World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: over 14,000 dead and hundreds of thousands displaced

இந்தியா: 14,000 பேருக்கு மேல் உயிரிழப்பு, பல நூறாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வு

By Arun Kumar
4 January 2005

Back to screen version

தெற்கு ஆசியாவில் 140,000 மக்களுக்கும் அதிகமானவர்களின் உயிரைக் கவர்ந்த சுனாமி, குறைந்தது 14,000 உயிர்களையாவது இந்தியாவில் காவு கொண்டுள்ளது. பேரழிவிற்கு ஒன்பது நாட்களுக்குப் பின்னர், மாநிலங்கள், மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் இன்னும் பல இடங்களில் நிவாரண முகாம்களை அமைக்க முடியாமல் உள்ளனர். இத்தகைய மெதுவான, போதிய வகையில் நிவாரணம் அளிக்காத தன்மை இப்பொழுது தொடங்கிவிட்ட தொற்றுநோய் பாதிப்பினால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தியாவின் தெற்கு கடலோரப்பகுதியில் 2260 கிலோ மீற்றர் நீளப்பகுதி பாதிப்பிற்குட்பட்டுள்ளது. அலைகள் 10 மீட்டர்கள் உயரே எழுந்தும், மூன்று கிலோமீட்டர்கள் கரைக்குள் புகுந்தன. அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பெரும்பாலான தாழ்விடப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த வார இறுதி வரை, இந்திய அதிகாரிகள் இறந்தவர் எண்ணிக்கை 14,488 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்; இதில் 9,451 இறந்தவர்கள் என்றும், 5,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பவர் பட்டியலிலும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நெருக்கடி உதவிப் பணியாளர்கள் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்துள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மாநிலமான தமிழ்நாடு மிகவும் மோசமான பாதிப்பிற்கு உட்பட்டு, கிட்டத்தட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளனர். தொலைவில் வங்கக் கடலில் உள்ள அந்தமான், நிக்கோபர் தீவுகளில் கிட்டத்தட்ட 5,000 பேர் மடிந்துள்ளனர். மற்ற தென்னிந்திய பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவில் (166), ஆந்திரப்பிரதேசத்தில் (106), மத்திய ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் (574) ஆகியவை அடங்கும்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில், பேரழிவின் அளவு இன்னும் முற்றிலும் வெளிவரவில்லை. அதிகாரபூர்வமான இறந்தவர் எண்ணிக்கை 5,000க்கும் மேற்பட்டது என்றாலும் கூட, குறைந்த வகையில் மதிப்பீடு செய்பவர்கள்கூட இந்த எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். மொத்தம் 350,000 மக்கள் வாழ்ந்திருந்த இத்தீவுகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் பற்றி முழுத்தகவல்கள் அறியப்பட வேண்டியுள்ளது.

இந்தத் தொலைவில் உள்ள இந்தியப்பகுதி ஒரு புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இது ஆரம்பத்தில் இருந்த நிலநடுக்கத்தின் மையக்குவிப்பிற்கு வெகு அருகில் இருந்ததுடன், இப்பொழுதும் பல நில அதிர்வுகளின் பாதிப்பிற்கு உட்பட்டுவருகிறது.

தீவுக் கூட்டங்களில் எட்டு தீவுகள் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன; அநேகமாக பகுதியில் இருந்த அனைத்துப் படகுகளும் அழிக்கப்பட்டுவிட்டன. மின் வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதுடன், நிலத்தடித் தண்ணீர் உப்புத்தன்மையைப் பெற்றுவிட்டதால், குடிநீர் கூட இப்பொழுது அரிதாகி விட்டது. பாதுகாப்பான குடிநீருக்கு இப்பொழுது நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

தீவுகளில் வாழும் மக்கள் இப்பொழுது பெரும் அதிர்ச்சியுற்ற நிலையில் இருக்கின்றனர்; இன்னும் நில நடுக்கம் இருக்குமோ, சுனாமி அலைக் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற வெளிப்படையான பீதியில் முழுக் குடும்பங்களும் திறந்த வெளிகளில் உறங்குகின்றன. "இங்கு உண்பதற்கு ஏதும் இல்லை. பருகுவதற்கு நீர் இல்லை. ஓரிரு தினங்களில் மக்கள் பட்டினியால் இறக்க தொடங்கிவிடுவர்" என்று காம்ப்பெல் பே தீவில் ஓர் ஒப்பந்தக்காரராக இருக்கும் அனுப் காடக் இடம்பெயர்ந்த போது குறிப்பிட்டார்.

