World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

The Asian tsunami: why there were no warnings

ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை

By Peter Symonds
3 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு ஆசியாவில், மிகக் கொடூரமான முறையில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அழிவும் உயர்ந்துவரும் நிலையில், ஒரு சுனாமி பற்றிய எச்சரிக்கை முறை அமைக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும் என்பது இன்னும் வெளிப்படையாக தெளிவாகியுள்ளது. 15 அல்லது 30 நிமிஷ எச்சரிக்கை காலக்கெடு கொடுத்து, எப்படி, எத்திசையில் தப்பியோட வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டிருந்தால், என்ன நடந்து கொண்டிருக்கிறது, எப்படி எதிர்கொள்ளுவது என்று திகைத்திருக்கும் மக்கள்கூட பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றிருக்க முடியும்.

சுனாமியும், அதைத் தூண்டிவிட்டிருந்த நில நடுக்கமும் இயற்கை நிகழ்வுபோக்கே ஆகும். நிலநடுக்கங்கள் பற்றி முன்கூட்டியே கணிக்கமுடியாவிட்டாலும், மிக விரைவாக அவற்றின் மைய இடம் போன்றவை உறுதிசெய்யப்பட்டுவிட முடியும். மேலும் உரிய விஞ்ஞானக் கருவிகள் உரிய இடத்தில் இருந்திருந்தால், சுனாமி ஏற்படும் வகையும் கண்டிபிடிக்கப்பட்டு இருக்க முடியும் என்பதோடு அது செல்லும் பாதை கணிக்கப்பட்டு, அதன் போக்கைப் பின்பற்றவும் முடியும்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை முறை 1940 களின் கடைசிப் பகுதிகளில் இருந்தே இயங்கி வருகிறது. மிகப் பெரிய நில நடுக்கம் ஒன்றின் விளைவாக பெரும் அலைக் கொந்தளிப்பு ஒன்று ஏற்பட்டு அலாஸ்காவில் 100 பேரை 1964ல் கொன்ற பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம், அதிர்வுகளைப் பதிவுசெய்யும் கருவிகளைத் தவிர, கடல் மட்ட ஆராய்ச்சி பற்றிய பல கருவிகளும், சுனாமீட்டர்கள் என்று அழைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் தன்மை அறியும் கருவிகள், இவற்றின் உதவியுடன் துணைக்கோளால் இருபத்திநான்கு மணி நேரமும் மேற்பார்வையிடும் நிலையங்கள் ஹவாய், அலாஸ்கா, ஜப்பான் ஆகியவற்றில் தொடர்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன. கணினி மாதிரியைக் கொண்டு, விஞ்ஞானிகள் சுனாமிகளின் பெருக்கெடுக்கூடிய அளவு மற்றும் அவற்றில் பாதிப்புத் தன்மை இவற்றைக் கணித்துக் கூறமுடியும்.

இந்தியப் பெருங்கடலில் அத்தகைய அமைப்பு ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த வார பெருந்துயரத்தில் பாதிக்கப்பட்ட 11 நாடுகளில், தாய்லாந்தும், இந்தோனேசியாவும்தான் பசிபிக் பெருங்கடலில் உள்ள சுனாமி எச்சரிக்கை முறை பகுதிக்குள் இருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் நில அதிர்வு பற்றிய கருவிகள் கொண்டுள்ள பிரிவுகளின் மூலம் நில நடுக்கத்தை கண்டறிந்தன. ஆனால் எல்லா நிலநடுக்கங்களும் சுனாமியைத் தோற்றுவிப்பதில்லை. போதிய திட்டங்கள், தயாரிப்புக்கள், கூடுதலான கருவிகள் என்று இல்லாத நிலையில் துல்லியமாக கணித்துக் கூறுதல் மிகக் கடினமானது ஆகும். அதிலும் இதைப் பொறுத்தவரை காலக் கணிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் சுனாமி அலைகள் கடலின் ஆழத்தைப் பொறுத்து மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் செல்லும் ஆற்றல் உடையவை ஆகும்.

டிசம்பர் 26ன் நிலநடுக்கம், ரிக்டெர் கோலில் 9 ஐப் பதிவு செய்த வகையில் கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நடுக்கங்களில் ஒன்றாக இருந்திருந்த, அலாஸ்கா நிலநடுக்கத்திற்கு அடுத்தாற்போல் மிக அதிக தீவிரத்தன்மையை பெற்றிருந்தது. இந்த அதிர்வின் தொடக்கத்துடைய மையப்பகுதி இந்தோனேசியத் தீவான சுமத்திராவின் வடமேற்கு கடலோரத்தையொட்டி அமைந்திருந்தது. இதன் பின்விளைவான அதிர்வுகள், வங்காள வளைகுடாவில், வடக்கே அந்தமான், நிகோபர் தீவுகள் வழியே தொடர்ந்து கடந்தன. ஆசிய, இந்திய என்ற இரு பெரும் நிலப்பகுதிகளின் அடித்தட்டுக்கள் கிட்டத்தட்ட 20 மிட்டர்கள் அகலத்திற்கு 1000 கிலோமீட்டர் தூரத்திற்கும் விரிந்து, ஹிரோஷிமாவின் 1945ல் வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியைப் போல் 20,000 மடங்கு அதிக சக்தியை வெளிப்படுத்தின.

நிலநடுக்கம் சுமத்திரா நேரத்தில் காலை 8 மணிக்குச் சற்று முன்னர் நிகழ்ந்தது [GMT நேரம் காலை 1 மணி). எட்டு நிமிஷங்கள் கழித்தபின்னர், ஹவாயில் இருந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. அதற்கு மூன்று நிமிஷங்களுக்குப் பின்னர், பசிபிக்கில் இருந்த மற்ற ஆராய்ச்சிக் கூடங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. 8.14 மணிக்கு இணைப்பில் பங்கு பெறும் அனைத்து நாடுகளுக்கும், நில நடுக்கம் பற்றியும், பசிபிக் பகுதிக்கு சுனாமியினால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்ற ஓர் எச்சரிக்கைக் குறிப்பும் அனுப்பப்பட்டது

ஒரு மணி நேரம் கடந்த பின்னர், மையம் தன்னுடைய நில நடுக்கத்தைப் பற்றிய தொடக்க மதிப்பீட்டை பரிசீலனை செய்து, அது 8ல் இருந்து 8.5 ஆக இருக்கும் ஏன்று கருதி, ஓர் இரண்டாம் எச்சரிக்கை குறிப்பில் இந்தியப் பெருங்கடலில் சுனாமித் தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற வாய்ப்பை வெளியிட்டது. பரபரப்புடன் பல தொலைபேசி அழைப்புக்கள் எச்சரிக்கை பற்றிய அறிவிப்புக்களுக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முறையான தொடர்புடைய அமைப்புக்கள் இல்லாததால், இது அறியப்பட்டிருக்கலாம் அல்லது அறியாமலும் போயிருக்கலாம்; "யாரை அழைத்துக் கூறுவது என்று நாங்கள் நினைக்கத் தொடங்கினோம். அரச திணைக்கள செயற்பாட்டு மையத்திடமும், இராணுவத்திடமும் இதைப்பற்றிப் பேசினோம். தூதரகங்களிடம் இதுபற்றிப் பேசினோம். இலங்கையின் கடற்படை அலுவலகத்திடம், மற்றும் எந்த உள்ளூர் அரசாங்க அதிகாரியிடம் தொடர்பு கொள்ள முடிந்தாலும், அவரிடம் இதுபற்றிப் பேசினோம்." என்று புவியியல்-பெளதிக வல்லுனரான பாரி ஹிர்ஷார்ன் Honolulu Advertiser இடம் தெரிவித்தார்.

சுனாமியின் பாதையில் இருக்கும் நாடுகளில், இது எதிர்கொள்ளப்பட்ட விதம் ஒழுங்கற்றும், சோம்பேறித்தனம் நிறைந்தும்தான் காணப்பட்டது. இதனுடைய பேராபத்துக்களை நன்கு அறிந்தவர்கள்கூட தயாரிப்பின்மை, அதிகாரத்துவ முறையின் செயல்பாடு, போதுமான அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை சரியாக இல்லாததால் தடைக்குட்பட்டனர். மற்றவர்களுக்கு எச்சரிக்கை அடையாளங்களை விளக்கிக் கண்டு கொள் முடியாது இருந்தது அல்லது அதைப்பற்றிய போதிய அக்கறை இல்லாத நிலைதான் இருந்தது. வங்கக் கடலைச்சுற்றி இருந்த நாடுகள் எவையுமே அதிகாரபூர்வமான எச்சரிக்கையை விடுக்கவில்லை; இது மில்லியன் கணக்கான மக்களை பேரழிவை சுமந்து வரும் அலைகளின் சீற்றத்திற்கு இரையாக்கிவிட்டது.

இந்தோனேசியா

நிலநடுக்கத்தின் மையக்குவிப்பிற்கு வெகு அருகாமையில் வட சுமத்திரா இருந்தது. ஆஷே (Aceh) மாநிலம் முழுவதும் கட்டிடங்களை உடனடியாகத் தகர்த்த நிலையில், அதைத் தொடர்ந்திருந்து அரைமணி நேரத்தில் தோன்றிய சுனாமி மேற்கு கடலோரப்பகுதியை தாக்கியது. இது பின்னர் சுழன்று வடக்கு முனையில் சீறி, மாநிலத் தலைநகரான பண்டா ஆஷேயை தரைமட்டமாக்கி அதன் பின்னர் கிழக்கு கடற்கரையோரப் பகுதியை அடைந்தது. போலீஸ், இராணுவம் உட்பட அனைவருமே இந்த எதிர்பாரா தாக்குதலில் திகைப்புண்டனர்.

ஆஷேயின் மேற்குக் கடற்கரையோரத்தில் அதிகாரபூர்வ எச்சரிக்கை பலருக்கும் பலனற்ற வகையில் மிகத் தாமதமாக வந்திருந்தாலும், அடிப்படைக் கல்வியற்ற நிலையானது ஆயிரக்கணக்கான உயிர்கள் கவரப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கும். நிலநடுக்கத்திற்குப் பின்னர், கடல் திடீரென்று பல நூற்றுக்கணக்கான மீட்டர்கள் பின்வாங்கியது; பலருக்கும் இதன் பொருள் புரியவில்லை. இந்த நிகழ்வினால் திகைத்துக் குழப்பமுற்ற கிராமவாசிகள், குறிப்பாகச் சிறுவர்கள், நீரைத் தொடர்ந்து சென்று, மேலே செல்லமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த மீன்களைப் பிடித்தனர்; ஆனால் தொடர்ந்து உடனடியாகத் திரும்பிய கடல்நீரால் சூழ்ந்து மூழ்கடிக்கப்பட்டனர். பலரும் எதையும் விளங்கிக் கொள்ளமுடியாமல் அங்கேயே நிலைகுத்தி நின்றனர்.

விஞ்ஞான ஏடான Nature ல் வந்த ஒரு கட்டுரையின்படி, இந்தோனேசியாவில் ஆரம்ப எச்சரிக்கை கொடுக்கக் கூடிய ஒரே ஒரு அதிர்வு பதிவுத் தகவல் கருவி, ஜாவா தீவில்தான் இருந்தது. அது 1996ல் நிறுவப்பட்டிருந்தது; ஆனால் 2000ம் ஆண்டில் அதன் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு தொலைபேசித் தொடர்பு இல்லாமற் போய்விட்டது. பாண்டுங் தொழில்நுட்பக் கூடத்தின் நில அதிர்வுக் கூடப் பிரிவின் தலைவரான நானாங் புஸ்பிடோவின் கருத்தின்படி, அதிகாரிகள் ஜாகர்த்தாவில் நிலநடுக்கம் பற்றி உஷார்படுத்தப்பட்டனர் என்றும் ஜாவா நிலையத்தில் இருந்து சிறப்புத் தகவல்கள் கிடைக்காமை அவர்களை சுனாமி பற்றிய எச்சரிக்கையை வெளியிடுவது தடைசெய்யதுவிட்டது.

தாய்லாந்து

நில அதிர்வு பற்றி வல்லுனர்கள் தாய்லாந்தில் சுமத்திராவின் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அதைப்பற்றிப் பதிவுசெய்திருந்தனர். தாய்லாந்தின் வானியல் ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் இச்செய்தி வந்தபோது ஒரு கருத்தரங்கில் பங்கு கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக ஒரு அவசரக்காலக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு துறையின் இயக்குனர் தலைவர் Supharerk Transrirattanwong தலைமை தாங்கினார். பெயரிட விரும்பாத நபர்களை மேற்கோளிட்டு, இக்கூட்டத்தில் சுனாமி ஆபத்து பற்றிய விவாதிக்கப்பட்டது என்றும் ஆனால், கூட்டம் அத்தகைய எச்சரிக்கை விடவேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் Nation பத்திரிகை தெரிவிக்கிறது.

அலைகள் மற்ற இயற்கை அசைவுகள் பற்றி கண்டறியும் கருவிகள் இல்லாத நிலையில், வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுனாமி வந்து கொண்டிருக்கிறதா என உறுதிசெய்யும் வழிவகையைப் பெற்றிருக்கவில்லை. மேலும் அரசாங்கமும் வர்த்தக பிரிவினரும் ஒரு தவறான எச்சரிக்கை விடுத்தால் எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். இப்பொழுதுதான் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வரும் உச்ச நேரம், பயணியள் விடுதிகள் நிறைந்திருக்கின்றன. Nation இடம் ஒரு அதிகாரி விளக்கினார்: "நாங்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்தால், அது எல்லோரையும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருக்கும்; [ஒருவேளை ஏதும் நடக்கவில்லை என்றால்] பின் என்ன நிகழும்? வர்த்தகம் உடனடியான பாதிப்பிற்குட்பட்டிருக்கும். அத்தகைய நெருக்கடியை வானிலைத் துறையினால் கையாள இயலாது. [சுனாமி] வரவில்லை என்றால், எங்களை மூழ்கடித்திருப்பர்.

இந்தக் கூட்டம் தெற்கு தாய்லாந்து கடலோரப்பகுதி, மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்களான புக்கெட், பன்ங்னா ஆகிய பகுதிகளை சுனாமி சீற்றத்துடன் தாக்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கூட்டப்பட்டிருந்தது.

இலங்கை

இலங்கை பசிபிக் எச்சரிக்கை முறையின் ஒரு பகுதியாக இல்லாவிடினும், ஹவாய் நிலையத்தின் முயற்சிகளால், ஒரு சுனாமி வளர்ச்சியடைந்து தாக்கக் கூடும் என்ற தகவல் சில அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பெரும் அலைக்கொந்தளிப்பு வங்க வளைகுடாவை கடந்து தீவின் கிழக்குக் கடற்கரையோரத்தை அடைவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்தது.

இலங்கையின் புவியியல் அளவியல் மற்றும் நில அகழ்வாராய்ச்சி அமைப்பின் தலைவரான சரத் வீரவர்ணகுல அவருடைய அலுவலகம் அதன் சர்வதேசப் பிரிவுகளில் இருந்து நிலநடுக்கம் பற்றிய ஓர் எச்சரிக்கையைப் பெற்றதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் குறிப்பிட்டார். இதை அவர் எவ்விதம் எதிர்கொண்டார் என்று கேட்கப்பட்டதற்கு அவர் சற்று தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்தான் விடையிறுத்தார். செய்திகளை சங்கேத மொழியில் இருந்து மாற்றுவதற்குச் சற்று கால தாமதமாயிற்று என்று கூறிய அவர் அவை எப்பொழுது வந்தன என்று கூற மறுத்துவிட்டார். நிலநடுக்கத்தை, மாரடைப்புடன் ஒப்பிட்டு ''முற்கூட்டி கூறமுடியாது'' என பேசிய அவர், சுனாமியைப் பற்றிக் கேட்டதற்குச் சில நேரங்களில் இது பற்றிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படமுடியும் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் டிசம்பர் 26ஐ பொறுத்தவரை, "அது சாத்தியமற்றது" என்று வலியுறுத்தி தொலைபேசியை கீழே வைத்துவிட்டார்.

Lankadeepa செய்திப் பத்திரிகை கொடுத்த கருத்துக்களில் வீரவர்ணகுல எச்சரிக்கை கொடுக்க முடியாத தோல்வியை நியாப்படுத்தியுள்ளார். தன்னுடைய துறையில் இருக்கும் வசதிகளும், சர்வதேசத் தொடர்புகளும் போதுமானவை என்று கூறிய அவர், நிலநடுக்கம் பற்றிய விவரங்கள் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மையத்திற்கு விளக்கம் காண்பதற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்று விவரித்தார். "அதற்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் அத்தகைய தகவல் ஒரு குறிப்பிட்ட நிலநடுக்கத்தினால் ஏற்படும் அலைக் கொந்தளிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று தெளிவாக்கமுடியாது என்றார். எங்களுடைய பணியைப் பற்றி எவ்விதக் குறைகூறல்கள் இருப்பினும், நாள் முழுவதும் திறமையுடன்தான் நாங்கள் இயங்கி வருகின்றோம். எனவே இக் குற்றச்சாட்டுக்களை நான் நிராகரிக்கின்றேன்."

மிக உறுதியுடன் நிரூபிக்கப்பட்டது என்னவென்றால், இலங்கையிலும் மற்றும் இப்பகுதி முழுவதும் எச்சரிக்கை முறைகள், அவற்றின் செயற்பாடுகள் முற்றிலும் போதிய அளவில் இல்லை என்பதுதான். வீரவர்ணகுல இந்த நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்த முற்பட்டுள்ளது மிகப் பெரிய நிலநடுக்கம் அதையொட்டிய சுனாமி உருவாகலாம் என்ற சான்றுகளுக்கு மத்தியில் தீவில் இருந்த அதிகாரிகள் முடங்கிப்போயினர் என்பதைத்தான் நிரூபிக்கிறது. எவருக்கு, எந்த நேரத்தில், எது தெரிந்திருந்தது என்பது ஒருவேளை துல்லியமான விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாமலேயே போய்விடக்கூடும். கிழக்குக் கடற்கரையை சுனாமி தாக்கிய பின்னரும் கூட, அதிகாரபூர்வமான நடவடிக்கை மற்ற இடத்தில் இருந்த மக்களை எச்சரிப்பதற்கு எடுக்கப்படவில்லை. ஒப்பீட்டளவில் பேரலைகள் அற்ற நீர் அலைக் கொந்தளிப்பு தீவைச் சுற்றிலும் தாக்க ஒரு மணி நேரம் எடுத்து தெற்கு, மேற்குக் கடலோரப்பகுதிகளைத் தாக்கியது.

இந்தியா

மற்ற நாடுகளில் தங்கள் நிலையில் இருப்பவர்கள் எதிர்கொண்டிருந்தது போன்ற தடைகளைத்தான் இந்திய அதிகாரிகளும் எதிர்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு ஒரு நன்மை கூடுதலாக இருந்தது: இந்திய விமானப்படை, வங்கக் கடலின் நடுவில் இருக்கும் இந்தியப் பகுதியான தொலைவில் உள்ள நிலநடுக்கத்தின் மையக்குவிப்பிற்கு அருகில் இருக்கும் அந்தமான், நிகோபார்த் தீவுகளில் ஒரு படைத் தளத்தைக் கொண்டுள்ளது. சுனாமி ஏற்படுமா அல்லது வராமற்போய்விடுமோ என்ற ஊகத்திற்கு இங்கு இடம் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அலைக் கொந்தளிப்பு தீவுகளையும், விமானத் தளத்தையும் மூடிப்பாய்ந்தது.

Indian Express இல் வந்துள்ள ஒரு தகவலின்படி, சென்னையில் இருக்கும் விமானத் தளம் தென்னிந்தியாவை சுனாமி தாக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நிக்கோபார் தீவிலிருந்து தகவல்களை பெற்றிருந்தது. விமானப்படைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி செய்தித் தாளிடம் "கார் நிகோபர் தளத்தில் இருந்து கடைசித் தகவலின்படி, தீவு மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றும் எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்துள்ளது என்பதேயாகும்'' என தெரிவித்தார். தலைமை அதிகாரி தன்னுடைய உதவியாளருக்குப் புது டெல்லியில் முன்னாள் அறிவியல், தொழில்நுட்ப மந்திரியின் இல்லத்திற்கு தொலைநகல் மூலம் எச்சரிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார். இதைத்தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; சுனாமி பற்றிய எச்சரிக்கை சென்னைக்கோ அல்லது வேறு மற்ற தென்னிந்திய சிறுநகரங்களுக்கோ, பெருநகரங்களுக்கோ விடுக்கப்படவில்லை.

இந்தியப் பெருங்கடலுக்கான எச்சரிக்கை அமைப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை?

பேரழிவிற்கு பின்னர் இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படுவதற்கான கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இந்திய, தாய்லாந்து அரசாங்கங்களும், கான்பெர்ரா, வாஷிங்டனிலுள்ள அவர்களின் பங்காளிகளும் இனிமேல் ஒன்றை நிறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தின்படி, தேவையான நடவடிக்கைகள் ஓராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஆனால் வெளிப்படையாக விளைந்துள்ள வினா இதுதான்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் முறையோடு ஒப்பிடத்தகுந்த வகையில் இங்கும் எச்சரிக்கை முறை ஒன்று முன்னரே ஏன் ஏற்படுத்தப்படவில்லை?

கடந்தவாரப் பேரழிவிற்கு முன்பாக, அத்தகைய முறை ஒன்று கட்டாயம் தேவை என்று கூறியிருந்த சில விஞ்ஞானிகள் பொதுவாகக் கிறுக்கர்கள் என்ற அவச்சொல்லிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது தாய்லாந்தின் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த சாமித் தாமசரோஜ் என்பவர், நாட்டின் தெற்குக் கடலோரப்பகுதியை ஒரு பேரழிவைத் தரக்கூடிய சுனாமித் தாக்குதல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற எச்சரிக்கையைக் கொடுத்திருந்தார். சிலர் அவரை "கிறுக்கர்" என்று கூறி ஓரங்கட்டப்பட்டார்.

தாமசரோஜ் Australian என்ற பத்திரிகைக்கு தெரிவித்தார்: "அலைகள் கொந்தளிப்பு பற்றிய ஓர் எச்சரிப்பு அளிக்கும் முறை வேண்டும் என்று முன்னரே கோரியிருந்தேன்; அத்தகைய எச்சரிப்பு சங்கொலிப்புக்கள் இப்பொழுது தாக்கப்பட்டுள்ள முன்று மாநிலங்களான புக்கெட், பன்க்ம்கா மற்றும் கிராபி கடலோர சுற்றுலா விடுதிகளிலும் தேவை என்று கூறியிருந்தேன். இந்த மாநிலங்களின் மூத்த அதிகாரிகளையும் நான் உஷார்படுத்தியிருந்தேன்; ஆனால் எவரும் நான் கூறியதைக் கேட்கவில்லை." சில மாநிலங்கள் "வெளிநாட்டுப் பயணிகளிடையே இருக்கும் அவர்களின் தோற்றப் பொலிவை நான் நாசம் விளைவிக்கிறேன்" என்று கருதியதால் அங்கு நான் செல்வதற்கு தடைவிதித்து விட்டன."

மற்ற விஞ்ஞானிகளும் இதேபோன்ற திட்டங்களை முன்வைத்துள்ளனர்; இவைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டன அல்லது பணம் இல்லாத காரணத்தால் கவனத்திற்குள்ளாகவில்லை. Nature கூறிய கருத்தின்படி, "இந்தியப் பெருங்கடலில் [பசிபிக்கில் இருப்பது போன்ற முறையில்] ஒத்திருக்கும் அமைப்பினை போன்ற ஒரு அமைப்பின் தேவை Intergovernmental Oceanographic Commission, என்னும் ஐ.நா. அமைப்பின்கீழ் இயக்கும் பிரிவில் பலமுறையும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது; குறைந்தது 1999 இல் இருந்து பசிபிக் இணைப்பு பொறுப்பைக் கொண்டிருக்கும் இப்பிரிவில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது." அமெரிக்காவில் சுனாமி பற்றிய ஆராய்ச்சி நடாத்தும் வேசிலி டைடோவ் ஒரு செய்தி ஏட்டிற்கு தெரிவித்தார்: "இது எப்பொழுதும் செயல்பட்டியலில் உள்ளது. ... இரண்டு வராங்களுக்கு முன்பு கூட இதுபற்றிப் பேசினால் கிறுக்குத்தனம் என்று கூறியிருப்பர். ஆனால் இப்பொழுது ஏற்கத்தக்க திட்டம் என்று கொள்ளப்படும். இதற்குத் தேவைப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருந்திருக்கும்."

சமீபத்தில் அக்டோபர் 2003ல் கூட, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள நில அதிர்வு ஆராய்ச்சியாளரான டாக்டர் பில் கும்மின்ஸ் சுனாமி எச்சரிக்கை முறை பற்றிய சர்வதேசப் பெருங்கடல் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு தன்னுடைய நேசக்கரத்தை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் நீட்டுமாறு அழைப்பு விடுத்திருந்தார். New York Times இன் கூற்றின்படி, வாஷிங்டனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நியூசிலாந்து அவரை எள்ளி நகையாடியதோடு, கூட்ட முடிவுகள் பற்றி குறிப்பில் அத்தகைய விரிவாக்கம் குழுவின் வரையறைக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கொடுக்கும் என்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளது. மாறாக இக்குழு பிரச்சனையைப் பற்றி ஆய்வு நடத்துவதற்கு "தற்காலிகக் குழுக்கள்" அமைக்கப்பட்டால் போதும் என்று வாக்களித்தது..

கும்மின்சுடைய திட்டத்தின்படி ஏற்பட்டிருக்கக்கூடிய செலவினங்கள் ஒப்புமையில் குறைவுதான். ஒரு கல்வியாளர் Los Angeles Times இல் இத்தகைய உயர் தொழில்நுட்ப முறை, இந்தியப் பெருங்கடலில் மட்டும் இன்றி உலகத்தின் கடல்கள் அனைத்தைப் பற்றியும் ஒருங்கிணைத்துச் செயல்படும் முறை $150 மில்லியன் செலவில் அமைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார் எனக் கூறியுள்ளார். கடல்மட்டத்தை அளக்கும் கருவிகள் தலா $5,000 ஆகும். சிறந்த முறையில், உயர்வேகத் தொடர்புடையவை இன்னும் கூடுதலான விலைவாய்ந்தவை, கிட்டத்தட்ட $20,000 விலையுடையவை ஆகும். சுனாமீட்டர்கள் என்ற பெயருடைய இவை ஒரு சுனாமி கடலின் அடியில் விரைந்து செல்லும் பாதையைக் கண்டறியும் திறனுடையவை $250,000 விலையுடயவை; ஆனால் இவை தொடர்ந்து பராமரிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும்.

அனைத்தையும், நில அதிர்வையும் உணர்ந்து பதிவு செய்யக்கூடிய கருவிகள், நாள் முழுவதும் மேற்பார்வையிடக்கூடிய நிலையங்களுடன் இணைக்கப்பட்டு முறையான பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளினால் இயக்கப்படவேண்டும். பயிற்சி, இதைப் பற்றிய கல்வியை வளர்க்கும் திட்டமும் இதேபோல் முக்கியமானது ஆகும்; அது அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஆபத்துக்கள் பற்றியும் எச்சரிக்கை வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கும்.

அத்தகைய அமைப்பை நிறுவுவதில் வெற்றிபெறாதது, குறுகிய பார்வை, செயலற்ற தன்மை, முற்றான இகழ்வுக் குணம் போன்றவற்றை பெரிய வல்லரசுகள் ஒடுக்கப்பட்ட தெற்காசிய மக்களின் உயிர்களின் மீது காட்டப்படுவதுடன் இணைந்துள்ளது. பேரழிவு தரும் சுனாமிக்கள் இந்தியப் பெருங்கடலில், பசிபிக் பகுதியைவிடக் கூடுதலான முறையில் காணப்படும் தன்மையில் உள்ளன. ஆனால் G-8 நாடுகளில் எதுவும் இப்பகுதியின் எல்லையை ஒட்டி இல்லை. ஜப்பானும், அமெரிக்காவும் மில்லியன் கணக்கில், பசிபிக் பகுதியில் தொடர் நிலையங்களைக் கொண்டு சுனாமீட்டர்கள் பற்றியும் கண்காணிப்பு பற்றியும் தங்கள் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் செலவழித்துள்ளன; ஆனால் கடந்த வாரப் பேரழிவிற்கு முன்பு இரண்டு நாடுகளில் எதுவும் இவற்றின் செயலாக்கம் இந்தியப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவற்குச் செலவழிக்க முன்வரவில்லை.

கடந்த வாரத்தின் பேரழிவு இன்னும் பரந்த முறையிலான வினாக்களையும் எழுப்புகிறது. தெற்கு ஆசியாவில் சுனாமி பற்றி எச்சரிக்கும் முறை இல்லாதது, பொதுவாகவே பேரழிவுகளைத் தரும் வெள்ளங்கள், புயல்கள் என்று இப்பகுதியில் அடிக்கடி நடப்பவை பற்றிய அக்கறையற்ற தன்மையைத்தான் அடையாளம் காட்டுகிறது. சுனாமியின் தாக்குதலால் நிகழ்ந்துள்ள பெருந்துன்பம் உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்களின் பரிவு உணர்வைத் தூண்டிவிட்டு, காலம் கடந்தாலும், போதிய தன்மையற்று இருந்தாலும் இதற்கு ஏதேனும் செய்யுமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள் ஆசியாவில் இயற்கையின் சீற்றங்களினால், இறக்கின்றனர் அல்லது வீடுகளை இழக்கின்றனர்; இந்த நிகழ்வுகளைப் பற்றி சர்வதேச செய்தி ஊடகம் அதிகம் குறிப்பிடுவதுகூடக் கிடையாது.

தற்போதைய நெருக்கடி பற்றிக் கூறுகையில் இந்திய விஞ்ஞானி ரோட்டாம் நரசிம்மா விமர்சனத்துடன் கேட்டார்: "சுனாமி பற்றிய எச்சரிக்கையை இரண்டு மணி நேரம் முன்னரே, விஞ்ஞானரீதியான தகவல்களை கொண்டு தெரிவிக்கும் முறை இருந்தாலும், (இந்திய) நிர்வாகம் அதைப் பற்றி என்ன செய்யும்? யார் எவரைக் கூப்பிட்டு, எவ்வாறு இவர்கள் மக்களுக்கு எச்சரிக்கையை கொடுத்துவிட முடியும்? சில ஆண்டுகள் முன்பு ஒரிசாவைத் தாக்கிய பெரும் புயலில் இருந்து எந்தப் படிப்பினையையும் புது டெல்லி கற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். "நிர்வாகம் இரண்டு நாட்கள் முன்னரே ஒரிசாவில் வந்த மாபெரும் புயலைப் பற்றிய எச்சரிக்கையைப் பெற்றது; ஆயினும் என்ன நடந்தது? எனவே இரண்டு மணி நேரத்தில் அவர்கள் இரண்டு நாட்களில் செய்யமுடியாததைச் செய்திருப்பார்களா?"

நரசிம்மாவின் இகழ்வு நியாயமான முறையில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து இலக்கை கொண்டுள்ளது எனினும், அவருடைய கருத்துக்கள் அப்பகுதியில் இருக்கும் மற்ற அரசாங்கங்கள் மற்றும் பெரிய முதலாளித்துவமுறை சக்திகள் பற்றிய குற்றச்சாட்டும் ஆகும்; இவை எப்பொழுதுமே தெற்கு ஆசியாவில் சாதாரண மக்களின் பரிதாபமான நிலை பற்றித் தங்கள் பொறுப்பை கைகழுவிவிடுகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை முறை நிறுவதலுக்கான செலவு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய பெருநிறுவனங்கள் அப்பகுதியின் குறைவூதியத் தொழிலாளரை சுரண்டிக் குவிக்கும் மகத்தான இலாபங்களோடு ஒப்பிடும்போது அற்பத்தொகையாகும். இறுதி ஆய்வுகளில், பொருத்தமான பேரழிவு நிர்வகிப்பு முறை இல்லாதமை, பில்லியன் கணக்கான மக்களை அன்றாடம் வறிய வாழ்வில் தள்ளி அவர்களுடைய கஷ்டங்களை தவிர்க்கமுடியாதவை என்றும் மற்றும் அவை நிச்சயமாக வந்தே தீரும் என்ற கருத்தை கொண்டிருக்கும், இந்த சமூக பொருளாதார அமைப்பின் விளைவேதான்.

See Also:

தொற்றுநோய் பரவும் அபாயங்களுடன், சுனாமியினால் இறந்தோர் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் உயர்கிறது

தெற்கு ஆசியாவில் பேரழிவு அலைக் கொந்தளிப்பு 13,000 உயிர்களைக் கவர்ந்தது

Top of page