுதாக மாற்றமடைந்து ஹெல்சிங்கியில் கூடிய ஐரோப்பிய குழு, " மற்ற உறுப்பு நாடுகள் சேருவதற்கு எத்தகைய தகுதிகளின் அடிப்படை உள்ளதோ, அவற்றின் அடிப்படையிலேயே, ஒன்றியத்தில் சேருவதற்கு விருப்பமுடைய நாடாக துருக்கி உள்ளது" என்று முடிவெடுத்தது.

2002ம் ஆண்டில் உறுப்பினராவதற்கான வேட்பாளர் தகுதிக்கு அநேகமாகத் துருக்கி கருதப்படலாம் என்றும் டிசம்பர் 2004-ல் பல அரசியல் முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் இணைப்பு தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்படலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

துருக்கி நாட்டின் ஜனாதிபதி Turget Özal (இப்பொழுது காலமாகிவிட்டார்), ஈராக்கிற்கெதிரான முதல் போரில் கணிசமான உள்நாட்டு எதிர்ப்பு இருந்தபோதிலும் அமெரிக்காவிற்கு ஆதரவை வழங்கியிருந்ததால், 1991ல் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு உறுப்பினர் தகுதி கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தீவிரமாக முயன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் ஏகாதிபத்தியத்தின் புவியியல் மூலோபாய வகைகளில் துருக்கி தன்னுடைய முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை நிரூபித்திருந்தது.

இதற்குப் பின்வந்த ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சுங்கவரி ஒன்றிய உடன்பாடு தயாரிக்கப்பட்டு 1996ல் அது செயல்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், துருக்கி இஸ்ரேலுடன் ஒரு இராணுவ உடன்படிக்கையையும் ஏற்படுத்திக் கொண்டது. இதைத் தவிர, பக்கு சீயான் திட்டம் (Baku Ceyan project) என்ற திட்டத்தை கிளின்டன் நிர்வாகம் முன்வைத்தது; இதன்படி, அஜர்பைஜனில் இருந்து ஜோர்ஜியா, கிழக்கு துருக்கி வழியாக துருக்கிய மத்தியதரை கடலோரப் பகுதிக்கு காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து எண்ணெயைக் குழாய்கள் மூலம் எண்ணெய் அனுப்பிவைக்கும் வசதி கிடைக்கும்----இதனால் ரஷ்யா, ஈரான் மற்றும் அரேபிய நாடுகளின் ஊடாக குழாய்கள் செல்லுவது தவிர்க்கப்படக் கூடும். இது 2005ல் செயல் முறைக்கு வந்துவிடும், அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பெறும்.

