:
ஆசியா
:
இலங்கை
Two prisoners shot dead as the tsunami hit
Sri Lanka
இலங்கையை சுனாமி தாக்கியபோது இரு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
By Deepal Jayasekera
4 January 2005
Back to screen version
இலங்கையில் டிசம்பர் 26 நடந்த பல துன்பகரமான கதைகளுக்கு மத்தியில் காலி
சிறைச்சாலையில் இரு கைதிகள் கொல்லப்பட்டமை, சாதாரண மக்கள் மீதான அரச கருவிகளின் காட்டுமிராண்டித்தனத்தை
அம்பலப்படுத்துகிறது.
சுமார் 800 கைதிகள் --சிலர் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள், ஏனையோர் சிறைவைக்கப்பட்டவர்கள்--
இந்த தெற்கு நகரத்தின் மத்தியில் அமைத்திருந்த சிறைச்சாலை கட்டிடத்திற்குள் இறுக்கி அடைக்கப்பட்டிருந்தார்கள்.
சுமார் 30 காவலாளிகளும் அலுவலர்களும் பணியில் இருந்தனர். முதலாவது பேரலை சுமார் மு.ப 9.10 மணியளவில்
தாக்கியவுடன் நிலமை குழம்பியது.
பெண்கள் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதுடன் தண்ணீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் மேல் உயர்ந்தது.
சுனாமி பேரலைகள் கரையோரப் பகுதிகளைத் தாக்குவதாகவும் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்டதாகவும் வெளிவந்த
செய்திகளை கைதிகளும் வானொலியில் கேட்டுக்கொண்டிருந்தனர். அடுத்துவரவுள்ள பேரலைகள் பற்றிய அச்சத்தாலும் தமது
குடும்பங்களின் தலைவிதி பற்றி அக்கறைகொண்டதாலும் கைதிகள் தங்களை விடுவிக்குமாறு கோரினர். கைதிகளில்
பெரும்பாலானவர்கள் காலியைச் சூழ உள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள்.
"எங்களது மனைவி பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். நாங்கள் வீட்டுக்கு
போகவேண்டும். நாங்கள் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்," சிலர் கூக்குரலிட்டார்கள். நாடு பூராவும் உள்ள
மக்களைப் போல் அவர்களும் தங்கள் நேசத்திற்குரியவர்கள் பற்றிய செய்தியைக் கேட்டு கவலையடைந்தார்கள். காலி
உட்பட பல தென்பகுதி நகரங்கள் சுனாமியால் அழிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆரம்ப அறிக்கைகள்
அதிர்ச்சியானவாக இருந்த போதிலும் அச்சந்தர்ப்பத்தில் அழிவின் அளவு வெளிப்படையாகத் தெரிந்திருக்கவில்லை.
சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததை அடுத்து கைதிகள் அவநம்பிக்கையான
நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சிலர் காவலாளிகளை கல்லால் அடிக்கத் தொடங்கினர். ஏனையோர் வெளியேற முயற்சித்தனர்.
பிடிவாதமாக ஒருவரும் விடுவிக்கப்படாத நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் இராணுவத்தை உதவிக்கு அழைத்தது. 15
சிப்பாய்களைக் கொண்ட ஒரு இராணுவப் பிரிவு அங்கு வந்தது. காலியில் அழிவு தீவிரமடைந்துகொண்டிருந்த போது
சிறைச்சாலை அதிகாரிகள் சட்டவிதிகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருந்துடன், கைதிகளை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு
அதிகாரமில்லை எனத் தெரிவித்தனர். உயிருக்கு உடனடியான அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே விடுவிப்பது பற்றி அக்கறை
செலுத்த முடியும் என அவர்கள் பிரகடனப்படுத்தினர்.
ஆத்திரமடைந்த பல கைதிகள் இரும்புப் பொல்லுகளைக் கொண்டு படலைகளை உடைத்துத்
திறக்க முயற்சித்தனர். சிறைச்சாலை காவலர்கள் உடனடியாக தானியங்கி ரைபிள்கள் மற்றும் வேட்டைத் துப்பாக்கிகள்
சகிதம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏனையோர் குறுந்தடிகளால் தாக்கினர். இரு கைதிகள் ஸ்தலத்திலேயே
பலியானதுடன் மேலும் எட்டு பேர் துப்பாக்கிக் காயங்களுக்குள்ளாகினர்.
அவர்கள் சிறைச்சாலைக்குள் வைக்கப்பட்டிருந்ததால் உலக சோசலிச வலைத் தளத்திற்கு
அவர்களின் பெயர்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. காயமடைந்த கைதிகள் சிறைச்சாலை ஆஸ்பத்திரிக்கும்
மற்றும் கராபிட்டியவில் உள்ள பிரதான காலி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 550க்கும் மேற்பட்ட கைதிகள்
காலியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூஸ்ஸ சிறைச்சாலை முகாமுக்கு பின்னர் இடம் மாற்றப்பட்டனர்.
பின்னைய செய்திகளின்படி பேரலைகள் சிறைச்சாலை சொத்துக்களை கடுமையான சேதத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்த உயிரழப்புக்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட ஒரு நீதவான், காவலாளிகளின்
நடவடிக்கைகளைப் பற்றி கருத்துத் தெரிவித்தார். அவரது கருத்தின்படி, அவர்களது உயிர்
ஆபத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தாலும் கைதிகளுக்கு உரிமை கிடையாது. கைதிகளின் உணர்வுகளை புறக்கணித்த அவர்,
சூழ்நிலையை பற்றி அக்கறை செலுத்தாமல் அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் --இந்த
விவகாரத்தைப் பொறுத்தளவில் அது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அழிவாகும்.
ஏனைய சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளும் இதே ஆபத்துக்களை எதிர்கொண்டனர். சிலர்
சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்ட அதே வேளை, சிலர் இடம்மாற்றப்பட்டனர்.
இத்தகைய நிலைமையில் எத்தனைபேர் பலியானார்கள் என்பதை குறிப்பிட முடியாது.
காலிக்கு சற்றே கிழக்கில் அமைந்துள்ள மாத்தறையில் சுனாமி தாக்கும் போது உள்ளூர்
சிறைச்சாலையில் 404 கைதிகள் இருந்துள்ளனர். சிறைச்சாலை வெள்ளக்காடாகியதோடு அதன் வெளிச் சுவர்கள் உடைந்து
விழுந்தன. 76 கைதிகள் காப்பாற்றப்பட்ட பின்னர் குருவிட்ட சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை
ஆணையாளர் ஜெனரல் ரூமி மர்ஸூக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எஞ்சியவர்களை இன்னமும் காணவில்லை என அவர்
விளக்கினார்.
தங்கல்ல மற்றும் நீர்கொழும்பில் சிறைச்சாலை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு
மாற்றப்பட்டனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகள் எதையும்
எடுத்திருக்கவில்லை. இந்த உயிரழப்புக்கள் பற்றி உத்தியோகபூர்வ விசாரணைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் விவகாரம் முடிந்துவிட்டது. கைதிகளின் அடிப்படைத் தேவைகளை விடவும்,
உயிர்வாழ்வதற்கான உரிமையை விடவும் அரசின் அதிகாரம் முன்னிலை வகிக்கின்றது. |