World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

In the wake of tsunami calamity

Indonesian army steps up war in Aceh

சுனாமி பேரழிவை தொடர்ந்து

ஆஷேயில் போரை முடுக்கிவிட்டுள்ள இந்தோனேஷிய இராணுவம்

By John Roberts
5 January 2005

Back to screen version

வடக்கு சுமத்ராவில் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவை பயன்படுத்திக்கொண்டு இந்தோனேஷிய இராணுவம் (TNI) சுதந்திர ஆஷே (Aceh) பிரிவினைவாத இயக்கத்தை நசுக்கிவிட்டு பொருளாதார வளம்மிக்க அந்த ஆஷே மாகாணத்தில் தனது ஆதிக்கத்தை எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத நிலையில் நிலை நாட்டிக்கொள்ள முயன்று வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

டிசம்பர் 26-ல் ஆஷே பகுதியை சீரழித்த பூகம்பத்தினாலும் சுனாமியினாலும் மடிந்தவர்கள், தொகை இதுவரை 1,00,000த்தை தாண்டிவிட்டது, இது மேலும் உயரக்கூடும் என்று தோன்றுகிறது. கிழக்கு கடற்கரையிலுள்ள Lhokseumawe-விலிருந்து சுமத்ராவின் வடக்கு முனை அருகிலுள்ள மாகாண தலைநகரான பன்டா ஆஷே வழியாக, மேற்கு கரையிலுள்ள Meulaboh வரை பல பெரிய, சிறிய நகரங்கள் அழிந்துவிட்டன.

போக்குவரத்து மற்றும் இதர தொழிற்கட்டமைப்பு வசதிகள் சிதைக்கப்பட்டுவிட்டன. பல்லாயிரக்கணக்கானோர், தண்ணீர், உணவு, உடைகள், குடியிருப்பு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். தொற்று நோயினாலும் பட்டினியினாலும் மேலும் பலர் மடியக் கூடிய பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், அவசர நிவாரண முயற்சிகளில் ஆதாரவளங்களை குவிப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இந்தோனேஷிய இராணுவம், ஜனாதிபதி Susilo Bambang Yadhoyono ஒப்புதலோடு GAM போராளிகளுக்கு எதிராக எதிர் கிளர்ச்சி நடவடிக்க்ைகளை எடுப்பதில், தங்களது கவனத்தை முழுமையாக திருப்பிக் கொண்டிருக்கிறது. அகதிகள் நிவாரணப் பொருள்களுக்காக மிக நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும்போது, நிவாரண ஊழியர்களுக்கு போக்குவரத்து வாகனங்கள் தேவைப்படுகிற நேரத்தில், TNI அந்த மாகாணத்தில் பல்வேறு இடங்களில் GAM-மிற்கு எதிராக தாக்குதலில் இறங்கியுள்ளது.

சுனாமி தாக்குதல் நடத்திய நேரத்தில் ஆஷே இல் GAM-ஐ ஒழித்துக்கட்டுகின்ற நடவடிக்கைக்காக ஏற்கெனவே 40,000 துருப்புக்களும், இணை இராணுவ போலீசாரும், பணியாற்றி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மேகவதி சுகர்னோபுத்திரி தலைமையில் 2003 மே மாதம் தொடக்கப்பட்ட, தற்போது நடந்து கொண்டுள்ள, தாக்குதலில் கவச வாகனங்கள், பீரங்கிப் படைகள் விமான மற்றும் கடற்படை ஆதரவோடு ஈடுபட்டுள்ளன. ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட "அதிர்ச்சியூட்டி நிலைகுலையச் செய்யும்" நடவடிக்கைகளில் இந்தோனேஷியா தனது சொந்தப்பாணியில் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆஷே இல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஊடகங்கள் இருட்டடிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் ஆஷே மக்கள் மீது இராணுவம் பரவலாகவும், அப்பட்டமாகவும், மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக மனித உரிமை, அமைப்புகள் தகவல்களை தந்திருக்கின்றன. முறைகேடாக கைது செய்து காவலில் வைப்பது சித்திரவதை செய்வது, கொலை செய்வது உட்பட மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில், இராணுவம் ஈடுபட்டிருப்பதாக, தகவல்கள் வந்திருக்கின்றன. Yudhoyono ஒரு முன்னாள் தளபதியாவார். மேகவதியின், தலைமை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்தார். சென்ற மார்ச்சில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்யும்வரை தாக்குதலை நடத்துவதிலும் கண்காணிப்பதிலும், முக்கிய பங்களிப்பு செய்தவர்.