முன்மொழிபவர்களின் வாதம்

1990களில் அமெரிக்க அரசாங்கம் மிகுந்த அளவில் ஆதரவு பிரசாரத்தை செய்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் முழு உறுப்பினர் தகுதி பற்றித் தீவிர உறுதிமொழி எதையும் துருக்கிக்கு கொடுக்காமல் இருந்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இப்போக்கில் ஒரு மாறுதல் 1999ல் ஏற்பட்டது, அமெரிக்க ஏகாபத்தியத்தின் அதிகரித்த சர்வதேச ஆக்கிரமிப்பு கொள்கையின் எதிர்விளைவுதான் இதற்குக் காரணமாகும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுக்களும், 1999ம் ஆண்டு கொசவோ போரை தொடர்ந்தும், அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆப்கானிஸ்தான், ஈராக்கின் மீதும் படையெடுத்து, ஆக்கிரமித்து மத்திய ஆசியப் பகுதிகள் முழுவதிலும் இராணுவத் தளங்கள் அமைத்தார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில், ஐரோப்பிய வல்லரசுகளின் மிகவும் சக்தி வாய்ந்ததும், ஆதிக்க சக்தியுமான பிரான்சும், ஜேர்மனியும் தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொண்டன. ஜேர்மனியில், ஒரு புதிய SPD (ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் பசுமை கட்சி இணைந்த ஒரு கூட்டணி, ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் செப்டம்பர் 1998ல் ஆட்சியை கைப்பற்றியது; இதற்கு மறு ஆண்டே அவை துருக்கிக்கு முழு உறுப்பினர் தகுதி கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்த தலைப்பட்டன. அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தில், ஜேர்மனிய எதிர்க்கட்சியான பழமைவாதிகள் சுட்டிக் காட்டியுள்ளபடி, துருக்கிய பிரச்சினையில் ஜேர்மனிய அரசாங்கம் ஆரம்பத்தில் தயக்கத்தையும் அவநம்பிக்கையையும் காட்டியபோதிலும், ஈராக் போருக்குப் பின்னர் அரசாங்கத்தின் குரல் மாறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி இணைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, ஜேர்மனியில் வெளிவிவகார மந்திரியான ஜோஷ்கா பிஷ்ஷர் விளக்கினார்: "ஒரு மேலைநாட்டு பின்பற்றும் தன்மைக்கும் அதன் இஸ்லாமிய மரபு என்ற விருப்பங்களுக்கு இடையே அது பாதுகாப்பற்றதாக உணருவதுடன், மேலதிகமாக மிகக் கடினமாக சூழ்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டும் விடும். சீர்திருத்தங்கள் தேக்க நிலையை அடைந்து விடும். துருக்கியிலுள்ள மக்களின் நிலைமையில் முன்னேற்றம் இருக்காது; முஸ்லீம் நாடுகளிலேயே மிகப் பெரிய நாடான துருக்கியுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் சிறப்பு வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்; மேலும் ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையே உள்ள துருக்கி இரண்டிற்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து ஜனநாயகத்தையும் இஸ்லாமியத்தையும், ஒரு வெளிப்படையான, வலுவான, ஒழுங்குடன் கூடிய சமுதாயத்தை இஸ்லாமிய மரபின் அடிப்படையில் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பிற்கும் நாம் உதவாமல் போக நேரிடலாம்."

ஜேர்மன் செய்தித்தாளான Südddeutsche Zeitung குறிப்பிட்டுள்ளபடி ஜனநாயகத்தையும், இஸ்லாமியத்தையும் ஒற்றுமைப்படுத்தும் வகையில், துருக்கி ஒரு முன்மாதிரி விளைவைக் கொண்டு வரக் கூடும் என்ற பிஷ்ஷரின் வலியுறுத்தல், மேற்கு நாடுகளுக்கு எதிர்ப்புக் காட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இயக்கப்படுவது என்பது மட்டும் இல்லை. "ஈராக் பற்றிய பிரச்சினையை ஒட்டி இணையாக ஜேர்மனியின் நிலைப்பாடு உறுதிப்பட்டுள்ளது தற்செயல் நிகழ்வு அல்ல. துருக்கியை ஐரோப்பிய முன்னோக்கில் அமெரிக்க இராணுவத் தலையீட்டுவாதத்திற்கு ஒரு மாற்றாக நவீனப்படுத்துதல் என்பதைப் பேர்லின் கருத்திற் கொண்டுள்ளது.":

பசுமை இயக்கத்திற்கு நெருக்கமான taz என்னும் செய்தித்தாள், 2003 ஆண்டு வசந்த காலத்தின் துருக்கிய மண்ணில் அமெரிக்கப் படைகள் நிறுத்திவைக்கப்படுதலைத் தடை செய்த துருக்கியப் பாராளுமன்றம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் பரந்து அடிபணிந்துவீட்ட சர்வாதிகார ஆட்சிகள் நிறைந்திருந்த, அனைத்து அரபு நாடுகளாலும் பெரும் "உயர் மதிப்புடன்" வரவேற்பைப் பெற்றது. எவ்வாறாயினும்கூட, வரலாற்றிலேயே முதல் தடவையாக இந்த ஆண்டு ஒரு துருக்கியர் "இஸ்லாமிய நாடுகளின் அமைப்பிற்கு" தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துருக்கியின் தலைநகரான அங்காராவிலுள்ள (ஜேர்மனியின் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டுள்ள) Konrad Adenauer நிலையத்தின் வெளிநாட்டு அலுவலகப் பிரிவின் தலைவராக உள்ள வுல்்்ஃப் ஷோன்போம் பிஷ்ஷருடைய அறிக்கைகளில் காணப்படும் இராஜதந்திர, அரசியல் நயங்களுடன் மட்டும் தன் கருத்துக்களை நிறுத்திக் கொள்ளவில்லை. ஷோன்போம் "துருக்கிக்கு ஒரு சிறந்த பொருளாதார வருங்காலம் பற்றி முன்னோக்கு உள்ளது. ஐரோப்பா ஒன்றியத்திற்கு துருக்கி பெரும் செல்வக்கொழிப்பாக அமையும் என்றும் அதையொட்டி அவை உலக அரசியலில் அமெரிக்காவிற்கு நிகரான பங்குதாரர் போலும் பூகோள அளவில் செயலாற்றுவதற்கும் துருக்கி மாறும் என்பதுதான் என்னுடைய கருத்து." என அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் பரிந்துரையில் பூகோள மூலோபாயத்திற்கான முக்கிய வாதம் கீழ் கண்ட முறையில் கருத்தாய்விற்குட்பட்டு வாதிடப்பட்டுள்ளது: "மொத்த மக்கட்தொகை, நாட்டின் நிலப்பரப்பளவின் தன்மை, அதன் புவியியல் சூழல், மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, இராணுவத்தின் திறன் ஆகியவற்றின் விளைவுகளைக் கொண்டு பார்க்கும்போது துருக்கிக்கு உறுப்பினர் தகுதி கொடுப்பது (ஐரோப்பிய ஒன்றியத்தின்) முந்தைய விரிவாக்கங்களில் இருந்து வேறுபட்டிருக்கும். இந்தக் காரணிகளால், அப்பகுதி மற்றும் சர்வதேச உறுதி நிலைப்பாட்டிற்கு துருக்கி கணிசமான அளிப்பைக் கொடுக்க முடியும். ... எந்த அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்த இடைக்காலப் பணியில் பல காலமாக உறுதியற்ற தன்மை, பதட்டங்கள் ஆகியவை நிறைந்துள்ள மத்திய கிழக்கு, காக்கசஸ் போன்ற பிராந்தியங்களுக்கான வெளிநாட்டுக் கொள்கையில், துருக்கியை ஈடுபடுத்தி அதற்கு முழுத்தகுதி கொடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் உள்ளது."

இந்தக் குழு, மூலோபாயம் மிகுந்த கச்சாப் பொருட்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு துருக்கியின் முக்கியத்துவத்தையும் உயர்த்திக் காட்டியுள்ளது: "ஐரோப்பாவிற்கு மின்சக்தி வழங்கும் பாதைகளின் பாதுகாப்பிற்கும் துருக்கிக்கு கொடுக்கப்படும் நுழைவுத் தகுதி பெரிதும் உதவும். நீர் வளங்கள், அவற்றுடன் தொடர்புடைய உள்கட்டுமானப் பணிகள் இவற்றைப் பெருக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் வளர்ச்சிக்காக இன்னும் கூடுதலான கவனம் தேவையாகும்."

