World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Powell declares tsunami aid part of global war on terror

Imperialism in Samaritan's clothing

பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போரில் சுனாமி உதவி என்பது ஒரு பகுதி என்று பவெல் அறிவிக்கிறார்

நற்பணியாளர் போர்வையில் ஏகாதிபத்தியம்

By Bill Van Auken
6 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு ஆசியாவில் சுனாமித் தாக்குதலால் பேரழிவிற்குட்பட்ட நாடுகளில் மேற்கொண்டிருந்த சூறாவளிப் பயணத்தின்போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொலின் பவெல், நடந்து கொண்டிருக்கும் நிவாரண முயற்சிக்கு முனகிக்கொண்டும், தாமதித்தும் பணம் அளிக்கும் வாஷிங்டனுடைய நடவடிக்கை "பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போரின்" ஒரு பகுதி என்று தன்னையும் அறியாமல் தெரிவித்துவிட்டார்.

நிவாரணப் பணிகளில் அமெரிக்க உதவியையும், அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்திக் கொள்ளுவது பற்றியும் கூறும்போது, பவெல் அறிவித்தார்: "அதிருப்திகளினால் ஒருவேளை விளையக்கூடிய பயங்கரவாத நடவடிக்கையை அது வற்றச்செய்துவிடும் அத்தகைய ஆதரவு எங்களுடைய தேசிய பாதுகாப்பின் நலனுக்கு மட்டும் இல்லாமல், தொடர்புடைய நாடுகளின் தேசிய நலன்களுக்கும் பொருந்தும்."

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்து கூறினார்: "சமயத்தை கருதாதும், இவற்றை நாங்கள் செய்து வருவோம்; ஆனால் முஸ்லிம் உலகிற்கும் உலகின் மற்ற பகுதிக்கும் அமெரிக்கரின் தாராள மனப்பான்மையை காண்பதற்கும், அமெரிக்க மதிப்பீடுகள் நடைமுறையில் எவ்வாறு உள்ளன என்பது பற்றி அறியவும், இது உறுதியாக ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது என்று நான் நினைக்கிறேன்."

தாமதத்தினால் முகம் சரிந்திருந்த அமெரிக்காவை உயர்த்திக் காட்டும் வகையில்தான் பவெலுடைய பயணம் அமைந்திருந்தது. உலகின் மிக சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் அரசாங்கம், குறிப்பாக, அதன் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், நினைவுக்குட்பட்ட அண்மைய காலத்திலேயே மிகக் கோரமான இயற்கை பேரழிவு பற்றி, இகழ்வூட்டும் விந்தையான அசட்டைத் தன்மையை புலப்படுத்தினார், என்ற நல்ல ஆதாரமுடைய சர்வதேசக் கருத்தை மாற்றும் இலக்கை கொண்டிருந்தது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன் புளோரிடாவின் கவர்னரான ஜெப் புஷ்ஷும் வந்திருந்தார்; சர்வதேச பெருந்துன்பத்தின் தன்மையை தன்னுடைய அரசியல் ஆசைகளுக்காக சுரண்டும் தன்மை பெற்று, உலக நெருக்கடியை பயன்படுத்துவது போல் காணப்படும் தன்னுடைய தமையனாருக்கு பிரத்தியேக தூதர் போல் இவர் நடந்து கொண்டார்.

சுனாமியினால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பேரழிவுக்கு தான் அளிக்கும் உதவியை "அமெரிக்கப் பெரும் கொடை உள்ளத்தின் வெளிப்பாடு, அமெரிக்க மதிப்பீடுகளின் செயலாக்கத்தின் வெளிப்பாடு" என்று வாஷிங்டன் கூறியிருப்பதின் பொருள் என்ன?

பெருந்தன்மை என்றாலே தன்னலமற்ற தன்மை என்ற உட்குறிப்பை வெளிப்படுத்துகிறது; இது அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் கூறுபாடாக இருந்ததே கிடையாது. மாறாக, அமெரிக்க உதவியை அற்பமான $15 மில்லியனில் இருந்து, $35 மில்லியனுக்கும் பின்னர் இறுதியாக $350 மில்லியனுக்கும் உயர்த்தியது, வாஷிங்டனுடைய கருமித்தனத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உலகளவில் பெரும் மதிப்புக் குறைவு ஏற்பட்டுவிட்டதை ஈடுகட்டும் வகையில் எடுக்கப்பட்ட முடிவுதான் அது.

பவலே ஒப்புக் கொள்ளுகின்றபடி, இந்த உதவி "பயங்கரவாதத்தின் மீதான போரின்" ஒரு பகுதியாகும்; அமெரிக்கா உலகப் பொருளாதார, அரசியல் மேலாதிக்கத்தை இராணுவ ஆற்றலினாலும், ஆக்கிரமிப்பினாலும் அடையும் வழிவகைகளை கொள்ளுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

சுனாமியினால் ஏற்பட்டுள்ள பேரழிவும் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியா மனித உயிர்களின் இழப்பும் "அமெரிக்க மதிப்பீடுகள்" என்று உண்மையில் கருதக்கூடியவற்றின் வெளிப்பாடுகளை கொண்டுவருகின்றன; ஆனால் வாஷிங்டனிலுள்ள நிர்வாகத்தில் இருந்து இவை தோன்றவில்லை.

அமெரிக்கா முழுவதும், மாணவர்களும் இளைஞர்களும் ரொட்டி சுட்டு, விற்பனை செய்தல், மற்ற செயல்களில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோருக்கு பணம் திரட்டும் முயற்சிகள், மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உதவி நிதி கோரி அழைப்பு விடுத்தல் போன்ற வகையில் அமெரிக்க மக்களுடைய திறந்த உள்ளமும் அரசியல் சூதுவாதற்ற தாராளப் போக்கும் நல்ல முறையிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கத் தொலைக்காட்சிகளும், செய்தித் தாட்களும் பேரழிவின் உண்மையான தரத்தை துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளன. புஷ் நிர்வாகம் இந்திய பெருங்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பிற்கு காட்டிய ஆரம்ப இகழ்வுற்ற போக்கு ஏற்புடையது அல்ல என்று அமெரிக்க ஆளும் வட்டங்கள் முடிவெடுத்தவுடனேயே, பெருவர்த்தக கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடக பெருநிறுவனங்கள் செயலாற்றலில் ஈடுபட்டு, பேரழிவைப் பற்றி இடையறாமல் தகவல்கள் கொடுக்கத் தொடங்கின. படங்கள் மூலம் வரிசையாகக் கிடந்த சடலங்களைக் காட்டியது, பெற்றோர்கள் தங்கள் சிறு குழுந்தைகளின் உடல்களைத் தூக்கிச் சென்றமை, கிராமங்கள் தரைமட்டமானமை போன்றவை ஒவ்வோர் இரவும் அமெரிக்க தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

செய்தி ஊடகங்கள் கையாண்ட இத்தகைய முறையை, அவை கோழைத்தனமாகவும், சதிமுறையில் மெளனமாகவும் அமெரிக்க படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றினால் ஈராக்கில் நிகழ்ந்த மனிதப் பேரழிவிற்கு காட்டாததை எதிர்மறையில் நன்கு அறியலாம். இறந்தோரின் படங்கள், அமெரிக்க குண்டுவீச்சால் இறந்திருந்த குழந்தைகளின் உடல்களை தாங்கியபடி அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், இல்லங்கள் தரைமட்டமாக நாசமாக்கப்பட்டிருந்தல் போன்றவை நிறையக் கிடைத்திருந்தன; ஆனால் அவை அமெரிக்கா தடையற்ற செய்தி ஊடகம் என்ற கருத்தைக் கொண்டிருந்தபோதிலும் பெரும் தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இந்தோனேசியாவில் பண்டா ஆஷேக்கு மேலே ஒரு ஹெலிகாப்டரில் பறந்ததை விவரித்த பவெல்,: "என்னுடைய இராணுவ மற்றும் அரசாங்க உத்தியோக காலத்தில் இத்தகைய காட்சியை நான் கண்டதே இல்லை" என்றார்.

"வருகின்ற இந்தப் பெரும் சப்தத்தைக் கேட்கும் அனைவரும் மற்றும் குடும்பங்களும் அனுபவிக்கும் கொடூரம், அலைக் கொந்தளிப்பிற்குப்பின்னர் கணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட உயிர்களினால் விளைந்த அதிர்ச்சி ஆகியவற்றைக் கற்பனையும் செய்து பார்க்க இயலாது. அலைகளின் பாலங்களைத் தகர்க்கும் சக்தி, ஆலைகளை அழிக்கும் ஆற்றல், இல்லங்களை இடித்துவிடும் சக்தி, பயிர்களை அழிக்கும் சக்தி, தன்னுடைய வழியில் எது இருந்தாலும் அதைத் துரும்பென அழித்து அகற்றும் ஆற்றல் வியப்பாக உள்ளது."

பல்லூஜா நகரத்திற்கு மேலே சற்றே உயரக்குறைவில் பறக்கும் ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பார்த்திருந்தால் அவருக்குத் தக்க பார்வை கிடைத்திருக்கும்; ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு தொடர்ந்து காட்டிவரப்படும் எதிர்ப்பு அத்தகைய பயணத்தை அவரால் மேற்கொள்ள முடியாமல் செய்திருக்கிறது.

ஒரு மனிதன் உருவாக்கிய சுனாமி, ஈராக்கிய முக்கிய நகர மையங்கள் ஒன்றில் எத்தகைய அழிவை கொடுத்துள்ளது என்பதை அத்தகைய ஹெலிகாப்டர் வழி ஆய்வு வெளிக்காட்டியிருக்கும். "மசூதிகளின் நகரங்கள்" எனப் புகழ்பெற்றிருந்த பகுதி அமெரிக்கப் போர் விமானங்கள், பீரங்கிப்படைகள், டாங்குகள் போன்றவற்றின் விளைவால், குண்டுவெடிப்பு என்ற தீயின் கோர அலைக்கொந்தளிப்பால் பெரும் அழிவிற்கும் சிதைவிற்கும் ஆளாகி நிற்கிறது.

அமெரிக்க வான்வழிக் குண்டுவீச்சின் பெருத்த ஒலி, மற்றும் அமெரிக்க டாங்குகள் நகரத்தை நாசமடிக்கும் முறையில் ஈடுபட்டு துளைத்தெடுத்த பீரங்கி முழக்கத்தின் இடி முழக்கத்தினால் ஈராக்கிய மக்கள் உணர்ந்த பெரும் பீதி, கோரம் இவற்றைப் பற்றி என்ன கூறவியலும்? அவர்களுடைய உள்ளங்களில் எத்தகைய சிந்தனைகள் இருந்திருக்கும் என்பதை கொலின் பவெல் கற்பனை செய்து பார்க்கத் திறன் உடையவரா? அமெரிக்க அரசாங்கமோ, அமெரிக்கச் செய்தி ஊடகமோ கருத்திற்கூட நினைக்க விரும்பாத எண்ணிக்கையில்தான் கணக்கற்ற உயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

பென்டகனும், செய்தி ஊடகமும், தொடர்ச்சியாக அமெரிக்கப்படைகள் "எதிர்ப்பாளர்கள்" மற்றும் "பயங்கரவாதிகளை" பல்லுஜாவில் கொன்றதைப் பற்றிக் கூறிவரும்போது, நகரம் மீண்டும் மறு வாழ்வில் ஈடுபடும் முயற்சியைப்பற்றி வெளிவரும் தகவல்கள் முற்றிலும் மாறுபட்ட கதையைத்தான் கூறுகின்றன.

பல்லுஜாவின் முக்கிய மருத்துவமனையில் இயக்குனர், இந்தப் பிரிவின் அவசர சிகிச்சைக் குழு இதுவரை நகரத்தின் இடிபாடுகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட சடலங்களை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவற்றில் 550க்கும் மேற்பட்டவை மகளிர், குழந்தைகள் உடையனவாகும்; ஆண்களில் பெரும்பாலானவை முதியோர்களுடைய சடலங்கள். கைக்குழந்தைகள் தங்கள் இல்லங்களில் போதிய உணவின்றி இறந்திருந்த நிலையில் காணப்பட்டன. நகரத்தில் ஒரு சிறு பிரிவிற்குத்தான் இத்தகைய தேடுதல் நீட்டிக்கப்பட்டது; பல பகுதிகளும் போரினால் சென்று அடைய முடியாத நிலையில்தான் உள்ளன.

பல்லுஜாவில் ஏற்பட்டுள்ள இறப்புக்கள், கடந்த அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancet அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கி ஈராக்கில் நிகழ்ந்துள்ள 100,000 க்கும் மேற்பட்ட வன்முறை உயிர்பறிப்புக்கள் பற்றிய ஆய்வு நம்பகமான மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கக் குண்டுவீச்சுக்களால் நிகழ்ந்தவை ஆகும். இந்த எண்ணிக்கை இப்பொழுது சுனாமி பாதிப்பால் உயிரிழந்தோர் பற்றிய மதிப்பீட்டில் மூன்றில் இரு பகுதியாகும்; ஆனால் அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் இதுபற்றிய குறிப்பு அதிகமாகக் கொடுக்கப்படவில்லை.

இந்த வன்முறை உயிரிழப்புக்களைத் தவிர இன்னும் ஆயிரக்கணக்கானவை, இளைஞரிடையேயும், குழந்தைகளிடையேயும் நாட்டின் கட்டுமான அடிப்படை அழிவினால் ஏற்பட்டவை, பாதுகாப்பான குடிநீர் கொடுக்காததாலும், அடிப்படை மருந்துகளுக்கு தக்க குளிர்பதனம் செய்ய முடியாததாலும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாகக் கணக்கெடுத்தால் இந்த மனித இறப்புப்பட்டியல், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு, தெற்கு ஆசியாவில் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு சமமாகத்தான் உள்ளது.

"அமெரிக்க மதிப்பீடுகளைப்" பொறுத்தவரையில், அபு கிரைப், குவாண்டநாமோ மற்றும் அதிகம் அறியப்பட்டிராத அமெரிக்கக் காவல் மையங்களில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் மீது அமெரிக்க இராணுவம் மற்றும் சிஐஏ -ஆல் நடத்தப்படும் கொடூர சித்திரவதைகள் எவர்களுடைய "மதிப்பீடுகளை" ஒட்டி அமைந்துள்ளன என்று நியாயமாகக் கேட்கலாம்.

இராணுவ விசாரணை நடத்துபவர்கள், காவலர்கள் ஆகியோர் எந்த மதிப்பீடுகளின் பெயரில் ஈராக்கியக் கைதிகளுக்கு மின்சார முறையில் அதிர்ச்சி கொடுத்தனர், அவர்கள்மீது நெருப்பை ஏவி, அவர்களைப் பாலியல் முறையில் கொடுமைக்கும், அவமானத்திற்கும் உட்படுத்தினர்?

இத்தகைய கொடுமைகள் நடத்தப்படுவதற்கும், தொடர்ந்து நடைபெறுவதற்குமான உத்தரவுகள், வெள்ளை மாளிகையில் இருந்தே, புஷ்ஷினால் ஆர்வத்துடனேயே வெளிவந்தவை என்றும் அவர் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி நியமனத்திற்கும் பரிந்துரை செய்திருக்கும் ஆல்பேர்டோ கொன்சலஸ் ஆல் நிறைவேற்றப்பட்டவை என்பதும் இப்பொழுது தெளிவாகியுள்ளன.

இத்தகைய இழிந்த நடவடிக்கைகளுக்குப் பின்னணியில்தான், தன்னுடைய இன்னும் கூடுதலான செல்வக் கொழிப்பிற்காக, ஏராளமான மக்களைப் படுகொலையும், சித்திரவதைசெய்வதற்கும் தயாராக செயல்படும் ஒரு கொள்ளை முறை, ஊழல் மிகுந்த ஆளும் வர்க்கத்தின் "மதிப்பீடுகள்" உறைந்துள்ளன. ஈராக்கில் தன்னுடைய குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை தொடர முடிவதற்கு இதன் வலிமையே அமெரிக்க மக்களிடையே முறையாக பொய்யுரைகள் கூறியதும், செய்தி ஊடகத்தின் ஒத்துழைப்பை இவ்வளவு அதிகமாகச் செய்யப்பட்ட குற்றங்களை மறைப்பதற்கு பெற்றதும்தான்.

வாஷிங்டனில் பல முக்கிய பிரமுககர்களினால் வெளிப்படையக தெரிவிக்கப்பட்ட இந்த நம்பிக்கைகள், அதாவது அமெரிக்க இராணுவம் தெற்கு ஆசியாவில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டால் அபு கிரைப் சித்திரவதைக் கூடத்தில் இருந்து உள்ளத்தைக் காயப்படுத்தும் தோற்றங்கள் வெளிப்பட்டிருப்பதையும், பல்லூஜாவில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதால் வந்துள்ள இழி தோற்றங்களையும், மறைத்துவிடும் என்ற எண்ணங்கள், வீணாகத்தான் போகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் திடீரென்று மனிதாபிமான அமைப்பாக மாறிவிட்டது என்பதை எவரும் நம்பப் போவதில்லை.

இரண்டு முறை உதவி அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்த பின்னரும், சுனாமிக்கு அமெரிக்கா கொடுக்கும் நிதி, ஈராக்கில் இரண்டு நாட்கள் போர் நடத்தும் செலவைக் கூட எட்டாது. அமெரிக்க முதலாளித்துவ தரங்களின்படி, "மதிப்பீடுகள்" டாலர்கள், சென்ட்டுக்கள் கணக்கில் உள்ளன; இதை உலகமே நன்கு அறியும்.

ஒரு நூற்றாண்டுக்கு சற்றே முன்பு, மாபெரும் புரட்சியாளரான ரோசா லுக்சம்பேர்க், இயற்கையின் சீற்றத்தால் விளைந்திருந்த மற்றொரு பேரழிவிற்கு பெரிய வல்லரசுகள் நடந்துகொண்டது பற்றி, அதாவது பீலீ மலையில் எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறி, பிரான்சின் கரிபியக் குடியேற்றமாகிய மார்டினிக்கில் வாழ்ந்து வந்த 40,000 மக்கள் உயிரைக் கவர்ந்தது பற்றி, காலத்தால் அழிக்க முடியாத கட்டுரை ஒன்றை எழுதினார். [See "Martinique" http://www.marxists.org/archive/luxemburg/1902/05/15.htm]

பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் இருந்து உயிரிழப்புக்கள் பற்றிய போலித்தனமான வருத்தங்கள், மனிதாபிமான உணர்வுகள் ஆகியவை வெளியிடப்பட்டது பற்றி அவர் மிக அறிவார்ந்த முறையிலே வெளிப்படுத்தியுள்ளார். அந்நாடுகளின் அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய உழைக்கும் மக்களுக்கு எதிராக அல்லது ஆபிரிக்காவில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை காலனித்துவத்திற்கு எதிர்ப்புக் காட்டியவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கிய வகையில் இரத்தக் களரியை ஏற்படுத்தியதை சுட்டிக் காட்டியுள்ளார்.

லுக்சம்பேர்க் எழுதினார்: "இப்பொழுது இவர்கள் மார்ட்டினிக்கை நோக்கித் திரும்பியுள்ளனர்; ஒரே உள்ளத்துடனும், புத்தியுடனும் இதைச் செய்துள்ளனர்; அவர்கள் உதவுகின்றனர், காப்பாற்றுகின்றனர், கண்ணீரைத் துடைக்கின்றனர், பேரழிவு தந்துள்ள எரிமலையை சபிக்கின்றனர். பெரும் உள்ளம் படைத்த அசுரனாகிய பீலீ மலையே, நீ சிரிக்கலாம்; இந்த கருணையுள்ளம் படைத்த கொலைகாரர்கள், இந்த அழுது புலம்பும் மாமிசம் உண்ணுபவர்கள், நற்செய்தி தெரிவிப்போர் உடையில் இருக்கும் இந்தக் கொடிய மிருகங்கள் ஆகியோரைப் பார்த்து நீ இழிவாக நினைக்கலாம். ஆனால் மற்றொரு எரிமலை தன்னுடைய இடிமுழக்கத்தை வெளிப்படுத்தித் தோன்றும் காலம் வரும்; அந்த எரிமலை கொந்தளித்துக் கொண்டும், குமுறிக் கொண்டும், உனக்குத் தேவை என்றாலும் தேவையில்லை என்றாலும், இந்தத் தன்னைத்தான் போற்றிக்கொள்ளும், குருதி வழிந்த பண்பாட்டை பூமியில் இருந்தே அகற்றித் தள்ளிவிடும். அந்த அழிவுகளின் அடிப்படையில்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக உண்மையான மனிதப் பண்பில், குருட்டுத்தனமான, மடிந்துவிட்ட இயற்கையை தவிர, வேறு எந்த விரோதியையும் கொள்ளாத, ஒரு குலமாக மிளிரும்."

சமீபத்திய நிகழ்வுகளின் பார்வையில், இந்தச் சொற்கள் எப்பொழுதும் பசுமையாக இருக்கும். மகத்தான மனிதகுலக் கஷ்டங்களும், தென் ஆசிய சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் காணப்படும் பாசாங்குத்தனமான ஏகாதிபத்தியமும் ஒன்றையொன்று எதிரெதிரே நிறுத்திக் காணும் நிலை, சமத்துவமற்ற நிலையினாலும் அடக்குமுறையினாலும், அலைமோதிக் கொண்டு, சமூக புரட்சிக்குக் கனிந்து நிற்கும் ஒரு சமுதாயத்தின் அடையாளமாக விளங்குகிறது.

08 Janauary 2005

பிளேயரின் மனிதாபிமான பாசாங்கை சுனாமி பேரழிவு கிழித்து எறிகிறது

Top of page