:ஆசியா
Sri Lankan tsunami victims speak to the
WSWS
சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உலக சோசலிச வலைத்
தளத்துடன் உரையாடினர்
By our correspondents
29 December 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கையின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் மேலும் இறந்த
உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் அதேவேளை கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் பலியானோரின்
எண்ணிக்கை 25,000 வரை அதிகரிக்கக் கூடும் என செவ்வாயன்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். முகாம்கள் லட்சக்கணக்கான
இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பிவழியும் நிலையில் வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய்கள் துரிதமாக பரவக்கூடும்
எனவும் அந்த அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கடைசியாக வந்த புள்ளி விபரங்களின்படி, யுத்தத்தால் அழிவுக்குள்ளான தீவின் வடகிழக்கில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000 ஆக அதிகரித்திருப்பதுடன் 500,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ராய்ட்டர் அறிக்கையொன்று, "இறந்த உடல்கள் கரை ஒதுங்குகின்றன. மீட்புப் பணியாளர்களிடமிருந்து வரும் அறிக்கைகள்
25,000 பேர் பலியாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என
சமூக நலன்புரி அமைச்சர் சுமேத ஜயசிங்க பிரகடனம் செய்ததாக மேற்கோள் காட்டியிருந்தது. ஆனால்
பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் இந்த மதிப்பீட்டை நம்புகிறார்கள் இல்லை.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை
சந்திப்பதற்காக நாட்டின் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு பயணிக்கின்றனர். ஏற்கனவே சந்தித்த சிலர் தங்களது
இக்கட்டான நிலையை கலந்துரையாடுவதற்கு ஆர்வமாக இருந்ததுடன், தாம் எதிர்கொண்டுள்ள அவலங்களைப் பற்றி
அரசாங்கம் அசட்டையாக இருப்பதையிட்டு தமது ஆத்திரத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினர்.
தெற்கில் மாத்தறை மிகவும் பாதிப்புக்குள்ளான பிரதேசமாகும். வீதியின் அரைவாசிப்
பகுதியே சுத்தம் செய்யப்பட்டிருப்பதால் பிரதான கரையோர நெடுஞ்சாலையில் இன்னமும் பயணிக்க முடியாதுள்ளது.
தலைநகர் கொழும்பிலிருந்து தெற்காக 160 கிலோமீட்டர் வரையான முழு கரையோரப் பகுதியும் நில நடுக்கத்தால்
ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அழிவுக்குள்ளாகியுள்ளது. நாம் மாத்தறையை அண்மிக்கும் போது அது மிகவும் மோசமானதாக
இருந்தது.
அந்த வழியில் உள்ள மக்கள் நடந்தவற்றை எங்களிடம் குறிப்பிட்டனர். மாத்தறையிலிருந்து
சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காலியில் ஒரு குறிப்பிடத்தக்க துண்பகரமான சம்பவத்தை அவர்கள்
விபரித்தார்கள். மகாமோதர ஆஸ்பத்திரியின் சிறுவர்கள் வாட்டு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்டு உட்பட
அரைவாசிப் பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலரே உயிர்தப்பியுள்ளனர்.
மாத்தறையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு பல முகாம்கள் உள்ளன. ராகுல
கல்லூரி முகாமில் சுமார் 3,000 பேர் குழுமியுள்ளனர். அரசாங்க அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ
அல்லது ஏனைய அதிகாரிகளோ அங்கு செல்வது பற்றி இன்னமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாம் அங்கு
சென்ற போது மக்கள் தங்கள் அவலங்களை சொல்வதற்காக எங்களை சூழ்ந்து கொண்டனர்.
"நாம் காலை சுமார் 10.30 மணியளவில் ஒரு பிரமாண்டமான அலைக்குள் திடீரென
அகப்பட்டுக் கொண்டோம். இதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக திருகோணமலையில் உள்ள மக்களும் இதுபோன்ற
நிலைக்கு முகம் கொடுத்ததாக கேள்விப்பட்டோம். அப்படியானால் அதிகாரிகள் எங்களை எச்சரிக்காதது ஏன்?"
என 73 வயதான புஞ்சி ஹேவா கேட்டார். அவர் மாத்தறை தொட்டமுனவைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில்
மாத்திரம் சுமார் 250 பேர் பலியாகியுள்ளனர். புஞ்சி ஹேவா தனது மூத்த சகோதரியையும் அவரது கணவனையும்
இழந்து விட்டார். "நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்களது
அன்புக்குரியவர்களை பொலித்தீன் விரிப்புகளில் சுற்றி மனிதப் புதைகுழிகளில் புதைக்கின்றார்கள்.
"இங்கு எங்களுக்கு மிகவும் அடிப்படையான பொருட்கள் கூட கொடுக்கப்படவில்லை.
அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. இங்கு சிறு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள்
ஆபத்தில் உள்ளனர்" என அவர் மேலும் தெரிவித்தார்.
24 வயதான நிரஞ்சன சரோஜினி: "இந்தளவு விஞ்ஞானப்பூர்வமாக அபிவிருத்தியடைந்த
உலகில் இத்தகைய ஒரு அவலத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்ததையிட்டு நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். இங்குள்ள
பெரும்பாலான குடும்பங்கள் ஒருவரை அல்லது இருவரை இழந்துள்ளன. எமது பிரதேசத்தில் மரப்பலகையில் அமைக்கப்பட்டிருந்த
20 வீடுகளில் பத்தொன்பது கடலால் அழிக்கப்பட்டுவிட்டன.
"நாங்கள் சப்பாத்து உற்பத்தி செய்பவர்கள் என்ற வகையில் நாங்கள் சுயாதீன
தொழிலாளர்கள். நாங்கள் எங்களது அனைத்து உபகரனங்களையும் இழந்துவிட்டோம். நாங்கள் என்ன செய்வது?"
எனக் கேள்வியெழுப்பினார்.
இங்குள்ள மக்கள் ஏனையவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை கண்டவர்கள்.
அவர்களைக் காப்பாற்ற சென்ற சிலர் அதே தலைவிதிக்குள்ளாகியுள்ளனர். உயிர் தப்பியவர்களுக்கு சிகிச்சையளிக்க
அங்கு இரண்டு வைத்தியர்களே உள்ளனர். பாய்கள் கூட இல்லாத நிலையில் அகதிகள் பத்திரிகைத் தாள்களை விரித்து
தரையில் படுத்துத் தூங்கத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆறு மலசலகூடங்களே உள்ளன. அங்கு மக்களே தன்னிச்சையாக
உணவு மற்றும் ஏனைய அவசியங்களை வழங்குகின்றனர்.
"நான் எனது வாழ்க்கையில் அனுபவித்த மிகப் பயங்கரமான சம்பவம் இதுவே.
ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு உருக்கமான கதைகள் உண்டு" என ஹரிஸ்சந்திர விபரித்தார். அவர் நேரடித்
தாக்கத்திற்குள்ளாகாத போதிலும் ஏனையவர்களுக்கு உதவ முயற்சிப்பதற்காக சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருந்தார். "இது ஒரு தேவாலய தினத்தில் நடைபெற்றுள்ளது. மக்கள் ஞாயிறு சந்தைக்கும் வந்திருந்தனர்.
ஏனையவர்கள் போயா தினமாகையால் (பெளத்தர்களின் தினமாகிய பெளர்னமி தினம், விடுமுறை தினமாகும்)
கோயிலுக்கு சென்றிருந்தார்கள். இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"நெருங்கிக் கொண்டிருந்த அழிவைப் பற்றி அவர்களால் (அரசாங்கம்) அறிவிக்க
முடியாமல் போனது ஏன்? காலங்கடந்த விஞ்ஞான அபிவிருத்தியுடன் வேலைசெய்வது பற்றி அவர்கள் பேசுகின்றார்கள்.
நாங்கள் பழைய உபகரணங்களால் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என அவர்கள் விவாதிக்கின்றனர். இது ஆளும்
தட்டுக்கள் தங்களது இலாபங்களைப் பற்றி மட்டும் அக்கறை கொள்கின்ற, மக்களைப் பற்றி எதுவித அக்கறையெடுக்காத
ஒரு அமைப்பு. உங்களால் உங்களது நலன்களைப் பாதுகாக்க அவர்களை எதிர்பார்க்க முடியுமா?
"ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு
வந்து பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக மில்லியன்கணக்கான ரூபாய்களை செலவு செய்தார்கள்.
இங்கு மாத்தறையில் அந்த நிகழ்வுக்கான மாபெரும் கொண்டாட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர்களால்
இந்த அழிவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவளிக்க பணம் திரட்ட முடியவில்லை" என ஹரிஸ்சந்திர ஆத்திரத்துடன்
பிரகடனம் செய்தார்.
கொழும்பு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசமான மொரட்டுவையில் கிழக்கு மற்றும் தெற்கு
கரையோரப் பகுதிகளைப் போல் இல்லாவிட்டாலும் முழு கரையோரப் பகுதியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
முதலாவது பேரலை முற்பகல் 10.05 மணிக்கு அடித்தது, இரண்டாவது11.00 மணிக்கு
அடித்தது. அதில் காலி நெடுஞ்சாலை வரையுமான சுமார் 80 அல்லது 90 மீட்டர் வரையான பிரதேசம் முற்றிலும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அப்போது மரப் பலகையால் அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறிய வீடுகள் தரைமட்டமாகின.
அங்கு ஒரு சில கல் வீடுகளே உள்ளன. அங்குள்ள மக்கள் மீனவர்கள் அல்லது பழ மற்றும் மரக்கறி வியாபாரிகள்
ஆவர்.
பேரலைகள் அடிக்கத் தொடங்கியவுடன் பிரதேசவாசிகள் தமது வீடுகளை விட்டு
பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர். இங்கு மிக சொற்ப மரணங்களே அறிவிக்கப்பட்டிருந்தாலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காலி வீதிக்கு அடுத்த பக்கம் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த மக்களும் வெளியேறிவிட்டனர். வாகனங்களை
வைத்திருந்தவர்கள் துரிதமாக வெளியேற முயற்சித்த போதிலும் வீதியில் வாகன நெரிசல் அதிகரித்ததையடுத்து ஒரு
பொதுவான பீதி காணப்பட்டது. வீடுகளை இழந்த கர்ப்பிணித் தாய்மார்கள் உதவி தேடி ஓடினர். சிலர் எங்கு
செல்வதென்று தெரியாமல் சிறு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடினர். முச்சக்கர வண்டிகள் ஐந்து அல்லது ஆறு
பயணிகள் வரை ஏற்றிச்சென்றன. எல்லா இடங்களிலும் பெரும் அச்சம் நிலவியது.
மக்கள் தூரத்திற்கு ஓடிய போதிலும் மூவர் பலியானதாக மொரடுமுல்லயில் உள்ள இரு
இளைஞர்கள் தெரிவித்தனர். ஒரு பெண் மிண்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான மாலா எனும் யுவதி நடந்தவற்றை விபரித்தார்.
"என்னுடைய உறவினர்கள் யாரோ 'ஓடு ஓடு! என கூச்சலிடும் போது நான் பழம்
விற்றுக்கொண்டிருந்தேன். கடல் நீர் உயர்ந்துகொண்டிருந்தது. நான் பழக் கூடையை கீழே வீசிவிட்டு எனது பிள்ளைகளைத்
தேடி ஓடினேன். அதிஷ்டவசமாக நான் அவர்களை பாதிப்பின்றி காப்பாற்றிக்கொண்டேன். நாங்கள் மிகவும் வறியவர்கள்.
எங்களுக்கு போவதற்கு இடம் கிடையாது. நாங்கள் வீதியில் நிற்கும் போது கடல் அலைகள் வந்து எங்களது வீடுகளை
அழிப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் கடவுளை வேண்டினோம். பதினொரு மணியளவில்
இன்னுமொரு பேரலை காலி வீதியை நெருங்கி வந்தது.
"எனது மாமா மிகவும் வயதானவர். எனது கனவரும் ஏனையவர்களும் அவரை
கோவிலுக்குள் தூக்கிச் சென்றார்கள். அங்கு அவருக்கு வாழ்வது சிரமம். எனது மாமி அழுது கொண்டிருக்கின்றார்.
ஏனையவர்களின் உதவியுடன் அன்மையில் அவர் மின்சார இணைப்பைப் பெற்றுக்கொண்டார். அவர் ஒரு சிறிய
தொலைக்காட்சிப் பெட்டியையும் வைத்திருந்தார். ஆனால் அவை அனைத்தும் அழிந்துவிட்டன. நான் எனது பிள்ளைகளின்
கல்வியை நினைத்து கவலையடைந்துள்ளேன். அவர்களது எல்லா புத்தகங்களும் நாசமாகிவிட்டன. எங்களுக்கு எதிர்காலம்
இல்லை. அரசாங்கம் எப்பொழுதும் எங்களுக்கு உதவியது கிடையாது. எனது குடும்பம் எப்பொழுதும் மிகக் கடினமான
வேலை செய்தே உயிர்பிழைத்து வந்தது. நான் தொழில் தேடி மத்திய கிழக்கிற்கு சென்றேன். ஆனால் எனக்கு
சம்பளம் கிடைக்கவில்லை. ஆகவே நான் வெறுமனே நாடு திரும்பினேன். ஆனால் நான் இன்னமும் கடன்காரி" என
அவர் குறிப்பிட்டார்.
மொரட்டுவையின் ஒரு சிறு பிரதேசமான மாதன்வத்தையில் எல்லா வீடுகளும்
அழிந்துவிட்டன. அங்கு 13 வீடுகளில் 300 உறுப்பினர்களுடன் 65 குடும்பங்கள் வசிந்து வந்துள்ளன. அன்று காலை
8.30 மணியளவில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருந்ததாக இரு பிள்ளைகளின் தாயான 25 வயதான துஷாரி
தெரிவித்தார். "ஆனால் நாங்கள் அதை பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை." சுமார் 10.30 மணியளவில் அலை
திடீரென சுமார் 20 அடிவரை உயரமாக எழுந்தபோது மக்கள் தூரத்திற்கு ஓடினார்கள். அப்போது 40 வயதான
சோமாவதி என்ற பெண்மனி தனது நகைகளை எடுப்பதற்காக ஓடினார், ஆனால், அவர் அலைகளால் அடித்துச்
செல்லப்பட்டு மரணமானார்.
இந்தப் பிரதேசத்தில் அநேகமானவர்கள் கூலித் தொழிலாளர்களாக இருந்த
போதிலும் அவர்களுக்கு அன்றாடம் வேலை கிடைப்பதில்லை. அவர்களது நாள் சம்பளம் 250 ரூபா (2.50
அமெரிக்க டொலர்கள்) மட்டுமே. இங்கு ஒரு சில மீனவர்களும் மற்றும் சில தச்சர்களும் உள்ளனர். பியதாச
குறிப்பிடும் போது, "நாங்கள் மிக கடினமான வாழ்க்கையையே அனுபவிக்கின்றோம். ஆனால் இப்பொழுது
எங்களிடம் ஒன்றுமில்லை. எங்களிடம் உணவு அல்லது சமயலறை சாமான்கள் கூட இல்லை. பிரதானமாக எங்களுக்கு
தங்குமிடமில்லை. ஆண்கள் பெண்களுமாக நாங்கள் அனைவரும் வீதியிலேயே படுத்துக்கொள்கிறோம்.
"எனது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? ஜே.வி.பி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியிலிருந்தோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எங்களைப்
பார்க்க வரவில்லை. நான் அரசாங்கத்தை ஆதரித்தேன். ஆனால் தேர்தலின் போது மட்டுமே நாங்கள்
அவர்களுக்கு தேவைப்படுகிறோம். இன்னுமொரு தேர்தலில் ஆதரவு தேடி அவர்கள் இங்கு வந்தால் அவர்கள் மீது
தும்புத்தடியை பிரயோகிப்பேன்" என்று கூறினார்.
சமன் மற்றும் ஏனைய இளைஞர்கள் எமது வலைத் தளத்துடன் உரையாற்றும் போது:
"எங்களுக்கு ஒழுங்கான தொழில் கிடையாது. நாங்கள் மீன்பிடிக்கச் சென்றோம். ஆனால் இப்போது எமது படகு
அழந்து போய்விட்டது. எங்களிடம் படகு இருந்தாலும் எங்களால் மீன்பிடிக்க செல்ல முடியாது, காரணம் கடல்
கொந்தளிப்பாக உள்ளது. அரசியல்வாதிகள் எங்களை கணக்கில் எடுப்பதில்லை. பாருங்கள்: நாங்கள் ஆறு
இளைஞர்கள் இருக்கிறோம். எங்கள் ஒருவருக்கும் தொழில் கிடையாது" என்றனர். சமன் மேலும் குறிப்பிடும்
போது: "நான் அரசாங்கத்தை குற்றம்சாட்டுவேன். அவர்கள் எங்களை எச்சரிக்கவில்லை. அவர்கள் வறியவர்களை
விரும்புவதில்லையா?" எனக் கேட்டார்.
மொரட்டுவை குணவர்தனாராமய பெளத்த கோவிலில் சுமார் 600 பேர்வரை
தங்கியுள்ளனர். உள்ளே தாய்மாரும் பிள்ளைகளும் உள்ள அதே வேளை ஆண்கள் வெளியில் இருக்கின்றனர். ஒரு வீட்டுப்
பணிப்பெண்னும் வயதான தாயுமான லீலா: "எங்களுக்கு கோவிலில் இருந்து மருந்துகளும் உணவும் கிடைக்கின்றன.
ஆனால் எம்மால் இதை அன்றாடம் தொடர முடியாது. எங்களுக்கு வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும்," எனக்
குறிப்பிட்டார்.
கோவிலில் தங்கியுள்ள மக்களுக்கு சுயாதீனமாக உதவி புரிந்துவரும் வைத்தியரான
குரே அங்குள்ள மக்களின் நிலைமைகளைப் பற்றி விளக்கினார். "பலர் காயமடைந்துள்ளார்கள். இங்கு பெரிய
பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் முதியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை" என்று
குறிப்பிட்டார்.
புனித பீட்டர் தேவாலயத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர்
தங்கியுள்ளனர். அவர்களுக்கு தொழிலும் தங்குமிடமும் அவசியம் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.
வத்தளை புனித ஆன் தேவாலயத்திற்கு சுமார் 300 பேர் உயிரைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக ஓடித் தங்கியுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ள வத்தளை லன்சியாவத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் 10.30 மணியளவில் முதல் முறையாக வந்த கடல் அலையைப் பற்றி
குறிப்பிட்டனர். அவர்கள் முன்கூட்டியே எதையும் அறிந்திராததால் உடனடியாக செயற்படத் தள்ளப்பட்டார்கள்.
தேவாலயத்தால் நடத்தப்பட்டு வந்த காதுகேளாதோர் மற்றும் ஊமையர் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த இரு
சிறுவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த மக்கள் மிகவும் வறியவர்கள், தற்காலிக தொழில்களைச் செய்து உயிர்
பிழைப்பவர்கள். அவர்கள் வாழ்ந்து வந்த தற்காலிக குடிசைகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ரஞ்சனின் வீடு ஏனைய சிறிய வீடுகளுக்கு மத்தியில் களனி ஆற்றுக்கும் கடலுக்கும்
இடையில் அமைந்திருந்தது. "நான் தொலைக்காட்சியில் கிரிகெட் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென வீட்டுக்குள்
தண்ணீர் புகுந்தது. நாங்கள் அனைவரும் தூரத்துக்கு ஓடிக்கொண்டிருக்கும் போது தண்ணீரும் எங்கள் பின்னாலேய வந்து
கொண்டிருந்தது" என அவர் தெரிவித்தார்.
"நான் சீதூவையில் ஒரு பிலாஸ்டிக் கம்பனியில் வேலை செய்கிறேன். நேற்றுமுதல் நாங்கள்
இந்த தேவாலயத்தில் தங்கியிருக்கின்றோம். தேவாலயத்தில் எங்களுக்கு உணவு கிடைக்கின்ற போதிலும் அரசாங்க
அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பலவித நிவாரனத்
திட்டங்களை பற்றி அறிவித்துக் கொண்டிருந்த போதிலும் நாங்கள் எதையும் பெறவில்லை" என அவர் வெறுப்புடன் தெரிவித்தார்.
"ஞாயிறு மாலை நான் மீண்டும் எங்களது பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு
வீட்டின் மூலைகளில் இருந்த தூண்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. எல்லா இடங்களிலும் சேறு நிரம்பியிருந்தது. இந்த
நிலைமைகளின் கீழ் நாங்கள் வேறு எங்காவது போவதே சிறந்தது. ஆனால் இந்த விடயங்களில் எனக்கு அரசாங்கத்தில்
நம்பிக்கையில்லை.
"மீண்டும் ஒரு முறை அவர்கள் (அரசாங்க அதிகாரிகள்) எச்சரிக்கை விடுக்கவில்லை.
விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் என்ன நடந்துள்ளது என்று பாருங்கள். ஆளும் பிரபுக்களுக்கு
எதுவும் தெரியாது, அவர்கள் எதையும் செய்வதுமில்லை. ஆள்பவர்கள் ஏழைகளுக்கு எதுவும் செய்வதில்லை. அவர்கள்
எல்லா அறிவுகளையும் கல்வியையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டுள்ளார்கள். வறியவர்களுக்கு உரிமைகள்
இருந்தும் அவர்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதில்லை. இந்த நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் மக்களைப் பற்றி பேசாமல் ஆட்சியை யார் வைத்திருப்பது என்பதில் அவர்கள் மோதிக் கொள்கிறார்கள்.
இவை அனைத்தும் இந்த அழிவுக்கு பங்களிப்பு செய்துள்ளன'' என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுவான உணர்வு என்னவென்றால், தங்களது நேசத்திற்குரியவர்களுக்காக மக்கள்
கவலைப்படும் அதே வேளை, அவர்களுக்கு விரைவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வில் உள்ளார்கள். அவர்கள்
ஆத்திரமடைந்திருப்பதோடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், தனியார் தொலைக்காட்சி சேவையான
சுவர்வாஹினியில் செவ்வாய் கிழமை இரவு நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற நலன்புரி அமைச்சர் ஜயசேன,
சுனாமி கடல் கொந்தளிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வுப் பணிகள் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள்
எடுக்கும் எனப் பிரகடனம் செய்தார்.
Top of page
|