செப்டம்பர் மாதத்தில், துருக்கியை பற்றி ஆய்ந்த ஒரு சுதந்திரமான குழுவின் அறிக்கை இன்னும் தெளிவான முறையில் இதைப்பற்றி தெரிவிக்கிறது. ஏராளமான முன்னாள் ஐரோப்பிய உயர்நிலை அரசியல்வாதிகள் அடங்கியுள்ள இக்குழுவின் கருத்துக்கள் Soros நிலைத்தளம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலுடைய ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் அறிக்கை தெரிவிப்பதாவது: "யூரேசிய பகுதியின் இதயப்பகுதியில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ள துருக்கி, பரந்த மத்திய கிழக்கில் மேலைநாட்டின் கற்றூண் போல் விளங்கி, இப்பகுதியில் ஐரோப்பிய நடவடிக்கைகளுக்காக பெரும் நலன்களை ஐயத்திற்கிடமின்றிக் கொடுக்க முடியும். உருவாகிக்கொண்டுவரும் ஐரோப்பியப் பாதுகாப்பு, இராணுவ கொள்கைக்கு (ESDP) துருக்கியின் கணிசமான இராணுவத் திறன்கள் நாட்டின் நிலையான முன்தளம் என்பதும் மிக முக்கியமானவையாக, மிகுதியும் தேவைப்படும் பெரும் நலன்களாக இருக்கும்....

"நேட்டோ உடைய வலிமை மிகுந்த பங்காளிகளில் ஒன்று என்ற முறையில், ஐரோப்பிய பாதுகாப்பு, இராணுவ கொள்கை உடன் தெளிவாக நோக்குநிலை கொண்டுள்ள நிலையில், ஐரோப்பிய பாதுகாப்பு முறைக்கு துருக்கி அரிய மதிப்புடையதாக இருக்கும். இதற்கிடையில், நாட்டின் பாதுகாப்பு, உறுதித்தன்மை இவற்றிற்கு ஏற்பட்டுள்ள சர்வதேசப் பயங்கரவாதம், முறையாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் குற்றங்கள், மனித வர்த்தகம், சட்டவிரோத குடியேற்றம் போன்ற புதிய அச்சுறுத்தல்களை பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு கொடுக்கப்படும் உறுப்பினர் தகுதி இன்னும் கூடுதலான வகையில் நீதித்துறை, உள்நாட்டுத் துறை இவற்றிற்கிடையே பரஸ்பர நன்மை அளிக்கும் வகையிலும், நெருக்கத்திற்கும் உதவி புரியும்."

இதையே வேறுவிதமாகக் கூறினால், கடந்த பல தசாப்தங்களில் குர்திஸ்கள் பெரும் வலியுடன் உணர்ந்துள்ள, பெரும் ஆயுதங்கள் ஏந்திய, "வலிமை" கொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் தன்மை, துருக்கியுடைய புவியியல் தன்மையுடன் பிணைக்கப்படும்போது அதன் மிகப் பெரிய நலனாக அமையும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் ஆணையாளரான Günter Verheugen, ஜேர்மன் வார ஏடான Die Zeit இன் அக்டோபர் 7ம் தேதிப் பதிப்பில் எழுதியுள்ள கட்டுரையில், "துருக்கியின் நுழைவினால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு சர்தேச அரசியல் பங்கு வகிக்கும் நாடு என்று மாறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

துருக்கிய ஏற்றுமதி, இறக்குமதிகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதமும் அந்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்நாட்டிலுள்ள வெளிநாட்டு மூலதன நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை ஐரோப்பாவை சேர்ந்தவையாகும்.

அதிலும் குறிப்பாக, ஜேர்மன் தொழிற்துறை ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு உறுப்பினர் முயற்சிக்கு வலுவான ஆதரவைக் கொடுக்கிறது; ஜேர்மன் தொழிற் துறைக் கூட்டமைப்பின் (BDI) தலைவரான மைக்கேல் ரோகோவ்ஸ்கி விளக்கியுள்ளதுபோல், "இதுவரையில் இல்லாத வகையில், மிகப்பெரிய முக்கியமான பொருளாதார பங்காளியாக துருக்கி அமையும். சக்தி (energy) வளங்கள், உள்கட்டுமானப்பணி வளர்ச்சிகள் ஆகியவை பெருக்கப்பட்ட பின், இன்னும் கூடுதலான திறனைக் கொண்டு இரு தரப்பிற்கும் பெரும் நன்மைகள் ஏற்பட இது உறுதியளிக்கும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இவற்றிலுள்ள புதிய சந்தைகள் மற்றும் கச்சாப்பொருள் வளங்களை பெறுவதற்குத் துருக்கி அதிகரித்தளவில் முக்கிய மூலோபாயப் பங்காளி நாடாக அமையும். எனவே ஜேர்மனி, மற்றும் விரைவில் தோற்றுவிக்கப்பட இருக்கும் துருக்கி நிறுவனங்களின் நலன்களை கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையே பொதுவான பொருளாதார சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் உட்சந்தை நல்ல முறையில் வளர்க்கப்படவேண்டும்."

துருக்கியை பற்றிய சுதந்திரக்குழு மேற்கோளிட்டுள்ள அறிக்கை தொடர்கிறது: "உலகின் மிகப்பெரிய எண்ணைய், எரிவாயு இருப்புக்களின் ஆதாரம் காஸ்பியன் பகுதி என்று அறியப்பட்டதை அடுத்து, இதற்காக அமைக்கப்பட்டுள்ள பக்கு -டிபிலிசி-சேஹன் (Baku-Tbilisi-Ceyhan) எண்ணெய் குழாய் திட்டம் வெளிவந்துள்ள தன்மை சக்தி வினியோகத்திற்கு முக்கியமான வகையில் போக்குவரத்தை கையாளும் பங்கை துருக்கி கொண்டுள்ளது பற்றி உயர்த்திக் காட்டுகிறது. மேலும் துருக்கியுடைய புவி-அரசியல் நிலைப்பாடும், அண்டை நாடுகளில் துருக்கியின் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெருக்கமான தொடர்புகள் கொண்டுள்ள தன்மையும், மத்திய ஆசியா, சைபீரியப் பகுதிகள் இவற்றில் உள்ள மாபெரும் செல்வ வளங்களை ஐரோப்பா அணுகுவதற்கு வகைசெய்யும்."

எதிர்ப்பாளர்களின் வாதங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு உறுப்பு நாடு தகுதி கூடாது என்று எதிர்ப்பவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு விவசாயம், மற்றும் மண்டல சமநிலை திட்டங்களை வளர்ப்பதற்காக ஒதுக்குவதால் பில்லியன் கணக்கான யூரோக்கள் மிகப்பெரிய செலவினங்கள் ஏற்படக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துருக்கியில் மொத்த தொழிலாளர் சக்தியில் விவசாயத் தொழிலாளர்களின் விகிதாச்சாரம் 33 ஆகும்; இது போலந்தின் (20 சதவிகிதம்), ருமேனியா (40 சதவிகிதம்) இவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் உள்ளதாகும். ஆனால் கிட்டத்தட்ட 70 மில்லியனாக இருக்கும் துருக்கியின் மக்கட்தொகை எண்ணிக்கை, பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்கு நிகராகும். நாட்டு விவசாயத் துறைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஊதியம் பெறாத குடும்ப உறுப்பினர்கள்; கால் பகுதியினர் எழுத்தறிவற்றர்கள் அல்லது பள்ளிக்குச் செல்லாதவர்கள். உள்நாட்டு மொத்த உற்பத்தில் 4 சதவிகிதம் மட்டுமே கொண்டுள்ள இத்துறைக்கு, OECD நாடுகளுக்கு சராசரியாக கொடுக்கப்படும் உதவித்தொகைகளைவிட இருமடங்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. துருக்கியின் மேற்குப்பகுதி நவீனமயமாக்கப்பட்ட தொழில் துறை பிராந்தியமாக இருக்கும்போது, நாட்டின் கிழக்குப் பகுதி மிக வறிய நிலையில் இருப்பதோடு மிகக் குறைந்து தொழிற்துறை வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இஸ்தான்புல்லிலும் அதற்கு அருகிலும் வசிப்பவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வந்த 15 நாடுகளில் உள்ளவர்களுடைய சராசரி வருமானத்தில் 41 சதவிகிதத்திற்கு ஒப்பாக உள்ளது; ஆனால் கிழக்கு அனடோலியாப் பகுதியில் இந்த விகிதம் 7 தான்.

முந்தைய விரிவாக்க கட்டங்களுக்கு முற்றிலும் எதிரான முறையில், ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியில் காணப்படும் மிக மோசமான சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏராளமான பணத்தை வாரி வழங்கிவிடாது. சில நாட்களாகவே ஜேர்மன் சான்ஸ்லரான ஹெகார்ட் ஷ்ரோடர் இந்தக் கருத்தைத் தெளிவாக்கியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்தின் முந்தைய விரிவாக்கத்தை போல் அல்லாமல், அதன் மக்கட்தொகை, பொருளாதார வளர்ச்சி நிலை, இஸ்லாமியப் பண்பாடு இவற்றைக் கொண்டு பார்க்கும்போது துருக்கி விஷேடமான ஒன்றாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையத் துருக்கி நல்ல முறையில் தயார் செய்யப்படவேண்டும் என்று மட்டும் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியைச் சேர்த்துக் கொள்ளவதற்குத் தயார் செய்யப்படவேண்டும். நிகர (நிதி) அளிக்கும் நாடுகள் இதற்காகக் கூடுதல் வரிவிதிப்பைப் பெறக் கூடாது என்பதோடு நிதிய ஒழுங்குமுறைகளும் வெறுமே தொடருந்திருக்க முடியாது."

இதையொட்டிய நிலையிலேயே, துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைதல் எவ்வளவு விரைவு என்றாலும் 2014- இற்கு முன்பு இல்லை என்று திட்டமிடப்பட்டுள்ளது; அதாவது ருமேனியா, பல்கேரியா இவற்றின் நுழைவுடன் விரிவாக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்பட்டு, அதற்கான புதிய நிதித்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்தான் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு நீண்ட கால நிதியுதவித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது; இக்காலக்கட்டத்தில் துருக்கி முன்பிருந்த ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கும் குறைவான உதவித்தொகையைத்தான் பெற முடியும்.

முன்னாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் வெர்ஹ்ய்ஹென் தன்னுடைய கட்டுரையில் முந்தைய வகையிலான நிதி உதவி அமைப்பிற்கு எதிரான நெம்புகோல் போல் துருக்கி நடந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு துருக்கி கொண்டுள்ள பாதை நீண்டதும், கடினமானதுமாக இருக்கும். அதில் இந்நாடு வெற்றிபெற்றால், ஐரோப்பா அரசியலில் வலுவாக வெளிப்படுவதுடன், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை காணும். அதன் பின் ஐரோப்பாவும் தன்னைச் சீர்திருத்திக் கொள்ளும் திறனைப் பற்றியும் வினா எழுப்பிக் கொள்ளும்; குறிப்பான விவசாயத் துறை, கட்டுமானக் கொள்கை இவற்றில் இது பல செலவினங்களையும், வரவுசெலவுத் திட்ட சிக்கல்கள் நிறைந்துள்ளது பற்றியும் கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும்."

துருக்கி சார்பில் வாதிடுபவர்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் அது நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் பல அரசியல் குழுக்களில் இருந்தும் வந்துள்ளனர்.

Heinrich Boll Foundation என்று ஜேர்மன் பசுமைக்கட்சியினருடன் இணைந்துள்ள அமைப்பின் இயக்குனர் குழுவில் உள்ள ரால்ப் புக்ஸ், Frankfurter Allgemeinen Sonntagszeitung என்னும் செய்தித் தாளில் அக்டோபர் 10ம் தேதி எழுதியுள்ளதாவது: "வரலாற்றின் விந்தையைக் காண்போம்: அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பாவின் வலிமையைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படும் துருக்கி இணைதல், ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கமயமாக்கும் முயற்சியை விரைவுபடுத்தும்: ஒரு பன்முக இனத் தொகுப்பு, பன்முக சமயப் பின்பற்றாளர்களின் சமூகம், ஆற்றல் மிகுந்த உட்சந்தை, மிகப் பெரிய பகுதி, சமூக, பண்பாட்டு முரண்பாடுகள் ஆகியவை இருக்கும். ஆனால் அமெரிக்காவிற்கு மாறுபட்ட முறையில், ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஒரு அரசியல் கூட்டமைப்பாகக் கூட செயல்படவில்லை; ஒருமைப்பாட்டை வளர்க்கக் கூடிய, பொதுவான பின்னணிகளோ, அனுபவங்களோ, நிறுவன அமைப்புக்களோ இங்கு கிடையாது."

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) வெளிவிகாரத்துறைப் பிரதிநிதியான Wolfgang Schäuble, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகள் மிக அதிகாமான விரிவாக்கத்திற்கு உட்படுத்தக் கூடாதவை என்று தொடர்ந்து அறிவித்து வருகிறார். துருக்கிக்கு உறுப்பினர் தகுதி கொடுப்பது "பேரழிவைத் தரக்கூடிய தவறாகிவிடும்" என்றும் "வாஷிங்டனுடைய அழுத்தத்திற்கு" அடிபணிந்துதான் ஷ்ரோடர் இதை மேற்கொண்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜேர்மனியிலும், பிரான்சிலும் உள்ள பழமைவாத போக்குடைய எதிர்ப்பாளர்கள் "கிறிஸ்தவ மேற்கு நாடு" என்ற கருத்துப் படிவத்தை வளர்த்து வருகின்றனர். ஐரோப்பாவுடன் இயைந்து துருக்கி இருக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்; ஏனென்றால், "கிறிஸ்தவ-யூத" மரபில் தோன்றியுள்ள "ஐரோப்பிய மதிப்புகள், கலாச்சார" போன்றவற்றில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்பதால் "பொது அடையாள முறைக்கு" (Common Identity) அவர்கள் பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும் தன்மையை துருக்கி கொண்டுள்ளது என்றும் இப்பிரிவினர் கூறுகின்றனர். இந்த வாதங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டு அரசியல் நலன்களுக்காக வேகம் பெறுகின்றன. இவர்களுடைய நவீன-தாராள கொள்கையினால் சமுதாயம் சிதறுண்டு போகும் நிலையில் இருப்பதால், இந்தச் சக்திகள் ஒரு புதிய சிந்தனைப் போக்கின் அடித்தளத்தை காணமுற்பட்டு, அமெரிக்காவின் புஷ் வழங்கியுள்ள முன்னோடித்தன்மையை கருத்தில் கொண்டு, சமயம், பேரினவாதம் என்றுள்ள பிற்போக்கான ஆயுதக்கிடங்கைக் கண்டுபிடித்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம், ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் அதன் அமைப்புகளையும் நிராகரிக்கிறது. மூலதனத்தினதும் அதன் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் பலம்வாய்ந்த அதிகார வர்க்கப் பிரிவுகளின் திட்டங்கள்தாம் இவை. போலந்திலும், ருமேனியா மற்றம் சில நாடுகளிலும் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது போன்று துருக்கியில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு மிகக் குறைந்த அளவில்தான் ஜனநாயகத்தையும், வளத்தையும் இவை கொண்டுவரும். சர்வதேச உழைக்கும் மக்கள் ஒரு பொதுப் போராட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தை அகற்றுவதற்கு, துருக்கியும் ஒரு பாகமாகவுள்ள ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதற்கான போராட்டத்தினால்தான் வளமும், ஜனநாயகமும் ஏற்படுத்தப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved