World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

People of war-ravaged Jaffna hit hard by tsunami

போரினால் நாசமுற்றிருக்கும் யாழ்ப்பாண பகுதி மக்கள் சுனாமியால் பெரும் சேதத்திற்கு உள்ளாயினர்

By Thirugnanam Sambanthan and Rajendran Sudarshan
10 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் கடலோரப்பகுதிகளை தகர்த்திருக்கும் சுனாமி அலைக் கொந்தளிப்பு, யாழ்ப்பாணத் தீபகற்பகத்தின் வட பகுதிகளிலும் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பேரழிவு நிர்வாக மையத்தில் இருந்து கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2,640 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 540 பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் 541 பேர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 50,000 வீடிழந்த மக்கள், தீபகற்பகத்தின் 32 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 150,000 மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் புகலிடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வடக்கு யாழ்ப்பாண தீபகற்ப பகுதியில் இருக்கும் வடமராட்சியில் 18 கிலோமீட்டர் கடலோரப் பகுதியை பேரலைக் கொந்தளிப்புக்கள் அழித்துள்ளன; இதில் ஏற்கனவே 20ஆண்டு உள்நாட்டுப் போரினால் அழிவிற்குட்பட்டுள்ள, கொழும்பில் இருந்து 420 கி.மீ. தொலைவிலுள்ள வல்வெட்டித்துறையும், பருத்தித்துறையும் அடங்கும். இப்பகுதி முழுவதும், அன்றாட பிழைப்பிற்காக, நூற்றுக்கணக்கான மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள சிறு கிராமங்கள் உள்ளன. போரின்பொழுது, இந்தக் கிராம மக்கள் கணக்கிலடங்கா கஷ்டங்களை எதிர்கொண்டனர்; அவர்கள் பலமுறையும் இருக்குமிடத்தைவிட்டு ஓடியும், மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின்னர் வந்து தங்குவதுமாக இருந்தனர். அவர்கள் இலங்கை கடற்படை அவ்வப்பொழுது போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த காலங்களில் திணிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தலுக்கான தடைகளையும் எதிர்கொண்டதுடன், இப்பொழுதும் கடலுக்குள் செல்வதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது.

தீவின் வடகோடி முனைக்கருகில் உள்ள வடமராட்சி, இராணுவ அதிகாரிகளால், "உயர் பாதுகாப்பு வலையம்" என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதைச் சென்றடவைதற்கு மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியில் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கின் ஒரு சிறிய பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றனர்.

மணற்காடு, மருதங்கேணி, முனை, சுப்பர்மடம், நாகர்கோவில், பொலிகண்டி போன்று 20 கடலோரக் கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடலுள் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் டிசம்பர் 28 அன்று மிக மோசமான தாக்குதலுக்கு உட்பட்டிருந்த மணற்காடு கிராமத்தை பார்வையிட்டனர். இங்கு தப்பிப் பிழைத்தவர்கள் எவ்வாறு உயர்ந்து வந்திருந்த தண்ணீர், கரைக்குள் 1.5 கிலோமீட்டர் வரை பரவி வந்தது என்றும் குறைந்தது, கிராம மக்கட்தொகையில் 10 சதவிகிதத்தினரான 100 பேர்களாவது கொல்லப்பட்டனர் என்றும் விவரித்தனர். கிராமத்தின் கூரைவேய்ந்த வீடுகளில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டன.

அடித்துச் செல்லப்பட்டுவிட்ட மணற்காடு கிராமப் பள்ளிக்கூடத்தின் முதல்வரான குருகுலசிங்கம், குறைந்து 50 குழந்தைகளாவது மடிந்து போயிருக்கக் கூடும் என்று தெரிவித்தார். "அது மட்டும் வழக்கமான பணி நாளாக இருந்தால் எங்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளுடன் அடித்துச் செல்லப்பட்டிருப்போம். இன்னும் ஏராளமான மக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசாங்கம் எங்களுக்கு இன்னும் உதவி ஏதும் கொடுக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

பெருந்துயர நிகழ்விற்கு மறுநாள் 100 சடலங்கள் மந்திகை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. கிட்டத்தட்ட 532 குடும்பங்கள் மருத்துவமனையில் உறைவிடம் அளிக்கப்பட்டு பின்னர் மற்ற முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெரும்பாலான கிராமத்தினர் இப்பொழுது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் உறைவிடம் அளிக்கப்பட்டுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் முனை கிராம அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிற்குச் சென்றிருந்தனர். முகாமில் அரசாங்க கிராம அலுவலரான குமரகுரு தெரிவித்தார்: "இந்த மக்கள் பெருஞ்சோகத்தால் பேரழிவிற்கு உட்பட்டுள்னர். ஆனால் அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியையும் இன்னும் அனுப்பவில்லை. சுற்றியிருக்கும் பகுதி மக்கள்தான் உதவிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

"இங்கு 256 குடும்பங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்களுக்கு அவர்களுக்கு உணவு கொடுத்து, மருத்துவ உதவிகளையும் எங்களால் கொடுக்க முடியும் என்பதுபற்றி நாங்கள் ஒன்றும் கூற முடியவில்லை. இவர்களுக்கு எல்லாம் மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்படவேண்டும். மருதங்கேணி மற்றும் மணற்காடு கிராமங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு வீடுகளும் இல்லை.

"இங்கு எங்களிடம் 100 குடும்பங்களை மட்டும் வைத்துக் கொள்ளும் இடம்தான் உள்ளது; ஆனால் நாங்கள் 250 குடும்பங்களுக்கும் மேலாகப் பாதுகாத்து வருகிறோம். வட்டார செயலரிடம் இந்நிலைமை பற்றி நாங்கள் தெரிவித்துள்ளோம்; அரசாங்கம் இன்னும் மெளனமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 750 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்; ஆனால் நான்கு கழிப்பறைகள்தான் இருக்கின்றன. நான்கு குழிகளை, தற்காலிக கழிப்பறையாக பயன்படுத்துவதற்காக தோண்டி வைத்திருக்கிறோம். எனவேதான் நாங்கள் தக்க சுகாதார பாதுகாப்பை பராமரிக்க இயலாது."

நிலக் கண்ணிவெடிகள் மற்றொரு அபாயம் என்று அவர் விளக்கினார். இராணுவத்தினர் ஏராளமான நிலக் கண்ணிகளுக்கான குழிகளை தோண்டி வைத்துள்ளனர்; அவற்றில் பல சுனாமி அலைக் கொந்தளிப்பால் இடம் பெயர்ந்து மற்ற இடங்களுக்கு வந்துள்ளன. இத்தகைய ஆபத்துக்கள் இலங்கையின் கிழக்குப் பகுதிகளிலும் இருக்கின்றன.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் சுனாமித் தாக்குதலுக்கு ஆளான முனை, சுப்பர்மடம் மேலும் சில கிராமங்களுக்கு சென்றிருந்தனர். பல மக்கள் மடிந்திருந்ததோடு, படகுகள், வலைகள் என்று மீன்பிடிக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் இந்தக் கிராமங்களில் அழிக்கப்பட்டு விட்டன.

உயிர்தப்பியிருப்பதற்காக உள்ளூர் நன்கொடையாளர்களின் அன்பளிப்பை நம்பியிருக்க வேண்டியுள்ள மீன்பிடிக்கும் குடும்பங்கள் தாங்கள் உதவிகளை அரசாங்கத்திடமா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இடம் இருந்தா பெறவேண்டும் என்று உறுதியில்லாத நிலையில் இருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்கள் மீண்டும் வாழ்வதற்கான வகையைச் சீரமைக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்தபோதிலும்கூட, வேறு சிலர் தங்களுடைய வருங்காலத்தைப் பற்றிய பெரும் திகைப்பை வெளிப்படுத்தினர். சுப்பர்மடத்தில் இருந்த ஒரு மீனவர் கூறினார்:" குறைந்தது பழைய நிலையை நாங்கள் அடைவதற்கு பத்து ஆண்டுகளாவது ஆகும். எத்தனை காலம் இவர்கள் எங்களுக்கு உதவி புரிவர் என்று நாங்கள் கூறமுடியாது." மற்றொரு பெண்மணி கேட்டார்: "இவர்கள் எத்தனை நாட்களுக்கு எங்களுக்கு அரிசி கொடுத்துக் கொண்டிருப்பர்?"

சுப்பர்மடத்தில் உள்ள எஸ். இந்திரலிங்கம், வட இந்து மகளிர் கல்லூரி பாதுகாப்பில் இருப்பவர் தெரிவித்தார்: "எங்களுடைய வாழ்வை மறுசீரமைக்க எவரும் உதவுவர் என்று நாங்கள் நம்பவில்லை; ஏனெனில் போரில் நாங்கள் இழந்ததற்கு எவரும் எங்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. இப்பொழுது இந்தப் பெருஞ்சோகம் தீவு முழுவதும் நடந்துள்ளது. மீனவர்கள் மிகவும் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் ஆவர். போரின்போது அதிகாரிகள் மீன்பிடிப்பதைத் தடை செய்தனர்; இப்பொழுதும் அத்தகைய அழிவை எதிர்கொள்ள இருப்பதும் நாங்கள்தான்."

இந்தியாவில் 15 ஆண்டுகள் அகதியாக இருந்த பின்னர் சமீபத்தில் இங்கு வந்து வசித்து வரும் ஒரு பெண்மணி கூறினார்: "நான்கு மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் (வடக்கு கடலோர நகரமான) மன்னார் வழியே படகில் திரும்பி வந்தோம். இன்னும் எவரும் எங்களுக்கு உதவி செய்துவிடவில்லை. என்னுடைய வீடு கடலோரத்தில் இருந்தது. என்னுடைய குழந்தையையும் என்னையும் அலை பல முறையும் சுழற்றியடித்தது. இறைவனுடைய அருளால் எங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அனைத்தையும் இழந்து விட்டேன்."

மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புஷ்பமலர் என்னும் விதவை தங்களுடைய வருங்காலத்தை பற்றிய கவலையை வெளிப்படுத்தினார்: "நான் ஒரு விதவை. நான் 50 அல்லது 100 ரூபாய்கள் (அமெரிக்க 50 அல்லது 100 சென்டுகள்), மீன்களை பொறுக்கி தேர்வு செய்து மீன் பிடிப்பவர்களுக்கு உதவி செய்வதின் மூலம் சம்பாதித்து வந்தேன். இப்பொழுது நான் எவ்வாறு வாழ்வேன்? அரசாங்கம் இதுவரை எந்த உதவியையும் கொடுத்தது இல்லை. அவர்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. எத்தனை நாட்கள் இவர்கள் (உள்ளூர் தொண்டர்கள்) மக்களிடம் இருந்து பணம் வசூலித்து எங்களை காப்பாற்ற முடியும்? மரணத்தை தவிர வேறு எதையும் நாங்கள் எதிர்பார்ப்பதற்கு இல்லை."

மணற்காட்டில் உள்ள லூயி மேரி தன்னுடைய 10 மாதக் கைக்குழந்தையை இழந்து மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சோகத்தைப் பற்றி கண்ணீர் மல்கும் கண்களுடன் அவர் விவரித்தார்: "இந்த அலைகளை பார்த்தவுடன், நான் என் குழந்தைகளுடன் ஓடத்தலைப்பட்டேன். என்னை அலை மடக்கியபோதும், குழந்தைகளை நான் விட்டுவிடவில்லை. ஒரு பனைமரம் கீழே சரிந்ததைப் பார்த்துத் திகைப்படைந்து நின்றிருந்த நிலையில் என்னுடைய குழந்தையை இழந்துவிட்டேன்."

தன்னுடைய குடும்பம் அதன் படகு, வலைகள், அனைத்துக் கருவிகள் மற்றும் வீட்டையும் இழந்து விட்டதாக தி. இந்திராணி தெரிவித்தார். தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று அவர் அரும்பாடுபட்டார். "நாங்கள் போரில் இழந்திருந்த வேலைகளை பலரின் கால்களிலும் விழுந்து மீட்டுக் கொண்டோம். இப்பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று அவர் வினவினார். மூன்று குழந்தைகளுக்கு தாயாரான சுகந்தி கூறினார்: "நாங்கள் படகுகளையும், வலைகளையும் ஒரு வங்கியில் கடன் எடுத்து வாங்கினோம். இப்பொழுது நாங்கள் கடன்களை எவ்வாறு அடைப்பது? எங்களுக்கு வேலை கிடைத்தால்தான் நாங்கள் கடனை திருப்பித்தரமுடியும்."

ஒரு நடுத்தர வயதினரான சுப்பர்மடத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் தெரிவித்தார்: "நாங்கள் எங்களுடைய வாழ்வை மறுசீரமைக்க எவரும் உதவுவர் என்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. என்னுடைய மீன்பிடிக்கும் உபகரணங்கள் 1989ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே (இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளில், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய இராணுவம் குறுக்கிட்டது) நடந்த போரின்போது அழிந்துவிட்டது. பின்னர் என்னுடைய அனைத்து மீன்பிடிக்கும் கருவிகள் 1995ல் ரிவிரச இராணுவ நடவடிக்கை பொதுஜன முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டபோது பழையபடியும் அழிக்கப்பட்டுவிட்டன.

"பலமுறை நான் கேட்டுக் கொண்டும் அரசாங்கம் இன்றுவரையில் எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு அனுப்பப்படவேண்டிய கடிதங்களை டைப் செய்வதற்கான செலவுகளும் வீணாகத்தான் போயிற்று. இந்த முறை அரசாங்கம் வந்து எங்களுக்கு உதவும் என்று நாங்கள் எப்படி நம்புவது?"

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் இப்பகுதியைப் பார்வையிட்டபோது எந்த அரசாங்க அல்லது வெளிநாட்டு அதிகாரிகளையும் எதிர்கொள்வில்லை. உள்ளூர் மக்களும், வட்டார அமைப்புக்களும்தான் உணவு, மற்றும் தேவைப் பொருட்களை மிகவும் தேவையானவர்களுக்கு அளித்துவருகின்றனர். சாதாரண மக்களும் இடிபாடுகளுக்கு இடையே தப்பிப் பிழைத்தவர்கள் உள்ளனரோ என்று தேடிப்பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

See Also:

அழிவுகளுக்கு மத்தியில்
இலங்கை ஜனாதிபதி "ஐக்கியத்துக்காக" அழைப்புவிடுக்கின்றார்

ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை

தொற்றுநோய் பரவும் அபாயங்களுடன், சுனாமியினால் இறந்தோர் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் உயர்கிறது

தெற்கு ஆசியாவில் பேரழிவு அலைக் கொந்தளிப்பு 13,000 உயிர்களைக் கவர்ந்தது

Top of page