உயிர் தப்பியுள்ளவர்கள் அரசாங்க நிர்வாகத்தை மூன்று நாட்களுக்கு எந்த உதவியையும் கொடுக்காததற்காக பெரும் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளனர்; பேரழிவின் முழுச்சீற்ற விளைவயும் குறைத்துக் கூறுவதாவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இயலாக் கோபம் கொதித்து, கடந்த வாரத்தில் காம்ப் பெல் பே சிறுநகரத்தில் அரசாங்க அதிகாரி ஒருவரைக் குடிநீர், உணவு கேட்டு ஒரு கூட்டம் தாக்கியதில் வெளிப்பட்டது.

"இங்கு பட்டினி நிலவுகிறது. மக்கள் குறைந்தது ஐந்து நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உள்ளனர். எங்கு நோக்கினும் சடலங்கள்தான் உள்ளன. விரைவில் தொற்றுநோய் ஏற்பட்டுவிடும்." என்று அந்தமான் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான மனோரஞ்சன் பக்தா சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தார். இந்திய அதிகாரிகள் தீவுகளுக்கு முழு அளவில் நிவாரணப்பணிகளை இன்னும் ஏற்படுத்தவில்லை. கூட்டரசு சர்வதேச உதவிக் குழுக்கள் பல தீவுகளுக்கு உதவி வழங்குவதையும் தடை செய்துள்ளது.

மந்திய அமைச்சர் குழுவின் செயலாளரான பி.கே. சதுர்வேதி, 12 மத்திய அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அந்தமான் பகுதிக்குக் கடந்த ஞாயிறன்று --பேரழிவு நடந்து ஏழு நாட்களுக்குப் பின்னர்-- வரும் என்று அறிவித்துள்ளார். ஏராளமான ஹெலிகாப்டர்கள் நிவாரண, உதவிப் பொருட்களைக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் வெளியுலகுடன் உயிர்வழி தொடர்பான நீர்வழிப் போக்குவரத்தை தீவுக் கூட்டங்களுக்கிடையே உள்ள மீண்டும் சீர்திருத்தி கொண்டு வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இறந்தவர் எண்ணிக்கை 7,793 என்று சனிக்கிழமையன்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்பிற்குட்பட்டு, அங்கு 77 கிராமங்கள் சேதமுற்று, 1,523 குழந்தைகள் உட்பட, 6,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டியல் 820, கடலூரில் 600, காஞ்சிபுரத்தில் 124, திருவள்ளூர் 28, தஞ்சாவூர் 22, சென்னை நகரக் கடலோரப்பகுதிகளில் 200க்கும் மேலாக என்று உள்ளது. மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகள் திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளன.

மிகப் பெரிய நெருக்கடிக்காலம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரபூர்வ பேச்சுக்கள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான அழுகிக் கொண்டிருக்கும் சடலங்கள் இன்னும் கண்டறியப்பட்டு, சேதமுற்ற இடங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில் 362 கிராமங்களில் வாழும் 480,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் வீடிழந்து நிற்கின்றனர். இதில் நாகப்பட்டினத்தில் 176,000, கடலூரில் 61,000, காஞ்சிபுரத்தில் 60,000 என்ற எண்ணிக்கை உள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள 402 உதவிப்பணி முகாம்களில் கிட்டத்தட்ட 300,00 மக்கள் உறைவிடமாக கொண்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளன; குழந்தைகள், மனைவியர், கணவன்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள் என்று மக்கள் உறவினர்களை இழந்து வாடுகின்றனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். மிக வறிய மீன்பிடிக்கும் குடும்பங்கள் இன்னும் தங்கள் பிரியமானவர்கள், மீன்பிடிக்கும் படகுகள், உபகரணங்கள் இவற்றை இழ்ந்த அதிர்ச்சியில் இன்னும் ஆழ்ந்துள்ளனர்; அவர்களுக்குத் தக்க உறைவிடம், உணவு, ஆடைகள் மற்ற அடிப்படை வசதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

சென்னைக் கடலோரப் பகுதியில் வாழும் ஏழு குழந்தைகளுக்குத் தாயான 30 வயதுடைய பார்வதி, உலக சோசலிச வலைத்தளத்திடம் இடம் "என்னுடைய கணவர் ஓரிடத்தில் பாதுகாப்பாளராக உள்ளார்; நான் வீட்டு வேலைகள் செய்கிறேன். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை உள்ளது. எங்களில் பலரும் ஞாயிறன்று பெரும் அலைக் கொந்தளிப்பால் பிழைத்த காரணம் எங்கள் இல்லத்தில் இருந்த ஆண்கள் வீடுகளில் இருந்ததால், பல குழந்தைகளையும், மகளிரையும், வயோதிபர்களையும் காப்பாற்ற முடிந்ததால்தான்." என்று கூறினார்.

அவர் மேலும் "ஞாயிறன்று காலை 8.30 மணியளவில் இது நிகழ்ந்தது; ஆனால் பிற்பகல் 1 மணிவரை கூட எவரும் அரசாங்கத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்து பார்க்கவில்லை! மாலை 6 மணிக்குப் பின்னர் எங்கள் இளைஞர்கள் விழித்திருந்த எங்களை பார்த்துக் கொண்டனரே ஒழிய போலீசாரோ, அரசாங்க ஊழியர்களோ அல்ல. ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியில் வாழ்கிறோம்." என தெரிவித்தார்.

உலக சோசலிச வலைத்தள செய்தியாளர்களிடம் உயிர்தப்பியவர்கள், பல மக்களும் தங்களுடைய வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் சுனாமித் தாக்குதல்போது உதவிசெய்தனர் என்று தெரிவித்தனர். அரசாங்கம் அவர்களுக்கு கடலில் இருந்து வெகு தொலைவில் இல்லாத, பாதுகாப்பான மாற்று உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் மீண்டும் மீன்பிடிக்கும் பிழைப்பை தொடர அதுதான் வசதியாக இருக்கும் என்றும் வலியுறுத்திக் கூறினர். இப்பொழுது ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் வெப்பம் நிறைந்த சூரியனை பகல் நேரத்திலும், கடும் குளிரை பின்னிரவுகளிலும், விடியற்காலையிலும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என கூறினர்.

ஜனவரி முதல் தேதியன்று, சென்னையில் மெரீனா கடற்கரையில் இருந்த மீன்பிடிக்கும் குடும்பங்கள் அசாங்க அதிகாரிகளிடம் உடனடி நிவாரண நடவடிக்கைகள் தேவை என வற்புறுத்தி கடற்கரை முன்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிகாரிகளிடம் அவர்கள் "நாங்கள் தாயார்கள், தகப்பனார்கள், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரை இழந்து இங்கு அனாதைகளாக நிற்கிறோம். எங்குடைய இருப்பிடங்கள் பெரும் அலைகளினால் அழிக்கப்பட்டுவிட்டன; நாங்கள் தெருக்களிலும், திறந்த வெளியிலும் தூங்கி வருகிறோம். அரசாங்கம் வீடிழந்துள்ள எங்களுக்காக முன்பு பழைய கடல்துறை செயல்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கவேண்டும்." என கூறினர்.

கடந்த வியாழக் கிழமையன்று ஒரு பிழையான சுனாமி பற்றிய எச்சரிக்கை மீண்டும் பேரழிவு பற்றிய நினைவுகளை கிளறின. இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு, மற்றும் உள்துறை அமைச்சரகங்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்தவுடன், பல்லாயிரக்கணக்கான பீதியுற்ற ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து விரைந்து வெளியேறினர். உள்ளூர் மக்கள் குறைந்தது இரண்டு கிலோமீட்டராவது உட்பகுதிக்குள் பின்வாங்கிச் செல்லவேண்டும் என்றும் அப்பொழுதுதான் வரவிருக்கக்கூடிய அலைக் கொந்தளிப்பில் இருந்து தப்ப முடியும் என்று எச்சரிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த எச்சரிக்கை தவறானதாகப் போய்விட்டது; இது இன்னும் கூடுதலான முறையில் அவநம்பிக்கையையும், கோபத்தையும் மத்திய அரசின் மீது பெருக வைத்தது; ஏனெனில் டிசம்பர் 26 அன்று கிடைத்த உறுதியாக சான்றுகளை இருந்தபோதும் அது எந்த எச்சரிக்கையையும் விடுப்பதற்குத் தவறிவிட்டிருந்தது.

இந்திய செய்தி ஊடகம் இவ் "எச்சரிக்கைகள்" பற்றி ஏளனமாக எழுதின. "ஓடு, உயிர்தப்பியவரே, ஓடும்; இது நில அதிர்வல்ல, இது அலை கொந்தளிப்பு அல்ல; இது உள்துறை அமைச்சகம்." என்று தலைப்பிட்டு இச்செய்தியை The Indian Express வெளியிட்டது. Times of India வில் வந்த கட்டுரை ஒன்று "அரசாங்கம் வாயினால் சுட்டு, பீதியை அழுத்துகிறது." இந்த எச்சரிக்கை எனப்பட்ட செயல் "மில்லியன் கணக்கான மக்களை பீதியில் ஆழ்த்தியதோடு நிவாரணப் பணிகளையும் தடைகளுக்கு உட்படுத்தியது." என்று டைம்ஸ் எழுதியுள்ளது.

சுனாமியில் இருந்து உயிர்தப்பிய பின்னர், தமிழ்நாட்டின் மற்ற கடலோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள, பட்டினியினால் வாடும் கிராம மக்கள், இப்பொழுது மற்றுமொரு பேரழிவைச் எதிர்கொள்ள இருக்கின்றனர்; அவை, வயிற்றுப் போக்கு, மற்றைய தீவிர தொற்று நோய்கள் பரவுதலின் அபாயம் இருப்பதாகும்; அவ்வாறு நேர்ந்தால் இறந்தோர் பட்டியலில் எண்ணிக்கை கூடுதலாகப் பெருகும்.

நோய் தீர்க்கும் மருந்து, தடுப்பு முறை மருந்துகள் மற்றும் பல அடிப்படை மருத்துவ உதவிகள் கடுமையான தட்டுப்பாட்டில் உள்ளன. ஆரம்பத்தில் வந்த அறிவிப்புக்களின்படி 500 பேருக்கும் மேலான மக்கள், அரசாங்கம் மற்றும் உதவிப் பணியினர் அமைத்துள்ள முகாம் மருத்துவமனைகளில் வாந்தியால் அவதியுறுவதை அடுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியச் செய்தி ஊடகமும் ஈச்சன்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், ஆரியநாட்டுக்கரை, மற்றைய இடங்களிலும் வயிற்றுப் போக்கு அதிக அளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் புது டெல்லியல் "நீரினால் சுமந்து வரப்படும் வியாதிகள்" பரவுவதற்கான வாய்ப்புக்கள் மிகஅதிக அளவில் இப்பகுதியில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்து, உடனடியாக பாதுகாப்பான குடிநீர் மற்றும் தக்க சுகாதார வசதிகள் இடம் பெயர்ந்தோருக்கு அளிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பல இடங்களிலும், அழுகிய சடலங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் காற்றில் நிறைந்துள்ளது. ஏராளமான மக்களை பெரும் குழியில் தள்ளி அடக்கம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டாலும், இன்னும் தோண்டத் தோண்ட ஆங்காங்கே வெளிப்படும் நூற்றுக்கணக்கான சடலங்கை மீட்டுச் சடலங்களை அடக்கம் செய்யும் பாரிய பணியை உள்ளூர் அதிகாரிகள் எதிர்நோக்குகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved