WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா
Tsunami disaster strips away Blair's
humanitarian pretence
பிளேயரின் மனிதாபிமான பாசாங்கை சுனாமி பேரழிவு கிழித்து எறிகிறது
By Julie Hyland
5 January 2005
Back to screen version
ஆசிய சுனாமியின் பேரழிவு விளைவித்த இறப்புக்களையும் அழிவையும் தன்னைப்பின் தொடரச்செய்திருந்த
முதல் தாக்குதல் முடிந்து ஒரு வாரத்திற்கும் பின்னர், எகிப்தில் குடும்பத்துடன் தன் விடுமுறையைக் கழித்துவிட்டு ஜனவரி
3-ம் தேதியன்று ஒருவாறாக பிரதம மந்திரி டோனி பிளேயர் திரும்பி வந்தார்.
இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த கொடூரமான அழிவுகளுக்குப் பிளேயர் காட்டியுள்ள திமிர்த்தனமான
அசட்டை, ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் காட்டியிருக்கும் அசட்டையைவிட கூடுதலான வெளிப்பாட்டைத்தான்
கொண்டிருக்கிறது. சுனாமித் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு பிறகு, பிந்தையவர் ஒருவழியாக தன்னுடைய டெக்சாஸ்
பண்ணை விட்டில் இருந்து வெளிப்பட்டு பேரழிவைப் பற்றி ஒரு பெயரளவு அனுதாப அறிக்கையை கொடுக்கவைத்த நிலையில்,
இங்கிலாந்தின் அவசர உதவி முயற்சிகளை தலைமை தாங்கி நடத்துவதற்கு, பிளேயர் தன்னுடைய விடுமுறை நாட்களை
குறைத்துக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை.
பல மில்லியன் மக்களின் பரிதாப நிலைபற்றி, பிரதம மந்திரி காட்டும் இகழ்வு அவருடைய
நிலைச்சான்றை ஆராயும்போது பெரும் வியப்பைத்தான் அளிக்கிறது.
உலகத் தலைவர்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் பிளேயர், தன்னுடைய ஒவ்வொரு
நடவடிக்கையும் மனிதாபிமான உந்துதல்கள் மற்றும் "பூகோள நாடுகள் இணைந்த முறையில் நம்பிச் செயலாற்றுவதில்"
தான் கொண்டுள்ள அக்கறை இவற்றால் உருவாக்கப்படுவது என்று காட்டிக்கொள்ள இதுகாறும் முயன்றுள்ளார்.
கொசோவோவில் இருந்து ஈராக் வரை, பிரதம மந்திரி "அறநெறிகளும்", "நன்னெறிகளும்" பிரிட்டனுடைய வெளிநாட்டுக்
கொள்கையின் இதயத்தானமாக இருந்து வருகின்றன என்று வலியுறுத்திப் பேசியுள்ளார்.
மேலும், தன்னுடைய அரசியல் தோற்றத்தின் பெருமையை உயர்த்திக் கொள்ளும் வகையில்
வரும் எந்த வாய்ப்பையும் பிளேயர் தவறவிட்டதில்லை. எடுத்துக்காட்டாக நியூயோர்க், மற்றும் வாஷிங்டனில் 9/11
தாக்குதல்கள் பற்றிய முதல் தகவல்களைக் கேட்டதுமே, அந்தப் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சர்வதேச உதவிகளை
ஒருங்கிணைக்கும் வகையில் முக்கிய பங்கை கொள்ளுவதற்காக, அவர் தன்னுடைய அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் உடனடியாக
இரத்து செய்திருந்தார்.
ஆயினும் கூட இந்த நிகழ்வில், 15 நாடுகள் இரண்டு கண்டங்களில் மிகக் கடுமையான முறையில்,
தம்முடைய வாழ் நினைவிலேயே மிக மோசமான இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது, பிரதம மந்திரி ஒரு
வாரத்திற்கு பொதுவில் வெளியே கூட வரவில்லை.
41 பிரிட்டிஷ்காரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்று உறுதியாகவும்-----இன்னும் 158
பேர் பற்றி தெரியாத நிலையில், இறந்திருக்கக்கூடும் என்ற நிலையிலும், இந்தியா, இலங்கை என்ற இரு
தாக்குதலுக்குட்பட்ட நாடுகள் முந்தைய பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகள் என்பதும், அந்நாடுகளில் இருந்து பிரிட்டனில்
வாழும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உற்றாரையும், பிரியமானவர்களையும் இழந்துள்ளனர் என்பதும்கூட, பிரதம
மந்திரியை தன்னுடைய விடுமுறையை தடைபடுத்தி கொள்ளப் போதிய காரணங்களாக தோன்றவில்லை.
தகவல்களின்படி, சுனாமியைப் பற்றிய செய்தி, பிளேயருக்கு அவர்
Sharm el-Sheik
சுற்றுலா தலத்திற்கு டிசம்பர் 26 அன்று புறப்படுவதற்கு சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டது என்றாலும் கூட, அவர்
தன்னுடைய விடுமுறையை தடையின்றிக் கழிக்க முடிவெடுத்தார்.
மில்லியன் கணக்கான மக்கள் உலகின் பல பகுதிகளில் இயல்பான தன்னார்வத்துடன் இந்தக்
கொடூரத் துயரத்தைத் துடைக்க இயன்ற பங்கை மேற்கொள்கையில், ஆரம்பத்தில் அற்ப உதவியைத் தருவதாக உறுதி
கூறியிருந்த அரசாங்கங்கள், அவர்களுடைய முன்கண்டிராத பெருந்தன்மை, பெரும் வெட்க உணர்விற்கு ஆளாக்கி அந்த
தொகையை அதிகமாக்கிவிட்ட நிலையில், பிரதம மந்திரி, தன்னுடைய பெரும் வசதிகள் நிறைந்த, விடுமுறை இல்லத்தில்
வந்து இறங்கினார்.
பிரிட்டனில் மட்டும் பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் என்ற
அளவில் சாதனை படைத்த முறையில் நன்கொடை அளித்தனர்; இது அரசாங்கத்தை தொடக்கத்தில் கூறியிருந்த 15
மில்லியன் பவுண்டுகளை 50 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தியது. ஆனால் இத்தொகையும்
மக்களால் விரைவில் கடக்கப்பட்டுவிட்டது. பெருந்துயரம் நடந்த ஒரு வார காலத்தில், பொது மக்களிடம் இருந்து 76
மில்லியன் பவுண்டுகள் வசூலிக்கப்பட்டன. அறக்கொடை அமைப்புக்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், குழாய்களை பழுது
பார்ப்பவர்கள், பொறியாளர்கள் என்று பல பிரிவினரையும் தங்களால் இயன்ற அளவிற்கு உதவி செய்யும் பண்பை
முன்வைத்ததாகத் தெரிவிக்கின்றன.
இந்தப் பேரழிவின் பரந்த தன்மை வெளிப்படையாகிய பின்னரும் கூட, அரசாங்க மந்திரிகள்
பிளேயர் தன்னுடைய விடுமுறையைக் குறைத்துக் கொள்ளும் தேவை ஏற்பட்டுவிடவில்லை என்றே கூறினர். வெறும்
"கண்துடைப்புச் செயல்கள் அரசியலில்" பிளேயருக்கு அக்கறை கிடையாது என்று கூறவும், எகிப்தில் இருந்து அவர்தான்
உதவி நடவடிக்கைகளுக்கு இயக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பிரதம மந்திருக்கு ஆதரவு திரட்டும் வகையில்,
துணைப் பிரதம மந்திரி ஜோன் பிரெஸ்கோட்டும், சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ஹிலேரி பென்னும் அனுப்பப்பட்டனர்.
மாபெரும் அலைக் கொந்தளிப்பு முழு கிராமங்களையும், நகரங்களையும் அழித்து ஐந்து
நாட்கள் ஆனபின்னரும் கூட, பிரதம மந்திரியின் புத்தாண்டுச் செய்தியில் இந்த நிகழ்வு ஒரு பெயரளவுக் குறிப்பையே
கொண்டிருந்தது. உலகின் கவனத்தையே ஒருவார காலத்திற்கு ஈர்த்திருந்த இந்நிகழ்வு பற்றி, அவருடைய செய்தியின்
தொடக்கத்தில் பத்து சிறிய வரிகள்தான் சேர்ககப்பட்டிருந்தன. செய்தியின் எஞ்சிய பகுதி உண்மைத்தன்மையில்
விகாரமுற்று, புத்தாண்டு, வளமை, பொருளாதார வலிமை என்ற ஒரு புதிய அலையை (இதே சொல்தான்) கொண்டு
வரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக" குறிப்பிடப்பட்டு, "வகுப்பறைகளில் புதிய கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்கும்"
என்ற உறுதியும், புகலிடம் கோருவோர் மீது கடுமையான தடை இருக்கும் என்ற கருத்துக்களையும் கொண்டிருந்தது.
இந்தக் கோரமான இயற்கை சீற்றம் பற்றிய தன்னுடைய கருத்தைப் பிரதம மந்திரி ஜனவரி
1ஆம் தேதிதான், எகிப்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஒரு தொலைபேசிப் பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார். நடந்துவிட்ட
இழப்பைச் ஓரளவு சரிசெய்யும் முயற்சியில் இருந்த அது அப்பணியிலும் தோல்வியுற்றது. சேனல் 4 செய்தியில் இருந்து ஒரு
பேட்டியாளரை மட்டுமே எதிர்கொண்ட போதிலும், பிரதம மந்திரி தன்னுடைய செயல்கள் பற்றி பொருத்தமான
நிலைப்பாட்டை தெரிவிக்கமுடியாதது பற்றி சங்கடத்தை அதிகமாக உணர்ந்தார் என்பது பேட்டியில் புலனாயிற்று.
பிரிட்டனுக்கு திரும்பிவந்த பின்னரும் கூட, பிளேயர் தன்னுடைய மெளனத்தை
தொடர்ந்திருந்தார். இவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரி ஜாக் ஸ்ட்ரோ அரங்கை ஆக்கிரமித்து,
இறந்துவிட்டிருந்த பிரிட்டிஷ்காரர்களுடைய எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தொடலாம் என்ற எச்சரிக்கையைக்
கொடுத்தார்.
அரசு விவகாரம் பற்றி நாம் என்ன என்று கணிக்க இயலும்? மற்ற இடங்களைப் போலவே
பிரிட்டனிலும், ஆளும் செல்வந்த தட்டிற்கும், இந்தச் சுனாமிப் பேரழிவினால் மனத்தில் அலைமோதி நின்ற மில்லியன்
கணக்கான உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பெரிய வேறுபாடு துல்லியமாகத் துலங்கி நின்றது எனலாம்.
தன்னலம் நிறைந்து, தன்னிலே ஆழ்ந்துள்ள நிதியாதிக்க குழுவின் அரசியல்துறை செய்தித்
தொடர்பாளராகத்தான் பிளேயர் வெளிப்பட்டு, அதன் அடயாளமாக இருக்கும் நிலையைக் காண்கிறோம். இந்தத்
தட்டிற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைமுறை நலன்களை முன்னேற்றுவிக்கும் ஒரு கருவியாகத்தான் "மனிதாபிமானம்"
என்பது பயன்படும். இந்த இலக்கை கருத்திற்கொண்டு, ஈராக்கிற்கு எதிராக பில்லியன்கள் செலவிடப்படலாம், அதன்
நகரங்கள் தகர்க்கப்படலாம், அதன் மக்கள் அச்சுறுத்தப்படலாம். ஆனால் கடந்த வாரத்தில் மில்லியன் கணக்கான
மக்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும், நாடுகளையும் பாதிக்க வைத்திருந்த சுனாமி நெருக்கடியைப் பொறுத்தவரையில்,
இவர்களின் பார்வை அவர்கள் மிக வறியவர்கள், எனவே அதிக விளைவை ஏற்படுத்த முடியாதவர்கள், ஆகவே அதிகம்
அக்கறை காட்டத்தேவையில்லை, என்பதாக உள்ளது.
பிரதம மந்திரியின் இந்த அலட்சியப்போக்கு, உலகம் முழுவதும் உள்ள பெரு வர்த்தக
அரசியலின் பிற்போக்குத் தன்மையின் தீவிர வெளிப்பாடாகத்தான் உள்ளது. இத்தகைய இரக்கமற்ற தன்மை மிகக் கூடுதலான
வகையில் அரசியலில் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், உறுதியற்ற தன்மையைக் கொடுக்கும் திறனுடையதாகவும் இருப்பதால்,
அரசாங்கங்கள் தங்கள் முயற்சிகளில் சற்று கூடுதலான அக்கறை காட்டுகிறார்கள். ஆரம்பத்தில், பேரழிவு பற்றி, புஷ்
காட்டிய அசட்டையை ஈடுசெய்யும் வகையில், கடந்த சில நாட்களாக, வெள்ளை மாளிகை பெரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு
பழைய ஜனாதிபதிகளான ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ், பில் கிளின்டன் ஆகியோரையும் பயன்படுத்தி நாடு முழுவதிலும் இருந்து
கூடுதலான நிதிதிரட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் அமெரிக்க நிர்வாகம் இவ்வாறு முகம் இழந்து நின்ற அவலத்தை குறைக்கும் வகையில்
செய்யும் முயற்சி, பிளேயரின் கஷ்டங்களைத்தான் அதிகரித்துள்ளது.
ஐ.நா. நெருக்கடி உதவி ஒருங்கிணைப்பாளர் ஜோன் எகிலாந்து மேலை நாடுகளுடைய
"கருமித்தனம்" பற்றி விமர்சித்ததற்கு கோபத்தைக் கொண்டுள்ள, அமெரிக்கா, தான் ஆசியாவில் மற்ற "மூன்று முக்கிய
நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியாவுடன்" ஒருங்கிணைந்து உதவி முயற்சியில் ஈடுபடுவதாக அறிவித்தது.
பிரிட்டனில் இந்த முயற்சி பரந்த அளவில் ஐ.நா.வை ஓரங்கட்டும் வகையில் அமெரிக்கா
தொடர்ந்து ஈடுபடுவதாக விளக்கம் கொள்ளப்பட்டது. இது பிளேயரும் மற்றவர்களும் ஐ.நா, "தலைமை தாங்கி"
நெருக்கடி உதவிகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்று விடுத்திருந்த அழைப்பிற்கு எதிராக உள்ளது.
ஜனவரி 2-ம் தேதி சன்டே டைம்ஸ், சில அமெரிக்க குடியரசுக் கட்சியினர்
"முக்கிய நாடுகளின்" முயற்சியை "இரண்டாம் விருப்பமுடைய நாடுகளின் கூட்டு" என்று விவரித்துள்ளனர் என்று மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளது.
வலதுசாரி ஹெரிடேஜ் இன்ஸ்டியூட் என்று வாஷிங்டனில் இருக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் நைல் கார்டினெர் கூறினார்,
இத்தகைய உருவாக்கம் "அமெரிக்காவின் பூகோள சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு, மற்றும் ஐ.நா. போன்ற நிறுவனங்களின்பால்
குறைந்து வரும் மதிப்பிற்கு ஒரு குறியீடும் ஆகும். புஷ்ஷின் கொள்கையான கூட்டணிகள்தான் விரைவிலும், கூடுதலான திறமையுடனும்
உலக நெருக்கடிகள், மற்றும் சர்வ தேசப் பாதுகாப்பிற்குத் தோன்றும் அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இயலும்" என்றும்
கூறினார்.
பிரிட்டிஷ் வெகுஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டும், தான் ஒன்றும் அமெரிக்காவின் மிகச் சிறந்த
நட்பு நாடு அல்ல என்ற செய்தியைப் பெற்ற நிலையிலும், பிளேயருடைய திமிர்த்தனமான இழிவு காட்டும் பார்வை, வெகு
விரைவிலேயே அரசியல் செயலிழப்புக்கு வழிவகுத்துள்ளது. |