டிசம்பர் 26 சுனாமி தாக்குதலுக்குப் பின்னர், TNI கூடுதலாக 15,000 துருப்புக்களை, ஆஷேக்கு அனுப்பியது, மனித நேய நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்காகவென்று, கூடுதல் துருப்புக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் சென்ற ஆண்டு GAM-மிற்கெதிராக நடவடிக்கையில் இறங்குவதற்காக அனுப்பப்பட்ட, இராணுவத்தின் அவசர உதவி அந்த மாகாணத்தில், அக்கறையில்லாமலும் தாமதமாகவும், குழப்பமாகவும் உள்ளது.

ஸ்வீடனிலுள்ள நாடுகடத்தப்பட்டுள்ள GAM தலைவர்கள் நிவாரண நடவடிக்கைகள் தடையின்றி நடக்கவேண்டுமென்பதற்காக ஒருதலைப்பட்சமாக சண்டை நிறுத்தத்தை அறிவித்தனர். டிசம்பர் 27-ல் TNI தலைமை தளபதி Endriartono கருத்து தெரிவிக்கும்போது GAM அவர்களே முன்வந்து போர்நிறுத்தத்தை அறிவித்திருப்பதற்கு இணையாக TNI -ம் நடவடிக்கையில் இறங்கும் என்று குறிப்பிட்டார் என்றாலும், மிக விரைவில் TNI-ன் எண்ணம் தெளிவாயிற்று. ஏற்கனவே GAM பூகம்பத்தாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த அமைப்பை தோல்வியடைய செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பதில் TNI உறுதியாக இருக்கிறது.

ஊடகங்கள் முதலாவதாக ஒரு குறிப்பிட்ட சம்பவம்பற்றி செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. உள்ளூர் தளபதி Azrizal Bin Abdul Manoj உட்பட இரண்டு GAM உறுப்பினர்களை கிழக்கு ஆஷே Peuetaik பகுதியில் இந்தோனேஷிய துருப்புக்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாக, வியாழனன்று ஒரு GAM பேச்சாளர் தெரிவித்தார். Idi Peayeak கிராமத்தில் ஒரு வீட்டிற்கும் TNI துருப்புக்கள் தீயிட்டதாக, குறிப்பிட்டார். ஒரு TNI பேச்சாளர் அந்த மோதல் நடந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் இராணுவ டிரக்குகளில் நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும்போது அவற்றின் மீது, திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த சம்பவம் தூண்டிவிடப்பட்டதென்று GAM கிளர்ச்சிக்காரர்கள் மீது அவர் பழிபோட்டார்.

ஸ்வீடனிலுள்ள GAM பேச்சாளரான, பக்தியார் அப்துல்லா இதை கடுமையாக மறுத்தார். GAM போராளிகள் வாகனங்களை தாக்கவில்லை என்று கூறினார். மாறாக அகதிகள் முகாம்களிலுள்ளவர்களில் GAM அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை இராணுவம் சித்திரவதை செய்துவருவதாகவும், தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார். பன்டா ஆஷே பகுதியில் பணியாற்றிக் கொண்டுள்ள தொண்டர்களும் TNI அகதிகளை முறைகேடாக நடத்திவருவதாக ஆஷேயிலுள்ள பொதுவாக்கெடுப்பு தகவல் நிலையத்தில், புகார் செய்திருக்கின்றனர். நிவாரண, முகாம்களுக்கு செல்லுகின்ற அகதிகளை இராணுவம் இடையில் மறித்து விசாரணை செய்து வருவதாக, அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிரிட்டனிலிருந்து வெளிவரும் Guardian - இடம் பக்தியார் கூறினார்: "நிவாரண நடவடிக்கைகள் என்ற போர்வையில் அவர்கள் மேலும் துருப்புக்களை அனுப்பிக்கொண்டிருப்பதாக செய்திகள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்தப் பகுதியிலுள்ள GAM போராளிகளை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். போர் நிறுத்தத்தை நிலைநாட்டுமாறு, கடுமையான கட்டளைகளை பிறப்பித்திருக்கிறோம். மற்றும் இந்தோனேஷிய இராணுவம் போர்நிறுத்தத்தை மதித்து இராணுவ நடவடிக்கையை தவிர்க்குமென்று நம்புகிறோம்".

இப்போது தெரிய வந்திருப்பது என்னவென்றால், அந்த மோதல் ஏதோ ஒரு இடத்தில் நடந்துவிட்ட, தனி ஒரு சம்பவம் அல்ல இந்த வாரம் Jakarta Post வெளியிட்டுள்ள விவரங்களின்படி Teupin, Batee, Seunebok Langa, Gampung Jalan, Kuburan Cina, Buket Linbeung மற்றும் Buket Jok ஆகிய கிழக்கு ஆஷே பகுதியில் உள்ள GAM மறைவிடங்களில் TNI நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. வடக்கு ஆஷே பகுதியில் Makmur, Gandapura மற்றும் Peusangan ஆகிய பகுதிகளில் இராணுவத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை TNI உறுதிப்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் அதற்கு நியாயமும் கற்பித்து வருகிறது. Guardian-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள விமர்சனங்களில் ஒன்று கேர்னல் அஹமது யானி பசுக்கி வெளியிட்டதாகும். "கிளர்ச்சிக்காரர்கள் முக்கிய அமைப்புக்களை மற்றும் நிவாரண, நடவடிக்கைகளை தடுத்துவிடாது தவிர்ப்பதற்காக நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை, நிலைநாட்டியாக வேண்டும்". என்று கூறியுள்ளார். TNI துருப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியினர், இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், மீதியிருப்பவர்கள், நிவாரண பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பாசுக்கி தெரிவித்தார். என்றாலும் அவரது கூற்றுக்கள் எதையும் நிரூபிப்பதற்கு எந்தச் சான்றையும் தரவில்லை.

லெப்டினட் கேர்னல் D.J.Nachrowi Jakarta Post-ற்கு பேட்டியளித்தபோது TNI "தற்போது இரண்டு கடமைகளை நிறைவேற்றி வருகிறது: மனிதநேயப்பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்", என்று குறிப்பிட்டார். அவர் ஒரு வேறுபட்ட வாதத்தை எடுத்து வைத்தார். அவசர நிலை பிரகடனத்தின்படி இராணுவம் GAM-ஐ தாக்குவதற்கு கடமைப்பட்டது, என்று கூறினார். "சிவில் அவசரநிலை பிரகடனத்தை நீக்கும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுகிறவரை ஆஷேயில் பிரிவினைவாத இயக்கத்தை ஒடுக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜனாதிபதி ஆஷேயில் வெறும் மனிதநேய பங்களிப்பு மட்டுமே செய்யவேண்டுமென்று கட்டளையிடுகிறவரை, இந்த நடவடிக்கை நீடிக்கும்" என்று குறிப்பிட்டார்.

Yudhoyono, ஆஷேயில் சிவில் அவசர நிலை பிரகடனத்தை நீக்கும் எண்ணத்திலோ அல்லது GAM உடன் ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கைக்கு வருவதிலோ நாட்டம் செலுத்தவில்லை. மாறாக தேசிய ஒற்றுமைக்கு, வேண்டுகோள் விடுத்திருக்கின்ற ஜனாதிபதி பிரிவினைவாத போராளிகள் தங்களது ஆயுதங்களை துறந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக GAM சரணடைய வேண்டும். இராணுவம் தொடர்ந்து முழுமையான ஆயுத பலத்துடன், செயல்படும்.

ஆஷே பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, பல்வேறு மனித உரிமை குழுக்கள் உறுதிபடுத்தியுள்ளன. பிரிட்டனிலிருந்து செயல்பட்டுவரும், Tapol அமைப்பை சார்ந்த Paul Barber, IPSNA செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது "சிவில் அவசர நிலையின் கீழ், இந்தோனேஷிய இராணுவம் தொடர்ந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னணி பங்களிப்பு செய்துவருகிறது. இராணுவ நடவடிக்கைகள் எதுவும் குறைக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

ஆஷே பொது வாக்கெடுப்பு தகவல் மையத்தின் தலைவரான நாசீருஜின் அபுபக்கர் TNI நடவடிக்கைகளை ஆவேசமாக கண்டனம் செய்தார். "அரசாங்கம் இன்னும் சிவில் அவசர நிலையை செயல்படுத்தியே வருகிறது, ஆஷே பகுதியில் சாவு எண்ணிக்கை 1,00,000-த்தை நெருங்கிக்கொண்டிருக்கிற நிலையிலும், இராணுவ நடவடிக்கைகளை நீடித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளைச் செய்வதில் இன்னும் அரசாங்கத்திற்கு திருப்தி ஏற்படவில்லையா? ஆஷே பகுதியை சேர்ந்தவர்கள் இந்தோனேஷிய மக்கள் இல்லையா?" என்று அவர் கேட்டார்.

இந்தோனேஷிய இராணுவம் துருப்புக்கள், போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், ஆஷே பகுதியில் நிவாரணப் பொருட்கள் வருவதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது, தெளிவாகத் தெரிகிறது. தொலைதூரப் பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதில் விமானப் போக்குவரத்து உயிர்நாடியாகும். அது இப்போது சிதைந்து கிடக்கிறது. இந்தோனேஷிய விமானப்படை ஆஷே மாகாணத்தின் மீது விமான வழித்தடத்தை நெறிமுறைப்படுத்தவில்லை. பன்டா ஆஷே மற்றும் Medan பகுதிகளுக்கு சர்வதேச அளவிலான உதவிப் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த பகுதியிலுள்ள விமான நிலையங்களுக்கு உயிர்நாடியாக உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை விமானப்படை தரவில்லை.

ஆஷே மாகாணத்திற்குள் உதவி பொருட்களை கொண்டு செல்வதிலும் அவற்றை விநியோகிப்பதிலும் சிக்கல்கள் நிலவுவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. புத்தாண்டு நேரத்தில் ஒரு விமானம் பன்டா ஆஷேயிலிருந்து புறப்படுவதற்கு அனுமதி கிடைக்காமல் காத்திருக்கவேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷேயில் தப்பி பிழைத்த ஒரே விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி தனியொரு ஆளாக நின்று விமான நிலையத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. டிரக்குகள் மற்றும் எரிபொருள் கிடைப்பதில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. Sydney Morning Herald தந்துள்ள தகவலின்படி Medan-ல் உள்ள அமெரிக்க உதவி அமைப்புக்கள் தங்களது சொந்த வாய்ப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள், "கெஞ்சி கடன் வாங்கி மற்றும் வாடகைக்கு" 80 டிரக்குகளை ஏற்பாடு செய்து போக்குவரத்தை நடத்த வேண்டி வந்தது.

இந்தோனேஷிய இராணுவம் அக்கறையற்று இருப்பதை விளக்குகின்ற சம்பவம்தான், மேற்கு கடற்கரைப்பகுதியில் அழிவு ஏற்பட்டிருப்பது குறித்து ஆய்வு நடத்துவதில் ஏற்பட்டுள்ள, விளக்க முடியாத தாமதமாகும். அந்தப் பகுதி சுனாமியின் நேரடி வழியிலுள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர்தான், Meulaboh மீது ஒரு விமானத்தை இந்தோனேஷிய விமானப் படை அனுப்பியுள்ளது. அந்த நகரம் ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் சிதைந்து கிடந்த நகரங்களைப்போன்று காட்சியளித்ததாக, ஒரு பத்திரிகையாளர் வர்ணித்துள்ளார்.

மிகப் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய, இராணுவத்தின் உதவி நடவடிக்கைகள் இப்போதுதான் நடக்கின்றன. சென்ற வாரக் கடைசியில் Meulaboh நகருக்கு, முதலாவது குறிப்பிடத்தக்க உதவிப் பொருட்களை, அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்கள் கொண்டு வந்தன. பன்டா ஆஷேயில் ஆஸ்திரேலிய இராணுவக் குழுக்கள் தூய்மையான குடிதண்ணீரையும், இதர உதவியையும் வழங்கி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் ஒத்துழைப்பில், ஒரு புதிய யுகத்தை உருவாக்கியிருப்பதாக, ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருப்பதால், TNI மீதும் அதன் படுமோசமான மனித உரிமைகள்மீறல் பற்றியும் கண்டனங்கள் மறைக்கப்பட்டு விட்டன.

இந்த கூட்டு நடவடிக்கைகளுக்கும், டிசம்பர் 26-ல் நடைபெற்ற பேரழிவு தொடர்பான கவலைகளுக்கும், எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. 1998-ல் சுகார்த்தோ சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்தோனேஷிய இராணுவத்துடன் மீண்டும் செயல்பாட்டு, உறவுகளை நிலைநாட்டிக்கொள்ள ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் முயன்று வருகின்றன. இந்த உதவி நடவடிக்கையில் TNI-யுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு மட்டுமல்லாமல் மலாக்கா நீரிணை மூலோபாய பகுதியை ஒட்டியுள்ள எண்ணெய் எரிவாயு வளம் கணிசமாக உள்ள ஒரு கேந்திர பிராந்தியத்தில் அடியெடுத்து வைப்பதற்கு வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

TNI-ஐ பொறுத்தவரை அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இராணுவம் நிவாரண முயற்சிகளில் ஆதரவு தந்து வருவது கூடுதல் இந்தோனேஷிய இராணுவப்படைகளை GAM-ற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திருப்பிவிட வழிசெய்கிறது. இந்த வகையில் இந்தோனேஷிய இராணுவத்திற்கு வாஷிங்டனும் கான்பெராவும் மறைமுகமாக ஆதரவு தருகின்றன, என்பதற்கு எல்லாவிதமான அடையாளங்களும் காணப்படுகின்றன. கான்பெரா கிழக்கு தீமூரை போன்று நடந்து கொள்ளாமல், கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பன்டா ஆஷேயில் ஜக்கார்த்தா நடத்திவருகின்ற உள்நாட்டுப்போர் தொடர்பாக மூச்சுவிடவில்லை.

அமெரிக்க இராணுவ நிர்வாகத்தின் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற வகையில் அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் Stratyor Global Intelligence நிபுணர் குழு ஒரு விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது. சுனாமி விளைவித்துள்ள பேரழிவு GAM-ற்கு எதிரான இந்தோனேஷிய இராணுவத்தின் நடவடிக்ககளுக்கு ஒரு வரப்பிரசாதமாக, அமைந்திருப்பதாக அது குறிப்பிட்டிருக்கிறது. "Yudhoyono அந்த மாகாணத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் சீரமைப்பதற்கும் மேலும் துருப்புக்களை அனுப்புவார். சமாதான முறையில் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள GAM உடன்படாவிட்டால் அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு, Yudhoyono மேலும் படைகளை தன்கையில் வைத்திருக்கிறார்", என்று அது குறிப்பிட்டிருக்கிறது.

பன்டா ஆஷேயில் இப்போது உருவாகி கொண்டிருப்பது என்னவென்றால் 1998-க்கு முன்பிருந்த நிலைக்கு திரும்புகின்ற நிலவரம் கருக்கொண்டு வருகிறது. அப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இதர பெரிய வல்லரசுகள் இந்தோனேஷியாவிலும் அந்த பிராந்தியத்திலும் தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிக்காப்பதற்காக சுகார்தோ சர்வாதிகாரத்தின் கொடூரமான நடவடிக்கைகளை சார்ந்திருந்த நிலைக்கு இப்போது திரும்பிக்கொண்டிருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved